வடக்கு, கிழக்கில் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட வேண்டும் – காதர் மஸ்தான்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு செயற்பாடுகள் விரைவில் நிறைவு செய்யப்பட வேண்டும் என்றும் காதர் மஸ்தான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் 01 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்ற இடைக்கால வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாடு முகம் கொடுத்துள்ள நெருக்கடியான காலகட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள சிறந்த வரவு செலவுத் திட்டமாக இந்த வரவு செலவு திட்டத்தை குறிப்பிட முடியும். மனிதநேய உதவிகள் தேவைப்படும் அனைவருக்கும் அதனை பெற்றுக் கொடுக்க இதன் மூலம் வழி வகுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 30 வருட யுத்த சூழ்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு ,கிழக்கு மக்களின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு நடவடிக்கைகள் இன்னும் முற்றுப்பெறாமலே உள்ளன. இந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் அவை நிறைவு செய்யப்பட வேண்டும் என நான் கேட்டுக் கொள்கின்றேன்.

வடக்கு கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் சுகாதாரம், கல்வி,வீதி, நீர் வினியோகம் போன்ற அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கு 36 ஆயிரத்து 100 மில்லியன் ரூபாய் தேவை என சம்பந்தப்பட்ட அரசாங்க அதிபர்கள் தெரிவித்துள்ளனர். அந்த நிதி வழங்கப்பட்டு விரைவில் அந்த நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட வேண்டும்.

அது தொடர்பாக நாம் ஜனாதிபதி மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். கட்டம் கட்டமாக அதனை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி யளிக்கப்பட்டுள்ளது என்றார்.

ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கொலை வழக்கிலிருந்து முன்னாள் SP லக்‌ஷ்மன் குரே, செல்வராஜா கிருபாகரன் ஆகியோர் விடுதலை

முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே உள்ளிட்ட 16 பேரை கொலை செய்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்த அப்போதைய கம்பஹா பொலிஸ் அத்தியட்சகர் லக்‌ஷ்மன் குரே மற்றும் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் என கூறப்படும் ‘மொரிஸ்’ என்றழைக்கப்படுகின்ற செல்வராஜா கிருபாகரன் ஆகியோர் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கம்பஹா இலக்கம் ஒன்று நீதிமன்றத்தில் நீதவான் மாபா பண்டார வழக்கின் தீர்ப்பை இன்று(01) அறிவித்தார்.

2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 06ஆம் திகதி வெலிவேரிய காந்தி விளையாட்டரங்கிற்கு அருகில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே உள்ளிட்ட 16 பேர் கொலை செய்யப்பட்டனர்.

2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் திகதி அப்போதைய கம்பஹா பொலிஸ் அத்தியட்சகராக செயற்பட்ட லக்‌ஷ்மன் குரே, குறித்த குண்டுத் தாக்குதலுடன் நேரடியாக தொடர்புபடடுள்ளதாக குற்றஞ்சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.

Posted in Uncategorized

நாடு வங்குரோத்து அடைந்த சந்தர்ப்பம்

இலங்கை கடந்த ஏப்ரல் மாதம் கடனை திருப்பி செலுத்த முடியாத நாடாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்னரே வங்குரோத்து நாடாக மாறியிருந்தது என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பெரும் வரிக் குறைப்புகளும், கடன்களை தீர்ப்பதற்காக பணம் அச்சிடப்பட்டமையும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு பிரதான காரணமாக அமைந்துள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மத்திய வங்கியினால் தற்போது அமுல்படுத்தப்படும் வேலைத்திட்டங்களை அடுத்த சில வருடங்களில் சரியாக நடைமுறைப்படுத்தாவிட்டால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் கடுமையான வீழ்ச்சியை சந்திக்கும் என நேற்று (31) பாராளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போது மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டியிருந்தார்.

அனைத்துலக வலிந்து காணாமலாக்கப்பட்டுப் பாதிப்புற்றோர் தினத்தில் தமிழினமே நீதிக்காக ஓரணியில் எழுந்துநில்!

2000 த்திற்கும் மேற்பட்ட நாட்களாக 138 உயிரிழப்புகளுடன் உறுதியுடன் நீதிக்காகப் போராடும் பாதிப்புற்ற கிட்டிய குடும்ப உறுப்பினர்களுக்கு ஆதரவளி- மூத்த அரசியல் ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன்.

சிறிலங்கா அராசங்கம் ஈழத்தமிழ் மக்கள் மேல் மேற்கொண்ட இனஅழிப்பு முள்ளிவாய்க்கால் படையெடுப்பு முடிவடைந்து 13 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. ஆயினும் 2009 முதலே தங்கள் கிட்டிய உறுப்பினர்களை வலிந்து காhணமலாக்கிய சிறிலங்காவின் இனஅழிப்புச் செயலுக்கான தண்டனை நீதியும், தங்களின் வாழ்வுக்கான பரிகார நீதியும் வழங்கப்பட்டே ஆகவேண்டும் எனப் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கிட்டிய குடும்ப உறுப்பினர்கள் 2000க்கும் மேலான நாட்களாக 138 போராட்டக்கார்கள் நீதியின் தாகத்துடனேயே காலமான துன்பத்தையும் தாங்கிக்கொண்டு உறுதியுடன் போராடிக் கொண்டிருக்கின்றனர். இந்நிiலையில் ஐக்கிய நாடுகள் சபையின் 11வது வலிந்து காணாமலாக்கப்பட்டுப் பாதிப்புற்றோருக்கான அனைத்துலக நாள் ஆகஸ்ட் 30ம் திகதி இடம்பெறுகிறது. இந்நேரத்தில் உலக இனமாக உலகின் பலநாடுகளிலும் இன்று திகழ்ந்து கொண்டிருக்கும் உலகத்தமிழர்கள், ஈழத்தின் தெருக்களில், வலிந்து காணாமலாக்கப்பட்டுப் பாதிப்புற்றோரின் கிட்டிய குடும்ப உறுப்பினர்கள், 2009 ஆண்டு முதல் இன்று வரை 13 ஆண்டுகளாகக் குளிரிலும் வெய்யிலிலும் பசியிலும் நோயிலும் கொஞ்சமுமு; தளராது தெருவில் இறங்கி, “எங்கள் கிட்டிய குடும்ப உறுப்பினர்களுக்கு என்ன நடந்தது? எங்கு உள்ளனர்? எத்தகை நிலையில் உள்ளனர்? என இதற்குப் பொறுப்பான சிறிலங்கா அரசாங்கமே பதில் சொல்” என, வாடி வதங்கி ஏங்கித் துடித்துப் போராடிக் கொண்டிருக்கிற, பாதிப்புற்ற எமது உடன்பிறப்புக்களின், துன்பநிலை துயரநிலையை மாற்ற நாம் என்ன செய்துள்ளோம் என்பதை எண்ணிச் செயற்பட வேண்டிய நேரமிது.

ஐக்கிய நாடுகள் சபையில் “ வலிந்தோ அல்லது மனவிருப்பின்றியோ காhணமலாக்கப் பட்டோருக்கான செயற்பாட்டுக் குழு” என்னும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தின் அலுவலகம் பாதிப்புற்றவர்களின் நலன்களுக்காகச் செயற்பட்டுக் கொண்டு இருக்கின்றது. இந்த அலுவலகத்துடன் பாதிக்கப்பட்டவர்களின் கிட்டிய குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள், நலன் விரும்பிகள் எவரும் தொடர்பு கொண்டு வலிந்து காணாமலாக்கப்பட்ட சம்பவம் குறித்த தகவலை, “எல்லா ஆட்களையும் வலிந்து காணாமலாக்கப்படுவதில் இருந்து பாதுகாப்பதற்கான சாசனத்தின்” அடிப்படையில் தெரிவித்து, நீதி கோர உரிமையுண்டு. 06.10.2020 இல் இடம்பெற்ற 36வது கூட்டத்தின் படி பாதிப்புற்றவர்களுடைய குடும்பத்தினருக்கும், பாதிப்புக்குச் சான்றாதாரங்களை அளிக்கக் கூடிய எவருக்கும், இந்த செயற்பாட்டுக் குழுவினர் தங்களாலான இயன்ற உதவிகள் அனைத்தையும் அளித்து அவர்களின் பதிவுகளை மேற்கொள்ளல் வேண்டுமென்ற மேலதிக தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவைப் பொறுத்த மட்டில் பாதிப்புற்றோரின் பதிவுகளை மேற்கொள்வதற்கான தனியான அலுவலகமும் அமைக்கப்பட்டு செயற்பட்டு வருகிறது. ஆயினும் உலகத்தமிழர்கள் குறிப்பாகப் புலம்பெயர் தமிழர்கள் இந்த விடயத்தில் போதிய கவனம் செலுத்தாது இருப்பதால் இழைக்கப்பட்ட குற்றச் செயல்கள் குறித்த பதிவுகள் பல இடம்பெறாத நிலையே தொடர்கிறது.

இந்த செயற்பாட்டுக் குழுவில் ஒரு வழக்கைப் பதிவு செய்வதற்கு

பாதிக்கப்பட்டவரின் முழுப்பெயர்
காணாமலாக்கப்பட்டவரைக் கைதுசெய்த நாள் மாதம் திகதி
எந்த இடத்தில் அது நடந்தது என்பது
அரசு அல்லது அரசு ஆதரவு படையினர் சம்பந்தப்பட்டதற்கான விபரங்கள்
தேடப்பட்டது தொடர்பான ஏதாயினும் தகவல் கிடைத்து இருந்தால் தெரிவித்தல்
அந்தத் தகவலை அளித்தவர் குறித்த விவரம்
என்னும் ஆறு விடயங்களும் உள்ளடக்கப்பட்ட முறையீடு

Email: ohchr-wgeid@un.org
Fax: +41 22 917 9006 (please indicate: “For the attention of: WGEID”).
Mail: Working Group on Enforced or Involuntary Disappearances Office of the High Commissioner for Human Rights Palais des Nations, 8-14 Avenue de la Paix CH-1211 Geneva 10, Switzerland

என்னும் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

அரசு அல்லாதவர்களின் முறையீடுகள் ஏற்கப்பட்டு அதற்கான ஏற்புப் பதில் அளிக்கப்பட்டதன் பின்னரே அவை முறையீடு செய்யப்பட்டது என்கிற சட்டநிலைத் தகுதியைப் பெறும். அவ்வாறு சட்டத்தகுதியை பெற்ற முறையீட்டாளரை நேரடியாகவோ அல்லது ஒன்லைன் மூலமோ செயற்குழுவினர் சாட்சிய நிலையில் ஒரு மணி நேரமளவில் உரையாட அழைப்பர். அந்த உரையாடலின் அடிப்படையிலேயே அதில் உள்ள விடயங்கள் விசாரணைக்குரியனவாகப் பதிவாகும்.

இந்த முறைமையின் வழி பாதிப்புற்றவர்களை அவர்களது பாதிப்புக்கள் குறித்து பதிவுகளை மேற்கொள்ளத் தேவையான சட்ட நெறிப்படுத்தல்கள், பாதுகாப்புக்களை உறுதிப்படுத்தி நம்பிக்கை அளித்தல், மற்றும் தேவையான உளவள சமுகநல உதவிகளை வழங்குவதற்கான அமைப்புக்கள், தமிழர்களால் போதிய அளவில் செயற்படுத்தப்படாமல் இருப்பது ஒரு குறையாகத் தொடர்கிறது.

அதே வேளை பாதிப்புற்றவர்களோ, பாதிப்புற்றவர்களின் உறவினர்கள் நண்பர்கள் ஊரவர்களோ நாட்டின் உள்ளோ அல்லது வெளிநாடுகளிலோ வாழ்ந்தாலும், தங்களின் சாட்சியங்களைப் பதிவதில் அச்சத்தாலோ அக்கறையின்மையாலோ தவறுவதும் இன்னொரு குறைபாடாகத் தொடர்கிறது.

இந்த இரு குறைபாடுகளையும் எந்த அளவுக்கு வெற்றிகரமாகத் தீர்த்து வைக்க முடியும் என்பதில் உலகத் தமிழர்கள் ஒற்றுமையாக ஓரணியில் செயற்பட்டாலே வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்த சான்றாதாரப்படுத்தப்பட்ட தகவல்களையும் தரவுகளையும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தின் வலிந்து காணாமலாக்கப்பட்டுப் பாதிப்புற்றோர்க்கான செயற்பாட்டுக் குழுவினரால் முழுமையாக்க முடியும்.

இவ்விடத்தில் ஐக்கிய நாடுகள் சபை 2010ம் ஆண்டுத் தீர்மானத்தின் மூலம் பிரகடனப்படுத்தி 2011ம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 30ம் திகதியன்று கொண்டாடும் அனைத்துலக வலிந்து காணாமலாக்கப்பட்டதால் பாதிப்புற்றோர் நாளில் சில முக்கிய விடயங்களை ஒவ்வொருவர் உள்ளத்திலும் இருத்த விரும்புகிறது.

வலிந்து காணாமலாக்கப்பட்டோர் என்பதற்கான வரைவிலக்கணம் ஒன்றை எல்லா ஆட்களுக்குமான வலிந்து காணாமலாக்கப்படுதலில் இருந்து பாதுகாப்பதற்கான சாசனத்தின் அடிப்படையில் 18.12.1992 இல் ஐக்கிய நாடுகள் சபை வரைபு செய்துள்ளது. வலிந்து காணாமலாக்கப்படுதல் என்பது “ ஒரு ஆள் அவருடைய விருப்பின்றி கைதுசெய்யப்பட்டோ அல்லது தடுத்து வைக்கப்பட்டோ அல்லது கடத்தப்பட்டோ அல்லது அவருடைய சுதந்திரம் அரசாங்கத்தாலோ அல்லது அரசாங்கத்தின் பலநிலைகளிலும் உள்ள வேறுவேறான அதிகாரிகளாலோ ஒடுக்கப்பட்டோ அல்லது திட்டமிட்ட குழுக்களாலோ அல்லது தனிப்பட்ட ஆட்களாலோ மறுக்கபட்டோ, அதற்கு அரசாங்கத்தின் நேரடியான அல்லது மறைமுகமான தொடர்பு அல்லது விருப்பம் அல்லது ஒப்புதல் இருந்து, அதன் தொடர்ச்சியாக, அந்த ஆளுக்கு என்னவானது என்றோ அல்லது அவருடைய சுதந்திரம் ஏன் மறுக்கபட்டதென்றோ, அவரைச் சட்டத்தால் பாதுகாப்பதற்கு வெளியாக, வெளிப்படுத்த மறுப்பது” எனலாம். இலங்கையில் யுத்தம் முடிவுற்ற நிலையில் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்தவர்களும் பாதுகாப்புப் படையினரால் விசாரணைக்கென்று அழைத்துச் செல்லப்பட்டவர்களுமே வலிந்து காணாமலாக்கப்பட்டோரில் மிக மிக அதிகம் என்பதால் இந்தப் பிரச்சினை யுத்தத்தின் விளைவாகப் பார்க்கப்படாது அனைத்துலக சட்டங்களின் மீறலாகப் பார்க்கப்பட வேண்டியவொன்றாக உள்ளது.

இந்த வலிந்து காணாமலாக்கப்படுதல் என்பது இன்று அரசியல் எதிர்க்கருத்துள்ளவர்களை இல்லாமல் செய்வதற்கான உத்தியாக உலகெங்கும் பரவலாகக் கையாளப்படும் நிலையில் இச்செயல் எவ்வளவு கொடுமையானது உடன் தடுக்கப்பட வேண்டியது என்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை சில உதாரணங்களைத் தந்துள்ளது.

பாதிப்படைபவர்கள், சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதுடன் அவர் உயிர்வாழ்தலுக்கான தொடர்ச்சியான அச்சப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றார். அதே வேளை அவருடைய குடும்பத்தவர்க்கு தெரியப்படுத்தாத நிலையில் அவருக்கு உதவிக்கு யாரும் வரமுடியாத நிலை உருவாக்கப்படுகிறது. அவருக்கான சட்டப்பாதுகாப்பு எல்லை நீக்கப்பட்டு சமுகத்தில் இருந்து காணாமலாக்கப்படுகிறார். இது அவருடைய எல்லா உரிமைகளையுமே அழிக்கும். தன்னைப் பிடித்து வைத்திருப்பவரின் இரக்கத்திலேயே தங்கி வாழும் நிலையை உருவாக்கும்.
பாதிப்படைபவருக்கு இறுதியாக மரணமடைதல் என்பது மட்டும் இல்லாது, எல்லாவிதமான மனிதாபிமானமற்ற செயலுக்கும் அவர் உள்ளாக்கப்பட்டு உள உடல் வடுக்களை அடைய வைத்து மிகக் குரூரமான சித்திரவதைகளுக்கு உள்ளாகுதல் மிகுதியாகி கொடுங்கனவாக அவர் எதிர்காலம் ஆக்கப்படுகிறது.
பாதிப்படைபவரின் கிட்டிய குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் அவர் உயிருடன் உள்ளாரா இல்லையா? எங்கு உள்ளார், எத்தகைய சுகநிலையில் உள்ளார் போன்ற ஏக்கத்தால் மனஉளைச்சலை அனுபவிப்பார்கள். நம்பிக்கைக்கும் ஏமாற்றத்திற்கும், அலைச்சல்களுக்கும் காத்திருப்புக்களுக்கும், உள்ளாகி பல ஆண்டுகள் எந்தச் செய்தியையும் தெரிந்து கொள்ள இயலாத நிலையில் தவிப்பார்கள். உண்மையைத் தேடும் தங்களையும் வெருட்டி இதே கதியை ஏற்படுத்திடுவரென அஞ்சுவார்கள்.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் துன்பங்கள பெரும்பாலும் பொருளாதாரநிலையுடனும் தொடர்புடையதாகிறது. பாதிப்புற்றவரே குடும்பத்தின் ஒரே உழைப்பாளராக இருந்தால் ஏற்படும் உணர்ச்சி மேலீடு உலகியல் வாழ்வையே வெறுக்கச் செய்து விடும். இதனை பாதிப்புற்றவரைத் தேட எடுக்கும் செலவுகள் மேலும் அதிகரிக்கும். இதனால் வாழ்வதற்கான நம்பிக்கையுடன் புதிய சூழலை உருவாக்கி வாழும் தன்மையையே இழந்து விடுவர். அதிலும் மரணச்சான்றிதழ் வழங்கப்படாத நிலையில் நிதிஉதவிகள் எதனையும் பெற இயலாதவர்களாகப் பொருளாதார சமுக விளிம்பு நிலைக்குத் தள்ளப்படுவர். இதில் பெண்களே நேரடியாகப் பாதிப்படைபவர்களாக இருப்பதால் அவர்கள் மிரட்டல்களுக்கும், துன்புறுத்தல்களுக்கும், பழிவாங்கல்களுக்கும் உள்ளாகின்றார்கள். பாதிப்படைந்தவர் பெண்ணாக இருந்தாலோ அவர் பாலியல் துன்புறத்தல்கள் உட்பட்ட பலவிதமான துன்புறுத்தல்களை எதிர்க்க இயலாதவராகி விடுகின்றார். பிள்ளைகளைப் பொறுத்த மட்டில் பெற்றோரின் பிரிவு அல்லது இழப்பு என்பது அவர்களை எல்லாநிலைகளிலும் மிகக் கடுமையாகப் பாதிக்கும்.

இந்த உதாரணங்கள் வலிந்து காணாமலாக்கப்படுதலில் ஏன் உடன் தண்டனை நீதி முக்கியம், பரிகார நீதி அவசியம் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன. இந்த நிலையை உடன்பிறப்புக்கள் அனுபவிக்கையில் இந்தப் பிரச்சினையை அரசியலாகப் பார்க்காது, கட்சி பேதங்களை மறந்து, ஒவ்வொரு தமிழரும் தங்கள் குடும்ப உறுப்பினரகளில்; ஒருவராகப் பாதிப்படைந்தவர்களைக் கருதி தொடர்ச்சியான சனநாயகப் போராட்டங்களின் வழி, ராஜதந்திர அணுகுமுறைகளின் வழி, ஊடகப் பரப்புரைகளின் வழி, பாதிப்புற்ற மக்களுடைய மனிதாபிமானப் பிரச்சினையாக இதனை உலகின் முன் வைக்க வேண்டும். சிங்களவர்கள், முஸ்லீம்கள், மலையக மக்கள் கூட இந்தப்பிரச்சினையை அவர்கள் வாழும் தீவின் பிரச்சினை என்ற வகையில் அணுகத் தவறினால் நாளை அவர்களுக்கும் இதுவே வாழ்வாகும் என்கிற அபாயநிலை உள்ளது. எனவே மனிதாபிமானமுள்ள இலங்கைத் தீவின் மக்கள் அனைவரும் இவ்விடயத்தில் ஒன்றிணைந்து உண்மைகளை உலகின் முன் வைக்க வேண்டிய தேவை உள்ளது.

மேலும் வலிந்து காணாமலாக்கப்படுதல் என்பது ஒரு தனியாளை அச்சப்படுத்தும் செயல்ல. அவர் சார்ந்த சமுகத்தையே அச்சப்படுத்திச் சுதந்திரமாக இயங்க விடாது தடுக்கின்ற, சமுகத்திற்கு எதிரான திட்டமிட்ட செயற்பாடு. எனவே உலக மக்கள் அனைவரும் வலிந்து காணாமலாக்கப்படுவோருக்கான நீதி எந்த நாட்டில் கேட்கப்பட்டாலும் அதில் இணைந்து நீதியை நிலைநாட்ட உழைத்தாலே உலகின் பாதுகாப்பான அமைதி பேணப்படும்.

– சட்டத்தின் முன் ஆளாக மதிக்கப்படும் உரிமை,

– ஒரு ஆளின் சுதந்திரத்திற்கும் பாதுகாப்புக்குமான உரிமை,

சித்திரவதைகள், கொடுமைப்படுததல்;கள், மனிதாபிமானமற்றமுறையில் நடத்தப்படுதல் என்பவற்றில் இருந்து பாதுகாப்பு பெறும் உரிமை,
வலிந்து காணாமலாக்கப்பட்டவர் கொல்லப்பட்டால் உயிர் வாழ்தலுக்கான உரிமை,

அடையாளத்தைப் பேணுவதற்கான உரிமை,

நியாயமான முறையில் வழக்காடி நீதியைப் பெறுதலை உறுதிப்படுத்தும் உரிமை,

புனர்வாழ்வையும், நட்டஈடுகளையும் பெறுவதற்கான உரிமை,

– காணாமல்போனமை குறித்த உண்மையை அறியும் உரிமை,

குடும்பத்தைப் பாதுகாப்பதற்கும் குடும்பத்துக்கு உதவுவதற்குமான உரிமை,
போதுமான தரத்துடன் வாழ்வதற்கான உரிமை,

உடல்நலத்துடன் வாழ்வதற்கான உரிமை, கல்விக்கான உரிமை,

என அனைத்து சமுக பொருளாதார அரசியல் ஆன்மிக அடிப்படை உரிமைகளும் வலிந்து காhணமலாக்கப்படுவதால் ஒன்றாக இழக்கப்படுவதாலேயே அனைத்துலக மனித உரிமைகள் நாள் இருக்கத்தக்கதாக அனைத்துலக வலிந்து காணாமலாக்கப்பட்டதால் பாதிப்புற்றோர் நாளும் தனியான ஒரு அனைத்துலக நாளாக 2010ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபைத் தீர்மானத்தால் கட்டமைக்கப்பட்டது.

இதனை உணர்கின்ற பொழுது உலகத் தமிழினம் தன்னினத்தின் ஒரு பகுதி மக்கள் இலங்கையில் 13 ஆண்டுகளாக நடாத்துகின்ற வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் நீதிக்கான போராட்டத்தை அவர்களுக்கான நீதி கிடைக்கக் கூடிய முறையில் உலகளாவிய நிலையில் உடன் முன்னெடுக்க வேண்டியதன் தேவை தெளிவாகிறது.

ஓரே உலகத் தமிழினமாகச் சனநாயக வழியில் இணைவோம். தங்களுடைய மனிதாபிமானப் பிரச்சினைக்கு இதுவரை எந்தத் தீர்வையும் முன்வைக்காது, யுத்தத்தின் விளைவென மரணச்சான்றிதழை வலுக்கட்டாயமாகத் திணித்து நீதியைச் சாகடிப்பதால், நீதிக்காகச் செத்து மடிந்து கொண்டிருக்கும், ஈழத்து வலிந்து காணாமலாக்கப்பட்டதால் பாதிப்புற்றுள்ளவர்களின் உலகக் குரலாக மாறுவோம். இது அன்னைத் தமிழுக்கு மட்டுமல்ல மனிதாயத்திற்கும் நாம் செய்ய வேண்டிய இன்றையக் கடமையாக நம்முன்னுள்ளது.

Posted in Uncategorized

அனைத்துலக நாணயநிதியத்துடன் முதற்கட்ட உடன்படிக்கையை எட்டியது இலங்கை

அனைத்துலக நாணயநிதியத்திற்கும் இலங்கை அரசுக்கும் இடையில் நடந்த பேச்சுக்களில் முதற்கட்ட உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான அறிவித்தல் நாளை (01) வெளியிடப்படும் எனவும் கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் இலங்கை அதிகாரிகளோ அல்லது அனைத்துலக நாணயநிதியத்தின் அதிகாரிகளோ தகவல் எதனையும் வெளியிடாதபோதும், அதிகாரிகள் மட்டத்திலான உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளதாக றொய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதிகாரிகள் மட்டத்திலான உடன்பாடு என்பது இலங்கை அரசுக்கு அனைத்துலக நாணய நிதியத்தின் நிதியை பெறும் உத்தரவாதத்தை வழங்கவல்லது. இலங்கை அரசு அனைத்துலக நாணய நிதியத்திடம் இருந்து அவசரமாக 3 பில்லியன் டொலர்களை எதிர்பார்த்து நிற்கின்றது.

Posted in Uncategorized

இலங்கை அரசு வாக்குறுதிகளை தொடர்ந்து மீறுகிறது; மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை

பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் அமைதி வழி போராட்டக்காரர்களை ஒடுக்குவதை உடனடியாக நிறுத்துமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இராஜினாமாவுடன் ஜூலை 21 ஆம் திகதி புதிய ஜனாதிபதி பதவியேற்றதன் பின்னர், இலங்கை மக்கள் ஒன்றுகூடுவதற்கும் கருத்துகளை வெளியிடுவதற்கும் உள்ள உரிமைகள் நசுக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

தற்போதைய அரசாங்கம் ஒரு மாத காலமாக அவசரகால சட்டத்தை அமுல்படுத்தி, போராட்டக்காரர்களை வன்முறையால் ஒடுக்கி, கைது செய்து வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி, மக்களின் உரிமைகளை பாதுகாக்க புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்ற வாக்குறுதி தொடர்ந்து மீறப்பட்டு வருவதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

வைப்பிலிட்ட நிதியை மீள கேட்ட ஜப்பான்; உதவியை உதாசீனம் செய்ததா யாழ். மாநகர சபை?

யாழ். மாநகர சபை சில வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி கழிவுகளை அகற்றி வருகிறது.

கொழும்பில் இடம்பெறுவதைப் போன்று யாழ்ப்பாணத்திலும் திண்மக் கழிவுகளை அகற்றுவதற்கு நான்கு பெரிய வாகனங்களை இலவசமாக வழங்க 2019 ஆம் ஆண்டு ஜப்பான் முன்வந்தது.

வாகனங்கள் இலவசமாக கிடைக்கவிருந்த நிலையில், அதனை இலங்கைக்கு கொண்டுவரும் போது அதற்கான வரியை யார் செலுத்துவது என்ற பிரச்சினை எழுந்தது.

அதற்கான வரியையும் தாமே செலுத்துவதாக ஜப்பான அரசாங்கம் அறிவித்து, அந்த தொகையையும் யாழ். மாநகர சபை கணக்கிற்கு அனுப்பியது.

இது தொடர்பான ஒப்பந்தம் யாழ்ப்பாண மாநகர சபைக்கும் ஜப்பானுக்கும் இடையில் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோது யாழ். மாநகர சபை முதல்வராக இம்மானுவேல் ஆர்னால்ட் இருந்துள்ளார்.

ஜப்பானில் இருந்து குறித்த நான்கு வாகனங்களையும் இலங்கைக்கு கொண்டு வருவதற்கான இறக்குமதி வரி மற்றும் போக்குவரத்து செலவாக ஜப்பானிய அரசாங்கம் அன்றைய காலப்பகுதியில் 83,432 அமெரிக்க டொலர்களை யாழ். மாநகர சபையின் வங்கிக் கணக்கில் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் திகதி வைப்பிலிட்டதாக அதன் சுகாதாரக் குழு தலைவர் வரதராஜன் பார்த்திபன் தெரிவித்தார்.

வௌிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் (Department Of External Resources)அனுமதி இல்லாமல் நிதிகளை வௌி இடங்களில் இருந்து பெற்றுக்கொள்ள முடியாது என்பதால், அதன் அனுமதியை பெறுமாறு மத்திய அரசாங்கம் அறிவுறுத்தியதாக வரதராஜன் பார்த்திபன் கூறினார்.

இவ்விடயம் தொடர்பில் வௌிநாட்டு வளங்கள் திணைக்களத்திற்கு யாழ். மாநகர சபையினால் கடிதம் எழுதப்பட்ட போதும் அதற்கு பதில் கிடைக்கவில்லை என வரதராஜன் பார்த்திபன் மேலும் தெரிவித்தார்.

இவ்வருடம் ஏப்ரல் மாதத்தில் ஜப்பானிய அரசாங்கத்திற்கும் தற்போதைய மாநகர சபை மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதும் கழிவகற்றல் வாகனங்களுக்காக வழங்கப்பட்ட நிதி தொடர்பில் பேசப்பட்டுள்ளது.

இதன்போது, மூன்று மாத திட்டத்தின் அடிப்படையில் தான் அந்நிதி வழங்கப்பட்டதாகவும் தற்போது 3 வருடங்கள் கடந்தும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை எனவும் குறிப்பிட்ட ஜப்பான் உயர் அதிகாரிகள், அந்நிதியை மீள செலுத்துமாறு தெரிவித்துள்ளனர்.

ஜப்பானிய அரசாங்கம் எழுத்து மூல கோரிக்கை அடிப்படையில் அந்த நிதியினை விடுவிப்பதற்கான அனுமதியினை யாழ். மாநகர சபைக்கு வழங்கியுள்ளது.

வரியை செலுத்த ஜப்பான் அன்று வழங்கிய 83 ,432 அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி 30.5 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமாகும்.

இது தொடர்பில் யாழ். மாநகர சபையின் முன்னாள் மேயர் இம்மானுவேல் ஆர்னால்டிடம் வினவிய போது, தானே இந்த திட்டத்தை முன்நின்று ஆரம்பித்ததாகவும் தனக்குப் பின்னர் மாநகர சபை இந்த திட்டத்தை உதாசீனம் செய்ததாகவும் குறிப்பிட்டார்.

மத்திய அரசாங்கமே இதற்கு முட்டுக்கட்டையாக இருந்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் வௌிநாட்டு வளத்துறை திணைக்களத்திடம் வினவிய போது, தமக்கு இவ்வேளையில் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்க முடியாது எனவும் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் விண்ணப்பித்தால் தகவலைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் நியூஸ்ஃபெஸ்டிற்கு தெரிவித்தார்.

எது எவ்வாறாக இருந்தாலும், யாழ். மாநகர சபைக்கு இலவசமாக கிடைக்கவிருந்த மில்லியன் கணக்கான பெறுமதியுடைய இந்தத் திட்டம் இரத்து செய்யப்பட்டு, பணத்தை மீள செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

Posted in Uncategorized

செப். 15 முதல் மீண்டும் தாமரை தடாகம்

இலங்கை மக்களுக்கு புத்தம் புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் தெற்காசியாவின் மிக உயர்ந்த கட்டடமான தாமரை கோபுரத்தின் செயல்பாடுகளை செப்டம்பர் 15 முதல் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

சுமார் 113 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தாமரைக் கோபுரத்தின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், பல புதிய அனுபவங்களை வழங்க கொழும்பு லோட்டஸ் டவர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த தாமரைக் கோபுரத் திட்டத்திற்கு சீன நிறுவனம் 88.65 அமெரிக்க டொலர் கடனுதவியை வழங்கியுள்ள நிலையில், மீதித் தொகையை இலங்கை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. இந்தத் திட்டத்திற்காக சீனாவிடம் பெறப்பட்ட கடன் தவணை 2024 ஆம் ஆண்டிற்குள் செலுத்தி முடிக்கப்பட உள்ளது. அத்துடன் ஏற்கனவே கடனாகப் பெறப்பட்ட சுமார் 66 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மீளச் செலுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு லோட்டஸ் டவர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், இவ்வருடம் மார்ச் மாதம் திறைசேரியின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டது. மேலும் அதன் அனைத்து கொடுக்கல் வாங்கல்களும் கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தினால் கணக்காய்வு செய்யப்படுகிறது.

தாமரை கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி சீன நிறுவனம் நிர்மாணப் பணிகளை நிறைவுசெய்து மீண்டும் இலங்கை அரசிடம் ஒப்படைத்தது.

உலகிலுள்ள செல்வந்த நாடுகளில் இருப்பதைப் போன்ற பொழுதுபோக்கு மற்றும் புதிய தொழில்நுட்ப வசதிகளை வழங்க திட்டமிட்டிருப்பதாக கொழும்பு லோட்டஸ் டவர் தனியார் நிறுவனத்தின் பிரதம நிர்வாக அதிகாரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு சாகச விளையாட்டுகளான ஸ்கை டைவிங் (Sky diving ) மற்றும் பங்கி ஜம்பிங் (Bungee jumping) ஆகியவையும் இதில் அடங்கும்.

இதுவரை 80 சதவீதமான உள்நாட்டு முதலீட்டாளர்களும் 20 சதவீதமான வெளிநாட்டு முதலீட்டாளர்களும் தாமரை கோபுரத்தில் முதலீடு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

டயலொக் டெலிகொம் நிறுவனம் மற்றும் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனம் என்பன தலா 200 மில்லியன் ரூபா முதலீடு செய்வதற்கு ஒப்பந்தம் செய்துள்ளன.

தாமரைக்கோபுரத்தின் செயல்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் நுழைவுச் சீட்டைக் கொள்வனவு செய்து, அனைவரும் இதனைப் பார்வையிடவும் புதிய அனுபவங்களை பெறவும் முடியும். நுழைவுச் சீட்டொன்றின் விலை 500 ரூபா என்பதோடு விசேட நுழைவுச் சீட்டின் விலை 2,000 ரூபாவாகும். பார்வையிட வரும் வெளிநாட்டவர் ஒருவருக்கான நுழைவுச் சீட்டு 20 அமெரிக்க டொலர்களாகும். அடுத்த சில மாதங்களில் நுழைவுச் சீட்டுக்கு பதிலாக QR தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

10.5 ஏக்கர் நிலப்பரப்பில் தாமரை கோபுரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு இதுவரை 58 முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அதில் 22 பேர் ஒப்பந்தம் மேற்கொள்ள இணங்கியுள்ளனர். 15 பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுக்காக எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதி வரை முன்பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் தாமரைக்கோபுர செயற்பாடுகளை மேலும் வெற்றிகரமாக முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தாமரை கோபுரத்திற்கு வரும் பொதுமக்களுக்காக தரை தளம், பிரபலமான உணவகங்கள், பப் (Pub) மற்றும் நினைவுப்பரிசு அங்காடிகள் (souvenir shop) என்பவற்றுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதோடு, பல முன்னணி வணிக வங்கிக் கிளைகளும் தரை தளத்தில் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.

முதல் தளம், அலுவலக வசதிகளுக்காக பயன்படுத்தப்படுவதுடன் டிஜிட்டல் சினிமா அனுபவத்தைப் பெறவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மூன்றாவது தளத்திலுள்ள மாநாட்டு மண்டபம், ஒரே நேரத்தில் சுமார் 400 பேருக்கான இருக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், திறந்த தளம் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜப்பானிய தொழில்நுட்பத்தின் கீழ் வடிவமைக்கப்பட்டுள்ள இலங்கையில் உள்ள மிகவேகமாக இயங்கக்கூடிய மூன்று மின் தூக்கிகள் தாமரைக் கோபுரத்தில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த அனைத்து அனுபவங்களையும் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் பொதுமக்கள் பார்த்தும் அனுபவித்தும் மகிழ முடியும் என்று கொழும்பு லோட்டஸ் டவர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

சீனத் தூதுவரின் சர்ச்சைக் கருத்துக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கடும் கண்டனம்

இலங்கைக்கான சீனத் தூதுவர் இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளுக்குப் பொறுப்புக்கூறல் தொடர்பாக இலங்கைக்கு ஆதரவு வழங்கும் வகையில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். இந்நிலையில் இந்தச் செயற்பாடு மிகவும் வருந்தத்தக்க ஒன்று என்பதுடன் இதனை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சார்பில் வன்மையாகக் கண்டிப்பதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் அ.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (30.8.2022) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் தமிழ்மக்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கத்தால் பல்வேறு அநீதிகள் நிகழ்த்தப்பட்டு வருகிறது. ஜெனீவா ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுக் கூட்டத் தொடர் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இதுதொடர்பில் நாங்கள் பல்வேறு சிவில், பொது அமைப்புக்களுடன் இணைந்து ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு கடிதமொன்றை அனுப்பியிருக்கிறோம் எனவும் அவர் மேலும் சுட்டிக் காட்டினார்.

இதேவேளை, இலங்கைக்கான சீனத் தூதுவரின் கருத்துக்களுக்கு கண்டனம் வெளியிடும் வகையிலான முழுமையான ஊடக அறிக்கையை குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் ஜெயராம் றாபின் முழுமையாக வாசித்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 200 மில்லியன் டொலர் அவசர கடனுதவி

ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கான 200 மில்லியன் டொலர் அவசரகால உதவிக் கடனை வழங்க தீர்மானித்துள்ளது. உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தவும், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்களின் கீழ் இந்த கடனுதவி வழங்கப்படவுள்ளது.

பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் உணவுப் பாதுகாப்பின்மை இலங்கை மக்களை கடுமையாகப் பாதித்துள்ளது. இந்நிலையில் வழங்கப்படவுள்ள கடனுதவி வருமையானோர் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு நேரடி நிதியுதவியை விரிவுபடுத்தும்.

அத்தோடு வாழ்வாதார மேம்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும் இது உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பாலூட்டும் தாய்மாருக்கான உணவுக்கான கொடுப்பனவு என்பவையும் இதனுள் உள்ளடக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized