ஏப்ரல் 21 போன்று மே 18 சுதந்திரமாக அனுஸ்டிக்க விட வேண்டும்-ரெலோ இளைஞர் அணித் தலைவர் சபா குகதாஸ்

ஏப்ரல் 21 போன்று மே 18 சுதந்திரமாக அனுஸ்டிக்க விட வேண்டும்
முன்னாள் வடமாகாணசபை உறுப்பினரும் ரெலோ இளைஞர் அணித் தலைவருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

“கடந்த ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவிப் பொதுமக்களை நினைவு கூறுவதற்கு பூரண சுதந்திரத்தை வழங்கியதை போன்று 2009 மே 18 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தினத்தில் பாதிக்கப்பட்ட உறவுகள் தம் இறந்த உறவுகளை நினைவு கூற இடையூறுகள் புரியாது அச்சுறுத்தல்களை ஏற்படுத்தாது பூரண அனுமதியை வழங்க வேண்டும்.

இந்த நாட்டில் பாதிக்கப்பட்ட தரப்பினர் யாராக இருந்தாலும் மனித நேய அடிப்படையில் அவர்களது அடிப்படை உரிமைகளை மதிக்க வேண்டும் அதுவே உண்மையான ஐனநாயகப் பண்பு அந்த வகையில் தெற்கில் யுத்த வெற்றியை கொண்டாடும் போது வடக்கு கிழக்கில் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுத்தல் நீதி அல்ல.

பாதிக்கப்பட்ட மக்களின் மன ஆறுதலுக்கும் அவர்களுக்கான நீதி கிடைப்பதற்கும் மீண்டும் இவ்வாறான அவலம் ஏற்படாதிருப்பதற்கும் ஐனநாயக விரோத தடைகளை நிறுத்தி நினைவு கூறலை மேற்கொள்ள அனுமதிப்பதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்களுக்கான நீதியை பெற்றுக் கொடுப்பதே உண்மையாக இந்த நாட்டின் அமைதிக்கும் அபிவிருத்திக்கும் புதிய வழியை உருவாக்கும் இதனை பிற்போக்கான அடிப்படைவாத கோட்பாட்டில் மூழ்கிப் போய்யுள்ள பெருந் தேசியவாதிகள் புரிந்து கொள்ள வேண்டு்ம்.

சகோதர இனமான தமிழர்களை புறம் தள்ளி அவர்களுக்கான நீதியை பெற்றுக் கொடுக்காது காலத்தை கடத்தி விடலாம் என தொடர்ந்து சிங்கள ஆட்சியாளர் நினைத்தால் சில ஆண்டுகளில் மீண்டும் அந்நிய சக்திகளின் முழுமையான காலணித்துவத்தில் நாடு சிக்கி சீரழியும் நிலை உருவாகும்” என்றார்.

P2P வழக்கை இடைநிறுத்துமாறு நீதவான் உத்தரவு

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணிக்கு நீதிமன்ற தடை உத்தரவினை மீறியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான வழக்கினை முற்றாக இடை நிறுத்துமாறு இன்று (30) கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.என் றிஸ்லான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த பெப்ரவரி 3 ஆம் திகதி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணியில் கலந்து கொள்வார்கள் என கூறி கல்முனை பொலிஸ் நிலையத்தினால் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 29 பேருக்கு கல்முனை நீதிமன்ற உத்தரவின் பேரில் தடைஉத்தரவு பெறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கே.கருணாகரன், த.கலையரசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன், சீ.யோகேஸ்வரன், மாணவர் மீட்பு பேரவை தலைவர் செ.கணேஷ் ஆனந்தம், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி துணைச் செயலாளர் அ.நிதான்சன் ஆகியோரை இன்று 30 ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு கல்முனை நீதவான் அழைப்பாணை பிறப்பித்திருந்தனர்.

கல்முனை நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன்போது ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் மற்றும் சட்டத்தரணி நிரான் அங்கிற்றல் ஆகியோர் நீதிமன்றில் ஆஜராகி நேற்றைய தினம் குறித்த வழக்கிற்கு எதிராக கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த ஆட்சேபனை மனுவினை சமர்ப்பித்தனர்.

இந்த வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.சுமத்திரன், சட்டத்தரணி நிரான் அங்கிற்றல் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர். இதனையடுத்து மேன் முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான அர்ஜுன ஒபேசேகர மற்றும் மாயதுன்ன கொரயாவினால் தொடரப்பட்ட வழக்கினை கல்முனை நீதவான் நீதிமன்றம் தொடர்ந்து நடாத்தவும் அதன் மீது கட்டளை பிறப்பிக்கவும் மே 18 ம் திகதி வரை இடைக்கால தடை விதித்து கட்டளை பிறப்பித்துள்ளது.

பிரதிவாதிகள் தரப்பினர் வழக்கை மீளப் பெறுமாறு சமர்ப்பணம் விடுத்ததையடுத்து, நீதவான் பொலிஸாரிடம் வழக்கை மீளப்பெறுவீர்களா என கேட்ட போது மேலிடத்து உத்தரவு, மேலிடத்திலிருந்து அனுமதி பெற வேண்டும் என பொலிசார் தெரிவித்தனர் .

நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணை செய்யும் நியாயாதிக்கம் நீதவான் நீதிமன்றிற்கு கிடையாது. ஆகவே கல்முனை நீதவான் நீதிமன்றில் இன்று இடம்பெற்ற வழக்கினை தடை செய்யக்கோரி முன் வைக்கப்பட்ட சமர்ப்பணத்தை ஏற்ற நீதிமன்றம் எதிர் வரும் 18ஆம் திகதி வரை இடைக்கால தடை விதித்ததோடு எதிராளிகளுக்கான அறிவித்தலை வழங்குமாறும், மேன் முறையீட்டு நீதிமன்ற பதிவாளர் கல்முனை நீதவான் நீநிமன்றின் பதிவாளருக்கு இந்த கட்டளையை தொலை நகல் மூலமும் அனுப்பி வைக்குமாறும், கட்டளையிட்டதோடு இந்த வழக்கு தொடர்பில் கல்முனை நீதவான் நீதிமன்றம் இதற்கு மேல் எந்த உத்தரவும் வழங்க கூடாது எனவும் கட்டளையிட்டது.

புலிகளின் நினைவுச் சின்னங்களை அனுமதிக்க முடியாது!

வடக்கு, கிழக்கில் தமிழீழ விடுதலைப்புலிகளை நினைவுகூரும் வகையில் நினைவுத் தூபிகளை அமைக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

”யாழ். மாநகர சபை மேயர் மணிவண்ணன் மூலமாக இளைஞர்களுக்கு அணிவிக்கப்பட்ட ஆடை தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆடை தான். இந்தச் சம்பவம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

மேயர் என்ற காரணத்துக்காகவோ அல்லது வேறு அதிகாரியாக இருக்கின்ற காரணத்தினாலேயோ இளைஞர்களைப் பயன்படுத்தி அவர்களுக்கு வேறு ஆடைகளை அணிவித்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் செயற்பாடுகளை முன்னெடுப்பது சட்டவிரோதமானது.

குறித்த இளைஞர்களுக்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆடையே அணிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே யாழ். மேயரை உடனடியாகக் கைது செய்து சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை எடுத்தோம். அதேபோல, எதிர்காலத்திலும் எவரேனும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் பின்னிற்க மாட்டோம்.

இந்த நாட்டில் வடக்கிலோ அல்லது தெற்கிலோ இளைஞர்கள் மீண்டும் ஒரு கஷ்ட நிலைமையைச் சந்திக்கும் சூழல் உருவாக நாம் இடமளிக்கமாட்டோம். யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபி போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் தூபியே தவிர, தமிழீழ விடுதலைப்புலிகளை நினைவு கூரும் தூபி அல்ல. வடக்கிலோ, கிழக்கிலோ பயங்கரவாத அமைப்பை நினைவுகூரும் நினைவுத்தூபிகளை உருவாக்க நாம் இடமளிக்கமாட்டோம்” என்றார்.

Posted in Uncategorized

திருமணம் உள்ளிட்ட அனைத்து வகையான நிகழ்வுகளுக்கும் இரு வாரங்களுக்குத் தடை -இராணுவத் தளபதி

திருமண வைபவம் உள்ளிட்ட அனைத்து வகையான நிகழ்வுகளையும் நடத்த அடுத்த இரு வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய எதிர்வரும் 3ஆம் திகதி முதல் மேற்படி தடையானது அமுல்படுத்தப்படுவதுடன் எதிர்வரும் இரு வாரங்களுக்கு இது நடைமுறையில் இருக்கும்.

நாட்டில் தற்போது கொரோனா தொற்றுப் பரவலானது அதிகரித்து வருவதால் அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மேற்படி தீர்மானமானது எடுக்கப் பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நகரங்களுக்கு இடையிலான மற்றும் தூர பிரதேசங்களுக்கான ரயில் சேவைகள் இரத்து

COVID-19 வைரஸ் தொற்று காரணமாக நகரங்களுக்கு இடையிலான மற்றும் தூர பிரதேசங்களுக்கான சில ரயில் சேவைகள் எதிர்வரும் முதலாம் திகதி முதல் இரத்து செய்யப்படுமென ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் 3 ஆம் திகதி வரை மூன்று கட்டங்களாக ரயில் சேவைகள் இரத்து செய்யப்படுமென திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை, கண்டி, காங்கேசன்துறை, பொலன்னறுவை, பெலிஅத்த ஆகிய பகுதிகளுக்கு முன்னெடுக்கப்படும் ரயில் சேவைகள் இரத்து செய்யப்படவுள்ளன.

தூர பிரதேச ரயில் சேவைக்கான ஆசன ஒதுக்கீட்டு முன்பதிவு மிகவும் குறைந்த அளவில் இடம்பெறுவதை கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

கரைதுறைப்பற்று ரெலோ தவிசாளரின் அதிரடி நடவடிக்கை மக்களுக்கான அறிவிப்பு!

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட துப்பரவு செய்யாத மக்களின் வெறுங்காணிகளை உடனடியாக துப்பரவு செய்யவேண்டும் என ரெலோ இளைஞர் அணியின் உறுப்பினரும் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளர் க.விஜிந்தன் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில் கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட மக்கள் நடமாடுகின்ற அல்லது மக்கள் குடியிருப்பு பகுதிகளில் பற்றைக்காடுகளாகவுள்ள தனியார் மற்றும் பொதுக்காணிகள் உடனடியாக துப்பரவு செய்வதுடன் தொடர்ந்தும் பராமரிக்கப்படல் வேண்டும் பிரதேச சபையினால் வழங்கடுகின்ற கால எல்லையினுள் துப்பரவு செய்யாப்படின் பிரதேச சபையின் ஏற்பாட்டில் துப்பரவு செய்யப்பட்டு கூலியுடன் தண்டப்பணமும் அறவிடப்படும்.

இவ்வாறன பற்றைக்காடுகளை துப்பரவு செய்வதினால் பல்வேறுபட்ட பிரச்சினைகளை தவிர்ப்பதுடன் சூழலையும் அழகாக வைத்திருக்கமுடியும் அதுமட்டுமல்லாது பயிர்ச்செய்கைக்கும் ஊக்கமளிக்கும். நாம் வாழும் சூழலை சுத்தமாக வைத்திருப்பதும் அழகுபடுத்துவதும் எமது கடமை.

அதுமட்டுமல்லாது வீதிகளில் தண்ணீர்பாயும் வடிகால்களில் குப்பைகள் கழிவுகள் போடுவோர் மீது தண்டபணம் அறவிடப்படுவதோடு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

பிரதமரை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று (29.04.2021) முற்பகல் அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

சீன பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயத்தை நிறைவு செய்த பின்னர் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அவசரமாக சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டும் என ரவூப் ஹக்கீம் கூறியிருந்தார்- ரெலோ உப தலைவர் ஹென்றி மகேந்திரன்

கல்முனை உப பிரதேச செயலகமாக தரம் குறைப்பதற்கு காரணமாக உலமா கட்சியின் செயற்பாடு பின்னணியில் உள்ளதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் உப தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஹென்றி மகேந்திரன் குறிப்பிட்டார்.

கல்முனை மாநகர சபையின் 37ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு நேற்று (புதன்கிழமை) மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்றது இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “கடந்த ஜனாதிபதி தேர்தலில் உலமா கட்சி தலைவர் பஸில் ராஜபக்சவுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் ஒன்றின் அடிப்படையில் கல்முனை உப பிரதேச செயலமாக தரம் குறைக்கப்பட்டுள்ளதாக அறிய கிடைத்திருக்கின்றது.

றிசாட் பதியுதீன் மற்றும் முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் அல்லாத ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் உலமா கட்சி தலைவரும் இணைந்து செயற்பட்டதாக ஒரு வதந்தி பரவி கொண்டு இருக்கின்றது.இவ்விடயம் தொடர்பாக கடந்த 35 வருடங்களாக குழப்பட்டு வருகின்றோம்.

தமிழ் முஸ்லீம் மக்களை குழப்புகின்ற சக்தி ஒன்று இதன் பின்னணியில் இருந்து செயற்படுகின்றதா? என்ற சந்தேகமும் நிலவுகின்றது.தற்போது முஸ்லீம் தமிழ் மக்கள் மத்தியில் ஒற்றுமை கீற்று ஏதோ ஒரு வழியில் வெளிப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை உள்நாட்டு அலுவல்கள் ராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்சவினை தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்பிக்களான கோவிந்தன் கருணாகரம் செல்வம் அடைக்கலநாதன் சிவஞானம் சிறிதரன் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் முறையிட்டு இருந்தார்கள்.

இதன் போது இராஜாங்க அமைச்சர் பிரதேச செயலகம் குறித்த வெளிவந்த கடிதத்தின் அமுலாக்கத்தினை நிறுத்துமாறு உத்தரவிட்டிருந்தார்.

இது தவிர நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார பொன்னம்பலம் நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் பேசியிருந்தார்.முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் கலந்துரையாடி ஆட்சேபனையினையை முன்வைத்திருந்தார்.

கடந்த கல்முனை மாநகர சபையின் வரவு செலவு திட்டத்தின் போது நாங்கள் ஆதரவினை வழங்கியபோது ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டும் எனவும் இது நியாயமான தமிழ் மக்களின் கோரிக்கை எனவும் அவர்களுக்குரிய உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதையும் அதை மனப்பூர்வமாக ஆதரிப்பதாகவும் பதிவு செய்திருந்தார்.

இந்த பிரதேச செயலக தரமுயர்த்தும் போதும் பிரிக்கப்படும் போதும் முஸ்லீம் மக்களுக்கு பாதகமாக ஒன்றும் இடம்பெற கூடாது என்றும் செல்லியிருந்தார் என கூறினார்.

இந்த அடிப்படையில் நாங்கள் நிதானமாக இருந்து தமிழ் மக்களுக்கு கிடைக்கவேண்டிய பிரதேச செயலகத்தினை வழங்க முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.இது சம்பந்தமாக பிற்காலத்தில் நாங்கள் ஒற்றுமையுடன் செயற்படுவோம்” என தெரிவித்தார்

Posted in Uncategorized

நாட்டை முடக்குவதற்கான தீர்மானம் இல்லை – இராணுவத் தளபதி

நாட்டை முடக்குவதற்கான (Lockdown) எவ்வித தீர்மானமும் இல்லை என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால், அந்தந்த பகுதிகள் மாத்திரம் முன்னறிவிப்பின்றி தனிமைப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் இரண்டு, மூன்று வாரங்களில் நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தற்போதை விட அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்று (28) இரவு ரிவி தெரணவில் ஔிபரப்பான அளுத் பார்ளிமென்துவ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்கள் இன்று ஒரு முக்கியமான சூழ்நிலையை அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பலமுறை அறிவுறுத்திய போதும், சரியான சுகாதார ஆலோசனையைப் பின்பற்றாததால் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கணிசமான அளவு தொற்றாளர்கள் இனங்காணப்படுவதை அடுத்து பரவலை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார பிரிவினர் அறிவித்த உடன் சில பகுதிகளை தனிமைப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இம்முறை முன்னறிவித்தல் வழங்கி பின்னர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏதாவது ஒரு பகுதியை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டிய நிலமை ஏற்படின் கண்டிப்பாக தனிமைப்படுத்தப்படும் எனவும் அவர்தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயின் முழு நாட்டையும் முடக்குவதற்காக தயார் இல்லை எனவும் கொவிட் நிலமை அதிகரித்தால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முன்னறிவித்தல் இன்றி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மாமனிதர் சிவராம் நினைவுதினம் யாழில் அனுஸ்டிப்பு

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான தராகி சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவு தினம் இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.

யாழ் ஊடக அமையத்தில் இன்று மதியம் 12 மணியளவில் நடைபெற்ற இந்த நிகழ்வில் யாழ் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலர் மாலை அணிவித்து , மலர் தூபி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

இலங்கையின் பிரபலமான ஊடகவியலாளர்களில் ஒருவரான தராகி
என்றழைக்கப்படும் தர்மரத்தினம் சிவராம் படுகொலை செய்யப்பட்டு இன்றோடு 16 ஆண்டுகள்
கடந்துவிட்டன.

ஊடகவியலாளர் சிவராம் கடந்த 2 ஆயிரத்து 5 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வைத்து இனம் தெரியாதவர்களால் கடத்தப்பட்ட பின்னர் நாடாளுமன்றத்துக்கு அருகில் படுகொலையான நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இளம் ஊடகவியலாளரான செல்வராஜா ரஜீவர்மன் உதயன் பத்திரிகையின் அலுவலக செய்தியாளராக கடமையாற்றி வந்த வேளை கடந்த 2 ஆயிரத்து 7ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 29ஆம் திகதி காலை 10 மணியளவில் ஸ்ரான்லி வீதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத நபர்களால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.

இலங்கையில் நிலவும் ஊடக – கருத்துச் சுதந்திர மறுப்பு சூழலைக் காட்டும் சிவராம் மற்றும் ரஜீவர்மன் உள்ளிட்டவர்களின் படுகொலை நடந்து பல ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், ஊடகவியலாளர்களின் கொலைகளுக்குப் பொறுப்பான குற்றவாளிகள் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.