மீனவர்களின் எரிபொருள் நெருக்கடியைத் தீர்க்க உதவுமாறு இந்திய துணை தூதுவரிடம் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை

மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த மீனவர்களுக்கு தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொள்ள உதவுமாறு யாழ். இந்திய துணைத் தூதுவரிடம் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மன்னாரை சேர்ந்த மீனவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 78,000 லீட்டர் மண்ணெண்ணெய்யும் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 31,180 லீட்டர் மண்ணெண்ணெய்யும் தேவைப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்க்கமான முடிவை எடுப்பதற்கு உதவுமாறு செல்வம் அடைக்கலநாதன் இந்திய துணை தூதுவரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Posted in Uncategorized

கோட்டாகோகம தொடர்பான அடிப்படை உரிமை மனு நிராகரிப்பு

காலி முகத்திடல் கோட்டாகோகம போராட்டக்களத்தில் முன்னெடுக்கப்படுகின்ற அமைதிப் போராட்டம் சட்டவிரோதமான முறையில் கலைக்கப்படுவதை தடுப்பதற்கான உத்தரவை பொலிஸ்மா அதிபர், இராணுவத் தளபதி உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

உயர் நீதிமன்ற நீதியரசர்களான புவனெக்க அலுவிஹாரே, L.T.B.தெஹிதெனிய மற்றும் A.H.M.D. நவாஸ் ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மறுத்துள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிவில் பொறியியலாளரும் திக்வெல்ல பிரதேசத்தை சேர்ந்தவருமான M.N.N.ஹமீம் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

ஜனாதிபதியை தாம் சந்தித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை “கோட்டா கோ கம” ஆர்ப்பாட்டக்காரர்கள் மறுப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தாம் சந்தித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை “கோட்டா கோ கம” ஆர்ப்பாட்டக்காரர்கள் மறுத்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதேவேளை ஜனாதிபதியிடம் சில முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையை ஆர்ப்பாட்டக்காரர்கள் மறுத்துள்ளனர்.

மேலும் “கோட்டா கோ கம” பிரதிநிதித்துவப்படுத்தும் எவரும் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர் .

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் பதவிக் காலம் நீடிப்பு

ஒரே நாடு – ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் மேலும் 3 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் ஆலோசனைக்கு அமைய, ஜனாதிபதி செயலாளரினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியினூடாக செயலணியின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாடு – ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் கடந்த மே 27 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.

அதற்கமைய, செயலணியின் பதவிக்காலத்தை மேலும் 3 வாரங்களுக்கு நீடித்து நேற்று குறித்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஒக்டோபர் 26 ஆம் திகதி குறித்த ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டது.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தலைமையில் நியமிக்கப்பட்ட இச் செயலணியானது கடந்த காலங்களில் நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ தொடர்பான கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

அறிவுக்களஞ்சியத்தை தீச்சுவாலைகள் விழுங்கி 41 வருடங்கள்

யாழ். நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன்(01) 41 வருடங்கள் பூர்த்தியாகின்றன.

புதைத்தாலும் முளைத்து எரித்தாலும் உயிர்க்கும் வரலாற்றை அழித்தல் அத்தனை எளிதன்று.

கம்பீரமாய் காட்சியளிக்கும் யாழ். நூலகத்தின் கருகிய புத்தகங்களின் சாம்பர் மணத்தை வாசிப்பின் மீது தீராத காதல் கொண்ட வாசகர்களால் மாத்திரமே நுகர முடியும்.

அறியாமை இருளகற்றும் புத்தொளிக் கீற்றை இன்று போன்றதோர் நாளில், காரிருளில் மூழ்கடித்த கதையை மீட்ட மீட்ட சோகமே எஞ்சும்.

கவர்ந்து செல்லவோ, சூறையாடவோ முடியாத தெற்காசியாவின் அறிவுப் பொக்கிஷத்தை தீது நன்கறியாத தீ தீண்டி துவம்சம் செய்த துன்பியல் அனுபவத்தை வார்த்தைகளில் வசப்படுத்துவது அத்துணை எளிதன்று.

1933ஆம் ஆண்டு அறிவறம் நிரம்பிய சான்றோரின் வாசிப்பு விதை சில காலத்தில் பெரு விருட்சமாய் யாழ். நூலகமாய் நிமிர்ந்து நின்றது.

புராதனம் பறைசாற்றும் ஓலைச்சுவடிகள்…

1800-களில் யாழில் தகவல் தந்த செய்தி ஏடுகள், தொன்மை வாய்ந்த வரலாற்று ஆவணங்களை உள்ளடக்கி எம்மவரின் உணர்வுகளின் எழுத்துருவாய் வீறுடன் விளங்கியது யாழ். நூலகம்.

இருப்பின் அடையாளத்தை அரிக்கும் கறையான்கள், பழம்பெருமையை அழிக்க தீ வடிவம் கொண்டு யாழ். நூலகத்தை பற்றின.

1981 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி நள்ளிரவு வேளை, தெற்காசியாவின் அறிவுக்களஞ்சியத்தை தீச்சுவாலைகள் விழுங்க ஆரம்பித்தன.

நூலகம் எரியூட்டப்பட்ட வேளை, இரவல் வழங்கும் பகுதியில் சுமார் 57,000 நூல்களும் சிறுவர் பகுதியில் 8,995 நூல்களும் உசாத்துணை பகுதியில் கிடைத்தற்கரிய 29,500 நூல்களும் இருந்தன.

இவை அனைத்தும் தீயினால் சிதைக்கப்பட்டு, சாம்பராகியமை வேதனைக்குரியதே.

காயங்களை ஆற்றும் காலம், நூலகத்தின் உருவை இன்று மாற்றியுள்ளது.

யாழ். பொது நூலகம் இன்று மீண்டும் கம்பீரமாக காட்சியளிப்பதுடன், வாசகர்களின் அறிவுப்பசியினை போக்கி வருகின்றது.

Posted in Uncategorized

21ம் திருத்தம் என்று சொல்லி மாகாணசபைகளையும், தேர்தல் முறையையும் மாற்ற பார்க்கிறார்கள்- மனோ கணேசன்

21ம் திருத்தம் என்று சொல்லி மாகாணசபைகளையும், தேர்தல் முறையையும் மாற்ற பார்க்கிறார்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

“மாகாணசபை முழுமையான அதிகார பரவலாக்கல் தீர்வல்ல. ஆனால், குறைந்தபட்சமாக இருக்கும் அதையும் வெட்டிக்குறைக்க வேண்டுமென சிங்கள கட்சிகள் கூறுகின்றன. அதேபோல் குறைந்தபட்சமாக தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளை பாராளுமன்றம், மாகாணசபைகள் ஆகியவற்றுக்கு செல்ல வழிகாட்டும் விகிதாசார தேர்தல் முறைமையையும் மாற்ற வேண்டும் என்ற குரல்கள் தெற்கில் எழுகின்றன.

இது தொடர்பில் தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் விழிப்பாக இருக்க வேண்டும்” என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் அனைத்து தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கும் அறைகூவல் விடுத்துள்ளார்.

மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

21ம் திருத்தம் என்று சொல்லி, நிறைவேற்று ஜனாதிபதி முறையை அகற்றினால், 13ம் திருத்தம், தேர்தல் முறை ஆகியவையும் மாற வேண்டும் என இங்கே பலர் சொல்ல தொடங்கி உள்ளார்கள்.

தென்னிலங்கை சிவில் சமூகத்துக்கு நல்லாட்சி, சுயாதீன குழுக்கள், நீதிமன்ற சுதந்திரம், ஊடக சுதந்திரம், ஊழல் எதிர்ப்பு போன்ற பல்வேறு முன்னுரிமை பிரச்சினைகள் தொடர்பாக தேசிய கோரிக்கைகள் உள்ளன.

இவற்றை நாங்களும் கடுமையாக ஆதரிக்கின்றோம். அதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.ஆனால், எங்களது முன்னுரிமை பிரச்சினைகள் வேறு.

ஒரே நாட்டுக்குள் வடக்கு, கிழக்கில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு அதிகார பகிர்வு, மலையகத்தில் அதிகார பகிர்வு, தோட்ட குடியிருப்புகளை தேசிய நிர்வாக வலையமைப்புக்குள் கொண்டு வரல், மொழி உரிமை, மத வழிபாட்டு உரிமை, அகழ்வாராய்ச்சி, வனம் மற்றும் வனஜீவி திணைக்களங்கள், மகாவலி அதிகாரசபை ஆகியவற்றின் மூலம் வட-கிழக்கில் காணி பிடிப்பு, பெளத்த மயமாக்கல், பயங்கரவாத தடுப்பு சட்டம், அரசியல் கைதிகள், காணாமல் போனோர்… என்று பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.

தேசிய கோரிக்கைகளை ஆதரிக்கும் அதேவேளை எமது பிரச்சினைகளையும் நாம் களத்துக்கு கொண்டுவர வேண்டும்.எமது பிரச்சினைகளுக்கு நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

எனவேதான், ஜனாதிபதி முறைமையை முழுமையாக அகற்றுகிறீர்களோ, இல்லையோ, 13ம் திருத்தம், தேர்தல் முறை இவற்றில் கைவைக்க ஒருபோதும் இணங்க மாட்டோம். இருப்பதையும் இழக்க இணங்க மாட்டோம்.

பழைய பிரச்சினையை தீர்க்க போய், புது பிரச்சினைகளை உருவாக்காதீர்கள் என்று நேற்று நான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் உரக்க கூறினேன்.

இந்த நிலைப்பாட்டுடன் உடன்படும்படி, அனைத்து தமிழ், முஸ்லிம் கட்சிகளையும், அக்கட்சி தலைவர்களையும், எம்பீகளையும் தமிழ், முஸ்லிம் அரசியல் ஆய்வாளர்களும், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களும், கட்சி உறுப்பினர்களும் வலியுறுத்த வேண்டும்” என்றார்.

கச்சதீவை இந்தியாவிற்கு பங்கம் ஏற்படும் வகையில் பயன்படுத்த தமிழ் மக்கள் ஒரு போதும் அனுமதியளிக்க மாட்டார்கள் -ரெலோ

கச்சதீவை விட்டுக் கொடுக்க முடியாது. வடக்கில் வாழும் தமிழர்கள் பயன்படுத்தும் தீவாக இருக்கின்ற போதும், இந்தியாவிற்கு பங்கம் ஏற்படும் வகையில் அதனை பயன்படுத்த தமிழ் மக்கள் ஒரு போதும் அனுமதியளிக்க மாட்டார்கள். அதனால் இந்திய தனது பாதுகாப்பு விடயத்தில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என ,தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று (29) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பாரதப் பிரதமர் தமிழ் நாட்டிற்கு வந்திருந்த போது கச்சதீவு பிரச்சனை அதில் எழுப்பப்பட்டுள்ளது. கச்ச தீவை மீட்பதற்கு இது சரியான தருணம். ஆகவே அதனை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழ முதலமைச்சர் ஊடாக பாரத பிரதமரிடம் முன் வைத்தது மன வருத்தம் தருகின்றது.

இந்திய அரசாங்கம் இலங்கையில் பொருளாதாரப் பிரச்சனை ஏற்பட்ட போது முதன் முதல் உதவி செய்த அரசாங்கமாக உள்ளது. பல உதவிகளை அவர்கள் செய்து வந்தார்கள். அதே நேரத்தில் தமிழ் நாட்டு முதலமைச்சர் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் வாழும் மக்களுக்கு உதவி செய்ய காத்திருக்கின்றோம் என்ற கருத்தை முன் வைத்த போது எங்களுடைய தரப்பில் இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்கும் தமிழ் நாடு உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நாம் முன்வைத்தோம். இந்த பொருளாதாரப் பிரச்சனை சிங்கள மக்களையும் பாதித்திருக்கிறது. இது தான் தமிழர் பண்பாடு என்ற விடயத்தை முதலமைச்சருக்கு எடுத்துக் கூறினோம். இலங்கை பூராகவும் அவர்களுடைய உதவி வந்து கொண்டிருகிறது.

அத்துடன் இந்தியாவில் ஒரு சிறுமி சைக்கிள் வாங்க வைத்திருந்த பணத்தை எங்களுடைய மக்களுக்கு கொடுக்கின்ற நெகிழ்ச்சியான விடயத்தைப் பார்க்க முடிந்தது. அன்றாடம் பிச்சை எடுத்து வாழும் ஒரு பெரியவர் தனது பணத்தை இலங்கை மக்களுக்கு கொடுக்கின்ற நிகழ்வையும், ஒரு தேநீர் கடைக்காரர் பலரையும் கூப்பிட்டு தேநீர் அருந்த வைத்து அவர்களிடம் விரும்பிய பணத்தை தரும்படி கேட்டு அதனையும் வழங்கியிருந்தார். இவ்வாறு தமிழ் நாட்டு மக்கள் இலங்கைப் பொருளாதாரப் பிரச்சனைக்கு பாரிய நல்லெண்ணத்துடன் உதவி செய்துள்ளார்கள். அந்த உதவி எங்களால் மறக்க முடியாது. தமிழ் நாட்டு மக்கள் மற்றும் தமிழ் நாட்டு அரசாங்கத்தை நாம் மறக்க முடியாது. தமிழ் நாட்டு அரசாங்கம் அன்று முதலே தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயற்படுகிறது.

உண்மையில் கஸ்ரப்படுகின்ற நிலையில் இருக்கும் போது கச்சதீவைப் பெறுவதென என தமிழக முதல்வர் எண்ணியது கவலை தருகிறது. இதனால் மனவருத்தம் அடைகின்றோம். தமிழர்களுக்கு தற்போதைய தமிழக முதல்வரின் தந்தையார் பாரிய சேவைகளை செய்துள்ளார். இந்த நிலையில் கஸ்ரமான நிலையப் பயன்படுத்தி கச்சதீவை இந்தியா பெற முயல்வது ஏற்றுக் கொள்ள முடியாது. கச்சதீவைப் பொறுத்தவரை அதில் எங்களது மீனவர்கள் பயன்பெறும் வாய்ப்பு கூட இருக்கிறது. கச்சதீவை விட்டுக் கொடுக்க முடியாது. அது தமிழர்களின் தீவாக உள்ளது.

வடக்கில் வாழும் தமிழர்கள் பயன்படுத்தும் தீவாக இருக்கின்ற போதும், இந்தியாவிற்கு பங்கம் ஏற்படும் வகையில் அதனை பயன்படுத்த தமிழ் மக்கள் ஒரு போதும் அனுமதியளிக்க மாட்டார்கள். அதனால் இந்திய தனது பாதுகாப்பு விடயத்தில் அச்சம் கொள்ளத் தேவையில்லை. பாரத பிரதமர் கூட இலங்கை தமிழர்களை காப்பாற்ற முயற்சிப்போம் என கூறிய நிலையில் தமிழக முதல்வர் கூறியதை ஏற்க முடியவில்லை. இலங்கை தமிழ் மீனவர்கள் எப்போதும் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்க மாட்டார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

21 ஆவது திருத்த சட்டத்திற்கு பூரண ஆதரவு மைத்திரி அவசர கடிதம்

21 ஆவது திருத்த சட்டத்திற்கு தமது கட்சி பூரண ஆதரவளிப்பதாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவிற்கு கடிதம் ஒன்றின் மூலம் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் பல யோசனைகளை அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவிடம் இந்த திருத்தத்தில் உள்ளடக்குமாறு அவர் முன்வைத்துள்ளார்.

21வது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தெரியப்படுத்துவதற்கான கலந்துரையாடலும் அண்மையில் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

சீன தூதுவர் அம்பாறை விஜயம் ; 2500 உலருணவுப்பொதிகள் வழங்கி வைப்பு !

சீனக் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் கிவ் ஜென்கொங் அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்திருந்தார் . அவரை அம்பாறை மாவட்ட பதில் அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் வரவேற்று கலந்துரையாடினார்.

அங்கு ,அம்பாரை மாவட்டத்திற்கு சமகால இடர் நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக சீன நாட்டு உதவியாக 2500 உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

ஒவ்வொன்றும் 5,000 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப்பொருட்கள் 2500 பொதிகள் வழங்கப்பட்டன .

இதில் ,அடையாளமாக 100 பயனாளிகளுக்கு சீன தூதுவரும் அவரது பாரியாரும் அதனை வழங்கி வைத்தார்கள். இந்த சந்திப்பில் ,கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மதநாயக்க மற்றும் பாதுகாப்பு படைகளின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள்.

“இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நல்லுறவு தொடரும் என்றும் எமது முதற் கட்ட உதவி இது. எதிர்காலத்தில் இன்னும் பல உதவிகளை நாட்டுக்கு செய்ய இருக்கிறோம்” என்று சீன தூதுவர் அங்கு கூறியிருந்தார்.

அம்பாறை மாவட்ட பதில் அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் சீன தூதுவருக்கு நன்றி தெரிவித்து “மேலும் இந்த உதவிகளை அம்பாரை மாவட்டத்திற்கு வழங்க வேண்டும்” என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

ஒருவாரத்துக்குள் 21 இன் இறுதி வரைபு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் : வட,கிழக்கு அரசியல் கட்சிகளை பங்கேற்குமாறு நீதி அமைச்சர் அழைப்பு

ஒருவாரகால இடைவெளியில் 21ஆவது திருத்தச்சட்டத்திற்கான வரைவு இறுதி செய்யப்பட்டு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று குறிப்பிட்ட நீதித்துறை, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ வடக்கு, கிழக்கு அரசியல் கட்சிகளும் பங்கேற்று தமது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்றும் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.

முன்மொழியப்பட்டுள்ள 21ஆவது திருத்தச்சட்டத்திற்கான வரைவினை தயாரித்தவரான அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ அடுத்தகட்டச் செயற்பாடுகள் தொடர்பில் குறிப்பிடுகையிலேயெ அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்மொழியப்பட்டுள்ள 21ஆவது திருத்தச்சட்ட வரைவு குறித்து அனைத்துக்கட்சிகளினதும் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூட்டமொன்று நடத்தப்பட்டது. அந்தகூட்டத்தில் வடக்கு, கிழக்கினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளில் பெரும்பான்மையானவை பங்கேற்கவில்லை.

இதனால், இறுதித் தீர்மானம் இன்றி குறித்த கூட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் பிறிதொரு கூட்டம் நடத்தப்படவுள்ளது.

இதன்போது, பெரும்பாலும் வரைவு இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறான நிலையில் 6ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சரவை அனுமதிக்காக குறித்த பத்திரம் சமர்ப்பிக்கப்பவுள்ளது என்றார்.