வலி கிழக்கு தவிசாளருக்கு எதிராகவும் நீதிமன்ற தடை உத்தர பெற நடவடிக்கை

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) யாழ் மாவட்ட தலைவரும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளரும் ஆன தியாகராஜா நிரோஷ்க்கு எதிராகவும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டத்திற்கான தடையுத்தரவை கோரி யாழ்ப்பாணம் நீதிமன்றை கோப்பாய் பொலிஸார் இன்று (3) நாடவுள்ளதாக அறிய முடிகின்றது.

அரசின் அடக்கு முறைகளை எதிர்த்து சிவில் சமூக அமைப்புக்கள் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தன.

இதன் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் ஏற்கனவே நடைபெறவுள்ள எதிர்ப்புப் போராட்டம் வாகனத்தொடரணி என்பவற்றினை கொரோனா மற்றும் சட்டவிரோத கூட்டம் எனக் குற்றஞ்சாட்டி அவ் அவ் பொலிஸ் பிரிவுகளுக்குள் 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடைவடிக்கை 106(1) இன் கீழ் தடையுத்தரவுகள் பெறப்பட்டு வரும் நிலையில் கோப்பாய் பொலிஸாரும் வழக்கொன்றை யாழ் நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்து தடையுத்தரவை பெற முயற்சிகள் இடம்பெற்றுவருவதாக அறியமுடிகின்றது.

ஜனாதிபதி, பிரதமரை அதிரடியாக சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர்

இலங்கையின் அதிர்ச்சி அறிவிப்பை அடுத்து ஜனாதிபதி கோட்டா மற்றும் பிரதமரை அவசரமாக சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே

கொழும்புத் துறைமுகத்திலுள்ள கேந்திர முக்கியத்துவமிக்க கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்திசெய்கின்ற இந்தியா ஜப்பானுடனான முத்தரப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக இலங்கை ஒருதலைப்பட்சமாக அறிவித்த நிலையில் மறுநாளான நேற்று இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஆகியோரை அவசர அவசரமாக சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.

கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த கிழக்கு முனையத்தை அபிவிருத்திசெய்வது தொடர்பாக 2019ம் ஆண்டு மே மாதம் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையை இலங்கை கட்டாயமாக மதித்துச்செயற்படவேண்டும் என்பதே இந்தச்சந்திப்புக்களின் போது இந்தியத்தூதுவர் வலியுறுத்திய செய்தியின் சாராம்சமாகும் என தி ஹிந்து பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு அமைவாக இலங்கை 51% சதவீத பங்குகளைக் கொண்டிருக்கும் அதேவேளை இந்தியாவும் ஜப்பானும் கூட்டாக 49 % சதவீதமான பங்குகளைக் கொண்டிருக்கும்.

இந்தியாவைச் சேர்ந்த அதானி நிறுவனமும் ஜப்பானிய நிறுவனங்களும் சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையான முதலீட்டை மேற்கொள்வார்கள் என மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது.

இதேவேளை , கிழக்கு முனையம் தொடர்பில் எடுத்துள்ள தீர்மானம் குறித்து இதுவரை இந்தியாவிற்கு அறிவிக்கவில்லை என அமைச்சரவை இணை பேச்சாளர், அமைச்சர் உதய கம்மன்பில நேற்று தெரிவித்திருந்தார்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் செயற்பாடுகள் 100 வீதம் துறைமுகங்கள் அதிகார சபையின் கீழ் முன்னெடுக்கப்படும் என இலங்கை பிரதமர் நேற்று முன்தினம் அறிவித்திருந்தார். அதனைத்தொடர்ந்து அமைச்சரவைப் பத்திரமும் இதுதொடர்பில் சமர்பிக்கப்பட்டு கிழக்கு முனையத்தை 100 % இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழ் அபிவிருத்தி செய்வதென தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருணா அம்மான், பிள்ளையானுடன் சந்திப்பினை மேற்கொண்ட துணை இந்திய உயர் ஸ்தானிகர்

பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) ஆகியோர், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன், இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப்பை பெப்ரவரி 02 ஆம் திகதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இந்த சந்திப்புகள் இருவேறு சந்தர்ப்பங்களில் இடம்பெற்றன என இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு சந்திப்புக்களிலும் இலங்கையுடனான நீண்ட அபிவிருத்தி பங்குடைமையை பேணுவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டினை பிரதி உயர் ஸ்தானிகர் ஜேக்கப் வலியுறுத்தியிருந்தார். பிரதி உயர் ஸ்தானிகர் ஜேக்கப், சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோர் மாகாண சபைகள் மற்றும் 13 ஆவது திருத்தத்தினை முழுமையாக அமுல்படுத்துதல் குறித்தும் கலந்துரையாடியுள்ளனர்.

இதேவேளை, போரினால் பாதிக்கப்பட்ட விதவைகள் மற்றும் விசேட தேவையுடையோர்களுக்கான வாழ்வாதார வாய்ப்புக்கள், கல்வி மற்றும் புலமைப்பரிசில் உள்ளிட்ட பல்வேறு விடயங்களின் எதிர்கால அபிவிருத்தி ஒத்துழைப்புக்கான சாத்தியப்பாடுகள் தொடர்பாகவும் இந்த சந்திப்பின்போது திரு.விநாயகமூர்த்தி முரளிதரன் எடுத்துரைத்துள்ளார்.

மாகாண சபை மற்றும் 13 ஆவது திருத்தத்தினை முழுமையாக அமுல்படுத்துதல் ஊடாக தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கான சிறந்த வழி அர்த்தப்புஷ்டியான பரவலாக்கம் என்பதே இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு என்பதனை பிரதி உயர் ஸ்தானிகர் இந்த சந்தர்ப்பத்தில் வலியுறுத்திக்கூறினார் எனவும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை போராட்டத்துக்கு முஸ்லிம்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: ரிஷாட் வேண்டுகோள்!

பொத்துவிலிலிருந்து பொலிகண்டி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தமிழ்க் கட்சிகளின் நடைபவனிப் போராட்டத்துக்குப் பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு முஸ்லிம்களிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான அடக்கு முறைகளை எதிர்த்தும், கண்டித்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் போராட்டம் இன்று 03) தொடங்கி ஆறாம் திகதி வரை நடைபெற உள்ளது.

நில ஆக்கிரமிப்பு, திட்டமிட்ட குடியேற்றம், தொல்பொருள் என்ற போர்வையில் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் பூர்வீக வாழிடங்களை ஏப்பமிடல், பேரினவாத அழுத்தங்களுக்கு அடிபணியும் அரசின் போக்குகள், ஜனாஸா எரிப்பு என்பவற்றைக் கண்டித்தே இந்தக் கண்டன நடைபவனி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறுபான்மையினர் என்ற வகையில் முஸ்லிம் சமூகமும் இந்த நெருக்கடிகளை எதிர்கொள்கின்றது. எனவே, எமது சகோதர சமூகம் ஏற்பாடு செய்துள்ள இந்த நடைபவனிக்கு முஸ்லிம் சமூகமும் தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேண்டுகோள் விடுக்கிறது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி சுகாதாரப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து ஏன் வழங்கவில்லை? ரெலோ யாழ் மாவட்ட தலைவர் தவிசாளர் நிரோஷ் கேள்வி

உள்ளுராட்சி மன்றங்களில் பணியாற்றும் சுகாதாரத் தொழிலாளிகளும் நாளாந்தம் கொரோனாத் தொற்றுச் சூழ்நிலைகளில் நேரடியாகப் பணியாற்றுகின்றனர். அவர்களைப் புறந்தள்ளி என்ன கொள்கையின் அடிப்படையில் தடுப்பு மருந்து வழங்கப்பட்டது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) யாழ் மாவட்ட தலைவரும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளரும் ஆன தியாகராஜா நிரோஷ் கேள்வியெழுப்பியபோது அரசின் அறிவிப்பிலும், உலகசுகாதார நிறுவனத்தின் அறிவிப்பிலும் உள்ளுராட்சி மன்ற சுகாதாரத் தொழிலாளிகளுக்கு தொற்றுத்தடுப்பு வழங்குமாறு தெரிவிக்கப்படவில்லை. ஆகவே வழங்கப்படவில்லை என மாகாண சுகாதார பணிப்பாளர் பதிலளித்தார்.

இன்று(02) நடைபெற்ற யாழ் மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டம் கூட்டத்திலேயே தவிசாளரினால் இவ்வினா எழுப்பப்பட்டது.

இவ் வினா எழுப்பப்பிட்டபோது, தவிசாளரின் கேள்வியை மறுத்து இவ்வாறான கேள்விகளைத் தொடுத்து நேரத்தினை வீணடிக்க வேண்டாம் என மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர்களில் ஒருவரான வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.சாள்ஸ் தொவித்து தவிசாளரின் கேள்வியை மறுத்தார்.

எனினும் குறுக்கிட்டுப்பேசிய வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர், உள்ளுராட்சி மன்றங்களில் சுகாதாரத் தொழிலாளிகளாகப் பணியாற்றும் தொழிலாளர்கள் கொரோனா தொற்று அபாயமுள்ள பல பணிகளை நேரடியாகத் தொடர்புற்று பணியாற்றுகின்றனர்.

தனிமைப்படுத்தப்பட்ட இல்லங்களில் கழிவுகளை அகற்றுகின்றனர். கொரோனா தொற்றாளர் வைத்தியசாலையான கோப்பாய் கல்வியற் கல்லூரியில் கூட பல சேவைகளை செய்கின்றனர். கொரோனாத் தொற்று சிகிச்சை நிலைய மலசல கூடக் குழிகள் நிரம்பினால் கூட பிரதேச சபை சுகாதாரத் தொழிலாளிகளே அகற்றியுள்ளனர்.

தொற்றாளர்கள் நடமாடிய சந்தேகத்திற்கு இடமான பகுதிகளை தொற்றுநீக்கம் செய்கின்றனர். ஆனால் அப்படியாகப் பணியாற்றும் தொழிலாளர்களை தொற்று மருந்தில் புறந்தள்ளுவது சரியான சுகாதார அணுகுமுறையல்ல. சகல சபைகளின் சுகாதாரப்பணியாளர்களுக்கும் மருந்து ஏற்றப்பட வேண்டும்.

ஒரு சுகாதாரத் தொழிலாளி தொற்று சந்தேக இடத்தில் தற்செயலாக தொற்றை வாங்குவதற்கு ஏராளமான சந்தர்ப்பங்கள் உள்ளன. வீதிகளில் தவறான முறையில் கழற்றி வீசப்படும் முகக் கவசங்களைக்கூட அகற்றும் பணியில் சுகாதாரத் தொழிலாளிகளே ஈடுபடுகின்றனர் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த மாகாண சுகாதார பணிப்பாளர் இலங்கைக்கு உலக சுகாதார தாபனம் மருந்துகளைக் கையளிக்கும் போது வரையரைகள் விதிக்கப்பட்டுள்ளன. அரசாங்கம் உள்ளுராட்சி மன்றங்களின் சுகாதாரத் தொழிலாளர்களுக்கு வழங்குமாறு தமக்குப் பணிக்கவில்லை என்றும் மருந்தினை பகிர்வது தமது முடிவு அல்ல அது அரசின் கொள்கை எனவும் பதிலளித்தார்.

சாதாரணமாக சுகாதாரத் திணைக்களங்களில் பணியாற்றும் முகாமைத்துவ உதவியாளர்களுக்கே கொரோனாத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அவர்கள் முன்கள பணியாற்றுவமில்லை. அவ்வாறான நிலையில் பிரதேச சபைகளின் சுகாதாரப் பணியாளர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளமை மோசமான முகாமைத்துவம் என விமர்சனம் கிளம்பியுள்ளது.

Posted in Uncategorized

தான் செய்த அட்டூழியங்களை கண்டறிய தானே குழுவை நியமித்துள்ள ஜனாதிபதி! ரெலோ ஜனா

2009 ஆம் ஆண்டு எமது ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்பு தமிழ் மக்கள் கடும் அநீதிக்குள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள் என மட்டக்களப்பு ரெலோ பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் எற்பாடு செய்யப்பட்டிருந்த பொங்கல் விழா களுதாவளை ஈஸ்வரன் ஆலய முன்றலில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் யோகநாதன் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், ஞா.ஸ்ரீநேசன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா, மட்டக்களப்பு மாநகர மேயர் சரவணபவன் மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலுந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்க தொடர்ந்து உரையாற்றுகையில்-

எமது பிரதேசம் தற்போது படும் இன்னல்களை நாங்கள் அறிந்த வண்ணவே இருக்கின்றோம். தற்போது வடகிழக்கிலே கடந்த காலங்களில் தமிழ் மக்கள் அடிமைகளாக இரண்டாம்தர பிரஜைகளாக நடாத்தப்பட்டதன் காரணமாக இந்த நாடு பல போராட்டங்களை சந்தித்து வந்திருந்தது. 2009 ஆம் ஆண்டு எமது ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்பு தமிழ் மக்கள் கடும் அநீநிதிக்குள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். இவை அனைத்திற்கும் ஒரு தீர்வு வேண்டி வெளி உலகத்திற்கு எடுத்துக் கூறப்பட வேண்டும். குறிப்பாக எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவிலே மனித உரிமை பேரவைக்கான கூட்டத்தொடர் ஆரம்பிக்க இருப்பதால் எமது பிரச்சினையை உலக நாடுகளுக்கு தெளிவுபடுத்தும் முகமாக பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரை மாபெரும் பேரணி ஒன்றினை நடாத்துவதற்கான வடகிழக்கு சிவில் சமூகத்தின் தீர்மானத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவு வழங்க இருக்கின்றது.

எதிர் வரும் மார்ச் மாதம் ஜெனிவாவிலே கொண்டுவர இருக்கும் பிரச்சினை மிகவும் கடுமையானதாக இருக்க வேண்டும் என்பது எமது அவாவாக இருக்கின்றது. இதனை அறிந்த கோட்டபாய ராஜபக்ச மூவர் கொண்ட குழுவினை நியமித்திருக்கின்றார். கடந்த காலங்களிலே இங்கு தமிழர்களுக்கு நடந்த அட்டூழியங்களை கண்டறிவதற்கான ஒரு ஆணைக்குழுவை நியமித்துள்ளார். இதில் உள்ள ஆச்சரியம் என்னவென்றால் அவர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருக்கும் போது நடைபெற்ற அநியாங்களை கண்டறிவதற்கு அவரே ஆணைக்குழுவை நியமித்துள்ளார். இந்த செயற்பாடு என்பது இந்த நாட்டு மக்களையல்ல ஐக்கிய நாடுகள் சபையைக் கூட ஏமாற்றும் வித்தையாகவே நாங்கள் இதனை பார்க்கின்றோம்.

அதற்கு மேலாக அவரும் அவருடன் இருக்கும் அமைச்சர்களும் என்ன கூறுகின்றனர். அந்நிய சக்திகள் ஒரு நாட்டின் இறைமைக்குள் மூக்கை நுழைக்கக் கூடாது விரலை நுழைக்கக் கூடாது என்றெல்லாம் கூறிவருகின்றனர். நீங்கள் இந்த நாட்டிலே இருக்கின்ற சிறுபான்மை இனமான தமிழ் பேசும் சமூகத்திற்கு இழைக்கின்ற இன்னல்களுக்கா சர்வதேசம் மூக்கையல்ல முழு உடலையே நுழைக்கும் அளவிற்குதான் நீங்கள் செயற்பட்டுக் கொண்டு இருக்கின்றீர்கள் என்பதனை நீங்கள் உணர வேண்டும்.

ஆயுதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த நீங்கள் தொடர்ந்து போராடிவரும் எமது இனத்திற்காக நீங்கள் மக்ளளது அபிலாசைகளை வெல்லக் கூடிதொரு தீர்வினை உங்களால் கொடுக்க முடியும். காரணம் பாராளுமன்றத்தில் உங்களுக்கு பெரும்பான்மை இருக்கின்றது முழு அதிகாரத்தையும் நீங்கள் இருபதாவது திருத்தச்சட்டத்தின் மூலம் பெற்றிருக்கின்றீர்கள். ஆகவே உங்களால் தமிழ் மக்களுக்குரிய நியாயமான தீர்வினை வழங்க முடியும். அவ்வாறு வழங்கிவிட்டு சர்வதேசத்திடம் மூக்கை நுழைக்க வேண்டாம் என்று கூறுங்கள் அவர்களும் மூக்கை நுழைக்கமாட்டார்கள்.

குறிப்பாக 2020 ஆம் ஆண்டிற்கு பிற்பாடு வடக்கு கிழக்கு பிரதேசங்களை பௌத்த மயமாக்கும் ஒரு நிகழ்ச்சி நிரலின் கீழ் இந்த அரசாங்கம் செயற்பட்டுக் கொண்டு இருக்கின்றது. எல்லையோரங்களில் இருக்கும் காணிகள் அனைத்தும் கபளிகரம் செய்யப்பட்டுக் கொண்டு இருக்கின்றது இந்த நேரத்தில் தமிழ் மக்களாகிய நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். கடந்த காலங்களிடையே தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகளிடையே குழப்பங்கள் ஏற்பட்டு இருந்தது அவை அனைத்தையும் மறந்து எமது எதர் காலத்தில் ஒற்றமையாக ஜனநாயக ரீதியில் இராஜதந்திர ரீதியில் போராடி எமது மக்களுக்குரிய உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இதன்போது தெரிவித்தார்.

Posted in Uncategorized

தமிழர்கள் ஜனநாயக வழியில் போராடினால் அந்தப் போராட்டத்தை கொச்சைப்படுத்தக்கூடாது – மைத்திரி

தமிழர்கள் தீர்வுக்காகவும் நீதிக்காகவும் ஜனநாயக வழியில் போராடினால் அந்தப் போராட்டத்தை எவரும் கொச்சைப்படுத்தக்கூடாது என்று முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், “கடந்த எமது ஆட்சியில் தமிழர்களின் மனதை நாம் வென்றிருந்ததோடு சர்வதேச சமூகத்தின் மனதையும் வென்று காட்டியிருந்தோம். ஆனால், இந்த ஆட்சியில் அவற்றை ஏன் சாதிக்க முடியாமல் உள்ளது என்பது தொடர்பில் அரசு ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

அதைவிடுத்து இன முறுகலை மேலும் வலுவடையைச் செய்யும் விதத்திலும் சர்வதேச மட்டத்தில் நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையிலும் அரசிலுள்ள சிலர் கருத்துக்கள் வெளியிடுவதை உடன் நிறுத்த வேண்டும்.

இது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் ஆகிய இருவரும் கவனம் செலுத்த வேண்டும். பிரச்சினைகளை ஏற்படுத்த முனைவோரை ஜனாதிபதியும் பிரதமரும் தூரத்தில் வைத்திருக்க வேண்டும். அவர்களைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு ஆட்சியைத் திறம்பட முன்னெடுக்க முடியாது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

‘இன்றுமுதல் நான்கு நாள்கள் கரிநாள் உண்ணாவிரதம்’

சுதந்திர தினத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், அத்தினத்தைக் கரிநாளாகவும் கறுப்புப்பட்டி அணிந்தும் அனுஷ்டிக்குமாறு அழைப்பு விடுத்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், அடையாள உண்ணாவிரதப் போராட்டத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளது,

இந்தக் கரிநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம், இன்று (02) முதல் 6ஆம் திகதி வரையிலும் நான்கு நாள்களுக்கு, கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்து.

கிளிநொச்சியில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது அலுவலகத்தில், நேற்று (01) நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் இணைப்பாளர் கதிர்காமநாதன் கோகிலவாணி, கருத்துரைக்கையில்.

“இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்கும் வகையில் கறுப்புப்பட்டி அணிந்து, 2ஆம் திகதி தொடக்கம் (இன்றுமுதல்) 6ஆம் திகதி வரை அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது” என்றார்.

அத்துடன், நாளை 3ஆம் திகதியும் மறுநாள் 4ஆம் திகதியும், வடக்கு, கிழக்கு மாவட்டங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர் எனத் தெரிவித்த அவர், இந்தப் போராட்டத்தில் பங்கேற்குமாறு,

வர்த்தக சங்கங்கள், முச்சக்கரவண்டி சங்க உறுப்பினர்கள், பஸ் உரிமையாளர் சங்க உறுப்பினர்கள், தமிழ் உறவுகள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் அழைப்புவிடுத்தார்.

Posted in Uncategorized

தனி தமிழ் ஈழம் அமைந்திட பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் – உலக தலைவர்களிடம் வைகோ கோரிக்கை

தனி தமிழ் ஈழம் அமைந்திட பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உலக தலைவர்களுக்கு தி.மு.கழகத்தின் சார்பில், பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், இந்த விடயம் தொடர்பாக அவர், நூற்றுக்கும் மேற்பட்ட மின் அஞ்சல் கடிதங்களை அனுப்பி உள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள், ஐ.நா. மன்றப் பொதுச்செயலாளர், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத் தலைவர், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத் தலைவர், இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட பல நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்புகளுக்கு அவர் இவ்வாறு கடிதங்களை அனுப்பியுள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ள அவர், “2009-ம் ஆண்டு நோர்வே- பிரான்ஸ், கனடா, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் வாழ்கின்ற புலம்பெயர்ந்து வந்த இலங்கைத் தமிழர்கள் இடையே ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தமிழ் ஈழம் அமைவதற்கு அவர்கள் பெரும் ஆதரவு அளித்தனர்.

2011ம் ஆண்டு மார்ச் 25ஆம் திகதி இந்தியாவின் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றம், ஐ.நா. அறிக்கையின் அடிப்படையில் ஒரு தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றியது.

விடுதலைப்புலிகள் உட்பட இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அனைத்துத் தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், அனைத்திற்கும் மேலாக இலங்கையின் வடக்கு கிழக்கு மாநிலங்களைப் பிரித்து தனித்தமிழ் அமைப்பதற்கு ஐ.நா. மன்றத்தின் மேற்பார்வையில் பொது வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றத் தீர்மானம் கோருகின்றது.

இலங்கை வடக்கு மாகாண மன்றம், 2015-ம் ஆண்டு பெப்ரவரி 10ஆம் திகதி ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. அதன்படி இலங்கையின் வடக்கு, கிழக்கு மாநிலங்களை ஒன்றாக இணைக்க வேண்டும்.

சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் தமிழர் தாயகப் பகுதிகளில் இருந்து சிங்கள ஆக்கிரமிப்பாளர்கள் அனைவரையும் வெளியேற்ற வேண்டும் என அந்தத் தீர்மானம் கோருகின்றது.

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஐ.நா. மன்றத்தின் மேற்பார்வையில் ஒரு பொது வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று அந்தத் தீர்மானம் வலியுறுத்துகின்றது.

எனவே ஐ.நா. மனித உரிமைகள் மன்றம் மற்றும் ஐ.நா.வின் அனைத்து உறுப்பு நாடுகளும் சேர்ந்து கீழ்காணும் கோரிக்கைகளை ஆய்வு செய்து தீர்வு காண வேண்டும் என நாங்கள் கோருகின்றோம்.

1. ஈழத்தமிழர்களின் தன்னாட்சி உரிமையை ஏற்க வேண்டும், ஐ.நா. மன்றத்தின் மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

2. 2015 பெப்ரவரி 10ஆம் திகதி இலங்கை வடக்கு மாகாண மன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தை ஏற்க வேண்டும்.

3. இலங்கை அரசு நடத்துகின்ற எந்த விசாரணையின் மீதும் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை இல்லை எனவே பன்னாட்டுக் குற்ற இயல் நீதிமன்றம் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

4. இந்திய அரசு, மனித உரிமைகள் மன்ற உறுப்பு நாடுகளை ஒருங்கிணைத்து நிகழ்ச்சி நிரல் 4-ன்படி சிறப்பு ஆணையர் ஒருவரைத் தெரிவு செய்து, இலங்கையில் நடைபெறுகின்ற மனித உரிமை மீறல்கள், தமிழர்களுக்கு எதிராக ஒடுக்குமுறைகளைக் கண்காணிப்பதற்கு ஆவன செய்ய வேண்டும்.

05. இலங்கையில் நடைபெறுகின்ற மனித உரிமை மீறல்களைக் கண்காணித்து, உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

06. தொடர்புடைய உறுப்பினர்களுடன் இலங்கைக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும்.

07. இலங்கையின் வடக்கு, கிழக்கு மாநிலங்களில் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. பொதுப்பேரவைக்கும் மனித உரிமைகள் மன்றத்திற்கும் ஆய்வு அறிக்கை வழங்க வேண்டும்.

08.பிரச்சினைகளை உடனுக்குடன் வெளிக்கொணர வேண்டும். அதிகாரபூர்வ செய்தி அறிக்கைகளை வெளியிட வேண்டும்.

09.இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுவித்து நீதி வழங்க வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜே.ஆரின் சாயலில் பழிவாங்கும் ஜனாதிபதி கோத்தா- கடுமையாக சாடும் மக்கள் விடுதலை முன்னணி

இலங்கையின் முதலாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன செய்தவற்றையே தற்போதுள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவும் செய்கின்றார்.

1978 இல் நீதிமன்ற அதிகாரங்களையுடைய ஜனாதிபதி ஆணைக்குழுவை அமைந்து ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க உள்ளிட்டோரது குடியுரிமையை நீக்கி தனக்கு எதிரானவர்களை ஜே.ஆர்.ஜயவர்தன பழிவாங்கியதைப் போலவே தற்போது கோத்தாபய ராஜபக்ஷவும் அவருக்கெதிரானவர்களை பழிவாங்கலுக்குட்படுத்துகின்றார் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணி தலைமையகத்தில் முதலாம் திகதி திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

ராஜபக்சாக்களையும் அவர்களுக்கு நெருக்கமானவர்களையும் 79 வழக்குகளிலிருந்து விடுவிக்குமாறும் வழக்கு தாக்கல் செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

இது வழமையான விசாரணை ஆணைக்குழுக்களுக்கும் அப்பால் தண்டனை வழங்கும் ஆணைக்குழுவாக செயற்பட்டுள்ளது. இது அபாயமுடையதாகும். விசாரணை ஆணைக்குழுவொன்றுக்கு தண்டனை வழங்க முடியாது.

1972 ஆம் ஆண்டு தண்டனை வழங்குவதை இலக்காகக் கொண்டு ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது. எனினும் அதற்கு சர்வதேச மட்டத்தில் கடும் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டன.

அதனை தொடர்ந்து 1978 இல் முதலாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜயவர்தனவினால் அவருக்குரிய நிறைவேற்றதிகாரம் மற்றும் பாராளுமன்ற அதிகாரிம் என்பவற்றை பயன்படுத்தி நீதிமன்ற அதிகாரத்தையுடைய ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது. அதன் மூலமாகவே ஸ்ரீறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமை இரத்து செய்யப்பட்டது.

1978 இன் பின்னர் இவ்வாறு நீதிமன்ற அதிகாரமுடைய ஆணைக்குழுக்கள் நியமிக்கப்படவில்லை. ஆனால் ஜே.ஆர்.ஜயவர்தன செய்ததை தற்போது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஆரம்பித்துள்ளார்.

தற்போது இது போன்று ஆணைக்குழுக்களை நியமிப்பதற்கான தேவை என்ன? ராஜபக்சாக்கள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு எதிரானவர்களை வழக்குகளிலிருந்து விடுவிப்பதே இதன் நோக்கமாகும். தற்போது 79 வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளவர்கள் உண்மையில் தவறு செய்யவில்லை என்றால் தைரியமாக நீதிமன்றத்தினூடாக தீர்வை பெற்றுக் கொண்டிருக்கலாம்.

ஆனால் நீதிமன்றத்தில் இவர்களுக்கெதிரான வழக்குகள் தொடர்ந்தும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டால் அவர்களின் குற்றங்கள் நிரூபிக்கப்படும். ஜனாதிபதி கோத்தாபய ஆட்சிக்கு வர முன்னர் அவருக்கு எதிரான எந்தவொரு வழக்கிற்கும் நீதிமன்றத்திற்கு வந்தததில்லை. தன்மீதான குற்றம் நிரூபிக்கப்படும் என்ற அச்சமே அவரும் அவரது சகாக்களும் நீதிமன்றத்தை புறக்கணிப்பதற்கான காரணமாகும்.

எனவே ஆணைக்குழுவினூடாக வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளவர்கள் குற்றமற்றவர்கள் என்றால் நீதிமன்றத்தில் அதனை நிரூபிக்குமாறு சவால் விடுகின்றோம்.

வழக்குகளிலிருந்து விடுவிப்பது மாத்திரமின்றி வழக்கு தொடர்ந்தவர்களை பழிவாங்குவதும் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டதன் இலக்காகும். எனவே ஜனாதிபதி கோத்தாபய நியமித்த ஆணைக்குழுவை ‘அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஆணைக்குழு’ என்று கூறுவதைவிட ‘அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழு’ என்று கூறுவதே பொறுத்தமானதாகும்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்ததன் பின்னர் அதிகாரங்களை அதிகரித்துக் கொள்வதற்காக சிலருக்கு இலஞ்சம் வழங்கி 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றிக் கொண்டமை மற்றும் தனது குடும்பத்தாரை வழக்குகளிலிருந்து விடுவித்ததை தவிர மக்களுக்காக எதனையுமே செய்யவில்லை என்றார்.