உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்கள் குறித்து பொலிஸ் மா அதிபரின் அதிரடி அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் ஈடுபட்ட பயங்கரவாதி சஹ்ரான் உள்ளிட்ட கும்பலானது, மொத்த பயங்கரவாத வலையமைப்பின் ஒரு சிறு பகுதி மட்டுமே என்பது விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன தெரிவித்தார்.

அத்துடன் மிக சூட்சுமமாக, குறித்த பயங்கரவாத வலையமைப்பு 2 ஆம் நிலை குழுவொன்றினை தயார் படுத்தி, சிறுவர்களுக்கு தமது சிந்தனைகளை விதைத்துள்ளமையும் அவ்விசாரணைகளின் ஊடாக தெரியவந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதுவரையிலான விசாரணைகளில் 723 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 311 பேர் தொடர்ந்து விளக்கமறியலில் அல்லது தடுப்புக் காவலின் கீழ் உள்ளனர்.

பல வங்கிக் கணக்குகள் பரிசீலிக்கப்பட்டுள்ளன. 365 மில்லியன் ரூபா பணம், அசையும் அசையா சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட்டு, 168 மில்லியன் சொத்துக்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.

இதுவரை 11 குற்றப் பத்திரிகைகள் 46 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சுமார் 100 இற்கும் அதிகமான சம்பவங்கள் குறித்த விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டு ஆவணங்கள் சட்ட மா அதிபருக்கு அனுப்பட்டுள்ளன.

சுமார் 52 ஆயிரம் பக்கங்களை கொண்ட 104 ஆவணங்கள் இவ்வாறு சட்ட மா அதிபரின் பரிசீலனையின் கீழ் உள்ளன.

எனவே இது ஒரு பரந்துபட்ட விசாரணை என்பது தெளிவாகின்றது. இவ்விசாரணைகள் தொடர்பில் எனக்கு எந்த அழுத்தங்களும் எவராலும் பிரயோகிக்கப்படவில்லை.

இந்த குண்டுத் தாக்குதல்களில் இறந்த, காயமடைந்தவர்களுக்கு நிலை நாட்டப்படும் நியாயமாக, உறுதியான விசாரணைகள் ஊடாக குற்றவாளிகளை தண்டிப்பதையே நாம் கருதுகின்றோம். எனவே தான் மிக ஆழமாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளோம்.’ என தெரிவித்தார்.

இலங்கை இராணுவத்திற்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கியது சீன இராணுவம்

சீனா மக்கள் விடுதலை இராணுவத்தினால் (People’s Liberation Army of China) இலங்கை இராணுவத்திற்கு Sinopharm தடுப்பூசிகள் அன்பளிப்பாக வழங்கப்படவுள்ளன.

அன்பளிப்பு செய்யப்பட்டுள்ள Sinopharm தடுப்பூசிகள் எதிர்வரும் 28 ஆம் திகதி நாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த 300,000 சினோபார்ம் தடுப்பூசிகளும் எதிர்வரும் 28ஆம் திகதி நாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாப் பயணிகளுக்கு 180 நாட்களுக்கு வீசா!

இலத்திரனியல் சுற்றுலா அனுமதி மூலம் வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு 180 நாட்களுக்கு ஒரே தடவையில் வீசா வழங்கும் நடைமுறையை இலங்கையில் அமுல்படுத்துவது தொடர்பில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் ‘இணையவழி இலத்திரனியல் சுற்றுலா வீசா அனுமதிப்பத்திரம் வழங்கும் முறைமையின் (ETA)’ மூலம் சுற்றுலா வீசா விண்ணப்பிக்கும் செயன்முறைக்கு இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் ‘இலங்கை சுற்றுலா கைத்தொலைபேசி செயலி (Mobile App)’ இனைப் பயன்படுத்தி இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு 180 நாட்கள் வரை செல்லுபடியாகும் சுற்றுலா வீசா அனுமதிப்பத்திரத்தை வழங்கும் குறித்த நடை இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கடந்த 2021.01.04 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, கீழ்வரும் வகையில் வீசா கட்டணங்களை அறவிட்டு குறித்த சுற்றுலா வீசா அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்காக பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது.

சார்க் நாடுகளைச் சார்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு – 70 அமெரிக்க டொலர்கள்
சார்க் அல்லாத நாடுகளைச் சார்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு – 85 அமெரிக்க டொலர்கள்
சிங்கப்பூர், மாலைதீவு, சீசெல்ஸ் நாடுகளைச் சார்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு – 50 அமெரிக்க டொலர்கள் (குறித்த நாடுகளுடன் தற்போதுள்ள இருதரப்பு உடன்படிக்கைகளுக்கமைய)

நாயக்க தேரர்களை சந்தித்த காவல்துறைத் தலைவர்களிடம் விசாரணை செய்யுமாறு கோரிக்கை!

அரச வாகனங்களில், சீருடையுடன் தமது பிரதேசத்திற்கு வெளியே சென்று, பீடாதிபதிகளை சந்தித்து, ஊடகங்களின் முன்னிலையில் மிகவும் ஒழுக்கேடான முறையில் கருத்துகளை வெளிப்படுத்திய உயர் காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக காவல்துறை ஆணைக்குழு விசாரணை நடத்த வேண்டுமென, முன்னாள் அரச மற்றும் காவல்துறை அதிகாரிகள் குழு, பரிந்துரைத்துள்ளது.

இரண்டு சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர்களான நந்தன முனசிங்க மற்றும் தேசபந்து தென்னக்கோன், மல்வத்து, அஸ்கிரிய மற்றும் அநுராதபுரம் அடமஸ்தான தலைமை பீடாதிபதிகளை சந்தித்து, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தம்மீது சுமத்தியுள்ள குற்றவியல் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

“இந்த இரண்டு சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளும் ஒழுக்கமற்ற மற்றும் சட்டவிரோதமான செயலைச் செய்துள்ளனர். உத்தியோகபூர்வ வாகனங்களில் சீருடையில் சென்று மூன்றாம் தரப்பினரிடம் சட்ட விடயங்களைப் பற்றி பேசியதும், காவல்துறை மா அதிபரிடம் அனுமதி பெறாமையும் குற்றம்” என முன்னாள் பிரதி காவல்துறை மாஅதிபர் எம்.ஜி.பி கொடகதெனிய குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் குறித்து காவல்துறை மா அதிபர் விசாரணை நடத்தாமை பிரச்சினைக்குரிய விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனிப்பட்ட நலனுக்காக சீருடை மற்றும் வாகனங்களைப் பயன்படுத்தியமை மற்றும் சீருடையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தமை தவறு என, அமைச்சின் முன்னாள் செயலாளர் அசோக பீரிஸ், சுட்டிக்காட்டியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்கத் தவறியதாக ஜனாதிபதி ஆணைக்குழு குற்றம் சாட்டியுள்ள நிலையில், அவர்கள் நீதிமன்றங்களின் உதவியை நாடாமல் வேறு வழிகளில் தம்மை விடுவிக்க முயற்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என அசோக பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

“ஏனைய காவல்துறை அதிகாரிகளுடன் இதுபோன்ற பயணங்ளை மேற்கொள்ள வேண்டுமெனின், காவல்துறைமா அதிபரிடம் முன் அனுமதி பெற வேண்டும். அவ்வாறில்லாமவ் உங்களால் உத்தியோகபூர்வ வாகனங்களில் இதுபோன்று சீருடையுடன் பயணிக்க முடியாது. காவல்துறைமா அதிபரும், காவல்துறை ஆணைக்குழுவும் இதுத் தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும்.” என முன்னாள் பிரதி காவல்துறைமா அதிபர் மெரில் குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.

தமக்கு ஏதாவது ஒரு ஆணைக்குழு அல்ல, கீழ் நீதிமன்றத்தால் அநீதி இழைக்கப்பட்டிருப்பதாக கருதினால் அவர்கள் நீதித்துறையின் உதவியை நாடியிருக்க வேண்டுமென, பெயர் குறிப்பிட விரும்பாத முன்னாள் அமைச்சின் செயலாளர் ஒருவர் கூறியுள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களாக தமக்கு நீதி கிடைக்கும் என நம்பியதாகவும், எனினும் அவ்வாறு எதுவும் இடம்பெறாத நிலையில் தான் இந்த தீர்மானத்திற்கு வந்ததாக குறிப்பிட்டுள்ள சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி நந்தன முனசிங்க “யாரும் எதுவும் சொல்வதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற சமயத்தில், நீர்கொழும்பு பிரதேசத்திற்கு பொறுப்பாக செயற்பட்ட பிரதி காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன், தாக்குதலைத் தடுக்கத் தவறியதாக ஜனாதிபதி ஆணைக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது.

மேலும், மேல் மாகாணத்திற்கு பொறுப்பாக அந்த சமயத்தில் செயற்பட்ட பிரதி காவல்துறைமா அதிபர் நந்தன முனசிங்கவிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கௌரி சங்கரி தவராசாவின் திடீர் மரணம் தமிழ் மக்களுக்கு பாரிய இழப்பு –ரெலோ தலைவர் செல்வம்

சிறையில் உள்ள தமிழ் இளைஞர், யுவதிகளின் விடுதலைக்காகவும் அரசியல் கைதிகளுக்காகவும் மிக நீண்ட காலமாக செயற்பட்டு வந்த சிரேஷ்ட சட்டத்தரணி திருமதி கௌரி சங்கரி தவராசாவின் திடீர் மரணம் தமிழ் மக்களுக்கு பாரிய இழப்பு என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

சிரேஷ்ட சட்டத்தரணி திருமதி கௌரி சங்கரி தவராசாவின் திடீர் மரணம் குறித்து அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) விடுத்துள்ள இரங்கல் செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ள அவர், “அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்றவற்றின் கீழ் கடந்த காலங்களில் கைது செய்யப்பட்டு பல வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்படுகின்ற தமிழ் இளைஞர், யுவதிகளின் விடுதலைக்காகவும் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும் நீண்ட காலமாக செயற்பட்டு வந்திருந்தவர் சிரேஷ்ட சட்டத்தரணி திருமதி கௌரி சங்கரி தவராசா.

இவரின் இழப்பு தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை நம்பி இருந்தவர்களுக்கு பாரிய இழப்பாகவே அமைந்துள்ளது.

ஆட்கடத்தல், காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் அரசியல் படுகொலைகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளுக்காக உயர்நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்து உள் நாட்டிலும் வெளி நாடுகளிலும் பேசப்பட்ட ஒரு பிரபல சட்டத்தரணி திருமதி கௌரி சங்கரி தவராசா ஆவர்.

என்னை அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்தபோது எனது விடுதலைக்காக நீதிமன்றத்தில் வாதாடி என்னை பிணையில் செல்ல அனுமதி பெற்றுத்தந்தவர். அவரின் இழப்பை ஈடு செய்ய முடியாத நிலையில் நாம் உள்ளோம்.

அவரை இழந்து நிற்கும் கணவர் கே.வி.தவராசா மற்றும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிப்பதோடு அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை தொடர்பான வெளியுறவுக் கொள்கையை மாற்ற வேண்டிய தருணத்துக்கு இந்தியா வந்து விட்டது – மேஜர் மதன் குமார்

இந்தியாவெளியுறவுக் கொள்கை மாற்ற வேண்டிய தருணம்- மேஜர் மதன் குமார்
இந்திய இராணுவ அதிகாரியும், அரசியல், பாதுகாப்பு விவகார ஆய்வாளருமான மேஜர் மதன் குமார் அவர்கள் உயிரோடைத் தமிழ் வானொலியின் ‘தாயகக் களம்’ நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வியின் முக்கிய பகுதிகளை இங்கே தருகின்றோம்.
இந்தியாவெளியுறவுக் கொள்கை மாற்ற வேண்டிய தருணம்

கேள்வி?

இந்தியாவிற்கான தூதுவராக மிலிந்த மொரகொட நியமிக்கப் பட்டிருக்கின்றார். ஒரு சிரேஸ்ட அமைச்சராக இருந்தவர் அவர். இப்போது ஒரு தூதுவராக அனுப்பப் படுகின்றார். இந்த நியமனத்தை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்!

மிலிந்த மொரகொடவிற்கு ஒரு வரலாறு உண்டு. பாரதப் பிரதமர் மோடி அவர்களுக்கு நெருக்கமானவர் மிலிந்த மொரகொட. அவரின் அபிவிருத்தி திட்டம், அவரின் செயற்பாடுகள் பற்றி மிகவும் பெருமையாகப் பேசினார். இந்தியா இலங்கைக்கு இடையிலான வர்த்தகத்துறை, சுற்றுலாத்துறை, கலாச்சாரம் இவை பற்றி தூதராலயத்தில் பேசினார். இந்தியா இலங்கைக்கான உறவு அதள பாதாளத்தில் இருக்கும் இந்நிலையில், இவர் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஒரு அரசியல்வாதி, வர்த்தகரும்கூட. இந்தியாவைப் பற்றி அதிக புரிதல் கொண்டவர். பாரதப் பிரதமர் மோடி அவர்களுக்கு நெருக்கமானவராகப் பார்க்கப்படுகின்றார்.

இந்தியாவெளியுறவுக் கொள்கை மாற்ற வேண்டிய தருணம்அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவரை தூதுவராக நியமித்து, அவருக்கு அமைச்சு அதிகாரத்தையும் சேர்த்துக் கொடுத்திருக்கின்றார்கள். இதற்கு அர்த்தம் என்னவென்றால், இலங்கை அதிபருக்கு நேரடியாகவே தகவல்களை வழங்கக்கூடிய ஒரு சூழ்நிலை இருக்கின்றது. இந்த சமயத்தில் இலங்கை அரசாங்கம் இதை ஏன் செய்திருக்கின்றது என்றால், இலங்கை சீனாவுடன் உறவு வைத்து, கடந்த ஒன்றரை வருடங்களாக நெடுந்தூரம் பயணம் செய்து விட்டார்கள். அதற்கு இந்தியாவின் எதிர்ப்பு மிக அதிகமாக இருக்கின்றது. குறிப்பாக துறைமுக நகரத் திட்டம். இதனால் இந்தியாவின் இறையாண்மைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள். இலங்கைத் தமிழர்களுக்கு உண்டான வாழ்வுரிமைப் பிரச்சினை. சீனாவின் வழியில் சென்ற இலங்கை, தனது பெயரை தக்க வைப்பதற்காகவும், இலங்கை இந்திய உறவை வலுப்படுத்துவதற்காகவும், இந்தியாவை சாந்தப்படுத்துவதற்காகவும், மிலிந்த மொரகொடவை நியமித்திருப்பதாக நான் பார்க்கிறேன்.

கேள்வி?

இந்தியாவுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கான திட்ட யோசனை ஒன்றுடன் தான் மிலிந்த மொரகொட டெல்லிக்கு வரவிருக்கின்றார். முதலீடு, இருதரப்பு வர்த்தகம், உல்லாசப் பயணத்துறை என அவரது திட்டம் பல விடயங்களை உள்ளடக்கியிருக்கின்றது. இந்தத் திட்டம் எந்தளவிற்கு இந்தியா வினால் எந்தளவிற்கு ஏற்றுக் கொள்ளக்கூடியதாக, வரவேற்கப்படக் கூடியதாக இருக்கும் என நினைக்கின்றீர்கள்?

பதில்!

தூதரக அதிகாரியாக நியமிக்கப்பட்ட அறிவிப்பு வந்தவுடன் இந்தியா பெரியளவிற்கு அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் இதற்கான எதிர்ப்பு எதுவும் இந்தியா தெரிவிக்க வில்லை. இதனை பாரதப் பிரதமர் மோடி அவர்கள் ஒருவகையில் வரவேற்பார் என்று நம்புகின்றேன். ஏனெனில், நரேந்திர மோடி அவர்களுக்கும் மிலிந்த மொரகொட விற்கும் ஏற்கனவே 15 வருடகாலத் தொடர்பு இருக்கின்றது. அவர் குஜராத் முதலமைச்சராக இருக்கும் போது, அதனால் இதை முன்னெடுத்துச் செல்வார் என்று தான் நினைக்கின்றேன்.

மிலிந்த மொரகொட இந்திய ஊடகங்களுக்குக் கொடுத்த பேட்டியில், இந்தியா இலங்கையுடனான உறவு வர்த்தகத் தொடர்பு போலவே இருக்கின்றது. வர்த்தகத்தில் கொடுக்கல் வாங்கல்களை எப்படி மேற்கொள்கின்றோமோ அப்படித் தான் இருக்கின்றது. என்று குறிப்பிட்டுள்ளார். இதை முன்னேற்றுவதற்கான மூலோபாய உறவு நிலைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று அவர் தனது கருத்தைத் தெரிவிக்கின்றார்.

இரண்டாவது இந்தியாவின் மிக முக்கியமான கோரிக்கையான மாகாணசபைத் தேர்தல், மாகாண சபைக்கு உரியதான சுயாட்சி தொடர்பில் தனது சொந்தக் கருத்தாக ஒன்றைத் தெரிவிக்கின்றார். இந்த மாகாண சபை என்பது பழைய நடை முறையாக உள்ளது. அது எந்தளவிற்கு சாத்தியமானது என்று தெரியவில்லை என்று தனது கருத்தைத் தெரிவிக்கின்றார். மாகாண சபைக்கு உடன்படாத ஒரு கருத்தைத் தெரிவிக்கின்றார். அவர் மேலும் தெரிவிக்கையில், மாகாண சபைக்குப் பதிலாக அமெரிக்கா போன்ற நாடுகளைப் போன்றதான ஒரு செனட் அமைப்பைக் கொண்டு வந்து, அங்கே இருக்கும் மக்களுக்கான ஓரளவுக்கான சுயாட்சியை தரவேண்டும் என்ற ஒரு பார்வை அவருக்கு இருக்கின்றது. இதற்குப் பின்னர் இந்தியாவுடனான உறவு வர்த்தகத் (பரிமாற்றத்) தொடர்பு என்ற நிலையில் இருந்து மூலோபாய உறவு நிலைக்கு கொண்டு வரும் என்று அவர் நினைப்பதாக நான் கருதுகின்றேன்.

கேள்வி?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் குழு ஒன்றும் புதுடில்லிக்கு வரவிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கின்றது. இதைப் பற்றிய உங்களின் கருத்து என்ன?

பதில்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்திய வருகையை எதிர்பார்த் திருக்கின்றோம். இது கடந்த வருடம் நடந்திருக்க வேண்டியது. கொரோனா காரணமாக நடக்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களை ஜெய்சங்கர் அவர்கள் இலங்கைக்குச் சென்றிருந்த போது சந்தித்தார். அதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக இது நடக்கிறது. இவர்கள் இங்கு வரும் போது, நிச்சயமாக பாரதப் பிரதமர் அவர்களையும், உள்துறை அமைச்சரையும், வெளிவிவகார அமைச்சரையும் சந்திப்பார்கள் என்று நான் நம்புகின்றேன்.

இந்தச் சந்திப்பின் போது இந்தியாவின் பார்வை என்னவென்றால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல கட்சிகள் ஒன்றாக இணைந்தாலும், இதற்கு மிக வலிமையான ஒரு அரசியல் தலைமை தேவைப்படுகின்றது. இந்த அரசியல் தலைமை இல்லாதபோது இந்தியா தன்னுடைய திட்டங்களையும், 13ஆவது திருத்தச் சட்டம் போன்றவற்றில் அரசியல் தீர்வு காண வேண்டும் என்றால், இந்தியா யாரை ஆதரிக்கும் என்ற ஒரு கேள்வி இருக்கின்றது. TNA என்பது ஒரு கூட்டமைப்பு.

அதற்குள் ஒரு மிக முக்கியமான தலைவர் உருவாக வேண்டிய கட்டாயம் இருக்கின்றது. ஒன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவராக இருக்கலாம். அல்லது வெளியில் இருந்து வரலாம். அந்த மாதிரி ஒரு தலைவர் இருந்தால் தான், இந்தியா அவர்களுடன் கூட நின்று ஒரு அரசியல் தீர்வைக் காண முடியும் என்று இந்தியா எதிர்பார்க்கின்றது. இதே விடயம் TNA இற்கு வலியுறுத்தப்படும் என்று நான் நம்புகின்றேன்.

பல கட்சிகள் உள்ளே இருந்தாலும், தங்களுடைய கொள்கை, தங்களுடைய வளர்ச்சி என்று பாரத்தாலும், அதைத் தாண்டி ஈழத் தமிழர்களுக்கென்று ஒரு அரசியல் தலைவர் உருவாகி வருவது ஈழத் தமிழர்களுக்கு ஒரு மிக முக்கியமான நிகழ்வாக இருக்கும். மிகவும் நல்லதொரு தொடக்கமாக இருக்கும். 2009 ஈழப்போர் முடிந்து இன்று வரை காத்திருந்தும் அப்படிப்பட்ட ஒரு நிலைமை வரவில்லை. அதை முன்னெ டுப்பதற்கு TNAயை மோடி அவர்கள் வழிநடத்துவார் என்று நான் நம்புகின்றேன்.

இந்தியாவின் அணுகுமுறை என்ன?

கேள்வி?

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக கொழும்பு துறைமுக நகரம் போன்ற திட்டங்கள் இந்தியாவின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கும் வகையில் அமைந்திருக்கின்றது. இவை குறித்து இந்தியாவின் அணுகுமுறை என்ன?

பதில்!

துறைமுக நகரத் திட்டத்தை பாராளுமன்றில் கொண்டு வரும் போது இந்தியா அதற்கு ஒரு எதிர்ப்புத் தெரிவிக்கும் என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் இந்தியா மௌனம் சாதிக்கிறது. இன்றுவரை இந்தியா மௌனம் சாதித்துக் கொண்டிருப் பதற்கான காரணங்கள் இதுவரை இந்தியா இலங்கை உறவில் ஒரு மிக முக்கியமான மைல்கல் என்னவென்றால், IPKF என்று சொல்லப்படும் அமைதிப்படை அங்கு வந்தது. பின்னர் இந்தியா அதை பின்வாங்கிக் கொண்டது. அன்று ஆட்சியில் இருந்த சிறீலங்கா அரசாங்கமும், விடுதலைப் புலிகளதும் தலைவரதும் ஒருமித்த கருத்தால் அது பின்வாங்கப்பட்டது. அதற்குப் பின்னர் ராஜீவ் காந்தி அவர்களின் மரணம் நிகழ்ந்தது. அதற்குப் பின்னர விடுதலைப் புலிகளுடனான இந்திய அரசின் உறவு ஒரு வகையாக முடிந்து விட்டதே என்று நான் சொல்லுவேன். ஆனால் இலங்கை அரசாங்கத்திற்கு உண்டான உறவும் ஒரு தேக்க நிலையை அடைந்து, அதற்கு மேல் முன்னேறவில்லை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் 2014 மோடி அவர்கள் அரசாங்கம் அமைக்கும் போது, இந்தியப் பிரதமர் யாழ்ப்பாணம் வந்து இறங்குகிறார். அதன் பின்னர் இந்த உறவு முறை ஒருவகையான வேகம் எடுக்கிறது. இதில் 3 முக்கிய நபர்கள் இருக்கிறார்கள். ஒன்று இலங்கை அரசங்கம், மற்றையது இந்திய அரசாங்கம், மூன்றாவது ஈழத் தமிழர்கள். இப்படி ஒரு சூழ்நிலையில் இந்த துறைமுக நகரம் கிழக்கு முனையம், இவ்வாறு சீனாவின் ஒரு காலனியமாகவே இலங்கை வெகு வேகமாக மாறியது குறிப்பாக கொரோனா வந்த பிறகு. இந்த சூழ்நிலையில் இதுவரை இருந்த உறவு, இதுவரை இருந்த வெளியுறவுக் கொள்கையை மாற்றியமைக்கக்கூடிய தருணத்திற்கு இந்தியா வந்து விட்டது.

இந்த மாற்றம் இனிவரும் காலங்களில் இலங்கையை எப்படிக் கையாள்வது, இலங்கை அரசைக் குறிப்பாக எப்படிக் கையாள்வது, இலங்கை அரசு என்பதை விட ராஜபக்ஸ அரசு என்று குறிப்பாகக் கூறுவேன். இந்தக் குடும்ப அரசாங்கத்தை எப்படிக் கையாள்வது என்பதை விவாதித்து, இதற்கு உண்டான பின்புல வேலை களையும் முடித்து விட்டு, இதற்கு உண்டான அறிவிப்பு மிக விரைவில் வெளிவரும் என நான் எதிர்பார்க்கிறேன். இதற்கும் காலம் தாழ்ந்து விட்டது. இந்த வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போது, இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக மோசமான தாக்கத்தை உண்டாக்கியது. அந்த சூழ்நிலையில் இதைப் பண்ண முடியவில்லை.

வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்

வரும் ஜனவரியில் மிகப் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேச தேர்தல் வருகின்றது. இந்தத் தேர்தலுக்குப் பிறகு, இது ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பாகவும், இது தொடர்பான அதிகாரபூர்வ நடவடிக்கைகளும் தொடங்கும் என நினைக்கிறேன். தேர்தல் வெற்றி இந்திய ஜனநாயக அரசுக்கு ஒரு மிகப்பெரிய வலிமையைக் கொடுக்கும். இதை இவர்கள் தற்போது முக்கிய குறிக்கோளாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் ஒருபுறம் நடந்தாலும், இதற்குப் பின்புறம் நடக்கும் வேலைகள், பல விடயங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. குறிப்பாக வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் இரண்டு, மூன்று தடவை அமெரிக்கா சென்று வந்திருக்கின்றார்.

அதன் பின்னர் இலங்கை அரசில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கண்கூடாகக் காண்கின்றோம். பசில் ராஜபக்ச அவர்கள் ஒரு அமெரிக்கப் பிரஜை. அமெரிக்கக் குடியுரிமை பெற்ற இலங்கையர். இலங்கை அரசமைப்பு முறைப்படி அவர் தேர்தலில் போட்டியிட முடியாது. அவரை நிதியமைச்சராக ஆக்குவதற்காக சட்டவிதிகளில் மாற்றம் செய்யப்பட்டதை நாங்கள் பார்க்கிறோம். அவர் அமெரிக்காவில் பிறந்து வாழ்ந்தவர். இவை அனைத்தையும் நீங்கள் கணிப்பிட்டுப் பார்த்தீர்கள் என்றால், இதற்கான பின்புல வேலைகள் மிக வேகமாக நடந்திருக்கின்றது. இதற்கான பாதைகள் என்னவென்று இரண்டு மூன்று மாதங்களில் இந்த வருடக் கடைசியில் தெரிய வரும் என்பது எனது நம்பிக்கை.

யாழிலிருந்து தமிழகத்திற்கு பயணிகள் படகு சேவைக்கான கேள்வி மனு கோரிக்கை

யாழ்.காங்கேசன்துறை – தமிழகம் காரைக்கால் இடையில் பயணிகள் படகு சேவையை ஆரம்பிக்க போக்குவரத்துக்கான கப்பல் சேவை வழங்குனர்களிடமிருந்து கேள்வி மனு இந்தியாவில் கோரப்பட்டுள்ளது.

குறித்த கப்பல் சேவை வழங்குனர்களிடமிருந்து வாரத்தில் மூன்று நாட்கள் யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் இருந்து இந்தியாவின் காரைக்கால் துறைமுகம் வரை குறித்த சேவை வழங்கப்பட வேண்டும்.

இதன் மூலம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தகம் போக்குவரத்து தொழில்நுட்பம் ஆகியவற்றை பரிமாறி கொள்ளும் ஒரு நடவடிக்கையின் செயற்திட்டம் இடம் பெறவுள்ளது.

இதற்காக இந்திய மத்திய அரசின் சம்மதத்தை இந்தியாவின் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மணிப்பூர் ஆளுநருமான இல.கணேசன் முன்னெடுத்து வருகிறார்.

மேலும் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி அரச பிரதிநிதிகள் மற்றும் சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் ஆகியோர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் 3 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு

நாட்டில் மேலும் 3,315 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 397,670 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 346,767 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7,560 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தடுப்பூசி அட்டைக்கு எதிராக சிங்கள ராவய வழக்கு

கட்டாய தடுப்பூசிகள் மற்றும் தடுப்பூசி போடப்படாத நபர்கள் பொது இடங்களுக்கு செல்வதைத் தடுக்கும் விதிமுறைகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யபோவதாக சிங்கள ராவய அமைப்பு அறிவித்துள்ளது.

உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவை. இன்று (24) தாக்கல் செய்யவுள்ளதாக அவ்வமைப்பு அறிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி அட்டையை கட்டாயப்படுத்தியுள்ள அரசாங்கம், பொது இடங்களுக்குச் செல்லும் போது, அந்த அட்டையை எடுத்துச் செல்லவேண்டும். இந்த நடைமுறை செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் அமுலில் இருக்கும் என அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மங்களவின் பூதவுடல் அக்கினியுடன் சங்கமமாகியது

மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் பூதவுடல் இன்று அக்கினியுடன் சங்கமமாகியது.

கடந்த ஆகஸ்ட் 13 ஆம் திகதி கொரோனா தொற்றுக்குள்ளான மங்கள சமரவீர கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (24) காலமானார்.

இந்நிலையில், அன்னாரது இறுதிக் கிரியை இன்று (24) மாலை பொரள்ளை பொதுமயானத்தில் கொவிட் சுகாதார விதிமுறைகளுக்கு அமைய தகனம் செய்யப்பட்டது