சர்வதேச நீதி கோரி போராட்டங்கள்: பொத்துவில்- பொலிகண்டி மக்கள் பேரெழுச்சி இயக்கம் அழைப்பு

தமிழ் இனத்தின் மீதான இன அழிப்புக்குச் சர்வதேச நீதி கோரி தமிழர் தாயகமான வடக்கு- கிழக்கில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டங்களிற்கு வலுச்சேர்க்கும் முகமாக நாளை புதன்கிழமை (17) யாழ்ப்பாணத்திலும் , 19 ஆம் திகதி மட்டக்களப்பிலும் இடம்பெறவுள்ள கவனயீர்ப்புப் போராட்டங்களுக்கு அனைத்துத் தரப்பினரையும் கலந்து கொண்டு ஆதரவு வழங்குமாறு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.

இதுதொடர்பில் மேற்படி இயக்கம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ் இனத்தின் மீதான இன அழிப்புக்குச் சர்வதேச நீதி கோரி தமிழர் தாயகமான வடக்கு- கிழக்கில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டங்களிற்கு வலுச்சேர்க்கும் முகமாக வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்காவிலிருந்து பங்குனி 17 ஆம் திகதி புதன்கிழமை காலை- 10 மணிக்கும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி பூங்காவிலிருந்து பங்குனி- 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை-09 மணிக்கும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

கீழ்வரும் பிரதான கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தியே இப்போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டும்.

தமிழர்களுடைய மரபுவழித் தாயகம், தமிழ் தேசியம், சுயநிர்ணய உரிமை போன்ற தமிழ் மக்களின் நீண்டகால அடிப்படை உரிமைக் கோரிக்கைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

தமிழ்மக்களின் நீதி மற்றும் உரிமைகளுக்கான இப் போராட்டங்களிற்கு வலுச்சேர்க்குமாறு மதத்தலைவர்கள், தமிழ்த்தேசியக் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகிய அனைத்துத் தரப்பினரிடமும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை (P2P) மக்கள் பேரெழுச்சி இயக்கம் அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கின்றது எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்களின் முழு விபரம்

2021.03.15 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

01. இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் கல்வி அமைச்சு மற்றும் பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர் கல்வி ஆணைக்குழுவுக்கும் இடையில் உயர் கல்வித் துறையில் ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்

இரு நாடுகளுக்கும் இடையில் கல்வித் துறையில் பரஸ்பர ஒத்துழைப்புக்களை வலுப்படுத்துவதற்கும், கல்வி வாய்ப்புக்களை விரிவுபடுத்துவதற்கும் இயலுமான வகையில் உயர் கல்வித் துறையில் கல்வி மற்றும் விஞ்ஞானபூர்வமான அறிவுப் பரிமாற்றங்களுக்கான புலமைப் பரிசில் நிகழ்ச்சித்திட்டங்களை ஐந்து வருட காலப்பகுதிக்கு (05) நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் கல்வி அமைச்சு மற்றும் பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர் கல்வி ஆணைக்குழுவுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் குறித்த காலப்பகுதியில் பாகிஸ்தான் அரசாங்கத்தால் 800 முழுமையான புலமைப் பரிசில்களும், ஆரம்ப பட்டப்படிப்புக்கான கட்டணம் விடுவிக்கப்பட்ட 200 பகுதியளவிலான புலமைப்பரிசில்களும் உள்ளடங்கலாக 1000 புலமைப் பரிசில்களை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆராய்ச்சிகள், மாநாடுகள் மற்றும் வேறு கற்கை நடவடிக்கைகளுக்காக இலங்கைஃபாகிஸ்தான பல்கலைக்கழகங்களில் 50 பீட அங்கத்தவர்களை இரு நாடுகளின் பல்கலைக்கழகங்களில் நிலையான காலப்பகுதிக்குப் பரிமாற்றிக் கொள்வதற்கும், இவ் ஒப்பந்தத்தின் கீழ் எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமைய, குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. கொவிட் 19 தொற்று நிலைமையில் கல்வித்துறையின் கற்றல் – கற்பித்தல் செயன்முறையை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்துவதற்காக தொலைக்காட்சி சேவைகளின் ஒத்துழைப்பைப் பெறல்

தொற்று நிலைமையால் 2020 மார்ச் மாதத்தில் பாடசாலைகளை மூடுவதற்கு நேரிட்ட போது, 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த (சாதாரண தர) மற்றும் க.பொ.த (உயர் தர) பரீட்சைகளுக்குத் தோற்றும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்காக இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் ‘ஐ அலைவரிசை’ மற்றும் ‘நேத்ரா அலைவரிசை’ இணைத்து தேசிய கல்வி நிறுவகத்தால் தயாரிக்கப்பட்ட ‘குருகுலம்’ நிகழ்ச்சித்திட்டம் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. 2020 ஆம் ஆண்டில் பாடசாலைகளில் மூன்றாம் தவணை ஆரம்பிப்பதற்குத் தாமதமாகையால், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் குறைபாடு ஏற்படுவதைத் தடுப்பதற்காக ‘குருகுலம்’ நிகழ்ச்சித்திட்டத்தின் 2 ஆம் படிமுறையின் கீழ் 3 ஆம் தரம் தொடக்கம் 13 ஆம் தரம் வரை சிங்கள மற்றும் தமிழ் மொழி மூலமான கல்வி நிகழ்ச்சிகள் ‘ஐ அலைவரிசை’ மற்றும் ‘நேத்ரா அலைவரிசைகளை’ ஒருங்கிணைத்து 2020 நவம்பர் மாதம் 16 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ‘குருகுலம்’ கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சியைத் தொடர்ச்சியாக மேற்கொள்வதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. சாலிகா விளையாட்டு மைதானம் மற்றும் விளையாட்டரங்கு தொகுதி அமைந்துள்ள ‘அன்டர்ஷன் கோல்ஸ் லிங்க்ஸ்’ எனும் பெயரிலுள்ள காணியை விடுவிப்பு வழங்கல் பத்திரம் மூலம் இலங்கை போக்குவரத்து சபைக்கு மாற்றிப் பெறல்

3.4125 ஹெக்ரயார் பரப்பளவு கொண்ட சாலிகா விளையாட்டு மைதானம் மற்றும் விளையாட்டரங்கு தொகுதி அமைந்துள்ள ‘அன்டர்ஷன் கோல்ஸ் லிங்க்ஸ்’ எனும் பெயரிலுள்ள காணி, 1966 ஆம் ஆண்டிலிருந்து இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பொறுப்பின் கீழ் காணப்படுகின்றது. குறித்த காணி வேறு தரப்பினருக்கு விற்பனை செய்யும் உரிமையைப் பெற்றுக் கொள்வதற்கும் அதன் மேம்படுத்தாத பெறுமதியை அரசாங்கத்திற்கு அறவிடுவதன் அடிப்படையில் அரச காணிகள் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய வழங்கலாக, அளிப்புப் பத்திரத்தின் மூலம் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு ஒப்படைப்பதற்காக போக்குவரத்து அமைச்சர் அவர்களும் காணி அமைச்சர் அவர்களும் சமர்ப்பித்த கூட்டு யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. சமுர்த்தி பயனாளிகள் குடும்பங்களில் தெரிவு செய்யப்ட்ட இளம் பெண் தொழில் முயற்சியாளர்களை இலக்காகக் கொண்டு அனைத்து கிராம அலுவலர் பிரிவுகளிலும் வீடும் வியாபார நிலையமும் (Homeshop) அமைக்கும் வேலைத்திட்டம்

உணவு விநியோக வலையமைப்பை விரிவாக்குவதற்காக சமுர்த்தி பயனாளிகள் குடும்பங்களில் தெரிவு செய்யப்ட்ட இளம் பெண் தொழில் முயற்சியாளர்கள் 25,000 பேரை இலக்காகக் கொண்டு அனைத்து கிராம அலுவலர் பிரிவுகளிலும் வீடும் வியாபார நிலையமும் (Homeshop) அமைக்கும் வேலைத்திட்டத்தை ஏனைய நிரல் அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களையும் இணைத்து மேற்கொள்வதற்கு நெடுஞ்சாலைகள் அமைச்சு திட்டமிட்டுள்ளது. குறித்த வேலைத்திட்டத்திற்கு தேசிய ரீதியான வழிகாட்டல் பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமையொழிப்புக்கான செயலணி மூலமும், வேலைத்திட்ட நடவடிக்கைகள் சமுர்த்தி, வீட்டுப் பொருளாதாரம், நுண்நிதி, சுயதொழில் மறறும் வியாபார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது. நாடளாவிய ரீதியில் இந்நிகழ்ச்சித்திட்டம் நெடுஞ்சாலைகள் அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் 100,000 கிலோமீற்றர் வீதிப்புனரமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்டுள்ளது. 100,000 கிலோமீற்றர் வீதிப்புனரமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படும் வீதிகளுடன் இணைந்து முன்மொழியப்பட்டுள்ள வீடும் வியாபார நிலையம் அமைக்கப்படவுள்ளதுடன், குறித்த வீடும் வியாபார நிலையமும் தேவைக்கேற்ப 200,300,400 மற்றும் 500 சதுர அடிகளில் நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த நிகழ்ச்ச்pத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நெடுஞ்சாலைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. வரையறுக்கப்பட்ட ஸ்ரீலங்கன் விமானக் கம்பனிக்கு (SLA) பொதிகள் போக்குவரத்து விமானமொன்றை குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளல்

ஸ்ரீலங்கன் விமானக் கம்பனியிடம் அதிகமான பொருளாதார சிக்கன விமானங்கள் காணப்படுகின்றது. அதனால் விமானப் பயணப் பாதை வலையமைப்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளது. அண்மைய வருடங்களில் அதிக இலாபகர வியாபாரங்களில் பயணிகள் விமானப் போக்குவரத்து வலையமைப்பு தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டது. அதன் விளைவாக பொதிகள் ஏற்றுமதி செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக பொருத்தமான விமானங்கள் இல்லாததால் விமானப் பொதிகள் போக்குவரத்தால் நன்மைகள் கிட்டவில்லை. கொவிட் 19 தொற்று நிலைமையால் விமானப் பயணங்கள் மட்டுப்படுத்தப்பட்டதால், அதிகமான விமானக் கம்பனிகள் விமானப் பொதிகள் போக்குவரத்து தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளன. ஸ்ரீலங்கன் விமானக் கம்பனி பொதிகள் போக்குவரத்திற்காக 26 விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், சமகால சந்தை நிலைமை மாற்றத்தை கருத்தில் கொள்ளும் போது பிரதான விமானப் பயணப்பாதைகளில் பொதிகள் போக்குவரத்தை ஆரம்பிப்பதற்கு இது சிறந்த சந்தர்ப்பம் என தெரியவந்துள்ளது. அதனால், பொதிகள் போக்குவரத்து ஆற்றல் வளத்தை கருத்தில் கொண்டு, ஸ்ரீலங்கன் விமானக் கம்பனியிடம் தற்போதுள்ள வியாபார கட்டமைப்பை மூலோபாய ரீதியாக மாற்றியமைப்பதற்குத் திட்டமிட்டுள்ளது. அதற்கமைய, சர்வதேச போட்டித்தன்மையான விலைமனுக்கோரல் பொறிமுறையைக் கையாண்டு ஸ்ரீலங்கன் விமானக் கம்பனிக்கு குத்தகை அடிப்படையில் பொதிகள் போக்குவரத்து விமானத்தை பெற்றுக்கொள்வதற்காக சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. திரிபிடக பாதுகாப்பு சட்டம் உருவாக்கல்

பௌத்த மதத்தின் கேந்திர நிலையமாக எமது நாடு பாராட்டப்படுவதுடன், பௌத்த மதத்திற்கு முதன்மை தானம் வழங்கி பௌத்த சாசனத்தை பாதுகாத்தலும் பேணிவளர்த்தலும் அரசின் கடமையாகும். 1956 ஆம் ஆண்டு 2500 ஆம் ஸ்ரீபுத்த ஜயந்தி விழாவுக்கு இணையாக திரிபிடகம் சிங்கள மொழிபெயர்ப்புடன் அச்சிடப்பட்டுள்ளது. திரிபிடக சாசனத்தை பாதுகாக்கும் நோக்கில் 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் திரிபிடகம் தேசிய மரபுரிமையாக்கப்பட்டுள்ளதுடன், அரசாங்கத்தின் அனுமதியின்றி அதனைப் பாதுகாத்தல், தவறான வரைவிலக்கணங்களை வழங்கல் அல்லது மொழிபெயர்த்தல் தடை செய்யப்பட்டுள்ளது. எதிர்கால சந்ததியினருக்காக திரிபிடகத்தைப் பாதுகாப்பதற்காக ‘திரிபிடக பாதுகாப்பு சட்டத்தை’ பாராளுமன்றத்தில் நிறைவேற்றவும், அதற்கான சட்டமூலத்தை தயாரிக்கவும், சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. புதிய வரி யோசனையை நடைமுறைப்படுத்தல்

ஜனாதிபதி மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிக்கமைய, இலகுவான, வெளிப்படைத்தன்மையுடன் கூடிய வினைத்திறன் மிக்க வரி முறைமையினை அறிமுகப்படுத்துவதற்காக ‘பொருளாதார மறுமலர்ச்சி ஆரம்பம்’ மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரி திருத்தங்கள், 2021 வரவு செலவு திட்டத்தின் யோசனைகளுக்கமைய வரி திருத்தங்கள் மற்றும் கொள்கைத் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்காக சட்டவரைஞரால் 2017 ஆம் ஆண்டு 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி சட்டம் மற்றும் 2002 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க பெறுமதி சேர் வரி சட்டத்தை திருத்தம் செய்வதற்காக சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளதுடன், குறித்த சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட்டு பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்காக நிதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. கட்டுமான இயந்திரங்கள், உபகரணங்கள் மற்றும் பொதிகள் போக்குவரத்து மேற்கொள்ளும் வாகனங்கள் போன்றவற்றின் பெறுகையும் அவற்றை அரச நிறுவனங்களுக்கு வழங்கலும்

அரசாங்கம் நெடுஞ்சாலைகள், நீர்ப்பாசனம், கட்டிட நிர்மாணங்கள் உள்ளிட்ட ஏனைய துறைகளில் பல அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது. ஆனாலும், கட்டுமான தொழிற்றுறை மற்றும் உள்ளூர் கட்டுமான ஒப்பந்தக்காரர்களின் இயலளவை கருத்தில் கொள்ளும் போது எதிர்பார்க்கின்ற வகையில் அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு சிரமமாக உள்ளமை தெரியவந்துள்ளது. குறித்த நிலைமையின் கீழ் அடையாளங் காணப்பட்ட முக்கிய கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களுக்கு ஒப்படைப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமைய, குறித்த கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக தேவையான மண் அகற்றல் மற்றும் கட்டுமான இயந்திரங்கள், வீதிகள் மற்றும் கட்டிட நிர்மாண இயந்திரங்களும் குறித்த பணிகளுக்கான ஏனைய உபகரணங்கள், முன் தயாரிக்கப்பட்ட கட்டிடப் பொருட்கள் போக்குவரத்து மற்றும் சேவை வழங்கும் வாகனங்கள் மற்றும் பராமரிப்பு வாகனங்கள் போன்றவற்றை அரசாங்க நிறுவனங்களுக்கு விநியோகிப்பதன் மூலம் குறித்த நிறுவனங்களின் இயலளவை விருத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக, அவ்வாறான உபகரணங்களைத் தயாரிப்பவர்கள் உள்ளூர் முகவர்களுடன் இணைந்து வழங்கப்பட்டுள்ள விநியோகத்தர் கடன் வசதி (Supplier’s Credit Facility) பொறிமுறையின் கீழ், குறித்த பெறுகைச் செயன்முறையை கையாண்டு இயந்திர உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக நெடுஞ்சாலைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. போதியளவு அரிசியை சந்தைக்கு விநியோகித்தல்

உத்தரவாத விலையின் கீழ் சந்தையில் போதியளவு அரிசி கிடைக்காமை தொடர்பாக அமைச்சரவை கவனம் செலுத்தியுள்ளதுடன், அதற்காக மேற்கொள்ள வேண்டிய மாற்று வழிகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது. அதற்கமைய, முதலாவதாக நெல் சந்தைப்படுத்தல் சபை விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்த நெல்லை அரிசியாக்கி தொடர்ச்சியாக சதொச நிறுவனத்தின் கிளைகள் மூலம் துரிதமாக விநியோகிப்பதற்கும், குறித்த வேலைத்திட்டத்தின் பெறுபேற்றை கருத்தில் கொண்டு தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய மாற்று வழிகள் தொடர்பாகவும் கவனம் செலுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

– அரசாங்க தகவல் திணைக்களம்

மியன்மார் இராணுவ ஆட்சியோடு, இலங்கை அரசு உறவாட வேண்டாம் என மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

மியன்மார் இராணுவ ஜுன்டா ஆட்சியோடு இலங்கை அரசு உறவாட வேண்டாம் எனவும் மியன்மாரில் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் பாதுகாக்குமாறும் கோரி, வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில், கிழக்கு மாகாண பொது அமைப்புகள் ஒன்றிணைந்து, மட்டக்களப்பு – காந்திபூங்காவில் இன்று (16) கவனயீர்ப்பு ஆர்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.

இக்கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தில், மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த சிவில் அமைப்புகள், போரால் பாதிக்கப்பட்ட சமூகப்பிரிவினர், பெண்கள் அமைப்புகள் மற்றும் இலங்கையின் வடக்கு, கிழக்கு வாழ் பொதுமக்கள், வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டம் தொடர்பிலான ஊடக அறிக்கையும் இதன்போது வெளியிடப்பட்டதுடன், இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் மனித உரிமைகள் ஆணையாளர்களுக்கு இவ்வறிக்கை சமர்ப்பிதற்கான நடவடிக்கைளும் மேற்கொள்ளப்பட்டன.

அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய அதிகாரி ஆகியோருக்கு இவ்வறிக்கை அடங்கிய மகஜர் கையளிக்கப்பட்டது.

Posted in Uncategorized

இலங்கை தமிழர்கள் மீதான இந்தியாவின் கரிசனை உண்மையானது – இந்திய வெளிவிவகார அமைச்சர்

இலங்கை வாழ் தமிழ் மக்கள் மீது இந்தியா கொண்டிருக்க கூடிய கரிசனையானது நீண்ட வரலாற்றைக் கொண்ட உண்மையான விடயமாகும்.

இதனை தேர்தல் கால விவகாரமாக சித்தரிக்கப்படுவது ஏற்புடையதல்ல என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடக நிறுவனமொன்றின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் இந்திய மக்களிடையே மொழியால் நெருங்கிய உறவு காணப்படுகிறது.

இருநாட்டு தமிழ் மக்கள் மீதான கரிசனை என்பது சரியானது. ஏனெனில் அது இயற்கையானதொன்றாகும்.

எவ்வாறிருப்பினும் இலங்கை தமிழ் மக்கள் மீதான எமது கரிசனை என்பது தேர்தல் காலத்திற்கு மாத்திரம் மட்டுப்பட்டதொன்றாக இருக்க முடியாது.

இதனை தமிழ் நாட்டில் உள்ளவர்களும் ஏனையோரும் புரிந்துகொள்ள வேண்டும்.

இலங்கை தமிழர் மீதான கரிசனை தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்னர் ஆரம்பித்து தேர்தல் நிறைவடைந்த மறுநாளிலேயே முடிவடைகின்ற விடயமாகி விட கூடாது .

ஏனெனில் சில சந்தர்ப்பங்களில் தேர்தல்கள் நெருங்கும் போது இலங்கைத் தமிழர்கள் மீதான உணர்வு அதிகரித்து , பின்னர் அது தணிந்து போயுள்ளதை அவதானத்திருக்கின்றோம் என குறிப்பிட்டார்.

இலங்கையின் இறைமைக்கு சவாலாக பிரித்தானியா முன்னெடுக்கும் செயல் நட்புரிமையற்ற செயல்: தினேஸ்

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படவுள்ள யோசனை, இலங்கையின் இறைமைக்கு சவாலானது எனவும், இந்த யோசனையை முன்னகர்த்தும் பிரித்தானியாவின் செயல் நட்புரிமையற்ற செயல் என்றும் இலங்கையின் வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது:

ஐக்கிய நாடுகளின் அமர்வில் பிரித்தானியாவின் தலைமையிலான நாடுகள் கொண்டு வரவுள்ள யோசனையின் வரைபு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த யோசனையில் அடங்கியிருக்கும் அம்சங்கள் இலங்கையின் இறைமையை மீறும் வகையில் அமைந்துள்ளன. பொதுநலவாய நாடுகளின் உறுப்பினர் என்ற அடிப்படையில் இலங்கைக்கு எதிராக பிரித்தானியா மேற்கொள்ளும் இந்த செயல் நட்புரிமையற்றது.

இதேவேளை, இலங்கையில் மனித உரிமை நிலவரம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் கண்காணிப்புக்களை அதிகரிப்பதுடன் அறிக்கையையும் வெளியிடவேண்டும் என்று பிரித்தானியா தலைமையில் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் அமர்வில் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. என்றார்.

Posted in Uncategorized

நேபாளம், பங்களாதேஷ் சிறீலங்காவுக்குக் கொடுத்த அதிர்ச்சி! வாக்கெடுப்பில் நடுநிலை?

ஜெனிவாவில் ஆசிய நாடுகளின் ஆதரவு தமக்குக் கிடைக்கும் என சிறீலங்கா அரசாங்கம் தொடர்ச்சியாக நம்பிக்கை வெளியிட்டுக்கொண்டிருக்கும் நிலையில், நேபாளம், பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் நிலைப்பாடு சிறீலங்காவுக்குக் அதிர்ச்சியைக் கொடுத்திருப்பதாக ஜெனிவாத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை குறித்த பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்படும் போது, தம்மால் வெற்றிபெற முடியாது என்பதை சிறீலங்கா தெரிந்திருக்கின்ற போதிலும், அண்டை நாடுகளான ஆசிய நாடுகளின் ஆதரவைத் தக்கவைப்பதற்கான பகிரத இராஜதந்திர நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றது.

அந்த வகையில் நோபாளம், பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற பேச்சுக்களின் போது, “பிரேரணை எவ்வாறிருந்தாலும், இந்தியாவின் ஆலோசனையைப் பெற்றே எமது நிலைப்பாட்டை அறிவிப்போம்” என இரு நாடுகளின் பிரதிநிதிகளும் சிறீலங்காவுக்குத் தெரிவித்திருக்கின்றார்கள்.

சிறீலங்கா இராஜதந்திர மட்டத்தில் இது அதிர்ச்சியைக் கொடுத்திருப்பதாகத் தெரிகின்றது. இந்தியா வாக்கெடுப்பில் நடுநிலை வகிப்பதென்ற முடிவை எடுத்துவிட்டது. இந்த நிலையில் நேபளம், பங்களாதேஷ் ஆகியனவும் அதே நிலைப்பாட்டை எடுத்தால் அது சிறீலங்காவுக்கு பாரிய பின்னடைவாக இருக்கும். நெருங்கிய நட்பு நாடுகளின் ஆதரவைக் கூட பெற முடியவில்லை என்பது ஒரு இராஜதந்திரத் தோல்வியாகவே கருதப்படும்.

Posted in Uncategorized

ஈழ அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வலியுறுத்துவோம் – திமுக

சிறீலங்காவில் இருந்து வந்து, இந்தியாவில் உள்ள முகாம்களில் தங்கி இருக்கும் நாடற்ற சிறீலங்காத் தமிழர்களுக்கு, இந்தியக் குடியுரிமை வழங்கிட மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறீலங்காவில் இருந்து தாயகம் திரும்பிய மலையகத் தமிழர்கள், தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக அகதிகள் முகாமில் வசிக்கும் ஈழ தமிழர் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்க மத்திய அரசை திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தும் என அதன் தலைவர் ஸ்டாலின் தெரிவித்து்ளளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான திராவிட முன்னேற்றக் கழகத்தின் விஞ்ஞாபன அறிக்கையிலேயே அவர் குறிப்பிட்டுள்ளார். சிறீலங்கா போர்க் குற்றங்கள், இனப் படுகொலை குறித்து சுதந்திரமான – நம்பகத் தன்மை வாய்ந்த சர்வதேச விசாரணை நடத்த உலக நாடுகளை இந்திய அரசு வலியுறுத்திச் செயல்பட வேண்டும் என மத்திய அரசை தி.மு.க வலியுறுத்தும், ஈழ தமிழர் சிக்கலுக்கு தீர்வு காண புலம்பெயர் தமிழரிடைய ஐ.நா மேற்பார்வையில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

தாயகம் திரும்பிய இந்திய வம்சாவழியினராகிய மலைகயத் தமிழர்கள், 30 ஆண்டுகளுக்கு மேலாக அகதிகள் முகாம்களில் இருக்கும் சிறீலங்கா தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019-ஐ திரும்பப் பெற மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

Posted in Uncategorized

இராணுவத்திற்காக கிழக்கில் காடுகள் சுவீகரிப்பு- எதிர்ப்பு நடவடிக்கையில் கூட்டமைப்பு!

மட்டக்களப்பு தாந்தாமலையில் இராணுவத்தினருக்காக காடுகளை சுவீகரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டிப்பளை பிரதேசத்திலுள்ள தாந்தாமலை பிரதேசத்திலுள்ள 1500 ஏக்கர் காடுகளை இன்று இராணுவத்தினரின் தேவைக்காக சட்டவிரோதமாக கையகப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்நிலையில், இரா.சாணக்கியன்,ரெலோ கோ.கருணாகரம் ஆகியோர் இந்த சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

அதனையடுத்து இந்த செயற்பாடு தொடர்பில் இன்று இடம்பெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோ.கருணாகரம் ஆகியோர் கடும் எதிர்ப்பினையும் வெளியிட்டிருந்தனர்.

அத்துடன், குறித்த நடவடிக்கையினை உடனடியாக கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தனர். இதனை இணைத்தலைவர் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனும் ஏற்றுக்கொண்டிருந்ததுடன், பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டது.

அதனையடுத்து மாவட்ட அபிவிருத்திக் குழுவில் தீர்மானம் எடுப்பதற்காகவும் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

Posted in Uncategorized

ஒரே குரலில் உரத்து சர்வதேசத்திற்கு சொல்ல ஒன்றுபடுவோம் வாரீர்: தமிழ்மக்களுக்கு யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் அழைப்பு

நல்லூரில் இடம்பெற்று வரும் சுழற்சிமுறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தின் தொடர்ச்சியாக எதிர்வரும்-17ஆம் திகதி புதன்கிழமை கிட்டுப் பூங்காவிலிருந்து உணவுத் தவிர்ப்புப் போராட்டம் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் திடல் வரை மாபெரும் பேரணி ஒன்றை நடாத்துவதற்கு மாணவர்களாகிய நாம் தீர்மானித்துள்ளோம். எனவே, தமிழ்மக்களின் நீதி மற்றும் உரிமைகளை வலியுறுத்துவதற்கான இப் போராட்டத்திற்கு மதகுருமார்கள், அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பல்வேறு தரப்பினருடைய ஆதரவையும் எதிர்பார்த்து நிற்கின்றோம் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அன்றைய தினம் காலை-10 மணியளவில் கிட்டுப் பூங்காவில் ஆரம்பமாகும் பேரணியில் கலந்து கொண்டு எமது கோரிக்கைகளை ஒரே குரலில் உரத்து சர்வதேசத்திற்கு சொல்ல ஒன்றுபடுவோம் வாரீர்… எனவும் மாணவர் ஒன்றியம் தமிழ்மக்களிடம் அழைப்பு விடுத்துள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று திங்கட்கிழமை(15) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் தமிழர்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற திட்டமிட்ட இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு நீதி வேண்டி யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னரான இதுவரையிலான காலப்பகுதியில் தமிழ்மக்கள் தொடர்ச்சியாக ஜனநாயக ரீதியில் போராடி வருகின்றனர்.

இந் நிலையில் கடந்த-28.02.2021 ஆம் திகதி அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து இரு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சுழற்சிமுறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை நல்லூர் ஆலய வீதியில் ஆரம்பித்தனர்.

இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்தல், தமிழர்களின் மரபுவழித் தாயகம், தமிழ்த் தேசியம், சுயநிர்ணயம் போன்ற தமிழ்மக்களின் உரிமைக் கோரிக்கைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்ட சுழற்சிமுறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் தொடர்ச்சியாக மக்கள் போராட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இப் போராட்டத்திற்கு மதகுருமார், சிவில் சமூகப் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் தங்கள் பங்களிப்பை வழங்கி வருகின்றனர் எனவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிகாப் தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து பாகிஸ்தான் கவலை

இலங்கையில் நிகாப் மற்றும் புர்கா தடைசெய்யப்படுவதானது உலகெங்கிலும் உள்ள சாதாரண இலங்கை முஸ்லிம்கள் மற்றும் அவர்களின் உணர்வுகளுக்கு காயத்தை ஏற்படுத்தும் என இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் சாத் கட்டக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் மேலும் தெரிவித்துள்ள அவர்,

இலங்கையில் நிகாப் மீதான தடை உலகெங்கிலும் உள்ள சாதாரண இலங்கை முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு காயத்தை ஏற்படுத்தும்.

சர்வதேச அரங்குகளில் நாடு எதிர்கொள்ளும் தொற்றுநோய் மற்றும் பிற சவால்களால் இன்றைய பொருளாதார ரீதியாக கடினமான நேரத்தில், பாதுகாப்பு என்ற பெயரில் இத்தகைய பிளவுபடுத்தும் நடவடிக்கைகள், பொருளாதார சிக்கல்களை அதிகரிப்பதைத் தவிர, அடிப்படை மனித உரிமைகள் குறித்த பரந்த அச்சங்களை மேலும் வலுப்படுத்த மட்டுமே உதவும் என்றார்.

நாட்டில் புர்கா அணிவதற்கு தடை விதிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தில் தாம் கையொப்பமிட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கலாநிதி சரத் வீரசேகர அண்மையில் தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் ஒரு சில முஸ்லிம் பெண்கள் அணியும் புர்காவை தடை செய்யும் உத்தரவில் கையெழுத்திட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந் நிலையில் அது தொடர்பில் பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையிலேய பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.