மடு ஆவணித் திருவிழா தொடர்பில் விசேட கலந்துரையாடல் – பல்வேறு தீர்மானங்கள் முன்வைப்பு

எதிர்வரும் ஆவணி மாதம் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ள மடு ஆவணி திருவிழா தொடர்பாகவும் முன் ஆயத்த நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் முன் ஆயத்த கலந்துரையாடல் இன்று முதலாம் திகதி திங்கட்கிழமை காலை 11.30 மணியளவில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெல் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் மன்னார் மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் கிறிஸ்து நாயகம் அடிகளார், மடு திருத்தல பரிபாலகர் எஸ்.ஜே.பெப்பி சோசை அடிகளார், சுகாதார திணைக்கள அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள், பொலிஸ், ராணுவ அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா தொடர்பாக ஆராயப்பட்டது.

தற்போதைய சூழ்நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள காரணத்தினாலும் சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வருவார்கள் என்ற காரணத்தால் அதற்கு அமைவாக திணைக்களங்கள் தொடர்பான சேவைகளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் விசேட புகையிரத சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கொழும்பில் இருந்து மடு புகையிரத நிலையத்திற்கும் ,அநுராத புரத்தில் இருந்து மடு புகையிரத நிலையத்திற்கும் எதிர்வரும் 13ஆம், 14ஆம், மற்றும் 15 ஆம் திகதிகளில் வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

மடு புகையிரத நிலையத்தில் இருந்து மடு திருத்தலத்திற்கு பேருந்து சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா தொற்று மீளவும் ஆரம்பித்துள்ள மையினால் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து திருவிழா திருப்பலியில் கலந்து கொள்ள வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

Posted in Uncategorized

மஹிந்த மற்றும் பசிலின் பயணத்தடை நீடிப்பு

மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகிய இருவருக்கும் விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இருவருக்குமான பயணத்தடையை ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வரை நீடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் என குறித்த இருவர் மீதும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள காரணத்தினால் இவ்வாறு பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ளது.

கூட்டமைப்பின் இராஜதந்திர நம்பகத்தன்மை ? ELANADU Editorial

தமிழ் மக்கள் ஒரு அரசு இல்லாத தரப்பு. அரசு இல்லாத தரப்புக்களுக் கான இராஜதந்திர வாய்ப்புக்கள் மிகவும் பலவீனமானவை. இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றவை எனக் கூறப்படும், மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் போர்க் குற்றச்சாட்டுக்கள்தான், தமிழ் மக்களுக்கான அரசியலை சர்வதேச அரங்கு களில் நீர்த்துப்போகாமல் பாதுகாத்துவருகின்றன. கொழும்பின் விடாப்படியான அணுகுமுறைகளும் இதற்கொரு காரணமாகும். கொழும்பின் ஆட்சியாளர்கள் சில விடயங்களில் முன்னேற்றத்தை காண்பிப்பார்களாயின், சர்வதேச அவதானமும் நாளடைவில் நீர்த்துப் போய்விடும். இன்றைய நிலை யில், தமிழர் களின் சர்வதேச குரலாக தொழில்படும் புலம்பெயர் சமூகமும் குறிப்பிடத்தக்களவு செல்வாக்கை செலுத்திவருகின்றது.

ஆனால், மறபுறமாக தாயகத்தில் இயங்கும் அரசியல் தரப்புக்களின், இராஜதந்திர அணுகுமுறைகள் எவ்வாறிருக்கின்றன? சில தினங்களாக இடம் பெற்ற சம்பவங்களின் அடிப்படையில் சிந்திப்பதாயின், ‘பனையால் விழுந்த வரை மாடு ஏறி மிதித்த’ – கதையாகவே தமிழ் தேசியவாத தரப்புக்களின் இராஜ தந்திர அணுகுமுறை இருக்கின்றது. ஜனாதிபதியை தெரிவு செய்வதற் கான வாக்கெடுப்பின்போது, ஏற்பட்ட சில சம்பவங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இராஜதந்திர நம்பகத் தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது. எமக்கு கிடைக் கும் தகவல்களின்படி, இந்திய தூதரக சர்ச்சையால், ஏனைய இராஜதந்திரிகள் அதிருப்தி அடைந்திருக்கின்றனர். அவர்கள் மத்தியில், கூட்ட மைப்பின் நம்பகத்தன்மை, பெரியளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றது.

இராஜதந்திர தொடர்புகள் என்பவை பரஸ்பர நம்பகத்தன்மையின் அடிப் படையில் இடம்பெறும் விடயங்களாகும். நம்பகத்தன்மை போய்விட்டால், அதன் பின்னர் அதனை மீளவும் கட்டியெழுப்புவது மிகவும் சவாலானதொரு விடயமாகும்.

2009இற்கு பின்னரான காலத்தில், சம்பந்தன் தலைமையில் கடந்த 13 வருடங்களாக முன்னெடுக்கப்பட்ட அரசியல் முன்னெடுப்புக்களில், பல்வேறு இராஜதந்திர சறுக்கல்கள் இடம்பெற்றிருக்கின்றன. இதில், பாரதூரமானது இந்திய பிரதமர் சிறி நரேந்திர மோடியுடனான சந்திப்பை அற்ப காரணங்களை கூறி நிகராகரித்தமை. கடவுசீட்டைக் காணவில்லை, தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவின் மகனின் திருமணம் என்று கூறியே, சம்பந்தன் அதனை நிராகரித்திருந்தார். 134 கோடி மக்களின் தலைவர், உலகளவில் செல்வாக்குமிக்க தலைவர்களில் ஒருவர், தமிழ் மக்களின் பிரச்னைகள் தொடர்பில் பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்கியபோது, அதனை ஒருவர் நிராகரிக்கின்றார் என்றால், அவரின் இராஜந்திர ஆற்றல் தொடர்பில் என்ன கூறமுடியும்?

சில மாதங்களுக்கு முன்னர், கூட்டமைப்பின் நிபுணர் குழுவென்னும் பெயரில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கு, சுமந்திரன் தலை மையில், மூவரடங்கிய குழுவினர் சென்றிருந்தனர். அதில் சென்ற இருவர், நாடு திரும்பியதும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பேசியதில்லை. அவர்கள் எதற்காக சென்றார்கள் என்று அவர்களுக்கே தெரியாது. இந்தப் பயணம் தொடர்பில் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கு தெரியப்படுத்தப் படவில்லை. நாடு திரும்பியதைத் தொடர்ந்து, ஜனவரி மாதம் நடுப்பகுதிக்குள் அமெரிக்கா கடுமையான முடிவுகளை எடுக்கவுள்ளதாகக் கூறப்பட் டது. ஆனால், அப்படியெதுவும் இடம்பெறவில்லை. ஏனெனில், அனைத்துமே தேர்தல் பிரசார நோக்கம் கொண்ட கதைகளேயேன்றி உண்மை களல்ல.

இப்போதும் தங்களுடைய திட்டம் வெற்றியளிக்க வேண்டும் என்பதற்காக, இராஜதந்திர தொடர்புகள் தவறாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. சீனத் தூதரக சந்திப்பு தொடர்பில் கூட்டமைப்பில் எவருமே தெரிந்திருக்கவில்லை. உண்மையில், என்ன அடிப்படையில் இராஜதந்திரிகளை கூட்டமைப்பின், பாராளுமன்ற உறுப்பினர்கள் அணுகுகின்றனர்? கூட்டமைப்பின் இராஜதந்திர தொடர்புகள் எவருடைய அனுமதியின் கீழ் கையாளப்படுகின்றன? பதில் இலகுவானது. கூட்டமைப்பில் இராஜதந்திர நெறிமுறையென்று ஒன்றில்லை.
தனிப்பட்ட நபர்களின் விருப்புவெறுப்புக்களின் அடிப்படையிலேயே அனைத்தும்
இடம்பெறுகின்றன. கூட்டமைப்பில் அக்கறையுள்ளவர்கள், இந்த நிலைமையை
மாற்றியமைப்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும்.

குட்டிமணி, தங்கதுரையின் 39 ஆவது நினைவு நாள் வவுனியா மாவட்ட காரியாலயத்தில் அனுஸ்டிப்பு!

1983ஆம் ஆண்டு கறுப்பு ஜுலை கலவரத்தின்போது, வெலிக்கடை சிறைச்சாலையில் வைத்து படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் முக்கியஸ்தர்களான தங்கத்துரை மற்றும் குட்டிமணி உள்ளிட்ட 53 பேரின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழ் தேசிய வீரர்கள் தினம் நேற்று அனுஸ்டிக்கப்பட்டது.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட காரியாலயத்தில் மாவட்ட பொறுப்பாளர் புரூஸ் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது குட்டிமணி, தங்கத்துரை மற்றும் ஜெகன் ஆகியோரது உருவப்படங்களுக்கு மலர்மாலை அணிவித்து சுடரேற்றி, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் கட்சியின் வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் மயூரன் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Posted in Uncategorized

பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைப்பு : வெளியானது அதிவிசேட வர்த்தமானி

பாராளுமன்ற கூட்டத்தொடரை இன்று (28) நள்ளிரவு முதல் ஒத்திவைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, புதிய பாராளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி காலை 10.30 மணிக்கு இடம்பெறவுள்ளதாக குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, 9 ஆவது பாராளுமன்றத்தின் 2 ஆவது கூட்டத்தொடர் இன்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகின்றது. புதிய கூட்டத்தொடர் ஜனாதிபதின் கொள்கை விளக்க உரையுடன் ஆரம்பமாகும்.

Posted in Uncategorized

ஜனாதிபதியுடன் பிரித்தானி உயர்ஸ்தானிகர் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனுக்கும் இடையில் இன்று (28) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் டுவிட்டர் குறிப்பொன்றை வெளியிட்டுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர், பல விடயங்கள் தொடர்பில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றதாக குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை தொடர்பான செயல்முறை மற்றும் மனித உரிமைகளுக்கு இணங்குவது உட்பட பல விடயங்களில் கவனம் செலுத்தியதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

இறுதியாக, அவர் தனது ட்விட்டர் பதிவில், அமைதியான மற்றும் ஜனநாயக இடத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்த நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசாங்கத்திற்கு ராஜபக்ச குடும்பத்துடன் உள்ள தொடர்புகளால் இலங்கை அரசியல் ஆபத்துக்களை எதிர்கொள்கின்றது – பிட்ச்

புதிய அரசாங்கத்திற்கு ராஜபக்ச குடும்பத்துடன் உள்ள தொடர்புகள் காரணமாக இலங்கை அரசியல் ஆபத்தினை எதிர்கொள்கின்றது என பிட்ச் தரப்படுத்தல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கை நாணய நெருக்கடி மற்றும் வங்குரோத்து நிலையிலிருந்து மீள்வது தொடர்பில் அரசியல் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றது என தெரிவித்துள்ள பிட்ச் தரப்படுத்தல் முகவர் அமைப்பு வலுவான பெரும்பான்மையுடன் கடினமான புதிய அரசாங்கம் ஆட்சிபொறுப்பை ஏற்றுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.

புதிய ஜனாதிபதிக்கு பெரும்பான்மை உள்ளமை நாடாளுமன்றத்தில் உறுதிசெய்யப்பட்டுள்ளது அரசாங்கம் எதிர்கட்சி உறுப்பினர்கள் சிலரையும் உள்வாங்கியுள்ளது என பிட்ச் தெரிவித்துள்ளது.

இது பொருளாதாரஸ்திரதன்மை மற்றும் கடன் பேண்தகுதன்மை ஆகியவற்றை மீட்டெடுப்பதற்கான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கும் கடினமான சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்குமான போதிய ஆதரவு அரசாங்கத்திற்கு காணப்படும் என்ற நம்பிக்கையை அளிக்கின்றது என பிட்ச் தெரிவித்துள்ளது.

இவ்வாறான சீர்திருத்தங்கள் சர்வதேச நாணயநிதியத்தின் நிதி ஆதரவு கிடைக்கும் நிலையை ஏற்படுத்தலாம்,இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து மீள்வதற்கு இது அவசியமானது என நாங்கள் கருதுகின்றோம் என பிட்ச் தெரிவித்துள்ளது.

ராஜபக்ச குடும்பத்தின் உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களால் அகற்றப்பட்டனர் ஆனால் ராஜபக்ச அரசாங்கத்துடன் தொடர்புள்ளதால் இந்த நிர்வாகத்திற்கு மக்கள் ஆதரவு இல்லாத நிலை காணப்படுகின்றது.

அரசாங்கத்திற்கு நாடாளுமன்ற ஆதரவு வலுவானதாக காணப்படுகின்றது ஆனால் மக்கள் ஆதரவு மிகவும் பலவீனமானதாக உள்ளது எனவும் பிட்ச் தரப்படுத்தல் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்களால் பதவியிலிருந்து அகற்றப்பட்ட முன்னாள் ஜனாதிபதியின் அரசாங்கத்தில் பிரதமராக பதவி வகித்தவர் தற்போதைய ஜனாதிபதி- பாரளுமன்றமும் அமைச்சரவையும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன அரசியல்வாதிகளின் ஆதிக்கத்தின் கீழ் காணப்படுகின்றன,இந்த கட்சி ராஜபக்ச குடும்பத்துடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டுள்ளது,என தெரிவித்துள்ள பிட்ச் பொருளாதார நிலைமையில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் அல்லது சீர்திருத்தங்களிற்கு பொதுமக்களின் எதிர்ப்பு உருவானால் ராஜபக்ச குடும்பத்துடனான அரசாங்கத்தின் தொடர்புகளால் நாட்டை ஸ்திரமிழக்கச்செய்யும் ஆர்ப்பாட்டங்கள் மூழக்கூடும் எனவும் பிட்ச் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணயநிதியத்துடன் இலங்கை இணக்கப்பாட்டிற்கு வரக்கூடிய சீர்திருத்தங்கள் உயர்வரிகள்,செலவுகளை கட்டுப்படுத்துதல் நாணயமாற்று விகிதத்தில் நெகிழ்ச்சி தன்மைக்கான அர்ப்பணிப்பு போன்றவற்றை கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கின்றோம் என குறிப்பிட்டுள்ள பிட்ச் இதற்கு கடும் எதிர்ப்பு உருவாகலாம் இதனால் இவற்றை நடைமுறைப்படுத்துவது பாதிக்கப்படலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

Posted in Uncategorized

தமிழர்களை எங்கே கொன்று புதைத்தீர்கள்! சபையில் செல்வம் அடைக்கலநாதன் ஆவேசம்

இலங்கையில் இனப்படுகொலை ஆரம்பிக்கப்பட்டு 39 வருடங்கள் ஆகின்றது. அதேபோல அவசரகாலச் சட்டம் உருவாக்கப்பட்டும் 39 வருடங்கள் ஆகின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஆட்சிக்காலத்திலேயே இவை இரண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டன. அப்போது சிறையில் சிக்குண்ட எமது தமிழர்களை எங்கு கொண்டு புதைத்தீர்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சிங்கள மக்கள் தாக்கப்பட்டதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். ஜனநாயக ரீதியாக இலங்கையில் போராடியவர்களை தாக்கியமை கண்டனத்திற்குரியது.

தாக்கப்பட்ட போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக வடக்கு , கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள தமிழர்கள் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் எங்களுடைய தமிழ் மக்கள் தாக்கப்பட்டபோது யாருமே எங்களுக்காக குரல் கொடுக்கவில்லை. அது ஒரு பயங்கரவாதமாகவே பார்க்கப்பட்டது. தற்போது நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படும் காலமாக மாறி வருகின்றது.

தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர், யுவதிகள், எங்களுடைய தமிழ் தரப்பில் நடந்த போராட்டம் உண்மையானது என்பதை ஏற்றுக் கொண்டு வருகின்றார்கள்.

ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஆட்சியின் போதே ஆயுதப் போராட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அத்தோடு அப்போது சிறையில் வைத்து கொல்லப்பட்ட எம் தமிழர்கள் எங்கே கொண்டு புதைக்கப்பட்டார்கள் என்பதை இப்போது வரைக்கும் கண்டுப்பிடிக்க முடியாமல் போயுள்ளது. அவர்கள் எங்கே கொண்டு சென்று கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டார்கள் என்பது தெளிவுப்படுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

குட்டிமணி, தங்கத்துரையின் 39 ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழில் அனுஷ்டிப்பு

1983 ஆம் ஆண்டு ஆடி மாதம் 25 ஆம், 27 ஆம் திகதிகளில் சிங்களக் காடையர்களால் வெலிக்கடைச் சிறையில் வஞ்சகமான முறையில் அடித்தும், குத்தியும்,வெட்டியும் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) ஆரம்பகாலத் தலைவர் குட்டிமணி, ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடி நடராஜா தங்கத்துரை, முன்னணிப் போராளிகளான ஜெகன்,தேவன், மற்றும் அவர்களுடன் படுகொலை செய்யப்பட்ட போராளிகள் மற்றும் அப்பாவிப் பொதுமக்களை நினைவு கூர்ந்து 39 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு,‘தமிழ் தேசிய வீரர்கள் தினம்’ இன்று புதன்கிழமை(27.7.2022) யாழ்.மாவட்ட ரெலோ அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் மெளன வணக்கத்தைத் தொடர்ந்து பொதுச்சுடரினை ரெலோவின் நிதிச் செயலாளரும், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினருமான விந்தன் கனகரட்ணம் ஏற்றி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து சுடர் ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் நினைவு உரையும் இடம்பெற்றது.

இதேவேளை, மேற்படி நிகழ்வில் ரெலோவின் யாழ்.மாவட்டத் துணை அமைப்பாளரும், யாழ். மாநகரத் துணை மேயருமான து.ஈசன், ரெலோவின் யாழ்.மாவட்ட இளைஞர் அணித் தலைவரும், நல்லூர் பிரதேச சபையின் உப தவிசாளருமான இ.ஜெயகரன், ரெலோவின் நல்லூர்த் தொகுதி அமைப்பாளரும், நல்லூர் பிரதேசசபை உறுப்பினருமான கு.மதுசுதன்,ரெலோவின் யாழ். பணிமணைப் பொறுப்பாளரும், யாழ்.நகரப் பகுதிப் பொறுப்பாளருமான மு.உதயசிறி,ரெலொவின் சிரேஷ்ட உறுப்பினரான ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மன்னாரில் வெலிக்கடைச்சிறைப் படுகொலையின் 39 ஆவது ஆண்டு நினைவு அனுஷ்டிப்பு!

வெலிக்கடைச் சிறைப் படுகொலையின் 39 ஆவது ஆண்டு நினைவு தினமான ‘தமிழ் தேசிய வீரர்கள் தினம்’ மன்னார் மாவட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் (TELO) அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை ) காலை 11 மணியளவில் நினைவு கூரப்பட்டது.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளர் லுஸ்ரின் மோகன் ராஜ் தலைமையில் இடம்பெற்ற குறித்த நினைவேந்தல் நிகழ்வில் வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட தலைவர் தங்கதுரை, தளபதி குட்டிமணி, முன்னணிப் போராளிகளான ஜெகன், தேவன் உட்பட 53 அரசியல் கைதிகளுக்கு ம் அஞ்சலி செலுத்தப்பட்டது.

உருவப்படத்துக்கு மாலை அணிவித்து சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது கட்சியின் முக்கியஸ்தர், நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.வினோ நோகராதலிங்கம் ,கட்சியின் உறுப்பினர்கள், ஈ.பி.ஆர்.கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சுடர் ஏற்றி,மலர் தூவி அஞ்சலி செலுத்திய மை குறிப்பிடத்தக்கது.