புதிய அரசாங்கத்திற்கு ராஜபக்ச குடும்பத்துடன் உள்ள தொடர்புகளால் இலங்கை அரசியல் ஆபத்துக்களை எதிர்கொள்கின்றது – பிட்ச்

புதிய அரசாங்கத்திற்கு ராஜபக்ச குடும்பத்துடன் உள்ள தொடர்புகள் காரணமாக இலங்கை அரசியல் ஆபத்தினை எதிர்கொள்கின்றது என பிட்ச் தரப்படுத்தல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கை நாணய நெருக்கடி மற்றும் வங்குரோத்து நிலையிலிருந்து மீள்வது தொடர்பில் அரசியல் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றது என தெரிவித்துள்ள பிட்ச் தரப்படுத்தல் முகவர் அமைப்பு வலுவான பெரும்பான்மையுடன் கடினமான புதிய அரசாங்கம் ஆட்சிபொறுப்பை ஏற்றுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.

புதிய ஜனாதிபதிக்கு பெரும்பான்மை உள்ளமை நாடாளுமன்றத்தில் உறுதிசெய்யப்பட்டுள்ளது அரசாங்கம் எதிர்கட்சி உறுப்பினர்கள் சிலரையும் உள்வாங்கியுள்ளது என பிட்ச் தெரிவித்துள்ளது.

இது பொருளாதாரஸ்திரதன்மை மற்றும் கடன் பேண்தகுதன்மை ஆகியவற்றை மீட்டெடுப்பதற்கான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கும் கடினமான சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்குமான போதிய ஆதரவு அரசாங்கத்திற்கு காணப்படும் என்ற நம்பிக்கையை அளிக்கின்றது என பிட்ச் தெரிவித்துள்ளது.

இவ்வாறான சீர்திருத்தங்கள் சர்வதேச நாணயநிதியத்தின் நிதி ஆதரவு கிடைக்கும் நிலையை ஏற்படுத்தலாம்,இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து மீள்வதற்கு இது அவசியமானது என நாங்கள் கருதுகின்றோம் என பிட்ச் தெரிவித்துள்ளது.

ராஜபக்ச குடும்பத்தின் உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களால் அகற்றப்பட்டனர் ஆனால் ராஜபக்ச அரசாங்கத்துடன் தொடர்புள்ளதால் இந்த நிர்வாகத்திற்கு மக்கள் ஆதரவு இல்லாத நிலை காணப்படுகின்றது.

அரசாங்கத்திற்கு நாடாளுமன்ற ஆதரவு வலுவானதாக காணப்படுகின்றது ஆனால் மக்கள் ஆதரவு மிகவும் பலவீனமானதாக உள்ளது எனவும் பிட்ச் தரப்படுத்தல் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்களால் பதவியிலிருந்து அகற்றப்பட்ட முன்னாள் ஜனாதிபதியின் அரசாங்கத்தில் பிரதமராக பதவி வகித்தவர் தற்போதைய ஜனாதிபதி- பாரளுமன்றமும் அமைச்சரவையும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன அரசியல்வாதிகளின் ஆதிக்கத்தின் கீழ் காணப்படுகின்றன,இந்த கட்சி ராஜபக்ச குடும்பத்துடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டுள்ளது,என தெரிவித்துள்ள பிட்ச் பொருளாதார நிலைமையில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் அல்லது சீர்திருத்தங்களிற்கு பொதுமக்களின் எதிர்ப்பு உருவானால் ராஜபக்ச குடும்பத்துடனான அரசாங்கத்தின் தொடர்புகளால் நாட்டை ஸ்திரமிழக்கச்செய்யும் ஆர்ப்பாட்டங்கள் மூழக்கூடும் எனவும் பிட்ச் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணயநிதியத்துடன் இலங்கை இணக்கப்பாட்டிற்கு வரக்கூடிய சீர்திருத்தங்கள் உயர்வரிகள்,செலவுகளை கட்டுப்படுத்துதல் நாணயமாற்று விகிதத்தில் நெகிழ்ச்சி தன்மைக்கான அர்ப்பணிப்பு போன்றவற்றை கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கின்றோம் என குறிப்பிட்டுள்ள பிட்ச் இதற்கு கடும் எதிர்ப்பு உருவாகலாம் இதனால் இவற்றை நடைமுறைப்படுத்துவது பாதிக்கப்படலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

தமிழர்களை எங்கே கொன்று புதைத்தீர்கள்! சபையில் செல்வம் அடைக்கலநாதன் ஆவேசம்

இலங்கையில் இனப்படுகொலை ஆரம்பிக்கப்பட்டு 39 வருடங்கள் ஆகின்றது. அதேபோல அவசரகாலச் சட்டம் உருவாக்கப்பட்டும் 39 வருடங்கள் ஆகின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஆட்சிக்காலத்திலேயே இவை இரண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டன. அப்போது சிறையில் சிக்குண்ட எமது தமிழர்களை எங்கு கொண்டு புதைத்தீர்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சிங்கள மக்கள் தாக்கப்பட்டதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். ஜனநாயக ரீதியாக இலங்கையில் போராடியவர்களை தாக்கியமை கண்டனத்திற்குரியது.

தாக்கப்பட்ட போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக வடக்கு , கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள தமிழர்கள் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் எங்களுடைய தமிழ் மக்கள் தாக்கப்பட்டபோது யாருமே எங்களுக்காக குரல் கொடுக்கவில்லை. அது ஒரு பயங்கரவாதமாகவே பார்க்கப்பட்டது. தற்போது நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படும் காலமாக மாறி வருகின்றது.

தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர், யுவதிகள், எங்களுடைய தமிழ் தரப்பில் நடந்த போராட்டம் உண்மையானது என்பதை ஏற்றுக் கொண்டு வருகின்றார்கள்.

ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஆட்சியின் போதே ஆயுதப் போராட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அத்தோடு அப்போது சிறையில் வைத்து கொல்லப்பட்ட எம் தமிழர்கள் எங்கே கொண்டு புதைக்கப்பட்டார்கள் என்பதை இப்போது வரைக்கும் கண்டுப்பிடிக்க முடியாமல் போயுள்ளது. அவர்கள் எங்கே கொண்டு சென்று கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டார்கள் என்பது தெளிவுப்படுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

குட்டிமணி, தங்கத்துரையின் 39 ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழில் அனுஷ்டிப்பு

1983 ஆம் ஆண்டு ஆடி மாதம் 25 ஆம், 27 ஆம் திகதிகளில் சிங்களக் காடையர்களால் வெலிக்கடைச் சிறையில் வஞ்சகமான முறையில் அடித்தும், குத்தியும்,வெட்டியும் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) ஆரம்பகாலத் தலைவர் குட்டிமணி, ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடி நடராஜா தங்கத்துரை, முன்னணிப் போராளிகளான ஜெகன்,தேவன், மற்றும் அவர்களுடன் படுகொலை செய்யப்பட்ட போராளிகள் மற்றும் அப்பாவிப் பொதுமக்களை நினைவு கூர்ந்து 39 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு,‘தமிழ் தேசிய வீரர்கள் தினம்’ இன்று புதன்கிழமை(27.7.2022) யாழ்.மாவட்ட ரெலோ அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் மெளன வணக்கத்தைத் தொடர்ந்து பொதுச்சுடரினை ரெலோவின் நிதிச் செயலாளரும், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினருமான விந்தன் கனகரட்ணம் ஏற்றி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து சுடர் ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் நினைவு உரையும் இடம்பெற்றது.

இதேவேளை, மேற்படி நிகழ்வில் ரெலோவின் யாழ்.மாவட்டத் துணை அமைப்பாளரும், யாழ். மாநகரத் துணை மேயருமான து.ஈசன், ரெலோவின் யாழ்.மாவட்ட இளைஞர் அணித் தலைவரும், நல்லூர் பிரதேச சபையின் உப தவிசாளருமான இ.ஜெயகரன், ரெலோவின் நல்லூர்த் தொகுதி அமைப்பாளரும், நல்லூர் பிரதேசசபை உறுப்பினருமான கு.மதுசுதன்,ரெலோவின் யாழ். பணிமணைப் பொறுப்பாளரும், யாழ்.நகரப் பகுதிப் பொறுப்பாளருமான மு.உதயசிறி,ரெலொவின் சிரேஷ்ட உறுப்பினரான ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Posted in Uncategorized

மன்னாரில் வெலிக்கடைச்சிறைப் படுகொலையின் 39 ஆவது ஆண்டு நினைவு அனுஷ்டிப்பு!

வெலிக்கடைச் சிறைப் படுகொலையின் 39 ஆவது ஆண்டு நினைவு தினமான ‘தமிழ் தேசிய வீரர்கள் தினம்’ மன்னார் மாவட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் (TELO) அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை ) காலை 11 மணியளவில் நினைவு கூரப்பட்டது.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளர் லுஸ்ரின் மோகன் ராஜ் தலைமையில் இடம்பெற்ற குறித்த நினைவேந்தல் நிகழ்வில் வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட தலைவர் தங்கதுரை, தளபதி குட்டிமணி, முன்னணிப் போராளிகளான ஜெகன், தேவன் உட்பட 53 அரசியல் கைதிகளுக்கு ம் அஞ்சலி செலுத்தப்பட்டது.

உருவப்படத்துக்கு மாலை அணிவித்து சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது கட்சியின் முக்கியஸ்தர், நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.வினோ நோகராதலிங்கம் ,கட்சியின் உறுப்பினர்கள், ஈ.பி.ஆர்.கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சுடர் ஏற்றி,மலர் தூவி அஞ்சலி செலுத்திய மை குறிப்பிடத்தக்கது.

திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் ஆகஸ்டில் பாராளுமன்றத்திற்கு

திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் மாதத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன, தற்போது அனைத்து அமைச்சுக்களின் வரவு செலவுத் திட்டங்களும் திருத்தப்பட்டு புள்ளிவிபரங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதன்படி எதிர்வரும் சில மாதங்களுக்கான இந்த வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

Posted in Uncategorized

கறுப்பு யூலையை நினைவு கூர்ந்து யாழ்.நகரில் சுவரொட்டிகள்

தமிழ்மக்களுக்கு எதிராகத் திட்டமிடப்பட்டு நடாத்தப்பட்ட 1983 ஆம் ஆண்டு கறுப்பு யூலையை நினைவு கூர்ந்து தமிழ்த்தேசியப் பண்பாட்டுப் பேரவையினரால் யாழ்.நகரின் பல பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இதேவேளை, இன்றையதினம் இலங்கை வரலாற்றில் தமிழ்மக்கள் மறக்க முடியாத ஒரு முக்கியமான நாள் எனவும், கடந்த-39 வருடங்களுக்கு முன்னர் தலைநகர் கொழும்பில் தமிழ்மக்கள் சிங்களப் பேரினவாதிகளால் தாக்கப்பட்டும், எரிக்கப்பட்டும் படுகொலை செய்யப்பட்ட நாள் எனவும் தமிழ்த்தேசியப் பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுவீகரன் நிஷாந்தன் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் இடம்பெற்று 39 ஆம் ஆண்டுகள் கடந்த போதும் இதற்கான நீதியையோ, தமிழ்மக்களுக்கான உரிமைகளையோ இதுவரை சிங்கள ஆட்சியாளர்கள் பெற்றுத் தரவில்லை எனச் சுட்டிக் காட்டிய அவர் கறுப்பு யூலை நினைவேந்தல் நிகழ்வு அடுத்த தலைமுறைகளுக்கும் கடத்தப்படுவதன் மூலம் தமிழ்மக்களின் உரிமைகள் வென்றெடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

இலங்கை ஜனாதிபதிக்கு இந்திய பிரதமர் வாழ்த்துக் கடிதம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்காகவும், ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காகவும் இந்திய அரசு எப்போதும் ஒத்துழைப்பை வழங்குமெனவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

தேசிய அரசாங்கத்தை அமைக்க உத்தியோகபூர்வ அழைப்பு வரவில்லை: மனோ கணேசன் அறிக்கை

தேசிய அரசு தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து உத்தியோகபூர்வ அழைப்பு எவருக்கும் விடுக்கப்படவில்லை என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தேசிய அரசு அல்லது சர்வகட்சி அரசு அமைப்பது தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கோ ஏனைய எதிர்க்கட்சிகளுக்கோ உத்தியோகபூர்வ அழைப்புகள் வரவில்லை என மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது .

எவ்வாறாயினும், நாடு இன்று இருக்கும் அவதி நிலையில், ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திற்கு நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவர அவகாசம் கொடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசரப்பட்டு எதிர்ப்பு அரசியல் ஆர்ப்பாட்டங்களை செய்யக்கூடாது என்பதே தமிழ் முற்போக்குக் கூட்டணியின்
நிலைப்பாடு என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

புதிய அரசியலமைப்பு தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சருடன் தமது கூட்டணி மலையக தமிழ் இலங்கையர்களின் அரசியல் அபிலாஷைகளை முன்வைக்கும் என மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

நல்லூர் ஆலய கொடியேற்றம் ; சுற்று வீதிகள் போக்குவரத்திற்கு தடை – யாழ் முதல்வர் மணிவண்ணன்

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 2 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், அதனுடைய ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பாக யாழ் மாநகர சபையினால் விளக்கமளிக்கப்பட்டது.

மஹோற்சவ ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று செவ்வாய்கிழமை காலை 9.00 மணியளவில் யாழ் மாநகர சபையில் இடம்பெற்றது.

ஈஸ்டர் குண்டு வெடிப்பு மற்றும் கொரோனா தொற்று காரணமாக கடந்த மூன்று வருடங்களாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம் பெற்ற நல்லூர் மஹோற்சவம் வழமைபோன்று அதாவது 2018 ஆம் ஆண்டுக்கு முன்பு எவ்வாறு உற்சவம் நடந்ததோ அதேபோல இம்முறை இடம்பெறுமென யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் தெரிவித்தார்.

கலந்துரையாடலுக்கு பின்னர் நல்லூர் ஆலயப் பெருந்திருவிழா ஏற்பாடுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், ஆகஸ்ட் 1ஆம் திகதி காலையில் இருந்து நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு ஆகஸ்ட் 29 ஆம் திகதி வைரவர் சாந்தி நிறைவடைந்த பின்னரே திறந்து விடப்படும்.

ஆலய வெளி வீதியைச் சூழ ஆலய நிர்வாகத்தினரால் சிவப்பு, வெள்ளை வர்ணக் கொடிகளால் எல்லையிடப்படும் வீதித்தடை பகுதிகளினுள் மாநகர சபையின் நீர் விநியோக வண்டி மற்றும் கழிவகற்றும் வண்டியை தவிர எக்காரணம் கொண்டும் வாகனங்கள் உட் செல்ல முடியாது.

அதேபோல வெள்ளை வர்ணக் கொடிகளால் எல்லையிடப்படும் வீதித்தடை பகுதிகளினுள் எந்தவிதமான வியாபார நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது. ட்ரோன் கமராக்களை பயன்படுத்தி காணொளி பதிவுசெய்ய முடியாது.

காலணிகளுடன் ஆலய வளாகத்திற்குள் பிரவேசிக்க முடியாது.

ஆலயத்துக்கு நேர்த்திக்கடன்களைக் கழிப்பதற்காக வருகின்ற தூக்குகாவடிகள் அனைத்தும் ஆலயத்தின் முன்பக்க பருத்தித்துறை வீதி வழியாக மட்டுமே உள்நுழைய முடியும். அவ்வாறு வருகின்ற காவடிகள் இறக்கப்பட்டதும், வாகனங்கள் அனைத்தும், செட்டித்தெரு வீதி வழியாக வெளியேறுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

வீதி மூடப்பட்டிருக்கும் சமயங்களில் பருத்தித்துறை வீதி வழியாக வரும் வாகனங்கள் யாழ் மாநகர சபைக்கு முன்பாக உள்ள வீதியால் பயணித்து யாழ் நகரை அடைய முடியும். ஆனால் இரதோற்சவம் மற்றும் சப்பர திருவிழாக்களின் போது கச்சேரி நல்லூர் வீதியாலேயே பயணிக்க முடியும்.

முகக்கவசங்களை அணிவது சட்டமாக்கப்படவில்லை. இருந்த போதும் கொரோனா எச்சரிக்கை காணப்படுவதால் முகக்கவசங்களை அணிந்து தன்னெழுச்சியாக சுகாதார விதிமுறைகளை பக்தர்கள் பின்பற்றவேண்டும். ஒவ்வொரு தனி மனிதனும் தங்களது சுகாதாரத்தில் கவனம் எடுத்து செயல்பட வேண்டும்.

திருட்டுச் சம்பவங்களை தவிர்க்க நல்லூர் ஆலயச்சூழலில் யாழ் மாநகர சபையினால் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இந்தக் கலந்துரையாடலில் யாழ் மாநகர முதல்வர், மாநகர ஆணையாளர்,மாநகர அதிகாரிகள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் உட்பட சம்பந்தப்பட்ட துறைசார் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Share

விமானத்தினுள் வைத்து டானிஷ் அலி கைது

போராட்டத்துடன் தொடர்புபட்டதாகக் கூறப்படும் டானிஷ் அலி துபாய் செல்வதற்கு தயாரான போது குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய் நோக்கி பயணிக்கவிருந்த விமானத்தில் இருந்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் நுழைந்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் தொடர்பில் நீதிமன்றம் விடுத்த பிடியாணைக்கு ஏற்ப டானிஷ் அலி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.