பிரதமர் பதவிக்கு மூவரை பரிந்துரைக்க சுயாதீன உறுப்பினர்கள் குழு தீர்மானம்

பிரதமர் பதவிக்காக மூவரின் பெயர்களை ஜனாதிபதியிடம் பரிந்துரை செய்ய அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் 53 உறுப்பினர்களைக் கொண்ட குழு தீர்மானித்துள்ளது.

11 கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்த உறுப்பினர்களுக்கு இடையில் இன்று கொழும்பில் கலந்துரையாடலொன்று நடைபெற்றது.

இதற்கமைய, முன்னாள் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, டலஸ் அழகப்பெரும மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஸ ஆகியோரது பெயர்களை பிரதமர் பதவிக்காக முன்மொழிய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய – ரணிலுக்கிடையில் அவசர சந்திப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் அவசர சந்திப்பொன்று இடம்பெற்று வரகதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி இன்றிரவு நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தவுள்ள நிலையில், தற்போது ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளமையானது அரசியல் வட்டாரங்களில் இந்த சந்திப்பு பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று இரவு 9 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

ஜனாதிபதி பதவி விலகினால் பிரதமர் பதவியை சஜித் ஏற்க தயார் – லக்‌ஷ்மன் கிரியெல்ல

ஜனாதிபதி இராஜினாமா செய்தால் மாத்திரமே, பிரதமர் பதவியை சஜித் பிரேமதாச பொறுப்பேற்பார் என பாராளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசியல்வாதிகள் இந்தியா சென்றனரா ? – மறுக்கிறது இந்திய உயர்ஸ்தானிகராலயம் !

எந்தவொரு அரசியல்வாதியோ அல்லது குடும்ப உறுப்பினர்களோ இந்தியாவிற்கு தப்பிச் செல்லவில்லை என இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டு இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதனை தெரிவித்துள்ளனர்.

சில அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருவதாகவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

ஜனாதிபதி பதவி விலகும் வரை மக்கள் போராட்டம் தொடரும் நிலை – புத்திஜீவிகள் நம்பிக்கை

நாட்டின் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் அனைத்து வன்முறை சம்பவங்களுக்கும் மஹிந்த ராஜபக்ஷவே பொறுப்புக்கூறவேண்டும்.

அத்துடன் ஜனாதிபதி தனது பதவியில் இருந்து விலகும் செய்தியை விரைவாக அறிவிக்கும்வரை மக்களின் போராட்டம் தொடரும் நிலையே இருந்து வருகின்றது என புத்திஜீவிகள் தெரிவித்தனர்.

நாட்டின் தற்போதைய நிலைதொடர்பாக நேற்று புத்திஜீவிகள் மற்றும் கலைஞர்கள் சூம் தொழிநுட்ப வசதியுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தனர்.

இங்கு கருத்து தெரிவித்த ஓமல்பே சோபித்த தேரர் குறிப்பிடுகையில்,

நாட்டில் வன்முறை இடம்பெற்று பாரிய சேதங்கள் இடம்பெற்றமைக்கான பிரதானமாக பொறுப்புக்கூறவேண்டியவர் மஹிந்த ராஜபகஷவாகும். அதேபோன்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ்வும் தனது தம்பியின் பொறுப்பில் இருந்து விடுபட முடியாது. அவரும் இதற்கு பொறுப்புக்கூறவேண்டும்.

மஹிந்த ராஜபக்ஷ எந்தளவு முட்டாள் தனமான, மோசமானவர் என்பது நேற்றைய (நேற்று முன்தினம்) சம்பவத்துடனே விளங்கிக்கொள்ள முடியுமாகி இருக்கின்றது. அதிகார பேராசையே இதற்கு காரணமாகும்.

காலி முகத்திடலில் மக்கள் அமைதியான போராட்டத்தையே மேற்கொண்டுவந்தனர். அதனையே மஹிந்த ராஜபக்ஷ்வின் ஆதரவாளர்கள் வன்முறைக்கு எடுத்துச்சென்றுள்ளனர்.

எனவே நாட்டில் இடம்பெற்ற மிகமோசமான இந்த சம்பவங்களுக்கு பிரதானமாக மஹிந்த ராஜபக்ஷ் பொறுப்புக்கூறவேண்டும் என்றார்.

பேராசிரியர் அனுர உதுவன்கே தெரிவிக்கையில், நாட்டில் இந்தளவு பாரிய வன்முறை இடம்பெற்றுள்ள நிலையிலும், ஜனாதிபதி உண்மையான மக்கள் தலைவர் என்றால், அவர் மக்களிடம் மன்னி்ப்பு கோரி, ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதை அறிவிக்கவேண்டும்.

அதேபோன்று நாட்டின் தற்போதைய நிலைமையை கட்டுப்படுத்தி, பொறுத்தமான ஆட்சியொன்றை அமைப்பதற்கு அவர் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போகிறார் என்பதை உடனடியாக அறிவிக்கவேண்டும். அதுவரை இந்த போராட்டத்தை மக்கள் முன்னுக்கு கொண்டுசெல்வார்கள் என்றே நான் நம்புகின்றேன் என்றார்.

சிறிஜயவர்த்தனபுர பல்கலைக்கழக அரசியல் பிரிவு பீடாதிபதி விசாக்கா சூரியபண்டார தெரிவிக்கையில், தற்போதைய நிலைமையில் இடைக்கால ஆட்சி முறைக்கு செல்லவேண்டும். அந்த அடைக்கால ஆட்சியின் பிரதமரால்தான் ஜனாதிபதி பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கவேண்டும்.

அத்துடன் சட்டத்தரணிகள் சங்கத்தின் நிபந்தனைகளுக்கு ஜனாதிபதி ஓரளவு இணக்கம் தெரிவித்திருப்பதன் மூலம் அவர் பச்சை விளக்கை ஒளிக்கவிட்டிருக்கின்றார். அந்த பச்சை விளக்கு முழுமையாக ஒளிரவேண்டும் என்றால், போராட்டக்காரர்களின் அமைதியான போராட்டம் தொடரவேண்டும். ஆனால் அமைதிப்போராட்டம் வேறுவிதமாக மாறினால் நிலைமையும் வேறு விதமாக மாறும் வாய்ப்பு இருக்கின்றது என்றார்.

Posted in Uncategorized

நசீர் அஹமதின் அலுவலகம் எரியூட்டல்

ஏறாவூரிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட்டின் காரியாலயம் இன்று(செவ்வாய்கிழமை) தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்று மகிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களால் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இதனையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் முன்னாள் பிரதமர் மற்றும் அவரது ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஆதரவாளர்கள் மீது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் பொதுமக்கள் அவர்களது வாகனங்கள், வீடுகள் உள்ளிட்ட சொத்துக்களை அழித்து பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Posted in Uncategorized

சண்டிலிப்பாயில் அங்கஜனின் அலுவலகத்தின் மீது தாக்குதல்!

யாழ்ப்பாண மாவட்ட சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான என் கனவு யாழ் அங்கஜன் ராமநாதனின் சண்டிலிப்பாய் அலுவலகம் சற்று முன்னர் தாக்கப்பட்டு அலுவலக பெயர்ப் பலகையும் எரியூட்டப்பட்டுள்ளது.

அங்கஜனின் சண்டிலிப்பாய் அலுவலக பதாகைக்கு தீ வைப்பு; அருண் சித்தார்த்தை தேடும் இளைஞர்கள்

அரசுக்கு எதிரான மக்களின் நடவடிக்கைகளில் வடக்கு மாகாணத்தில் முதலாவது சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (மே 10) இரவு பதிவாகியுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதனின் சண்டிலிப்பாய் தொகுதி அலுவலகத்தின் முன்பாக காட்சிப்படுத்தப்பட்டிருந்த பிளக்ஸ் காட்சிப் பதாகை தீவைக்கப்பட்டுள்ளது. எனினும் முழுமையாகச் சேதமடையவில்லை.

மக்கள் கூட்டத்தினால் இந்த நடவடிக்கை இன்றிரவு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அரசுக்கு சார்பாகவும் தமிழ் மக்களுக்கு எதிராகவும் செயற்பட்டு வரும் அருண் சித்தார்த்தை தேடி வருவதாக இளைஞர்கள் பலர் சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளன.

Posted in Uncategorized

ஊரடங்கு சட்டம் வியாழக்கிழமை (12) காலை 07 மணி வரை நீடிப்பு

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அந்த வகையில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டமானது எதிர்வரும் வியாழக்கிழமை 12 ஆம் திகதி காலை 7.00 மணி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச சட்டமானது நாளை காலை 07 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே தற்போது 12 ஆம் திகதி காலை வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ராஜபக்ஸ குடும்பத்தினர் திருகோணமலையில் தஞ்சம்?

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் திருகோணமலை கடற்படை தளத்தில் விசேட பாதுகாப்பிற்கு மத்தியில் தங்கியுள்ளனர்.

அண்மைய நாட்களாக திருகோணமலையில் இந்தியா முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டியதுடன், திருகோணமலை மற்றும் அதனை சூழவுள்ள பல முக்கிய இடங்களில் இந்தியா தனது ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தியுள்ளது.

முன்னாள் பிரதமரும் அவரது குடும்பத்தவர்களும் திருகோணமலை கடற்படை தளத்தில் தங்கியுள்ள நிலையில், கடற்படை தளத்திற்கு முன்பாகக் கூடிய மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

கடற்படை தளத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன், தளத்தை அண்டிய கடற்பகுதியிலும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

தனது தந்தையும் குடும்பத்தினரும் நாட்டிலிருந்து தப்பிச்சென்றுள்ளதாகக் கூறப்படும் தகவல் உண்மைக்கு புறம்பானது என பிரான்ஸ் செய்தி சேவையொன்றுக்கு முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நாட்டிலிருந்து தாம் தப்பிச்செல்லப் போவதில்லையெனவும் அவர் கூறியுள்ளார்.

போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு அமெரிக்க இராஜாங்கத்திணைக்களம் கண்டனம்

அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைத்தாக்குதல்கள் குறித்து தாம் மிகுந்த கவலையடைவதாகத் தெரிவித்திருக்கும் அமெரிக்க இராஜாங்கத்திணைக்களம், தற்போது நாட்டில் நிலவிவரும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு நீண்டகால அடிப்படையிலான தீர்வுகளைக் கண்டறிவதில் விசேட அவதானம் செலுத்துமாறு இலங்கை மக்களிடம் வேண்டுகோள்விடுத்திருக்கின்றது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக நேற்று திங்கட்கிழமை அலரி மாளிகையில் ஒன்றுதிரண்ட குழுவினர், அலரி மாளிகைக்கு முன்பாக காலி வீதியில் நிர்மாணிக்கப்பட்டிருந்த ‘மைனா கோ கம’ கூடாரங்களை இடித்து, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களையும் கடுமையாகத் தாக்கினர். அதனைத்தொடர்ந்து காலி வீதியின் ஊடாக காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டிருந்த ‘கோட்டா கோ கம’விற்குச் சென்று அங்கு நிர்மாணிக்கப்பட்டிருந்த கூடாரங்களை எரித்து, போராட்டக்காரர்கள்மீது தாக்குதல் நடத்தினர். அதனையடுத்து நாடளாவிய ரீதியில் வன்முறைகள் வெடித்து அமைதியற்ற நிலையொன்று தோற்றம்பெற்றது.

இதுகுறித்து அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்யப்பட்டிருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அப்பதிவில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

‘இலங்கையின் தற்போதைய நிலைவரத்தை உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம். அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீதும், அவ்விடங்களில் இருந்தவர்கள் மீதும் நிகழ்த்தப்பட்டிருக்கும் வன்முறைத்தாக்குதல்கள் குறித்து நாம் மிகுந்த கவலையடைகின்றோம்.

அதேவேளை தற்போது நாட்டில் நிலவிவரும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு நீண்டகால அடிப்படையிலான தீர்வுகளைக் கண்டறிவதில் விசேட அவதானம் செலுத்துமாறு நாம் இலங்கை மக்களைக் கேட்டுக்கொள்கின்றோம்’ என்று அமெரிக்க இராஜாங்கத்திணைக்களம் தெரிவித்திருக்கின்றது.

அதேவேளை இச்சம்பவம் தொடர்பில் சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழுவும் அதன் கண்டனத்தை வெளியிட்டிருக்கின்றது. அதன்படி சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்யப்பட்டிருக்கும் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:

‘இலங்கையில் அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள்மீது நடத்தப்பட்டிருக்கும் வன்முறைத்தாக்குதல்களைக் கடுமையாகக் கண்டனம் செய்யும் அதேவேளை, தொடர்ச்சியாக மோசமடைந்துவரும் நிலைவரம் குறித்துக் கவலையடைகின்றோம். மேலும் குறித்த வன்முறைச்சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதுடன் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்’ என்று கூறப்பட்டுள்ளது.

Posted in Uncategorized