திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் ஆகஸ்டில் பாராளுமன்றத்திற்கு

திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் மாதத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன, தற்போது அனைத்து அமைச்சுக்களின் வரவு செலவுத் திட்டங்களும் திருத்தப்பட்டு புள்ளிவிபரங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதன்படி எதிர்வரும் சில மாதங்களுக்கான இந்த வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

Posted in Uncategorized

கறுப்பு யூலையை நினைவு கூர்ந்து யாழ்.நகரில் சுவரொட்டிகள்

தமிழ்மக்களுக்கு எதிராகத் திட்டமிடப்பட்டு நடாத்தப்பட்ட 1983 ஆம் ஆண்டு கறுப்பு யூலையை நினைவு கூர்ந்து தமிழ்த்தேசியப் பண்பாட்டுப் பேரவையினரால் யாழ்.நகரின் பல பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இதேவேளை, இன்றையதினம் இலங்கை வரலாற்றில் தமிழ்மக்கள் மறக்க முடியாத ஒரு முக்கியமான நாள் எனவும், கடந்த-39 வருடங்களுக்கு முன்னர் தலைநகர் கொழும்பில் தமிழ்மக்கள் சிங்களப் பேரினவாதிகளால் தாக்கப்பட்டும், எரிக்கப்பட்டும் படுகொலை செய்யப்பட்ட நாள் எனவும் தமிழ்த்தேசியப் பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுவீகரன் நிஷாந்தன் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் இடம்பெற்று 39 ஆம் ஆண்டுகள் கடந்த போதும் இதற்கான நீதியையோ, தமிழ்மக்களுக்கான உரிமைகளையோ இதுவரை சிங்கள ஆட்சியாளர்கள் பெற்றுத் தரவில்லை எனச் சுட்டிக் காட்டிய அவர் கறுப்பு யூலை நினைவேந்தல் நிகழ்வு அடுத்த தலைமுறைகளுக்கும் கடத்தப்படுவதன் மூலம் தமிழ்மக்களின் உரிமைகள் வென்றெடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதிக்கு இந்திய பிரதமர் வாழ்த்துக் கடிதம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்காகவும், ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காகவும் இந்திய அரசு எப்போதும் ஒத்துழைப்பை வழங்குமெனவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

தேசிய அரசாங்கத்தை அமைக்க உத்தியோகபூர்வ அழைப்பு வரவில்லை: மனோ கணேசன் அறிக்கை

தேசிய அரசு தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து உத்தியோகபூர்வ அழைப்பு எவருக்கும் விடுக்கப்படவில்லை என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தேசிய அரசு அல்லது சர்வகட்சி அரசு அமைப்பது தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கோ ஏனைய எதிர்க்கட்சிகளுக்கோ உத்தியோகபூர்வ அழைப்புகள் வரவில்லை என மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது .

எவ்வாறாயினும், நாடு இன்று இருக்கும் அவதி நிலையில், ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திற்கு நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவர அவகாசம் கொடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசரப்பட்டு எதிர்ப்பு அரசியல் ஆர்ப்பாட்டங்களை செய்யக்கூடாது என்பதே தமிழ் முற்போக்குக் கூட்டணியின்
நிலைப்பாடு என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

புதிய அரசியலமைப்பு தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சருடன் தமது கூட்டணி மலையக தமிழ் இலங்கையர்களின் அரசியல் அபிலாஷைகளை முன்வைக்கும் என மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லூர் ஆலய கொடியேற்றம் ; சுற்று வீதிகள் போக்குவரத்திற்கு தடை – யாழ் முதல்வர் மணிவண்ணன்

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 2 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், அதனுடைய ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பாக யாழ் மாநகர சபையினால் விளக்கமளிக்கப்பட்டது.

மஹோற்சவ ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று செவ்வாய்கிழமை காலை 9.00 மணியளவில் யாழ் மாநகர சபையில் இடம்பெற்றது.

ஈஸ்டர் குண்டு வெடிப்பு மற்றும் கொரோனா தொற்று காரணமாக கடந்த மூன்று வருடங்களாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம் பெற்ற நல்லூர் மஹோற்சவம் வழமைபோன்று அதாவது 2018 ஆம் ஆண்டுக்கு முன்பு எவ்வாறு உற்சவம் நடந்ததோ அதேபோல இம்முறை இடம்பெறுமென யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் தெரிவித்தார்.

கலந்துரையாடலுக்கு பின்னர் நல்லூர் ஆலயப் பெருந்திருவிழா ஏற்பாடுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், ஆகஸ்ட் 1ஆம் திகதி காலையில் இருந்து நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு ஆகஸ்ட் 29 ஆம் திகதி வைரவர் சாந்தி நிறைவடைந்த பின்னரே திறந்து விடப்படும்.

ஆலய வெளி வீதியைச் சூழ ஆலய நிர்வாகத்தினரால் சிவப்பு, வெள்ளை வர்ணக் கொடிகளால் எல்லையிடப்படும் வீதித்தடை பகுதிகளினுள் மாநகர சபையின் நீர் விநியோக வண்டி மற்றும் கழிவகற்றும் வண்டியை தவிர எக்காரணம் கொண்டும் வாகனங்கள் உட் செல்ல முடியாது.

அதேபோல வெள்ளை வர்ணக் கொடிகளால் எல்லையிடப்படும் வீதித்தடை பகுதிகளினுள் எந்தவிதமான வியாபார நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது. ட்ரோன் கமராக்களை பயன்படுத்தி காணொளி பதிவுசெய்ய முடியாது.

காலணிகளுடன் ஆலய வளாகத்திற்குள் பிரவேசிக்க முடியாது.

ஆலயத்துக்கு நேர்த்திக்கடன்களைக் கழிப்பதற்காக வருகின்ற தூக்குகாவடிகள் அனைத்தும் ஆலயத்தின் முன்பக்க பருத்தித்துறை வீதி வழியாக மட்டுமே உள்நுழைய முடியும். அவ்வாறு வருகின்ற காவடிகள் இறக்கப்பட்டதும், வாகனங்கள் அனைத்தும், செட்டித்தெரு வீதி வழியாக வெளியேறுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

வீதி மூடப்பட்டிருக்கும் சமயங்களில் பருத்தித்துறை வீதி வழியாக வரும் வாகனங்கள் யாழ் மாநகர சபைக்கு முன்பாக உள்ள வீதியால் பயணித்து யாழ் நகரை அடைய முடியும். ஆனால் இரதோற்சவம் மற்றும் சப்பர திருவிழாக்களின் போது கச்சேரி நல்லூர் வீதியாலேயே பயணிக்க முடியும்.

முகக்கவசங்களை அணிவது சட்டமாக்கப்படவில்லை. இருந்த போதும் கொரோனா எச்சரிக்கை காணப்படுவதால் முகக்கவசங்களை அணிந்து தன்னெழுச்சியாக சுகாதார விதிமுறைகளை பக்தர்கள் பின்பற்றவேண்டும். ஒவ்வொரு தனி மனிதனும் தங்களது சுகாதாரத்தில் கவனம் எடுத்து செயல்பட வேண்டும்.

திருட்டுச் சம்பவங்களை தவிர்க்க நல்லூர் ஆலயச்சூழலில் யாழ் மாநகர சபையினால் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இந்தக் கலந்துரையாடலில் யாழ் மாநகர முதல்வர், மாநகர ஆணையாளர்,மாநகர அதிகாரிகள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் உட்பட சம்பந்தப்பட்ட துறைசார் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Share

Posted in Uncategorized

விமானத்தினுள் வைத்து டானிஷ் அலி கைது

போராட்டத்துடன் தொடர்புபட்டதாகக் கூறப்படும் டானிஷ் அலி துபாய் செல்வதற்கு தயாரான போது குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய் நோக்கி பயணிக்கவிருந்த விமானத்தில் இருந்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் நுழைந்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் தொடர்பில் நீதிமன்றம் விடுத்த பிடியாணைக்கு ஏற்ப டானிஷ் அலி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

Posted in Uncategorized

கூட்டமைப்புக்குள் சர்ச்சையை ஏற்படுத்திய இரகசிய அழைப்பு! மூடிய அறைக்குள் நடந்ததை விளக்கும் TNA இணைத்தலைவர் செல்வம்

இலங்கையில் நடந்தது இன வாதம் தான் என ஏற்றுக்கொள்ள வைப்பதே எமது எண்ணம். இதனை நடைமுறைப்படுத்தும் வகையிலேயே ஜனாதிபதி தெரிவில் எமது முடிவு காணப்பட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,“யாரை ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும் என்று எமது கட்சிக்குள் பல வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றன. சஜித் உட்பட பலர் ஜனாதிபதி தேர்தலில் கலந்துகொள்ள இருந்து பின்னர் தங்களின் முடிவுகளை மாற்றி கொண்டனர்.

இதனால் எமது கட்சி ஒரு தீர்மானத்தை எடுத்தது. ஜனாதிபதி தெரிவு நடப்பதற்கு முதல் நாள் யாருக்கு வாக்களிப்பது என முடிவு செய்யலாம் என தீர்மானிக்கபட்டது.

இந்த தீர்மானம் நாட்டின் பொருளாதார பிரச்சினை, மக்களின் தேவை மற்றும் இன பிரச்சினை என்பவற்றை அடிப்படையாக கொண்டமைந்தது. மேலும் விமல் வீரவன்ச தரப்பினர் இன வாதத்தை கட்டிக்கொண்டு இருப்பவர்கள். அண்மையில் ஐ.நா சபையிலும் இலங்கையில் நடந்தது இன வாதம் இல்லை என கூறும் வகையில் ஜி.எல் பீரிஸ் கருத்து வெளியிட்டிருந்தார்.

எனவே இதனை அடிப்படையாக கொண்டு தான் எங்களுடைய யுக்தி அமைந்தது. அதாவது இலங்கையில் நடந்தது இன வாதம் தான் என அவர்களை ஏற்றுக்கொள்ள வைப்பதே எமது எண்ணம்.”என கூறியுள்ளார்.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி.

அடுத்த 12 மாதங்களில் எரிபொருள் இறக்குமதியை மட்டுப்படுத்த நேரிடும் – அமைச்சர் கஞ்சன

அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக எதிர்வரும் 12 மாதங்களில் எரிபொருள் இறக்குமதி வரையறை செய்யப்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் தளத்தினூடாக அமைச்சர் இதனை இன்று(25) பதிவிட்டுள்ளார்.

பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால் அனைத்து நிரப்பு நிலையங்களுக்கும் நாளாந்தம் எரிபொருள் விநியோகிக்கப்படவில்லை என தெரிவித்துள்ள அமைச்சர், மொத்தமாக எரிபொருள் கிடைத்தாலும் கூட அது தேவைக்கு போதுமானதாக இல்லை என கூறியுள்ளார்.

இதனிடையே, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் தேசிய எரிபொருள் அனுமதி அட்டையை கட்டாயப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வாகன பதிவு இலக்கத்தின் கடைசி எண்ணுக்கு அமைய, எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி வரை மாத்திரமே எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்படும் எனவும் அதன்பின்னர் தேசிய எரிபொருள் அனுமதி அட்டைக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படும் எனவும் எரிசக்தி அமைச்சர் கூறியுள்ளார்.

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான நிரப்பு நிலையங்கள் மற்றும் லங்கா IOC வலையமைப்பினூடாகவும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்த புதிய ஜனாதிபதியின் ஒத்துழைப்புக்களை எதிர்பார்க்கின்றோம் – ரஷ்ய ஜனாதிபதி

ஷ்யா – இலங்கைக்கு இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஒத்துழைப்புக்களை எதிர்பார்ப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்து கடிதத்திலேயே அவர் இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போதே ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடைய வாழ்த்து கடிதத்தினையும் கையளித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ரஷ்ய ஜனாதிபதி அனுப்பியுள்ள கடிதத்தில், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு ரஷ்ய ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

‘ரஷ்ய மக்களின் நலன்களுக்காகவும், பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்தும் நலனுக்காகவும் பல்வேறு துறைகளில் ஆக்கபூர்வமான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கு அரச தலைவர் என்ற முறையில் உங்களது செயல்பாடுகளை நான் எதிர்பார்க்கிறேன்’ என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அவரது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

சீனா வந்தால் இனிக்கும்! அதானி வந்தால் கசக்குமா?: சிதம்பரம் கருணாநிதி

கடந்த 30 ஆண்டு கால யுத்தம் காரணமாகவே இலங்கை முதலில் பாதிக்கப்பட்டது. அதன் பின்னர் ஆட்சிக்கு வருகை தந்த சில அரசியல்வாதிகளால் நாடு அழிவு பாதையில் சென்றுகொண்டுள்ளது. எனவே நாட்டை மீட்க முடியுமா என்பது சந்தேகமாகவே உள்ளது என எமது தலைமுறை கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

IBC தமிழ் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டின் வளங்கள் சூறையாடப்பட்டுள்ளன. இப்போது எந்த வளமும் நாட்டில் இல்லை. இதற்கு ஒரே தீர்வு ராஜபக்சர்கள் ஆட்சி விளக்க வேண்டும் என மக்கள் கூறுகின்றனர். அது தான் உண்மையில் நாட்டை மீட்பதற்கான தீர்வாகவும் காணப்படுகின்றது.” என கூறியுள்ளார்.