நாட்டில் மேலும் 03 கொரோனா மரணங்கள்,COVID – 19 மரணங்களின் எண்ணிக்கை 316 ஆக உயர்வடைந்துள்ளது

மேலும் 03 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள COVID – 19 மரணங்களின் எண்ணிக்கை 316 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

5ம் திகதி மலையகம் உள்ளிட்ட நாடளாவிய ரீதியில் பணிபகிஷ்பரிப்புக்கு பொது அழைப்பு

பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு உள்ளிட்ட தொழிலாளர்களின் நலன்புரி சார்ந்த விடயங்களுக்கு ஏற்கனவே முதலாளிமார் சம்மேளனத்திடம் முன்வைத்த கோரிக்கைகளை அவர்கள் ஏற்க மறுத்துள்ளனர் என தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

கொட்டகலை சீ.எல்.எப் காரியாலயத்தில் இன்று (31) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

எதிர்வரும் 6ம் திகதி சம்பள நிர்ணய சபையில் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தைக்கு தொழிலாளர்கள் மற்றும் ஏனைய தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகள் அவர்களின் ஒற்றுமையை வெளிக்கொணரும் வகையில் பேச்சுவார்த்தைக்கு முந்திய தினமான 5ம் திகதி மலையகம் உள்ளிட்ட நாடளாவிய ரீதியில் அடையாள வேலை பணிபகிஷ்கரிப்பு ஒன்றை நடத்த தீர்மானித்துள்ள நிலையில் இது தொடர்பில் ஏனைய தொழிற்சங்கங்கள் பொது அமைப்புகள் தொழிலாளர்கள் அணைவருக்கும் பொதுவான அழைப்பு விடுப்பதாக தெரிவித்தார்.

தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 25 ரூபாயால் உயர்த்தி 725 ரூபாயாகவும், மேலும் 50 ரூபாய் கொடுப்பனவுடன் வரவுக்கு ஏற்ற கொடுப்பனவு உள்ளிட்ட உற்பத்தி திறன் அடங்கிய தொகை ஊடாக ஆயிரம் ரூபாவை வழங்க சம்மதித்துள்ளனர்.

அதை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை. அத்துடன் இந்த தொகையினை வழங்குவதற்காக கம்பனி தரப்பில் நிபந்தனைகளும் முன்வைக்கப்பட்டது. அதில் கூட்டு ஒப்பந்தத்தை நான்கு வருடங்களுக்கு ஒரு முறை செய்ய வேண்டும் எனவும், ஒவ்வொரு தோட்டத்திலும் பறிக்கப்படும் கொழுந்தினை இரண்டு கிலோகளாக அதிகரிக்க வேண்டும் எனவும் அவர்கள் முன்வைத்தனர்.

இதை நாமும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிடும் தொழிற்சங்கங்களும் நிராகரித்தோம். இந்த நிலையில் எதிர்வரும் 6ம் திகதி சம்பள நிர்ணய சபையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளது.

அதேநேரத்தில் தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள் ஆகியவற்றிற்கிடையில் ஒற்றுமை இல்லை என்பது அவர்களின் எண்ணப்பாடாக உள்ளது. ஆகையால் எதிர்வரும் 5ம் திகதி தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், தொழிலற்றவர்கள் என அனைத்து தரப்பினருடனும் தொழிற்சங்கங்கள் மற்றும் பொது அமைப்புகள் அனைத்தினதும் ஒத்துழைப்புடனும், ஒருநாள் அடையாள பணிபகிஷ்கரிப்பு ஒன்றை நடத்தி கம்பனிகளுக்கு ஒற்றுமையை வெளிக்கொணரவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த பணிபகிஷ்கரிப்பு அரசாங்கத்திற்கு எதிரானது அல்ல. மாறாக ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வுக்கு காட்டப்படும் ஒற்றுமைக்காகவே. இவ்வாறான நிலையில் சம்பள விடயம் தொடர்பில் பல்வேறு தொழிற்சங்கங்கள் அவர்களின் நிலைபாட்டினை தெரிவித்து வரும் அதேவேளை பொது அமைப்புகளும் கருத்துகளையும் முன்வைத்து வருகின்றனர்.

கட்சி என்ற ரீதியில் கொள்கைகள் வேறுபாடாக இருந்தாலும் தொழிலாளர்களின் நியாயமான சம்பளத்தினை பெற்றுக்கொள்ள அவர்கள் கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்.

அந்தவகையில் இந்த பணிபகிஷ்கரிப்புக்கு முழுமையான ஆதரவு கிட்டும் என நாம் பொதுவாக அழைப்பு விடுகின்றோம்.

Posted in Uncategorized

இலங்கை தொடர்பில் ஜெனிவாவில் எடுக்கும் தனது நிலைப்பாட்டை தெரிவித்தது சீனா..!

சர்வதேச அரங்கில் உள்ள எந்தவொரு நாட்டினதும் உள்ளக விடயங்களில் பிற நாடுகள் தலையீடு செய்வதற்கு இடமளிக்க முடியாது என்பதே மக்கள் சீனக் குடியரசின் நிலைப்பாடாகும். இதனை அடியொற்றியதாகவே ஜெனிவாவிலும் எமது தீர்மானமும் செயற்பாடும் இருக்கும் என்று இலங்கைக்கான சீன தூதரகத்தன் அரசியல் பிரிவுத் தலைவரும், ஊடகப்பேச்சாளருமான லு சொங் தெரிவித்தார்.

அந்த வகையில் மனித உரிமைகள் சார்ந்த விடயங்கள், இனமுரண்பாடுகளுக்கான தீர்வுகள் என்பதுள்ள விடயங்கள் இலங்கையின் உள்ளக விடயங்களாகும். இதில் மக்கள் சீனக் குடியரசு ஒருபோதும் தலையீடு செய்யாது. ஏனைய நாடுகள் தலையீடு செய்வதையும் விரும்பாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் மனித உரிமைகள் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதடினப்படையில் சில நிகழ்ச்சி நிரல்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மார்ச் மாதக் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட் இலங்கை குறித்த மீளாய்வு அறிக்கையில், இலங்கை அபாயரகமான பாதையில் பயணிப்பதாகவும், அதேநேரம், ஏற்கனவே நடைபெற்ற விடயங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலைச் செய்வதற்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதுள்ளிட்ட பல விடயங்களை குறிப்பட்ட காட்டமான உள்ளடக்கங்கள் காணப்படுகின்றன. இதுபற்றிய மக்கள் சீனக் குடியரசின் நிலைப்பாடு என்னவாக உள்ளது என்றும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் இணை அனுசரணை நாடுகளினால் புதிய பிரேரணை கொண்டுவரப்படவுள்ள நிலையில் அதன் மீதான வாக்கெடுப்பில் மக்கள் சீனக் குடியருசு எவ்விதமான பிரதிபிலிக்கப்போகின்றது என்றும் வினவியபோதே இலங்கைக்கான சீன தூதரகத்தின் அரசியல் பிரிவுத்தலைவர் மற்றும் ஊடகப்பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தெரிவித்துள்ள விடயங்கள் வருமாறு, நீங்கள் எழுப்பிய இரண்டு வினாக்கள் தொடர்பில் எமது நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது. முதலாவதாக, மனித உரிமைகள், இன முரண்பாடுகளுக்கான தீர்வுகள் தொடர்பிலான விடயங்கள் இலங்கையின் உள்ளக விடயமாகும். இலங்கை இறைமை உள்ள நாடு என்ற வகையில் இந்த விடயத்தில் பிற தரப்புக்கள் தலையிடுவது பொருத்தமற்றதாகும்.

எம்மைப் பொறுத்தவரையில் மக்கள் சீனக் குடியரசின் உள்ளக விடயங்களில் பிறநாடுகள் தலையீடுகளைச் செய்வதை விரும்புவதில்லை. அதற்கு இடமளிப்பதும் இல்லை. அதுபோன்றே உலகில் உள்ள எந்தவொரு நாட்டினதும் உள்ளக விடயங்களில் பிற நாடுகளோ அல்லது சக்திகளோ தலையீடு செய்வதற்கு இடமளிக்கமுடியாது. இதனை அடியொற்றியதாகவே ஜெனிவாவிலும் எமது நிலைப்பாடு அமையும்.

அடுத்ததாக, மனித உரிமைகள் விடயமானது இறைமையுள்ள ஒவ்வொரு நாடுகளினாலும் பின்பற்றப்படும் விடயமாகும். இந்த விடயம் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு அரசியல் மயப்படுத்தப்பட்ட மனித உரிமைகள் விடயத்தினை நாடொன்றுக்கு எதிராக ‘ஆயுதமாக’ பயன்படுத்துவதற்கு அனுமதிக்க முடியாது என்றார்.

இதேவேளை, இலங்கை விவகாரம், ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக்கு அனுப்பட்டு செயலாளர் நாயகத்தின் பரிந்துரையில் ஐ.நா.பாதுகாப்புச்சபைக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தி;ற்கு அனுப்புவதற்காக அனுப்படுகின்றபோது, சீனா தனது வீட்டோவைப் பயன்படுத்துமா என்று வினா எழுப்பியபோது, “அவ்வாறான நிலைமை ஏற்படுமென்று தெரியவில்லை” இருப்பினும் “நான் மேற்குறிப்பிட்ட நிலைப்பாடே இந்த வினாவுக்கும் பொருந்தும்” என்றும் தெரிவித்தார்.

துறைமுக சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனம் – ஜனாதிபதி

இலங்கை துறைமுக அதிகார சபையின் அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவையாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பிரகடனப்படுத்தியுள்ளார்.

அதிவிசேட வர்த்தமானியின் ஊடாக ஜனாதிபதி துறைமுக சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவின் ஆலோசனைக்கு அமைய, ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவின் கையெழுத்துடன் இந்த வர்த்தமானி இன்று (30.01.2021) வெளியிடப்பட்டது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் இந்தியாவிற்கு வழங்கப்படுவதனை எதிர்த்து சட்டப்படி வேலை உள்ளிட்ட பல்வேறு வழிகளில் தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 10 கட்சிகளின் அதிரடி தீர்மானம்

கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு அல்லது வேறு தரப்பினருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமாயின் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 10 கட்சிகள் தீர்மானித்துள்ளன.

அமைச்சர் வீமல் வீரவன்சவின் கொழும்பில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இன்று இடம்பெற்ற குறித்த கட்சித் தலைவர்கள் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

இதன்போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொவிட் தொற்றுக்கு உள்ளாகி பூரணமாக குணமடைந்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மற்றும் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஆகியோரும் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Posted in Uncategorized

இனப்பிரச்சனைக்கு தீர்வு ஏற்படாத இராணுவ பயிற்சி ஆபத்தானது -ரெலோ இளைஞர் அணி செயலாளர் சபா குகதாஸ் எச்சரிக்கை

இனப்பிரச்சனைக்கு தீர்வு ஏற்படாத இராணுவ பயிற்சி ஆபத்தானது என்கிறார் முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் ரெலோ இளைஞர் அணி செயலாளருமான சபா குகதாஸ்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்

இலங்கை அரசாங்கத்தின் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறிய 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான இராணுவப் பயிற்சி இந்த நாட்டின் தமிழ் சிங்கள மக்களிடையே இன நல்லிணக்கம் ஏற்படாமல் தொடர்ந்தும் சந்தேகங்கள், முரண்பாடுகள், பரஸ்பரம் இனங்களிடையே உரிமைகளை பகிர்ந்து கொள்ளாமை, போர்க்குற்றங்கள் மனிதப் படுகொலைக்கான நீதி நியாயங்கள் கிடைக்கப் பெறாத வரை இராணுவ பயிற்சியை தமிழர் தலைமைகள் முழுமையாக ஏற்றுக் கொள்ளுதல் இன ரீதியாக பாரிய ஆபத்துக்களை உருவாக்கும். இலங்கை அரசாங்கம் கட்டாயப் படுத்தலில் வடக்கு கிழக்கில் கொடுப்பது வேறு. அதனை தமிழர் தரப்பு தலைமைகளின் ஆதரவுடன் கொடுப்பது இனத்தின் நீதிக்கான பயணத்தில் பின்னடைவை உருவாக்கும்.

இலங்கை இராணுவம் போர் விதி முறைகளை மீறியுள்ளமை தொடர்பாக நீதி கேட்கும் தமிழர் தரப்பு அந்த குற்றங்களை புரிந்த இராணுவ தளபதியே பொறுப்பாக இருக்கும் போது இந்த இராணுவத்தை வழி நடாத்திய ஆட்சியாளர்களே ஆட்சிக் கதிரையில் இருக்கும் போது அவர்களின் பயிற்சியை நாமே ஏற்றுக் கொள்வது குற்றம் இழைத்தவர்களை நாமே பிணை எடுப்பதற்கு நிகரானதாகும் இங்கு தான் தமிழர்களுக்கு ஆபத்து உருவாகிறது.

இராணுவப் பயிற்சி தலைமைத்துவ பண்புகளை நன் நடைத்தைகளை உருவாக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இடம் இல்லை. ஆனால் அப் பயிற்சி கொடுக்கும் தரப்பிடம் அவ்வாறான எண்ணம் உள்ளதா என்பதை நாம் ஆராய வேண்டும் அவ்வாறு இலங்கை இராணுவத்திடம் உள்ளாதா? என்றால் தமிழர் தரப்பின் சாதாரண பிரஐை கூட சொல்லுவான் பதில் இல்லை என்று.

இராணுவப் பயிற்சியில் அடிப்படைப் பயிற்சி என்பது பாலர் பாடசாலை போன்றது பாலர் பாடசாலையில் கற்பிக்கப்படும மனப்பதிவை எப்படி ஒரு மாணவன் தன் வாழ்வில் நடைமுறைப்படுத்துகின்றானோ அதே போன்றது தான் இராணுவப் பள்ளியில் வழங்கப்படும் அடிப்படை பயிற்சியும் அமையும்.

இராணுவ பயிற்சி கல்லூரியில் 16 வயது மாணவனை அனுப்பி பயிற்சி பெற வைத்தால் அங்கு பயிற்றப்படும் கோசம், தேசியம் சார்ந்த விடையங்கள்,தேசியக் கொடியின் மகிமை , நாடு பற்றிய கொள்கைகள் என பல விடையங்கள் பயிற்று விக்கப்படும். தற்போது தமிழர்களின் பூர்விக அடையாளங்களை மாற்றியமைக்கும் இலங்கை அரசு தமிழ்த் தேசியம் தொடர்பாக பயிற்சி கல்லூரியில் மூச்சு விடுமா?

தமிழ்த் தேசியம் பேசி வாக்கு வேட்டையில் ஈடுபடும் தமிழர் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் சிலர் இதனை புரிந்து கொள்ள வேண்டும் எழுந்த மானமாக தமிழில் பயிற்சி கொடுக்கலாம் முன்னாள் போராளிகளை பயிற்சி ஆசிரியர்களாக நியமிக்கலாம் எனவும் இல்லாவிட்டால் தென் இந்தியாவில் இருந்து பயிற்று விற்பாளர்களை வரவழைக்கலாம் என கூறுவது மிகவும் பொறுப்பற்ற கருத்துக்கள் மாத்திரமல்ல இனத்தின் விடுதலைக்கான தூர நோக்குப் பார்வை இல்லாததன் வெளிப்பாடாகவே இக் கருத்துக்கள் அமைந்துள்ளன.

முன்னாள் போராளிகளை தொடர்ந்தும் விசாரணையில் சந்தேக கண் கொண்டு புலனாய்வார்களின் கிடுக்குப் பிடியில் வைத்திருக்கும் இராணுவ இயந்திரத்திடம் , தமிழ் மொழியைப் புறக்கணிக்கும் நடவடிக்கையை ஒரு நிகழ்ச்சி நிரலாக செய்யும் அரசாங்கத்திடம், தென்னிந்திய தமிழர்களின் ஆதரவு ஈழத் தமிழர்கள் பக்கம் இருப்பதை பொறுத்துக் கொள்ளாமல் தமிழக மீனவர்களை ஈவிரக்கம் அற்ற வகையில் கொன்றேழித்த இலங்கை அரசாங்கத்திடம் நல்லெண்ண வெளிப்பாடுகளை எதிர்பார்க்க முடியுமா? தமிழர் தலைவர்கள் நிதானமான முடிவுகளை கருத்துக்களை முன் வைப்பதுடன் தமிழர் தேசம் பலம் இழக்கும் நிலைக்கு பாதை அமைக்கக் கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

மகாத்மா காந்தியின் 73 ஆவது நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு

மகாத்மா காந்தியின் 73ஆவது நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் இன்று கடைப்பிடிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்பாக உள்ள அவரது உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ்ப்பாணம் இந்தியத் துணைதூதரகத்தின் ஏற்பாட்டில் இந்த அஞ்சலி நிகழ்வு இன்று முற்பகல் 10 மணிக்கு இடம்பெற்றது.

நிகழ்வில் இந்திய துணைத் தூதுவர் கே.பாலசந்திரன்இ நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன்இ யாழ்ப்பாணம் மாநகர முதலவர் வி.மணிவண்ணன்,ரெலோ யாழ் மாவட்ட பிரதி தலைவரும், யாழ் மாநகரசபை துணை முதல்வருமான ஈசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மகாத்மா காந்தி என்று அழைக்கப்படும் மோகன்தாஸ் காந்தி 1869ஆம் ஆண்டு ஒக்டோபர் 2ஆம் திகதி குஜராத் மாநிலம் போர்ப்பந்தரில் கரம்சந்த் காந்தி-புத்லிபாய் தம்பதியருக்கு மகனாக பிறந்தார்.

இந்தியாவின் விடுதலைக்காக வித்திட்ட முக்கியத் தலைவர்களின் இவருடைய பெயர்தான் முதன்மையாக உச்சரிக்கப்பட்டது.

இந்திய விடுதலை போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை என அனைவராலும் அழைக்கப்படுகிறார்.

சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழிவகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.

அகிம்சை முறையில் போராடிய மகாத்மா காந்தி 1948ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் திகதி புதுடில்லி பிர்லா மாளிகை காந்தி சமிதி தோட்டத்தில் நாதுராம் கோட்ஸே ஆல் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

இவரது பிறந்த நாள் இந்தியாவில் காந்தி ஜெயந்தி என்று கொண்டாடப்படுகிறது. இவரது நினைவு நாளை தியாகிகள் தினமாக போற்றுகின்றனர்.

Posted in Uncategorized

பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி மன்னார் விஜயம்!

பரிசுத்த பாப்பரசரின் இலங்கைக்கான திருப்பீடப் பிரதி நிதி அருட்கலாநிதி பிறையன் உடைக்வே ஆண்டகை மன்னார் மறைமாவட்டத்திற்கு நேற்றைய தினம்(29-01-2021) வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் விஜயம் செய்திருந்தார்.

நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (29) மாலை 5.30 மணியளவில் மன்னார் நகரை வந்தடைந்த பரிசுத்த பாப்பரசரின் இலங்கைக்கான திருப்பீடப் பிரதிநிதி அருட்கலாநிதி பிறையன் உடைக்வே ஆண்டகை அவர்கள் மன்னார் நகர பகுதியில் அமைந்துள்ள மடு அன்னையின் திருச் சொரூபத்தில் ஆசி பெற்றார்.

அதனைத் தொடர்ந்து மன்னாரிற்கு வருகை தந்த பிரதி நிதியை மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னான்டோ ஆண்டகை தலைமையில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார், அருட்தந்தையர்கள் , அருட்சகோதரிகள், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் நந்தினி ஸ்ரான்லி டி மேல் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன்,சாள்ஸ் நிர்மலநாதன், ரெலோ மன்னார் நகர முதல்வர் எஸ்.ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் ஆகியோர் வரவேற்றனர்.

இதனையடுத்து மன்னார் நகர பகுதியில் இருந்து மன்னார் புனித செபஸ்தியார் பேராலயம் வரை திறந்த வாகனத்தில் பரிசுத்த பாப்பரசரின் இலங்கைக்கான திருப்பீட பிரதி நிதி மற்றும் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னான்டோ ஆண்டகை ஆகியோர் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதன் போது பாடசாலை மாணவர்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள்,மன்னார் மறைமாவட்ட மக்கள் ஆகியோர் பவனியாக ஆலயம் நோக்கி சென்றனர்.

மன்னார் செபஸ்தியார் பேராலயத்தில் விசேட திருப்பலி இடம் பெற்றதோடு நற்கருனை ஆசீர்வதமும் இடம் பெற்றது.

சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான கவலைகொள்ளத்தக்க அறிகுறிகள் இலங்கையில் – பின்லாந்து தூதுவர்

சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான கவலைகொள்ளத்தக்க செயற்பாடுகளின் அறிகுறிகள் இலங்கையில் தென்படுவதாக இலங்கைக்கான பின்லாந்து தூதுவர் ஹரி கமரெய்னென் தெரிவித்துள்ளார்.

இலங்கை, பாகிஸ்தான், பூட்டான் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான பின்லாந்து நாட்டின் தூதுவர் ஹரி கமரெய்னென் இதுகுறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறார்.

அதன்படி இலங்கையில் வசிக்கும் மிகக்குறுகிய பின்லாந்து தமிழ்ச்சமூகத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியிருக்கும் அவர், இலங்கையில் சிறுபான்மை தமிழ்ச்சமூகத்தின் நிலை தொடர்பில் கேட்டறிந்துள்ளார்.

இதுகுறித்து அவர் பின்வருமாறு டுவிட்டரில் பதிவுசெய்திருக்கிறார்:

‘இலங்கையில் வாழும் மிகக்குறுகிய பின்லாந்து தமிழ்ச்சமூகத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்தேன்.

இலங்கையின் சிறுபான்மைத் தமிழர்களின் நிலை தொடர்பில் சுருக்கமாக விளக்கமளித்தமைக்கு அவர்களுக்கு நன்றி கூறுகிறேன்.

துரதிஷ்டவசமாக சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான கவலைகொள்ளத்தக்க செயற்பாடுகளின் அறிகுறிகள் இலங்கையில் தென்படுகின்றன’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

பேருந்து நிலையத்தில் தமிழுக்கு இரண்டாமிட விவகாரம்: ரெலோ துணை மேயர் பிரேரணை சமர்ப்பிப்பு!

யாழ். மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நெடுந்தூர பேருந்து நிலையத்தில் உள்ள பெயர் பலகைகளில் தமிழ் மொழிக்கு முதலிடம் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி,ரெலோ யாழ் மாவட்ட பிரதி தலைவரும், யாழ் மாநகரசபை துணை முதல்வருமான ஈசன் யாழ் மாநகரசபையில் பிரேரணை சமர்ப்பித்துள்ளார்.

அடுத்த அமர்வில் இந்த விவகாரம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

அண்மையில் புதிதாக திறந்து வைக்கப்பட்ட நெடுந்தூர பேருந்து நிலையத்தின் அறிவிப்பு பலகைகளில், தமிழ் மொழி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள விடயத்தை ரெலோ பிரதி மேயர் ஈசன் வெளிப்படுத்தியிருந்தார்.

Posted in Uncategorized