தமிழ் தேசிய கூட்டமைப்பு மீண்டும் உருவாக்கப்பட வேண்டும் – வலியுறுத்தும் ரெலோ தலைவர் செல்வம் எம்.பி

தமிழ் தேசியக் கூட்டமைப்பு (TNA) கட்டாயம் மீண்டும் உருவாக வேண்டும் என ரெலோ அமைப்பின தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாகாமல் விட்டால் இன்றைக்கு இருக்கின்ற சூழலே தொடர்ச்சியாக நீடிக்கும்.

அதாவது பிரதேச சபைகளை, மாகாண சபைகளை ஏனையவர்கள் கைப்பற்றுவார்கள். அதன்பிறகு எங்களுடைய தேசியம் என்பது அங்கே இல்லாமல் போய் விடும். இப்பொழுதே தேசியம் என்பது அரிதாகிக் கொண்டு செல்கின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு மீண்டும் உருவாக்கப்பட வேண்டும் – வலியுறுத்தும் தமிழ் எம்பி | Tna Must Be Re Formed Selvam Mp Request

தற்போதைய அரசாங்கம் வடக்கு கிழக்கிலுள்ள பிரதேச சபைகள் மற்றும் நகர சபைகளை கைப்பற்றுவதற்காக திட்டமிட்டு செயற்படுகின்றது.

எங்களுக்கிடையில் ஒற்றுமையின்மையால் அவர்கள் பிரதேச சபைகள் மற்றும் நகர சபைகளை கைப்பற்றினால் மாகாண சபையையும் கைப்பற்றுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது.

ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு மீண்டும் உருவாக்கப்பட வேண்டும். அதற்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்குவதற்கு தயாராக இருக்கின்றோம்.” என அவர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வே தமிழ் மக்களின் ஆணை: ரெலோ யாழ் மாவட்ட தலைவர் சபா குகதாஸ்

ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வு தேவை என்றே மக்கள் ஆணை வழங்கியுள்ளனர் என ரெலோ வின் யாழ் மாவட்ட தலைவரும் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் (saba.kugathas) தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இறுதியாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் வடக்கு, கிழக்கில் சமஸ்டி தீர்வு தேவை என்பதற்கே பெரும்பான்மை ஆதரவை தமிழ் மக்கள் வழங்கியுள்ளனர்.

சர்வசன வாக்கெடுப்பு

1949ஆம் ஆண்டு சமஷ்டிக் கட்சி ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து அதிகாரப் பகிர்வுக்கான மக்கள் ஆணையும் 1977 ஆம் ஆண்டு தனித் தமிழ் ஈழத்திற்கான மக்கள் ஆணையும் 2004 ஆம் ஆண்டு மிகப் பலமான மக்கள் ஆணையும் அதன் பின்னர் இன்று வரை ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வு என்பதற்குமான மக்கள் ஆணையே வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல் முடிவுகளின் பெரும்பான்மை முடிவுகளின் படி அதிகாரப் பகிர்வை கோரி நிற்கும் மக்களிடம் ஒரே நாடு ஒரே சட்டம் என்பதை திணிக்க முற்படுவதை தவிர்த்து வேண்டும் என்றால் தமிழர்களின் அரசியல் அபிலாசையை தீர்க்க சர்வசன வாக்கெடுப்பு ஒன்றை நடாத்துங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

தையிட்டி விகாரை உடைக்கப்பட வேண்டும்: அடைக்கலநாதன் எம்.பி பகிரங்கம்

யாழ்.தையிட்டி விகாரை உடைக்கப்பட வேண்டியதுடன், அதற்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டத்திற்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி முழுமையான ஆதரவு வழங்கும் என்றும் ரெலோ அமைப்பின தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று வவுனியாவில் இன்று (10.02) இடம்பெற்றது.

இதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

முழுமையான ஆதரவு

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், யாழ் தையிட்டி விகாரைக்கு எதிராக இடம்பெறும் போராட்டத்திற்கு ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முழுமையான ஆதரவை தெரிவிக்கும்.

அது உண்மையில் உடைக்கப்பட வேண்டிய விடயம். வடகிழக்கில் பிக்குகள் மற்றும் சில திணைக்களங்கள் நினைத்ததை செய்யும் ஒரு நிலை காணப்படுகின்றது.

எனவே இந்த விகாரை உடைக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. அதற்கான ஆதரவை நாங்கள் வழங்குவோம். மக்களுடைய விருப்பமும் அதுவே என்றார்.

கட்சித் தலைவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு.

எதிர்கால வேலைத்திட்டம் தொடர்பிலான முக்கிய கலந்துரையாடல் நிமித்தம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படும் சகல கட்சித் தலைவர்களும் கூடினர்.

பாராளுமன்ற விவகாரங்கள் உட்பட எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பிலான முக்கிய கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று (05) பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

பாராளுமன்றத்திலும் வெளியிலும் கூட்டாக இணைந்து செயல்படுவது தொடர்பாக எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளிடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்வது இக்கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாகும்.

இதன் மூலம் பலமான பாராளுமன்ற நடவடிக்கைகளை கொண்டமைந்த பாராளுமன்றத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்றும், அரசாங்கத்தின் சிறந்த தீர்மானங்களுக்கு ஆதரவளிப்பது போலவே, நாட்டு மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சகல நடவடிக்கைகளுக்கும் எதிர்ப்பை வெளியிட்டு மக்கள் பக்கம் நாம் முன்நிற்போம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு தெரிவித்தார்.

பாராளுமன்ற குழுக்களில் கவனம் செலுத்தி அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இங்கு சகல கட்சித் தலைவர்களும் தமது கருத்துக்களை எடுத்துரைத்து சுட்டிக்காட்டினர்.

கடந்த ஜனவரி 29 ஆம் திகதியும் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கூடி இதேபோன்ற கலந்துரையாடலொன்றை நடத்தியதோடு, இன்று இடம்பெற்ற கலந்துரையாடலும் இதன் ஓர் தொடர்ச்சியாகும்.

இக்கலந்துரையாடலில், ​​எதிர்க்கட்சியைச் சேர்ந்த கட்சித் தலைவர்களான கயந்த கருணாதிலக்க (எதிர்க்கட்சியின் பிரதம கொறடா) ஜே.சி. அலவதுவல (எதிர்க்கட்சியின் பிரதி அமைப்பாளர்) அஜித் பி. பெரேரா (எதிர்க்கட்சியின் பிரதி அமைப்பாளர்) ரிஷாத் பதியுதீன், நாமல் ராஜபக்ச, திலித் ஜயவீர, தயாசிறி ஜயசேகர, ரவி கருணாநாயக்க, ஜீவன் தொண்டமான், சிவஞானம் ஸ்ரீதரன், பி. சத்தியலிங்கம், செல்வம் அடைக்கலநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ரவூப் ஹக்கீம், நிசாம் காரியப்பர், வீ.எஸ். இராதாகிருஷ்ணன் அனுராத ஜயரத்ன, டி.வீ. சானக மற்றும் காதர் மஸ்தான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Posted in Uncategorized

விவசாயிகளை பாதிக்காத வகையில் அரசாங்கம் நெல்லுக்கு அதிகூடிய விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்!

அரசாங்கம் வடக்கு கிழக்கில் உள்ள விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு இது வரை உரிய தீர்வை பெற்றுக் கொடுக்கவில்லை என்றும், பல்வேறு பாதிப்புகளுக்கு மத்தியில் விவசாய செய்கை யை முன்னெடுத்துள்ள விவசாயிகளின் நெல்லுக்கு உரிய நிர்ணய விலையை தீர்மானிக்க அரசாங்கம் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

-மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை(3) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

அரசாங்கம் தொடர்ந்தும் விவசாயிகள் மீது கருணை காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. விவசாயிகள் தொடர்ச்சியாக ஏற்படுகின்ற இயற்கை அனர்த்தத்தினால் பாரிய அழிவுகளை சந்திக்கின்றனர்.

எனினும் தமது பாதிப்பிற்கு நியாயமான தீர்வை தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் அதே நேரம் அரசாங்கம் விவசாயிகளின் நெல்லின் விலையை நிர்ணயம் செய்யும் நிலையில் அவரது சிந்தனை இருக்கவில்லை என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.

பொறுப்பான அமைச்சர் நெல்லின் நிர்ணய விலையை அறிவிப்பதாக கூறுகின்ற அதே நேரம் அனுராதபுரம் மற்றும் ஏனைய பகுதிகளில் நெல் அறுவடை முடிந்த பின்னரே நெல்லுக்கு நிர்ணய விலையை தாம் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

அனுராதபுரத்தில் உள்ள விவசாயிகள் மாத்திரமே விவசாயிகள் என்றும் வடக்கு கிழக்கில் உள்ள விவசாயிகளை விவசாயிகள் போல் தெரியவில்லை யா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

நெல்லுக்கான நிர்ணய விலையை அரசாங்கம் குறைவாக நிர்ணயிக்க உள்ளதாக அறிகிறோம்.இதனால் விவசாயிகள் விவசாயத்திற்காக செலவு செய்த முதலீடுகளை மீள பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்படும். எனவே அரசாங்கம் விவசாயிகள் நஷ்டத்தை எதிர் நோக்காத வகையில் கூடிய விலை நிர்ணயத்தை தீர்மானிக்க வேண்டும்.

அவ்வாறு செய்யவில்லை என்றால் ஏனைய தனியார் நெல் கொள்வனவு செய்கின்றவர்கள் அரசாங்கத்தை விட மிகவும் குறைவாகவே நெல்லை பெற்றுக்கொள்ள விலையை அவர்கள் தீர்மானிப்பார்கள். எனவே கூடிய அளவிலான விலையை நெல்லுக்கு அரசாங்கம் தீர்மானிக்கின்ற போது தனியார் நெல் கொள்வனவு செய்கிறவர்களும் கூடுதலான விலைக்கு நெல்லை கொள்வனவு செய்வார்கள். விவசாயத்திற்காக விவசாயிகள் வங்கிகளில் கடனை பெற்றும் நகைகளை வங்கியில் அடமானம் வைத்தும் பணத்தை பெற்று விவசாயத்தை முன்னெடுத்துள்ளனர்.
வறுமைக்கோட்டின் கீழ் உள்ள விவசாயிகளை நாங்கள் தூக்கி விடுவதாக இருந்தால் அவர்களின் நெல்லுக்கான உரிய விலை நிர்ணயிக்கப்பட வேண்டும்.

எனவே புதிய அரசாங்கம் சாட்டுப்போக்கு கூறாமல் நெல்லின் விலையை நிர்ணயம் செய்து அழிவில் இருந்து கொண்டுள்ள விவசாயிகளை தூக்கி விட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாக உள்ளது என தெரிவித்தார்.

இதே வேளை மூன்று கட்சிகளின் ஒற்றுமையான செயல்பாடு, தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு, இந்திய மீனவர்களால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும் அவர் மேலும் கருத்துக்களை தெரிவித்தார்.

Posted in Uncategorized

தீர்க்கப்படாத இனப்பிரச்சினை! ரெலோ யாழ் மாவட்ட தலைவர் சபா குகதாஸ் ஆதங்கம்

இலங்கையில் இருந்து ஆங்கிலேயர் வெளியேறிய தினம் என்பது தமிழர்களின் சுயநிர்ணய உரிமை முழுமையாக பறிக்கப்பட்ட நாளாகவே அமைந்தது என என ரெலோ வின் யாழ் மாவட்ட தலைவரும் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக 1948 ஆண்டில் இருந்து இன்று வரை இலங்கைத்தீவில் இனப்பிரச்சினை என்பது தீர்க்கப்படாத ஒன்றாக தொடர்கிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழர்களை பொருத்தவரை 1948 இலங்கைச் சுதந்திர தினம் என்பது கரிநாள் அதில் மாற்றுக் கருத்து கிடையாது இந்த நிலை மாற வேண்டுமாக இருந்தால் தேசிய இனப்பிரச்சினைக்கு சிங்கள ஆட்சியாளர் உண்மையான தீர்வை வழங்குவதன் மூலமே இலங்கைத் தீவில் உண்மையான சுதந்திர தினத்தை அனைத்து மக்களும் உணரமுடியும்.

தேசிய இனப்பிரச்சினைக்கு இதய சுத்தியுடன் ஆட்சியாளர்கள் தீர்வினைப் பெற்றுக் கொடுக்காது எளிமையாக சுதந்திர தினத்தை கொண்டாடுதல் மற்றும் ஐனாதிபதி சாதாரண மக்களுடன் அமர்ந்திருந்து படம் காட்டுதல் போன்றன சிறுவர்களுக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவது போலவே அமையும்.

எனவே நாடு உறுதியாக முன்னோக்கி பொருளாதார மற்றும் அபிவிருத்தி ரீதியாக நகர வேண்டுமாயின் சகல இன மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் சுதந்திர தினம் மாற்றப்பட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

முப்படைகளால் அபகரிக்கப்பட்டுள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும், பாராளுமன்றில் ரெலோ தலைவர் செல்வம் எம்.பி.

முன்னாள் ஜனாதிபதிகளை விசாரணைகளுக்கு அழைக்கும் நடவடிக்கைகள் தொடரவேண்டும்.
“தூய்மையான இலக்கை நோக்கி இலங்கை”- பாராளுமன்ற இரண்டு நாள் விவாதத்தில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் 23/1/2025  தினம் ஆற்றிய உரை.

முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய றாஜபக்ஸ்ச அவர்கள் உட்பட பலரை தூய்மையான இலக்கை நோக்கி இலங்கை என்ற திட்டத்தின் கீழ் விசாரனைக்காக அழைத்தது வரவேற்கத்தக்கது. இருப்பினும் நடைபெற உள்ள பிரதேச சபை, மாகாண சபை தேர்தலை முன்னிட்ட யுத்தியாக அமையாமல் தொடர்ந்தும் இது போன்ற விசாரனைகள் தொடரவேண்டும்.

முப்படைகள் எமது தாயக நிலங்களை, பொது மக்களுடைய பூர்வீக நிலங்களை அபகரித்துள்ளார்கள். ஆலயங்கள் கோவில்கள், விவசாய நிலங்கள் உள்ளிட்ட பல்வேறுபட்ட நிலங்களை எமது வடகிழக்கு பிரதேசத்தில் முப்படைகள் அபகரித்துள்ளார்கள்.இந்த நிலை மாற்றம் பெற்று பொதுமக்களின் பூர்வீக நிலங்களும் பொது காணிகளும்,விவசாய நிலங்களும் பொதுமக்களிடத்தில் ஒப்படைக்கப்படல் வேண்டும்.

காணிகள் அற்று சொந்த வீடுகள் அற்று எமது மக்கள் வாழும் நிலை நிறுத்தபபடவேண்டும், குறிப்பாக தனி அரசாங்கங்கள் போல் அத்துமீறும் வனலாக திணைக்களம், தொல்பொருள் அகழ்வு திணைக்களம், போன்ற திணைக்களங்கள் கையகப்படுத்தியுள்ள பொதுமக்களின் நிலங்களை, விவசாய பொதுமக்களுக்கு வழங்கவேண்டும்.

இயற்கை அனர்த்தத்தால் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டுவரும் விவசாயிகள், கடற்றொழிளார்கள் எமது பகுதியில் அதிகளவு காணப்படுகிறார்கள். குறிப்பாக தம்மிடம் உள்ளதை அடகு வைத்து மேற்கொள்ளும் விவசாய உற்பத்திகள் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்படும் நிலை காணப்படுவதுடன் உற்பத்தி பொருட்கள் குறிப்பாக நெல்லுக்கான விலை நிர்ணயம் என்பது இல்லாத பிரச்சனை தொடர்கிறது. வங்கிகளில் கடனை பெற்று ,மாநியங்களை பெற்று விவசாய உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடும் விவசாயிகளது நலன்களில் ,விவசாய உற்பத்தி பொருட்களின் விலை நிர்ணயத்தில் அரசாங்கம் அக்கறை செலுத்த வேண்டும்

அரசியல்வாதிகளின் ஊழலை வெளிக்கொணரும் அதே சந்தர்ப்பத்தில் அரச திணைக்களங்களில் காணப்படும் ஊழலையும் ,ஊழல்வாதிகளையும் அரசாங்கம் வெளிக்கொணரவேண்டும்.

மன்னார் நகரில் நீதிமன்றத்திற்கு முன்பாக நடந்தேறிய கொலைகளுக்கான கொலையாளிகளையும், அதன் காரணிகளையும் துரிதமாக பொலிசார் விசாரனைகளை கையாண்டு கண்டறியவேண்டும். முப்படைகளின் மெத்தனப்போக்கே இவ்வாறான கொலைகள் மன்னாரில் அதிகரிக்க காரணமாக இருக்கிறது. பலிக்கு பலி வாங்கும் படலம் தொடர்கின்றது இவ்வாறான குற்ற செயற்பாடுகள் நிறுத்தப்படவேண்டும்.

மாந்தை கிழக்கிலே அமைந்துள்ள சிவபுல பாலத்தை புனரமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட வேண்டும், அத்தோடு முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்படுவது சட்டத்தால் நிறுத்தப்பட வேண்டும். ஊழல் வாதிகள் தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் ஆனால் நிரூபிக்க முடியாத, பொய் குற்றங்களை சமூக வலைத்தளங்களில் பகிரப்படல் சட்டத்தால் நிறுத்தப்பட வேண்டும்.

 

 

 

Posted in Uncategorized

வடக்கு மீனவ சங்க பிரதிநிதிகளும் தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களும்  ரெலோ ஏற்பாட்டில் சந்திப்பு 

வடக்கு எமது மீனவ சமூகத்தினுடைய முக்கிய பிரதிநிதிகளை, அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க பாராளுமன்றத்திலே வடக்கு கிழக்கு தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு அமைவாக இன்றைய தினம் 24/1/2025 வெள்ளிக்கிழமை காலை அந்த ஏற்பாட்டை நான் செய்திருந்தேன்.

அந்த ரீதியிலே மீனவ சமூகத்தின் சார்பாக சுமார் 12 உறுப்பினர்களுக்கு அதிகமாகவும் எமது தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களான கெளரவ மனோகணேசன் அவர்களும், கெளரவ றிசாட் பதியுதீன் அவர்களும், கெளரவ கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் , கெளரவ சிறிதரன் அவர்களும், கெளரவ ரவிகரன் அவர்களும், கெளரவ குகதாஸ் அவர்களும், கிழக்கு மாகாண முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த கலந்தரையாடலில் பங்கேற்று இருந்தனர்.

மேற்படி இந்த சந்திப்பில் பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக இந்திய இழுவை படகுகளினுடைய அத்துமீறிய வருகையினால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி நாங்கள் கலந்துரையாடினோம். அதே போல தென்னிலங்கையில் இருந்து அத்துமீறி வரும் இழுவை படகுகளின், அதன் மீனவர்களது செயற்பாடுகள் பற்றியும் நாங்கள் கலந்தூரையாடினோம்.

அந்த ரீதியிலே இன்னும் எங்களுடைய மீனவ சமூகம் எதிர்நோக்கும் பல்வேறுபட்ட பிரச்சனைகளை அதில் கலந்துரையாடி இறுதி முடிவு எட்டப்பட்டது. அந்த இறுதி முடிவிலே நாங்கள் ஒரு குழுவை நியமித்துள்ளோம். அந்த குழுவிலே நாடாளுமன்ற உறுப்பினர்களும், எங்களுடைய மீனவ சமூகம் சார்ந்த உறுப்பினர்களும் உள்ளடக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த அடிப்படையிலே வருகிற வாரம் யாழ்ப்பாணத்தில் இவ் விடயம் சம்பந்தமான முதலாவது கூட்டம் நடைபெறவுள்ளது.

வடக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதிலே கலந்துகொள்ள இருக்கிறோம். இந்த குழுவிலே நாடாளுமன்ற உறுப்பினர்களும் எமது மீனவ சமூக முக்கிய பிரதிநிதிகளும் கலந்துகொண்டு இந்த இழுவை படகுகளின் நடவடிக்கைகளை நிறுத்துவதற்கான எவ்வாறான வழிமுறைகளை கையாள்வது சம்மந்தமாகவும், நாடாளுமன்றத்தலே இது சம்பந்தமான எமது நடவடிக்கைகள் சம்பந்தமாகவும் ஆராயவுள்ளோம்.

அந்த வகையிலே இன்றைய தினம் காலை நடைபெற்ற கலந்துரையாடல் மகிழ்ச்சியானதும், ஆக்கபூர்வமானதும், நிறைய விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டதுமாகவும் இருந்தது. இந்த குழுவின் ஊடாக எமது மீன்வ சமூகத்தின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக நாடாளுமன்றத்திலும், வெளியிலும் எவ்வாறு செயற்படுவது என்பதை ஆராய்ந்து அதற்கான செயற்பாடுகளை செய்ய இருக்கிறோம் என்பதை இங்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

அந்த வகையிலே இன்றைய கூட்டத்தில் நன்றி சொல்ல வேண்டும் எமது தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பாக கெளரவ மனோ கணேசன் அவர்களுக்கும் நாங்கள் நன்றி சொல்ல வேண்டும். அதே போல் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கெளரவ றவூப் ஹக்கீம் அவர்களுக்கும் நாங்கள் நன்றி சொல்ல வேண்டும். மற்றும் ஏனைய வடக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், எல்லோருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.

அந்த அடிப்படையிலே எனிவரும் காலங்களிலே நாங்கள் ஒற்றுமையாக, எங்களுடைய சமூகம் ,நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமையாக செயற்படுகின்ற ஒரு வாய்ப்பாக அமையும் என்று நம்புகிறேன். இன்றைய சந்திப்பானது திருப்திகரமானதாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அ.அடைக்கலநாதன்.
வன்னி பாராளுமன்ற உறுப்பினர்
தலைவர்
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ரெலோ.

 

15 வருட வழக்கு கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறும், நீதிமன்ற அனுமதி பெற்றே வெளிநாடு செல்ல முடியும் எனவும் கட்டளை

கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறும், நீதிமன்ற அனுமதி பெற்றே வெளிநாடு செல்ல முடியும் எனவும் அனுராதபுர மேல் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளதாக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் நீதிமன்றத்தால் வழக்கு ஒன்று தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் நேற்று (21) நீதிமன்றத்திற்கு சென்று வந்த பின்னரே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில்

மேலும் தெரிவிக்கையில், மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் முள்ளிவாய்க்காலில் நடந்த அனர்த்தங்களையும், இராணுவம் செய்த கொடூரமான செயற்பாடுகளையும் பொது வெளியில் பேசியதாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகளுடன் இணைந்து இலங்கை அரசாங்கத்திற்கு சதி செய்தேன் என்ற அடிப்படையில் என்னைக் கைது செய்தார்கள்.

வவுனியாவிலும், அனுராதபுரத்திலும் இது பற்றிய வழக்குகள் 15 வருடங்களுக்கு மேலாகத் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

கடந்த 16ஆம் திகதி வழக்கு நடைபெற்ற போது நான் அதற்கு சமூகமளிக்கவில்லை. அதனால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

15 வருட வழக்கு

நேற்று (21) அந்த பிடியாணையை நிவர்த்தி செய்வதற்காக நான் எனது வழக்கறிஞர் உடன் நீதிமன்றம் சென்றிருந்தேன்.

அங்கு சென்று முன்னிலையாகிய போது 25 ஆயிரம ரூபாய் ஆட்பிணையும், எனது கடவுச் சீட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் உத்தரவிடப்பட்டிருந்தது.

என்னோடு மரியசீலன் என்பவர் தொடர்ச்சியாக இந்த வழக்கில் சமூகமளித்துக் கொண்டிருக்கிறார். அவர் 8 வருடம் சிறையில் இருந்தவர்.

மேலும், கடவுச் சீட்டை ஒப்படைக்க வேண்டும். வெளிநாடு செல்வதாக இருந்தால் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தி விட்டுச்செல்லாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், குறித்த வழக்கு 15 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்ப் பௌத்த வரலாற்றை மறைக்க மேர்வின் போன்ற இனவாதிகள் முயற்சி! அரசின் நடவடிக்கை என்ன? சபா குகதாஸ் கேள்வி

அநுர அரசின் ஆட்சியில் இனவாதத்திற்கு இடமில்லை என பல தடவைகள் பிரதமர் ஹருணி கூறியுள்ளார். ஆனால் மேர்வின் சில்வா, சீல தேரர், சுமண ரத்தின தேரர் போன்றோர் இனவாதத்தை தாம் நினைத்தவாறு அள்ளி வீசுகின்றனர் அவர்களை கண்டிக்காமல் அரசாங்கம் வேடிக்கை பார்க்கிறது என்றால் அநுர அரசின் கைக்கூலிகளாக இந்த இனவாதிகள் இறக்கப்பட்டுள்ளனரா? என ரெலோ வின் யாழ் மாவட்ட தலைவரும் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில்,

மேர்வின் சில்வா இந்த நாடு சிங்கள பௌத்த நாடு மற்றும் ஒரே நாடு ஒரே ஆட்சி என்ற இனவாதத்தை கையில் எடுத்தது மாத்திரமல்ல, பண்டுகாபய மன்னன் காலத்தில் சிங்கள தேரவாத பௌத்தம் பரவியதாகவும் வரலாற்றுத் திரிபு ஒன்றை கட்டவிழ்த்து விட்டுள்ளார்.

மகாவம்சம் கூறும் வரலாற்று செய்தியின் ஊடாக உண்மையை மறைக்கும் மேர்வின் சில்வா ஒரு மனநோய் பிடித்தவரா? அல்லது அரச பின்புலத்தின் இனவாதியா? இத்தகைய இனவாதிகளுக்கு அநுர அரசின் நடவடிக்கை என்ன?

அநுராதபுர இராசதானி காலத்தில் மூத்த சிவனின் மகன் தீசன் காலத்தில் இந்தியாவில் இருந்து அசோகசக்கர வர்ததியின் மகன் மகிந்ததேரரால் கொண்டு வரப்பட்டதே தேரவாத பௌத்தம்.

இது பிற்காலத்தில் இலங்கையில் தமிழ்த் தேரவாத பௌத்தமாக பரவியதை பல வரலாற்று ஆதாரங்கள் வெளிப்படுத்தி உள்ளன,

உதாரணமாக சுன்னாகம் கந்தரோடைப் பகுதியில் உள்ள சமாதிகள் தமிழ்ப் பௌத்தருடையது என பல தொல்பொருட் சான்றுகள் கூறுகின்றன.

இந்த உண்மையை மேர்வின் சில்வா போன்ற இனவாதிகள் பொய்யாக மாற்றி, இலங்கைத் தீவை சிங்கள பௌத்த நாடாக இனவாதப் போக்கில் சித்தரிக்கின்றனர் என தெரிவித்தார்.