சண்டிலிப்பாயில் அங்கஜனின் அலுவலகத்தின் மீது தாக்குதல்!

யாழ்ப்பாண மாவட்ட சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான என் கனவு யாழ் அங்கஜன் ராமநாதனின் சண்டிலிப்பாய் அலுவலகம் சற்று முன்னர் தாக்கப்பட்டு அலுவலக பெயர்ப் பலகையும் எரியூட்டப்பட்டுள்ளது.

அங்கஜனின் சண்டிலிப்பாய் அலுவலக பதாகைக்கு தீ வைப்பு; அருண் சித்தார்த்தை தேடும் இளைஞர்கள்

அரசுக்கு எதிரான மக்களின் நடவடிக்கைகளில் வடக்கு மாகாணத்தில் முதலாவது சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (மே 10) இரவு பதிவாகியுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதனின் சண்டிலிப்பாய் தொகுதி அலுவலகத்தின் முன்பாக காட்சிப்படுத்தப்பட்டிருந்த பிளக்ஸ் காட்சிப் பதாகை தீவைக்கப்பட்டுள்ளது. எனினும் முழுமையாகச் சேதமடையவில்லை.

மக்கள் கூட்டத்தினால் இந்த நடவடிக்கை இன்றிரவு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அரசுக்கு சார்பாகவும் தமிழ் மக்களுக்கு எதிராகவும் செயற்பட்டு வரும் அருண் சித்தார்த்தை தேடி வருவதாக இளைஞர்கள் பலர் சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளன.

Posted in Uncategorized

ஊரடங்கு சட்டம் வியாழக்கிழமை (12) காலை 07 மணி வரை நீடிப்பு

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அந்த வகையில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டமானது எதிர்வரும் வியாழக்கிழமை 12 ஆம் திகதி காலை 7.00 மணி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச சட்டமானது நாளை காலை 07 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே தற்போது 12 ஆம் திகதி காலை வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ராஜபக்ஸ குடும்பத்தினர் திருகோணமலையில் தஞ்சம்?

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் திருகோணமலை கடற்படை தளத்தில் விசேட பாதுகாப்பிற்கு மத்தியில் தங்கியுள்ளனர்.

அண்மைய நாட்களாக திருகோணமலையில் இந்தியா முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டியதுடன், திருகோணமலை மற்றும் அதனை சூழவுள்ள பல முக்கிய இடங்களில் இந்தியா தனது ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தியுள்ளது.

முன்னாள் பிரதமரும் அவரது குடும்பத்தவர்களும் திருகோணமலை கடற்படை தளத்தில் தங்கியுள்ள நிலையில், கடற்படை தளத்திற்கு முன்பாகக் கூடிய மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

கடற்படை தளத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன், தளத்தை அண்டிய கடற்பகுதியிலும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

தனது தந்தையும் குடும்பத்தினரும் நாட்டிலிருந்து தப்பிச்சென்றுள்ளதாகக் கூறப்படும் தகவல் உண்மைக்கு புறம்பானது என பிரான்ஸ் செய்தி சேவையொன்றுக்கு முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நாட்டிலிருந்து தாம் தப்பிச்செல்லப் போவதில்லையெனவும் அவர் கூறியுள்ளார்.

போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு அமெரிக்க இராஜாங்கத்திணைக்களம் கண்டனம்

அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைத்தாக்குதல்கள் குறித்து தாம் மிகுந்த கவலையடைவதாகத் தெரிவித்திருக்கும் அமெரிக்க இராஜாங்கத்திணைக்களம், தற்போது நாட்டில் நிலவிவரும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு நீண்டகால அடிப்படையிலான தீர்வுகளைக் கண்டறிவதில் விசேட அவதானம் செலுத்துமாறு இலங்கை மக்களிடம் வேண்டுகோள்விடுத்திருக்கின்றது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக நேற்று திங்கட்கிழமை அலரி மாளிகையில் ஒன்றுதிரண்ட குழுவினர், அலரி மாளிகைக்கு முன்பாக காலி வீதியில் நிர்மாணிக்கப்பட்டிருந்த ‘மைனா கோ கம’ கூடாரங்களை இடித்து, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களையும் கடுமையாகத் தாக்கினர். அதனைத்தொடர்ந்து காலி வீதியின் ஊடாக காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டிருந்த ‘கோட்டா கோ கம’விற்குச் சென்று அங்கு நிர்மாணிக்கப்பட்டிருந்த கூடாரங்களை எரித்து, போராட்டக்காரர்கள்மீது தாக்குதல் நடத்தினர். அதனையடுத்து நாடளாவிய ரீதியில் வன்முறைகள் வெடித்து அமைதியற்ற நிலையொன்று தோற்றம்பெற்றது.

இதுகுறித்து அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்யப்பட்டிருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அப்பதிவில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

‘இலங்கையின் தற்போதைய நிலைவரத்தை உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம். அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீதும், அவ்விடங்களில் இருந்தவர்கள் மீதும் நிகழ்த்தப்பட்டிருக்கும் வன்முறைத்தாக்குதல்கள் குறித்து நாம் மிகுந்த கவலையடைகின்றோம்.

அதேவேளை தற்போது நாட்டில் நிலவிவரும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு நீண்டகால அடிப்படையிலான தீர்வுகளைக் கண்டறிவதில் விசேட அவதானம் செலுத்துமாறு நாம் இலங்கை மக்களைக் கேட்டுக்கொள்கின்றோம்’ என்று அமெரிக்க இராஜாங்கத்திணைக்களம் தெரிவித்திருக்கின்றது.

அதேவேளை இச்சம்பவம் தொடர்பில் சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழுவும் அதன் கண்டனத்தை வெளியிட்டிருக்கின்றது. அதன்படி சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்யப்பட்டிருக்கும் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:

‘இலங்கையில் அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள்மீது நடத்தப்பட்டிருக்கும் வன்முறைத்தாக்குதல்களைக் கடுமையாகக் கண்டனம் செய்யும் அதேவேளை, தொடர்ச்சியாக மோசமடைந்துவரும் நிலைவரம் குறித்துக் கவலையடைகின்றோம். மேலும் குறித்த வன்முறைச்சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதுடன் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்’ என்று கூறப்பட்டுள்ளது.

மஹிந்தவின் மெதமுலன இல்லமும் தீக்கிரை

மஹிந்த ராஜபக்ஷவின் பரம்பரை இல்லமான வீரக்கெட்டிய, மெதமுலன இல்லமும் தீக்கிரையாகியுள்ளது.

ஆர்ப்பாட்டகாரர்கள் சிலரினால் இவ்வாறு தீ வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, வீரகெட்டியவில் அமைந்துள்ள டி.எ.ராஜபக்ஷ உருவச்சிலைக்கும் மக்கள் தீ வைத்துள்ளனர்.

Posted in Uncategorized

பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரின் வீடுகள், வாகனங்கள் தீக்கிரை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரின் வாகனங்கள் மற்றும் வீடுகள் போராட்டக்காரர்களால் சேதமாக்கப்பட்டுள்ளன.

நாட்டில் இன்று காலை முதல் காலிமுகத்திடல் மற்றும் அலரிமாலிகை உள்ளிட்ட பல பகுதிகளில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக பல எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன.

அந்த வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள், வாகனங்கள் மற்றும் அலுவலகங்கள் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்களால் சேதமாக்கப்பட்டும், தீ வைக்கப்பட்டும் வருகின்றது.

அந்த வகையில் முன்னாள் அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோவின் குருநாகலிலுள்ள கட்சி அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

குருநாகல் நகர மேயர் துஷார சஞ்சீவவின் வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அத்தோடு முன்னாள் அமைச்சர் சனத் நிஷாந்தவின் கட்டிடத்திற்கும் தீ வைக்கப்பட்டள்ளது.

மஹிந்தவின் தங்காலை இல்லம் வீரகெட்டிய இல்லம் குருணாகலையிலுள்ள இல்லம் என்பன உடைத்து எரிக்கப்பட்டது.

அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின், மாத்தளையில் உள்ள வீடுமீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அருந்திக்க பெர்னாண்டோ MP ன் இல்லம் மீதான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய புனித செபஸ்தியார் தேவலயத்துக்கு முன்பாக உள்ள நீர்கொழும்பு மேயர் தயான் லான்ஸாவின் வீடு ஆர்பாட்ட காரர்களால் முற்றாக எரித்து சாம்பலாக்கபட்டது.

ரமேஷ் பதிரணவின் வீடு தீக்கரையாக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் வீடு தீக்கரையாக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோவின் கல்கிஸ்ஸயில் அமைந்துள்ள வீடும் உடைக்கப்பட்டிருக்கிறது.

அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோவின் மனைவியின் குருணாகல் வீடும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

பண்டாரவல மேயர் ஜானகவின் வீடும் பொதுமக்களினால் தாக்ப்பட்டது.

நீர்கொழும்பு மீரிகம வீதியில் உள்ள Avenra Garden Hotel ஆர்பாட்டகாரர்களால் முற்றாக எரிக்கப்பட்டு அங்குள்ள உலகின் விலையுயர்ந்த சொகுசு வாகனங்களும் தீயிட்டு எரிக்கப்பட்டிருக்கிறது.

தங்கொட்டுவ அருந்திக்க பிரனான்துவின் வீடும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் வீடு எரிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் பந்துல குணவர்தனவின் வீடு எரிக்கப்பட்டுள்ளது.

கனக ஹேரத் MP ன் வீடு எரிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் காமினி லொக்குகேவின் வீடு எரிக்கப்பட்டுள்ளது.

பண்டார MP ன் வீடு எரிக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு MP நிமல் லான்சாவின் வீடு எரிக்கப்பட்டுள்ளது.

சனத் நிஷாந்த MP ன் வீடு எரிக்கப்பட்டுள்ளது.

குருணாகல் மேயரின் வீடு எரிக்கப்பட்டுள்ளது.

மொரட்டுவ மேயர் சமன் லாலின் வீடு எரிக்கப்பட்டுள்ளது.

அருந்திக பெர்ணாண்டோ MP ன் வீடு எரிக்கப்பட்டுள்ளது.

அலரிமாளிகையின் கதவுகள் போராட்டக்காரர்களால் திறக்கப்பட்டு சிசிடிவி கமெராக்களும் தாக்கப்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டை மெதமுலனவிலுள்ள ராஜபக்சக்களின் பூர்வீக இல்லம் தீயிட்டுக்கொளுத்தப்பட்டது.

முன்னாள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் காத்தான்குடியிலுள்ள வீட்டின் மீது இன்று திங்கட்கிழமை மாலை கல் வீச்சு நடத்ப்பட்டு வீட்டின் முன் பகுதியிலுள்ள ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதமாக்கப்பட்டுள்ளது.

மஹிபால ஹேரத் MPயின் கேகாலை வீடு தீக்கரையாக்கப்பட்டது.

அலிசப்ரி ரஹீம் அவர்களின் வீடு தீயிட்டு எரிக்கப்பட்டது.

திஸ்ஸ குட்டியாராச்சி MP ன் வீடு உடைக்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷவின் தந்தையாரது நினைவுத் தூபியும் உடைக்கப்பட்டது.

இதுவரை கிடைத்துள்ள தகவல்கள்…

Posted in Uncategorized

வன்முறை தாக்குதலுக்கு கண்டனம் வௌியிட்ட அமெரிக்க தூதுவர்

அமைதியான போராட்டங்கள் மீது இன்று(09) மேற்கொள்ளப்பட்ட வன்முறை தாக்குதல்களுக்கு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Julie J. Chung கண்டனம் வௌியிட்டுள்ளார்.

இந்த தாக்குதல்கள் தொடர்பில் முழுமையான விசாரணையை மேற்கொள்ளுமாறு அவர் ட்விட்டர் பதிவினூடாக அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

நிட்டம்புவ ஆர்ப்பாட்டத்தில் சிக்கி அமரகீர்த்தி அத்துகோரள உயிரிழப்பு

நிட்டம்புவயில் இன்று(09) முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள உயிரிழந்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவுக்கு சொந்தமானதாக கூறப்படும் வாகனம் ஒன்று இன்று மாலை நிட்டம்புவ பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினரின் வாகனத்தில் வந்த குழுவொன்று, அப்பகுதியில் கூடியிருந்த அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது துப்பாக்கிச் சூட்டில் கிட்டத்தட்ட மூன்று பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், சம்பவத்தை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

“குறித்த பாராளுமன்ற உறுப்பினர். அந்த இடத்தை விட்டு ஓடி அருகில் உள்ள கட்டிடத்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.” என்று ஒரு பொலிஸ் அதிகாரி தெரிவித்தார். இதையடுத்து ஆயிரக்கணக்கானோர் கட்டிடத்தை சூழ்ந்த, பின்னர் அவர் தனது துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி, பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதால் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இன்று கொழும்பில் அலரிமாளிகை மற்றும் காலி முகத்திடலுக்கு அருகில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பிரதமரின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதையடுத்து நாடளாவிய ரீதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார் மஹிந்த வர்த்தமானி அறிவித்தல்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

நாட்டின் தோல்வியடைந்த பொருளாதாரம் காரணமாக பிரதமர் பதவி விலக வேண்டும் என்று பொதுமக்கள் விடுத்த கோரிக்கைகளுக்கு மத்தியில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நிலவும் நெருக்கடிகள் காரணமாக அவரது சகோதரர் கோட்டாபய ராஜபக்ஷ அதிபர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

பிரதமரை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோரியதாக முன்னைய செய்திகள் கூறப்பட்ட போதிலும், அந்த செய்திகளை மறுத்த பிரதமர், அவ்வாறான கோரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனவும், தான் பதவி விலகப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மற்றும் அதனுடன் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு இடையில் பல கலந்துரையாடல்களை அடுத்து, பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அலரிமாளிகையில் பிரதமர் தலைமையில் இன்று காலை இடம்பெற்ற பொதுஜன பெரமுன ஆதரவாளர்களுடனான கூட்டத்தையடுத்து கோட்டா கோ கம பகுதியில் கலவரம் மூண்டது.

இந்த கலவரத்தில் 78 பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில் தற்போது தனது பிரதமர் பதவியில் இருந்த மஹிந்த ராஜபக்ஷ இராஜிநாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

நாடு பூராகவும் ஊரடங்கு உத்தரவு அமுல்…!

உடன் அமுலாகும் வகையில் நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இன்று மாலை 7 மணி முதல் நாளை (10) காலை 07 மணி வரையில் இவ்வாறு ஊரடங்கு உத்தரவு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

அதிகாரமளிக்கக்கூடிய அதிகாரியினால் வழங்கப்படும் எழுத்து மூல அனுமதி பத்திரத்தை தவிர பொது வீதிகளில், ரயில் வீதிகளில், பூங்காக்களில், பொது மைதானங்களில் மற்றும் பொது இடத்தில் அல்லது கடற்கரையில் தங்கியிருக்க அனுமதியில்லை என ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.