நாட்டில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை

நாட்டில் உள்ள சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் அடிப்படையில் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நாட்டில் உள்ள சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரான, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் (கொவிட் 19) பரவல் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, தனியார் வகுப்புகளுக்கும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Posted in Uncategorized

தந்தை செல்வாவின் பெயரால் தமிழ் தேசிய நீக்க அரசியலை முன்னெடுக்க சில தரப்புக்கள் முயற்சி – பொத்துவில் பொலிகண்டி பேரியக்கம் குற்றச்சாட்டு

தந்தை செல்வாவின் பெயரால் தமிழ் தேசிய நீக்க அரசியலை முன்னெடுக்க சில தரப்புக்கள் முயற்சி என பொத்துவில் பொலிகண்டி பேரியக்கம் குற்றச்சாட்டாயுள்ளது.

தந்தை செல்வாவின் 44வது நினைவு தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் தந்தை செல்வாவை அகிம்சை போராளியின் தீர்க்கதரிசனம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஈழத்தமிழ் மக்களின் உரிமை போராட்டத்தின் தந்தையாக விளங்கும் எஸ்.ஜெ.வி செல்வநாயகம் அவர்களின் 44வது நினைவு தினம் இன்றாகும் (26.04.2021). ஆரம்பத்தில் தமிழ் தேசிய இருப்பிற்காக சமஸ்டி தீர்வினை வலியுறுத்தி அதற்காக சாத்வீக முறையில் போராடி வந்த தந்தை செல்வா, சிங்கள பேரினவாதத்தின் உண்மை முகத்தினை அறிந்த பின், வட்டுக்கோட்டையில் 1976 மே 14ம் திகதி நடந்த தமிழர் விடுதலை கூட்டணி கட்சி மாநாட்டில் தனது தலைமையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினார்.

இத்தீர்மானம் ஆனது தமிழர் வரலாற்றில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியதோடு தமிழ் இனத்திக்கான நிரந்தர தீர்வினையும் முன்மொழிந்தது. வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு தமிழினம் வழங்கிய ஏகோபித்த ஆதரவானது ஒட்டுமொத்த இனத்தினதும் அரசியல் அபிலாசையினை முழு உலகிற்கும் வெளிப்படுத்தி நின்றது. இத்தீர்மானமே அதன் பின் நடைபெற்ற அனைத்து போராட்ட வடிவங்களுக்கும் அடிப்படையாக அமைந்தது.

இன்று தமிழ் தேசியத்திற்காக குரல் கொடுக்கும் ஒவ்வொரு தமிழ் மகனையும் மகளையும் பயங்கரவாதியாக சித்தரிக்க முயலும் சிங்கள பேரினவாத அரசானது தமிழினத்தின் அகிம்சை வழிப்போராட்ட வரலாற்றினை ஏனோ இலகுவாக மறப்பதுடன் மறைத்தும் வருகின்றது.

இன்று தமது நாட்டை இழந்து, இனஅழிப்பிற்கு உள்ளாகி, தமது பூர்வீக நிலங்களை சிங்கள பேரினவாதத்திடமிருந்து காப்பாற்ற போராடிக்கொண்டிருக்கும் தமிழ் இனத்திற்கு, தந்தை செல்வா காட்டிய அகிம்சை வழி போராட்டமானது ஒரு தமிழ் தேசிய பாதையினை காட்டி நிற்கின்றது.

2009ம் ஆண்டிற்குப் பின் அரசியலில் அனாதைகளாக, உரிமை போராட்டத்தின் வழித்தடத்தினை தேடி நிற்கும் தமிழினத்திற்கு, எம்மால் விட்டுக்கொடுப்புகளின்றி சலுகைகளை மறுத்து உரிமைக்காக மீண்டும் அகிம்சை வழியிலும் போராட முடியும் என்பதை தந்தை செல்வாவின் நினைவுகள் வலியுறுத்தி நிற்கின்றன.

இன்று உரிமைக்காக மட்டுமன்றி நீதிக்காகவும் போராடிக்கொண்டிருக்கும் நாம், எமது வரலாற்று பாடங்களிலிருந்து, சிங்கள பேரின வாதத்திடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ள முடியாது என்பதை தெளிவாகவே அறிந்துள்ளோம். ஆயினும் சர்வதேசத்தில் எஞ்சியிருக்கும் மனிதவுரிமை மற்றும் நீதியின் மீதான பற்றுதியின் பால் நம்பிக்கை வைத்தே தொடர்ந்து போராடி வருகின்றோம்.

தமிழ் தேசியத்தின் மீதே தந்தை செல்வாவின் அரசியல் வாழ்வு கட்டமைக்கப்பட்டிருந்தது. ஆயின் இன்று சில தரப்புகள் தந்தை செல்வாவின் பெயரால் தமிழ் தேசிய நீக்க அரசியலை முன்னெடுக்க முயல்கின்றனர்.

இவர்கள் தமிழினத்தை தவறாக வழிநடத்த முயல்வதுடன் தந்தை செல்வாவின் தீர்க்கதர்சனமான அபிலாசையினை மறுதலிக்கவும் முற்படுகின்றனர். இவர்களை தமிழ் மக்கள் அடையாளம் காண்பதுடன் அவர்களை ஜனநாயக முறையில் தமிழ் தேசிய அரங்கிலிருந்து அகற்ற முன்வர வேண்டும்.

தந்தை செல்வாவின் நினைவுகளுடன் ஒன்றியிருக்கும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் ஆகிய நாம், அன்னார் காட்டிய வழியின் தமிழ் தேசிய வழியில் எவ்வித விட்டுக் கொடுப்புகளுமின்றி பயணிப்போம் என உறுதி எடுத்து கொள்கின்றோம்.

அவசர சிகிச்சைப் பிரிவுகளில் இடப்பற்றாக்குறை நிலவுகின்றது- பிரசன்ன குணசேன

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், அவசர சிகிச்சைப் பிரிவுகளில் இடப் பற்றாக்குறை தற்போது நிலவுகின்றதென அரச மருந்தாக்க கூட்டுதாபனத்தின் தலைவர் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன கூறியுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பிரசன்ன குணசேன மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தினை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்துவது மிகவும் அவசியமாகும்.

இதற்கு மக்கள், தங்களினால் முடிந்த சுயபரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். அதனூடாக ஆரம்பத்திலேயே கொரோனா வைரஸ் தொற்றுள்ளமையை இனங்கண்டு, சிகிச்சைப் பெறும்போது குணமடைய முடியும்.

அதாவது, சில சொற்களை பேசும் போது சோர்வை உணர்தல், ஒரே மூச்சில் 1- 10 வரை எண்ணுவதற்கு சிரமப்படுதல் ஆகிய தன்மைகளை உணர்வீர்களாயின் வைத்திய ஆலோசனை பெற்றுக்கொள்வது சிறந்தது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேல், வட மேல் மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை

மேல் மற்றும் வட மேல் மாகாணங்களிலுள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளுக்கும் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை விடுமுறை வழங்குமாறு கல்வி அமைச்சர், பேராசிரியர் ஜீ.எல். பீரீஸ் பணிப்புரை விடுத்துள்ளார்.

எனினும், நாட்டின் ஏனைய பகுதிகளில் காணப்படும் பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு வழங்கப்பட்டுள்ள தீர்மானத்தில் எவ்வித மாற்றங்களும் இல்லை என கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.

ஏதேனும் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுமாயின் அது குறித்து உரிய தகவல்கள் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

கற்பித்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் பாடசாலைகளில் சுகாதார ஒழுங்குவிதிகளை உரிய வகையில் பின்பற்றுமாறு கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரீஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Posted in Uncategorized

நாட்டில் அதிரடியாக முடக்கப்படுகிறது சில பகுதிகள் !

காலி மாவட்டத்தில் ரத்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இம்புலகொட மற்றும் கடுதம்பே கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (26) இரவு 8 மணி முதல் குறித்த பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட உள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கம்பஹா, களுத்துறை, திருகோணமலை பொலிஸ் பிரிவில் உள்ள சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தபடுவதாக இன்று அறிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் கம்பஹா மாவட்டத்தின் கொட்தெனியாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்ஹேன, ஹீரலுகெதர மற்றும் களுஅக்கல ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் மினுவங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஸ்வென்னவத்த கிழக்கு கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்படவுள்ளது.

அத்துடன் களுத்துறை மாவட்டத்தின் மீகஹதென்ன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிரிஸ்வத்த, பெலவத்த வடக்கு, பெலவத்த கிழக்கு ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

மேலும் திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூம்புகார் கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

ஆட்சிக்கு வந்த அரசாங்கம் அதிகாரப் பரவலாக்கல் முறைகளை முற்றாக அகற்றிவிட வேண்டும் என்றே சிந்தித்து செயற்படுகிறது – கலாநிதி ஜெகான் பெரேரா

ஆட்சிக்கு வந்திருக்கும் அரசாங்கமானது இந்த அதிகாரப் பரவலாக்கல் முறைகளை முற்றாக அகற்றிவிட வேண்டும் எனவும் அதற்கான ஆணையை மக்கள் தமக்கு வழங்கி இருக்கின்றார்கள் என்ற சிந்தனையோடு தற்போதைய அரசாங்கமானது ஆட்சி பீடம்ஏறி இருக்கின்றது.

அது எவ்வாறு என்றாலும் சமாதான சூழலுக்கு பல பலவிதமான சவால்கள் இருந்து கொண்டிருக்கும் நிலையிலும் கூட எங்களுடைய நம்பிக்கையினை நாங்கள் இழக்கக்கூடாது தொடர்ச்சியாக அதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என இலங்கை தேசிய சமாதான பேரவையின் நிறைவேற்று இயக்குனர் கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்ற தந்தை செல்வாவின் 44 வது நினைவுநாள் நிகழ்வில் முன்னேற்றத்தின் வழிகளில் இணக்கம் காண்தல் எனும் தலைப்பில் ஆற்றிய நினைவுப் பேருரையில் இதனைத் தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு இந்த நினைவு பேருரை நிகழ்வு இடம்பெறுகிறது. இந்த இரண்டு வருடங்களில் பல மாற்றங்கள் பல தீய நிகழ்வுகள் இந்த நாட்டில் இடம்பெற்றிருக்கின்றன. நல்ல நோக்கத்தை அடைவதற்கு சமாதானத்தை முன்னெடுத்தல் என்பதுதான் இன்று இந்த உரையின் கருப்பொருளாக உள்ளது.

கடந்த நாட்களிலேயே இலங்கைக்கு பொருத்தமான ஆட்சிமுறை சமஸ்டி முறையிலான ஆட்சி முறைதான் சரியானது என குறிப்பிட்டிருந்தார்கள். அதுவும் சுவிட்சலாந்து மாதிரியான சமஸ்டி முறையிலான ஒருமுறைதான் இலங்கைக்கு பொருத்தமானது என குறிப்பிட்டுள்ளார்கள்.

சிங்கள மக்களைப் பொருத்தவரை 2>500 ஆண்டுகளுக்கு முன்னர் தங்களுக்கென்று ஒரு சரித்திரம் அமைந்துள்ளதாக தெரிவிக்கின்றார்கள். அத்தோடு அவர்கள் கூறுகின்றார்கள் புத்தபெருமான் தங்களுக்கென்று இந்த தீவினை கொடுத்திருக்கிறார்கள் என அவர்கள் நம்புகிறார்கள்.

பௌத்தத்தை பாதுகாப்பதற்கான பொறுப்பு சிங்களவர்கள் கையிலே இந்தத் தீவிலே கொடுக்கப்பட்டு இருப்பதாக நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே செயற்படுவதை நாங்கள் காணக்கூடியதாக இருக்கின்றது. அது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கத்திலே இந்தத் தீவிலே அவர்கள் மிகப் பெரும்பான்மையான எண்ணிக்கையாக இருந்திருந்தாலும் கூட அவர்கள் மன நிலையானது ஒரு சிறுபான்மை மக்களை போன்றதாகவே இருக்கின்றது. சிறுபான்மை மனநிலை உடைய சிங்களவர் பெரும்பான்மையினராக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அதற்கு பல காரணங்கள் உண்டு. பிராந்தியத்தை எடுத்துப்பார்த்தால் அதில் அவர்கள் மிக சொற்ப சிறிதளவு எண்ணிக்கையை கொண்டவர்களாக காணப்படுகின்றார்கள்.

தமிழர்களை பார்க்கும் போது தமிழ் மக்கள் தாங்கள் ஒரு பிரதேசம் என்கின்ற மனநிலையோடு வாழுகிற மக்கள், வேறு பிரதேசங்களில் வாழுகின்ற மற்றவர்களை விட வித்தியாசமாக கலாச்சாரம், மொழி பின்னணி எல்லாவற்றிலுமே வேறாக இருக்கின்ற ஒரு பிறிதான தேசம் என்ற மனநிலையோடு தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். ஆகவே இந்த இரண்டு இனங்களுக்கு இடையில் இந்த தீவில் எப்படியாக நிர்வாகத்தை செய்வது என்ற கேள்வி எழுகின்றது.

13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக ஒரு அதிகாரப் பகிர்வு முறை ஒன்று ஏற்படுத்தப்பட்டது. அது முழுமை பெறாது இருந்தாலும் அது இன்னமும் சீர் செய்ய வேண்டியதாக இருந்தாலும் கூட அதிகாரப் பகிர்வுக்கான ஒரு அடிப்படையை அது கொடுத்திருந்தது அதனை சீர் செய்து சரி செய்து நிவர்த்தி செய்ய வேண்டும். அதில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யவேண்டும்.

ஆனால் இன்றைக்கு நிலைமை எவ்வாறு இருக்கின்றது என்பதை ஆராய்ந்து அறிந்து கொள்ளல் நல்லதாக இருக்கும். தற்போது ஆட்சிக்கு வந்திருக்கும் அரசாங்கமானது இந்த அதிகாரப் பரவலாக்கல் முறைகளை முற்றாக அகற்றிவிட வேண்டும் என அதற்கான ஆணையை மக்கள் தமக்கு வழங்கி இருக்கின்றார்கள் என்ற சிந்தனையோடு தற்போதைய அரசாங்கமானது ஆட்சி பீடம் ஏறி இருக்கின்றது.

இன்றைக்கு அவர்களுடைய நிலைப்பாடு அதிகாரப் பகிர்வுக்கு எதிரானதாக இருக்கின்றது. அப்படியான சிந்தனையிலேயே இருக்கின்ற வேளையில் தான் யுத்தம் முடிவடைந்த பிறகு ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் இலங்கைக்கு வருகை தந்த போது அப்போதிருந்த ஜனாதிபதி உடன் ஏற்படுத்திக் கொண்ட கூட்டு அறிக்கையின் பிரகாரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினுடைய சிலர் தலையீடுகள் இருந்துகொண்டிருந்தன.

இந்தத் தடவை இப்படியான வித்தியாசமான சிந்தனையோடு ஆட்சி வந்த அரசாங்கம் தோற்றுப் போனது, ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு தீர்மானம் நிறைவேறி இருக்கிறது/ அந்த தீர்மானத்தின் பிரகாரம் இன்னும் பதினெட்டு மாத காலத்திற்கு இலங்கை மீதான கடும் பார்வை கண்காணிப்பு இருக்கும் மேற்பார்வை ஒன்றும் இருக்கும்.

நான்கு மாதத்திற்கு ஒரு தடவை இலங்கை நிலைமை குறித்து அறிக்கை கொடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது. செயலாளர் நாயகம் இலங்கைக்கு வந்தபோது இலங்கை ஜனாதிபதியோடு செய்த கூட்டறிக்கை முக்கியமான அம்சமாக இருந்தது..பொறுப்புக்கூறல் என்பது நிலைமாறுகால நீதி என்கின்ற ஒரு தத்துவம் இப்பொழுது காணப்படுகின்றது.

அதாவது ஒரு குழப்பமான சூழ்நிலையில் அல்லது ஒரு ஆயுத மோதலுக்குப் பிறகு வருகின்ற காலத்தில் இந்த நிலை நிலைமாறுகால நீதி அமுல்படுத்தப்படும் அதில் பிரதானமான தூண்கள் முதலாவது உண்மை இரண்டாவது நீதி , இழப்புகள் கொடுக்கப்படுதல், முன்னரைப் போல பல இழப்புக்களை ஏற்படாமைக்கான உத்தரவாதம் இந்த நான்கை எடுத்துக்கொண்டாலும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் ஆகட்டும் அல்லது மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட முன்னைய தீர்மானங்கள் ஆகட்டும் அவை பொறுப்புக்கூறல் என்கின்ற இரண்டாவது தூணைத்தான் கூடுதலாக வலியுறுத்தி இருக்கின்றனர். உண்மை உண்மையை கண்டறிதல் மிகவும் முக்கியமான ஒரு விடயமாகும்.

சமாதானத்திற்கான சவால் என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தினை நான் முன்னொரு காலத்தில் மன்னார் ஆயரின் இல்லத்தில் வைத்து நான் அதனை படித்திருந்தேன் அதன் நடுப்பக்கத்தில் அமெரிக்க கத்தோலிக்க ஆயர்கள் சேர்ந்து எழுதிய அந்த புத்தகத்தில் அவர்கள் அந்த நேரத்தில் சோவியத் ரஷ்யா எவ்வாறு தீய சக்தியாக உலகத்தில் இருக்கின்றதோ> அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் இருந்து ஒரு பாரிய முறுகல் நிலை இருந்த பின்னணியிலே ஒரு அணு ஆயுத போர் ஏற்படுமா என்ற பீதி உலகம் முழுவதும் பிடித்திருந்த நிலையிலே அந்த பேராயர்கள் அந்தப் சமாதானத்துக்கான சவால்கள் என்ற நூலில் எழுதினார்கள்.

அதில் அவர்கள் சொன்ன பல விடயங்கள் என்னுடைய மனதை தொட்டு இருக்கின்றன. அதை அவர்கள் எழுதி ஐந்து வருட காலத்துக்குள்ளேயே உலகத்திலே தீய சக்தியாக வர்ணிக்கப்பட்ட சோவியத் ரஷ்யாவில் பல மாற்றங்கள் நிகழ்ந்ததை நாங்கள் அறிந்திருந்தோம்.

எனவே எமது நாட்டிலும் தமிழர்களாகிய நாம் எமது நம்பிக்கையை இழக்க கூடாது சமாதானத்திற்கான பல பலவிதமான சவால்கள் இருந்து கொண்டிருக்கும் நிலையிலும் கூட எங்களுடைய நம்பிக்கைகளை நாங்கள் இழக்கக்கூடாது தொடர்ச்சியாக அதற்கான எங்களுடைய முயற்சிகளை நாங்கள் தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும். எந்த வேலையிலும் நம்பிக்கை இழந்தவர்களாக நாங்கள் போய்விடக்கூடாது தொடர்ச்சியாக எங்களுடைய முனைப்பான முயற்சி இருக்க வேண்டும் என்றார்.

அமெரிக்கா, பிரித்தானியா இலங்கைக்கு பயண எச்சரிக்கை

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துவரும் நிலையில், இலங்கைக்கான பயண எச்சரிக்கையை பிரித்தானியாவும், அமெரிக்காவும் விடுத்துள்ளன.

கொரோனா தொற்று காரணமாக இரண்டாவது நிலை பயணக் கட்டுப்பாடுகளை அமெரிக்கா நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிலையம் அறிவித்துள்ளது.

2021 ஏப்ரல் 21 ஆம் வெளியிடப்பட்ட இந்த இரண்டாம் நிலை பயண ஆலோசனை நாட்டில் கொரோனா தொற்றின் மிதமான அளவைக் குறிக்கிறது.

இதேவேளை இலங்கைக்கான நுழைவு கட்டுப்பாடுகள் குறிப்பாக தனிமைப்படுத்தல் மற்றும் பி.சி.ஆர். சோதனைக்கான ஏற்பாடுகளுக்கு உட்பட்டு பிரித்தானியாவும் பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது.

இந்தப் பயண ஆலோசனை 2021 ஏப்ரல் 26 ஆம் திகதி பிரித்தானிய அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

பயணத்திற்கு முட்டுக்கட்டையாக இருப்பவர்கள் கட்சியை விட்டு வெளியேறுங்கள் – சஜித்

தனது பயணத்தைத் தடுப்பவர்கள் கட்சியை விட்டு வெளியேறுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த காலங்களைப் போல எவரும் தங்கள் வேலையில் தலையிட அனுமதிக்கப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

தன்னை நோக்கிவந்த அனைத்து பிரச்சினைகளின் போதும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தனக்கு உதவியதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மேலும் எவ்விதமான பிரச்சினைகள் காணப்பட்டாலும் மக்களுக்காக சேவை செய்ய உதவிய மனிதர்களில் அவரும் ஒருவர் என்றும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான இறுதி முடிவு

பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் மே 4 ஆம் திகதி நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

கூட்டத்தில் இரண்டு பிரச்சினைகளை உறுதியாக தீர்க்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஒன்று தேர்தல் முறையின் தீர்க்கப்படாத பிரச்சினை மற்றும் ஒவ்வொரு பிரிவுக்கும் 03 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா என்பது இரண்டாவதாகும்.

இது தொடர்பில் அன்றையதினம் இறுதி முடிவு எடுக்கப்பட்டால், மாகாண சபை தேர்தல் சட்டம் அடுத்த சில வாரங்களில் திருத்தம் செய்யப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள் மாகாண சபை தேர்தல்களை நடத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

‘சீனப் பட்டினம்’ ஒரே நாடு ஒரே சட்டத்துக்குள் அடங்காதா? – தமிழர்களைத் தூண்டிலாக்கும் எதிர்த் தரப்புகள்!

கொழும்பு துறைமுகத்துக்கு அருகே சீனாவால் கட்டப்பட்டுவரும் நிதி நகரம் தொடர்பாக சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன.

இப்பட்டினம் மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டத் தொடங்கியது. கொழும்பின் இதயமான ஒரு பகுதியில் கடலை பகுதியை மூடி இந்நகரம் உருவாக்கப்பட்டுகிறது.

ஏறக்குறைய 216 ஹெக்டேர் நிலப்பரப்பில் இந்நகரம் உருவாக்கப்படுகிறது. இதில், 116 ஹெக்டேர் நிலப்பரப்பு சீனக் கம்பனிக்கு உரித்தாக இருக்கும். சுமார் 90 ஹெக்டேர் நிலப்பரப்பு இலங்கை அரசாங்கத்தின் உரித்தாக இருக்கும்.

சீனக் கம்பனிக்கு உரித்தாகவுள்ள நிலப்பரப்பில் சுமார் 20 ஹெக்டேர் நிலப்பரப்பு முழுக்கமுழுக்க அந்தக் கம்பனிக்கே சொந்தமாக மாற்றப்பட்டுவிடும். அது இலங்கைத் தீவின் சட்டதிட்டங்களுக்கு உட்படாது. சீன கம்பனியே கடந்த தேர்தல்களின் போது ராஜபக்ஷக்களுக்கு பெருமளவு நிதியுதவிகளை வழங்கியதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு.

இவ்வாறு கடலை மூடி ஏன் ஒரு நகரத்தை உருவாக்க வேண்டும் என்ற கேள்வி அப்போதே கேட்கப்பட்டது. இலங்கை தீவில் குறிப்பாக கொழும்பில் போதிய அளவு நிலம் இருக்கத்தக்கதாக எதற்காக கடலை மூட வேண்டும் என்ற கேள்வி அப்போது எழுந்தது. கேள்விக்கு உரிய பதில் எதுவெனில் கொழும்பின் இதயமான பகுதியில் சீனா ஒரு நகரத்தைக் கட்டியெழுப்ப விரும்பியது என்பதுதான்.

கொழும்பின் ஏனைய பகுதிகளில் நிலத்தை வாங்கி அந்த நகரத்தை உருவாக்க அவர்கள் விரும்பவில்லை. கொழும்பின் இதயமான பகுதியில் அதிலும் குறிப்பாக அரசியல் அதிகாரத்தின் மையம், கொழும்பு மேட்டுக்குடியின் மையம், ராஜதந்திரிகளின் மையம், நிதி நடவடிக்கைகளின் மையம், உல்லாசப் பயணிகளின் கவர்ச்சி மையம் என்று கருதத்தக்க ஓரிடத்தில் கடலில் சீனா ஒரு புதிய நகரத்தைக் கட்டிவருகிறது.

இதனால், இலங்கைத் தீவின் வரைபடம் மாற்றப்பட்டிருக்கிறது. அதாவது இலங்கைத் தீவின் நிலப்பரப்பு அதிகரித்திருக்கிறது.

மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் பின்னர் ஆட்சிமாற்றம் நிகழ்ந்தபோது இடைநிறுத்தப்பட்டது. எனினும், ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தோடு சீனா மேற்கொண்ட சமரச முயற்சிகளின் பின்னர் இந்நகரம் சர்வதேச நிதி நகரம் என்று பெயர் மாற்றப்பட்டு மறுபடியும் தொடர்ந்து கட்டப்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதற்காக உடன்படிக்கை மீள எழுதப்பட்டது.

இந்நகரத்தை, நிர்வகிப்பதற்காக அரசாங்கம் அண்மையில் கொழும்புத் துறைமுக நகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலம் ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறது. இச்சட்டமூலம் முன்பு சொன்ன சீனக் கம்பனிக்கு அதிகம் அனுகூலங்களை வழங்குகிறது. அது குறிப்பிட்ட துறைமுக நகரத்தை ஒரு சீன மாநிலமாக மாற்றுகிறது என்று ஜே.வி.பி. குற்றம்சாட்டுகிறது.

இலங்கை தீவில் இதுபோன்ற முதலீடுகளுக்கு முதலீட்டு சபைச் சட்டம், மூலோபாய அபிவிருத்திச் சட்டம் என்ற இரண்டு சட்டங்கள் உள்ளன. இச்சட்டங்கள் மூலமாகவும் வரிச் சலுகைகளை வழங்க முடியும். ராஜபக்ஷக்கள் சீன முதலீடான சங்கரில்லா ஹோட்டலுக்கு இவ்வாறு இருபத்தைந்து வருட வரிச்சலுகைகளை வழங்கியிருக்கிறார்கள்.

ரணில் விக்ரமசிங்க ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனக் கம்பனிக்கு வரிச் சலுகைகளை வழங்கியிருந்தார். இவ்வாறு இரண்டு சட்டங்கள் இருக்கத்தக்கதாக இப்பொழுது ஒரு புதிய சட்டமூலத்தை ஏன் அரசாங்கம் சமர்ப்பித்திருக்கிறது?

இதன்மூலம் துறைமுக நகரத்தை நாட்டின் சட்டங்களுக்குக் கட்டுப்படாத ஒன்றாகவும் தனி விசேட அந்தஸ்தைப் பெற்ற ஒரு சுயாதீன நகரமாகவும் ராஜபக்ஷக்கள் கட்டியெழுப்ப முற்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. இவ்வாறு எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளைப் பின்வருமாறு தொகுத்துப் பார்க்கலாம்,

முதலாவது, துறைமுக நகரம் எந்தவொரு உள்ளுராட்சி மன்றத்தினதும் ஆளுகைக்குள் வராத ஒரு விசேட கட்டமைப்பாக இயங்கும். உள்ளுராட்சி மன்ற நிர்வாகங்களை அங்கு வாழும் மக்கள் வாக்களிப்பின் மூலம் தெரிவு செய்கிறார்கள்.

உள்ளூராட்சி மன்றங்கள் மக்கள் பிரதிநிதிகளால் நிர்வகிக்கப்படுகின்றன. ஆனால், துறைமுக நகரத்தை ஜனாதிபதியால் நியமிக்கப்படும் ஒரு விசேட ஆணைக்குழுவே நிர்வகிக்கும். இந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இலங்கை பிரசைகளாக இருக்க வேண்டும் என்றில்லை.

இரண்டாவது, இந்த ஆணைக்குழுவின் பிரதிநிதிகளுக்கு எதிராக இலங்கை தீவில் எந்தவொரு நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர முடியாத விடுபாட்டுரிமை உண்டு.

மூன்றாவது, இந்த ஆணைக்குழுவிற்கு விசேட நிதிசார் அதிகாரங்கள் உண்டு. இந்த ஆணைக்குழுவுக்கு தனியொரு நிதியம் உண்டு. அரச வருமானத்தின் திரட்டப்பட்ட நிதியில் இருந்து பணத்தைப் பெற்றுக்கொள்ள நாடாளுமன்றத்தில் அங்கீகாரம் தேவை.

ஆனால், துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவானது நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் தேவைப்படாத தனியொரு நிதியம் ஒன்றைப் பேண முடியும்.

நாலாவது, துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவுக்கு பல்வேறு வரிச்சலுகைகளை வழங்கும் அதிகாரம் உண்டு. பொதுவாக நாடாளுமன்றத்தால் மாத்திரமே வரிச்சலுகை வழங்கப்படலாம். இங்கே இந்த ஆணைக்குழுவுக்கு வரிச்சலுகை வழங்கும் அதிகாரம் தரப்பட்டிருக்கிறது.

ஐந்தாவதாக, அரசாங்கத்துக்குக் கிடைக்கும் பணம் கணக்காய்வாளர் தலைமை நாயகத்தின் மேற்பார்வைக்குக் கட்டுப்படும். ஆனால், துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் நிதி நடவடிக்கைகள் தனியார் நிறுவனம் ஒன்றின் மூலமாகவே அவை கணக்காய்வு செய்யப்படும்.

ஆறாவது, அரச நிறுவனங்கள் நாடாளுமன்றத்தின் கோபா (COPA) மற்றும் கோப் (COPE) ஆகிய குழுக்களுக்கு முன்னாள் பதில் கூறுமாறு அழைக்கப்படலாம். ஆனால், இது துறைமுக நகரப் பொருளாதார வலைய ஆணைக்குழுவுக்குப் பொருந்தாது.

ஏழாவது, துறைமுக நகரத்தில் வெளிநாட்டவர்கள்தான் முதலீடு செய்யலாம். இலங்கையர்கள் முதலீடு செய்வது என்றால் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுக்கூடாகத்தான் முதலீடு செய்யலாம்.

எட்டாவது, துறைமுக நகரத்தில் தொழில் செய்பவர்களுக்கு ஊழியம் சீன நாணயமான யுவான் மூலமே வழங்கப்படும்.

ஒன்பதாவது, துறைமுக நகரத்தில் சேவையாற்றுபவர்களின் வருமானம் வருமான வரியிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறது.

பத்தாவது, இலங்கை பிரசைகள் கொழும்புத் துறைமுக நகரத்தின் சேவைகளைப் பணம் செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம். எனினும், அங்கே கொள்வனவு செய்யும் பொருட்களை நகரத்துக்கு வெளியே கொண்டுவரும்போது அவற்றுக்கு வரி செலுத்தவேண்டும்.

பதினொராவது, துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசத்தில் ஏற்படும் பிணக்குகளை சர்வதேச விளக்கத்திற்கும் அமைப்பு ஒன்றின் மூலமாகவே தீர்த்துக் கொள்ளலாம்.

இவையாவும் துறைமுக நகரத்துக்கான புதிய சட்டமூலத்தைக் குறித்து எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் ஆகும். இக்குற்றச்சாடுக்களை முன்வைக்கும் எதிர்க்கட்சிகளில் பிரதானமான சஜித் அணி இந்நகரத்தை சீன ஈழம் என்று வர்ணிக்கிறது.

இங்கே முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்னவெனில், சீனப் பட்டினத்துக்கு எதிராக சிங்களப் பொது உளவியலைத் தூண்டிவிட அவர்கள் கையிலெடுத்திருப்பது ஒரு விதத்தில் தமிழின எதிர்புத்தான். அதாவது, சீனப் பட்டினத்தை அவர்கள் ஈழத்துடன் ஒப்பிடுகிறார்கள். ஈழத்தைக் கொடுக்காத நாங்கள் எப்படி சீனாவுக்கு இப்படியொரு நகரத்தைக் கொடுப்பது என்று அவர்கள் கேட்கிறார்கள்.

நாட்டில் சிங்கள மக்களைத் தூண்டுவதற்கு ஏதோவொரு விதத்தில் இனவாதத்தைத்தான் பேசவேண்டியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளின்படி துறைமுக நகரமானது இலங்கை தீவில் தற்போது நடைமுறையில் உள்ள 21 சட்டங்களிலிருந்து விடுபாட்டுரிமையைக் கொண்டிருக்கிறது.

இது, துறைமுக நகரத்தை இலங்கை தீவில் தனி அந்தஸ்துடைய இலங்கை தீவின் பெரும்பாலான சட்டங்களுக்குக் கட்டுப்படாத ஒரு தனி நிர்வாக பிரதேசமாகக் காட்டுகிறது.

ராஜபக்ஷக்கள் பெருமையோடு கூறிக்கொள்கிறார்கள் ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே சட்டம் என்று. ஆனால், சீன துறைமுக நகரமானது அவ்வாறு நாட்டில் ஒரே சட்டம் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. அதுதான் உண்மை.

தமிழ் மக்களை நசுக்குவதற்காக எந்தப் பிசாசோடும் கூட்டுச்சேரத் தயார் என்று முன்னாள் ஜனாதிபதி ஜெயவர்த்தன கூறினார். இவ்வாறு பிசாசுகளை கூட்டுச் சேர்த்து தமிழ் மக்களின் போராட்டத்தை நசுக்கிய இலங்கை அரசாங்கம் இப்பொழுது அந்தப் பிசாசின் கடன் பொறிக்குள் இருந்து விடுபட முடியாத ஒரு நிலை தோன்றியிருக்கிறது. இலங்கையில் இப்பொழுது கிட்டத்தட்ட ஆறு இலட்சம் சீனர்கள் இருப்பதாக ஒரு உத்தியோகபூர்வமற்ற கணக்கு உண்டு.

இம்மாத இறுதிளவில் சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு வருகிறார். ஏறக்குறைய அதே காலப்பகுதியில் ஜனாதிபதி கோட்டபாய இந்தியாவுக்குச் செல்கிறார். ஒரே சமயத்தில் அவர்களால் சீனாவையும் இந்தியாவையும் கையாளக் கூடியதாக இருக்கிறது. இந்தியாவை சமாளிப்பதன் மூலம் மேற்கு நாடுகளையும் ஜெனிவாவையும் சமாளிக்கலாம் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.

சீனாவின் செல்லப்பிள்ளையாக இருப்பதன் மூலம் பொருளாதார நெருக்கடிகள் உட்பட எல்லா பிரச்சினைகளில் இருந்தும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். ஆனால், சீனாவை நோக்கி அதிகமாகச் சாய்ந்து கொண்டு இலங்கை தீவு சுயாதீனமாக இறைமையோடு இருக்க முடியாது என்பதைத்தான் கடந்த 12 ஆண்டுகள் நிரூபித்திருக்கின்றன.

மெய்யான பொருளில் கூறின் இலங்கைத்தீவு இப்பொழுது இறைமையுடைய நாடு அல்ல. அது பேரரசுகளால் பங்கிடப்படும் ஓர் அப்பம். சீன மயமாதலின் விளைவாக இச்சிறிய தீவை நோக்கி இந்தியாவும் மேற்கு நாடுகளும் அதிகம் கவனத்தைக் குவிக்கும். அவர்கள் அதற்கு எடுத்துக் கையாளும் ஆயுதம் தமிழ் மக்களின் பிரச்சினையாகும். தமிழ் மக்களின் விவகாரத்தை அல்லது தீர்க்கப்படாத இனப் பிரச்சினையை ஒரு கருவியாகக் கையாண்டு வெளிச் சக்திகள் இலங்கைக்குள் நுழைகின்றன. சீனாவும் அப்படித்தான் நுழைந்தது.

அழகிய இச்சிறிய தீவை தமிழ் மக்களோடு சேர்ந்து பகிரத் தயாரற்ற சிங்கள ஆட்சியாளர்கள் அதனை இறுதியிலும் இறுதியாக சீனர்களும் உட்பட வெளிநாட்டவர்களிடம் இழந்து வருகிறார்கள் என்பதே சீனப் பட்டினம் உணர்த்தும் உண்மையாகும்.

கட்டுரை ஆசிரியர்: நிலாந்தன்