முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் 4 ஆவது நாளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் வேலைத்திட்டம் மூங்கிலாறுப் பகுதியில் முன்னெடுப்பு

“கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்” என்ற தொனிப்பொருளில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் மே 12 தொடக்கம் மே 18 வரை முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் வேலைத்திட்டம் முல்லைத்தீவு மாவட்டத்திலும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது .

அதன் நான்காவது நாளில் வடக்கு கிழக்கு வலிந்து காணமால் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டிலும் பொது அமைப்புகழும் இணைந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கு செயற்பாடு இன்று (15)முல்லைத்தீவு மூங்கிலாறு பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

மே 12-மே 18 வரை தமிழினப்படுகொலை வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் 2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை யுத்தத்தில் தமிழ் மக்கள் உணவாக உட்கொண்ட உப்பு கஞ்சியை இந்த வாரத்தில் அனைத்து மக்களுக்கும் வழங்கி முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் கதையை கடத்துவதோடு இனப்படுகொலைக்கு நீதி கோரும் அங்கமாக இந்த கஞ்சி பரிமாறும் வேலைத்திட்டம் வடக்கு கிழக்கு மாகாணம் எங்கிலும் கடந்த 12 ஆம் திகதிமுதல் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது .

பொலிஸ் மா அதிபர் நேரில் அழைக்கப்பட்டு பொதுஜன பெரமுனவினர் கடும் விசனம் : ஜனாதிபதி கோட்டாவும் பாய்ச்சல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் உறுப்பினர்களுக்கும் இடையில் சனிக்கிழமை (14) நடைபெற்ற சந்திப்பின்போது பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன நேரில் அழைக்கப்பட்டு அவர் மீது கடுமையான விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்ற தொனியில் பொலிஸ்மா அதிபரைக் கடிந்து பேசியுள்ளார்.

இது தொடர்பில் தெரியவந்துள்ளதாவது,

கடந்த திங்கட்கிழமை அப்போது பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக ஒன்றுகூடியவர்கள் காலிமுகத்திடலுக்குச் சென்று அங்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக போரடிக்கொண்டவர்கள் மீது தாக்குதல்களை நடத்தியதால் பாரிய வன்முறைகள் ஏற்பட்டிருந்தன.

இந்த வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் தாமதித்து விட்டனர் என்ற குற்றச்சாட்டு பொலிஸ் மா அதிபர் முன்னிலையில் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து, பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் அசலுவலகங்கள் என்பன அடித்து நொருக்கப்பட்டதோடு, தீக்கிரையாக்கப்பட்ட நிகழ்வுகளும் அரங்கேறின.

அதனைவிடவும், முக்கியமான பொருட்கள் சூறையாடப்பட்டும் இருக்கின்றன.

இவ்வாறு நிலைமைகள் பாரதூரமடைகின்றபோது பொலிஸ்துறை அதனைக் கட்டுப்படுத்துவதற்கு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுஜனபெரமுனவின் உறுப்பினர்கள் பொலிஸ்மா அதிபரிடத்தில் கேள்விகளைத் தொடுத்துள்ளனர்.

அதனையொத்த வினாவையே ஜனாதிபதி கோட்டாபயவும் பொலிஸ்மா அதிபரிடத்தில் கோரியுள்ளார்.

20-க்கு ஆதரவளித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்தனர்

20 ஆம் திருத்தம் உள்ளிட்ட பல சந்தர்ப்பங்களில் அரசாங்கத்திற்கு ஆதரவளித்த நான்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை இன்று சந்தித்தனர்.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹாரிஸ், பைசல் காசிம், எம்.எஸ் தௌஃபீக் மற்றும் இஷாக் ரஹ்மான் ஆகியோர் நாட்டின் சமகால விடயங்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவருடன் கலந்துரையாடியுள்ளனர்.

தற்போதைய அரசாங்கத்திற்கு இனி ஆதரவு வழங்குவதில்லையென இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் அறிவித்திருந்த நிலையில், எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக இதன்போது கூறியதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌஃபீக் தெரிவித்தார்.

Posted in Uncategorized

புதிய அமைச்சர்கள் 4 பேர் பதவியேற்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சற்று முன்னர் 4 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டுள்ளனர்.

இதற்கமைய தினேஷ் குணவர்தன, பிரசன்ன ரணதுங்க, கஞ்சன விஜேசேகர, ஜி.எல்.பீரிஸ் ஆகியோரே இவ்வாறு அமைச்சரவை அந்தஸ்து உள்ள அமைச்சர்களாக புதிய பதவியேற்றுக் கொண்டுள்ளனர்.

முழு அமைச்சரவை நியமிக்கப்படும் வரை பாராளுமன்றம் மற்றும் நாட்டின் பிற செயல்பாடுகளின் சட்டபூர்வமான தன்மை மற்றும் ஸ்திரத்தன்மையை பேணுவதற்காக இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி,

பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் – வெளிவிவகார அமைச்சர்,

தினேஷ் குணவர்தன – பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்.

பிரசன்ன ரணதுங்க – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர்.

காஞ்சனா விஜேசேகர – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்.

எரிவாயு கோரி பல இடங்களில் ஆர்ப்பாட்டம்

நாட்டில் நிலவும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக இன்று (14) பல பிரதேசங்களில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாவின்ன, கொம்பனித்தெரு, மட்டக்குளி ஆகிய பகுதிகளில் எரிவாயு வழங்கக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எரிவாயு விநியோகம் செய்யப்படும் என பொலிசார் அறிவித்ததையடுத்து, கொம்பனித்தெரு காவல் நிலையம் முன்பு ஏராளமானோர் திரண்டதால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது

Posted in Uncategorized

SLPP ரணில் தலைமையிலான அரசுக்கு ஆதரவு!

ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் அமைக்கப்படவுள்ள புதிய அரசாங்கத்துக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முழு ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர், ஜனாதிபதியுடன் இன்று (14) இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Posted in Uncategorized

அரசியல் சூழ்நிலை குறித்து அநுரவுடன் கலந்துரையாடினார் அமெரிக்கத் தூதர்

அமெரிக்கத் தூதர் ஜூலி சங்க மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அமெரிக்க தூதர், நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்து இதன்போது கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது ஜே.வி.பி.யின் விஜித ஹேத்தும் உடனிருந்தார்.

Posted in Uncategorized

ரணில் விடயத்தில் தீர்மானமில்லை : மாவை, செல்வம், சித்தார்த்தன் தெரிவிப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இணை தலைவர்களான மாவை.சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் ஆகியோர் தத்தமது கட்சிகளும், கூட்டமைப்பும் பிரதமராக ரணில் நியமிக்கப்பட்டமை தொடர்பில் தாம் எவ்விதமான தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தனர்.

தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா, குறிப்பிடுகையில்,

தமிழரசுக்கட்சியின் அரசியல் பீடத்திலும், அதன் பின்னர் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுவிலும் இவ்விடயம் ஆராயப்படும் என்று கூறினார்.

அதேவேளை, ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமது கட்சியின் தலைமைக்குழு இவ்விடயம் தொடர்பில் கரிசனையைக் கொண்டுள்ளதாகவும் விரைவில் கூடித் தீர்மானம் எடுக்கப்பட்டதன் பின்னர் கூட்டமைப்பாக தீர்மானம் அறிவிக்கப்படும் என்றார்.

மேலும், புளொட் தலைவர் சித்தார்த்தன் ஆகியோர், தத்தமது அரசியல் மற்றும் தலைமைக் குழுக்கள் இவ்விடயம் தொடர்பில் எவ்விதமான தீர்மானத்தினை எடுப்பது என்பது குறித்து கூடி ஆராயவுள்ளதோடு, கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் கூட்டத்திற்குப் பின்னர் நிலைப்பாடு அறிவிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

Posted in Uncategorized

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன ரணிலுக்கு ஆதரவில்லையாம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் புதிய பிரதமர் ரணிலுக்கு ஆதரவளிக்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளன.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் ‘சிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவுக்கே ஆதரவளிப்பதென்று தீர்மானித்துள்ளோம். அதனை அவரிடத்தில் வெளிப்படுத்தியும் உள்ளோம்’ என்றார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமை தொடர்பு கொள்வதற்கு எடுத்த முயற்சி பலனளிக்காத நிலையில் அக்கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிஷாம் காரியப்பர் தமது கட்சியின் நிலைப்பாட்டினை வெளிப்படுத்தினார்.

அவர், ‘ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளிக்கட்சியாகவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளநிலையில் அதே நிலைப்பாட்டுடன் பயணிக்கும். அத்துடன் ஜனநாயக விரோத நிலைப்பாடுகளை எமது கட்சி என்றும் எடுக்காது’ என்றும் குறிப்பிட்டார்.

மஹிந்தவுக்கு ஏற்பட்ட கதியே ரணிலுக்கும் – “கோட்டா கோ கம” ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கைகளை முன்வைத்து எச்சரிக்கை !

காலி முகத்திடல் ‘கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்கள் முதன் முறையாக தங்களின் கோரிக்கைகளை பகிரங்கப்படுத்தியுள்ளனர்.

காலி முகத்திடல் தாய்நாடு பிரஜைகளின் வலியுறுத்தல் யோசனை என சமூக நீதிக்கான இளைஞர் அமைப்பு குறித்த கோரிக்கைக்கு பெயரிட்டுள்ளனர்.

பல்வேறு காரணிகளை அடிப்படையாகக்கொண்டு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்றுள்ளார்.

இவரது அரசியல் வரலாற்றை நன்கு அறிவோம். முன்வைத்துள்ள கோரிக்கைகளை விரைவாக செயற்படுத்த வேண்டும் அதனை விடுத்து கடந்த காலங்களில் செயற்பட்டதை போன்று செயற்பட்டால் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஏற்பட்ட கதியே ஏற்படும் எனவும் குறிப்பிட்டனர்.

காலி முகத்திடல் ‘கோட்டா கோ கம’ போராட்டக்களத்தில் நேற்று ஊடகசந்திப்பை நடத்தி தங்களின் கோரிக்கைகளை பகிரங்கப்படுத்தினர்.

குறித்த கோரிக்கையில் பல பிரதான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக பதவி விலக வேண்டும் என்பது குறித்த கோரிக்கையில் பிரதானமாக உள்ளது.

வரையறுக்கப்பட்ட காலத்திற்கு இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபித்தலுடன் அமைச்சரவையின் எண்ணிக்கையை குறைந்தப்பட்சம் 15 ஆக மட்டுப்படுத்தல் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் வரப்பிரசாதங்களை மீளாய்வு செய்தல் இரண்டாவது கோரிக்கையாகும்.

அரசியலமைப்பில் தேவையான திருத்தங்களை விரைவாக முன்னெடுத்தல், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை முழுமையாக இரத்து செய்து அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தை இரண்டு மாத காலத்திற்குள் அமுல்படுத்தல், 06 மாத காலத்திற்குள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்தல் முக்கியமானதாகும்.

பொருளாதார நெருக்கடியை விரைவாக முகாமைத்துவம் செய்தல், சொத்து விசாரணை மற்றும் வெளிப்படுத்தல் ,ராஜபக்ஷர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளினதும், அவர்களின் உறவினர்களின் சொத்து விபரங்கள் பகிரங்கப்படுத்தல்,வெளிநாடுகளில் உள்ள சொத்துக்கள் தொடர்பான விபரங்களை பகிரங்கப்படுத்தல்,

சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தல்,வாழும் உரிமையை அடிப்படை உரிமையாக அரசியலமைப்பிற்குள் உள்ளடக்குதல் மற்றும் இடைக்கால அரசாங்கத்தை தொடர்ந்து இடம்பெறும் சகல தேர்தல்களும் சுதந்திரமாகவும், நீதியானதாகவும் நடத்தும் சட்ட திருத்தங்களை மேற்கொள்ளல் அவசியமாகும்.