சீனாவிற்கு அதிகாரம் வழங்க முடியுமாக இருந்தால், வடக்கு கிழக்கிற்கு ஏன் அதிகாரம் வழங்க முடியாது? – மட்டு. நிலவன்

இலங்கையில் உள்ள ஒருபகுதியை சீனாவுக்கு வழங்கி, அந்தப் பகுதியில் ஆட்சி செய்வதற்கு சீன அரசாங்கத்தினை இலங்கை சட்டத்தின் ஊடாக அதிகாரத்தை வழங்க முடியுமாக இருந்தால், ஏன் இந்த நாட்டின் பூர்வீக குடிகளாக வாழ்ந்து வரும் வடகிழக்கை பூர்வீகமாக கொண்ட தமிழர்களுக்கு அதிகாரத்தை வழங்க முடியாது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

கடந்த எழுபது வருட காலமாக அகிம்சை ரீதியாகவும், ஆயுத ரீதியாகவும் தங்களுக்கான அதிகாரங்களை கேட்டுப் போராடிய இந்த நாட்டின் பூர்வீக குடிகளான வடகிழக்கு தமிழர்களை கொன்று குவித்து விட்டு இன்று இந்த நாட்டை சீனா போன்ற அன்னிய நாடுகளுக்கு துண்டு துண்டாக பிரித்து கொடுக்க தொடங்கி உள்ளனர்.

இந்த நாட்டில் உரிமை உள்ள இரு இனங்கள் தங்களுக்குள் சண்டையிட்டு ஆயிரக்கணக்கான தங்களது உயிர்களை இழந்து இன்று உணர்வு ரீதியாக இந்த நாடு இரண்டாக பிளவுபட்டு நிற்கும் நிலையில்.

இந்த நாட்டை அன்னிய நாடுகளுக்கு துண்டு துண்டாக பிரித்து கொடுப்பதை இந்த நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இரண்டு இன மக்களும் அனுமதிக்க மாட்டார்கள்.

நீங்கள் இந்த நாட்டை சீனா போன்ற அன்னிய நாடுகளுக்கு தாரைவார்த்துக் கொடுப்பதாக இருந்தால், முதலில் வடகிழக்கு தமிழர்களுக்கான தனியான அதிகாரத்தை தந்துவிட்டு நீங்கள் உங்களது பகுதிகளை அன்னிய நாடுகளுக்கு தாரைவார்த்துக் கொடுங்கள்.

இந்த நாட்டில் உள்ள மக்கள் எதிர்வரும் காலங்களில் சீன ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராட வேண்டிய நிலை ஏற்படலாம். அன்று வடகிழக்கு தமிழ் மக்களின் உதவி சிங்கள மக்களுக்கு தேவையாக இருக்கும்.

இலங்கையில் சீனாவின் காலனித்துவ நாடாக மாறும் போது தான் தமிழ் மக்கள் சிங்கள ஆட்சியாளர்களால் எவ்வாறு ஆளப்பட்டார்கள் என்பது தெரியவரும்.

கொழும்புத் துறைமுக நகரத்திற்கு கொடுக்கப்படும் அதிகாரங்களை வடகிழக்கு மாகாணங்களுக்கும் வழங்க வேண்டும்.

அத்துடன் 13+ குறித்து வாய்கிழிய கத்தும் இந்திய அரசை இன்று வரை பொருட்படுத்தாது வடகிழக்கு மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை தர மறுத்து வரும் இலங்கை அரசாங்கம் சீன அரசுக்கு தனி அதிகாரம் மிக்க கொழும்பு துறைமுக நகரையே கொடுத்துள்ளது.

இந்த செயற்பாட்டின் ஊடாக இந்திய அரசின் முகத்தில் ஓங்கி அறைந்துள்ளது இலங்கை. ஆசிய பிராந்திய நாடுகளை இராஜதந்திர ரீதியில் ஆக்கிரமித்து வரும் சீனா, தற்போது இந்து சமுத்திரத்தின் மத்தியில் கால்பதித்து நிற்கிறது.

இன்னும் சில ஆண்டுகளில் இலங்கை முழுவதையும் சீனா தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து விடும். அதன் பின்னர் இந்து சமூத்திர கடல் பாதுகாப்பு சீனாவின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படும். இதற்காகவே இலங்கையில் சீனா தனது முழு வளத்தையும் குவித்து வருகிறது. சீனாவின் ஒரு மாநிலமாக இலங்கை மாறியுள்ளது.

சீன வங்கிகள் உட்பட சீன நாட்டில் சீன மக்கள் பயன்படுத்தும் அத்தனை வகையான பொருட்கள் மற்றும் அதற்கான கட்டமைப்புகள், ஆளணி வளங்கள் என அனைத்தும் இலங்கையில் குவிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் சுமார் ஒரு இலட்சம் சீனர்கள் நிரந்தரமாக இருப்பதாகவும், ஆறு இலட்சம் சீனர்கள் வருடம் ஒன்றிற்கு இலங்கைக்கு வந்து போவதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

Posted in Uncategorized

ரிஷாத் பதியுதீன், ரியாஜ் பதியுதீன் கைது குறித்து அவர்களது மனைவிமார்கள் மனித உரிமைகள் ஆணைக் குழுவில் முறைப்பாடு!

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டமை மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சட்ட விரோதமானது என குறிப்பிட்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவில் முறையிடப்பட்டுள்ளது.

ரிஷாத் பதியுதீனின் மனைவி, சிஹாப்தீன் ஆய்ஷா, ரியாஜ் பதியுதீனின் மனைவி பாத்திமா இஷ்ரத் ஆகியோர் சட்டத்தரணி ஆர்ணல்ட் பிரியந்தன் ஊடாக இந்த முறைப்பாட்டை நேற்று செவ்வாய்க்கிழமை முன்வைத்துள்ளனர்.

கடந்த 24 ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை 3.20 மணிக்கு கொழும்பு 7, பெளத்தாலோக்க மாவத்தையில் உள்ள வீட்டில் வைத்து தனது கணவரான ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்டதாக அவரது மனைவி முறைப்பட்டில் குறிப்பிட்டுள்ள நிலையில், அன்றைய தினம் அதிகாலை 1.30 மணியளவில் தனது கணவர் வெள்ளவத்தை, பெட்ரிகா வீதியில் உள்ள வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டதாக ரியாஜ் பதியுதீனின் மனைவி குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர் அவர்கள் இருவரும் சி.ஐ.டி.யில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடும் அவ்விருவரின் மனைவிமார், ரிஷாத் மற்றும் ரியாஜ்ஜின் கைதும், தடுத்து வைத்தலும் சட்ட விரோதமனது என குறிப்பிட்டுள்ளனர்.

அரசியல், மதம் மற்றும் இன ரீதியிலான கைது நடவடிக்கையாகவே, குறித்த இருவரின் கைதும் உள்ளதாக அவர்கள் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பாக ரிஷாத் பதியுதீன், தற்கொலை குண்டுதாரி ஒருவரின் குலோசஸ் எனும் செப்புத் தொழிற்சாலைக்கு சட்ட திட்டங்களுக்கு புறம்பாக அதிக செப்பினை விநியோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்படும் நிலையில் அது அடிப்படையற்றது என முறைப்பாட்டாளர் ஆவணங்களையும் இணைத்து கூறியுள்ளார்.

குறிப்பாக செப்பு விநியோகம், தனது கணவர் அமைச்சராக இருந்தபோது அவரது அமைச்சின் கீழ் இடம்பெற்றாலும் அதில் அமைச்சருக்கு தலையீடு செய்ய முடியாது என முறைப்பாட்டாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி செயலகம் ஊடாக குளோசஸ் நிறுவனத்துக்கு செப்பு வழங்க முன்வைக்கப்பட்டிருந்த பரிந்துரை தொடர்பிலும் முறைப்படடாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ரியாஜ் பதியுதீன் சார்பிலான முறைப்பாட்டில், அவர் ஏற்கனவே இதே குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு 6 மாதங்களுக்கு மேல் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டதன் பின்னர் சாட்சியங்கள் இல்லை என விடுவிக்கப்பட்டதாகவும் தற்போது மீளவும் அதே விடயங்களை கூறி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் முறைப்பாட்டாளர் கூறியுள்ளார்.

இந்நிலையில் இவ்விருவரின் கைதும் அரசியல், மத, மற்றும் இன ரீதியிலானது எனவும் அதற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரொஹான் பிரேமரத்ன, விஷேட விசாரணைப் பிரிவு இலக்கம் 3 இன் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜயசேகர உள்ளிட்டோர் பொறுப்புக் கூற வேண்டும் எனவும் முறைப்பாட்டாளர்கள் தமது முறைப்பாட்டில் கூறியுள்ளனர்.

கொழும்பு துறைமுக நகரத்திற்கு பிரபாகரனை விட அதிக அதிகாரங்கள் இருக்கும் – ரணில்

கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், வட பகுதியை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தபோது கொண்டிருந்த அதிகாரத்தைவிட அதிகளவு அதிகாரத்தை கொழும்பு துறைமுக நகரம் கொண்டிருக்கும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கின்றார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில் இதனைத் தெரிவித்திருக்கும் ரணில் விக்கிரமசிங்க, ஒரு நாடு ஒரு சட்டம் எனப் பேசிய அதே ஆட்கள் இப்போது ஒரு நாடு இரண்டு சட்டங்கள் என்பதற்கு இணங்கிவந்திருப்பதையிட்டு தான் ஆச்சரியமடைவதாகவும் குறிப்பிட்டிக்கின்றார்.

கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் கொழும்பு துறைமுக நகரம் சீனாவின் காலனியாகிவிடும் எனக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் நிலையிலேயே ரணில் விக்கிரமசிங்க இந்தக் கருத்துக்களை முன்வைத்திருக்கின்றார்.

“இந்தப் பகுதி சினாவின் காலனியாகிவிடும் எனக்கூறப்படுவதையிட்டு நான் அறிந்திருக்கின்றேன். ஆனால், போர்க் காலத்தில் பிரபாகரன் கைப்பற்றிவைத்திருந்த பகுதிகளில் அவரிடம் காணப்பட்ட அதிகாரத்தைவிட அதிகளவு அதிகாரங்களைக் கொண்டதாக இந்த துறைமுக அதிகார சபை விளங்கும்” எனவும் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்திருக்கின்றார்.

“ஒரு நாடு ஒரு சட்டம் எனக் கூறிவந்தவர்களே, ஒரே நாட்டில் இரண்டு சட்டங்களைக் கொண்டிப்பது ஆச்சரியமாக இருக்கின்றது” எனவும் அவர் தெரிவித்தார்.

“கொழும்புத் துறைமுகத்தை சட்டவிரோதமன முறையில் கண்காணிப்பதற்கு கொழும்பு துறைமுக நகர் பயன்படுத்தப்படலாம் என்ற கவலையை பல நாடுகள் 2015 முதல் 2019 வரையிலான காலப்பகுதியில் தான் பிரதமராக இருந்தபோது தெரிவித்திருந்தன” எனக்குறிப்பிட்ட ரணில் விக்கிரமசிங்க, கொழும்பு துறைமுக நகரிலிருந்து வெளியாட்கள் துறைமுகத்தை கண்காணிப்பதை அப்போதைய தமது அரசு விரும்பவில்லை” எனவும் சுட்டிக்காட்டினர்.

இது தொடர்பில் சீனாவுக்கு தமது அரசாங்கம் கரிசனையை வெளியிட்டதுடன், அதற்கான தீர்வு ஒன்றை நோக்கியும் செயற்பட்டது எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

புர்கா உள்ளிட்ட முகத்தை மூடும் ஆடைகளை தடை செய்யும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி

புர்கா உள்ளிட்ட முகத்தை முழுமையாக மூடும் ஆடைகளை தடை செய்யும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

சுகாதார வழிகாட்டல்களுக்கமைவான முகக்கவசங்களை தவிர்ந்த புர்கா உள்ளிட்ட பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அனைத்து முகத்தை மறைக்கக்கூடிய ஆடைகளை அணிவதனை தடை செய்தவற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர வழங்கிய யோசனைக்கு அமைச்சரவை மேற்படி அனுமதியை வழங்கியுள்ளமையும் குறிப்பிடதக்கது.

Posted in Uncategorized

மிக மோசமான ஜனநாயக அடக்கு முறைக்குள் இலங்கை: சர்வதேச தூதுவர்களுடனான சந்திப்பில் சஜித்..!

நாட்டு மக்களின் மனித உரிமைகள், ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டு மிக மோசமான அடக்குமுறை ஆட்சியொன்றை கையாள அரசாங்கம் முயற்சிப்பதாகவும், அரசாங்கத்திற்கு சவாலான பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரஜாவுரிமையை பறிக்கும் அளவிற்கு அரச அடக்குமுறை கையாளப்படுவதாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் உள்ளிட்ட ஐரோப்பியாவின் முக்கிய நாடுகளின் தூதுவர்களுடனான சந்திப்பில் எதிர்க்கட்சி தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொவிட் -19 வைரஸ் நிலைமையை கையாள்வதில் அரசாங்கம் பலவீனப்பட்டுள்ளதாகவும், இலங்கையில் சகல மக்களுக்கும் தடுப்பூசியை ஏற்றும் செயற்பாட்டை முன்னெடுக்க சர்வதேச நாடுகளின் பூரணமான ஒத்துழைப்பு அவசியம் என்பதையும் எதிர்க்கட்சி தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி. டெப்லிட்ஸ் உள்ளிட்ட இராஜதந்திர அதிகாரிகள் இன்று பல்வேறு சந்தர்ப்பங்களில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்தனர்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்கு இன்று பிற்பகல் வருகைதந்த அமெரிக்கா, கனடா, சுவிட்சர்லாந்து, நோர்வே மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தூதுவர்களும், உயர்ஸ்தானிகர்களும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களான தலதா அத்துகோரல, கலாநிதி ஹர்ஷ டி சில்வா, இரான் விக்ரமரத்ன உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகளும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டதாக எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகம் அறிவித்தது.

ஐக்கிய மக்கள் சக்தியின் வௌிநாட்டு கொள்கை வகுப்பாளர் சபையின் சிரேஷ்ட உறுப்பினர்களான கலாநிதி ரொஹான் பல்லேவத்த, கலாநிதி கிஹான் குணதிலக்க, ஹரீம் பீரிஸ் ஆகியோரும் வௌிநாட்டு இராஜதந்திர அதிகாரிகளுடனான இந்த கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்தின் 04 நாடுகளின் தூதுவர்களை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று முற்பகல் சந்தித்தார்.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைத்தீவிற்கான தூதுவர் டெனிஸ் சைபீயின் தலைமையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

பிரான்ஸ், ஜெர்மன் மற்றும் ரோமானியா ஆகிய நாடுகளின் தூதுவர்களே இன்று முற்பகல் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்து கலந்துரையாடினர்.

Posted in Uncategorized

நாட்டில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை

நாட்டில் உள்ள சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் அடிப்படையில் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நாட்டில் உள்ள சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரான, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் (கொவிட் 19) பரவல் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, தனியார் வகுப்புகளுக்கும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தந்தை செல்வாவின் பெயரால் தமிழ் தேசிய நீக்க அரசியலை முன்னெடுக்க சில தரப்புக்கள் முயற்சி – பொத்துவில் பொலிகண்டி பேரியக்கம் குற்றச்சாட்டு

தந்தை செல்வாவின் பெயரால் தமிழ் தேசிய நீக்க அரசியலை முன்னெடுக்க சில தரப்புக்கள் முயற்சி என பொத்துவில் பொலிகண்டி பேரியக்கம் குற்றச்சாட்டாயுள்ளது.

தந்தை செல்வாவின் 44வது நினைவு தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் தந்தை செல்வாவை அகிம்சை போராளியின் தீர்க்கதரிசனம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஈழத்தமிழ் மக்களின் உரிமை போராட்டத்தின் தந்தையாக விளங்கும் எஸ்.ஜெ.வி செல்வநாயகம் அவர்களின் 44வது நினைவு தினம் இன்றாகும் (26.04.2021). ஆரம்பத்தில் தமிழ் தேசிய இருப்பிற்காக சமஸ்டி தீர்வினை வலியுறுத்தி அதற்காக சாத்வீக முறையில் போராடி வந்த தந்தை செல்வா, சிங்கள பேரினவாதத்தின் உண்மை முகத்தினை அறிந்த பின், வட்டுக்கோட்டையில் 1976 மே 14ம் திகதி நடந்த தமிழர் விடுதலை கூட்டணி கட்சி மாநாட்டில் தனது தலைமையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினார்.

இத்தீர்மானம் ஆனது தமிழர் வரலாற்றில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியதோடு தமிழ் இனத்திக்கான நிரந்தர தீர்வினையும் முன்மொழிந்தது. வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு தமிழினம் வழங்கிய ஏகோபித்த ஆதரவானது ஒட்டுமொத்த இனத்தினதும் அரசியல் அபிலாசையினை முழு உலகிற்கும் வெளிப்படுத்தி நின்றது. இத்தீர்மானமே அதன் பின் நடைபெற்ற அனைத்து போராட்ட வடிவங்களுக்கும் அடிப்படையாக அமைந்தது.

இன்று தமிழ் தேசியத்திற்காக குரல் கொடுக்கும் ஒவ்வொரு தமிழ் மகனையும் மகளையும் பயங்கரவாதியாக சித்தரிக்க முயலும் சிங்கள பேரினவாத அரசானது தமிழினத்தின் அகிம்சை வழிப்போராட்ட வரலாற்றினை ஏனோ இலகுவாக மறப்பதுடன் மறைத்தும் வருகின்றது.

இன்று தமது நாட்டை இழந்து, இனஅழிப்பிற்கு உள்ளாகி, தமது பூர்வீக நிலங்களை சிங்கள பேரினவாதத்திடமிருந்து காப்பாற்ற போராடிக்கொண்டிருக்கும் தமிழ் இனத்திற்கு, தந்தை செல்வா காட்டிய அகிம்சை வழி போராட்டமானது ஒரு தமிழ் தேசிய பாதையினை காட்டி நிற்கின்றது.

2009ம் ஆண்டிற்குப் பின் அரசியலில் அனாதைகளாக, உரிமை போராட்டத்தின் வழித்தடத்தினை தேடி நிற்கும் தமிழினத்திற்கு, எம்மால் விட்டுக்கொடுப்புகளின்றி சலுகைகளை மறுத்து உரிமைக்காக மீண்டும் அகிம்சை வழியிலும் போராட முடியும் என்பதை தந்தை செல்வாவின் நினைவுகள் வலியுறுத்தி நிற்கின்றன.

இன்று உரிமைக்காக மட்டுமன்றி நீதிக்காகவும் போராடிக்கொண்டிருக்கும் நாம், எமது வரலாற்று பாடங்களிலிருந்து, சிங்கள பேரின வாதத்திடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ள முடியாது என்பதை தெளிவாகவே அறிந்துள்ளோம். ஆயினும் சர்வதேசத்தில் எஞ்சியிருக்கும் மனிதவுரிமை மற்றும் நீதியின் மீதான பற்றுதியின் பால் நம்பிக்கை வைத்தே தொடர்ந்து போராடி வருகின்றோம்.

தமிழ் தேசியத்தின் மீதே தந்தை செல்வாவின் அரசியல் வாழ்வு கட்டமைக்கப்பட்டிருந்தது. ஆயின் இன்று சில தரப்புகள் தந்தை செல்வாவின் பெயரால் தமிழ் தேசிய நீக்க அரசியலை முன்னெடுக்க முயல்கின்றனர்.

இவர்கள் தமிழினத்தை தவறாக வழிநடத்த முயல்வதுடன் தந்தை செல்வாவின் தீர்க்கதர்சனமான அபிலாசையினை மறுதலிக்கவும் முற்படுகின்றனர். இவர்களை தமிழ் மக்கள் அடையாளம் காண்பதுடன் அவர்களை ஜனநாயக முறையில் தமிழ் தேசிய அரங்கிலிருந்து அகற்ற முன்வர வேண்டும்.

தந்தை செல்வாவின் நினைவுகளுடன் ஒன்றியிருக்கும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் ஆகிய நாம், அன்னார் காட்டிய வழியின் தமிழ் தேசிய வழியில் எவ்வித விட்டுக் கொடுப்புகளுமின்றி பயணிப்போம் என உறுதி எடுத்து கொள்கின்றோம்.

Posted in Uncategorized

அவசர சிகிச்சைப் பிரிவுகளில் இடப்பற்றாக்குறை நிலவுகின்றது- பிரசன்ன குணசேன

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், அவசர சிகிச்சைப் பிரிவுகளில் இடப் பற்றாக்குறை தற்போது நிலவுகின்றதென அரச மருந்தாக்க கூட்டுதாபனத்தின் தலைவர் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன கூறியுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பிரசன்ன குணசேன மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தினை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்துவது மிகவும் அவசியமாகும்.

இதற்கு மக்கள், தங்களினால் முடிந்த சுயபரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். அதனூடாக ஆரம்பத்திலேயே கொரோனா வைரஸ் தொற்றுள்ளமையை இனங்கண்டு, சிகிச்சைப் பெறும்போது குணமடைய முடியும்.

அதாவது, சில சொற்களை பேசும் போது சோர்வை உணர்தல், ஒரே மூச்சில் 1- 10 வரை எண்ணுவதற்கு சிரமப்படுதல் ஆகிய தன்மைகளை உணர்வீர்களாயின் வைத்திய ஆலோசனை பெற்றுக்கொள்வது சிறந்தது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேல், வட மேல் மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை

மேல் மற்றும் வட மேல் மாகாணங்களிலுள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளுக்கும் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை விடுமுறை வழங்குமாறு கல்வி அமைச்சர், பேராசிரியர் ஜீ.எல். பீரீஸ் பணிப்புரை விடுத்துள்ளார்.

எனினும், நாட்டின் ஏனைய பகுதிகளில் காணப்படும் பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு வழங்கப்பட்டுள்ள தீர்மானத்தில் எவ்வித மாற்றங்களும் இல்லை என கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.

ஏதேனும் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுமாயின் அது குறித்து உரிய தகவல்கள் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

கற்பித்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் பாடசாலைகளில் சுகாதார ஒழுங்குவிதிகளை உரிய வகையில் பின்பற்றுமாறு கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரீஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் அதிரடியாக முடக்கப்படுகிறது சில பகுதிகள் !

காலி மாவட்டத்தில் ரத்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இம்புலகொட மற்றும் கடுதம்பே கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (26) இரவு 8 மணி முதல் குறித்த பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட உள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கம்பஹா, களுத்துறை, திருகோணமலை பொலிஸ் பிரிவில் உள்ள சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தபடுவதாக இன்று அறிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் கம்பஹா மாவட்டத்தின் கொட்தெனியாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்ஹேன, ஹீரலுகெதர மற்றும் களுஅக்கல ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் மினுவங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஸ்வென்னவத்த கிழக்கு கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்படவுள்ளது.

அத்துடன் களுத்துறை மாவட்டத்தின் மீகஹதென்ன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிரிஸ்வத்த, பெலவத்த வடக்கு, பெலவத்த கிழக்கு ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

மேலும் திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூம்புகார் கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.