பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான வடகிழக்கு சிவில் அமைப்புக்களின் போராட்டத்திற்கு ரெலோ பூரண ஆதரவை தெரிவித்துள்ளது

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான வடகிழக்கு சிவில் அமைப்புக்களின் போராட்டத்திற்கு ரெலோ பூரண ஆதரவை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் பொத்துவிலில் தொடங்கி பொலிகண்டி வரை நடைபெறவுள்ள வடக்கு கிழக்கு சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள தமிழின ஒடுக்குமுறைக்கு எதிரான ஐனநாயகப் போராட்டத்திற்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ ) எமது முழுமையான பூரண ஆதரவை தெரிவிக்கின்றோம்.

தமிழ் மக்களின் இன விடுதலைக்காக தொடர்ச்சியாக ஐனநாயக முறையில் போராடி வரும் எமது கட்சி அண்மைக் காலங்களில் கூர்மையடைந்துள்ள தமிழின அழிப்பை தடுத்து நிறுத்த பல இடங்களிலும் களத்தில் நின்று குரல் கொடுப்பதுடன் சர்வதேச ரீதியாகவும் இலங்கை அரசாங்கத்தின் அட்டூழியங்களை மனித உரிமைகள் சார்பான அமைப்புக்களுக்கும்,மனிதவுரிமைகளை பாதுகாக்கும் நாடுகளுக்கும் அறிக்கை இட்டு அழுத்தங்களை இயன்ற வரை பிரயோகித்து வருகின்றோம். இச் செயற்பாடு தமிழர் தாயகப் பகுதியின் எட்டு மாவட்டங்களிலும் தொடர்ந்து எம்மால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் தொடர்ச்சியாக வடகிழக்கு இணைந்த ஒரு ஐனநாயகப் போராட்டத்தை சிவில் அமைப்புக்கள் ஏற்பாடு செய்துள்ளமையை நாம் வரவேற்கின்றோம் அது மட்டுமல்ல எமது பூரண ஆதரவையும் தெரிவிக்கின்றோம் அத்துடன் இந்த ஐனநாயகப் போராட்டத்தில் தமிழர் தாயகத்தில் உள்ள அனைத்து தமிழ்த் தேசியம் சார்ந்த அமைப்புக்களையும் தமிழ் பேசும் முஸ்லிம் அமைப்புக்களையும் ஆதரவு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை: நீதிமன்ற தடையுத்தரவை வழங்க ரெலோ ஜனா எம்.பியை தேடித்திரிந்த பொலிசார்!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை கையளிக்க,ரெலோ மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரனை (ஜனா) தேடி பொலிசார் பல இடங்களிற்கும் சென்றுள்ளனர்.

எனினும், அவரை சந்திக்க முடியாத சூழ்நிலையில், தடையுத்தரவை அவரது அலுவலகத்தில் பொலிசார் கையளித்தனர்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை என்ற பெயரில் மட்டக்களப்பு சிவில் சமூகமொன்றின் ஏற்பாட்டில் திடீர் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்த போராட்டத்திற்கு நீதிமன்ற தடையுத்தரவு பெறப்படுமென்பது எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சாணக்கியன் எம்.பி உள்ளிட்டவர்கள் அது குறித்து பகிரங்கமாக பேசி, சவால்கள் விட்டு வந்தனர்.

பொலிசாரின் தடையுத்தரவை எதிர்பார்த்திருந்ததை போலவே, இன்று பொலிசாரின் தடையுத்தரவை பெற்று காணொலியாக வெளியிட்டிருந்தார்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின் மற்றைய கூட்டமைப்பு எம்.பியான கருணாகரம் கோவிந்தன், அந்த தடையுத்தரவை இதுவரை பெற்றுக்கொள்ளவில்லை. இதனால், தற்போது வரை போராட்டத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பை அவர் தக்க வைத்துள்ளார்.

களுவாஞ்சிக்குடி பொலிசாரின் விண்ணப்பத்தினடிப்படையில், களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தடையுத்தரவுடன், மட்டக்களப்பிலுள்ள கோவிந்தம் கருணாகரனின் இல்லத்திற்கு பொலிசார் சென்றனர்.

ஆனால், அங்கு அவர் இருக்கவில்லை.

இதையடுத்து, அவரது அலுவலகத்திற்கு பொலிசார் சென்றனர். அங்கும் எம்.பி இல்லையென உதவியாளர்களால் கூறப்பட்டது.

இதையடுத்து, தடையுத்தரவை அலுவலகத்தில் பொலிசார் கையளித்து சென்றனர்.

அந்த தடையுத்தரவில் கோவிந்தம் கருணாகரனின் பெயர் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Posted in Uncategorized

இந்தியாவில் இருந்து தடுப்பூசி வேண்டும், முதலீட்டாளர்கள் வேண்டாம் … என்ன நியாயம்?

இந்தியா இலவசமாக வழங்குகின்ற கொரோனா தடுப்பூசியை எந்த எதிர்ப்பும் இல்லாமல் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் அங்கிருந்து வருகின்ற முதலீட்டாளர்களை அனுமதிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவிப்பது எந்த விதத்தில் நியாயமானது என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பு துறைமுகத்தின் ஒரு பகுதியை இந்தியாவிற்கு வழங்குவது தொடர்பாக ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய முதலீட்டாளர்களை இலங்கையில் அனுமதிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றவர்கள் ஏன் அங்கிருந்து வந்த கொரோனா தடுப்பூசியை திருப்பி அனுப்பவில்லை? ஏனென்னறால் அது உயிரை பாதுகாக்கின்ற காலத்தின் தேவையாக இருக்கின்றது. தேவைக்கு பயன்படுத்தி தூக்கி எறிகின்ற என்னத்திலேயே இன்று பல கட்சிகள் செயற்பட்டு வருகின்றன. அதற்கு அவர்கள் வைத்துள்ள பெயர்தான் தேசப்பற்றாளர்கள்.

இந்தியாவின் முதலீட்டாளர்களுக்கு துறைமுகத்தின் ஒரு பகுதியை நிர்வகிப்பதற்கு எதிராக கோசமிடுவது எமது பொருளாதாரத்திற்கு அடிக்கப்படும் சாவு மணியாகும். ஏனெனில் எதிர்காலத்தில் இன்னும் பல இந்திய முதலீட்டாளர்கள் இலங்கையில் தங்களுடைய முதலீடுகளை செய்வதற்கு தயாராக இருக்கின்ற இந்த நிலையில் அவர்களுக்கு பாதுகாப்பற்ற ஒரு நிலைமை ஏற்படுமாக இருந்தால் அவர்கள் எப்படி முதலீடுகளை இலங்கையில் செய்வார்கள்?

எங்களுடைய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டுமாக இருந்தால் நிச்சயமாக ஏனைய நாடுகளுடன் இணைந்து செயற்பட வேண்டும். தனியே நாங்கள் மாத்திரம் இந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது. மேலும் இந்தியா என்பது எங்களுடைய அயல்நாடு. அவர்களுடன் எங்களுக்கு கடந்த பல தசாப்தங்களாக நெருங்கிய உறவு அனைத்து வழிகளிலும் இருக்கின்றது.

நாங்கள் எல்லாவற்றையும் சீனாவிற்கு மாத்திரம் வழங்குவதால் மாத்திரம் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியாது. இந்தியா சீனா உட்பட ஏனைய நாடுகளுடனும் இணைந்து செயற்படுவதற்கு நாம் தயாராக வேண்டும்.

இன்று தேசப்பற்றாளர்கள் என கூறிக் கொள்கின்றவர்கள் எந்தவிதமான கொள்கையும் இல்லாதவர்கள் என்பதை நாங்கள் கடந்த கால அனுபவத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

எந்த நாடுகளுக்கு எதிராக கோசம் போடுகின்றார்களோ அந்த நாடுகளில் சென்று யாருக்கும் தெரியாமல் உல்லாசம் அனுபவித்து விட்டு வருகின்றவர்கள்தான் இந்த தேசப்பற்றாளர்கள். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் இவர்கள் கூறியதை நினைத்து பார்த்தால் சிரிப்புதான் வருகின்றது.

இன்று இந்த எதிர்ப்பு காரணமாக எங்களுடைய பொருளாதாரம் இன்னும் பின்னடைவை சந்திக்குமே தவிர முன்னேற்றம் ஏற்படாது. அதனை அரசாங்கமும் தற்பொழுது நன்கு உணர்ந்துள்ளது. எனவே வீணாக எதிர்ப்பை காட்டுவதை விட்டு விட்டு வருகின்ற முதலீட்டாளர்களுக்கு தேவையான வசதிகளை பெற்றுக் கொடுத்து எங்களுடைய நாட்டின் தனித் தன்மையை விட்டுக் கொடுக்காமல் செயற்படுவதற்கு அனைவரும் முயற்சி செய்ய வேண்டும்.

இன்று எதிர்ப்பு கோசம் எழுப்புகின்ற பலரும் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டால் பாதிக்கப்படுகின்றவர்கள் அல்ல. அந்த பாதிப்பிற்கு உள்ளாகின்றவர்கள் பொது மக்களே. எனவே நாட்டு மக்களின் நன்மை கருதியே நாங்கள் செயற்பட வேண்டுமே தவிர. வெறுமனே எதிர்ப்பு கோசமிடுவதால் எதனையும் சாதிக்க முடியாது.

தனிச்சிங்களம் மட்டுமே: சுதந்திரதின தேசிய கீதத்தில் தமிழுக்கு இடமேயில்லையென அறிவித்தது கோட்டா அரசு!

சுதந்திரதின நிகழ்வில் தனிச்சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்படும் என அறிவித்துள்ளது கோட்டாபய அரசு.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற செய்தியாளர் உடனான சந்திப்பில் பாதுகாப்பு அமைச்சிக் செயலாளர் கமல்குணரட்ன இன்று இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேசிய கீதம் இசைக்கப்படுவது ஜனாதிபதி சுதந்திர தின வைபத்தில் கலந்துக்கொள்ளும் வேலையில் தேசிய கொடியை ஏற்றும் பொழுது தேசிய கீதம் இசைக்கப்படும். சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதம் இடம்பெறும்.

கடந்த காலம் முதல் தேசிய கொடி தொடர்பில் உள்ள குறைபாடுகள் குறித்து பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், அந்த குறைபாடுகள் இம்முறை நீக்கப்பட்டுள்ளதா? என்று ஊடகவியலாளர் ஒருவர் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் எழுப்பிய கேள்விக்கு செயலாளர் பதிலளிக்கையில், தற்பொழுது நாம் தேசிய கொடி ஒன்றை பயன்படுத்துகின்றோம். சமுகத்தில் பல்வேறு தரப்பினர் இதில் உள்ள குறைபாடுகள் குறித்து சுட்டிக்காட்டினர்.

தேசிய கொடியில் சிங்கத்தின் உருவத்தில் உள்ள குறைபாடுகள் திருத்தி வடிவமைக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளனர். இவர்கள் அனைவரினதும் ஆலோசனைகளை நாம் பெற்றுக்கொண்டுள்ளோம். இதுதொடர்பில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.

இதுதொடர்பில், பாரிய வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் இறுதி நடவடிக்கையாக இந்த விடயத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அதை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். இதனால் இம்முறை தேசிய சுதந்திர தின வைபவத்தை நடத்தும் பொழுது இதிலும் பார்;க்க மேலதிகமாக ஏதும் செய்வதற்கு இல்லை. இதனால் நாம் முன்னர் பயன்படுத்திய தேசிய கொடியை நாம் பயன்படுத்துவோம்.

தேசிய கொடியில் எந்த மாற்றமும் இல்லை. சிங்கத்தின் உருவத்தில் உள்ள குறைபாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றை நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும். இதனை வடிவமைப்பாளர்களுடனும், அரசாங்க அதிகாரிகளுடனும் இணைந்து பேச்சு வார்த்தை நடத்தி இதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றார்.

73 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வாரத்தில் வீடுகளிலும், வாகனங்களிலும், வர்த்தக நிலையங்களிலும் தேசிய கொடியை ஏற்றுமாறு இதன்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கேட்டுக்கொண்டார்.

சுதந்திர தினத்தன்று நடைபெறும் அணிவகுப்புக்களில் கலந்துக்கொள்ளும் அனைத்து படையினரும் பி.சீ.ஆர், அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் கூறினார்.

இராணுவத்தில் 3153 பேரும், கடற்படையில் 823 பேரும், விமானப்படையில் 740 பேரும், பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையில் 510 பேரும், சிவில் பாதுகாப்பு படையில் 407 பேரும் இந்த அணி வகுப்பில் கலந்துக்கொள்ளவுள்ளனர். சுதந்திர தினத்தின் பெருமையை பாதுகாப்பதற்காக இந்த படையினர் தேவைப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் பி.சீ.ஆர், அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

சுகாதார அமைச்சின் ஆலோசனை மற்றும் வழிகாட்டிகளுக்கு அமைவாகவே இந்த சுதந்திர தின வைபவம் மேற்கொள்ளப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

Posted in Uncategorized

‘அமைதி தூபி’ என்பதற்கு இடமில்லை: முள்ளிவாய்க்கால் தூபியாகவே அமைக்கப்படும்- மாணவர் ஒன்றியம் உறுதி!

யாழ்.பல்கலை கழக வளாகத்தினுள் அமைக்கப்பட்டு வரும் நினைவுத் தூபி முள்ளிவாய்க்கால் நினைவு தூபியாகவே அமைக்கப்படும் என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உறுதிபடக் கூறியுள்ளது.

அந்த வகையில், முள்ளிவாய்க்கால் நினைவு தூபி எனும் பெயரில் முன்னர் இருந்த அமைப்பிலையே தூபி மீள கட்டப்படும் என மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இதனைவிடுத்து, ‘அமைதி தூபி’ எனும் பெயரிலையோ அல்லது வேறு வடிவங்களிலோ தூபியை அமைக்க அனுமதிக்க மாட்டோம் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

யாழ். பல்கலைக்கழக வளாகத்தினுள் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி சட்ட விரோதமானது எனக்கூறி பல்கலைக்கழக துணைவேந்தரின் உத்தரவில் கடந்த மாதம் எட்டாம் திகதி இடித்தழிக்கப்பட்டது.

இதனையடுத்து, மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டத்துடன், அரசியல் பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் பல்கலைக்கழக பழைய மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த, எதிர்ப்பலையைத் தொடர்ந்து ஜனவரி 11ஆம் திகதி காலை தூபியை மீள அமைப்பதற்கு என துணைவேந்தர் தலைமையில் மாணவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டதுடன் பின்னர், தூபி கட்டுவதற்கான ஆரம்பக் கட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை யாழ்.பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில், தூபி விவகாரத்தில் நடைபெற்ற விடயங்களை விலாவரியாகக் குறிப்பிட்டு துணைவேந்தர் சிறிசற்குணராஜா அறிக்கை சமர்ப்பித்தார்.

அதனைத் தொடர்ந்து தற்போது அமைக்கப்படவுள்ள தூபியினை ‘அமைதி தூபி’ எனும் பெயரில் அமைக்க பேரவை அனுமதி அளித்துள்ள நிலையில், மாணவர் ஒன்றியம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Posted in Uncategorized

கிழக்கு கொள்கலன் முனைய ஒப்பந்தத்தை செயல்படுத்த இந்தியா கோருகிறது

2019ஆம் ஆண்டு மே மாதம் இலங்கை, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையில் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரம் இலங்கை செயற்படுமென எதிர்பார்ப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.

கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் வெளியிடப்பட்டுள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு பல்வேறு சந்தர்ப்பங்களில் வௌிப்படுத்தப்பட்டதாகவும் நாட்டின் தலைமை அது தொடர்பில் அறிவித்திருந்ததாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் இணைந்து இதனை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கையின் அமைச்சரவை கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் தீர்மானித்திருந்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட அனைத்து தரப்பினரும் ஏற்கனவே ஏற்படுத்திக்கொண்டுள்ள இணக்கப்பாட்டின் பிரகாரம் செயற்படவேண்டும் என கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் முழுமையாக துறைமுக அதிகார சபையின் கீழ் பராமரிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை பாதுகாக்கும் தொழிற்சங்க கூட்டு மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தநிலையிலேயே கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் விசேட ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

‘கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அந்நியர்களுக்கு வழங்கமாட்டோம்’: பிரதமர் உறுதி..!

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் உரிமை மற்றும் கட்டுப்பாட்டை வெளிநாட்டிற்கு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்து கிழக்கு முனையத்தை பாதுகாக்கும் தொழிற்சங்க கூட்டமைப்பு எதிர்ப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

இச்சூழ்நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வெளிநாட்டிற்கோ அல்லது சர்வதேச நிறுவனத்திற்கோ வழங்கப்போவதில்லை என தெரிவித்தார்.

அதற்கமைய இன்று (2021.02.01)முற்பகல் அலரி மாளிகையில் கிழக்கு முனையத்தை பாதுகாக்கும் தொழிற்சங்கத்தினருக்கும் பிரதமருக்கும் இடையே கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

உள்ளூர் வளங்களை விற்பனை செய்வதை தவிர்க்கும் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையின் கீழ் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை எந்தவொரு நாட்டிற்கும் விற்பனை செய்யவோ அல்லது கட்டுபாடு வழங்கப்படவோ மாட்டாது என பிரதமர் குறிப்பிட்டார். அது 100 வீதம் துறைமுக அதிகாரசபையின் கீழ் செயற்படும் நிறுவனமாக தொடர்ந்தும் செயற்படும் என்றும் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட துறைக்கு பொறுப்பான அமைச்சர் ரோஹித் அபேகுணவர்தன இது குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை, ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கையளித்ததை தொடர்ந்து அதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை சர்வதேச நிறுவனத்திற்கு முன்வைக்கும்போது குறித்த விடயங்களுக்கு அந்நிறுவனம் உடன்படாமையினால் கிழக்கு முனையத்தை 100 வீதம் துறைமுக அதிகாரசபையின் கீழ் செயற்படும் நிறுவனமாக்குவது குறித்த அமைச்சரவை பத்திரம் பிற்பகலில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தீர்மானத்திற்கு கிழக்கு முனையத்தை பாதுகாக்கும் தொழிற்சங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கமைய சட்டப்படி வேலை செய்யும் செயற்பாட்டை நாளை முதல் கைவிடுவதற்கும் தொழிற்சங்கத்தினர் ஒப்புக்கொண்டுள்ளனர்.

துறைமுகத்தின் கிழக்கு முனையம் அந்நியர்களுக்கு வழங்கப்படமாட்டாது என்பதை உறுதியளித்து எழுத்து மூலமான ஆவணமொன்றை வழங்குமாறு குறித்த கலந்துரையாடலின்போது தொழிற்சங்க தலைவர்கள் கோரியுள்ளனர்.

ஆனால் தனது 50 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் தொழிற்சங்கங்களினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பலவற்றை தாம் தீர்த்துள்ள போதிலும், அது குறித்து எழுத்து மூலமான ஆவணமொன்றை இதுவரை வழங்கியதில்லை என்றும், தாம் வாக்குறுதியளித்தால் அது அவ்வாறே நிறைவேற்றப்படும் என பிரதமர் குறிப்பிட்டார்.

பிரதமர் என்ற வகையில் நான் முன்னெடுக்கும் கூட்டங்களில் எடுக்கப்படும் தீர்மானங்களை அவ்வாறே செயற்படுத்துவதற்கு அரச அதிகாரிகள் கடமைப்பட்டுள்ளனர். நான் மேற்கொள்ளும் தீர்மானங்கள் கலந்துரையாடல்களுடன் மட்டுப்படாது அவை செயற்படுத்தப்படும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

Posted in Uncategorized

வடக்கு கிழக்கில் தொடர் போராட்டம்! ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் இளைஞர் அணியும் ஆதரவு

வட கிழக்கு பிரச்சினை தொடர்பான ஆர்ப்பாட்டத்திற்கு அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஏறவூர் பற்று செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் பூரண ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு சிவில் சமூக அமைப்புகளால் எதிர்வரும் 3ஆம் திகதி தொடக்கம் 6ஆம் திகதி வரை நடாத்தப்படும் பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பல அமைப்புக்கள் ஆதரவு தெரிவித்துள்ளன, அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஏறவூர் பற்று செங்கலடி பிரதேச சபையின் உறுப்பினர் வனேந்திரன் சுரேந்திரன் இப் போராட்டத்திற்கு தனது முழுமையான ஆதரவினை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,

தமிழ் பேசும் மக்களின் தாயகமான வடகிழக்கு பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் நில ஆக்கிரமிப்பு, மனித உரிமை மீறல்கள், பாரம்பரிய இந்து ஆலயங்களை அழிக்கும் செயற்பாடுகள், தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் சிங்கள குடியேற்றங்கள், முஸ்லீம் மக்களின் ஜனாசாக்களை எரிப்பது, தமிழ் முஸ்லிம் அப்பாவி இளைஞர்கள் மீது ஏவி விடப்பட்டுள்ள பயங்கரவாத தடைச் சட்டம் , சிறைகளில் விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் என தமிழ் பேசும் மக்களின் தாயகத்தில் திட்டமிட்டு நடாத்தப்படும் இன ஒடுக்குமுறைக்கு எதிராக வடகிழக்கு சிவில் சமூக அமைப்புக்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.

உரிமைகளை இழந்து நீதி மறுக்கப்பட்ட சமூகமாக வாழும் எனது உயிர் இருக்கும் வரை நான் தொடர்ந்தும் மக்களுடன் பயணம் செய்வேன் என்பதை இந்த போராட்டத்தின் ஊடாக தமிழ் மக்கள் புரிந்துகொள்வார்கள் என்று தெரிவித்துள்ளது.

துறைமுக தொழிற்சங்கங்கள் – பிரதமர் மஹிந்தவுக்கிடையில் பேச்சுவார்த்தை

கொழும்பு துறைமுக தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து முதலாம் திகதி திங்கட்கிழமை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தையொன்றை முன்னெடுக்கவுள்ளன.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முழுமையாக துறைமுக அதிகாரசபையின் கீழ் கொண்டுவரும் வரை போராட்டத்தை முன்னெடுப்பதாகவும் தொழிற்சங்கங்கள் இறுக்கமான தீர்மானத்தில் உள்ளனர்.

கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை முழுமையாக கைப்பற்ற போராட்டம் | Virakesari .lk

கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு கொடுப்பதாக குற்றம் சுமத்தி தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாகவும் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், தொழிற்சங்கங்களின் செயற்பாடுகளினால் அரசாங்கதிற்குள் பல்வேறு கருத்து முரண்பாடுகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முதலாம் திகதி திங்கட்கிழமை துறைமுக தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபடவுள்ளார்.

இலங்கை சுதந்திர சேவையர் சங்கத்தின் தலைவர் சுசந்த, இது குறித்து தெரிவிக்கையில்,

துறைமுக தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக துறைமுக அதிகார சபைக்கும், அரசாங்கத்திற்கும் பாரிய அளவிலான நட்டம் ஏற்படப்போகின்றது.

இதற்கு நாம் பொறுப்பல்ல, அரசாங்கமே இதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏற்கனவே நாடு கடனில் நெருக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டிற்கு மேலும் நட்டத்தை ஏற்படுத்தும் தீர்மானங்களை அரசாங்கம் எடுப்பதன் காரணமாகவே இந்த நிலைமைகள் உருவாகியுள்ளன.

இந்நிலையில் இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எம்முடன் கலந்துரையாட இணக்கம் தெரிவித்துள்ளார். அதற்கமைய நாளைய தினம்(இன்று) காலை பத்து மணிக்கு பிரதமரை சந்தித்து நாம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளோம்.

இந்த பேச்சுவார்த்தையில் எமக்கு நல்ல செய்திகள் கிடைக்கும் என நம்புகிறோம், குறிப்பாக கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் முற்றுமுழுதாக துறைமுக அதிகார சபைக்கே கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.

ஆனால் அதற்கு இணக்கம் எட்டப்படவில்லை என்றால் நாடு தழுவிய போராட்டங்களை முன்னெடுக்கவும் நாம் தயாராகவே உள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்திற்கு கிழக்கு மாகாணத்தின் பல்வேறு தரப்பினரும் ஆதரவு

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் விஸ்வரூபம் எடுத்து வரும் தமிழின அழிப்பு மற்றும் பௌத்தமயமாக்கலுக்கு எதிராக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்திற்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள சிவில் அமைப்புகள்,பொது அமைப்புகள்,அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

மட்டக்களப்பில் இன்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலேயே இவ்வாறு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் விசேட கூட்டம் இன்று அமெரிக்க மிசன் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது வாகனப்பேரணி முன்னெடுக்கப்படுவதற்கும், அது தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுப்பது குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

நடைபெறவுள்ள இந்த பேரணிக்கு இனபேதங்களையும், கட்சி அரசியலையும் மறந்து அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 03ஆம் திகதி முதல் 06ஆம் திகதி வரை பொத்துவிலிருந்து மாபெரும் வாகன பேரணி வடக்கின் பொலிகண்டி வரையில் நடைபெறவுள்ளது.

இதனடிப்படையில், தொல்பொருள் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், வனப் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் மகாவலி அபிவிருத்தி அதிகார சபை ஊடாக பௌத்தமயமாக்கல் திட்டங்களை அரசாங்கம் முனைப்போடு நடைமுறைப்படுத்தி வருவதாகவும் அவற்றினை நிறுத்தி தமிழர்களின் தாயகத்தினை பாதுகாப்பதற்கு அனைவரும் முன்வர வேண்டும் என இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டு போர் மௌனிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழர் பகுதிகள் சிங்கள மயமாக்கல் என்னும் நிகழ்ச்சி திட்டத்தின் மூலமாக காணிகள் அபகரிக்கும் நிலையுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் இதன்போது தெரிவித்துள்ளார்.

இந்த மக்கள் எழுச்சி போராட்டத்திற்கு வடகிழக்கு எங்கும் உள்ள தமிழ் பேசும் உறவுகளும் ஆதரவினை வழங்கி மிக பிரமாண்டமான பேரணியாக இதனை நடாத்த வேண்டும். இலங்கை அரசாங்கத்தினால் தமிழ் பேசும் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல ஆதரவு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த நாட்டில் தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக ஜனநாயக விரோதமான முறையில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற அநீதிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் இந்த போராட்டத்திற்கு கிழக்கு மாகாண மக்கள் முழுமையான ஆதரவினை வழங்குவதற்கு தயாராகியிருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இந்த போராட்டத்தின் இறுதி நிகழ்வு வரையில் எனது பங்களிப்பு இதற்கு இருக்கும்.இந்த போராட்டத்திற்கு எவ்வாறான தடைகள் விதித்தாலும் அனைத்து தடைகளையும் உடைத்து இந்த போராட்டத்தினை வெற்றியடையச்செய்வேன். இன்றைய நிமையினை உணர்ந்து இளைஞர்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.

வடக்கு – கிழக்கு தமிழர்களின் தாயகம்,தமிழர்களின் தாயகம்அங்கீகரிக்கப்பட வேண்டுமானால் அரசியல் கட்சி பேதங்களுக்கு அப்பால் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த பேரணியானது தமிழர்களுக்கு மிகவும் முக்கியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.சிவயோகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள்,கட்சிகளின் பிரதிநிதிகள்,சர்வமத அமைப்புகளின் பிரதிநிதிகள், கால்நடை பண்ணையாளர்கள் சங்க பிரதிநிதிகள், இளைஞர், மகளிர் அணிகளின் பிரதிநிதிகள் என பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Posted in Uncategorized