சீன நாட்டுத் தூதுவர் கிழக்கு ஆளுநரை சந்தித்து பேச்சு

சீன மக்கள் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் QI Zenhong இன்று (24) காலை திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தை சந்தித்தார்.

அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற ஆளுநருக்கும் சீனத் தூதுவருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது ஆளுநரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய கிழக்கு மாகாணத்திற்கான விஜயத்தையும் அவர் மேற்கொண்டுள்ளார்.

ஆளுநர் அலுவலகத்திற்கு வந்த சீன தூதுவருக்கு உற்சாக வரவேற்பேற்களிக்கப்பட்டது .

அதனைத் தொடர்ந்து சீனத் தூதரகத்தினால் கிழக்கு மாகாணத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5000 உலர் உணவுப் பொதிகளை தூதுவர் உத்தியோகபூர்வமாக விநியோகித்தார்.

பின்னர் கிழக்கு மாகாணத்தில் புதிய முதலீடுகள் மூலம் அபிவிருத்தி செய்யக்கூடிய வளங்கள் குறித்து சீனத் தூதுவர் மற்றும் அவரது குழுவினருக்கு விளக்கமளித்தார். மேலும், புதிய முதலீடுகளை மேற்கொள்ளக்கூடியதுமான மாகாணத்தின் வளங்கள் தொடர்பான விசேட கையேட்டை ஆளுநர் அவர்கள் தூதுவரிடம் இதன் போது வழங்கினார்.

இதில் திருகோணமலை மாவட்ட செயலாளர் உட்பட பல உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Posted in Uncategorized

யாழில் தொடரும் எரிபொருளுக்கான நீள் வரிசைகள்: விலை அதிகரிப்புத் தொடர்பில் மக்கள் கடும் விசனம்

கடும் பொருளாதார நெருக்கடியின் எதிரொலியாக நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக யாழிலும் பொதுமக்கள் தொடர்ச்சியாகப் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்தநிலையில் மீளவும் எரிபொருட்களின் சடுதியான விலை அதிகரிப்பு பொதுமக்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமையும்(24.5.2022) யாழ்.மாவட்டத்தில் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காகப் பரவலாகப் பல்வேறு இடங்களிலும் மிக நீண்ட வரிசைகளில் மோட்டார்ச் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களில் பொதுமக்கள் காத்திருக்கின்றனர். நீண்ட நேரம் காத்திருந்தே எரிபொருளைப் பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளதாகத் தெரிவித்த பொதுமக்கள் இன்று அதிகாலை முதல் எரிபொருட்களின் விலை மீண்டும் அதிகரித்தமை தொடர்பிலும் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

சர்வதேச கடன் மறுசீரமைப்பிற்கான செயற்பாடு முன்னெடுப்பு; 2 நிறுவனங்கள் தெரிவு

எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட நெருக்கடிகளால் மக்கள் துன்பப்படுகின்ற நிலையில், அரசாங்கம் பெற்றுக்கொண்ட சர்வதேச கடனை மறுசீரமைப்பதற்கான செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்பாட்டிற்கான நிதி ஆலோசனை சேவைகளுக்காக உலகின் முன்னணி ஆலோசனை நிறுவனங்கள் இரண்டை தெரிவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.

முன்வைக்கப்பட்டுள்ள சர்வதேச யோசனைகள் தொடர்பில் ஆராய்ந்து, அதற்கான புள்ளிகள் வழங்கப்பட்டு, பிரான்ஸின் Lazard என்ற நிறுவனமே கடன் மறுசீரமைப்பிற்கான ஆலோசனை நிறுவனமாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.

இந்த ஆலோசனை சேவைகளுக்கான கட்டணமாக 5.6 மில்லியன் டொலரை செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சட்ட ஆலோசனைகளை வழங்க Clifford Chance நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

ராஜபக்ஸ குடும்பத்தாரை நாட்டிலிருந்து வௌியேற்ற மொஹமட் நஷீட் முயல்வதாக சர்வதேச அரங்கில் சந்தேகம்

மாலைத்தீவுகளின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமான மொஹமட் நஷீட் இலங்கைக்கான வௌிநாட்டு உதவிகளை ஒருங்கிணைக்கும் விடயத்தில் மேற்கொண்டுள்ள தலையீடு குறித்து தற்போது அதிகம் பேசப்படுகிறது.

மொஹமட் நஷீட் இலங்கையில் தங்கியிருந்து மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அவரது குடும்பத்தவர்கள் பாதுகாப்பாக நாட்டிலிருந்து வௌியேறுவதற்கான பொறிமுறையை தயாரித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளதென The Maldives Journal இணையத்தளம் இன்று செய்தி வௌியிட்டுள்ளது.

சர்வதேச உதவிகள் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்கு தன்னார்வமாக முன்வந்து கடந்த வாரம் இலங்கைக்கு வருகை தந்த மொஹமட் நஷீட், அத்தகைய பணிகளில் எவ்வித அனுபவமும் இல்லாதவர் என இணையத்தள செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதாரத்தை வழமை நிலைக்கு கொண்டு வருவதற்கான சர்வதேச உதவிகளை ஒருங்கிணைப்பதற்காக மாலைத்தீவுகளின் சபாநாயகரும் முன்னாள் ஜனாதிபதியுமான மொஹமட் நஷீட் முன்வைத்த யோசனையை கடந்த 19 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டார்.

பிரதமரின் அனுமதியுடன் 20 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்த மொஹமட் நஷீட், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோரை சந்தித்தார்.

இந்த சந்திப்புகளுக்கு மத்தியில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவையும் அவர் கடந்த 21 ஆம் திகதி சந்தித்தார்.

சர்வதேச உதவிகளை ஒருங்கிணைப்பது தொடர்பாக எவ்வித அனுபவமும் இல்லாத மொஹமட் நஷீட், கடந்த சில தினங்களாக உயர் மட்ட அரசியல் தலைவர்களுடன் சந்திப்புகளை மேற்கொண்டு, ராஜபக்ஸ குடும்பத்தினர் மாலைத்தீவுகளுக்கு செல்வதற்கான பாதுகாப்பு வழிமுறையொன்றை ஏற்படுத்துவதற்கு அழுத்தம் பிரயோகித்துள்ளதாக The Maldives Journal இணையத்தளம் தெரிவித்துள்ளது.

பதவி விலகிய மஹிந்த ராஜபக்ஸ, மொஹமட் நஷீட்டை தொடர்புகொண்டு இலங்கையின் நிலைமை தணியும் வரை தமது குடும்பத்தவர்கள் மாலைத்தீவுகளில் தங்கியிருப்பதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்ததாக மாலைத்தீவுகள் அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவரை மேற்கோள்காட்டி இந்த செய்தி வௌியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, மொஹமட் நஷீட், ராஜபக்ஸ குடும்பத்தினருக்காக மாலைத்தீவுகளில் உள்ள இந்திய பிரஜை ஒருவருக்கு சொந்தமான 12 மில்லியன் டொலர் பெறுமதியான மாளிகையொன்றையும் மூன்று மில்லியன் டொலர் பெறுமதியான மற்றுமொரு சிறிய மாளிகையையும் விற்பனை செய்வதற்காக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் The Maldives Journal செய்தி வௌியிட்டுள்ளது.

இணையத்தளத்தில் வௌியிடப்பட்டுள்ள செய்தி தொடர்பாக மலைத்தீவுகளின் சபாநாயகரும் முன்னாள் ஜனாதிபதியுமான மொஹமட் நஷீட்டிடம் வினவியபோது,

இலங்கை அரசியல் தலைவர்களின் வௌியேற்ற உபாயத்தின் ஒரு பாத்திரத்தை வகிப்பதாக வௌியிடப்பட்டுள்ள பக்கசார்பான செய்திகளை முற்றாக நிராகரிக்கின்றேன். இந்த கடினமான காலகட்டத்தில் எப்போதும் நண்பர்களாக செயற்படுகின்ற நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் உதவிகளை பெற்றுக்கொடுப்பதுடன் மாத்திரம் எனது பொறுப்பு வரையறுக்கப்படுகிறது

என பதில் அளித்தார்.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவும் இந்த குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தனது தந்தைக்கு நாட்டில் இருந்து வௌியேறவோ மாலைத்தீவுகளில் மாளிகை கொள்வனவு செய்யவோ எவ்வித நோக்கமும் இல்லை என நாமல் ராஜபக்ஸவின் ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

அரசியல் யாப்பில் உள்ள அதிகாரங்களை 21 இன் மூலம் நிரந்தரமாக்க நாம் முயல வேண்டும் – ரெலோ

தெற்கின் அரசியல் நகர்வுகளில் கருத்து தெரிவிப்பதில் நேரத்தை வீணடிப்பதை தவிர்ப்பதே சிறந்தது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான இருபத்தியோராம் திருத்த சட்ட மூல பரிந்துரைகள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட இருக்கின்றன.

ஒருவரிடத்தில் அனைத்து அதிகாரங்களும் குவிந்து இருப்பதை எதிர்த்து தமிழ்த் தேசியத் தரப்புகள் ஒருமித்த அறிக்கை ஒன்றையும் அண்மையில் வெளியிட்டிருந்தோம். ஜனாதிபதியின் எதேச்சாதிகாரப் போக்கை இல்லாதொழிக்க இது உதவும். நிறைவேற்று அதிகாரத்தை பாராளுமன்றத்திற்கு வழங்குவது ஜனநாயகத்தை உறுதி செய்யும்.

ஆனால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை அல்லது பாராளுமன்றம் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வினை கடந்த காலங்களில் வழங்கத் தவறியுள்ளன. இந்த திருத்தங்கள் ஊடாகத் தமிழ் மக்களுக்கு உறுதியாகப் பெற்றுத் தரக்கூடிய அதிகார விடயங்களை தமிழ் அரசியல் தரப்பினர் கையாள முன்வர வேண்டும்.

சமர்ப்பிக்கப்பட இருக்கும் இருபத்தியோராம் சட்டத் திருத்தம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதோடு ஏற்கனவே அரசியல் யாப்பில் இருக்கக்கூடிய அதிகாரப் பகிர்வினை நிரந்தரமாகவும் மீீளப் பெறப்பட்ட அதிகாரங்களை மீண்டும் வழங்குவதற்கும் வழி செய்ய வேண்டும். ஏற்கனவே அரசியல் யாப்பில் கூறப்பட்ட அதிகாரங்களை வலுப்படுத்தி, மீள் நிறுத்தி முற்றாகப் பகிர்வதற்கு முன்மொழியப்பட இருக்கும் 21 ஆவது திருத்தச் சட்டத்தை தமிழ்த் தரப்புக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

புதிய அரசியல் யாப்பின் மூலமே இதைச் செய்யமுடியும், மக்கள் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற பல சாக்கு போக்கினை ஆளும் தரப்பினர் சொல்ல முற்படுவார்கள். ஆனால் ஏற்கனவே அரசியல் யாப்பில் உள்ள விடயங்களை முற்றுமுழுதாக நடைமுறைப்படுத்துவதற்கு புதிய அரசியல் யாப்பு அல்லது மக்கள் வாக்கெடுப்பு அவசியமில்லை. திருத்தங்களின் மூலமே அவற்றை செய்து கொள்ள முடியும்.

அரசியல் யாப்பில் இல்லாத நிறைவேற்று அதிகாரங்களை ஜனாதிபதிக்கு வழங்குவதற்கு 20 ஆம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிய போது மக்கள் வாக்கெடுப்பு தேவைப் படவில்லை. ஆனால் தமிழ் மக்களுக்கு ஏற்கனவே அரசியல் யாப்பில் உள்ள விடயங்களை நடைமுறைப் படுத்துவதற்கு அல்லது அதிகாரங்களை வலுப் படுத்துவதற்கு மக்கள் வாக்கெடுப்பு தேவை எனக் கூறி தப்பித்துக் கொள்வது எந்த விதத்தில் நியாயம்?

புதிய அரசியல் யாப்பு, பொதுஜன வாக்கெடுப்பு என்பன நாம் கோருகின்ற நிரந்தரமான சமஸ்டி முறையான அரசியல் தீர்வை வழங்குவதற்கே அவசியம் என்பதை தமிழர் தரப்பு வலியுறுத்த வேண்டும்.

தெற்கிலே ஏற்பட்டிருக்கும் அரசியல் சூழ்நிலைகளில் ஆர்வத்தோடு தினமும் பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்து வருவது தமிழ் மக்களுக்கு நலன் பயக்காது. அங்கு ஆக்ரோஷத்தோடு எதிர்ப்பு கருத்து தெரிவிப்பதும் பிரேரணைகளை முன்வைப்பதும் அவர்களோடு கலந்துரையாடல்களில் ஈடுபடுவதும் ஒருபுறம் இருக்க கொண்டு வரப்பட இருக்கும் 21ம் திருத்தத்தில் ஏற்கனவே அரசியல் யாப்பில் உள்ள அதிகாரங்களை முற்றாக பகிர வலியுறுத்த நாம் முயல்வது ஆக்கபூர்வமானதாக அமையும்.

ஏற்கனவே அரசியல் யாப்பில் அதிகாரங்கள் பல வழங்கப் பட்டு உள்ளன. அவை நிரந்தரமாக்கப் படவும் இல்லை. பகிரப் படவும் இல்லை. முற்றாக நடைமுறைப் படுத்தப் படவும் இல்லை. இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால் அரசியல் யாப்பில் உள்ள விடயங்கள் நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளியை காண்கிறோம். ஜனாதிபதி முறைமையில் அரசியல் யாப்பில் சொல்லப்பட்ட விடயங்களை அரசாங்கம் முற்றுமுழுதாக நடைமுறைப் படுத்துகிறது. ஆனால் அதிகாரப் பகிர்வு என்று வருகின்ற பொழுது இருப்பதையே நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் பின் நிற்கின்றது.

ஏற்கனவே அரசியல் யாப்பில் உள்ளவற்றுக்கும் நடைமுறைப் படுத்துவதற்குமான இடைவெளியை சீராக்கி முற்றாக நடைமுறைப்படுத்த வேண்டும். இதை கையாள்வது எமது கடமை. ஏனெனில் எதிர்காலத்தில் சமக்ஷ்டி முறையான தீர்வு அரசியல் யாப்பில் கொண்டு வரப் பட்டாலும் அது நடைமுறைப் படுத்துதில் பாரிய சிக்கல்களை நாங்கள் எதிர்கொள்ள நேரிடும்.

இந்த சந்தர்ப்பத்தை சரியான முறையில், சிறப்பாக ஒருமித்து நின்று கையாள்வதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகளையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் தயவுடன் அழைக்கின்றோம்.

சுரேந்திரன்
ஊடகப் பேச்சாளர் – ரெலோ
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

Posted in Uncategorized

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த பிரதமர்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் இந்திய மக்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு சார்பில் அத்தியாவசிய பொருட்கள், மருந்து பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

நிவாரணப் பொருட்கள் இன்று இலங்கை வந்தடைந்துள்ளன . அரசிடம் நிவாரணப் பொருட்கள் ஒப்படைக்கப்பட்ட நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியால் இந்நாட்டு மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதையடுத்து இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு சார்பில் அரிசி, பால் மா உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்து பொருட்கள் உள்ளிட்டவை தமிழகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படும் என தமிழக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதற்காக சட்டசபையில் ஒருமனதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இலங்கைக்கு அனுப்புவதற்காக அரிசி, பால் மா , மருந்து பொருட்கள் உள்ளிட்டவற்றை தயார் செய்யும் பணிகள் வேகமாக நடைபெற்று வந்தன.

தமிழ்நாடு சார்பில் அரிசி, மருந்து உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் ´தமிழ்நாட்டு மக்களிடம் இருந்து அன்புடன்´ எனும் வாசகங்கள் அச்சிடப்பட்ட மூட்டைகளில் பொட்டலமிடப்பட்டன. பின்னர் சென்னை துறைமுகத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனைத்தும் கப்பல் மூலம் கடந்த 18ஆம் திகதியன்று இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நிவாரணப் பொருட்களை கொண்டு சென்ற கப்பல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.

இலங்கையின் கடன்மீள்செலுத்துகை ஆற்றல் ‘டி’ நிலைக்குத் தரமிறக்கம்

வெளிநாட்டுக்கடன் மீள்செலுத்துகைகளை இடைநிறுத்துவதாகக் கடந்த ஏப்ரல் 12 ஆம் திகதி இலங்கை அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டதையடுத்து இம்மாதம் 18 ஆம் திகதியுடன் சலுகைக்காலம் முடிவடையும் சர்வதேச பிணையங்களுக்கான கொடுப்பனவைச் செய்யத்தவறியமையால் ஃபிட்ச் ரேட்டிங் சர்வதேச தரப்படுத்தல் நிறுவனம் இலங்கையைக் கடன்களை மீளச்செலுத்தமுடியாத ‘டி’ நிலைக்குத் தரமிறக்கியுள்ளது.

வெளிநாட்டுக்கடன் மீள்செலுத்துகையை இடைநிறுத்துவதற்கான அறிவிப்பு கடந்த மாதம் 12 ஆம் திகதி வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம் இலங்கையை ‘சி’ நிலைக்குத் தரமிறக்கியிருந்துது.

இந்நிலையில் தற்போது நாட்டை ‘சி’ நிலையிலிருந்து ‘டி’ நிலைக்குத் தரமிறக்கியுள்ள ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம், குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் மீளச்செலுத்தப்படவேண்டிய வெளிநாட்டுப்பிணையங்களுக்கான கொடுப்பனவு மீளச்செலுத்தப்படாமையே அதற்குக் காரணம் என்றும் விளக்கமளித்துளளது.

அதேவேளை நியூயோர்க் நகரைத் தளமாகக் கொண்டியங்கும் மற்றுமொரு பிரபல கடன் தரப்படுத்தல் நிறுவனமான மூடீஸ் தரப்படுத்தல் நிறுவனம் கடந்த 19 ஆம் திகதி இலங்கையின் கடன் மீள்செலுத்துகை ஆற்றல் தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

கடந்த ஏப்ரல் 18 ஆம் திகதி மீளச்செலுத்துவேண்டிய சர்வதேச பிணையங்களுக்கான சலுகைக்காலம் இம்மாதம் 18 ஆம் திகதியுடன் முடிவிற்கு வந்திருக்கும் நிலையில், அதற்குரிய கொடுப்பனவைச்செய்யத் தவறியிருப்பதன் காரணமாக இலங்கை முதன்முறையாக அதன் சர்வதேச பிணையங்களைச் மீளச்செலுத்தமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது.

வெளிநாட்டுக்கடன் மீள்செலுத்துகையை இடைநிறுத்துவதாகவும், சர்வதேச நாணய நிதியத்தின் பொருத்தமான செயற்திட்டத்துடன் இணைந்ததாக வெளிநாட்டுக்கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையை முன்னெடுக்கவிருப்பதாகவும் கடந்த ஏப்ரல் 12 ஆம் திகதி இலங்கை அரசாங்கம் அறிவித்தைத்தொடர்ந்து, இலங்கை கடன்களை மீளச்செலுத்தமுடியாத நிலைக்குத் தள்ளப்படும் என்று நாம் எதிர்பார்த்தோம் என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

21ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் நாளை(23) அமைச்சரவையில் சமர்ப்பிப்பு

அரசியலமைப்பின் 21ஆவது திருத்த சட்டமூலம் நாளை(23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நீதித்துறை, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இதில் இரட்டை பிரஜாவுரிமையை கொண்டவர்கள், பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்க முடியாத வகையில் திருத்தம் மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனைத்தவிர, தற்போதுள்ள சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு மேலதிகமாக தேசிய கணக்காய்வு ஆணைக்குழு மற்றும் தேசிய கொள்வனவு ஆணைக்குழு என்பன சுயாதீன ஆணைக்குழுக்களாக திருத்தப்படும் எனவும் நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கூறியுள்ளார்.

தற்போதுள்ள ஆணைக்குழுக்களின் அதிகாரங்களை சுதந்திரமாகவும் பலப்படுத்தும் வகையிலும் 21ஆவது அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்தார்.

அரசியலமைப்பு சபையினூடாகவே மத்திய வங்கியின் ஆளுநரை நியமிப்பதற்கும் அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் இதன்போது ​மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக மக்களின் மனிதாபிமான நன்கொடை பொருட்கள் இலங்கையை வந்தடைந்தன

இலங்கைக்கு இந்தியா நன்கொடையாக வழங்கிய மேலும் 2 பில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான பொருட்கள் தாங்கிய கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளன.

மனிதாபிமான உதவியாக இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட பால் மா, அரிசி மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் உட்பட 2 பில்லியன் ரூபா பெறுமதியான முதலாவது கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

குறித்த பொருட்கள் இலங்கையை இன்று வந்தடைந்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இந்திய தமிழக மக்களால் வழங்கப்பட்டதும் இரண்டு பில்லியன் இலங்கை ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பாரிய மனிதாபிமான உதவிப்பொருட் தொகுதியினை உயர் ஸ்தானிகர், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸிடம் இன்று கொழும்பில் கையளித்தார்.

இப்பொருட்களை கையளிக்கும் நிகழ்வில் துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் திரு.செந்தில் தொண்டமான், பிரதமரின் பணிக்குழாம் பிரதானி திரு.சாகல ரத்நாயக்க மற்றும் உணவுத்துறை ஆணையாளர் திருமதி ஜே.கிருஸ்ணமூர்த்தி உட்பட சிரேஸ்ட உத்தியோகத்தர்களும் ஏனைய பலரும் கலந்துகொண்டனர்.

9000 மெட்ரிக்தொன் அரிசி, 50 மெட்ரிக்தொன் பால்மா மற்றும் 25 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான மருந்து வகைகளும் ஏனைய மருத்துவப் பொருட்களும் இத்தொகுதியில் உள்ளடங்கியுள்ளன.

கடந்த மே 18ஆம் திகதி தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இந்த உதவிப்பொருட்களை சென்னை துறைமுகத்திலிருந்து கொடியசைத்து வழியனுப்பிவைத்தார். தமிழக அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்படும் 16 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 40000 மெட்ரிக் தொன் அரிசி, 500 மெட்ரிக் தொன் பால்மா மற்றும் மருந்துப் பொருட்கள் அடங்கிய பாரிய உதவித் திட்டத்தின் கீழ் இது முதற்தொகுதியாக அனுப்பி வைக்கப்படுகின்றது.

தற்போது கையளிக்கப்பட்டுள்ள இத்தொகுதி உதவிப்பொருட்கள் வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் மேல் மாகாணங்கள் உள்ளடங்கிய நாடளாவிய ரீதியிலுள்ள நலிவான மற்றும் தேவைகளை எதிர்கொண்டிருக்கும் பிரிவினருக்கு இலங்கை அரசாங்கத்தால் எதிர்வரும் நாட்களில் விநியோகிக்கப்படும்.

அத்துடன் இன்னும்பல மனிதாபிமான உதவித்திட்டங்களும் ஏனைய உதவிகளும் இந்தியாவிடமிருந்து வழங்கப்படவுள்ளன. இந்திய மக்களாலும் அரசாங்கத்தாலும் முன்னெடுக்கப்பட்டும் இவ்வாறான பல்பரிமாண திட்டங்கள், இலங்கைக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தினை சுட்டிக்காட்டுவதுடன் இலங்கை மக்களின் நலன்கள் மீது அவர்கள் கொண்டிருக்கும் அக்கறையினையும் பிரதிபலிக்கின்றன.

3.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருளாதார உதவிகள், தடுப்பூசிவிநியோகம், சோதனை அலகுகள், கொவிட்-19 பெருநொய்க்கு எதிரான போராட்டத்துக்காக கிட்டத்தட்ட 1000 மெட்ரிக்தொன் திரவநிலை ஒட்சிசன் வழங்கியமை, கடல் அனர்த்தங்களை தணிப்பதற்காக இந்திய கடற்படை மற்றும் கரையோரக் காவல் படையால் வழங்கப்படும் உடனடி பதிலளிப்பு நடவடிக்கைக்கள் முதலான ஆதரவுகள் இலங்கைக்கு வழங்கப்படுகின்றன.

இனப்படுகொலை நினைவு நாளாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை கனடா அங்கீகரித்தமையை வரவேற்கிறோம் – ரெலோ

கனடா பாராளுமன்றம் கடந்த 19ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான மே 18 ம் திகதியை இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நாளாக ஏகமனதாக அங்கீகரித்துள்ளது.

உலகத்திலேயே முதல் அங்கீகாரம் வழங்கிய நாடாக கனடா அமைந்துள்ளது. இதை நாம் வரவேற்கிறோம். இந்த முயற்சிக்கு பின்னணியில் இருந்த புலம்பெயர் உறவுகளுக்கு நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தப் பிரேரணையை கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கரி ஆனந்தசங்கரி அவர்கள் பாராளுமன்றில் சமர்ப்பித்த வேளை ஏகமனதாக அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அட்டூழிய குற்றங்களுக்கான நீதிக்கான போராட்டத்திற்கு கிடைத்த அங்கீகாரத்தின் முதல் படியாக இதை நாம் கருதுகிறோம்.

2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவடைந்த யுத்தத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள், யுத்தக்குற்றங்கள் மற்றும் அட்டூழிய குற்றங்களுக்காக நீதியைக் கோரி பல வருடங்களாக எமது இனம் போராடி வருகிறது. கனடியப் பாராளுமன்றத்தின் இந்த அங்கீகாரம் எமது முயற்சிக்கு நம்பிக்கை தருவதோடு ஊக்கம் அளிப்பதாகவும் அமைந்திருக்கிறது.

இது போன்று ஏனைய நாடுகளில் வாழும் புலம்பெயர் உறவுகளும் எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அட்டூழியக் குற்றங்களுக்கான சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளை ஒருமித்து முன்னெடுக்க வேண்டும் என கோரி நிற்கிறோம்.

சுரேந்திரன்
ஊடகப் பேச்சாளர் ரெலோ
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு