இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடப்போவதாக அறிவிப்பு

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்று முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தயாராவதாகவும் இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை பொறுக்க வேண்டுமென இலங்கை போக்குவத்து சபை வட பிராந்திய ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

யாழ் ஊடக அமையத்தில் இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்களின் விசேட ஊடக சந்திப்பின் போதே அவர்கள் இதனை தெரிவித்தனர்.

மேலும் தெரிவிக்கையில், 27 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெறவுள்ள பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்திற்கு பாடசாலை மாணவர்கள் அரச அரசசார்பற்ற உத்தியோகத்தர்கள் ஒத்துழைக்க வேண்டும்.

வடமாகாணத்திலுள்ள ஏழு டிப்போவில் உள்ள ஊழியர்களும் டிப்போவிற்கு கடமைக்கு செல்வதற்கே பெற்றோல் கிடையாது. பெற்றோலை பெறுவதில் பாரிய சிரமங்களை எதிர்கொண்டுள்ளோம்.

எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகிற நிலையில் பொதுமக்களை அவர்களது வேலைக்கு கொண்டு செல்வதற்கு நாம் பாரிய பணியாற்றுகிறோம்.

வீட்டில் இருந்து பணியாற்றுபவர்களுக்கு பெற்றோல் வழங்கப்படுகிறது. அத்தியாவசிய சேவை ஊழியர்களின் பட்டியலில் இலங்கை போக்குவரத்து சபையை உள்ளடக்கவில்லை.

நாம் எரிபொருளை கடமை நேரத்தில் வரிசையில் நின்று பெறமுடியும்.

ஆனால் நாம் வரிசையில் நின்று எரிபொருளை நிரப்புவதற்கு கடமை லீவை யாரும் தரப்போவதில்லை. நாம் பயணிகளை இடைநடுவில் விட்டுவிட்டு பெற்றோல் நிரப்ப செல்ல முடியாதே! எமது சேவை தொடர்ந்து நடக்க வேண்டுமாக இருந்தால் எமது வாகனங்களுக்கு இரவு 6மணிக்கு பின்னர் எரிபொருளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்ட வேண்டும் என்றனர்.

இலங்கையின் பொருளாதார நிலைமை மனித உரிமை நிலவரத்தின் முன்னேற்றத்தை திசைத்திருப்பக்கூடாது- பிரித்தானியா

இலங்கையின் மனித உரிமை நிலவரத்தின் முன்னேற்றத்தை சவாலான பொருளாதார நிலைமை திசைத்திருப்பக்கூடாது என்று பிரிட்டனின் பொதுநலவாய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் விக்கிபோர்ட் பிரிட்டிஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், சர்வதேச நாணயநிதியத்தின் பிரிவுகள் பொருளாதார கொள்கைகள் தொடர்பாக நிபந்தனைகளை விதிப்பதற்கு அனுமதிக்கின்ற போதிலும் அரசியல் அல்லது மனித உரிமை தொடர்பான நிபந்தனைகளை விதிப்பதற்கான ஏற்பாடுகள் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சர்வதேச கடன் மன்றங்களின் ஏனைய உறுப்பினர்களுடன் இணைந்து இலங்கையின் கடன் பிரச்சினைக்கு தீர்வொன்றை காணமுயல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக இலங்கை அரசாங்கத்துடனும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களுடனும் பேச்சுக்களை நடத்துவோம் என்றும் யுத்தத்திற்கு பிந்திய பொறுப்புக்கூறல் விவகாரம் தொடர்பாக பிரித்தானியா உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்தோடு, ஐ.நா. மனித உரிமை பேரவையின் தீர்மானம் குறித்து இலங்கை ஆக்கபூர்வமான ஈடுபாட்டை காண்பிக்கவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டைச் சீரழித்த முட்டாள்களிடமிருந்து அதிகாரத்தை உடன் மீளப்பெறவேண்டும்; பேராயர் கர்தினால்!

“நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணமான முட்டாள்களிடமிருந்து அதிகாரத்தை உடனடியாக மீளப்பெற வேண்டும்.”

– இவ்வாறு கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தினார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தற்போதைய சந்தர்ப்பத்தில் நாட்டுக்கு சகோதரத்துவமும், ஒத்துழைப்பும் அவசியமாகும்.

நாடு என்பது அரசியல் தலைவர்கள் அல்லர், மக்களாவர். மக்களுக்குத்தான் உதவி செய்ய வேண்டும். அரசியல்வாதிகளுக்கு உதவி செய்வது பொய் வேலையாகும்.

ஏனெனில், பல ஆண்டுகளாக இந்த நாட்டின் வளங்களை வீணடிக்கும் செயல் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. ஒரு தரப்பு அல்ல, பல தரப்பினர் இதில் தொடர்புபட்டுள்ளனர்.

7, 8 பில்லியன் என்ற பாரிய கையிருப்பு எவ்வாறு பூச்சியமானது? மத்திய வங்கியிலிருந்த தங்கம் எவ்வாறு காணாமல்போனது?

ஏன் இவை பொறுப்பற்ற முறையில் வீணாக்கப்பட்டன என்பது குறித்து எப்போதேனும் ஒரு நாளில் விசாரிக்கப்பட வேண்டும்.

அதுதான், மக்களுக்குத் தற்போது ஏற்பட்டுள்ள துன்பத்துக்கு ஒரு தீர்வாகும்.

இந்தப் பணத்தை வீணடித்தவர்கள் யார் என்பதை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

இந்த முட்டாள்தனமான தீர்மானத்தை எடுத்தவர்கள் யாவர்? மக்களை சௌபாக்கியத்தை நோக்கி கொண்டுசெல்லத்தான், தலைவர் ஒருவருக்கு அதிகாரம் வழங்கப்படுகின்றது. அந்த வாக்குறுதிதான் வழங்கப்பட்டது.

எனவே, 2, 3 ஆண்டுகளில் நாட்டை முழுமையாகக் கையேந்தும் நிலைக்குக் கொண்டு சென்றவர் யார் என்பது குறித்து முழுமையாக விசாரித்து, அவர்களிடமிருந்து அதிகாரத்தை மீளப்பெற்றுக்கொள்ள முடியுமாயின் உடனடியாக மீளப்பெற வேண்டும்” – என்றார்.

Posted in Uncategorized

ஒருவர் தன்வசம் வைத்திருக்கக்கூடிய வெளிநாட்டு நாணயத்தின் அளவு தொடர்பாக மத்திய வங்கி விடுத்துள்ள அறிவிப்பு

நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் இலங்கையில் வசிக்கும் ஒருவர் தன்வசம் வைத்திருக்கக்கூடிய வெளிநாட்டு நாணயத்தின் அளவை 15,000 அமெரிக்க டொலர்களிலிருந்து 10,000 அமெரிக்க டொலர்களாகக் குறைப்பதற்குத் தீர்மானித்திருப்பதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

பொதுமக்களின் கைகளிலுள்ள வெளிநாட்டு நாணயத்தை முறைசார் வங்கி முறைமைக்குள் கொண்டுவரும் நோக்கில் 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச்சட்டத்தின் 8 ஆவது பிரிவின்கீழ் வழங்கப்பட்டுள்ள கட்டளைக்கு அமைவாக இத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி இலங்கையில் வசிக்கும் ஒருவர் தன்வசம் வைத்திருக்கக்கூடிய வெளிநாட்டு நாணயத்தின் அளவு 15,000 அமெரிக்க டொலர்களிலிருந்து 10,000 அமெரிக்க டொலர்களாகக் குறைக்கப்படவுள்ளது. அதுமாத்திரமன்றி ஏனைய வெளிநாட்டு நாணயங்களும் இதற்குச் சமனான அளவில் குறைக்கப்படவுள்ளது.

அதேவேளை மேற்குறிப்பிட்ட தொiகையை விடவும் அதிகளவிலான வெளிநாட்டு நாணயத்தை கைகளில் வைத்திருப்பவர்கள் கடந்த 16 ஆம் திகதியிலிருந்து 14 வேலைநாட்களுக்குள் தம்வசமுள்ள வெளிநாட்டு நாணயத்தை தனிநபர் வெளிநாட்டு நாணயக்கணக்கில் அல்லது வர்த்தக வெளிநாட்டு நாணயக்கணக்கில் வைப்பிலிடவேண்டும். இல்லாவிட்டால் உரிமம்பெற்ற வர்த்தக வங்கி அல்லது தேசிய சேமிப்பு வங்கி போன்ற அதிகாரமளிக்கப்பட்ட வர்த்தகருக்கு விற்பனை செய்யவேண்டும்.

மேற்குறிப்பட்ட காலப்பகுதியின் பின்னர் எவரேனும் 10,000 டொலர்களுக்கு மேற்பட்ட வெளிநாட்டு நாணயத்தைத் தம்வசம் வைத்திருந்தால் வெளிநாட்டு நாணயச்சட்டத்தின் பிரகாரம் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதுகுறித்த மேலதிக தகவல்களை ஏதேனுமொரு உரிமம்பெற்ற வர்த்தக வங்கி மூலமோ, தேசிய சேமிப்பு வங்கி மூலமோ அறிந்துகொள்ளமுடியும். இல்லாவிட்டால் வெளிநாட்டுச் செலாவணித் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.dfe.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் ஊடாகவோ அல்லது 011-2477255/011-2398511 ஆகிய இலக்கங்களின் மூலம் வெளிநாட்டுச்செலாவணித்திணைக்களத்தைத் தொடர்புகொள்வதன் ஊடாகவோ அறிந்துகொள்ளமுடியும்.

சீனத் தூதுவரை சந்தித்து மஹிந்த நன்றி தெரிவிப்பு

முன்னாள் பிரதமரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ சீனத் தூதுவரை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கும் சீனத் தூதுவருக்குமிடைியலான சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை (24) இடம்பெற்றது.

இலங்கையின் கடிமனமான இந்த கால கட்டத்தில் இலங்கைக்கு உதவுவதற்காக சீனாவுக்கு மஹிந்த ராஜபக்ஷ தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை மக்கள் மிகவும் பொறுமையாக இருப்பதாகவும், அதற்கு தனது பாராட்டுகளை தெரிவிப்பதாகவும், இலங்கையின் நிலை மிக விரைவில் வழமைக்கு திரும்பும் எனவும் சீன தூதுவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Posted in Uncategorized

பல கொலைகள் மற்றும் குற்றச்சாட்டுக்கள் குறித்த தகவல்களை ஐ.நா.விடம் வெளிப்படுத்திய TMVP இன் உறுப்பினர் வெளிநாட்டில் தஞ்சம்!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்த ஒருவர் பல கொலைகள் மற்றும் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கு முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளார் என்று ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல்கள், பல கொலைகள் மற்றும் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான முக்கிய தகவல்களை அவர் வெளிப்படுத்தியதாக இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி அந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

கொழும்பிலும் வெளிநாட்டிலும் உள்ள சில முக்கிய இராஜதந்திர தூதரகங்களுக்கு தம்மிடம் உள்ள தகவல்களின் சுருக்கமான விபரங்களைக் கடிதம் மூலம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதன்பின்னர் அவர் உயிருக்கு பயந்து, சமீபத்தில் நாட்டைவிட்டு வெளியேறி வெளிநாட்டில் தஞ்சம் புகுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் அவர், ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் அதிகாரிகளைச் சந்தித்து தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியும் ஏனையவர்களும் செய்த குற்றங்கள் தொடர்பான வாக்குமூலங்களை வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐ.நா. அதிகாரிகள் சுமார் 5 நாட்கள் அவரிடம் இருந்து வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் நடராஜா ரவிராஜ் ஆகியோரின் கொலை மற்றும் ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல்போன சம்பவத்துடன் தொடர்புடைய தகவல்களை அந்த நபர் வெளிப்படுத்தியுள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்த கொலைகள் பற்றிய விவரங்களையும் அவர் வெளிப்படுத்தியிருந்தார் எனக் கூறப்படுகிறது.

ஐ.நா. மற்றும் இராஜதந்திர வட்டாரங்களிற்கு வழங்கப்பட்ட தகவல்கள் முன்னைய அரசாங்கத்துடன் தொடர்புடைய சிலர் மீது நேரடியாக குற்றச்சாட்டுகளை சுமத்தும் வகையில் அமைந்துள்ளன என்றும் இந்த தகவல்களை அடிப்படையாகக்கொண்டு, ஐ.நா.வும் தூதரங்களும் என்ன நடவடிக்கையை எடுக்கப்போகின்றன என்பது தெரியவில்லை என ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக அறிய தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனை தொடர்புகொள்ள முயற்சித்த போதிலும் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் ஐ.நா.விடம் இருந்து இந்த விடயம் குறித்து அறிய முயற்சித்தப்போதிலும் பயனளிக்கவில்லையென அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

அமெரிக்க உயர்மட்ட தூதுக்குழு நாளை (26) இலங்கை வருகை

அமெரிக்க திறைசேரி திணைக்களம் மற்றும் இராஜாங்க திணைக்களம் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்மட்ட தூதுக்குழு நாளை (26) நாட்டிற்கு வருகை தரவுள்ளது.

இவர்கள் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார்கள் என கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

ஆசியாவிற்கான பிரதி உதவி திறைசேரி செயலாளர் Robert Kaproth, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான பிரதி உதவி இராஜாங்க செயலாளரான தூதுவர் Kelly Keiderling ஆகியோரே நாட்டிற்கு வருகை தரவுள்ளனர்.

இந்த குழு, அரசியல் பிரதிநிதிகள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளை சந்திக்கவுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை மக்களின் பாதுகாப்பு மற்றும் செழிப்பிற்கான தமது தொடர்ச்சியான உறுதிப்பாட்டினை இந்த விஜயம் அடிக்கோடிட்டு காட்டுவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) தெரிவித்துள்ளார்.

இலங்கையர்கள் தமது வரலாற்றில் மிகப்பெரும் பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் போது, பொருளாதார வளர்ச்சிக்கு உதவி செய்வதற்காகவும் ஜனநாயக நிறுவனங்களை பலப்படுத்துவதற்காகவும் தாம் மேற்கொள்ளும் முயற்சிகள் முன்னரை விட தற்போது மிகவும் முக்கியமானதாக உள்ளதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மக்கள் தமது பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காகவும் உணவு பாதுகாப்பின்மையை எதிர்த்து போராடுவதற்காகவும் பொது சுகாதாரம் மற்றும் கல்வியை மேம்படுத்துவதற்காகவும் முயற்சி செய்யும் இவ்வேளையில், எதிர்வரும் மாதங்களில் அமெரிக்கா தொடர்ந்தும் இலங்கை மக்களுக்கு உதவிகளை வழங்கும் என கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

மன்னாரில் பாடல் தளமாக விளங்கும் அருள்மிகு கௌரியம்மை உடனாய திருக்கேதீச்சரநாதர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேப் பெருவிழா

மன்னாரில் பாடல் தளமாக விளங்கும் அருள்மிகு கௌரியம்மை உடனாய திருக்கேதீச்சரநாதர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேப் பெருவிழா வியாழக்கிழமை (30.06.2022) கர்மாரம்பம். இதைத் தொடர்ந்து எண்ணெய்க் காப்பு மஹா கும்பாபிஷேகம் 06.07.2022 இடம்பெறும்.

மன்னார் பாடல் தளமான திருக்கேதீஸ்வரம் ஆலய புனரமைப்பைத் தொடர்ந்து இவ் ஆலயத்தில் கும்பாபிஷேகம் இடமபெறுவதற்கான சகல எற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதாவது இவ் ஆலய திருத்தல் வேலைகளுக்காக அங்கு இருந்த விக்கிரங்கள் யாவும் ஆலயப் பகுதியிலிருந்து வெளியில் கொண்டு வரப்படடிருந்தன

தற்பொழுது இவ் ஆலய புனரமைப்பு வேலைகள் பூர்த்தி அடைந்த நிலையிலேயே இவ் விக்கிரங்கள் யாவும் அதன் இடங்களில் மீண்டும் வைக்கும் நிகழ்வாகவே இவ் நிகழ்வு இடம்பெறுகின்றது.

இதை முன்னிட்டு திருக்கேதீஸ்வர ஆலயத்தில் 30.06.2022 அன்று வியாழக்கிழமை பகல் 10.45 மணிக்கு இதற்கான கர்மாரம்பம் கிரிகைகள் வழிபாடுகள் ஆரம்பமாகின்றது.

எதிர்வரும் 03.07.2022 அன்று இவ் ஆலயத்திலிருந்து வெளி கொண்டுவரப்பட்ட விக்கிரங்கள் அந்தந்த இடங்களில் வீற்றிருக்கும் ஏற்பாடுகள் இடம்பெறும்.

இதைத் தொடர்ந்து எண்ணெய் காப்பு சடங்குகள் 3,4.5 ந் திகதிகளில் (03,04,05.07.2022) இடம்பெறும்.

இதைத் தொடர்ந்தே 06.07.2022 அன்று புதன்கிழமை காலை 9 மணி முதல் 10.30 மணி வரையான உத்தர நட்சத்திரம் சிம்மலக்கின நன்முகூர்த்தத்தில் கும்பாபிஷேக நிகழ்வுகள் இடம்பெறும்

இவ் கும்பாபிஷேக நிகழ்வுக்கு இலங்கையிலுள்ள பிரசித்திப் பெற்ற குருக்கள் சிவச்சாரிகள் அத்துடன் இந்தியாவிலிருந்தும் முப்பதுக்கு மேற்பட்ட குருக்களும் மற்றும் நல்ல ஆதினத்தினரும் பலர் கலந்து கொள்ள இருப்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தேவாரங்கள் திருப்பாடல்கள் பாடுவோரும் இந்தியாவிலிருந்து வருகை தர இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் ஆலயத்தில் சிவன் மற்றும் அம்பள் அவர்களை சுற்றி 24 சந்நிதிகள் காணப்படுகின்றன. இவர்களுக்கே இவ் கும்பாபிஷேகம் நடைபெறும்.

பின் 07.07.2022 மண்டல அபிஷேகம் இடம்பெறும். நாளாந்தம் இரண்டு பெரிய பூiஐகள் 48 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும்.

இவ் ஆலயம் 2015 ஆம் ஆண்டு தொடக்கம் புனரமைப்பு வேலைகள் ஆரம்பமாகிய நிலையிலேயே தற்பொழுது பூர்த்தி அடைந்த நிலைக்கு வந்துள்ளது

இவ் புனரமைப்பு வேலைகளுக்கு என இந்திய அரசாங்கம் 325 மில்லியன் ரூபாவும் இத்துடன் சுமார் 480 மில்லியன் ரூபா ஆலய நிதி பக்தர்கள் மற்றும் வெளிநாடு உள்நாடு நலன் விரும்பிகளின் நிதியிலும் இவ் வேலைகள் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது எனவும் தெரிவிக்க்பட்டுள்ளது.

Posted in Uncategorized

யாழில் பத்திரிகைகள் முடங்கும் அபாயம்

யாழ்ப்பாணத்தில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பத்திரிகைகள் முடங்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தை தளமாக கொண்டு 3 பத்திரிகைகள் அச்சு பதிப்பாக வெளிவருகின்றன.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக குறித்த பத்திரிகைகள் விநியோகத்தில் பெரும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளன.

பத்திரிக்கை விநியோக பணியில் ஈடுபடும் பணியாளர்கள் எரிபொருள் இன்மையால் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதால் விநியோக பணிகள் பாதிக்கப்படவுள்ளன. அதனால் பத்திரிகைகள் முடக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது.

இது தொடர்பில் பத்திரிக்கை நிறுவன தலைவர்கள் , ஆசிரியர் பீடத்தினர் வடமாகாண ஆளூநர் , மாவட்ட செயலர் ஆகியோருடன் கலந்துரையாடிய போதிலும் சாதகமான பதில்கள் கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை யாழில் மூன்று தொலைகாட்சி நிறுவனங்கள், வானொலி சேவைகள் என்பன உள்ளடங்கலாக 10 க்கும் மேற்பட்ட ஊடக நிறுவனங்கள் உள்ளன.

அவற்றில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் ஊடக பணியாளர்கள் என பலரும் எரிபொருள் தட்டுப்பாட்டினால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

அதேபோன்று யாழில் இருந்து கொழும்பில் உள்ள ஊடக நிறுவனங்களில் பணியாற்றும் ஊடகவியலாளர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

சிங்கள மக்களின் அமைதியை தெருவில் இறங்கினால் தெரிந்துகொள்ளலாம் – சரத் வீரசேகரவிற்கு சுரேந்திரன் பதில்

சரத் வீரசேகர அவர்கள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு பதவியில் இருந்து துரத்தி அடிக்கப் பட்டது சிங்கள மக்கள் அமைதியாக இருந்ததால் தானோ? சிங்கள மக்களின் அமைதியை குலைத்தது தமிழர்கள் அல்ல, அம்மக்களை ஏமாற்றிய சிங்கள பௌத்த வேடதாரிகள் என அந்த மக்களே தெளிவாக கூறியுள்ளனர்.

தாங்கள் தெருவில் இறங்கி சிங்கள மக்களுடன் சகஜமாக உரையாட முடியுமா? அவர்களின் அமைதியைக் குலைத்தது நீங்கள்தான். அவர்கள் பொறுமையை தமிழ்மக்கள் சோதிக்கவில்லை.

மதவாதத்தி்ன் பின்னால் ஒழித்து பூச்சாண்டி காட்டுபவர்களுக்கு இனி மக்கள் மசிய மாட்டார்கள். குருந்தூர் மலை புராதன தமிழர் பிரதேசம். அப்பிரதேச மக்களின் காணிகளை அபகரித்து, நீதிமன்ற உத்தரவையும் மீறி, நாடு பாரிய பொருளாதார சிக்கலை எதிர் கொண்டிருக்கும் வேளையில் புத்தர் சிலை அமைப்பதற்கான அவசியம் என்ன?

தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை அபகரித்து நமது இன குடிப்பரம்பலில் சிதைத்து நமது தாயகக் கோட்பாட்டை மழுங்கடிக்கும் இன அழிப்பு நடவடிக்கையே இதுவாகும்.

பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் முல்லைத்தீவு மாவட்டத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். அப்பிரதேச மக்களே அந்தப் போராட்டத்தில் அவரோடு கலந்து கொண்டவர்கள். ஆனால் அங்கு பெளத்த விகாரை அமைக்க வந்தவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? அந்தப் பிரதேசத்தை சாராதவர்களே அங்கு வந்திருந்தார்கள்.

தொல்லியல் ஆணைக்குழு அதிகாரிகள் வேறு மதத்தினரின் புராதன சின்னங்களை மீளக் கட்டி அமைப்பதற்கு என்றாவது முயன்றிருக்கிறார்களா?
பௌத்த மதச் சின்னங்களை மீள கட்டுவதற்கு மாத்திரமே துணை போகிறார்கள்.
இப்படியான நடவடிக்கைகள் தான் மக்கள் அமைதியை குலைக்கும் செயல் என்பதை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இதை நியாயப்படுத்தும் நீங்கள் அமைச்சுப் பதவிக்கு அல்ல பாராளுமன்ற பதவிக்கே தகுதியற்றவர் என்பதை சிங்கள மக்களே தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளனர். அதனால்தான் நீங்கள் அமைச்சுப் பதவியிலிருந்து துரத்தியடிக்கப்பட்டீர்கள். உங்கள் நிலையை புரிந்துகொண்டு வீர வசனங்களை பேச வேண்டும்.

சிங்கள மக்களுக்கு முகம் கொடுக்க முடியாத நீங்கள், உங்கள் இருப்பை தக்க வைப்பதற்காக அவர்களுடைய அமைதியை தமிழர்கள் குலைக்க முற்படுவதாக பூச்சாண்டி காட்டி சிங்கள மக்களை ஏமாற்றும் உங்களுடைய கபடத்தனம் இனிமேலும் பலிக்காது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

தமிழ் மக்களின் இன குடிப்பரம்பலில் சிதைக்கும் எந்த நடவடிக்கைக்கு எதிராகவும் நாங்கள் தொடர்ந்து குரல் கொடுப்போம். போராடுவோம். தடுத்து நிறுத்துவோம். அது தமிழ் மக்களின் உரிமை. இது சிங்கள மக்களின் அமைதியை சோதிக்கும் விடயமே அல்ல என்பதை குறித்த பாராளுமன்ற உறுப்பினர் தெரிந்து கொள்ள வேண்டும்

சுரேந்திரன்
ஊடகப் பேச்சாளர்
தமிழ் ஈழ விடுதலை இயக்கம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு