அலரிமாளிகைக்கு முன்பாக பதற்றமான சூழல்: ஊடகவியலாளர்கள் மீது தாக்குதுல்

அலரி மாளிகை முன்பு தற்போது கடும் பதற்ற நிலை நிலவி வருகிறது.

அரசாங்க ஆதரவாளர்களினால், அரசாங்கத்தை பதவி விலக கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் கூடாரங்கள் உடைத்து எறியப்படுவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவ இடங்களில் செய்தி சேகரிக்கும் மற்றும் காணொளி பதிவு செய்யும் ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுவதாக தெரியவருகிறது.

அப்பகுதியில் உடைக்கப்பட்ட கூடாரங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://www.facebook.com/NewsfirstSL/videos/437790031684038

 

“ பிரதமர் மஹிந்தவை பாதுகாப்போம் ” : அலரி மாளிகை முன் ஆர்ப்பாட்டம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் இன்று காலை அலரிமாளிகையில் கூடியுள்ளனர்.

இந்நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவித்து ‘பிரதமர் மஹிந்தவை பாதுகாப்போம்’என பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் தற்போது அலரிமாளிகை முன்பாக போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

பொருளாதார பிரச்சனைக்கு பிரதமரால் மாத்திரமே தீர்வு காண முடியும் எனவும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் நோக்கம் வெற்றிபெற இடமளிக்க முடியாது எனவும் பொதுஜன பெரமுனவின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“கோட்டா கோ கம ” வுக்கு ஒரு மாதம் : உடுக்கு அடித்து மாடன் பத்திரகாளி பூஜை, மரணச்சடங்கு என பல பரிணாமங்களில் போராட்டங்கள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தை பதவியில் இருந்து விலகுமாறு கோரி மக்களால் ஆரம்பிக்கப்பட்ட “கோட்டா கோ கம” எழுச்சிப் போராட்டத்திற்கு இன்று ஒரு மாதம் நிறைவடைகின்றது.

குறித்த போராட்டம் கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி கொழும்பு காலிமுகத்திடலில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து போராட்டத்தின் தன்மை பல்வேறு பரிமாணம் எடுத்தது.

இதன்படி மே மாதம் 7 ஆம் திகதி சனிக்கிழமை இரவு 8 மணிக்கு உடுக்கு அடித்து மொடன் பத்திரகாளி பூஜை இடம்பெற்றது.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமது நோய்பிணிகளை அகற்றுவதற்கு தனது எதிரிகளை வெல்வதற்கு, தக்கெதிரான அநியாயங்களை , வன்முறைகளை தடுப்பதற்கு உடுக்கு அடித்து அருளாடி மனிதருள் மொடன் – காளி உருவேறி தீர் சொல்லும் தெய்வீக சம்பிரதாயம் காலாகலமாக மலையகத்தில் இடம்பெற்ற வருகின்றது. அதனையொத்த பூஜையே இடம்பெற்றது.

உடுக்கு, பறை இசை முழங்க இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இதேவேளை, நேற்று ஞாயிற்றுக் கிழமை இரவு அலரி மாளிகைக்கு முன்னால் இடம்பெறும் மைனா கோ கமவுக்கு முன்னால் சிங்கள முறைப்படி மரணச் சடங்கு நிறைவேற்றும் நிகழ்வு இடம்பெற்றது.

ஆரம்பத்தில் பொது மக்கள் மாத்திரம் இந்த அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில் , பின்னர் மதத் தலைவர்கள் , சட்டத்தரணிகள், நிபுணர்கள் உள்ளிட்ட பல தரப்பினராலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் பல நிறுவனங்கள் மற்றும் தொழில்சார் வல்லுனர்களும் போராட்டத்தில் இணைந்துகொண்டனர்.

‘பக்க சார்பற்ற மக்கள் எழுச்சிப் போராட்டம்’ என்ற கருப்பொருளில் இந்த ஆர்ப்பாட்டம் பொது மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் கடந்த ஒரு மாத காலமாக இடைவிடாது கொட்டும் மழைக்கு மத்தியிலும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த போராட்டம் உலகளாவிய ரீதியில் பலரை ஈர்த்த ஒரு ஜனநாயக வழிப் போராட்டமாக அமைந்ததோடு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் சிந்தனைகளும் பாராட்டப்பட்டு வருகின்றது.

நாடளாவிய ரீதியில் வியாபித்த கோட்டா கோ கம போராட்டம் கண்டி, காலி, மாத்தறை, வடக்கு, மலையகம், கிழக்கு போன்ற பல பிரதேசங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இலங்கையில் முன்னெடுக்கப்படும் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் வெளிநாடுகளிலுள்ள இலங்கை பிரஜைகளும் அந்நாடுகளில் தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதற்மைய இத்தாலி, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, சுவிற்சர்லாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட பல நாடுகளிலும் ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அத்துடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகைக்கு முன்னால் “ மைனா கோ கம ” என்றும் பாராளுமன்ற பகுதியில் “ஹொரு கோ கம” என்ற தொனிப்பொருளில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Posted in Uncategorized

பிரதமரின் அநுராதபுர விஜயத்தின் போது மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அநுராதபுர விஜயத்தின் போது பொதுமக்கள் ஒன்றினைந்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பிரதமரே இன்று நற்செய்தியை எதிர்பார்த்துள்ளோம், இதுவரை செய்தது போது பதவி விலகுங்கள் என ஒருவர் பிரதமரை நோக்கி குறிப்பிட்டார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை அநுராதபுரத்தில் உள்ள ஜெயஸ்ரீ மஹா விகாரை,ருவென்வெலிசாய விகாரை ஆகிவற்றில் மத வழிபாடுகளில் ஈடுப்பட்hர்.

முதலாவதாக ஜெயஸ்ரீ மகா விகாரைக்கு வருகை தரும் போது அங்கு கூடியிருந்த மக்கள் பிரதமரிடம் நலன் விசாரித்தார்கள்.நாட்டை பாதுகாத்த தலைவர் நீங்கள்,தற்போதைய நிலைமையில் நாட்டை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள் என குறிப்பிட்டனர்

அவர்களே நீங்கள் இதுவரை செய்தது,போதும் பதவி விலகுங்கள் இன்று நற்செய்தி உள்ளது தானே என அங்கு கூடியிருந்தவரில் ஒருவர் பிரதமர் முன்பாக வந்து பிரமரிடமே வினவினார்.

பிரதமர் ஜெயஸ்ரீ மகா விகாரையில் மத வழிபாடுகளில் ஈடுப்பட்டதன் பின்னர் வெளியேறும் போது பொது மக்கள் ஜனாதிபதி,பிரதமர் உட்பட அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி,கோ ஹோம் கோடா,கோ ஹோம் மஹிந்த,கோ ஹோம் ராஜபக்ஷ என பதாதைகளை ஏந்தி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்,

அதனை தொடர்ந்து பிரதமர் ருவன்வெலிசாய விகாரையில் மத வழிபாட்டினை மேற்கொண்டு வெளியேறுகையில் அங்கு கூடியிருந்த மக்கள் பிரதமருக்கும்,அரசாங்கத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்து பதாதைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அதனை தொடர்ந்து பிரதமர் மிரிசவெடிய தாதுகோபுரத்தில் மத வழிபாடுகளில் ஈடுப்பட்டதன் பின்னர் அங்கிருந்து வெளியேறுகையில் அங்கு கூடியிருந்த பொது மக்கள் பிரதமருக்கு எதிராகவும்,அரசாங்கத்திற்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அடலேறு சிறிசபாரத்தினம் எழுச்சி நிகழ்வு யாழ் மாவட்ட கோண்டாவிலில் நடைப்பெற்றது

இன்று அடலேறு சிறிசபாரத்தினம் படுகொலை செய்யப்பட்ட இடமான கோண்டாவில் அன்னங்கை தோட்டவெளியில் எழுச்சி நிகழ்வு வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரும் யாழ் மாவட்ட ரெலோ பொறுப்பாளருமான நிரோஜ் தலைமையில் நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் ரெலோ ஊடக பேச்சாளர் சுரேன், வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவருமான சபா குகதாஸ் ,வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் பொருளாளருமான விந்தன், யாழ் மாநகர பிரதி முதல்வரும் யாழ் மாவட்ட பிரதி தலைவருமான ஈசன், நல்லார் பிரதி தவிசாளர் ஜெயகரன், நல்லூர் தொகுதி அமைப்பாளர் மதுசூதனன், யாழ் நகர அமைப்பாளர் உதயசிறி,யாழ் மாநகரசபை உறுப்பினர் நளினா பரம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக பிறமாவட்டங்களில் இருந்து முக்கிய தலைவர்கள் வரமுடியாத சூழ்நிலையில் இந்நிகழ்வை வருடாவருடம் நடாத்தி வரும் ரெலோ யாழ் மாவட்ட உறுப்பினர்கள் பல்வேறு தடைகளையும் தாண்டி இன்று நினைவுகூர்ந்தனர் .

வடக்கு கிழக்கில் உள்ள ரெலோ காரியாலயங்களிலும், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மாவட்ட கிளையின் உறுப்பினர்களால் எழுச்சி தினம் நடைபெற்றது.

புலம்பெயர் தேசங்களில் உள்ள ரெலோ பிரித்தானிய, சுவிட்சர்லாந்து,கனடா, பிரான்ஸ் கிளைகளில் நாளை சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை எழுச்சி நிகழ்வு நடைபெற உள்ளது.

” 36ம் ஆண்டு நினைவுகள் ” (சித்திரை 29 – வைகாசி 06)

ஈழ விடுதலைப் போராட்டக் களத்தில்
விடுதலை இயக்கங்களின் ஒற்றுமை
குலைந்த,குலைக்கப்பட்ட நாள்!!
ஈழக் கனவு கலைந்த,கலைக்கப்பட்ட நாள்!!!

சுதந்திரத்துக்காக போராட
சுதந்திரம் மறுக்கப்பட்ட நாள்!!!

எம் மீதும் எம் தலை(வன்) மீதும்
துரோகம் சூட்டப்பட்ட நாள்!!!!

“தமிழ் தேசிய வீரர்களுக்கு மீண்டும் மீண்டும் தலை சாய்த்து அஞ்சலிக்கின்றோம்!”

Posted in Uncategorized

உரிமை எனும் குரலினால் உயர்ந்தவரே உலகத்தார் இன்றுவரை நினைத்தனரே இம்மண்ணில்

உரிமை எனும் குரலினால் உயர்ந்தவரே
உலகத்தார் இன்றுவரை நினைத்தனரே
இம்மண்ணில் –  அரியதொரு பணியினை ஆற்றி சென்றாய்
ஆறாத என் துயரும் இன்று வரை தீரவில்லை
கால் வீழாத தமிழினத்தின் வீரன்-நீ
தலைவன் நீ எங்கள் சிறி அண்ணா
விந்தை பலசெய்து நின்றாய்- எமக்கு சிந்தனையால் பல வழிகள் சொல்லி நின்றாய்
சீரான தமிழ் இன வாழ்வுக்காய்
சிறப்பான படையணி நடாத்தி –  அதிரவைத்தாய்

அழகான உன் பயணம் அரங்கேற முன்னே  வெறும் அநியாயம் கொடிகட்டி-  பறந்ததண்ணா
விரைவாக விடுதலை வெல்வோம்  என்றாய்
வீரர்களே அணி திரண்டு வாரீர் என்றாய்
ஆளுமை மிகு தலைவன் நீ – ஈழமண்ணில்
ஆற்றல்மிகு பணிகளையே செய்து நின்றாய்-  தலைவா தமிழா
போற்றல்மிகு பணிகளையே உன் தலைமேல் கொண்டாய்

போராளி அமைப்புகளை ஒன்றாக்கி வைத்தாய் – ஈழப்போர் முறையில் வெற்றி கண்டாய் பேராற்றல்  மிகு தலைவன் ஆனாய்
சிங்கத்தின் வால் தன்னை பிடிக்காமல் –
சிற்றெறும்பின் தலையாக நிமிர்ந்து நின்றாய்
முழு அன்புக்கும் நீதானே
எங்கள் அண்ணா –
தமிழ் பண்புக்கும் நீதானே அன்றும் இன்றும் என்றும்
எம் தலைவர்களே!
சிறைக்குள் நீங்கள் சிந்திய இரத்தம் -எம்
இதய அறைக்குள் அல்லவா புகழிடம்பெற்றது

வன்முறை தழுவா வாழ்வியல் சொன்ன-
அண்ணனின் கண்களில் வேலிடை பாய்ந்தால்
வேலியே பயிரை மேய்ந்திட இங்கே வேரோடு எம்மினம் வீழ்ந்திடுமென்றால்
போரிடும்முறையில்புறமுதுகிடா
தமிழ்த்தேரிடை நெரித்து மனு –  நீதி சொன்ன பரம்பரை நீ
இம்மண்ணில் நிமிர்ந்து உரிமை கேட்டது பிழையா தமிழா !
அன்று சுதந்திரம் வேண்டி அனைவரும் ஒன்றாய் இணைந்து நின்றோம் ஆங்கிலப் படைகள் அநீதிகள் கேட்க வீதியில் இறங்கி விடுதலை கேட்டோம்
விரும்பியோ விரும்பாமலோ சுதந்திரம் பெற்றோம்

எல்லைகள் மாறி எம் மண்ணை இழந்தோம்
புத்தன்காந்திசொன்ன புதிய   பாதை நிமிர்ந்து காத்தோம்
சத்தியம் நேர்மை சாந்தமாக எத்தனை பாதை திறந்து  பார்த்தோம்
கையில் விலங்கு  எம் –  கழுத்தில் சுருக்கு
வீழ்ந்த போதும் நிமிர்ந்து  கேட்டோம்
வேண்டாம் வேண்டாம் நிறுத்து என்று வேண்டித் தானே நாமும் நின்றோம்
எம்இனத்தின்மீது
இறுதிகயிற்றைஇறுக்கும்போது தானே  நாமும் –
இழுத்து அறுத்து போக நினைத்தோம்

வன்முறை மீது காதல் கொள்ள எம்வாழ்வைத்தானே இம்மண்ணில்
தேம்பிக்கேட்டோம்
கூடு பிய்த்துக் கலைத்த போதும் நாங்கள் இம்மண்ணில் –  கூரையற்று அலைந்த போதும்  எம்முயிர் வாழத் தானே உரிமை கேட்டோம்
தீர்க்கவேண்டிய மேசை எல்லாம் தீக்கிரையாக்கிய போதும் கூனிக்குறுகி நாங்கள்-  இந் நாட்டுக் குடிமகன் என்று குழந்தைபோல் அழுதுநின்றோம்
காது கேட்கா செவிடர்கள்  போலே
கண்களற்ற குருடர்களாக – எம்
வாழ்விழக்க வைத்ததும்  – எம்
மண்ணின் வளம் பறிக்கத் துணிந்ததும் – தினம்
களமிறங்கிப் படைகளுக்கு தமிழ் இன காழ்புணர்வை  ஊட்டியதும்
ஈழமண் உயிர்களையே இரக்கமற்று இரையாக்கி பார்த்தது போதும் என்றும் நிறுத்தாமல் போய்க்கொண்டே  இருக்கிறது எம் தலைவர்களே !

நீதிமன்ற வாசலிலே நின்றுரைத்த வரிகளை நீதிமன்றம் காத்திருந்தால் தமிழ் இனம் மீது – போர் அறைந்த பேய்களையே சிறைக்குள்ளே  தள்ளி  இருந்தால்
நாடு திருந்தி இருக்கும்
நம் இனமும்இணைந்திருக்கும்
கோபுரம் போல் புகழ் பறந்திருக்கும்
பாரெங்கும் இந்நாட்டின்  கொடி பார்ப்போர் மனதில் சிறந்திருக்கும்
தலைவர்கள் சொன்ன வழி சரித்திரமாக அமைந்திருந்தால் இன்று சிங்கத்தின் தலைமேல்
சிற்றெறும்பின் –  தலையெல்லாம்
சிகரம் போல் எழுந்திருக்கும்
சிங்கமது வாள் ஏந்தி  இம்மண்ணை இனி சீராக்க முடியாது
சீரான பாதையினை சீக்கிரமே தேடவேண்டும்
சிறி அண்ணா நினைவு  நாளினிலே
இனிய பணி தொடர வேண்டும்

ஒன்றுபட்டு நாமெல்லாம் இன்று ஓரணியில் நிமிர்ந்துநின்று
ஈழதேசத்தை இளையோரிடம் கையளிக்க
இனமானம் காத்து நிற்போம்
வீழ்ந்தும் எழுந்துநிற்கும்
என்றும்
வீழாத தமிழ் தாயை
விரைவாக மீட்டெடுப்போம்
சிறி அண்ணா தந்த சீரான வழியை
சிறப்பாக எம் மனதில் உயர்த்தி வைப்போம்.

                    நன்றி
பிரச்சார செயலாளர்: சொக்கன் நா .கணேசலிங்கம்

Posted in Uncategorized

நாளை (06) நாடளாவிய ரீதியில் ஹர்த்தாலுக்கு அழைப்பு

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நாளை (06) நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளது.

சுகாதார தரப்பினர், ஆசிரியர்கள், பல்கலைக்கழக தரப்பினர், போக்குவரத்து, வங்கி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் நாளைய ஹர்த்தாலுக்கு தமது ஆதரவை வழங்கியுள்ளனர்.

கட்டுநாயக்க உட்பட அனைத்து விமான நிலையங்களிலும் VIP மற்றும் CIP எனப்படும் வணிக ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த நபர்களுக்கான சேவைகளை நாளை முதல் நிறுத்துவதாக இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாளைய தினம் முன்னெடுக்கப்படும் ஹர்த்தாலுக்கு தாம் ஆதரவு வழங்குவாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது.

அனைத்து ஹோட்டல்களிலும் கறுப்புக்கொடியை பறக்கவிடுமாறும் ஹோட்டல்களுக்கு முன்பாக கவனயீர்ப்பை முன்னெடுக்குமாறும் ஊழியர்களிடம் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே, நாளைய தினம் நோயாளர்களுக்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டாலும் ஹர்த்தாலுக்கு தமது ஆதரவை வழங்குவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பொது சுகாதார பரிசோதகர் சங்கமும் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கியுள்ளது.

அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் பொதுமக்களுக்கான சேவைகளை வழங்குவதற்காக 011 263 5675 எனும் விசேட தொலைபேசி இலக்கத்தை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதனிடையே வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்புகளில் நாளை நடைபெறவுள்ள ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

வட மாகாண இலங்கை ஆசிரியர் சேவை சங்கம், மட்டக்களப்பு மாவட்ட விவசாய சம்மேளனம், ஏறாவூர் வர்த்தக சங்கம் மற்றும் இந்து லங்கா சமூக அமைப்பு என்பன இந்த அழைப்பை விடுத்துள்ளன.

ஒரே குறிக்கோளோடு ஹர்த்தாலுக்கான ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளதாக இந்து லங்கா சமூக அமைப்பின் தலைவர் கிருஷ்ணகோபால் திலகநாதன் தெரிவித்தார்.

இதனிடையே, மட்டக்களப்பிலுள்ள அனைத்து வர்த்தகர்களும் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்க வேண்டுமென ஏறாவூர் வர்த்தக சங்கத்தின் ஏ.எம். அஸ்மி கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் மக்கள் விடுதலை முன்னணி இன்று யாழ். நகரத்தில் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தது.

Posted in Uncategorized

27 ஆவது நாளாகவும் தொடர்கின்றது ஜனாதிபதி செயலகம், அலரி மாளிகைக்கு முன்பாக போராட்டங்கள்

கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக முன்னெடுக்கப்படும் மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று(05), 27 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் உடனடியாக பதவி விலகி, நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டுமென கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இருந்தும் வருகைதந்த மக்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி வருகின்றனர்.

இதனிடையே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட அமைச்சரவையை பதவி விலகுமாறு வலியுறுத்தி அலரி மாளிகைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் மைனா கோ கம போராட்டம் இன்று(05) 11 ஆவது நாளாக தொடர்கின்றது.

இந்த போராட்டத்தில் ஒருவர் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்ப்பவர்கள் வெறும் 65 பேர் மாத்திரமே: செல்வம் அடைக்கலநாதன்

மக்கள் இன்று தமது வாழ்வியலை கொண்டு செல்லமுடியாமல் அன்றாடம் வீதியில் நின்று அரசாங்கத்தை வீட்டிற்குச் செல்லுமாறு வலியுறுத்தும் நிலையில், 148 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வருகின்றமை மக்களுக்குச் செய்யும் துரோகமாகும் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நாட்டை வளமிக்க பூமியாகப் பாதுகாத்துக்கொள்ள மக்கள் தொடர்ச்சியாகப் போராட்டம் மேற்கொண்டு வருவதுடன், ஊழல் மோசடி நிறைந்த ஆட்சியாளர்களை வீட்டுக்குச் செல்லுமாறும் வலியுறுத்துகின்றனர்.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் மக்கள் வாக்குகளைப் பெற்ற மக்கள் பிரதிநிதிகள் பிரதி சபாநாயகரைத் தெரிவு செய்வதில் தமது உண்மை முகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

மக்கள் எப்பாடுபட்டாலும் அதைப்பற்றி சிந்திக்காது அரசாங்கத்தைப் பாதுகாத்தே தீருவோம் என 148 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கங்கணம் கட்டி நிற்பது வாக்களித்த மக்களுக்குச் செய்யும் பெரும் துரோகமாகும்.

இந்த நாடாளுமன்றத்தில் 65 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே மக்களுக்கான பிரதிநிதிகள் என்பதனை வெளிப்படுத்தியுள்ளனர்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.