பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான தந்திரோபாயமொன்றை சிறிலங்கா முன்வைக்கவேண்டும் ஜெனிவாவில் அமெரிக்கா

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான தந்திரோபாயத்தினை இலங்கை முன்வைக்கவேண்டும் என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜெனீவாவிற்கான அமெரிக்க தூதரகத்தின் டானியல் குரென்பீல்ட் இதனை தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான தந்திரோபாயத்தினை இலங்கை முன்வைக்கவேண்டும் அதற்கான கால அட்டவனையொன்றை முன்வைக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 46வது அமர்வில் ஐநா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மீதான கலந்துரையாடலின் போது அவர் இதi தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சிறுபான்மை சமூகத்தவர்கள் ஓரங்கட்டப்படுவது அதிகளவிற்கு இடம்பெறுவது குறித்தும் சிவில்சமூகம் செயற்படுவதற்கான தளம் குறைவடைவது குறித்தும் அமெரிக்கா ஜெனீவாவில் கவலை வெளியிட்டுள்ளது.

பொறுப்புக்கூறல் இன்மை மோதல்கால துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டனர் என நம்பகதன்மை மிக்க விதத்தில் குற்றம்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகள் உயர் பதவிகளிற்கு நியமிக்கப்படுவது குறித்தும் அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதி நியமித்துள்ள புதிய ஆணைக்கு பொறுப்புக்கூறல் தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஆணையை கொண்டிராததை நாங்கள் அவதானித்துள்ளோம்,என தெரிவித்துள்ள அமெரிக்காகாணாமல் போனவர்கள் குறித்த அலுவலகமும் இழப்பீட்டிற்கான அலுவலகமும் அரசியல் தலையீடுகள் இன்றி செயற்படவேண்டும் என தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

ஜெனீவா அமர்வில் பங்கேற்போரிடம் விசாரணை நடத்தும் இலங்கை போலீஸ்

இலங்கையில் யுத்தம் நடந்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடி, அவர்களின் உறவினர்கள் முன்னெடுத்து வரும் போராட்டத்தில் பங்கெடுப்போரிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவது தெரிய வந்துள்ளது.

குறிப்பாக 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக வடக்கு, கிழக்கு பகுதிகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சூழற்சி முறையிலான இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த போராட்டம் தொடங்கப்பட்டு, இன்றுடன் 1,468 நாட்கள் கடந்துள்ளது. இவ்வாறான நிலையில், ஜெனீவாவில் மனித உரிமை பேரவையின் இந்த ஆண்டுக்கான கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காணப்படும் நிலையிலேயே, ஜெனீவா அமர்வு நடத்தப்பட்டு வருகிறது.

முந்தைய ஆண்டுகளைப் போலவே இம்முறையும் இலங்கை யுத்த விவகாரம், ஜெனீவா அமர்வில் முக்கிய விவாதமாகியிருக்கிறது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, இந்த அமர்வில் பங்கேற்பதற்காக இலங்கை மத்திய அரசாங்க தரப்போ தமிழர் தரப்போ இம்முறை செல்லவில்லை. எனினும், காணொளி காட்சி வழியாக ஜெனீவா அமர்வுகளில் இந்த இரண்டு தரப்பினரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், ஜெனீவா மனித உரிமை பேரவை கூட்டத் தொடரில் தமது குரலை மௌனிக்க செய்வதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேசி ஆனந்த நடராஜா தெரிவித்தார்.

இதன் ஒரு கட்டமாக தான் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் புதன்கிழமை (பிப்ரவரி 24) முதல் முறையாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

கிளிநொச்சி பயங்கரவாதத் தடுப்பு பிரிவின் அலுவலகத்தில் வைத்து, கொழும்பு பயங்கரவாதத் தடுப்பு பிரிவு அலுவலக அதிகாரிகளால் தான் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

தனது வங்கிக் கணக்கு விவரங்கள், போராட்டங்கள் நடத்தப்படுவதற்கான காரணங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றீர்களா என்ற கோணத்திலும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தன்னிடம் விசாரணை நடத்தியதாக அவர் கூறினார்.

தன்னைப்பற்றிய அனைத்து தகவல்களையும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் வைத்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். வெளிநாடுகளில் இருந்து தனது வங்கிக் கணக்குக்கு வரும் பணம் தொடர்பிலும் தன்னிடம் விசாரணை நடத்தப்பட்டதாக கூறிய அவர், அந்த பணம், பிரித்தானியாவிலுள்ள தனது மகனால் அனுப்பப்படும் பணம் என தான் பதிலளித்ததாகவும் லீலாதேசி ஆனந்த நடராஜா தெரிவித்தார்.

போராட்டம் நடத்துவதற்கு வெளிநாடுகளிலிருந்து பணம் கிடைக்கிறதா என பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் வினவியதற்கு, தான் “இல்லை” என பதிலளித்ததாகவும் அவர் கூறினார்.

இலங்கை ராணுவத்திற்கு எதிராக முறைப்பாடுகளை செய்தீர்களா என தன்னிடம் ஒரு அதிகாரி விசாரணை செய்ததாக அவர் குறிப்பிட்டார்.

தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ராணுவத்திற்கு எதிராக முறைப்பாடு செய்யவில்லை எனவும், அரசாங்கத்தின் மீதே தாம் கோபம் கொண்டுள்ளதாகவும் லீலாதேசி ஆனந்த நடராஜா தெரிவித்தார்.

இதேவேளை, 2010ஆம் ஆண்டில் ஜெனீவா அமர்வுகளில் கலந்து கொண்டீர்களா என பயங்கரவாத தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் தன்னிடம் கேட்டதற்கு, 2010ஆம் ஆண்டில் நடந்த ஜெனீவா அமர்வுகளுக்கு செல்லவில்லை எனவும், 2018ம் ஆண்டு ஜெனீவா அமர்வுகளிலேயே தான் முதல் முறையாக கலந்து கொண்டதாகவும் அதிகாரிகளிடம் தெரிவித்ததாக லீலாதேசி ஆனந்த நடராஜா கூறினார்.

ஜெனீவா அமர்வில் முன்வைக்கப்படும் விஷயங்கள் குறித்தும் அவரிடம் அதிகாரிகள் கேட்டுள்ளதாக தெரிகிறது. காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை கண்டுபிடித்து தருவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுக்கவே இதுபோன்ற போராட்டங்களை தமது சங்கத்தில் உள்ளவர்கள் மேற்கொள்வதாக லீலாதேசி கூறினார்.

தற்போது நடைபெற்று வரும் ஜெனீவா அமர்வுகளில் தான் கலந்து கொள்ளாதிருப்பதற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகவே அதிகாரிகளின் விசாரணையை நடவடிக்கையை கருதுவதாக லீலாதேசி ஆனந்த நடராஜா மேலும் தெரிவித்தார்.

இலங்கையுடன் உறுதியாக இருப்போம்! சீனா பகிரங்கத் தகவல்

ஸ்ரீலங்காவுடன் தொற்றுநோய்க்கு எதிரான ஒத்துழைப்பை அதிகரிக்கவும், தொடர்ந்து நாட்டிற்கு தடுப்பூசி உதவிகளை வழங்குவதோடு,

இலங்கைக்கு தொற்றுநோயை முன்கூட்டியே தோற்கடிக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவும் சீனா தயாராகவுள்ளதாக என சீன மாநில கவுன்சிலரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்காவின் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன உடனான தொலைபேசி உரையாடலின் போதே இதனை அவர் உறுதிபடுத்தியுள்ளதுடன்,

இரு நாடுகளும் நேர்மையான பரஸ்பர உதவி மற்றும் நீடித்த நட்பின் மூலோபாய கூட்டுறவு பங்காளிகள் என்று வாங் யி கூறியுள்ளதாக சீனாவின் செய்திச் சேவை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டில், இரு நாடுகளும் தொற்றுநோய்க்கு எதிராகப் போராட கைகோர்த்து ஒருவருக்கொருவர் ஆதரவளித்தன, மேலும் அவர்களின் இருதரப்பு உறவுகள் ஒரு வலுவான வளர்ச்சி வேகத்தைத் தக்க வைத்துக் கொண்டதாகவும் இதன்போது சீன வெளியுறவு அமைச்சர் கூறினார்.

அத்துடன் பட்டுப் பாதை முன்முயற்சியின் கட்டமைப்பிற்குள் ஒத்துழைப்பில் உறுதியான முன்னேற்றம் காண வாங் யி இரு தரப்பினருக்கும் அழைப்பு விடுத்தார்.

இதேவேளை ஸ்ரீலங்கா வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன, ஸ்ரீலங்கா சீனாவை அதன் நெருங்கிய நண்பராக கருதுவதாகவும், ஸ்ரீலங்காவின் பொருளாதார வளர்ச்சிக்கு, மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும்,

உள் மற்றும் வெளிப்புற சவால்களை சமாளிப்பதற்கும் சீனா தனது நீண்டகால, தன்னலமற்ற உதவிக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தார்.

அண்மைய ஆண்டுகளில், அமெரிக்கா உட்பட சில மேற்கத்திய நாடுகள் மீண்டும் ஸ்ரீலங்காவின் மனித உரிமை பிரச்சினைகளை சுரண்டியுள்ளதாகவும்,

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் ஸ்ரீலங்கா உள்ளிட்ட வளரும் நாடுகளை ஆதாரமற்ற முறையில் குற்றம் சாட்டியுள்ளதாகவும் குணவர்தன கூறினார்.

இதற்கு பதிலளித்த சீன வெளியுறவு அமைச்சர், சீனா தொடர்ந்து நீதியை நிலைநிறுத்தி வளரும் நாடுகளுடன் நிற்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலின் போது கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி திட்டம், ஹம்பாந்தோட்டை துறைமுக விடயங்கள் உள்ளிட்டவை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு ஜெனிவாவில் இந்தியா

இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் மத்திப்பீட்டு அறிக்கை மிகவும் கவலையளிக்கிறது. அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு உட்பட தமிழ் சமூகத்தின் உரிமைகளுக்கு மதிப்பளிப்பது இலங்கையின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் நேரடியாக பங்களிப்பு செய்யும் என ஜெனிவாவிற்கான இந்தியாவின் நிரந்தர வதிவிட பிரதிநிதி இந்திரா மணி பாண்டே தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

இலங்கை தொடர்பான உயர் ஸ்தானிகர் அறிக்கை மற்றும் அவரது உரையின் போது தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது.

இலங்கையின் மூன்று தசாப்தகால மோதல்கள் 2009 ஆம் ஆண்டு மே மாதம் நிறைவடைந்த பின்னர் மனித உரிமைகள் தொடர்பான 7 தீர்மானங்களை இந்த பேரவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தீர்மானங்கள் தொடர்பான கலந்துரையாடல்களில் இந்தியா தீவிரமாக பங்கேற்று வருகிறது.

அதே போன்று இலங்கையுடன் அதன் நெருங்கிய நட்பு நாடென்ற வகையிலும் அயலான் என்ற நோக்குடனும் இந்தியா தொடர்ந்தும் உறுதிப்பாடுடன் இலங்கை விடயத்தில் முன்னின்று செயற்படுகின்றது.

எவ்வாறாயினும் இலங்கை தொடர்பான இந்தியாவின் தொடர்ச்சியான நிலைப்பாடானது முக்கிய இரு தூண்களில் உள்ளது.

அதாவது இலங்கையின் ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான ஆதரவு மற்றும் சமத்துவம், நீதி, அமைதி, கௌரவத்திற்கான இலங்கைத் தமிழர்களின் அபிலாஷைகளுக்கு உறுதியளித்தல் ஆகிய இரு பிராதன தூண்களை மையப்படுத்தியதாகவே எமது நிலைப்பாடுள்ளது.

இவை தவிர வேறு தேர்வுகள் இல்லை. அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு உட்பட தமிழ் சமூகத்தின் உரிமைகளை மதிப்பது, இலங்கை ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் நேரடியாக பங்களிப்பு செய்யும் என்பதை உறுதியாக நம்புகிறோம் . எனவே, தமிழ் சமூகத்தின் நியாயமான அபிலாஷைகளை நிறைவேற்றுவது இலங்கையின் சிறந்த நலன்களுக்கானது என்பதையே இந்தியா பரிந்துரைக்கிறது.

நல்லிணக்க செயல்முறை மற்றும் இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவது உள்ளிட்ட இத்தகைய அபிலாஷைகளுக்கு தீர்வு காண தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க இலங்கையை கேட்டுக்கொள்கிறோம்.

மோதலின் பின்னரான 12 ஆண்டுகளில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்து உயர் ஸ்தானிகரின் மதிப்பீடு கவலைகயளிக்கிறது.

இது குறித்து இலங்கை அரசு தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. இந்த இரண்டையும் மதிப்பீடு செய்வதிலேயே இந்த பிரச்சினைக்கு நீடித்த மற்றும் பயனுள்ள தீர்வைக் காண முடியும். இதற்கான உறுதிப்பாட்டின் மூலம் நாம் வழிநடத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.

ஏப்ரல் 21 தாக்குதல் அறிக்கையை நிராகரிக்க ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானம்

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை நிராகரிக்க ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக்குழு இன்று ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட அரச அதிகாரிகள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை என ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக்குழுவின் யோசனையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வர்த்தமானி ஊடாக ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட அதிகாரம் சில சந்தர்ப்பங்களில் அத்துமீறி பயன்படுத்தப்பட்டுள்ளதாக சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக்குழு இன்று தீர்மானித்துள்ளது.

Posted in Uncategorized

இலங்கை அரசாங்கம் கதவை மூடிவிட்டது; பொறுப்புக்கூறலுக்கு சர்வதேச மாற்று வழியை உறுப்பு நாடுகள் தேடவேண்டும் – பச்லெட் அறிவிப்பு

இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆராய்வதில் இலங்கை தோல்வி அடைந்துள்ளதன் ஊடாகவும் ஜெனீவா பிரேரணையில் இருந்து விலகியதன் மூலமும் இலங்கை அரசாங்கம் நேர்மையான முறையில் உள்ளக ரீதியில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கான கதவை மூடிவிட்டுள்ளது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் நேற்று ஜெனிவாவில் தெரிவித்தார்.

எனவே இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக இவ்வாறு பொறுப்புக்கூறலில் தோல்வியை கண்டுள்ளதால் சர்வதேச ரீதியில் இலங்கையின் பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கான மாற்று வழியை உறுப்பு நாடுகள் ஆராய வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் கோரிக்கை விடுத்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் நடைபெற்றுவருகின்ற நிலையில் நேற்றைய தினம் இலங்கை தொடர்பான விவாதம் நடைபெற்றது. இதன்போது ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் இலங்கை தொடர்பான மதிப்பீட்டு அறிக்கை உத்தியோகபூர்வமாக பேரவையில் தாக்கல் செய்தார். அறிக்கையை தாக்கல் செய்துவிட்டு உரையாற்றும் பொழுதே இந்த விடயங்களை மனித உரிமை ஆணையாளர் வெளிப்படுத்தினார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கையைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியமான ஒரு கட்டத்தில் இருக்கின்றோம். என்னுடைய அறிக்கை வெளிக்காட்டியுள்ளதன் பிரகாரம் கிட்டத்தட்ட கடந்த 12 வருடங்களாக பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான உள்ளக ரீதியான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக தோல்வியையே சந்தித்திருக்கின்றன.

2015ஆம் ஆண்டு ஜெனிவாவில் வாக்குறுதி அளிக்கப்பட்ட போதிலும் கூட உண்மையான நேர்மையான உண்மையை கண்டுபிடித்தல் மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாட்டில் இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக தோல்வி கண்டிருக்கின்றது.

கடந்த ஒரு வருட காலமாக இலங்கையில் எவ்வாறான தடையை ஏற்படுத்தும் விடயங்கள் இடம் பெற்றுக் கொண்டு வருகின்றன என்பதையும் மோசமான நிலைமை சில விடயங்களில் ஏற்படும் என்பதையும் எனது அறிக்கை எடுத்துக் காட்டியிருக்கிறது. சிவில் சமூகம் மற்றும் சுதந்திர ஊடகத்துக்கான இடைவெளி தற்போது பாரிய நெருக்கடியை சந்தித்திருக்கிறது.

சுயாதீன நீதித்துறை மனித உரிமை ஆணைக்குழு மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழு உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் 20ஆவது திருத்தச் சட்டம் காரணமாக வலுவிழந்திருக்கின்றன. சிவில் செயற்பாடுகளில் இராணுவத்தினரின் பங்களிப்பு அதிகரித்திருக்கிறது. தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பல்வேறு அநீதிகளை சந்தித்து வருகின்றனர். அவர்கள் பல்வேறு விடயங்களில் புறக்கணிக்கப்படுகின்றனர்.

கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களை கட்டாயமாக எரிக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் தீர்மானத்தினால் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமூகம் பாரிய வலியை சுமந்து கொண்டிருக்கின்றது அதுமட்டுமன்றி கடந்த காலங்களில் இடம்பெற்றதை போன்ற மீறல்கள் மீண்டும் இடம்பெறுவதற்கான சமிக்ஞைகள் தெரிய ஆரம்பித்திருக்கின்றன.

இலங்கையின் அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட அனைத்து ஆணைக்குழுக்களும் நம்பகரமான முறையில் உண்மையை கண்டுபிடிப்பதற்கும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கும் தவறியிருக்கின்றன. அதுமட்டுமன்றி முக்கியமான சில மனித உரிமை மீறல் தொடர்பான சம்பவங்களில் விசாரணைகளில் அரசாங்கம் தடைகளை ஏற்படுத்தி இருக்கின்றது.

அண்மையில் இலங்கை அரசாங்கம் ஒரு ஆணைக்குழுவை நியமித்திருக்கிறது. அந்த ஆணைக்குழுவும் கடந்த காலங்களில் ஏனைய ஆணைக்குழுக்களை போன்று அர்த்தமுள்ள விளைவுகளை ஏற்படுத்தாத ஒரு பழைய கதைதையே மீண்டும் கொண்டு வருவதாக இருக்கும்.

அரசாங்கம் இவ்வாறு தொடர்ச்சியாக கடந்த கால மீறல்கள் தொடர்பாக ஆராய்வதில் தோல்வி கண்டு வருவதன் ஊடாகவும் 30 -1 என்ற தீர்மானத்திலிருந்து இலங்கை விலகியதன் மூலமும் நேர்மையான முறையில் முன்னேற்றத்தை காண்பதற்கான கதவை அரசாங்கம் முழுமையாக மூடிவிட்டுள்ளது என்பதை நாங்கள் இங்கு சுட்டிக் காட்டுகிறோம்.

இதனால் இலங்கையில் பொறுப்புக்கூறலை ஏற்படுத்துவதற்கான சர்வதேச மாற்று வழிமுறைகளை ஆராய வேண்டும் என்று நான் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகளிடம் கோரிக்கை விடுக்கின்றேன். இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் , நல்லிணக்கம் தொடர்பான செயற்பாடுகளை தொடர்ந்து கண்காணிப்பதற்கு எனது அலுவலகம் எப்போதும் தயாராகவே இருக்கின்றது

Posted in Uncategorized

கண்டி எசல பெரஹெராவில் தாக்குதல் மேற்கொள்வதே சஹ்ரானின் முதல் இலக்கு! – ஆணைக்குழு அறிக்கை

கண்டி எசல பெரஹெராவில் தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொள்வதே ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஷிமின் பிரதான திட்டமாக இருந்ததாக ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை நேற்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

குறித்த அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின்னர், மிகப் பெரிய அளவிலான வெடிபொருள் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16ஆம் திகதி புத்தளம் – வண்ணாத்தவில்லு பகுதியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் 2019 ஏப்ரல் 4ஆம் திகதி சஹ்ரான் மற்றும் ஏனைய உறுப்பினர்களின் பெயர்கள் உள்ளிட்ட தாக்குதல் பற்றிய தகவல்களை இந்திய அதிகாரிகள் புலனாய்வு சேவைகளுக்கு வழங்கியிருந்தாலும் பாதுகாப்பு செயலாளர், தேசிய புலனாய்வுத் தலைவர், பொலிஸ்மா அதிபர், புலனாய்வு பணிப்பாளரும் தங்கள் கடமைகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

எனினும் இந்த தாக்குதலை தடுக்க சட்ட அமுலாக்க அதிகாரிகள் தவறிவிட்டனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், ஏப்ரல் 20ஆம் திகதி சஹ்ரான் மற்றும் ஏழு தற்கொலை குண்டுதாரிகள் ஈஸ்டர் தாக்குதலை நியாயப்படுத்தும் உறுதிமொழியை எடுத்துள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மாவனெல்லயில் புத்தர் சிலைகளை இடித்த சம்பவத்தின் முக்கிய சந்தேகநபர்களான ஷாஹீத் மற்றும் சாதிக் ஆகியோர், க.பொ.த. சாதாரண தர தேர்வுக்கு தோற்றவிருந்த 30 மாணவர்களுக்கு பயிற்சி முகாம் ஒன்றை நடத்தியதாக ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை உத்தியோகபூர்வமாக நிராகரித்தது இலங்கை

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சேல் பெச்சலட் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் வௌியிட்டுள்ள அறிக்கையை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது.

இலங்கையர்களை இலக்கு வைத்து தடை விதித்தல், பயணத் தடைகளை விதித்தலால் இறையாண்மை உள்ள நாட்டின் உரிமைகள் மீறப்படுவதாக தெரிவித்து இலங்கை எழுத்து மூலம் பதில் வழங்கியுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் இடம்பெற்று வருகிறது.

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளதுடன், இலங்கை நேரப்படி இன்றிரவு நடைபெறும் அமர்வில் அந்த அறிக்கை குறித்து அவர் உரையாற்றவுள்ளார்.

நாட்டில் மனித உரிமைகள் மீறப்பட்டமை, முறையற்ற செயற்பாடுகள் தொடர்பில் நம்பகத்தன்மையுடன் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களுக்கு தடை விதிக்குமாறு தனது அறிக்கையினூடாக உறுப்பு நாடுகளிடம் ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளவர்களின் சொத்துக்களை முடக்குவதற்கும் பயணத் தடை விதிப்பதற்கும் அவர் தனது அறிக்கையில் யோசனை முன்வைத்துள்ளார்.

உரிய நீதிமன்றத்தினால் அல்லது வேறு பொறிமுறையினூடாக உறுதிப்படுத்தப்பட்ட நம்பத்தகுந்த ஆதாரங்கள் இன்றி சிலரை இலக்கு வைத்து தடை விதிப்பதற்கும், பயணத் தடை விதிப்பதற்கும் யோசனை முன்வைத்துள்ளமை இறைமையுள்ள நாடொன்றுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அரசியல் நிகழ்ச்சி நிரல் என இலங்கை அரசாங்கம் அனுப்பிய பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது நாட்டின் உரிமையை மீறும் செயல் என்பதுடன், இறையாண்மைக்கான அடிப்படை விடயங்களை மீறும் செயற்பாடு எனவும் இலங்கை அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

இலங்கையின் அமைதி காக்கும் படையின் செயற்பாடுகளை மீண்டும் மீளாய்வு செய்ய வேண்டும் என மனித உரிமை ஆணையாளர் முன்வைக்கும் யோசனையை நிராகரித்துள்ள இலங்கை அரசாங்கம், தொழில் ரீதியாக செயற்படும் இறைமையுள்ள ஒரு நாட்டின் இராணுவம் மீது சுமத்தப்படும் அழுத்தம், ஐக்கிய நாடுகளின் கொள்கைகளை மீறுவதாகவும் அறிவித்துள்ளது.

20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தினூடாக நீதிமன்றத்தின் கட்டுப்பாடு மற்றும் சமநிலைக்கு அழுத்தம் ஏற்படுவதாக மிச்சேல் பெச்சலட் தனது அறிக்கையில் சுமத்தும் குற்றச்சாட்டையும் இலங்கை அரசாங்கம் முழுமையாக நிராகரித்துள்ளது.

வேறு நாடுகளின் அழுத்தம் காரணமாக இலங்கை போன்ற ஒரு தனி நாட்டை, எவ்வித சாட்சியங்களும் இன்றி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கு மேற்கொள்ளும் முயற்சி மிகவும் அபாயகரமானது என்பதால் இது குறித்து ஏனைய நாடுகளும் கவனம் செலுத்த வேண்டும் என இலங்கை சுட்டிக்காட்டியுள்ளது.

பொறுப்புவாய்ந்த ஒரு உறுப்பு நாடு என்ற வகையில் இலங்கை திறந்த மற்றும் செயற்றிறன்மிகு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்படுவதற்கு அர்ப்பணிப்பு செய்வதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எனினும், இம்முறை மனித உரிமைகள் கூட்டத்தொடரின் போது இலங்கை தொடர்பில் ஒருங்கிணைந்த குழு தீர்மானம் ஒன்றை முன்வைக்கவுள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளது.

பிரித்தானியா, கனடா, ஜேர்மன், வடக்கு மெசடோனியா, மொன்டிநீக்ரோ மற்றும் மலாவி ஆகிய நாடுகள் இந்த ஒன்றிணைந்த குழுவில் அடங்குகின்றன.

இலங்கையில் வன்முறைகள் இடம்பெறுவதாகவும் மனித உரிமைகள் மீறப்படும் நிலைமை காணப்படுவதாகவும் அவர்கள் தயாரித்துள்ள தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மை , மனித உரிமை பாதுகாப்பு மற்றும் அதனை ஊக்குவிக்கும் நிறுவனங்கள் செயலிழந்துள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

COVID தொற்றினால் மரணிப்பவர்களின் உடல்களை கட்டாயத் தகனம் செய்ய வேண்டும் என இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் தொடர்பிலும் ஒருங்கிணைந்த குழு அதிகக் கவனம் செலுத்தியுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 49 மற்றும் 51 ஆவது கூட்டத் தொடர்களின் போது, இலங்கை மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் மீளாய்வு செய்ய வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒன்றிணைந்த குழுவின் இந்த பிரேரணை குறித்து கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், இறுதி தீர்மானம் தயாரிக்கும் போது அதில் திருத்தங்களும் மேற்கொள்ளப்படலாம் என தெரியவந்துள்ளது.

இதேவேளை, மனித உரிமைகள் பேரவை அரசியல் கட்சி சார்பான ஓர் நிறுவனம் என குற்றம் சுமத்தி, ட்ரம்ப் நிர்வாகக் காலத்தில், 2016 ஆம் ஆண்டு பேரவையிலிருந்து அமெரிக்கா விலகியது.

எனினும், அதில் செயற்றிறன் மிகு மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற முனைப்பில், ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்புரிமையை பெறும் எதிர்பார்ப்பில் உள்ளது.

தமது வௌிநாட்டுக் கொள்கை , மனித உரிமை மற்றும் ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டது என அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிலிங்கன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் COVID தொற்றினால் மரணிப்பவர்களின் உடல்களை கட்டாயத் தகனம் செய்ய வேண்டும் எனும் கொள்கைக்கு, OIC எனப்படும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு மனித உரிமைகள் பேரவையில் கடும் கண்டனத்தை வௌியிட்டுள்ளது.

சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், குவைத், பாகிஸ்தான், மாலைத்தீவு, மலேசியா, துருக்கி மற்றும் எகிப்து உள்ளிட்ட 57 நாடுகள் இந்த அமைப்பில் அங்கத்துவம் பெற்றுள்ளன.

இந்த பின்புலத்திலேயே மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பெச்சலட் தமது அறிக்கை தொடர்பில் இன்று உரையாற்றிய பின்னர், பேரவையின் உறுப்பு நாடுகள் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான அறிக்கை குறித்து கருத்துக்களை வௌியிட உள்ளன.

முஸ்லிம் சமூகத்தினரின் உரிமைகளுக்கு இலங்கை மதிப்பளிக்க வேண்டியது அவசியம்: ஜெனிவாவில் வலியுறுத்தல்

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கான முஸ்லிம் சமூகத்தினரின் உரிமைக்கு இலங்கை அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டியது அவசியமாகும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில், நேற்று செவ்வாய்கிழமை அமர்வில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளர் நாயகம் யூசுப் அல் ஒதைமீன் உரையாற்றினார்.

அதன்போது இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பில் அங்கம் வகிக்காத நாடுகளில் முஸ்லிம் சமூகத்தின் நிலை எவ்வாறானதாக இருக்கின்றது என்பது குறித்து தமது அமைப்பு கண்காணிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டல்களின் பிரகாரம் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், இலங்கைவாழ் முஸ்லிம் சமூகத்தினருக்கு அந்த உரிமை மறுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அவதானம் செலுத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சடலங்களை அடக்கம் செய்வதற்கான முஸ்லிம் சமூகத்தினரின் உரிமைக்கு மதிப்பளித்து, அதனை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் யூசுப் அல் ஒதைமீன் வலியுறுத்தியுள்ளார்.

மத ரீதியான சுதந்திரம் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், மதரீதியான அடக்குமுறைகள், பின்தள்ளுதல், சகிப்புத்தன்மை இன்மை ஆகியவற்றுக்கு எதிராக சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்தார். மதத்தை அடிப்படையாகக்கொண்டு ஒரு நபரின் மீதோ அல்லது ஒரு சமூகத்தின் மீதோ வன்முறைகள் பிரயோகிக்கப்படுவதற்கு எதிராக முன்னெடுக்கப்பட வேண்டிய போராட்டம் தொடர்பிலும் இதன்போது அவர் கருத்து வெளியிட்டார்.

அதேவேளை அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதம் போன்றவற்றை ஒழித்து அமைதியையும் பாதுகாப்பையும் நிலைநாட்டுவதற்கு பிராந்திய மற்றும் சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

இலங்கை பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய வேண்டும் – ஜெனீவாவில் கனடா வலியுறுத்து

இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமை நிலைமை குறித்து கனடா கவலையடைவதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் மார்க் கார்னியோ தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 46 வது அமர்வில் இன்று (புதன்கிழமை) உரையாற்றியபோதே அவர் இலங்கை குறித்து மேற்கண்டவாறு கூறினார்.

மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் மீதான அச்சுறுத்தல்கள், நினைவுகூரும் உரிமையை மறுத்தல் மற்றும் சிறுபான்மையினரின் உடல்கள் பலவந்தமாகத் தகனம் செய்யப்படுவது குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு இலங்கையில் நடந்த குற்றங்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய மனித உரிமைகள் பேரவையின் அவசியத்தை, மனித உரிமைகள் ஆணையாளர் அண்மையில் வெளியிட்ட அறிக்கை எடுத்துக்காட்டுகிறது என்றும் குறிப்பிட்டார்.

அத்தோடு பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் அமைதியை நிலைநாட்டும் நடவடிக்கைக்குக் கனடா தொடர்ந்து ஆதரவளிக்கும் என கனேடிய வெளிவிவகார அமைச்சர் மார்க் கார்னியோ தெரிவித்தார்.