ரணில் பலமடைந்து வருகிறாரா? நிலாந்தன்

பயங்கரவாத தடைச் சட்டம் அரகலயவின் மீது பாயத் தொடங்கிவிட்டது. “மனித உரிமைகள் பாதுகாவலர்களான வசந்த முதலிகே, ஹஷான் ஜீவந்த மற்றும் கல்வெவ சிறிதம்மா தேரர் ஆகியோர் இலங்கையின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமை குறித்து நான் மிகவும் கவலையடைகிறேன்.அவர்களை தடுப்புக் காவலில் வைக்கும் உத்தரவில் கையெழுத்திட வேண்டாம் என ஜனாதிபதி ரணிலிடம் கேட்டுக்கொள்கின்றேன், அவ்வாறு செய்வது இலங்கைக்கு இருண்ட நாளாக அமையும்” என்று மேரி லோலர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்திருந்தார். மனித உரிமைகளைப் பாதுகாக்கும் செயற்பாட்டாளர்கள் தொடர்பான ஐநாவின் விசேட அறிக்கையாளர் அவர்.எனினும், அந்த இருண்ட நாளை அவரால் தடுக்க முடியவில்லை.

கடந்த 21ஆம் திகதிவரை மொத்தம் 3353பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.இவர்களில் 1255பேர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

முழு உலகத்தையும் திருப்பி பார்க்க வைத்த அரகலயவின் பிரதான செயற்பாட்டாளர்கள் பயங்கரவாதிகளாக கணிக்கப்படும் ஒரு நிலைமை ஏன் வந்தது?அரசியல் எதிர்ப்பை ஆக்கத்திறனோடு வெளிப்படுத்திய படைப்பாளிகள் குற்றவாளிகளாக வேட்டையாடப்படும் ஒரு நிலைமை ஏன் தோன்றியது?

காரணம் அரகலய மீண்டும் தோற்றம் பெறக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை.அரகலயவை உற்பத்தி செய்த பொருளாதார நெருக்கடிகள் தொடர்ந்தும் முற்றாக அகற்றப்படவில்லை.ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வந்தபின் எரிவாயு எரிபொருள் போன்றன ஒப்பிட்டளவில் கிடைக்க தொடங்கி விட்டன.ஆனால் பொருட்களின் விலைகள் இறங்கவே இல்லை.அரசாங்கம் முட்டையின் விலையை நிர்ணயித்த போதிலும் சந்தையில் முட்டையின் விலை இறங்கவே இல்லை.அரசாங்கத்தின் விலை நிர்ணயங்கள் மக்களை கவரும் நோக்கிலானவை தவிர யதார்த்தமானவை அல்ல என்று வியாபாரிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.

மண்ணெண்ணையின் விலை அதிகரித்துவிட்டது.அது விவசாயிகளாலும் கடத்தொழிலாளர்களாலும் தாங்க முடியாத அதிகரிப்பு.எனவே கீழ் மத்தியதரவர்க்கம் மற்றும் ஏழைகளால் நுகரமுடியாத அளவுக்கு விலைகள் உச்சத்தில் நிற்கின்றன.இது மக்களை எப்பொழுதும் தெருவுக்கு கொண்டு வரக்கூடியது. அனைத்துலக நாணயநிதியத்தின் உதவிகள் சீனாவின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான முடிவுகளில் தொங்கிக் கொண்டிருக்கின்றன. எனவே மீண்டும் ஆர்ப்பாட்டங்களில் மக்கள் ஈடுபடுவதை தடுப்பதற்கு முன்னணிச் செயற்பாட்டாளர்களை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் உள்ளே போட வேண்டிய தேவை ரணிலுக்கு உண்டு. அதாவது ஆர்ப்பாட்டங்கள் மீண்டும் மீண்டும் தோன்றலாம் என்ற ஆபத்தை அவர் முன்னுணர்கிறார்.இது முதலாவது பிரதான காரணம்.

இரண்டாவது காரணம் மே ஒன்பதாம் திகதியும் ஜூன் 9ஆம் திகதியும் ஆளுங்கட்சி அரசியல்வாதிகளின் சொத்துக்களையும் வீடுகளையும் தேடித்தேடி எரித்து அழித்தவர்களைப் பழிவாங்குவது.மீண்டும் ஒரு தடவை ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசியல்வாதிகளின் வீடுகளை தாக்கத் துணியாதபடி அவர்களை அச்சுறுத்த வேண்டும்.அதற்காகத்தான் பயங்கரவாத தடைச் சட்டத்தை அவர் உபயோகித்திருக்கிறார்.அதாவது தன்னை பாதுகாத்த 134 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தேவை அவருக்குண்டு.

பொருளாதார நெருக்கடியை நீக்கினால் பிரச்சனைகளின் மூலகாரணம் பலவீனமடைந்துவிடும் என்று நம்புகிறார்.பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பது என்று சொன்னால் அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும். அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவது என்று சொன்னால் எதிர்க்கட்சிகளையும்,ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடக்கூடிய மக்களையும் சமாளிக்க வேண்டும்.அதற்கு,சர்வ கட்சி அரசாங்கம் ஒரு கவர்ச்சியான தீர்வு.ஆனால் தந்திரசாலியான ரணிலை நம்பி அரசாங்கத்தில் இணைய எதிர்க்கட்சிகள் தயாரில்லை.இந்த வாரமும் இதுகுறித்து சஜித் பிரேமதாசவோடு ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.ஆனால் சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்க சஜித் அணி தயாராக இல்லை.ரணிலோடு இணைந்தால் அவர் தன்னுடைய அணியைக் விழுங்கி விடுவார் என்று சஜித் பயப்படுகிறார்.வெளியில் இருந்து ஆதரவு தரலாம் என்று சில நாட்களுக்கு முன் நடந்த சந்திப்பில் கூறி இருக்கிறார். ஜேவிபியும் அவ்வாறு சர்வ கட்சி அரசாங்கத்தில் இணைவதற்கு தயார் இல்லை. தமிழ் கட்சிகளும் பெருமளவுக்கு ஒத்துழைக்கும் நிலையில் இல்லை.

எனவே ஒரு சர்வகட்சி அரசாங்கத்துக்கான வாய்ப்புக்கள் குறைவாகத்தான் தெரிகின்றன.மாறாக எதிர்த் தரப்பிலிருந்து தனக்கு ஆதரவான ஆட்களை கழட்டி எடுக்கும் வேலையை ரணில் செய்யலாம்.அதை அவர் ஏற்கனவே தொடங்கிவிட்டார்.அது அவருக்குக் கைவந்த கலை.ஆனால் அவ்வாறு உருவாக்கப்படும் ஒரு அரசாங்கம் எதிர்க்கட்சிகளாலோ அல்லது மக்களாலோ ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இருக்காது.

தாமரை மொட்டுக் கட்சியைப் பாதுகாக்க வேண்டிய தேவை ரணிலுக்கு உண்டு. ரணிலைப் பாதுகாக்க வேண்டிய தேவை தாமரை மொட்டுக்கு உண்டு. எனவே ஒருவர் மற்றவரில் தங்கியிருப்பார்கள்.இது எதுவரை என்று சொன்னால், அடுத்த பெப்ரவரி மாதம் வரையிலும்.ஏனெனில் அடுத்த பெப்ரவரி மாதத்தோடு யாப்பின் பிரகாரம் நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ரணிலுக்கு கிடைத்துவிடும்.அவ்வாறு கிடைத்தால் அதற்குப்பின் நடக்கக்கூடிய எந்த ஒரு தேர்தலிலும் தாமரை மொட்டுக்கட்சி இப்பொழுது அனுபவிக்கும் பெரும்பான்மையைப் பெறமுடியுமா என்பது சந்தேகமே.எனவே வரும் பெப்ரவரி மாதத்தோடு தனது பேரம் கீழிறங்கி விடும் என்று தாமரை மொட்டுக் கட்சிக்குத் தெரியும். தன்னுடைய பேரம் அதிகமாகிவிடும் என்று ரணிலுக்கு தெரியும். எனவே அவர் திட்டமிட்டு காய்களை நகர்த்துகிறார்.

அடுத்த ஆறுமாத காலத்துக்குள் அவர் தன்னை பலப்படுத்த வேண்டும். யூ.என்.பியைப் பலப்படுத்த வேண்டும் என்று சொன்னால் சஜித் பிரேமதாசவை பலவீனப்படுத்த வேண்டும்.ஒன்றில் அவரை வழிக்குக் கொண்டு வர வேண்டும்.அல்லது தோற்கடிக்க வேண்டும்.

அடுத்த பெப்ரவரி மாதத்திற்கு பின்னரும் அவர் நாடாளுமன்றத்தை கலைப்பாரா என்பது சந்தேகம்தான்.ஏனெனில் அடுத்த பெப்ரவரி மாதத்தின் பின் நாடாளுமன்றம் பெருமளவுக்கு அவருடைய கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும்.தாமரை மொட்டின் பெரும்பான்மை பெருமளவு அவருக்கு கட்டுப்பட்டது ஆகிவிடும்.அதன்பின் அவர் விரும்பியபடி காய்களை நகர்த்தலாம். இந்த இடைப்பட்ட காலகட்டத்திற்குள் அவர் உள்ளூராட்சி சபை தேர்தல்களையும் மாகாண சபைத் தேர்தல்களையும் நடத்தக்கூடும். தேர்தல் முடிவுகள் தாமரை மொட்டுக்கு பாதமாக அமையும். இப்பொழுது உள்ளூராட்சி மன்றங்கள் பெருமளவுக்கு தாமரை மொட்டின் கட்டுப்பாட்டுக்குள்தான் காணப்படுகின்றன. ஆனால் ஒரு புதிய தேர்தல் நடந்தால் தாமரை மொட்டு அந்த பலத்தை இழக்கக் கூடும்.அதேபோல மாகாண சபைகளுக்கான தேர்தலும் தாமரை மொட்தின் வீழ்ச்சியைக் காட்டக்கூடும்.எனவே புதிய உள்ளூராட்சி மன்றங்களும் புதிய மாகாண சபைகளும் தமது பலவீனத்தை வெளிப்படுத்தலாம் என்ற அச்சம் தாமரை மொட்டுக்கு உண்டு.

அதனால்தான் நாடாளுமன்றம் அடுத்த பெப்ரவரி மாதத்தின் பின் கலைக்கப்படுவதை எப்படித் தடுக்கலாம் என்று தாமரை மொட்டுக் கட்சி சிந்திக்கின்றது.ரணில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கும் 22 வது சட்டத் திருத்த வரைபில், 19வது திருத்தத்தில் உள்ளபடி நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைப்பதற்கான கால எல்லையை நாலரை ஆண்டுகளாக மாற்றும் ஏற்பாடு இணைக்கப்படவில்லை.இருபதாவது திருத்தத்தில் உள்ளபடியே 21/2 ஆண்டுகளில் நாடாளுமன்றத்தைக் கலைக்கலாம் என்று உள்ளது. இது தாமரை மொட்டைத் தன் பிடிக்குள் வைத்திருப்பதற்கு ரணில் செய்யும் தந்திரம் என்று அக்கட்சி நம்புகிறது.

அதனால்தான் சுமார் 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றம் கலைக்கப்படும் காலத்தை 19இல் உள்ளதுபோல மாற்றுமாறு அண்மையில் ரணிலுக்கு கடிதம் கொடுத்திருந்தார்கள். அவர்களை சமாளிப்பதற்காக ரணில் இப்போதைக்கு பொது தேர்தல் இல்லை என்று அறிவித்திருக்கிறார்.

அவர்களை சமாளிப்பது என்பதைத் தவிர, வேறு ஒரு உள்நோக்கமும் அவரிடம் இருக்கலாம்.பெப்ரவரி மாதத்தின்பின் ஒப்பிட்டுளவில் தனக்கு அதிகம் கட்டுப்படும் நாடாளுமன்றத்தை வைத்துக்கொண்டு,தன் எஞ்சிய ஆட்சிக் காலத்தை எப்படிக் கடக்கலாம்,தனது சொந்த கட்சியை எப்படி மீள இணைக்கலாம் என்று அவர் திட்டமிடுவார்.

ஒரு தேர்தல் நடந்தால் முடிவுகள் தாமரை மொட்டுக்குப் பாதகமாகவும் எதிர்கட்சிகளுக்குச் சாதகமாகவும் அமையக்கூடும். ஆனால் யு.என்.பிக்கு அது எப்படி அமையும் என்று இப்பொழுது கூறுவது கடினம்.ஏனென்றால் யூ.என்.பி.இப்பொழுது இரண்டாக உடைந்து கிடக்கிறது.எனவே நாடாளுமன்ற தேர்தலை நடத்தினால் அது எதிரிகளுக்கு சாதகமாக அமையும் என்று ரணில் அஞ்சுகிறார்.அதனால் அவர் நாடாளுமன்றத்தை கலைக்கவும் ஒரு புதிய தேர்தலை நடத்தவும் தயாராக இருக்க மாட்டார்.

எனவே கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஒரு நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கு ரணிலுக்கும் விருப்பமில்லை. வரும் பெப்ரவரி மாதத்தின் பின் தாமரை மொட்டு கட்சியானது அவரில் தங்கி இருக்கும் நிலைமைகள் மேலும் அதிகரிக்கும். அந்த நிலையை அப்படியே பேணியபடி அவர் தன்னுடைய பதவிக்காலத்தை முடிப்பதற்கு இடையில் யு.என்.பியை எப்படிப் பலப்படுத்தலாம் என்று திட்டமிடலாம்.

எனவே சஜித்தை எப்படி வளைத்தெடுப்பது என்பதே அவர் முன் உள்ள சவால். சஜித்தை வளைத்து எடுத்தால் ரணிலுக்கு இரட்டை லாபம் உண்டு. அதன் மூலம் ஒரு சர்வ கட்சி அரசாங்கத்தை உருவாக்கலாம்.அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட்டிருப்பதாக சர்வதேச நாணய நிதியத்துக்கு வெளிக்காட்டலாம். இரண்டாவது சஜித்தை தோற்கடித்து விட்டால் அல்லது சஜித்தை வழிக்கு கொண்டு வந்து விட்டால் யூ.என்.பி மீள இணைந்துவிடும். அதன் மூலம் அடுத்த நாடாளுமன்ற தேர்தல், ஜனாதிபதி தேர்தல் போன்றவற்றில் ரணில் முன்னரை விடப் பலமாகக் காணப்படுவார். எனவே இப்பொழுது ரணிலுக்கு உள்ள சவால்,சஜித்தை எப்படி வளைப்பது என்பதுதான். ஒரு புதிய தேர்தலுக்குப் போக அவர் தயாரில்லை. ஏனெனில்,ஜே.வி.பியின் தலைவர் அனுர குமார கேட்பது போல “134 எம்பிக்களா?அல்லது மக்களா?” என்ற கேள்விக்கு விடை கிடைக்கக்கூடிய ஒரு தேர்தலை நடத்த அவர் துணிய மாட்டார்?

மன்னாரில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலையினால் எவ்வித பாதிப்பும் இல்லை – காதர் மஸ்தான்

காற்றாலை மின் நிலையம் சம்பந்தமாக மக்களுடைய எதிர்ப்புகளை அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளோம். ஆனால் காற்றாலை எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிற எந்த திட்டங்களையும் நாட்டுக்குள் கொண்டு வர மாட்டோம்.

இலங்கையில் எங்கெங்கு காற்றாலை அமைக்க பொருத்தமான இடம் இருக்கிறதோ அந்த இடங்களை பார்த்து தான் காற்றாலைகளை அமைத்திருக்கிறோம் என்று தங்களுக்கு உயர் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாக மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர், பாராளுமன்ற உறுப்பினருமாகிய காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

காற்றாலை திட்டத்தின் விரிவுபடுத்த லுக்கு எதிராக மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பல போராட்டங்கள் இடம் பெற்று வருகின்ற நிலையில் குறித்த விடயம் தொடர்பாக மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய காதர் மஸ்தானிடம் கேள்வி எழுப்பிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தொடர்ச்சியாக நான் மாத்திரமல்ல இங்குள்ள ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் நடக்கின்ற அதி உயர் கூட்டங்களில் இந்த காற்றாலை பிரச்சனை தொடர்பாக தெரிவித்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் எங்களுக்கு தெரிவிக்கப்படுகிறது இந்த காற்றாலை அமைக்கப்படுவதால் இப்பொழுதும் எதிர்காலத்திலும் பெரிய பாதிப்பு இல்லை என சொல்லப்படுகிறது.

ஆனால் மக்கள் தொடர்ச்சியாக அதற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

அதற்கு எதிராக பல போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள்.

வரும் வாரத்தில் கூட பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாக நான் அறிகிறேன்.

Posted in Uncategorized

சீன தூதுவர் மகாநாயக்க தேரர்களை சந்தித்தார்; இந்திய உயர்ஸ்தானிகரின் கண்டி விஜயம் இரத்து

இலங்கைக்காக சீன தூதுவர் Qi Zhenhong இன்று கண்டிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்

இதனிடையே, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயினால் திட்டமிடப்பட்டிருந்த கண்டிக்கான விஜயம் இரத்து செய்யப்பட்டது.

இன்று மாலை 4 மணிக்கு அஸ்கிரி விகாரைக்கு சென்ற இலங்கைக்கான சீன தூதுவர் Qi Zhenhong அஸ்கிரி பீட மகாநாயக்கர் வரக்காகொட ஶ்ரீ ஞானரத்தன தேரரை சந்தித்து ஆசி பெற்றார்.

பின்னர் மல்வத்து மஹா விகாரைக்கு சென்ற இலங்கைக்கான சீன தூதுவர் Qi Zhenhong, திப்பட்டுவாவே ஶ்ரீ சுமங்கல நாயக்க தேரரை சந்தித்து ஆசி பெற்றார்.

இதனிடையே, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று கண்டிக்கு விஜமொன்றினை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருந்த போதும், அந்த விஜயம் இரத்து செய்யப்பட்டது

சுகயீனம் காரணமாக விஜயம் இரத்து செய்யப்பட்டதாக கண்டியில் உள்ள இந்திய துணை உயர்ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஜெர்மனிய வெளிவிவகார அமைச்சு பிரதானிகளுடன் ஆறு தமிழ் கட்சி தலைவர்கள் இணையவழிச் சந்திப்பு

23 ஆவணி 2022 மாலை 6.30 மணி அளவில் ஜெர்மனியின் வெளிவிவகார அமைச்சின் ஆசிய பிராந்தியத்திற்கான தலைவர் திருமதி சபின் சிட்லர் மற்றும் இலங்கைக்கான விசேட அதிகாரி திரு. மரியோ கியோரி ஆகியோருடனான முக்கிய சந்திப்பு ஆறு தமிழ் கட்சி தலைவர்களுடன் நடைபெற ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இதில் மாவை சேனாதிராஜா, நீதியரசர் விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் ஏற்பாட்டாளர் சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். சிவஞானம் ஸ்ரீதரன், கோவிந்தன் கருணாகரம், ஸ்ரீகாந்தா ஆகியோர் பிரத்தியேக காரணங்களால் பங்குபெற்ற முடியவில்லை.

நீண்டகால இடைவெளிக்குப் பின்னராக, ஐநா மனித உரிமைப் பேரவையில் முக்கிய நாடாகவும், ஐநா பாதுகாப்புச் சபையின் நிரந்தர அங்கத்துவ நாடாகவும் இருக்கும் உலக வல்லரசுகளில் ஒன்றான ஜெர்மனியுடன் நடாத்தப்பட்ட இந்த பேச்சுவார்த்தை அரசியல் ரீதியாகவும் இராஜதந்திர ரீதியாகவும் மிகவும் முக்கியம் வாய்ந்தது.

தமிழ் மக்கள் சார்ந்த பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன. தற்பொழுது ஏற்பட்டிருக்கும் அரசியல் சூழ்நிலையை தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது. ஐநா மனித உரிமைப் பேரவையில் பிரதான நாடாக அங்கம் வகிக்கும் ஜெர்மனி, தமிழ் மக்கள் சார்ந்து ஆதரவு நிலைப்பாட்டில் தொடர்ந்தும் செயல்பட்டு வருவதற்காக நன்றி தெரிவிக்கப்பட்டது. மனித உரிமை உயர்ஸ்தானிகரின் 46/1 அறிக்கையில் பரிந்துரைக்கப் பட்ட பிரகாரம் இலங்கை விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்திற்கு பாரப் படுத்துவதற்கான கோரிக்கையை ஐநா பாதுகாப்புச் சபையில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற வேண்டுகோள் தமிழ் கட்சித் தலைவர்களால் பிரதானமாக முன்வைக்கப்பட்டது.

ஐநாவில் பல்வேறு பிரேரணைகள் நிறைவேற்றப் பட்ட போதிலும், அவை இலங்கை அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் நிராகரிக்கப்பட்டாலும் விடயங்கள் இன்று வரை நடைமுறைப் படுத்தப் படாமல் இருப்பதை அவதானிக்க முடிகிறது என்று தமிழ் கட்சித் தலைவர்களால் சுட்டிக் காட்டப் பட்டது.

அரசியல் கைதிகள் விடுதலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், காணி அபகரிப்பு, இன குடிப்பரம்பல் சிதைப்பு, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுகள் நடைபெறுகின்றமை, புனர் வாழ்வு அளிக்கப் பட்ட முன்னாள் போராளிகள் எதிர்கொள்ளும் நிலை என்ற பல அவசரமான பிரச்சினைகள் பற்றி பேசப்பட்டது.

நிரந்தர அரசியல் தீர்வுக்கான கோரிக்கைகள் சர்வதேச சமூகம் உட்பட தமிழர் தரப்பு வலியுறுத்தி வந்தாலும் இலங்கை அரசாங்கங்கள் அதை நிறைவேற்றும் நோக்கங்களில் அர்ப்பணிப்பு அற்ற நிலையே தொடர்ச்சியாகக் காணப்படுகிறது.

தற்பொழுது ஏற்பட்டிருக்கும் பொருளாதார சூழ்நிலையில் இருந்து நாடு மீீள வேண்டிய தேவை உள்ளது. அதற்கான ஆதரவை தமிழ்த் தரப்புகள் நிபந்தனையின் அடிப்படையில் வழங்குவதற்கு தயாராக உள்ள போதிலும் அரசு தங்கள் உறுதிமொழிகளை நிறைவேற்றுமா என்ற சந்தேகம் காணப்படுவதாகவும், அதேநேரம் சர்வதேச சமூகம் இலங்கைக்கு நிதியுதவி வழங்கும் வேளையில் தமிழர்களுடைய அரசியல் தீர்வு பற்றிய கரிசனை கொள்வது நன்மை பயக்கும் என்று சுட்டிக்காட்டப்பட்டது.

அதற்கு பதில் வழங்கிய திருமதி சபின் சிட்லர் அவர்கள், நீதிப் பொறிமுறையை நடைமுறைப் படுத்துவதற்கான ஏற்பாடுகளில் பிரதான நாடுகளுடன் தாங்கள் தொடர்ந்து முயற்சிப்பதாகத் தெரிவித்தார்.

ஐநா பொறிமுறைக்கு வெளியிலும் குறிப்பாக ஜி.எஸ்.பி வரிச்சலுகை, இலங்கைக்கான நிதி வழங்கல் என்பவற்றினூடாக தாங்கள் இலங்கையை பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் ஆகியவற்றிற்கு வலியுறுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்

எதிர்வரும் செப்டம்பர் மாத ஜெனீவா மனித உரிமை பேரவைக் கூட்டத் தொடரில் தமிழ் மக்களின் சார்பாக கட்சித் தலைவர்களும் பிரதிநிதிகளும் தெரிவித்த பல்வேறு கருத்துக்களை ஜெர்மனிய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதோடு அவற்றை ஐநாவில் பிரதிபலிக்கும் வகையில் பிரதான மற்றும் அங்கத்துவ நாடுகளுக்கு தாங்கள் முன்னெடுத்துச் செல்வதாகவும் உறுதி அளித்தார்.

சுரேந்திரன்
தமிழ் கட்சிகளின் ஒருங்கிணைப்பாளர்

Posted in Uncategorized

மத்திய வங்கியின் ஆளுநரால் நடத்தப்படும் விசேட நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் முன்னோக்கி செல்லும் வழி தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரால் நடத்தப்படும் விசேட நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் பணிப்புரைக்கு அமைய இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை (30) பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெறவுள்ளது.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் எதிர்கால பொருளாதாரத் திட்டங்கள் குறித்து பயனுள்ள சொற்பொழிவுக்கான வாய்ப்பை வழங்கும் நோக்கில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

நல்லூர்க் கந்தன் தேர்த் திருவிழா காண அலைகடலெனத் திரண்ட அடியவர்கள்

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் இரதோற்சவம் இன்று காலை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

இன்று காலை 6.15 மணியளவில் இடம்பெற்ற வசந்த மண்டபப் பூஜையைத் தொடர்ந்து, சண்முகப்பெருமான் தேரில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள் பாலித்தார்.

தேர்த்திருவிழாவில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆசார சீலர்களாக அதிகாலை முதல் ஆலயத்தின் நாலா புறங்களிலுமிருந்து வருகை தந்தனர்.

அடியாளர்கள் அங்கப் பிரதட்சணம் செய்தும் அடி அழித்தும் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றியதுடன், நூற்றுக் கணக்கான காவடிகளும் வருகை தந்திருந்தன.

Posted in Uncategorized

மே 9ஆம் திகதி பஸ்கள் எரிக்கப்பட்டமை தொடர்பில் அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் முறைப்பாடு

கடந்த மே மாதம் 9ஆம் திகதி நாட்டின் பல பகுதிகளில் பஸ்கள் எரிக்கப்பட்டமை தொடர்பில் அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளது.

இது தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

கொழும்பு பங்குச் சந்தை மீண்டும் வீழ்ச்சி!

கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்று 2.03 சதவீதத்தால் மீண்டும் சரிவை சந்தித்துள்ளது.

அதனடிப்படையில் இன்றைய நாளுக்கான அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 183.16 ஆக பதிவாகியுள்ளது.

அதன்படி, கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்று 8,828.08 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

மேலும், இன்றைய வர்த்தக நாள் நிறைவில் பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 2.10 பில்லியன்களாக பதிவாகி உள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.

பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தியது சுவிட்சர்லாந்து அரசாங்கம்

இலங்கை மீது விதித்திருந்த கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சுவிஸ் அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தை இலங்கை உள்நாட்டு சுற்றுலா செயற்பாட்டாளர் சங்கம் வரவேற்றுள்ளது.

சுவிட்சர்லாந்து இலங்கைக்கு ஒரு முக்கியமான சந்தையாகும் என இலங்கை உள்நாட்டு சுற்றுலா சங்கத்தின் தலைவர் நிஷாத் விஜேதுங்க தெரிவித்துள்ளார்.

குறிப்பாக குளிர்காலத்தில் சுவிஸ்டர்லாந்து சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கையை சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளதால், சுவிஸ் பயணிகளின் எண்ணிக்கை அதிரித்து, இலங்கையின் சுற்றுலாத் துறை மேம்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுவிட்சர்லாந்து அரசாங்கம், இலங்கையின் அண்மைக்கால முன்னேற்றங்களைக் கருத்திற் கொண்டு, இலங்கையின் அரசியல் மற்றும் சமூக நிலைமைகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு தனது குடிமக்களுக்கு பயண ஆலோசனை வழங்கியிருந்தது.

அத்துடன், இலங்கை விவகாரத்தில் சமூக வலைத்தளங்கள் உட்பட அரசியல் கலந்துரையாடல்களைத் தவிர்க்குமாறும், உள்ளூராட்சி மன்றங்களின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் தமது குடிமக்களுக்கு சுவிஸர்லாந்து அரசாங்கம் அறிவுறுத்தியிருந்தது.

இலங்கைக்கான பயணத்திற்கு முன்னரும், பயணத்தின் இடைநடுவிலும் சமகால சூழ்நிலை, ஊரடங்குச் சட்டங்கள் குறித்து ஊடகங்கள், சுற்றுலா வழிகாட்டிகள் மூலம் ஆராயுமாறும் கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – தமிழக முதல்வர்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவிக்க இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதமொன்றை எழுதியுள்ளார்.

மீன்பிடிப் படகுகளின் உரிமையாளர்கள் இலங்கை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்கவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த 22ஆம் திகதி நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாக முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதத்திலிருந்து தொடர்ச்சியாக நடைபெறும் ஐந்தாவது நிகழ்வு இதுவாகும் எனவும் இலங்கை கடற்படையினரின் இத்தகைய நடவடிக்கைகள் மீனவர்களின் வாழ்வாதாரத்தை வெகுவாக பாதித்துள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த 94 மீன்பிடிப் படகுகள் இலங்கை வசமுள்ளதாக தெரிவித்த தமிழக முதல்வர், தற்போது இலங்கையில் நிலவும் சூழ்நிலை காரணமாக தமிழக மீனவர்கள் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக த ஹிந்து செய்தி வௌியிட்டுள்ளது.

Posted in Uncategorized