இன்று 07 COVID மரணங்கள் – உயிரிழந்தோரின் எண்ணிக்கை 615 ஆக அதிகரித்துள்ளது

இன்று 07 COVID மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 615 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, COVID தொற்றுக்குள்ளானோரில் 303 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 92,611 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 95,949 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனக்கு ஒருபோதும் அரசியலில் பிரவேசிக்கும் எண்ணம் இல்லை – வேலன் சுவாமிகள்

அரசியலில் பிரவேசிக்கும் எண்ணம் ஒருபோதும் என்னிடம் கிடையாது என வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

வேலன் சுவாமிகளை முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்குவதற்கு முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட சிலரினால் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையிலேயே வேலன் சுவாமிகள், அரசியலுக்கு வரமாட்டேன் என அறிவிப்பு விடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் எவரும் அரசியலில் பிரவேசிக்கமாட்டார்கள்.

நாங்கள் அனைவரும், சமூகங்கள் மற்றும் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை ஒழுங்குப்படுத்தும் விடயத்திலேயே எங்களது பணியை தொடருவோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

ஆறு அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவால், ஆறு அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.இக்கட்சிகளுக்கிடையேயான உட்கட்சி முரண்பாடுகள் காரணமாக நீதி நடைமுறைகளின் கீழ் குறித்த கட்சிகள் இருக்கின்ற நிலையிலேயே கட்சிகளின் செயற்பாடுகளை இடைநிறுத்தும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிகேவா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

குறித்த கட்சிகளுக்கு தேர்தலொன்றில் பின்னடைவு ஏற்படுமென்பதால் குறித்த கட்சிகளின் பெயர்கள் வெளிப்படுத்தப்படாதென ஆணைக்குழு கூறியுள்ளது.

மீறல்களுக்கு வழிவகுக்கும் ஜனாதிபதியின் பயங்கரவாதத்தடை விதிமுறைகள் – சர்வதேச யூரர்கள் ஆணைக்குழு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டிருக்கும் பயங்கரவாதத்தடை தொடர்பான விதிமுறைகள் ஏற்கனவே மிகவும் ஆழமான குறைபாடுகளைக் கொண்டிருந்த பயங்கரவாத்தடைச்சட்டத்தின் மூலம் மேலும் வன்முறைகளும் மீறல்களும் இடம்பெறுவதற்கு வழிவகுக்கும் என்று சர்வதேச யூரர்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சர்வதேச யூரர்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

பயங்கரவாதத்தடை தொடர்பான விதிமுறைகள் குறித்த வர்த்தமானி அறிவித்தல் கடந்த செவ்வாய்கிழமை வெளியிடப்பட்டது.

அதில் 11 அமைப்புக்கள் ‘தீவிரவாத அமைப்புக்களாக’ இனங்காணப்பட்டிருப்பதுடன் இதுபோன்ற அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு மாறாக செயற்படுபவர்களை 20 வருடங்களுக்கும் அதிகமான காலம் சிறைப்படுத்தவும், அத்தகைய செயற்பாடுகள் அல்லது அவற்றை முன்னெடுப்போருடன் தொடர்புகளைப் பேணியவர்களை 10 வருடங்களுக்கும் அதிகமான காலம் சிறைப்படுத்தவும் முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடுதல் என்ற பெயரில் மோசமான விதிமுறைகளை நடைமுறைப்படுத்துகின்ற இலங்கையின் நிறைவேற்றதிகாரப்போக்கின் தன்மையே தற்போதும் பின்பற்றப்பட்டுள்ளது.

எவ்வித விசாரணைகளுமின்றி ஒருவரை இருவருடகாலம் வரை தடுத்துவைப்பதற்கு அனுமதியளிக்கும் தீவிரமயமாக்கலை ஒழித்தல் தொடர்பான விதிமுறைகள் வெளியிடப்பட்டு ஒரு மாதகாலத்தின் பின்னர் இந்த விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

தன்னிச்சையான கைது நடவடிக்கைகள் தொடர்பான அடிப்படைத் தராதரங்களை மீறுவதற்கான நியாயமாக தேசிய பாதுகாப்பு என்ற விடயத்தைக் குறிப்பிடுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாகும் என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

அனைத்து அடிப்படைவாத சக்திகளையும் தடை செய்யுங்கள் – ரெலோ இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ் வலியுறுத்து

இலங்கையில் உள்ள அனைத்து இன, மத அடிப்படைவாத அமைப்புக்களையும் தடைசெய்யவதே உண்மையான ஐனநாயகம் ஆகும் என ரெலோ இளைஞர் அணி தலைவரும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்தார்.

இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அவா் இவ்வாறு கூறியுள்ளார். அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

ஆட்சியாளர்கள் ஒரு தலைப் பட்சமாக சில இனங்களை குறிவைத்து தடை செய்தல் மற்றும் அவா்களுக்கு எதிரான அடக்குமுறைகளை ஏற்படுத்தல் என்பது ஒரு நாடு ஒரு சட்டம் என்ற கோட்பாட்டை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

தற்போதைய ஆட்சியாளர்கள் இந்த நாட்டில் உள்ள அனைத்து இன மக்களின் வாக்குகளையும் பெற்று ஆட்சி அமைத்தார்கள். அத்துடன் இலங்கை ஐனநாயக சோஷலிச குடியரசு அரசியலமைப்பின் கீழ் ஆட்சி புரிந்து கொண்டு பல இனமக்கள் வாழும் இந்த நாட்டில் சிறுபாண்மைச் சமூகங்களை குறிவைத்து அடக்குமுறைச் சட்டங்களை நடைமுறைப் படுத்தல் நிலையான ஐனநாயகத்திற்கு ஆரோக்கியமாக அமைய சாத்தியமில்லை.

பெரும்பான்மை இனத்தின் அடிப்படைவாத அமைப்புக்களை ஆட்சியாளர் தங்களின் தேவைக்காக மறைமுகமாக ஆதரித்தல் நாட்டின் அமைதிக்கும் சீரான ஆட்சிக்கும் ஊறு விளைவிப்பதாகவே அமையும்.

இலங்கைத் தீவில் வாழும் ஈழத் தமிழர்கள் குறிப்பாக வடக்கு கிழக்கை பூர்வீக தாயகமாக கொண்டு அதி உச்ச அதிகாரப் பகிர்வை வேண்டி போராடும் மக்கள் மிக அவதானம். தற்போது சில சக்திகள் அடிப்படைவாத அமைப்புக்களை உருவாக்க முயற்சிக்கின்றனர்.

ஆனால் தொடர்ந்து தமிழர்கள் தமிழ் மொழியை அடிப்படையாக கொண்டு தமிழர் தேசமாக ஓரணியில் ஒற்றுமையாக பிரதேச வேறுபாடுகளை களைந்து வலுப் பெறுவதே எதிர்காலத்திற்கு ஆரோக்கியமாகும்.

Posted in Uncategorized

ஜனாதிபதி சீனா விஜயம் ? : சீன பாதுகாப்பு அமைச்சரும் இலங்கை வருகிறார் – பின்னணி என்ன ?

வருடப்பிறப்பின் பின்னர் ஜனாதிபதியின் முதலாவது உத்தியோகப்பூர்வ வெளிநாட்டு பயணமாக சீன விஜயம் அமையப்பெறவுள்ளது. இந்த விஜயம் எதிர்வரும் மே மாதம் இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. மறுப்புறம் இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங் கொழும்பு வருகின்றார். இம் மாதம் இறுதி வாரத்தில் குறித்த விஜயம் இடம்பெறவுள்ளதுடன் , இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் மூன்றாவது உயர் நிலை விஜயமாக இது கருப்படுகிறது.

அதாவது கடந்த வருடம் ஜனவரியில் சீன வெளிவிவகார அமைச்சர் வோங் யூ உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்து இருதரப்பு சந்திப்புகளை முன்னெடுத்திருந்ததார். இதேவேளை சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழுவின் அரசியல் விவகார உறுப்பினரும், கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு வெளிவிவகார அலுவலகத்தின் பணிப்பாளருமான யாங் ஜீச்சி தலைமையிலான 26 உறுப்பினர்களை கொண்ட குழு கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்தில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தது.

இந்த இரு விஜயங்களுக்கு பின்னர் இடம்பெறும் மிக முக்கியமானதும் உயர் மட்ட விஜயமாகவும் சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங்கின் கொழும்பு வருகை கணிக்கப்படுகிறது. இந்த விஜயத்தின் போது ஹம்பாந்தோட்டை துறைமுகம் , தாமரை கோபுரம் மற்றும் துறைமுகர் நகர் ஆகிய முக்கிய சீன திட்டங்களையும் ஜெனரல் வெய் ஃபெங் பார்வையிடவுள்ளார். இதே வேளை இரு தரப்பு இராஜதந்திர முறைகளுக்கு அமைவாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தின் பாதுகாப்பு துறைசார் முக்கியஸ்தர்களையும் ஜெனரல் வெய் ஃபெங் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் முன்னைய ஆட்சிக் காலத்தில் இலங்கை – சீன உறவு வலுப் பெற்றிருந்ததுடன், நல்லாட்சியில் சற்று வலுவிழந்திருந்தது. ஆனால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஆட்சி பீடமேறிய பின்னர் வலுவிழந்த நிலை மாறி இருதரப்பு உறவுகள் பிராந்திய அரசியலிலும் தாக்கம் செலுத்தும் வகையில் விருத்தியடைந்து வருகின்றது. கடந்த ஆண்டு ஜனவரியில் கோத்தாபய ராஜபக்ஷ சீனாவிற்கான விஜயத்தை திட்டமிட்டிருந்த நிலையில். , கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக பிற்போடப்பட்டது. ஆனால் இந்த விஜயம் பெரும்பாலும் எதிர்வரும் மே மாதம் 2 ஆம் வாரத்தில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

2014 ஆம் ஆண்டில் இடம்பெற்ற சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இலங்கை விஜயமானது அனைத்துலகின் கவனத்தை ஈர்த்திருந்தது. குறிப்பாக பிராந்திய சக்தியான இந்தியாவின் பார்வையில் பல்வேறு நெருக்கடிகளையும் தோற்றுவித்தது. இலங்கை – சீன நவீன உறவிற்கு சுமார் 68 ஆண்டுகால வரலாறு காணப்படுகின்ற நிலையில், 1986ஆம் ஆண்டு அப்போதைய சீன ஜனாதிபதி லி ஸியன்னியான் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். அதன் பின்னர் சுமார் மூன்று தசாப்தங்களுக்கு பின்னரே ஒரு சீன ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் செய்திருப்பது அதுவே முதல் தடவையாக காணப்பட்ட நிலையிலேயே குறித்த விஜயமானது அனைத்துலக பார்வையிலும் முக்கியத்துவம் பெற்றிருந்தது.

அதே போன்றதொரு முக்கியத்துவம் மற்றும் அனைத்துலக பார்வைக்குள் இலங்கை – சீன உறவு மீண்டும் செல்கின்றது. இலங்கையை மையப்படுத்தி சீனா முக்கியத்துவம் கொடுத்து முன்னெடுத்துள்ள திட்டங்களான ஹம்பந்தொட்டை துறைமுகம், தாமரை கோபுரம் , துறைமுக நகர் மற்றும் கொழும்பு துறைமுகத்தின் ஒரு பகுதியென அனைத்திலுமே சீனாவின் கடல்சார் இராஜதந்திர நோக்கங்களே பிரதிபளிக்கின்றன.

இருதரப்பு வர்த்தகம், முதலீடு, நிதியுதவி மற்றும் மூலோபாய ஒத்துழைப்பு ஆகியவை மேலும் வலுவடைய செய்வதனூடாக உத்தேச திருகோணமலை துறைமுகத்திற்கு அருகாமையில் உள்ள சீனக்குடாவில் 1,200 ஏக்கர் நிலப்பகுதியை நீண்டகால குத்தகை அடிப்படையில் சீனாவிற்கு பெற்றுக்கொள்ளுதல் போன்ற நீண்டகால எதிர்பார்ப்புகளை ஈடு செய்வதற்கும் இலங்கையுடனான உறவிற்கு பன்மடங்கில் முக்கியத்துவம் கொடுக்க சீனா எப்போதும் தயாராகவே உள்ளது. குறிப்பாக சீனக் குடா திட்டம் 2012 – 2014 ஆம் ஆண்டு காலப்பகுதிகளிலிருந்தே மிக ஆர்வமாக சீனாவால் முன்னெடுக்கப்படுகின்ற ஒரு விடயமாகும்.

இவ்வாறான திட்டங்கள் ஊடாக பொருளாதார இலக்குகளை விட பாதுகாப்பு நோக்கங்களுக்காக இருதரப்பு பாதுகாப்பு தொடர்பான அபிவிருத்தி (Defense-related development) உறுதிப்படுத்திக்கொள்வது மிக முக்கியமான விடயமாகின்றது.

அதேபோன்று சீனாவின் முதலீட்டுத் திட்டமான கொழும்புத் துறைமுக நகரின் நிர்வாக கட்டமைப்பிற்காக நியமிக்கப்படும் தனி ஆணைக்குழுவின் கீழுள்ள சட்ட யோசனைகள் பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளன.

கொழும்புத் துறைமுகத்திற்கு அருகில் காலி முகத்திடல் பகுதியின் 446.6 ஹெக்டயரிலுள்ள கொழும்புத் துறைமுக நகர் விசேட பொருளாதார வலயமாகப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் 269 ஹெக்டயர், கடல் நிரப்பப்பட்டு உருவாக்கப்பட்ட நிலப்பகுதியாகவே காணப்படுகின்றது. பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு அமைய, இந்த வலயத்தின் நிருவாகப் பொறுப்பு, ஐவருக்கு மேற்பட்ட, எழுவருக்குக் குறைந்த கொழும்பு துறைமுக நகரின் பொருளாதார ஆணைக்குழுவிற்கு வழங்கப்படவுள்ளது.

மேலும் நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள ஏழு சட்டங்கள், இந்த விசேட பொருளாதார வலயத்திற்குப் பொருந்தாது எனவும் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறனதொரு தனி அலகில் உள்நாட்டிற்குள் நிலப்பரப்பு ஒன்ற நிர்வகிக்கப்படுவது தேசிய பாதுகாப்பு மற்றும் உள்ளக சட்ட ஒழுங்கு விவகாரங்களுக்கு பாரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற ஐயப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. துறைமுக நகர் திட்டத்தில் சீனாவின் பெரும் பங்கும் இரு தரப்பு ஒப்பந்தங்களும் காணப்படுவதால் குறித்த நிலப்பரப்பை நீண்ட காலத்திற்கு சீனா பயன்படுத்தலாம். இந்த நிலைமையானது பிராந்திய சக்திகளுக்கு நெருக்கடியாக அமையலாம்.

மறுப்புறம் சீனாவிற்கு அச்சுறுத்தலாகும் வகையில் இந்தியா, ஜப்பான், அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்க ஆகிய நாடுகளின் குவாட் திட்டம் இந்து – பசுபிக் கடற்பரப்பின் செயற்பாடுகளில் ஆதிக்கம் செலுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு வருகின்றது. இதில் ஏதோவொரு வகையில் இலங்கை உள்வாங்கப்பட்டலோ அல்லது வரையறைக்குள் இருந்து ஒத்துழைப்புகளை வழங்கினாலோ அது சீனாவிற்கு நெருக்கடியை கொடுப்பதாகவே அமையும்.

அதனால் தான் குவாட் திட்டம் குறித்து வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய சிறப்பு செவ்வியில் , இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் அதிக அமைதி, சுபீட்சம், மற்றும் பாதுகாப்பை அடைவதற்கான ஒத்துழைப்பு பற்றி கலந்துரையாடும் ஜப்பான், அவுஸ்திரேலியா, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகளின் குழுவொன்றாக குவாட் இருக்கும் என அமெரிக்க தூதுவர் குறிப்பிட்டிருந்தார்.

திறந்த மற்றும் மீளெழுச்சிதிறனுடைய இந்தோ-பசுபிக் பிராந்தியமொன்றுக்கான அமெரிக்காவின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை முன்னெடுப்பதற்கான தளமொன்றாகவும் குவாட் காணப்படுவதோடு , கடற் பிரயாண சுதந்திரம் மற்றும் பிணக்குகளுக்கு தீர்வு போன்ற அடிப்படைக் கொள்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. இதனடிப்படையில் குவாட்டில் இணைவதற்கு இலங்கைக்கு எந்த தடையும் கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளது.

எனவே, எதிர்காலத்தில் ஏற்பட கூடிய இவ்வாறான சவால்களுக்கு ஏற்றதுப்போல் இலங்கையில் சில திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என்ற தூரநோக்கு பார்வையில் சீனா தொடர்ந்தும் ஆர்வத்துடன் செயற்படுகிறது. இதன் பிரகாரம் ஏற்கனவே திட்டமிட்டுள்ளப்படி ஒரு வரைபிற்குள் நின்று சீனா தற்சார்பு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. இதற்கு ஏற்றவகையிலேயே அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் அமையப்போகின்றது. இந்த விஜயத்தின் மிக முக்கிய விடயமாக இரு தரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவுப்படுத்துவதாகவே அமையும் எனலாம்.

Posted in Uncategorized

சிறீலங்காவில் முதலீடுகளை மேற்கொள்ள அமெரிக்கா ஆர்வம்

சிறீலங்காவில் முதலீடுகளை மேற்கொண்டு அதன் கடன் சுமைகளை குறைப்பதற்கு அமெரிக்கா ஆர்வமாக இருப்பதாக சிறீலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா தெப்லிற்ஸ் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

மிகவும் சிறந்த வழிகளில் பொருளாதாரத்தை மேம்படுத்த அமெரிக்கா உதவும். கடனை சிறீலங்கா அரசு சுமப்பதைவிட அதனை மீளச் செலுத்த வேண்டும். அதனுடன் சமூக மேம்பாட்டையும் சிறீலங்கா அரசு மேம்படுத்த வேண்டும்.

சிறீலங்காவில் நாம் சிறிய அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம். ஆனால் அதனை பெருமளவில் மேற்கொள்ள ஆவலாக இருக்கிறோம். சிறீலங்காவில் முதலீடுகளை மேற்கொள்ள அமெரிக்காவின் இரு பெரிய எரிசக்தி நிறுவனங்கள் தயாராக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

துறைமுக நகரத்தை ‘சீனாவின் மாநிலமாக’ மாற்ற சட்டமொன்றை நிறைவேற்ற அரசு முயற்சி – அனுரகுமார எச்சரிக்கை

மக்கள்விடுதலை முன்னணியின் தலைவர் தோழர் அநுர திசாநாயக்கவின் ஊடக சந்திப்பு பத்தரமுல்ல மக்கள் விடுதலை முன்னணி தலைமையகத்தில் இடம்பெற்றது.

கடந்த தேர்தலில் எமது நாட்டு மக்கள் பாராளுமன்றத்தில் 2/3இற்கு கிட்டிய அதிகாரத்தை இந்தஅரசாங்கத்திற்கு வழங்கினார்கள். மக்கள் எதிர்நோக்கியுள்ள சிக்கல்களைத் தீர்த்துவைக்க பலமுள்ள அரசாங்கமொன்று வேண்டுமென்ற அடிப்படையிலேயே அவர்கள் பாரியஅதிகாரத்தை வேண்டிநின்றனர். அதைப்போலவே நாட்டின் எதிரில் இருக்கின்ற சவாலை வெற்றிகொள்ள பலம்பொருந்திய அரசாங்கமொன்று தேவை எனக் கூறினார்கள். ஆனால் இந்த பாராளுமன்றத்தில் 2/3 ஐ பயன்படுத்தி பாராளுமன்றத்தில் எதனை நிறைவேற்றிக் கொண்டார்கள்? 20-வது திருத்தத்தை அங்கீகரித்துக்கொண்டமை மூலமாக சனாதிபதி பாராளுமன்றத்தினதும் நீதிமன்றத்தினதும் அதிகாரத்தை தமக்கு கீழ் குவித்துக்கொண்டார். இரட்டைப் பிரசை பசில் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் நியமனம் பெறுவதற்கு இருந்ததடை நீக்கப்பட்டது. 20 மூலமாக மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டாலும் சனாதிபதியினதும் குடும்பத்திற்கு நெருக்கமானவர்களினதும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டன.

அதைப்போலவே கடந்த 09 ஆந் திகதி வெள்ளிக்கிழமை அரசாங்கம் அரசியல் பழிவாங்கல் பற்றிய ஆணைக்குழுவின் தீர்மானங்களையும் விதப்புரைகளையும் அமுலாக்குவதற்கான பிரேரணையொன்றை பாராளுமன்றத்தின் முன்னிலையில் வைத்தது. அது அடுத்துறும் 21 ஆந் திகதி ஒழுங்குப்பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக அரசாங்கத்துடன் தொடர்புடையவர்களினதும் அன்பர்களினதும் 70இற்கு மேற்பட்ட வழக்குகளை அகற்றிக்கொள்வதற்கான விதப்புரை சனாதிபதியவர்களால் பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. சனாதிபதியின் சார்பாக பிரதம அமைச்சரால் இது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஊழல்கள், திருட்டுகள் மற்றும் குற்றச்செயல்கள்சம்பந்தமான வழக்குகளை வாபஸ்பெற்றுக்கொள்ள இதன்மூலமாக பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. நாங்கள் மக்களிடம் கேட்பது நீங்கள் இதற்காகவா 2/3 அதிகாரத்தை அரசாங்கத்திற்கு கொடுத்தீர்கள்?

இந்தவழக்குகளை வாபஸ் பெற்றுக்கொள்வதற்காக பாராளுமன்றத்தில் கையை உயர்த்த ஆவலுடன்இருப்பவர்கள் அந்த வழங்குகளில் பிரதிவாதிகளான கம்மன்பில, நாலக்க கொடஹேவாமார்களே. இவைமத்தியில் உதயங்க வீரதுங்கவிற்கு எதிரான வழக்குகள், அவன்ற்காட் வழக்கு, பிள்ளைகளைக் கடத்திச்சென்று கொலை செய்தமை பற்றியவழக்கு, லசந்த வீரதுங்கவின் படுகொலையுடன் தொடர்புடைய,கீத் நொயாரைத் தாக்கியமையுடன் தொடர்புடைய குற்றவாளிகளை விடுதலைசெய்ய இதன்மூலமாக பிரேரிக்கப்பட்டுள்ளது.

இந்தவழக்குகளின் பிரதிவாதிகளை விடுதலை செய்தல் மாத்திரமன்றி இந்த குற்றச்சாட்டுகள்பற்றி விசாரணைகளை மேற்கொண்ட உத்தியோகத்தர்களுக்கு, வலக்ககளைத்தாக்கல் செய்த சட்டத்துறை தலைமை அதிபதி திணைக்களத்திற்கு, வழக்குகளை விசாரித்த நீதிபதிகளுக்கு, முறைப்பாட்டாளர்களுக்கு எதிராக மீண்டும் வழக்குத்தொடர பிரேரிக்கப்பட்டுள்ளது. மக்கள் இதற்காகவா தமது வாக்குகளை அளித்தோம் என நினைத்துப் பார்க்க இயலும்.

அதைப்போலவே அரசாங்கம் அண்மையில் தமது 2/3 அதிகாரத்தைப் பயன்படுத்தி கொழும்பு துறைமுக நகர பொருளாதாரஆணைக்குழு எனும் பெயரில் சட்டமூலமொன்றை சமர்ப்பித்தது. இந்த கொழும்பு நகரத்திற்கு அருகில் நிர்மாணித்த துறைமுக நகரத்தில் 111 ஏக்கர் நிலப்பரப்பில் 80% சைனா ஹாபர் கம்பெனிக்குஉரிமையானதாகும். இந்த கம்பெனி கடந்த காலத்தில் ராஜபக்ஷமார்களின் தேர்தல்களுக்காகவும் நிதியங்களுக்காகவும் பாரியளவில் பணத்தை பம்பிவிட்டதாக தகவல்கள் வெளியாகின. நாட்டின் பொதுச்சட்டத்திற்கு கட்டுப்படாத ஒரு வலயமாக பெயர்குறிக்குமாறு இந்த கம்பெனியிடமிருந்து அரசாங்கத்திற்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது. உண்மையிலேயே அதன் விளைவாகவே இந்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்படுகின்றது.

முதலீட்டுச்சபை சட்டம் மற்றும் மூலோபாய அபிவிருத்திச்சட்டம் என்றவகையில் எமது நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு சட்டங்கள்இருக்கின்றன. அந்த சட்டங்கள் மூலமாக பாரியளவில் வரிச்சலுகைகளை வழங்க முடியும். ராஜபக்ஷமார்கள் ஷெங்கிரில்லா ஹோட்டலுக்கு 25 வருட வரிச் சலுகைகளைக் கொடுத்ததும் ரனில்மார்கள் அம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்கையில் சீனக் கம்பெனிக்கு வரிச்சலுகைகளை வழங்கியதும் இந்த சட்டத்தின் கீழாகும். அவ்வாறு இருக்கையில் அந்த சட்டங்களை அமுலாக்காமல் துறைமுக நகரத்துடன் ஏற்புடைய ஆணைக்குழுவொன்றின்கீழ் தனியான மாநிலமொன்றுக்கு ஏற்புடைத்தாகின்ற அளவில் பெருந்தொகையான சிறப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.

🔸 அந்த துறைமுக நகரம் எந்தவோர் உள்ளூராட்சி நிறுவன ஆளுகைப்பிரதேசத்திற்கும் உரித்தாகாத விசேட வலயமாகஅமையும்.

🔸 உள்ளூராட்சி நிறுவன ஆளுகைப் பிரதேசமானது அங்கு வசிக்கின்றமக்களின் வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மூலமாகவே நிர்வகிக்கப்படுகின்றது. ஆனால் துறைமுக நகரமானது சனாதிபதியால் நியமிக்கப்படுகின்ற ஆணைக்குழுவொன்று மூலமாகவே நிர்வகிக்கப்படும்.

🔸 அந்த ஆணைக்குழுவின் பிரதிநிதிகளுக்கு எதுவுமே புரிந்ததற்காக அல்லது புரியாமல் விட்டமைக்காக நீதிமன்றத்தில் வழக்குத்தொடர முடியாத விடுபாட்டுரிமை இருக்கின்றது. அது சனாதிபதிக்கு இணையான விதத்தில் அமையாவிட்டாலும் அத்தகைய விடுபாட்டுரிமையாகும்.

🔸 இந்த ஆணைக்குழுவிற்கு விசேட நிதிசார் அதிகாரங்கள் கிடைக்கின்றன. ஆணைக்குழுவுக்கென தனிவேறான நிதியமொன்று உள்ளது. அரச வருமானம் ஒன்றுசேர்வது திரட்டு நிதியத்திற்கே. அதிலிருந்து பணத்தைப் பெற்றுக்கொள்ள பாராளுமன்றத்தின் அங்கீகாரம் அவசியமானதாகும். எனினும் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவிற்கு அதற்குப் புறம்பாக பாராளுமன்ற அங்கீகாரம் அவசியப்படாத தனிவேறானநிதியமொன்றை பேணிவர இயலும்.

🔸 துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவிற்கு பல்வேறு வரிச்சலுகைகளை வழங்குகின்ற அதிகாரம் கொண்டதாகும். பொதுவாக பாராளுமன்றத்தினால் மாத்திரமே வரிச்சலுகை வழங்க முடியும். ஆனால் இந்த ‘மாநிலத்திற்கு’ விசேட வரிச்சலுகை அதிகாரம்உரித்தானது.

🔸 அரசிற்கு கிடைக்கின்ற பணம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் மேற்பார்வைக்கு கட்டுப்படுகின்றது. எனினும் தனியார் நிறுவனமொன்று மூலமாகவே துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் பணம் கணக்காய்வு செய்யப்படுகின்றது. அது அரச கணக்காய்விலிருந்து அகற்றப்பட்டுள்ளது.

🔸 அரச நிறுவனங்கள் பாராளுமன்றத்தின் கோபா (COPA) மற்றும் கோப் (COPE) முன்னிலையில் வருமாறு அழைக்கப்படலாம். எனினும் இந்த ‘சீன மாநில’ நிர்வாகத்தை பாராளுமன்றத்தின் முன்னிலையில் தோற்றுமாறு அழைக்க இயலாது.

🔸 இந்த துறைமுக நகரத்தில் வெளிநாட்டவர்களாலேயே முதலீடுசெய்ய இயலும். அது இலங்கையின் தொழில் முயற்சியாளர்கள் முதலீடுசெய்வதை மறைமுகமாக தடுத்து இருக்கின்றது. அந்த நிதியங்களை வெளிநாட்டவர்களிடமிருந்து பெற்றுக்கொள்பவரால் மாத்திரமே இங்கு முதலீடு செய்ய இயலுமென அறிவித்திருப்பதன் மூலமாகவே. அதன் சுருக்கமான அர்த்தம் இது தனிவேறான மாநிலமாக அமைவதாகும்.

🔸 இந்த துறைமுக நகர வலயத்தில் சேவையாற்றுபவர்களுக்கு சம்பளம் செலுத்துவதாயின் பெயர்குறிக்கப்பட்ட வெளிநாட்டுப் பண அலகு மூலமாகவே எனகுறிப்பிடப்படுகின்றது. அது சீன ‘யுவான்’ ஆக முடியும்.

🔸 இங்கு சேவையாற்றுபவர்களின் வருமானம், வருமான வரியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. அந்த பணத்தை இந்நாட்டின் வெளிநாட்டு புழக்க கணக்கொன்றில் வைப்புச்செய்ய இயலுமெனபிரகடனஞ் செய்யப்படுகின்றது.

🔸 இலங்கை பிரசைகள் கொழும்பு துறைமுக நகரத்தின் சேவைகளைபணம்செலுத்தி பெற்றுக்கொள்ள முடிகின்றபோதிலும் அதிலிருந்து வெளியில் செல்லும்போதுகொள்வனவு செய்த பண்டங்களுக்கு வரி செலுத்தவேண்டும். இதன்மூலமாக இந்த வலயம் தனியான ஒரு நாடாக அமைகின்றதென்பது நிரூபணமாகின்றது.

🔸 துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு ஆளுகைப் பிரதேசத்தில்சர்வதேச நடுத்தீர்ப்பு மூலமாகவே தீர்த்துக்கொள்ளப்பட வேண்டும். உதாரணமாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சர்வதேச சிட்டி வங்கியுடன் ஏற்படுத்தக்கொண்ட ஹெஜிங் உடன்படிக்கை பற்றிய பிணக்கு சிங்கப்பூர் நடுத்தீர்ப்புசபைக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது. அது இராச்சியங்களுக்கிடையில் பிணக்குகளைத் தீர்த்துக்கொள்கின்ற வழிமுறையாகும்.

அதற்கிணங்க ஆணைக்குழுவிற்கும் நிறுவனங்களுக்கிடையிலும் நிறுவனத்திற்கும் ஊழியர்களுக்கும் இடையிலும் தோன்றுகின்ற பிணக்குகள் அங்கு தாபிக்கப்படுகின்ற சர்வதேச நடுத்தீர்ப்புச் சபையிடம் கையளிக்கப்படுகின்றது.

அதுமாத்திரமன்றி தற்போது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள மிகவும் முக்கியமன பலசட்டங்கள் இந்த மாநிலத்தில் அமுலில் இருக்கமாட்டாது.

நிர்மாணத்துறை தொடர்பிலான அங்கீகாரங்களை வழங்குகின்ற தேசிய அரசுப்பேரவையின் 78 ஆம் இலக்கமுடைய நகரஅபிவிருத்தி அதிகாரசபைச்சட்டம், மாநகரசபை கட்டளைச்சட்டம், இலங்கை வணிக மத்தியஸ்த நிலையச் சட்டம், நகர மற்றும்கிராம நிர்மாண கட்டளைச்சட்டம், பல்வேறு கருத்திட்டங்களுக்கான வரிச்சலுகை வழங்குகின்ற மூலோபாய அபிவிருத்திச்சட்டம், பொது ஒப்பந்த வேலைகள் உடன்படிக்கைச்சட்டம், பிணையங்கள் மற்றும் செலாவணி ஆணைக்குழுச்சட்டம் போன்ற சட்டங்கள் இந்த மாநிலத்திற்குள் அமுலாவதில்லை.

பிணையங்கள் மற்றும் செலாவணி ஆணைக்குழுச்சட்டம் மூலமாகத்தான் அந்நிய செலாவணி பாதுகாக்கப்ட்டு வருகின்றது. இந்நாட்டில் வெளிநாட்டு பணம் பற்றிய அனைத்து தத்துவங்களும் ஒழுங்குவிதிகளும் இந்த சட்டத்தின் ஊடாகவே அமுலாக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன்வருமான வரி பற்றிய சட்ட ஒழுங்குவிதிகள் உள்ளடங்கிய உண்ணாட்டு அரசிறை சட்டம்,சேர் பெறுமதி வரி, 2002 இன் 11 ஆம் இலக்கமுடயநிதிச்சட்டம், 2002 இன் 05 ஆம் இலக்கமுடைய நிதிச்சட்டம், பண்டங்களின் ஏற்றுமதி –இறக்குமதி பற்றிய அதிகாரம்கொண்ட சுங்கக் கட்டளைச்சட்டம், துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் வரியுடன் தொடர்புடைய துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள்

அபிவிருத்திச்சட்டம், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச்சட்டம், பந்தயம் பிடித்தல் மற்றும் சூதாட்டச்சட்டம், தான்தோன்றித்தனமாக கம்பெனிகளின் விருப்பத்தின் பிரகாரம் ஊழியர்களை தொழிலில் இருந்து நீக்க இயலாத மற்றும் ஊழியர்களுடன் தொடர்புடைய உரிமைகளைப் பாதுகாக்கின்ற தொழிலாளர்களின் தொழில்களை தொழில்களை முடிவுறுத்துகின்ற சட்டம், பொழுதுபோக்கு வரிச்சட்டம், அந்நிய செலாவணிச்சட்டம், கெசினோ தொழில்முயற்சி ஒழுங்குறுத்தல் சட்டம் போன்ற அனைத்துச் சட்டங்களையும் முழுமையாக விடுவிக்க அல்லது ஒருசில பிரிவுகளை திருத்திக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.

எனவே இந்த துறைமுக நகரத்தை சீன மாநிலமாக மாற்றுவதற்காக வேதிட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றது. சீனாவுக்கு ஹொங்கொங் பற்றிய திட்டத்திற்கு இணையான திட்டமொன்றுதான் துறைமுக நகரக்கருத்திட்டம் சம்பந்தமாகவும் இருக்கின்றது.

அதைப்போலவே சனாதிபதியால் நியமிக்கப்படுகின்ற ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள் இலங்கைப் பிரசைகளாக மாத்திரமே அமையவேண்டுமென எந்தவோர் இடத்திலும் குறிப்பிடப்படுவதில்லை.

எனவே ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள் சீனர்களா எனும் சந்தேகம் எழுகின்றது. இந்த அராங்கம் தேசப்பற்றுடைய, தேசிய வளங்களைப் பாதுகாக்கின்ற அரசாங்கமாகவே ஆட்சிபீடமேறியது.

லிபரல் பொருளாதாரம் பற்றிய பாரிய விமர்சனத்தைக் கட்டியெழுப்பிய ஆட்சியாகும். முதலீட்டுச்சபை மற்றும் மூலோபாய அபிவிருத்திச் சட்டமே பொருளாதார லிபரல் மயமாக்கலின் பிரதானமான அம்சமாகும்.

சனாதிபதியினால் சனாதிபதி தேர்தலின்போது முன்வைக்கப்பட்ட லிபரல் பொருளாதாரத்திற்கு எதிரான கருத்து தேசிய பொருளாதாரம் பற்றிய வீம்பு வார்த்தைகளாக மாற்றப்பட்டு நாட்டின் சட்டதிட்டங்கள் இல்லாதொழிக்கப்பட்டு பொருளாதாரம் சுதந்திரமாக்கப்பட உள்ளது.

எமது நாட்டில் எஞ்சியுள்ள பொருளாதாரத்தின் முதுகெழும்பினை தகர்த்து பொருளாதாரத்தை பலம்பொருந்திய நாடுகளுக்கு படைப்பதற்கான முயற்சியே தற்போது அமுலாக்கப்பட்டு வருகின்றது.

எனவே இந்த செயற்பாங்கினை தோல்வியடையச் செய்விக்க வேண்டுமென்பதைப்போலவே இந்நாட்டுப் பிரசைகள் இதற்கு எதிராககுரல் கொடுக்கவேண்டும். அதைப்போலவே இதற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளஇயலுமா என எமது சட்டத்தரணிகள் குழு மூலமாக நாங்கள் கண்டறிவோம்.

ஆனால் அரசாங்கம் இந்த நாட்டின் நீதிமன்றத்தையும் தமது தேவைக்கிணங்க நெறிப்படுத்தக்கூடிய நிலையமாக மாற்றிக்கொண்டு விட்டது. அது ஏன் என்பது தற்போது மிகவும் தெளிவாகி விட்டது. 20 வது திருத்தம் மூலமாக இதனாலேயே சனாதிபதி அதிகாரத்தைக் குவித்துக்கொண்டார்.

இலங்கையுடன் தொடர்புடைய அனைத்துச்சட்டங்களையும் மீறி சீன அரசாங்கத்திற்கும் சைனா ஹாபர் கம்பெனிக்கும் தேவையான வகையில் மாநிலமொன்றைக் கட்டியெழுப்பத்தான் இந்த சட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில்…..

நீங்கள் கூறியவாறு இந்த வலயத்தில் பொலிஸ் மற்றும் இராணுவம் இயங்குவது பற்றி குறிப்பிடப்படவில்லை. எமது நாட்டின் அரசியல் அதிகாரம் பாராளுமன்றம், மாகாண சபைகள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகளிடமே அதிகாரம் கேந்திரமயமாகி இருக்கின்றது. ஆனால் இந்த மாநிலம் இந்த அதிகாரங்களிலிருந்து கைநழுவிச்சென்ற ஒன்றாகும்.

எமது நாடு நிதிச்சட்டங்களால் முடிச்சுப் போடப்பட்டுள்ளது. ஆனால் இந்த வலயத்திற்கு அந்த சட்டங்கள் ஏற்புடையதல்ல. அதைப்போலவே எமது நாட்டுக்கு பொதுவான புழக்கத்திலுள்ள பண அலகு ஒன்று இருக்கின்றது.

ஆனால் அந்த வலயத்தில் ரூபாவுக்குப் பதிலாக வேறோரு பண அலகு இயங்கி வருகின்றது. குறிப்பாக பொலிஸ் மற்றும் இராணுவ நடவடிக்கை ஊடாக எமது நாடு தேசிய பாதுகாப்பினால் கட்டிப்போட்ப்பட்டுள்ளது.

ஆனால் இந்த வலயத்தில் பொலிஸிற்கும் இராணுவத்திற்கும் உள்ள அதிகாரங்கள் யாவை என்பது பற்றி தெளிவாகவில்லை. அதைப்போலவே அந்த வலயத்தில் எமது நாட்டுடன் ஏற்புடைய பொதுவான பகிரங்க சேவை நடைமுறையில் இல்லை. தனிவேறான சேவையொன்று அமுலாக்கப்பட உள்ளது.

எனவே ஒரு நாடு என்றவகையில் ஒன்றாக கடப்பாடு கொள்ளக்கூடிய அனைத்துக் காரணிகளிலிருந்தும் இந்த வலயம்விடுவிக்கப்பட்டுள்ளது. எனவேதான் நாங்கள் இதனை தனிவேறான சீன மாநிலம் எனக் கூறுகிறோம்.

அரசாங்கம்ரூபா 5000 கொடுப்பனவினை செலுத்த மேற்கொண்ட தீர்மானம் நல்லது. அரசாங்கம் இதைப்போல பல முயற்சிகளை மேற்கொண்டது. ஒரு கட்டத்தில் ரூபா 1000 பொருட்கள் பொதியொன்றை கொடுப்பதாகக் கூறியது. பொருட்களின் விலையைக் குறைப்பதாகக் கூறியது.

பெருந்தொகையான வர்த்தமானிகளை வெளியிட்டது. அரசாங்கம் சாத்தியமற்ற பல வைத்தியங்களை செய்தது. இறுதியாக ரூபா 5000 தீர்மானத்திற்கு வந்தது. தீர்மானம் எடுக்கும்போது வருடத்திற்கு முந்திய தினம் அரசாங்க விடுமுறைத் தினமாகும்.

இந்த ஆட்சியாளர்கள் நாடு பற்றியோ பொருளாதாரம்பற்றியோ மக்களின் சிரமங்கள் பற்றியோ எந்தவிதமன நோக்குமற்றவர்களாவர். கோட்டாபய தூரநோக்குடைய ஆட்சியாளரென பெரும்பாலானவர்கள் கூறினார்கள். ஆனால் கோட்டாபயவிற்கு தனது மூக்கின் எல்லைகூடத் தெரிவதில்லை.

ஜனாதிபதி என்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மிரட்டினார் – விஜயதாச ராஜபக்ச பரபரப்பு குற்றச்சாட்டு

ஜனாதிபதி தன்னை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு அச்சுறுத்தியுள்ளார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு போர்ட்சிட்டி தொடர்பில் தான் தெரிவித்த கருத்துகளுக்காக ஜனாதிபதி எனக்கு அச்சுறுத்தல் விடுத்தார் என விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தகாத வார்த்தைகளை பயன்படுத்தினார். நாடு ஒன்றின் தலைவரிடமிருந்து நான் இதனை எதிர்பார்க்கவில்லை என விஜயதாச ராஜபக்ச டெய்லி மிரருக்கு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் பாணியிலேயே நான் பதிலளித்தேன். தற்போது எனது மற்றும் எனது குடும்பத்தவர்களின் உயிர்களின் பாதுகாப்பு குறித்து நான் அச்சமடைந்துள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.

சீனாவின் நெடுநாள் திட்டம் தற்போது வெளிப்பட்டுள்ளது : தனி நாடாக அங்கீகரிக்கும் அனைத்து அம்சங்களையும் கொழும்பு துறைமுக நகரம் கொண்டுள்ளது – விஜயதாஸ

தனி நாடாக அங்கீகரிக்கும் அனைத்து அம்சங்களையும் கொழும்பு துறைமுக நகரம் கொண்டுள்ளது. சீனாவின் நெடுநாள் திட்டம் தற்போது வெளிப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலய ஆணைக்குழு நீதிமன்ற கட்டமைப்புக்கும், இலங்கையின் ஆட்புல எல்லைக்கும் முரணாக காணப்படுகிறது.

இலங்கையின் தலைநகருக்கும், மேல்மாகாணத்திற்கும் சவால் விடுக்கும் வகையில் இதனால் துறைமுக நகரம் காணப்படுகிறது.

விசேட ஆணைக்குழு சட்ட மூலத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளேன் என முன்னாள் நீதியமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

அபயராம விகாரையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாடு இன்று பல்துறையில் வீழ்ச்சியடைந்துள்ளது. பொருளாதார வீழ்ச்சி, எல்லை கடந்த அரசமுறை கடன் நெருக்கடி, சுகாதாரமற்ற உணவு பயன்பாடு என பலதரபபட்ட பிரச்சினைகள் காணப்படுகின்றன. பொருளாதார மட்டத்தில்; இலங்கை அச்சுறுத்தலான தன்மையினை நோக்கி நகர்கின்றது என்பதை குறிப்பிட வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட முறையற்ற அரச முறைகடன்களினால் அம்பாந்தோட்டை துறைமுகத்தை ஒப்பந்த அடிப்படையில் விற்க நேரிட்டது என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் சீனாவிற்கு வழங்குவதற்கு அக்காலக்கட்டத்தில் அமைச்சரவையிலும், பாராளுமன்றிலும் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினேன். இதனால் அப்போது வகித்த நீதியமைச்சர் பதவி மாத்திரம் பறிபோனது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு வழங்கியதனால் ஏற்பட்டுள்ள விளைவுகளை அரச தலைவர்கள் இன்று அனுபவ ரீதியில் உணர்ந்துக் கொண்டுள்ளார்கள்.

ஏனையோரை காட்டிலும் ஐக்கிய தேசிய கட்சிக்கு நாட்டு மக்கள் அரசியல் ரீதியில் பாடம் புகட்டியுள்ளார்கள். அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிற்கு வழங்கியதால் ஏற்பட்ட விளைவுகளை காட்டிலும் பன்மடங்கு விளைவு கொழும்பு துறைமுக பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலத்தினால் ஏற்படும்.

இலங்கையின் ஆட்புல மற்றும் கடல் எல்லை ஆகியவை அரசியலமைப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. மேல்மாகாணத்தில் காலி முகத்திடலில் ஒரு 644 ஹெக்டயார் கடற்பரப்பு மணலாம் நிரப்பப்பட்டு கொழும்பு துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட்டது.

இந்நிலப்பரப்பினை இலங்கையின் மொத்த பரப்பளவிற்குள் உள்வாங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். ஆனால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விசேட ஆணைக்குழு கொழும்பு துறைமுகத்தை தனித்த ஒரு பகுதியாக காண்பித்துள்ளது.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான நீதியமைச்சின் சட்டம்மூலம் சபைமுதல்வரினால் கடந்த 8 ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

சர்வதேச வர்த்தகம், கப்பற் தொழில் முகாமைத்துவ தொழிற்பாடுகள், கரை கடந்த வங்கித் தொழில், நிதிசார் சேவைகள் தகவல் தொழினுட்பம் , வியாபார வழிமுறைகள்,வெளிநாட்டவர்களை பணிக்கு அமர்த்தல், கூட்டிணைக்கப்பட்ட தலைமையங்களின் தொழிற்பாடு. பிராந்திய விநியோக தொழிற்பாடுகள், சுற்றுலா பயணத்துறை மற்றும் வேறு துறை சேவைகளை மேம்படுத்துவது ஆணைக்குழுவின் நோக்கமாகும் என குறிப்பிடப்படுகிறது.

Posted in Uncategorized