Batticaloa Campus உயர் கல்வி நிறுவனம் ஹிஸ்புல்லாவிடம் ஒப்படைப்பு

மட்டக்களப்பு – புனானையில் Batticaloa Campus என்ற பெயரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள உயர் கல்வி நிறுவனம் மீளவும் M.L.A.M.ஹிஸ்புல்லாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த கல்வி நிறுவனம் இன்று தன்னிடம் கையளிக்கப்பட்டதாக M.L.A.M.ஹிஸ்புல்லா குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் M.L.A.M.ஹிஸ்புல்லாவின் கண்காணிப்பின் கீழ் Batticaloa Campus உயர் கல்வி நிறுவனத்தின் நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்நி​லையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் இந்த உயர் கல்வி நிறுவனம் தொடர்பில் சர்ச்சை உருவாகியிருந்தது.

பின்னர் குறித்த கட்டடத்தை அரசு பொறுப்பேற்றது.

இதன் பின்னர், கொரோனா காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் முகாமாக பயன்படுத்தப்பட்டது.

இதனையடுத்து, Batticaloa Campus உயர் கல்வி நிறுவனம் படையினரால் இன்று கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் M.L.A.M.ஹிஸ்புல்லாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தாம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, கல்வி நிறுவனம் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஹிஸ்புல்லா குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

Google, Facebook, YouTube, TikTok நிறுவனங்கள் நாட்டை விட்டுச் செல்லும் அபாயம்

வர்த்தமானியில் வெளியிடப்பட்ட இணைய பாதுகாப்பு சட்டமூலம் சமூக வலைத்தள நிறுவங்களை இலங்கையை விட்டு விரட்டும்

கொடூரமான சட்டம் என ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
நேற்று நாடாளுமன்றில் உரையாற்றிய அவர்,
கூகுள், ஃபேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராம் போன்ற நிறுவனங்கள் இந்த சட்டத்தை வரவேற்காத்து என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே இந்த வர்த்தமானியின் பிரகாரம் எது உண்மை எது உண்மையல்ல என்பதை தீர்மானிக்க ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிக்க வேண்டும் என்றும் ஹர்ஷ டி சில்வா கேட்டுக்கொண்டுள்ளார்.
இணைய பாதுகாப்பு ஆணைக்குழுவை நிறுவுவதை நோக்கமாகக் கொண்ட இந்த சட்டமூலம் ஜனநாயகம் மற்றும் பேச்சு சுதந்திரம் மீதான சாத்தியமான தாக்கம் குறித்தும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
இந்தச் சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டால் முதலீட்டாளர்களை ஒருபோதும் ஈர்க்க முடியாது என்றும் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

பிள்ளையானின் கொலைப்பட்டியல் மிக விரைவில்

பிள்ளையானின் கொலைப் பட்டியல் ஒன்றை ஆதாரங்களுடன் மிக விரைவில் அவரின் கொலைப்பட்டியல் ஒன்றை வெளியிடவுள்ளதாக ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயலாளர் நாயகம் இரா.பிரபா தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதல் என்பது தமது கதிரைகளை தக்கவைப்பதற்காக அப்பாவி மக்களை இலக்குவைத்த தாக்குதல் என்பது சர்வதேசம் மட்டுமல்ல இலங்கையில் உள்ள சாதாரண மக்களுக்கும் தெரியும்.

பிள்ளையான் சிறையில் இருக்கும்போது சஹ்ரானின் சகோதரனை சந்தித்தாகவும் அவர் ஐஎஸ்ஐஎஸ் என்று தனக்கு அன்று தெரியும் என்று கூறியுள்ளார்.

அன்று அவருக்கு இது தெரிந்திருந்தால் ஏன் அவர் அதனை உரிய பாதுகாப்பு தரப்பின் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை.

எனது அம்மாவின் தங்கையின் மகன் கோவிந்தராஜன் என்பரை கடத்திச் சென்று படுகொலை செய்த வரைக்குமான அத்துடன் மாநகரசபை உறுப்பினராக நான் கடமையாற்றிய போது எனது பத்திரிகையாளராக இருந்தவரை கடத்திச் சென்று கொலை செய்தது வரையான பல கொலைகள் அடங்கிய பட்டிலை ஆதாரத்துடன் மிக விரைவில் வெளியிடுவேன்.

இன்று பிள்ளையான் தப்புவதற்காக கொஞ்சம் மக்களை ஏற்றிவந்து உங்களது காரியாலயத்திற்குள் வைத்துக் கொண்டு நீங்கள் சொல்வதை சொல்லிக் கொண்டு மக்களை ஆர்ப்பாட்டம் செய்யவைக்கின்றீர்கள்.

நீங்கள் நல்லவர்கள், குற்றமற்றவர்கள் என்றால் வட கிழக்கில் உள்ள மக்கள் வீதியிலிறங்கி சொல்ல வேண்டும் பிள்ளையான் நல்லவன், உத்தமன் என்று.நீங்கள் பஸ்களில் ஏற்றிவந்தவர்கள் அப்பாவி மக்கள், ஏதாவது கிடைக்கும் என்ற அவாவுடன் வந்தவர்கள்.

இந்த நாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கே பாதுகாப்பு இல்லையென்றால் சாதாரண தமிழ் மகனுக்கு பாதுகாப்பு இல்லையென்பது விளங்குகின்றது.

அதற்காக கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன் சொல்வதை சரியென்று சொல்லவரவில்லை. திலீபன் என்பவர் உலகத்திலேயே ஒரு உன்னதமான தியாகத்தினை செய்த மாமனிதன் தமிழ் மக்களுக்காகவும் இந்த மண்ணுக்காகவும் மரணத்தை எதிர்பார்த்திருந்து மரணித்த ஒரு மனிதன்.அந்த தியாகத்தினை உங்களது அரசியல் இலாபங்களுக்காக கொச்சைப்படுத்துகின்றீர்கள்.

இன்று வீதிவீதியாக அவரை கொண்டுதிரிகின்றீர்கள்.தியாகங்கள் மதிக்கப்படவேண்டும்.உங்கள் அரசியல் இருப்பினை உறுதிப்படுத்துவதற்கு இனதுவேசத்தினை கக்கி மக்களை பிரிவுபடுத்தவர வேண்டாம் என தெரிவித்தார்.

ஈரானிய ஜனாதிபதியுடன் ஜனாதிபதி ரணில் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு சற்று முன்னர் நியூயோர்கிலுள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் இடம்பெற்றது.

இதன்போது இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான சுமூகமான கலந்துரையாடலின் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு விடுத்த அழைப்பையும் கலாநிதி இப்ராஹிம் ரைசி ஏற்றுக்கொண்டார்.

Posted in Uncategorized

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் : அமெரிக்கர்களும் உயிரிழந்திருப்பதால் சர்வதேச விசாரணைக்கான சாத்தியம் குறித்து ஆராய்கிறோம் – அமெரிக்கா

உயிர்த்த ஞாயிறுதினக் குண்டுத்தாக்குதல்களில் அமெரிக்கர்களும் உயிரிழந்திருப்பதனால் இவ்விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றை நடத்துவதற்கான சாத்தியம் குறித்து தாம் ஆராய்வதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உலகளாவிய குற்றவியல் நீதிக்கான தூதுவர் பெத் வான் ஸ்காக் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடருக்கு முன்பதாக உறுப்புநாடுகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்புக்காக ஜெனிவா சென்றிருந்த இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், அதனைத்தொடர்ந்து தற்போது அமெரிக்காவில் முக்கிய உயர்மட்ட சந்திப்புக்களில் ஈடுபட்டுவருகின்றார்.

அதன்படி நேற்று முன்தினம் வியாழக்கிழமை வரை வொஷிங்டனில் தங்கியிருந்த அவர் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க இராஜாங்க உதவிச்செயலர் டொனால்ட் லூ, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உலகளாவிய குற்றவியல் நீதிக்கான தூதுவர் பெத் வான் ஸ்காக், அமெரிக்கத் திறைசேரி அதிகாரிகள், சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் அதிகாரிகள் மற்றும் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடனும் சந்திப்புக்களை நடாத்தியுள்ளார்.

குறிப்பாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உலகளாவிய குற்றவியல் நீதிக்கான தூதுவர் பெத் வான் ஸ்காக் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு இடையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின்போது, அண்மையில் சனல்-4 செய்திச்சேவையினால் இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுதினக் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் வெளியிடப்பட்ட ஆவணப்படம் குறித்து விசேட அவதானம் செலுத்தப்பட்டது.

அந்த ஆவணப்படத்தின் பின்னணி மற்றும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களின் உண்மைத்தன்மை, உயிர்த்த ஞாயிறுதினக் குண்டுத்தாக்குதல்களில் அமெரிக்கர்கள் உள்ளடங்கலாக வெளிநாட்டவர்களும் கொல்லப்பட்டிருப்பதனால் இதனை சர்வதேச குற்றமாகக் கருதி சர்வதேச விசாரணையொன்றை முன்னெடுப்பதற்கான சாத்தியப்பாடு ஆகிய விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

சனல்-4 வெளியிட்டுள்ள ஆவணப்படத்தில் அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ள ஹன்ஸீர் அஸாத் மௌலானா, இதுபற்றி ஐக்கிய நாடுகள் சபையில் ஏற்கனவே சாட்சியமளித்துள்ள நிலையில் அதனைப் பயன்படுத்துவதற்கான சாத்தியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இதுபற்றிக் கருத்துவெளியிட்ட பெத் வான் ஸ்காக், உயிர்த்த ஞாயிறுதினக் குண்டுத்தாக்குதல்களில் அமெரிக்கர்களும் உயிரிழந்திருப்பதனால் இவ்விடயம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றை நடத்துவதற்கான சாத்தியம் உண்டு எனவும், இதுகுறித்து தாம் ஆராய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

உள்நாட்டு பிணையங்கள் Fitch Ratings-ஆல் தரமிறக்கம்

உள்நாட்டு பிணையங்களின் தரப்படுத்தலை Fitch Ratings சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனம் மேலும் தரமிறக்கியுள்ளது.

இதற்கமைய, உள்நாட்டு கடன் மறுசீரமைப்பிற்கமைய புதிய வட்டி வீதத்தின் கீழ் விநியோகிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள பிணையங்களின் தரப்படுத்தல் ‘C’ மட்டத்தில் இருந்து ‘D’ மட்டத்திற்கு தரமிறக்கப்பட்டுள்ளது.

குறித்த உள்நாட்டு கடனானது, வரையறுக்கப்பட்ட செலுத்தப்படாத நிலையிலிருந்து – செலுத்தப்படாத நிலைக்கு கீழிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இதுவரை உள்நாட்டு கடன் மறுசீரமைப்பின் கீழ் விநியோகிப்பதற்கு முன்மொழியப்படாத உள்நாட்டு பிணையங்களின் தரப்படுத்தல் வரையறுக்கப்பட்ட செலுத்தப்படாத நிலை வரை தரமிறக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு 1591 வீடுகள் கையளிக்கப்படவுள்ளன

தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் தமிழர்களுக்காக கட்டப்பட்டுள்ள வீடுகள் நாளை (17) கையளிக்கப்படவுள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் 79.70 கோடி இந்திய ரூபா மதிப்பில் 1591 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

தமிழகத்தின் வேலூரை அண்மித்துள்ள மேல்மொனவூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நடைபெறும் நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பயனாளிகளிடம் வீடுகளை ஒப்படைக்க உள்ளார்.

மேலும், காணொளி வாயிலாக 13 மாவட்டங்களில் உள்ள 19 இலங்கை தமிழர் முகாம்களில் வசிப்போருக்கான வீடுகளை ஒப்படைக்கும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வேலூர் மாவட்டத்தில் மாத்திரம் 11 கோடி இந்திய ரூபா மதிப்பில் 220 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் தமிழர்களுக்காக தமிழ்நாடு அரசு சார்பில் வீடு கட்டும் திட்டத்தை மாநில முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 2021 ஆம் ஆண்டு வேலூரில் தொடங்கி வைத்தார்.

142.16 கோடி இந்திய ரூபா மதிப்பில் 3,510 வீடுகளைக் கட்டும் நடவடிக்கை இதன்போது ஆரம்பிக்கப்பட்டது.

நாளைய நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ரயில் மூலம் இன்று இரவு வேலூர் செல்வதுடன், நாளை இரவு ரயில் மூலம் சென்னை திரும்பவுள்ளதாகவும் தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Posted in Uncategorized

ஐ.நா மனிதவுரிமை அறிக்கையில் இனி மலையகமும் இடம்பெறும்

ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையின் இவ்வருட அறிக்கையில் மலையகம் பற்றி குறிப்பிடாமையை ஒரு குறைபாடே என ஐநாவின் இலங்கை பிரதிநிதி மார்க்-அந்தரே ஏற்றுக்கொண்டதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

இது எதிர்காலத்தில் நிவர்த்தி செய்யப்படும் எனவும், இலங்கை ஐநா நிகழ்ச்சி வலயத்தில் மலையக தமிழர்களின் பிரச்சினைகள், தேசிய நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் ஐநாவின் இலங்கை பிரதிநிதி உறுதியளித்தார்.

தமுகூ தலைவர் மனோ கணேசன், எம்பி வேலு குமார், கேகாலை மாவட்ட அமைப்பாளர் பரணீதரன் மற்றும் ஐநா தரப்பில் இலங்கை ஐநா பிரதிநிதி மார்க்-அந்தரே, சமாதான சாளர ஒருங்கிணைப்பாளர் தாரக ஹெட்டியாராச்சி ஆகியோர் கலந்துக்கொண்ட சந்திப்பு தொடர்பில் கூட்டணியின் மனோகணேசன் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில், தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க அலுவலகம், காணாமல் போனோர் அலுவலகம், உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (Truth and Reconciliation Commission) ஆகியவை இன்னமும் இழுபறியில் இருக்கின்றன.

இரு தரப்பிலும் குற்றங்கள் நிகழ்ந்தன என்பதை ஏற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் பிடிவாதமாக மறுக்கின்றமையே இதற்கு பிரதான காரணம் என நான், முன்னாள் சமீபத்து தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் என்ற முறையில் சொன்னதை ஐநாவின் இலங்கை பிரதிநிதி மார்க்-அந்தரே அங்கீகரித்து ஏற்றுக்கொண்டார்.

பதினைந்து இலட்சம் மலையக தமிழர் மத்தியில் சுமார் ஏழரை இலட்சம் பேர் இன்னும் பெருந்தோட்டங்களில் வாழ்கின்றனர்.

அவர்களில் ஒன்றரை இலட்சம் பேர் தோட்ட தொழிலாளர்கள். இந்த பெருந்தோட்டங்களில் வாழ்கின்ற மக்களே இலங்கை சமூக பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின் தங்கியவர்கள் என்ற தரவுகளுடனான ஆவணத்தை எழுத்து மூலமாக ஐநாவின் இலங்கை பிரதிநிதி மார்க்-அந்தரேக்கு நாம் வழங்கினோம்.

இலங்கை ஐநா நிகழ்ச்சி வலயத்தில் மலையக தமிழர்களின் பிரச்சினைகள், தேசிய நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் ஐநாவின் இலங்கை பிரதிநிதி உறுதியளித்தார் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர்க்கந்தன் இரதோற்சவம் சிறப்புற இடம்பெற்றது

வரலாற்றுச் சிறப்புமிக்க அலங்கார நல்லூர்கந்தனின் வருடாந்த மஹோற்சவத்தின் 24 ஆவது திருவிழாவின் இரதோற்சவம் இன்று (13) பக்திபூர்வமாக இடம்பெற்றன.

21.08.2023 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் மஹோற்சவம் எதிர்வரும் 25 நாட்கள் திருவிழா இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

வரலாற்று பெருமையும் ஆன்மீக சிறப்பும் கொண்ட நல்லையம்பதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் முருகப் பெருமானின் இரதோற்சவம் இன்று(13) நடைபெறுகின்றது.

நல்லூர் கந்தன், தேரேறி திரு வீதி வலம் வரும் அழகு காண்பதற்காய் இலட்சக்கணக்கான பக்தர்கள் திருத்தலத்தில் கூடியுள்ளனர்.

அதிகாலையிலே பூசைகள், அபிஷேகங்கள், வசந்த மண்டப பூசை ஆகியன காலக்கிரமமாக முருகப் பெருமானுக்கு நடைபெற்றன.

ஆலயத்தின் அசையா மணிகள் ஆறும் ஒருங்கே ஒலிக்க முருகப் பெருமன் தேரேறி வீதியுலா வருவதற்கு புறப்பட்டுள்ளார்.

பால் காவடிகள், பறவைக் காவடிகள், கற்பூர சட்டிகள், அங்கப்பிரதட்சணம் மற்றும் சிதறுதேங்காய் உடைத்து அடியார்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.

தமிழர்களின் தனித்துவத்தையும் கலாசாரப் பண்பாட்டு விழுமியங்களையும் உலக மக்களுக்கு உரத்துரைக்கும் ஒரு விழாவாகவே நல்லூர்க் கந்தன் ஆலய திருவிழா நோக்கப்படுகிறது.

அந்த வகையில் நல்லூர் கந்தனின் மகோற்சவ பெருவிழாவின் 24ஆம் திருவிழாவான இன்றைய தினம் தேர்த்திருவிழா இடம்பெறுகிறது.

அர்த்தமுள்ள வகையில் செயல்படுமாறு இலங்கை அரசாங்கத்தை இந்தியா வலியுறுத்தியுள்ளது

தமிழர்கள் உட்பட தனது அனைத்து குடிமக்களின் அடிப்படை சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கான, தனது உறுதிமொழிகளை விரைவில் செயல்படுத்துவதற்கு “அர்த்தமுள்ள வகையில்” செயல்படுமாறு இலங்கை அரசாங்கத்தை இந்தியா வலியுறுத்தியுள்ளது.

“இலங்கையின் நெருங்கிய அண்டை நாடாகவும் நண்பராகவும், 2009ஆம் ஆண்டு முதல் இலங்கையின் நிவாரணம், புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் புனரமைப்புச் செயன்முறைகளுக்கான இலங்கையின் முயற்சிகளுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றது” என ஜெனிவாவில் உள்ள ஐ. நா சபை மற்றும் ஏனைய சர்வதேச அமைப்புகளுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி இந்திராமணி பாண்டே தெரிவித்துள்ளார்.

சமத்துவம், நீதி, கண்ணியம் மற்றும் அமைதிக்கான தமிழர்களின் அபிலாஷைகளை ஆதரிக்கும் இரண்டு அடிப்படைக் கொள்கைகளை இந்தியா ஆதரித்து வருகிறது.

இந்தியா ஊக்குவிக்கும் விடயங்கள்

அத்துடன் இலங்கையின் ஐக்கியம், பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை, இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளையும் இந்தியா ஊக்குவிப்பதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அறிக்கையின் ஊடாடும் உரையாடலின் போது பாண்டே கூறியுள்ளார்.

சமத்துவம், நீதி மற்றும் அமைதிக்கான தமிழர்களின் அபிலாஷைகளையும், 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் மாகாண சபைத் தேர்தலை நடத்தி இலங்கையில் தமிழர்களுக்கு மரியாதை மற்றும் கண்ணியமான வாழ்வை உறுதி செய்வதற்கும் இலங்கை அரசாங்கம் உறுதியளிக்கும் என்று இந்தியா நம்புவதாக பாண்டே குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் உள்ள சிறுபான்மை தமிழ் சமூகம் தமக்கான அதிகாரப் பகிர்வை வழங்கும் 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரி வருகின்றது.

13வது திருத்தம், இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் கொண்டு வரப்பட்டது. இது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தற்காலிக இணைப்புடன் 9 மாகாணங்களை பகிர்ந்தளிக்கப்பட்ட அலகுகளாக உருவாக்கியது.

நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தேர்தல்கள்

இந்தநிலையில் தேர்தல் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையைத் தொடர்ந்து ஒன்பது மாகாணங்களுக்கான தேர்தல்கள் 2018 முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன

தற்போதுள்ள விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் தேர்தலை நடத்துவதற்கு நாடாளுமன்றத் திருத்தம் தேவைப்படுகிறது என்று பாண்டே தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் தனது உறுதிமொழிகளை செயல்படுத்துவது குறித்து இலங்கை அரசாங்கத்தின் மறுஉறுதிப்படுத்தலை கவனத்தில் கொண்டுள்ளது.

இருப்பினும், அதற்கான முன்னேற்றம் போதுமானதாக இல்லை, கடந்த வருடத்தில் இலங்கைக்கும் அதன் மக்களுக்கும் அதன் பொருளாதார சவால்களை சமாளிக்க இந்தியா நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் பலமுனை ஆதரவை வழங்கியுள்ளதாக பாண்டே தெரிவித்துள்ளார்.