இலங்கையில் சிறுபான்மையினர் ஓரங்கட்டப்படுகிறார்கள் ஜெனீவா அமர்வில் நோர்வே

ஐ.நாவுக்கான நோர்வேயின் நிரந்தர பிரதிநிதி, தூதர் டைன் மார்ச் ஸ்மித், ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகருடன் முழுமையாக ஒத்துழைக்கவும், மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் (OHCHR) அறிக்கையின் பரிந்துரைகளை அமல்படுத்தவும் இலங்கையை இன்று வலியுறுத்தியுள்ளார்.

46 வது அமர்வு மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான உயர் ஸ்தானிகர் அறிக்கை குறித்து உரை நிகழ்த்திய அவர், இலங்கை தொடர்பான மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அறிக்கையை நோர்வே வரவேற்பதாகவும், எழுப்பப்பட்ட கவலைகளைப் பகிர்ந்து கொள்வதாகவும் கூறினார்.
“2015 முதல், இலங்கை ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துவதில் முக்கியமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது, ஆனால் சமீபத்திய எதிர்மறை முன்னேற்றங்கள் அடைந்த லாபங்களைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும். இடைக்கால நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தில் முன்னேற்றம் குறைவு
“நாட்டின் சிறுபான்மையினர் ஓரங்கட்டப்படுகிறார்கள். நிலையான மனித அபிவிருத்தி என்பது மனித உரிமைகளின் அடிப்படையில் மற்றும் ஒரு உள்ளடக்கிய செயல்முறையின் மூலம் மட்டுமே அடையப்படும்.

“இலங்கையின் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டக் கடமைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்கும், மனித உரிமை பாதுகாவலர்கள், ஊடகவியலாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மீதான அனைத்து வகையான கண்காணிப்பு மற்றும் துன்புறுத்தல்களையும் முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென இலங்கையை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என்று அவர் தெரிவித்தார்.

அரச வெசாக் விழாவை யாழ்ப்பாணம் – நாகதீப ரஜ மகா விகாரையில் நடத்துமாறு பிரதமர் ஆலோசனை

அரச வெசாக் விழாவை யாழ்ப்பாணம் – நாகதீப ரஜ மகா விகாரையில் நடத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார்.

இம்முறை அரச வெசாக் விழாவை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை அடிப்படையாகக் கொண்டு நாகதீப ரஜ மகா விகாரையை மையமாகக் கொண்டு நடத்த புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஸ அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக பிரதமர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய வடக்கு, கிழக்கு மாகாணங்களின் 65 விகாரைகள் மற்றும் 35 அறநெறி பாடசாலைகளை ஒன்றிணைத்து இம்முறை அரச வெசாக் விழாவை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தனவிற்கு பிரதமரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய வெசாக் விழாவிலிருந்து மாறுபட்டதாக, பிற மதங்களுடன் இணைந்து அரச வெசாக் விழாவை ஏற்பாடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளமை இம்முறை அரச வெசாக் விழாவின் விசேட அம்சமாகும்.

இதற்கான செயற்பாட்டை புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழுள்ள இந்து, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் விவகார திணைக்களங்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்குமென பிரதமரின் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமலை கோணேஸ்வரர் ஆலயத்தில் 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் கல்வெட்டு கண்டுபிடிப்பு

திருகோணமலை கோணேஸ்வர ஆலயத்திற்கு அருகில் உள்ள இராவணன் கல்வெட்டுக்கருகில் பழமைவாய்ந்த தமிழ் கல்வெட்டு ஒன்று கடந்தவாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை யாழ் பல்ககலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை பேராசியர் ப.புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார்.

இக் கல்வெட்டு இற்றைக்கு 800 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனவும் பெரும்பாலும் கோணேஸ்வரர் ஆலயத்திற்கு நெல் அரிசி என்பன தானமாக வழங்கப்பட்டதனை கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Posted in Uncategorized

இலங்கை எதிர்த்தாலும் பரிந்துரைகள் அமுலாகும்- ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அறிவிப்பு

மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு இலங்கை எதிர்ப்புத் தெரிவித்தாலும், அதனை அமுலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பிரதி ஆணையாளர் நடா அல் நசிஃப் (Nada Al-nashif ) இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் குறிப்பிடுகையில், “மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பச்லெட் ஏற்கனவே வெளியிட்டிருந்த அறிக்கை, இலங்கை அரசாங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் பின்னர் சீராக்கப்பட்டு நேற்று முன்வைக்கப்பட்டது.

இலங்கை அரசாங்கம் சில விடயங்களுக்கு எதிர்ப்பைத் தெரிவித்திருந்தமையால், இந்த அறிக்கையை இறுதிப்படுத்த மூன்று வாரங்கள் காலதாமதம் ஏற்பட்டது.

இந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள சில பொறிமுறைகளின் பல விடயங்களை அமுலாக்குவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே, சிரியா, மியான்மார் மற்றும் வடகொரியா போன்ற நாடுகளில் அமுலாக்கப்பட்டுள்ளதைப் போன்றோ அல்லது இலங்கை விடயத்தை பிரத்தியேகமான முறையிலோ கையாள்வது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விடயத்துக்கான பொருத்தமான நடைமுறை எதுவென்பதை மனித உரிமைகள் பேரவையே தீர்மானிக்கும்.

அத்துடன், இலங்கை விடயத்தில் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தால் பல ஆண்டுகளாகச் சேகரிக்கப்பட்ட சான்றுகள் உள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசிய கட்சிகளை ஒன்றினைப்பது தொடர்பில் ஆராய்வு

தமிழ் தேசிய கட்சிகளின் அரசிய தலைவர்களை சர்வ மதத்தலைவர்கள் அழைத்து இன்று வவுனியாவில் சந்தித்தனர்.

குறித்த சந்திப்பின் போது தமிழ்த் தேசிய பரப்பில் பயணித்து கொண்டிருக்கும் அனைத்து கட்சிகளையும் எவ்வாறு ஒன்றிணைப்பது தொடர்பிலும் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ஜெனீவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமர்வில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானங்களை நிறைவேற்ற தமிழர் தரப்பு கையாள வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

இச்சந்திப்பில் நல்லை ஆதின குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ திருஞானசம்பந்த பரமச்சாரிய சுவாமிகள், வேலன் சுவாமிகள், தென்கயிலை ஆதினத்தின் சுவாமிகள், வவுனியா, மன்னார் மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் அதிவணக்கத்துக்குரிய ஆயர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

அரசியல் கட்சிகள் சார்பில் தமிழரசுக் கட்சியின் சார்பில் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், சுமந்திரன், கலையரசன்,ரெலோ சார்பில் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தன் கருணாகரன், வினோநோதரலிங்கம் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன்,சிவசக்தி ஆனந்தன்,சிவாஜிலிங்கம் ஜனநாயக போராளிகள் கட்சியின் க.துளசி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Posted in Uncategorized

பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான தந்திரோபாயமொன்றை சிறிலங்கா முன்வைக்கவேண்டும் ஜெனிவாவில் அமெரிக்கா

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான தந்திரோபாயத்தினை இலங்கை முன்வைக்கவேண்டும் என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜெனீவாவிற்கான அமெரிக்க தூதரகத்தின் டானியல் குரென்பீல்ட் இதனை தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான தந்திரோபாயத்தினை இலங்கை முன்வைக்கவேண்டும் அதற்கான கால அட்டவனையொன்றை முன்வைக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 46வது அமர்வில் ஐநா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மீதான கலந்துரையாடலின் போது அவர் இதi தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சிறுபான்மை சமூகத்தவர்கள் ஓரங்கட்டப்படுவது அதிகளவிற்கு இடம்பெறுவது குறித்தும் சிவில்சமூகம் செயற்படுவதற்கான தளம் குறைவடைவது குறித்தும் அமெரிக்கா ஜெனீவாவில் கவலை வெளியிட்டுள்ளது.

பொறுப்புக்கூறல் இன்மை மோதல்கால துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டனர் என நம்பகதன்மை மிக்க விதத்தில் குற்றம்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகள் உயர் பதவிகளிற்கு நியமிக்கப்படுவது குறித்தும் அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதி நியமித்துள்ள புதிய ஆணைக்கு பொறுப்புக்கூறல் தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஆணையை கொண்டிராததை நாங்கள் அவதானித்துள்ளோம்,என தெரிவித்துள்ள அமெரிக்காகாணாமல் போனவர்கள் குறித்த அலுவலகமும் இழப்பீட்டிற்கான அலுவலகமும் அரசியல் தலையீடுகள் இன்றி செயற்படவேண்டும் என தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

ஜெனீவா அமர்வில் பங்கேற்போரிடம் விசாரணை நடத்தும் இலங்கை போலீஸ்

இலங்கையில் யுத்தம் நடந்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடி, அவர்களின் உறவினர்கள் முன்னெடுத்து வரும் போராட்டத்தில் பங்கெடுப்போரிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவது தெரிய வந்துள்ளது.

குறிப்பாக 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக வடக்கு, கிழக்கு பகுதிகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சூழற்சி முறையிலான இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த போராட்டம் தொடங்கப்பட்டு, இன்றுடன் 1,468 நாட்கள் கடந்துள்ளது. இவ்வாறான நிலையில், ஜெனீவாவில் மனித உரிமை பேரவையின் இந்த ஆண்டுக்கான கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காணப்படும் நிலையிலேயே, ஜெனீவா அமர்வு நடத்தப்பட்டு வருகிறது.

முந்தைய ஆண்டுகளைப் போலவே இம்முறையும் இலங்கை யுத்த விவகாரம், ஜெனீவா அமர்வில் முக்கிய விவாதமாகியிருக்கிறது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, இந்த அமர்வில் பங்கேற்பதற்காக இலங்கை மத்திய அரசாங்க தரப்போ தமிழர் தரப்போ இம்முறை செல்லவில்லை. எனினும், காணொளி காட்சி வழியாக ஜெனீவா அமர்வுகளில் இந்த இரண்டு தரப்பினரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், ஜெனீவா மனித உரிமை பேரவை கூட்டத் தொடரில் தமது குரலை மௌனிக்க செய்வதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேசி ஆனந்த நடராஜா தெரிவித்தார்.

இதன் ஒரு கட்டமாக தான் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் புதன்கிழமை (பிப்ரவரி 24) முதல் முறையாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

கிளிநொச்சி பயங்கரவாதத் தடுப்பு பிரிவின் அலுவலகத்தில் வைத்து, கொழும்பு பயங்கரவாதத் தடுப்பு பிரிவு அலுவலக அதிகாரிகளால் தான் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

தனது வங்கிக் கணக்கு விவரங்கள், போராட்டங்கள் நடத்தப்படுவதற்கான காரணங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றீர்களா என்ற கோணத்திலும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தன்னிடம் விசாரணை நடத்தியதாக அவர் கூறினார்.

தன்னைப்பற்றிய அனைத்து தகவல்களையும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் வைத்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். வெளிநாடுகளில் இருந்து தனது வங்கிக் கணக்குக்கு வரும் பணம் தொடர்பிலும் தன்னிடம் விசாரணை நடத்தப்பட்டதாக கூறிய அவர், அந்த பணம், பிரித்தானியாவிலுள்ள தனது மகனால் அனுப்பப்படும் பணம் என தான் பதிலளித்ததாகவும் லீலாதேசி ஆனந்த நடராஜா தெரிவித்தார்.

போராட்டம் நடத்துவதற்கு வெளிநாடுகளிலிருந்து பணம் கிடைக்கிறதா என பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் வினவியதற்கு, தான் “இல்லை” என பதிலளித்ததாகவும் அவர் கூறினார்.

இலங்கை ராணுவத்திற்கு எதிராக முறைப்பாடுகளை செய்தீர்களா என தன்னிடம் ஒரு அதிகாரி விசாரணை செய்ததாக அவர் குறிப்பிட்டார்.

தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ராணுவத்திற்கு எதிராக முறைப்பாடு செய்யவில்லை எனவும், அரசாங்கத்தின் மீதே தாம் கோபம் கொண்டுள்ளதாகவும் லீலாதேசி ஆனந்த நடராஜா தெரிவித்தார்.

இதேவேளை, 2010ஆம் ஆண்டில் ஜெனீவா அமர்வுகளில் கலந்து கொண்டீர்களா என பயங்கரவாத தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் தன்னிடம் கேட்டதற்கு, 2010ஆம் ஆண்டில் நடந்த ஜெனீவா அமர்வுகளுக்கு செல்லவில்லை எனவும், 2018ம் ஆண்டு ஜெனீவா அமர்வுகளிலேயே தான் முதல் முறையாக கலந்து கொண்டதாகவும் அதிகாரிகளிடம் தெரிவித்ததாக லீலாதேசி ஆனந்த நடராஜா கூறினார்.

ஜெனீவா அமர்வில் முன்வைக்கப்படும் விஷயங்கள் குறித்தும் அவரிடம் அதிகாரிகள் கேட்டுள்ளதாக தெரிகிறது. காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை கண்டுபிடித்து தருவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுக்கவே இதுபோன்ற போராட்டங்களை தமது சங்கத்தில் உள்ளவர்கள் மேற்கொள்வதாக லீலாதேசி கூறினார்.

தற்போது நடைபெற்று வரும் ஜெனீவா அமர்வுகளில் தான் கலந்து கொள்ளாதிருப்பதற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகவே அதிகாரிகளின் விசாரணையை நடவடிக்கையை கருதுவதாக லீலாதேசி ஆனந்த நடராஜா மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

இலங்கையுடன் உறுதியாக இருப்போம்! சீனா பகிரங்கத் தகவல்

ஸ்ரீலங்காவுடன் தொற்றுநோய்க்கு எதிரான ஒத்துழைப்பை அதிகரிக்கவும், தொடர்ந்து நாட்டிற்கு தடுப்பூசி உதவிகளை வழங்குவதோடு,

இலங்கைக்கு தொற்றுநோயை முன்கூட்டியே தோற்கடிக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவும் சீனா தயாராகவுள்ளதாக என சீன மாநில கவுன்சிலரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்காவின் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன உடனான தொலைபேசி உரையாடலின் போதே இதனை அவர் உறுதிபடுத்தியுள்ளதுடன்,

இரு நாடுகளும் நேர்மையான பரஸ்பர உதவி மற்றும் நீடித்த நட்பின் மூலோபாய கூட்டுறவு பங்காளிகள் என்று வாங் யி கூறியுள்ளதாக சீனாவின் செய்திச் சேவை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டில், இரு நாடுகளும் தொற்றுநோய்க்கு எதிராகப் போராட கைகோர்த்து ஒருவருக்கொருவர் ஆதரவளித்தன, மேலும் அவர்களின் இருதரப்பு உறவுகள் ஒரு வலுவான வளர்ச்சி வேகத்தைத் தக்க வைத்துக் கொண்டதாகவும் இதன்போது சீன வெளியுறவு அமைச்சர் கூறினார்.

அத்துடன் பட்டுப் பாதை முன்முயற்சியின் கட்டமைப்பிற்குள் ஒத்துழைப்பில் உறுதியான முன்னேற்றம் காண வாங் யி இரு தரப்பினருக்கும் அழைப்பு விடுத்தார்.

இதேவேளை ஸ்ரீலங்கா வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன, ஸ்ரீலங்கா சீனாவை அதன் நெருங்கிய நண்பராக கருதுவதாகவும், ஸ்ரீலங்காவின் பொருளாதார வளர்ச்சிக்கு, மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும்,

உள் மற்றும் வெளிப்புற சவால்களை சமாளிப்பதற்கும் சீனா தனது நீண்டகால, தன்னலமற்ற உதவிக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தார்.

அண்மைய ஆண்டுகளில், அமெரிக்கா உட்பட சில மேற்கத்திய நாடுகள் மீண்டும் ஸ்ரீலங்காவின் மனித உரிமை பிரச்சினைகளை சுரண்டியுள்ளதாகவும்,

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் ஸ்ரீலங்கா உள்ளிட்ட வளரும் நாடுகளை ஆதாரமற்ற முறையில் குற்றம் சாட்டியுள்ளதாகவும் குணவர்தன கூறினார்.

இதற்கு பதிலளித்த சீன வெளியுறவு அமைச்சர், சீனா தொடர்ந்து நீதியை நிலைநிறுத்தி வளரும் நாடுகளுடன் நிற்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலின் போது கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி திட்டம், ஹம்பாந்தோட்டை துறைமுக விடயங்கள் உள்ளிட்டவை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

Posted in Uncategorized

13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு ஜெனிவாவில் இந்தியா

இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் மத்திப்பீட்டு அறிக்கை மிகவும் கவலையளிக்கிறது. அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு உட்பட தமிழ் சமூகத்தின் உரிமைகளுக்கு மதிப்பளிப்பது இலங்கையின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் நேரடியாக பங்களிப்பு செய்யும் என ஜெனிவாவிற்கான இந்தியாவின் நிரந்தர வதிவிட பிரதிநிதி இந்திரா மணி பாண்டே தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

இலங்கை தொடர்பான உயர் ஸ்தானிகர் அறிக்கை மற்றும் அவரது உரையின் போது தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது.

இலங்கையின் மூன்று தசாப்தகால மோதல்கள் 2009 ஆம் ஆண்டு மே மாதம் நிறைவடைந்த பின்னர் மனித உரிமைகள் தொடர்பான 7 தீர்மானங்களை இந்த பேரவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தீர்மானங்கள் தொடர்பான கலந்துரையாடல்களில் இந்தியா தீவிரமாக பங்கேற்று வருகிறது.

அதே போன்று இலங்கையுடன் அதன் நெருங்கிய நட்பு நாடென்ற வகையிலும் அயலான் என்ற நோக்குடனும் இந்தியா தொடர்ந்தும் உறுதிப்பாடுடன் இலங்கை விடயத்தில் முன்னின்று செயற்படுகின்றது.

எவ்வாறாயினும் இலங்கை தொடர்பான இந்தியாவின் தொடர்ச்சியான நிலைப்பாடானது முக்கிய இரு தூண்களில் உள்ளது.

அதாவது இலங்கையின் ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான ஆதரவு மற்றும் சமத்துவம், நீதி, அமைதி, கௌரவத்திற்கான இலங்கைத் தமிழர்களின் அபிலாஷைகளுக்கு உறுதியளித்தல் ஆகிய இரு பிராதன தூண்களை மையப்படுத்தியதாகவே எமது நிலைப்பாடுள்ளது.

இவை தவிர வேறு தேர்வுகள் இல்லை. அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு உட்பட தமிழ் சமூகத்தின் உரிமைகளை மதிப்பது, இலங்கை ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் நேரடியாக பங்களிப்பு செய்யும் என்பதை உறுதியாக நம்புகிறோம் . எனவே, தமிழ் சமூகத்தின் நியாயமான அபிலாஷைகளை நிறைவேற்றுவது இலங்கையின் சிறந்த நலன்களுக்கானது என்பதையே இந்தியா பரிந்துரைக்கிறது.

நல்லிணக்க செயல்முறை மற்றும் இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவது உள்ளிட்ட இத்தகைய அபிலாஷைகளுக்கு தீர்வு காண தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க இலங்கையை கேட்டுக்கொள்கிறோம்.

மோதலின் பின்னரான 12 ஆண்டுகளில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்து உயர் ஸ்தானிகரின் மதிப்பீடு கவலைகயளிக்கிறது.

இது குறித்து இலங்கை அரசு தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. இந்த இரண்டையும் மதிப்பீடு செய்வதிலேயே இந்த பிரச்சினைக்கு நீடித்த மற்றும் பயனுள்ள தீர்வைக் காண முடியும். இதற்கான உறுதிப்பாட்டின் மூலம் நாம் வழிநடத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.

ஏப்ரல் 21 தாக்குதல் அறிக்கையை நிராகரிக்க ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானம்

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை நிராகரிக்க ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக்குழு இன்று ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட அரச அதிகாரிகள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை என ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக்குழுவின் யோசனையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வர்த்தமானி ஊடாக ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட அதிகாரம் சில சந்தர்ப்பங்களில் அத்துமீறி பயன்படுத்தப்பட்டுள்ளதாக சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக்குழு இன்று தீர்மானித்துள்ளது.