போராட்டம் வவுனியாவில் இருந்து புறப்பட்டது!பேராதரவை வழங்கிய தமிழ் முஸ்லீம் மக்கள்!!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை வடக்கு கிழக்கு சிவில் அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் நீதிக்கான கவனயீர்ப்பு பேரணியின் 4 ஆம் நாளான இன்று வவுனியாவில் இருந்து ஆரம்பித்து மன்னாரை நோக்கி பயணித்தது. குறித்த போராட்டத்திற்கு வவுனியாவில் வசிக்கும் தமிழ் முஸ்லீம் மக்கள் தமது முழுமையான ஆதரவை வழங்கியிருந்தனர்.

வடக்கு மற்றும் கிழக்கில் நடைபெறும் பௌத்த மயமாக்கல் நிலங்கள் அபகரிப்பு, கொரோனாவினால் மரணமடையும் முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்வதற்கு எதிர்ப்பு, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், மலையக மக்களின் ஆயிரம் ரூபாய் சம்பளப் பிரச்சினை அடங்கலாக அரச அடக்குமுறைகள் போன்ற விடயங்களை முன்னிறுத்தி அவற்றை கண்டித்தும் நீதி கோரியும் தீர்வு கேட்டும் இந்த போராட்டம் திட்டமிடப்பட்டு நடைபெற்று வருகின்றது

நேற்று காலை திருகோணமலையில் ஆரம்பித்த பேரணி தென்னமரவடி கொக்கிளாய் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்தினை அடைந்திருந்தது. அங்கிருந்து நெடுங்கேணியை அடைந்து புளியங்குளம் ஊடாக வவுனியா மாவட்டத்தை அடைந்திருந்தது.

இந்நிலையில் இன்று காலை வவுனியா புதிய பேருந்து நிலையத்தின் முன்பாக ஆரம்பித்த போராட்டம் மணிக்கூட்டுகோபுர சந்தியை அடைந்து அங்கிருந்து பசார்வீதி வழியாக கொறவப்பொத்தானை வீதியை அடைந்து பண்டாரவன்னியன் சிலையடியில் முற்றுப்பெற்றது.

ஆர்பாட்டத்தில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டிருந்ததுடன், இஸ்லாமிய மக்களும் தமது பேராதவரை வழங்கியிருந்தனர். வவுனியா பெரிய பள்ளிவாசலுக்கு முன்பாக ஒன்றிணைந்திருந்த இஸ்லாமிய மக்கள் மற்றும் அரசியல் வாதிகள் பேரணியுடன் ஒன்றிணைந்து பண்டாரவன்னியன் சிலை வரை இணைந்து சென்றிருந்தனர்.
பின்னர் மதகுருக்களால் பண்டாரவன்னியன் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அத்துடன் போராட்டம் நிறைவிற்கு வந்ததுடன், அங்கிருந்து புறப்பட்டு நெளுக்குளம் சந்தியிலும் பேரணி இடம்பெற்றது அதனையடுத்து மன்னார் நோக்கி குறித்த பேரணி பயணித்தது.

இதேவேளை வவுனியாவில் கடந்த நான்கு வருடங்களாக தொடர் போராட்டம் மேற்கொண்டுவரும் காணாமல் போனோரின் பந்தல் அடிக்கும் குறித்த பேரணி சென்றிருந்தது.

பேரணியில் பாராளுமன்ற உறுப்பினர்களான ரெலோ தலைவர் கெளரவ செல்வம் அடைக்கலநாதன் , ரெலோ வினோநோகராதலிங்கம் ,தமிழ் அரசு கட்சி சி. சிறிதரன்,தமிழ் அரசு கட்சி சாள்ஸ் நிர்மலநாதன், தமிழ் அரசு கட்சி இரா.சாணக்கியன்,தமிழ் தேசிய மக்கள் முன்னணி செ.கயேந்திரன்,தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கயேந்திரகுமார் பொன்னம்பலம்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஈழமக்கள் புரட்சிகர முன்னணி சிவசக்தி ஆனந்தன்,தமிழ் அரசு கட்சி சீனிதம்பி யோகேஸ்வரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான றிப்கான் பதியூதீன்,ரெலோ செ.மயூரன்,தமிழ் அரசு கட்சி ப.சத்தியலிங்கம்,மற்றும் உள்ளூராட்சிமன்றத் தலைவர்கள், உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

சந்தையை திறக்க அனுமதிக்காமையால் வீதியை மறித்து போராட்டம்!

வவுனியா மொத்த மரக்கறி வியாபார சந்தையை பொலிசார் திறக்க விடாமையினால் வீதியை வழிமறித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வாக்குறுதி வழங்கப்பட்டதையடுத்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

கொரோனோ தாக்கம் காரணமாக கொறவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள வவுனியா தினசந்தை கடந்த சிலநாட்களாக மூடப்பட்டிருந்ததுடன், காமினி மகாவித்தியாலயம் மற்றும் கண்டி வீதியில் அமைந்துள்ள பொருளாதார மத்தியநிலையத்தில் தற்காலிகமாக செயற்பட்டு வந்தது.

இதேவேளை சந்தையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களிற்கு பிசிஆர் பரிசோதனைகள் மற்றும் அன்ரியன் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன் அவர்களில் எவருக்கும் தொற்று அடையாளம் காணப்படவில்லை.

இதேவேளை மீண்டும் சந்தையை திறப்பதற்கு சுகாதார பிரிவினர் அனுமதி வழங்கியிருந்ததுடன் நகரசபையின் ஏற்பாட்டில் நேற்றயதினம் தினச்சந்தை தொற்றுநீக்கமும் செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று அதிகாலை சந்தையை திறப்பதற்காக வர்த்தகர்கள் வந்தநிலையில் பொலிசார் அவர்களை சந்தையை திறப்பதற்கு அனுமதி வழங்கவில்லை. இதனால் பொலிசாருக்கும் அவர்களிற்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தது.

நீண்டநேரமாகியும் தீர்வு கிடைக்காமையால் கொறவபொத்தானை பிரதான வீதியை வழிமறித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் குறித்த வீதியுடனான போக்குவரத்து 6 மணி நேரமாக இடைநிறுத்தப்பட்டது.

சம்பவ இடத்திற்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் ரெலோ வினோநோகராதலிங்கம் மற்றும் பிரதிபொலிஸ்மா அதிபர் லால்செனவிரத்தின ஆகியோர் அவர்களுடன் கலந்துரையாடினர். ஏனைய சில ஊழியருக்கும் பிசிஆர் பரிசோதனைகளை விரைவாக செய்துவிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சந்தையை திறப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் வழங்கிய வாக்குறுதிகளிற்கமைய போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் திறக்க விடு திறக்க விடு சந்தையினை திறக்க விடு , வாழ விடு வாழ விடு விவசாயிகளை வாழ விடு , விவசாயத்தினை வைத்து சுயலாபம் காணதே , சந்தையினை மட்டும் திறக்க விடாதது ஏன்? சுகாதார பிரிவினர் பரிசோதனை செய்தும் திறக்க விடாதது ஏன்?போன்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை தாங்கியிருந்தனர்.

போராட்ட இடத்திற்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான் ,ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் , குலசிங்கம் திலீபன்,ரெலோ முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் ஆகியோர் வருகைதந்து போராட்டத்திலிருந்தவர்களுடன் கலந்துரையாடியிருந்தனர்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி வவுனியாவை சென்றடைந்தது

தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை முன்நிறுத்தி முன்னெடுக்கப்படும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி இன்று திருகோணமலையிலிருந்து ஆரம்பமானது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை முன்னெடுக்கப்படும் பேரணியின் இன்றைய பயணம் திருகோணமலை சிவன் ஆலயத்திலிருந்து ஆரம்பமானது.

மடத்தடி சந்தி, மூன்றாம் கட்டை வழியாக அலஸ் தோட்டத்தை பேரணி சென்றடைந்தது.

இதனைத் தொடர்ந்து கொக்கிளாய் – கொஹம்ப சந்தி பகுதியை பேரணி சென்றடைந்த போது, பொலிஸார் தடையுத்தரவை காண்பித்தனர். எனினும், பேரணி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.

பேரணி நீராவிப்பிட்டி ஆலயத்தை சென்றடைந்ததுடன், அங்கு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

முல்லைத்தீவிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை பேரணி சென்றடைந்துள்ளது.

பின்னர், முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனையடுத்து, பேரணி வவுனியாவை சென்றடைந்தது.

இதனிடையே, யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கான மண் இதன்போது மாணவர்களால் எடுக்கப்பட்டது.

இதேவேளை, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி தொடர்பில் விழிப்புணர்வூட்டும் செயற்பாடு இன்று யாழ். தென்மராட்சியில் முன்னெடுக்கப்பட்டது.

சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் பகுதிகளில் பேரணி தொடர்பில் மக்கள் தௌிவுபடுத்தப்பட்டனர்.

Posted in Uncategorized

பொத்துவில் பொலிகண்டி பேரணி முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை அடைந்தது-ரெலோ தலைவர் செல்வம் உயிரிழந்த மக்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் சுடர் ஏற்றப்பட்டது!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மாபெரும் பேரணி முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை அடைந்துள்ளது.

அங்கு இறுதிப் போரில் உயிரிழந்த மக்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

பொத்துவிலில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட தமிழர்களின் உரிமை கோரிய பேரணி, நீதிமன்றத் தடை, பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினரின் பல தடைகளையும் தாண்டி தற்போது முல்லைத்தீவுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் முல்லைத்தீவு நகரத்தில் பயணித்து, மாவட்டச் செயலகம் வரை சென்ற பேரணி, அங்கிருந்து முள்ளிவாய்க்கால் நினைவிடம் வரை வாகனக் பேரணியாகச் சென்றடைந்துள்ளது.

ரெலோ தலைவர் கெளரவ செல்வம் அடைக்கலநாதன் , மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ வினோ நோகராதலிங்கம்,ரெலோ பிரதி தலைவர் பிரசன்னா,ரெலோ தேசிய அமைப்பாளர் சுரேன்,ரெலோ யாழ் பிரதி மேயர் ஈசன், ரெலோ இளைஞர் அணி செயலாளர் சபா குகதாசன்,ரெலோ யாழ் மாவட்ட தலைவரும் வலி கிழக்கு தவிசாளருமான நிரோஜன்,ரெலோ கரைத்துறைபற்று உப தவிசாளர் ஜெனமேயந்தன்,ரெலோ முல்லைத்தீவு மாவட்ட பொறுப்பாளர் புவனேஸ்வரன் அவர்களும் கட்சியின் உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர், பிரதேச சபை உறுப்பினர் மற்றும் ஆதரவாளர்களுடன், போரில் உயிரிழந்தோர் நினைவுகூரப்பட்டு அஞ்சலி நிகழ்வைத் தொடர்ந்து அங்கு மதிய போசனம் இடம்பெறுகிறது.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை – மாபெரும் பேரணி 3 ஆவது நாளாகவும் திருகோணமலையில் இருந்து முன்னெடுப்பு.!

தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு எதிரான அரசின் அடக்கு முறைகளை எதிர்த்தும் கண்டித்தும் வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புகள் ஏற்பாடு செய்த பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி இன்று (05) 03 ஆவது நாளாக திருகோணமலை சிவன் கோவிலடியில் இருந்து காலை 8.30 மணிக்கு ஆரம்பமானது.

காலை 8.00 மணிக்கு கோயிலில் விசேட பூசை இடம் பெற்று இப் பேரணி ஆரம்பிக்கப்பட்டது. நேற்று (04) மட்டக்களப்பில் இருந்து இரண்டாவது நாளாக ஆரம்பமான இந்த பேரணி வெருகல், கிண்ணியா ஊடாக இரவு திருகோணமலையை வந்தடைந்தது.

நில ஆக்கிரமிப்பு, திட்டமிட்ட குடியேற்றம், தொல் பொருள் என்ற போர்வையில் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் பூர்வீகம் அபகரிப்பு, தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், மற்றும் ஜனாஸா எரிப்பு என்பவற்றை கண்டித்தே இந்தக் கண்டனப் பேரணி நடைபெற்று வருகின்றது.

திருகோணமலை பிரதான வீதியின் ஊடாக பேரணி, நடைபவனி நிலாவெளி ஊடாக தென்னமரவாடியை சென்றடைத்து, வடக்கு நோக்கி பயணிக்க இருக்கின்றது.

இந்த மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன், எம்.ஏ.சுமந்திரன், கஜேந்திரகுமார், ஸ்ரீதரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா. அரியநேந்திரன், சி. யோகேஸ்வரன், க.துரைரெட்ணசிங்கம்,ரெலோ நிர்வாக செயலாளர் நித்திய மாஸ்டர்,ரெலோ மாவட்ட பொறுப்பாளர் சார்ள்ஸ்,ரெலோ திருகோணமலை மாவட்ட உறுப்பினர்கள் நகராட்சி, பிரதேசபை உறுப்பினர்கள் மற்றும் சிவில் தலைவர்கள், சமயத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

Posted in Uncategorized

இந்திய மத்திய வங்கியும், இலங்கை மத்திய வங்கியும் செய்து கொண்ட உடன்படிக்கையை முடிவுக்கு கொண்டுவர தீர்மானம்

கொழும்புத் துறைமுகத் திட்டத்தை இலங்கை ரத்து செய்தமைக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையாக 400 மில்லியன் அமெரிக்க டொலரை செலுத்துமாறு இந்தியா கேட்டுக் கொண்டதாக வெளியான இணைய ஊடக அறிக்கைகளுக்கு இந்திய உயர்ஸ்தானிகரகம் பதில் வழங்கியுள்ளது.

இந்திய மத்திய வங்கியும், இலங்கை மத்திய வங்கியும் 2020 ஜூலை 31இல் மூன்று மாத அடிப்படையில் செய்து கொண்ட உடன்படிக்கையின் அடிப்படையில் 400 மில்லியன் டொலர் இலங்கையின் மத்திய வங்கிக்கு வழங்கப்பட்டது.

சர்வதேச நாணயநிதியத்துடன் அலுவலர் மட்ட உடன்படிக்கை தொடர்பில் இலங்கை பேச்சுவார்த்தையை மேற்கொண்ட நிலையில் இந்த மீள்செலுத்துகை காலம் 2021 பெப்ரவரி முதலாம் திகதி நீடிக்கப்பட்டது.

எனினும் சர்வதேச நாணயநிதியத்துடன் இலங்கை மத்திய வங்கி வெற்றிக்கரமான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளாமை காரணமாக 2021 பெப்ரவரி 5ஆம் திகதியன்று உடன்படிக்கையை முடிவுக்கு கொண்டுவர இந்திய மத்திய வங்கி தீர்மானித்ததாக இந்திய உயர்ஸ்தானிகரம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை இந்தியா தனது சர்வதேச மற்றும் இருதரப்பு கடமைகள் அனைத்தையும் உரிய முறையில் பின்பற்றுகிறது என்று இந்திய உயர்ஸ்தானிகரக அதிகாரி ஒருவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தின் அபிவிருத்தி தொடர்பில் 2019ஆம் ஆண்டில் செய்யப்பட்ட உடன்படிக்கையில் இருந்து இலங்கை அரசாங்கம் விலகியதை அடுத்து, இந்தியாவுடனான இருதரப்பு உறவுகளில் சமீபத்தில் ஒரு புதிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் இந்தியா தனது அதிருப்தியை கடந்த செவ்வாயன்று இலங்கை தலைவர்களிடம் முறையாக தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

1000 ரூபா சம்பள அதிகரிப்புக்கு ஆதரவு கோரி போராட்டம் முழு மலையகமும் முடங்கியது

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பள உயர்வை வலியுறுத்தி இன்று மலையகம் தழுவிய அடையாள வேலைநிறுத்தப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படுகிறது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் விடுத்த வேண்டுகோளின் பிரகாரம் மலையகத்தில் உள்ள பிரதான தொழிற்சங்கங்களும் ஏனைய துறையினரும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இன்று (5) காலைமுதல் மலையகப் பகுதிகளில் அனைத்துச் செயற்பாடுகளும் முடங்கியுள்ளன. பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறவில்லை. பஸ் போக்குவரத்தும் மலையக நகரங்களில் முடங்கியுள்ளது.

அனைத்து தோட்டப்பகுதிகளிலும் பணிகள் முற்றாக நிறுத்தப்பப்பட்டுள்ளதுடன், எந்தவொரு தொழிற்சாலையும் இயங்கவில்லை.

எதிர்வரும் 8ஆம் திகதி சம்பள நிர்ணய சபையில் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தைக்கு அழுத்தம் சேர்க்கும் வகையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

Posted in Uncategorized

13வது திருத்தத்தை அமுல்ப்படுத்த இந்தியா மீண்டும் வலியுறுத்தல்!

அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இந்திய துணை உயர் ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப்பிற்கும், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுஃப் ஹக்கீமிற்குமிடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்ற போது, இதனை வலியுறுத்தினார்.

இலங்கைக்கு கோவிட் தடுப்பூசிகளை விரைவாக வழங்குவதற்கான இந்தியாவின் நடவடிக்கை, பொருளாதார, நிதி மற்றும் மேம்பாட்டு ஒத்துழைப்பு வாய்ப்புகள் தொடர்பான விஷயங்களையும் இரு தரப்பினரும் விவாதித்தனர்.

அண்மைய காலங்களில் முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து தனது மதிப்பீட்டை ஹக்கீம் பகிர்ந்து கொண்டதாக உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்த மாத இறுதியில் தொடங்கும் யு.என்.எச்.ஆர்.சி அமர்வு தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டன.

நவம்பர் 2019 முதல் இந்திய மற்றும் இலங்கை தலைமைக்கு இடையிலான உரையாடல்களை துணை உயர் ஸ்தானிகர் ஜேக்கப் நினைவு கூர்ந்தார்.

2020 செப்டம்பரில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலான மெய்நிகர் இருதரப்பு உச்சிமாநாட்டின் போது, ​​அனைத்து இனத்தவர்களின் எதிர்பார்ப்புகளையும் உணர இலங்கை செயல்படும் என்ற நம்பிக்கையை பிந்தையவர் வெளிப்படுத்தியிருந்தார்.

துணை உயர் ஸ்தானிகர் 13 ஆவது திருத்தம் மற்றும் மாகாண சபைகளை முழுமையாக அமல்படுத்துவதன் மூலம் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு குறித்த இந்தியாவின் நீண்டகால மற்றும் கொள்கை ரீதியான நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

Posted in Uncategorized

இலங்கையை குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த உதவுங்கள்: பிரித்தானியாவிடம் கோரிய தமிழ் அமைப்புக்கள்!

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பரிந்துரைத்து, ஒரு சர்வதேச சுயாதீன புலனாய்வு பொறிமுறையை உருவாக்குவதற்கு முன்னின்று செயற்படுமாறு இங்கிலாந்து அரசாங்கத்திடம் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

சுமார் 500 வரையான புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் பெயர்களுடன் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் டொமின் ரப் எம்.பி, தென்னாசியா மற்றும் கொமன்வெல்த் நாடுகளிற்கான அமைச்சர் அஹமட் ஆகியோருக்கு எழுதப்பட்ட கடித பிரதிகள் பிரித்தானிய பிரதமர் உள்ளிட்டவர்களிற்கும் பிரதியிடப்பட்டுள்ளது.

அண்மையில் தமிழ் அரசியல் கட்சிகள் சார்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆணையாளருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை சுட்டிக்காட்டி, இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கையெடுக்க கோரப்பட்டுள்ளது.

பொத்துவில்- பொலிகண்டி; நாள் 2: திருகோணமலை மாவட்டத்திற்குள் நுழைந்தது பேரணி

பேரணி தற்போது திருகோணமலை மாவட்டத்திற்குள் நுழைந்துள்ளது.

வாகன பேரணியாக செல்பவர்கள் வெருகல் பாலத்தை அண்மித்துள்ளனர். அம்பாறையில் ஆரம்பித்த பேரணி மட்டக்களப்பை கடந்து தற்போது திருகோணமலைக்குள் நுழைகிறது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான நீதிகோரும் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி மட்டக்களப்பு தாளங்குடா நகரில் இருந்து ஆரம்பித்து ஒட்டமாவடி நகரை அடைந்த நிலையில் பெருமளவான முஸ்லிம் மக்களும் இணைந்து கொண்டிருந்தனர்.

2வது நாள் பேரணி இன்று வியாழக்கிவமை காலை மட்டக்களப்பு தாளங்குடா இருந்து ஆரம்பித்து ஆரையம்பதி காத்தான்குடி மட்டக்களப்பு ஏறாவூர் செங்கலடி வாழைச்சேனை வழியாக ஒட்டமாவடி நகர எல்லைக்குள் நுழைந்த போது முன்னாள் இராஜாங்க அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தவிசாளருமாகிய எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தலைமையில் பெருமளவான முஸ்லிம் மக்களும் இணைந்து கொண்டிருந்தனர்.

இதன்போது எங்கே எங்கே உறவுகள் எங்கே, எரிக்காதே எரிக்காதே ஜனாசாக்களை எரிக்காதே, எங்கள் நிலம் எமக்கு வேண்டும். வேண்டும் வேண்டும் நீதி வேண்டும், வேண்டும் வேண்டும் உரிமை வேண்டும், திரும்பிப் பார் திரும்பிப் பார் சர்வதேசமே திரும்பிப் பார், வட கிழக்கு தமிழர்களின் தாயகம், ஐநா சபையே தலையிடு, வழங்கு வழங்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்கு போன்ற முழக்கங்களை பேரணியில் பங்கேற்றுள்ள தமிழ் பேசும் மக்கள் ஒன்றாக ஓங்கி ஒலித்து வருகின்றனர்.

1.45 PM

வாழைச்சேனையை சென்றடைந்த போராட்டம் அங்கிருந்து ஓட்டமாவடிக்கு செல்கிறது.

பேரணி வாழைச்சேனையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரமுகர் அமீர் அலி ஆகியோர் ஓட்டமாவடியில் போராட்டத்தில் இணையவுள்ளனர். அங்கு சுமார் 2,000 பேர் திரண்டுள்ளனர்.

12.05PM

பேரணி தற்போது ஏறாவூரில் இருந்து செங்கலடி நோக்கி பயணிக்கிறது.

மட்டக்களப்பு நகரில் பேரணி முடிவடைந்ததை தொடர்ந்து, வாகன பேரணியாக ஏறாவூருக்கு வந்து சேர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

10.45AM

தாழங்குடாவில் சமய ஆராதனைகளுடன் காலை 9 மணிக்கு ஆரம்பித்து பேரணியானது திருகோணமலை வீதி ஊடாக ஆரையம்பதி காத்தான்குடி ஊடாக மட்டக்களப்பு கல்லடி பாலத்தை அடைந்து கல்லடியில் இருந்து மாபெரும் எழுச்சி பேரணியாக மட்டக்களப்பு நகரத்தை அடைந்தது. அங்கு பேரெழுச்சியாக போராட்டம் இடம்பெற்று வருகிறது.

பேரணி தற்போது காத்தான்குடி பகுதியை கடந்துள்ளது. காத்தான்குடியில் பெருமளவு முஸ்லிம் மக்களும் போராட்டத்தில் இணைந்து கொண்டனர்.

எங்கே எங்கே உறவுகள் எங்கே? எரிக்காதே எரிக்காதே ஜனாசாக்களை எரிக்காதே, எங்கள் நிலம் எமக்கு வேண்டும், வேண்டும் வேண்டும் நீதி வேண்டும், வேண்டும் வேண்டும் உரிமை வேண்டும், திரும்பிப் பார் திரும்பிப் பார் சர்வதேசமே திரும்பிப் பார், வட கிழக்கு தமிழர்களின் தாயகம், ஐநா சபையே தலையிடு, வழக்கு வழங்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்கு போன்ற கொசங்களை எழுப்பினர்.

இன்றைய போராட்டத்தில் கோவிந்தம் கருணாகரம், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், இரா.சாணக்கியன், த.கலையரசன், செ.கஜேந்திரன், முன்னாள் எம்.பிக்கள் பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

தற்போது கல்லடியை பேரணி நெருங்கி வருகிறது.

நேற்று போராட்டத்திற்கு இடையூறு விளைவித்த பாதுகாப் புதரப்பினர், இன்று பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

9.00AM

மட்டக்களப்பு தாழங்குடாவில் இருந்து பேரணியின் இரண்டாம் நாள் ஆரம்பித்துள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரனும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பில் ஆரம்பிக்கும் பேரணி முல்லைத்தீவை அடையும்!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை போராட்டத்தின் இரண்டாம் நாள் இன்றாகும்.

இலங்கையில் தமிழ் மக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீதான அடக்குமுறைகள், இன மத அடையாளங்களை அழிக்கும் அரசின் நடவடிக்கைகளிற்கு எதிராகவும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனத உரிமை மீறல் விவகாரங்களில் அழுத்தமான நடவடிக்கைகளை எடுக்க வலிறுத்தியும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை திடீர் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

அனைத்து கட்சிகளுடனும் பேசாமல் அரைகுறை ஏற்பாடுகளுடன் போராட்டம் ஆரம்பித்தாலும், தமக்கான போராட்டமென்ற அடிப்படையில் தமிழின உணர்வாளர்கள் இந்த போராட்டத்திலும் திரண்டனர்.

நேற்று பொத்துவிலில் இருந்து போராட்டம் ஆரம்பித்தது. பல்வேறு தடைகள், அடைமழைக்கு மத்திிலும் ஆரம்பித்த போராட்டத்தில் பல்வேறு தமிழ் தரப்புக்கள் பங்கெடுத்தன.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோவிந்தம் கருணாகரன், எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன், த.கலையரன், மன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன் உள்ளிட்டவர்களும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் க.சுகாஷ், தேசிய அமைப்பாளர் சுரேஷ் உள்ளிட்டவர்களும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியினர், தமிழ் உணர்வாளர் அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்வேறு பகுதிகளிலும் வீதித்தடைகளை ஏற்படுத்தி பொலிசாரும், விசேட அதிரடிப்படையினரும் தடைகளை ஏற்படுத்த முயன்ற போது, போராட்டக்காரர்கள் அவற்றை தூக்கி எறிந்து விட்டு முன்னேறினர்.

பல்வேறு இடங்களிலும் நீதிமன்ற தடை கட்டளைகளை பொலிசார் விநியோகித்தனர்.

கோவிந்தம் கருணாகரன், பா.அரியநேத்திரன் உள்ளிட்டவர்கள் நீதிமன்ற தடை கட்டளைகளை பெற மறுத்து விட்டனர். களுவாஞ்சிக்குடி, கல்முனை பகுதி தடையுத்தரவுகளை பெற்று பேஸ்புக்கில் படமும் பகிர்ந்து விட்டதால், அந்த பகுதிகளில் இரா.சாணக்கியன் பேரணியில் கலந்து கொள்ளவில்லை. வாகனத்திலேயே இருந்து விட்டார்.

நேற்றைய போராட்டம் மட்டக்களப்பு தாழங்குடாவில் முடிவடைந்தது.

இன்று காலை 8.30 மணிக்கு போராட்டம் மீண்டும் ஆரம்பிக்கிறது. காத்தான்குடி, மட்டக்களப்பு நகரம், ஓட்டமாவடி, செங்கலடி என நீளும் போராட்டம் திருகோணமலையை அடைந்து, அங்கிருந்து கொக்கிளாய் ஊடாக இன்று மாலை முல்லைத்தீவு நகரத்தை அடைகிறது.

தமிழ் நிலத்தின் இதயமான கொக்கிளாய், நாயாறு, மணலாறு, தென்னன்மரவடி பகுதிகளில் நீண்ட காலத்தின் பின்னர் தமிழர்கள் உணர்வெழுச்சியுடன் போராட்டமொன்றில் ஈடுபடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.