இலங்கைக்கு வழங்கும் கடனுக்கான உறுதிப்பாடு அவசியம் – IMF

இலங்கைக்கு எந்தவொரு கடனையும் வழங்குவதற்கு, கடனை மீளச் செலுத்துவதற்கான உறுதிப்பாடு அவசியம் என சர்வதேச நாணய நிதியம்(IMF) தெரிவித்துள்ளது.

இலங்கை பிரதிநிதிகளுடன் கடன் வழங்குவதற்கான மாற்றுத் திட்டங்கள் மற்றும் கொள்கை வகுப்பு தொடர்பில் கலந்துரையாடியதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பிலான குழுவின் தலைவர் மஷிஹிரோ நொசாகி கூறியதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் மற்றும் பொருளாதார பிரச்சினைகளை மிக விரைவில் நிலையான முன்னேற்றப்பாதை நோக்கி கொண்டுசெல்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் அனுசரணையுடன் திட்டமொன்றை வகுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் மக்கள் அடைந்துள்ள துயரங்கள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் இதன்போது கவலை தெரிவித்துள்ளது.

உடனடி நிதித்தேவையை நிவர்த்திசெய்வதற்காக கடனை மீளச் செலுத்துவதற்குள்ள இயலுமையை ஆராய வேண்டும் எனவும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பிலான குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடு எரிகின்ற வேளையிலும் தமிழர்களின் நிலங்களை அபகரித்தல் தொடர்கிறது- சபா.குகதாஸ்.

நாடு எரிகின்ற வேளையிலும் தமிழர்களின் நிலங்களை அபகரித்தல் தொடர்கிறது என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார் .

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,

இலங்கைத் தீவு பாரிய பொருளாதார வறுமை காரணமாக திறைசேரியில் டொலர்கள் இல்லாது வெளிநாடுகளில் கடனுக்கு மேல் கடன் படும் அவலம் காரணமாக எரிபொருளின் பாரிய விலை உயர்வு மக்களை அரசாங்கத்திற்கு எதிராக வீதிக்கு இறக்கி பாரிய நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.

இவ்வாறு நாடு எரிந்து கொண்டு இருக்கும் போதும் ராஐபக்ச அரசாங்கம் தமிழர்களின் நிலங்களை அபகரிப்பதில் ஒரு தளர்வு கூட இல்லாமல் தொடர்ந்த வண்ணமே உள்ளனர்.

வன்னிப் பிரதேசத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அளம்பில், செம்மலை, புதுக்குடியிருப்பு , போன்ற பகுதிகளில் இராணுவ சிவில் பாதுகாப்புத் திணைக்களம் இருபாதாயிரம் ஏக்கர்(20000) தனியார் காணிகளை விடுதிகளுக்கும் , இராணுவத் தோட்டங்களுக்கும் , ஏனைய இராணுவத் தேவைகளுக்குமாக சுவீகரிக்கும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளனர்.

முழு நாடும் அவலத்தை சந்தித்ததைக் கூட கவலை கொள்ளாத ராஐபக்ச அரசாங்கம் தமிழர்களை இன ரீதியாக அழிப்பதில் தீவிரமாகவே உள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

றம்புக்கணை சம்பவம் தொடர்பில் அமெரிக்க தூதுவர் அறிக்கை

றம்புக்கணையில் இன்று (19) இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ரம்புக்கன பிரதேசத்தில் இருந்து வெளியாகும் பயங்கரமான செய்தியால் தாம் மிகுந்த மனவேதனை அடைந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைத்து வகையான வன்முறைகளையும் வன்மையாகக் கண்டிப்பதாகவும், மேலும் கட்டுப்பாட்டையும் அமைதியையும் கடைப்பிடிக்குமாறு காவல்துறை மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பில் வெளிப்படையான மற்றும் நியாயமான விசாரணைகளை நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுத்தருவது அனைத்து தரப்பினரின் பொறுப்பாகும் என அமெரிக்க தூதுவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ரம்புக்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு

உடன் அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை றம்புக்கணை பொலிஸ் பிரிவிற்குட்ட பிரதேசங்களுக்கு பொலிஸ் ஊரடங்கு உத்தரவு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனை தெரிவித்துள்ளார்.

றம்புக்கணை பிரதேசத்தில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் மா அதிபர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, றம்புக்கனையில் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 24 பேர் காயமடைந்துள்ளதாக அவர் தெரிவிததுள்ளார்.

இவர்களில் 8 பேர் பொலிஸ் அதிகாரிகள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, றம்புக்கனையில் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கேகாலை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் மிஹிரி பிரியங்கனி இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் படுகாயமடைந்த இருவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

இரம்புக்கனை ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்: ஒருவர் உயிரிழப்பு, 12 பேர் காயம்

இரம்புக்கனையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் ஒருவர் உயிரிழந்ததுடன் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

இரம்புக்கனை நகரில் ரயில் மார்க்கத்தை மறித்து இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு இன்று மாலை பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.

இதன்போது, பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.

முன்னதாக பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டிருந்த போதும், மக்கள் எரிபொருள் பௌசருக்கு தீ வைத்து, முச்சக்கரவண்டியை சேதப்படுத்தியதால் பொலிஸார் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ள நேரிட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.

ஆர்ப்பாட்டகாரர்களால் பொலிஸார் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் நிலைமையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் கூறினார்.

துப்பாக்கி பிரயோகத்தின் போது சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த பொதுமக்களும் பொலிஸ் அதிகாரிகள் சிலரும் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரம்புக்கனை நகருக்குள் செல்வதற்கான அனைத்து வீதிகளையும் மறித்து இன்று காலை முதல் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இரம்புக்கனை – மாவனெல்ல வீதி, ரம்புக்கனை – கேகாலை வீதி, இரம்புக்கனை – குருநாகல் வீதி என அனைத்து பகுதிகளிலும் மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

இதேவேளை, நீர்கொழும்பு கொச்சிக்கடை பாலத்திற்கு அருகில் வீதியை மறித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நீர்கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் தோப்பு பாலம் அருகில் வீதியை மறித்து மக்கள் இன்று மாலை 3 மணியிலிருந்து மறியல் போராட்டத்தை நடத்தி வருகின்றனர் .

பதுளை – எட்டம்பிட்டிய நகரிலும், பதுளை – நுவரெலியா பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பதுளை – எல்ல பள்ளக்கேட்டுவ நகரில் கொட்டும் மழையிலும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.

இதனிடையே, மஸ்கெலியா நகரிலிருந்து வௌி இடங்களுக்கு சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களின் சாரதிகளும் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், நோட்டன், கினிகத்தேன, ஹட்டன், சாமிமலை, நல்லதண்ணி ஆகிய பகுதிகளுக்கு மஸ்கெலியா நகரிலிருந்து பஸ்கள் சேவையில் ஈடுபடவில்லை என செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.

இதனிடையே மாத்தளை நகரிலும் தனியார் பஸ் ஊழியர்கள் இன்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதேவேளை, கண்டி – யாழ்ப்பாணம் வீதியில் இயங்கும் அனைத்து தூர இடங்களுக்கான பஸ்களும் இன்று சேவையிலிருந்து விலகியுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.

A9 வீதியில் கட்டுகஸ்தோட்டை பகுதியை மறித்து தனியார் பஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, ஹட்டன் நகரிலும் இன்று எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஹட்டன் பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அவிசாவளை – கொழும்பு பிரதான வீதியையும் மக்கள் மறித்து எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அவிசாவளை – கொழும்பு பிரதான வீதியூடான வாகன போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனிடையே, அநுராதபுரம் புதிய பஸ் நிலையத்திற்கு முன்பாக மக்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கண்டி – மஹியங்களை பிரதான வீதி தெல்தெனிய நகரில் மறிக்கப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். அதிகளவிலான மக்கள் கூடி எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதேவேளை, காலி பஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள சுற்றுவட்டம் அருகே பஸ்கள் நிறுத்தப்பட்டு வீதி மறிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை நகரிலும் வீதி மறிக்கப்பட்டு மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

எரிபொருள் விலையேற்றம், எரிபொருள் பற்றாக்குறை மற்றும் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க நேரிட்டுள்ளமையால், மக்கள் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்,

கொழும்பு – பதுளை பிரதான வீதி – ஹப்புத்தளை நகரில் மறிக்கப்பட்டு இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பண்டாரவளை நகரிலும் பஸ் சாரதிகள் இன்று முற்பகல் முதல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

Posted in Uncategorized

பேருவளையில் ஆரம்பித்த பேரணி கொழும்பை வந்தடைந்தது

மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் அரசாங்கத்தை விரட்டியடிப்போம் என்ற தொனிப்பொருளில் 3 நாட்களாக முன்னெடுக்கப்படும் போராட்டம் இன்று மாலை கொழும்பை வந்தடைந்தது.

லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட பேரணிக்கு தேசிய மக்கள் சக்தியின் தவைர் அனுரகுமார திசாநாயக்க தலைமை தாங்கினார்.

கடந்த 17 ஆம் திகதி பேருவளையில் ஆரம்பித்த இந்த பேரணி மொரட்டுவை, காலி வீதியூடாக வௌ்ளவத்தை, பாமன்கடை , ஹெவ்லொக் பகுதிகளின் ஊடாக இன்று கொழும்பை வந்தடைந்தது.

தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை , அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், பல்வேறுபட்ட தொழிற்சங்கங்கள் , இளைஞர் அணிகள், சிவில் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பெருமளவில் எதிர்ப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

Posted in Uncategorized

காலி முகத்திடலில் தொடரும் மக்கள் போராட்டம்

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று(18) பத்தாவது நாளாகவும் காலி முகத்திடலுக்கு அருகில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பொதுமக்கள், இளைஞர்கள், யுவதிகள், கலைஞர்கள் என பலரும் இந்த தொடர்ச்சியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

ஜனாதிபதியை பதவியிலிருந்து விலகுமாறும் ஜனநாயகத்தை நிலைநாட்டுமாறு வலியுறுத்தியும் கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக தொடர்ச்சியாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் லலித் நந்தகுமார ஹேமாரத்ன நேற்று(17) ஆரம்பித்த சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று(18) காலை நிறைவிற்கு வந்தது.

அதன்பின்னர் விளையாட்டு வீரர் சஜித் மதுரங்க 24 மணித்தியால சத்தியாக்கிரகப் போராட்டத்தை இன்று(18) ஆரம்பித்தார்.

அரசியல் தலையீடுகள் இன்றி பெருமளவிலானவர்கள் இன்றும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

Posted in Uncategorized

அரசியல் தீர்வு காணப்பட்டிருந்தால் டொலர்களை செலவிடவேண்டிய தேவையேற்பட்டிருக்காது; கோவிந்தன் கருணாகரம்!

சிங்கள இளையோர்களினால் முன்னெடுக்கும் போராட்டமானது தாங்கள் முன்வைத்துள்ள ஐந்து கோரிக்கைகளில் முதலாவதாக புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வினை வரும் அரசாங்கம் முன்வைக்கவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்திருக்கவேண்டும் என்பது எனது கருத்தாகும்.

அதில் தமிழ் இளைஞர்கள் பங்குபற்றுவதனால் தமிழ் மக்களுக்கு என்ன இலாபம் என்பதை தெரிந்துகொண்டுதான்போராடவேண்டும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

மகிந்த ராஜபக்ஸ குடும்பத்தினை வீட்டுக்கு செல்லுமாறு கோரி கடந்த எட்டு தினங்களாக காலிமுகத்திடலில் சிங்கள இளையோரினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ பதவி விலகவேண்டும்,ஒட்டுமொத்த அமைச்சரவையும் பதவி விலகவேண்டும் உட்பட ஐந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த நாடு இன்று பொருளாதார ரீதியாக அதாளபாதாளத்திற்கு சென்றுள்ளது.எவர் ஆட்சிக்கு வந்தாலும் இந்த பொருளாதாரத்தினை தூக்கிநிமிர்த்தக்கூடிய நிலையில்லை.இந்தநிலை எவ்வாறு ஏற்பட்டது என்பதன் தர்ப்பரியம் தெரியாமல் இந்த போராட்டம் நடாத்தப்படுகின்றது என்று நான்நினைக்கின்றேன்.

இந்த நாட்டில் சிறுபான்மை சமூகம் அடக்கி ஒடுக்கப்பட்டபோது அகிம்சை ரீதியான போராட்டங்கள் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம் ஆயுதப்போராட்டமாக மாற்றம்பெற்றபோது தமிழ் மக்கள் மீதான யுத்ததிற்காக இந்த நாட்டினை மாறிமாறி ஆட்சிசெய்த அரசுகள் பில்லியன் கணக்கான டொலர்களை செலவு செய்ததே முதல்காரணமாகும்.

பண்டா-செல்வா ஒப்பந்தம் ஏற்பட்டபோது இந்த நாட்டில் ஒரு அரசியல் தீர்வு காணப்பட்டிருந்தால் மாறிமாறி வந்த அரசுகள் இந்தளவுக்கு யுத்ததிற்கு டொலர்களை செலவிடவேண்டிய தேவையேற்பட்டிருக்காது.

தற்போதுகூட சிங்கள இளையோர்களினால் முன்னெடுக்கும் போராட்டமானது தாங்கள் முன்வைத்துள்ள ஐந்து கோரிக்கைகளில் முதலாவதாக புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வினை வரும் அரசாங்கம் முன்வைக்கவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்திருக்கவேண்டும் என்பது எனது கருத்தாகும்.

பண்டாரநாயக்க தலைமையிலான ஆட்சி சிங்கள மட்டும் சட்டத்தினை கொண்டுவந்தபோது தமது மொழி உரிமைக்காக இதே காலிமுகத்திடலில் ஜுன் மாதம் 05ஆம் திகதி தமிழ் தலைமைகள் சத்தியாக்கிரக போராட்டம் செய்தார்கள். அப்போராட்டத்தின்போது சிங்கள காடையர்கள் ஏவிவிடப்பட்டு தமிழ் தலைமைகளின் மண்டைகள் உடைக்கப்பட்டதுடன் காதுகள் கடித்து துப்பப்பட்ட வரலாறுகள் எங்களுக்கு தெரியும்.

தமிழ் மக்கள் தற்போதுள்ள நிலையில் இந்த போராட்டத்தினை நாங்கள் எவ்வாறு பயன்படுத்தப்போகின்றோம் என்பதை சற்று சிந்திக்கவேண்டும். 2009ஆம் ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்டபோது தமது உறவுகளை ஒப்படைத்த,காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சொந்தங்கள் 1800 நாட்களையும் தாண்டி வடகிழக்கில் போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர்.

சிங்கள இளைஞர்களின் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு இன்று ஒரு சில தமிழ் தலைமைகள் அறைகூவல் விடுக்கின்றனர்.இவ்வாறு அறைகூவல் விடுக்கும் அந்த பிரதிநிதிகள் வடகிழக்கில் தமது உறவுகளை தேடி போராடும் போராட்டத்திற்கு இளைஞர் யுவதிகளை ஒருங்கிணைப்பதற்கு எந்தவித அக்கறையும் அற்றவர்களாகவேயிருந்தனர்.

நாங்கள் பாதிக்கப்பட்ட சமூகம். யுத்ததினால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தினால் இன்று மின்சாரத்திற்கும்,எரிபொருளுக்கும்,பால்மாவுக்கும் போராடுகின்றார்களே தவிர இந்த பொருளாதார பின்னடைவு ஏற்பட்டதற்கான காரணத்தினை கண்டறிந்து அதனை நிவர்த்திப்பதற்கான எந்த முயற்சியும் காட்டப்படவில்லை.

எவர் மீதும் நம்பிக்கை கொள்ள முடியாது : தாய்நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் பலத்துடன் ஒன்றிணைய வேண்டும் – பேராயர்

நாட்டில் தற்போது ஊழல் நிறைந்த யுகம் தோற்றம் பெற்றுள்ளது. எனவே இனிமேலும் எவர் மீதும் நம்பிக்கை கொள்ள முடியாது. தற்போது நாட்டு மக்கள் அனைவரும் ஏமாற்றப்பட்டவர்களாகியுள்ளனர் என்று பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

ஊழலால் சீரழிந்துள்ள தாய் நாட்டை மீள கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து பலத்துடன் செயற்பட வேண்டும். அது எம்மால் முடியும் என்றும் பேராயர் தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை இரவு கொழும்பு – கொட்டாஞ்சேனை புனித லூசியாள் தேவாலயத்தில் இடம்பெற்ற விசேட ஆராதனையின் போது இதனைத் தெரிவித்த பேராயர் மேலும் குறிப்பிடுகையில் ,

மக்கள் கடும் இன்னல்களை அனுபவிக்கின்றனர். சுயநலத்திற்காக கோபமும் , விரோதமும் தலைதூக்குகியிருக்கிறது.

இலங்கைக்குள் இந்த நிலைமையை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இந்த நிலைமையை நாம் என்று மாற்றப் போகின்றோம்? நாம் என்று புதியதொரு தொடக்கத்திற்குச் செல்லப் போகின்றோம்? அது தொடர்பில் சிந்திப்பதற்கான காலம் தோன்றியுள்ளது.

ஊழல் நிறைந்த யுகம் தோற்றம் பெற்றுள்ளது. எம்மால் தொடர்ந்தும் எவர் மீதும் நம்பிக்கை கொள்ள முடியாது.

நாம் எல்லா சந்தர்ப்பங்களிலும் அனைவரையும் ஊழல்வாதிகளாகவே காண்கின்றோம். அதிகாரத்தில் உள்ளவர்கள் மாத்திரமின்றி , அதிகாரம் அற்றவர்கள் கூட ஊழல்வாதிகளாகவுள்ளனர். 74 ஆண்டுகளுக்குள் எமது அழகிய தாய் நாடு சீரழிந்துள்ளது.

பொய்களைக் கூறி ஏமாற்றுதல், நேர்மையற்ற தன்மையின் காரணமாகவே உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டியேற்பட்டது.

அதனுடன் தொடர்புடைய விசாரணைகளுக்கும் இந்த நிலைமையே ஏற்பட்டுள்ளது.

ஏமாற்றுதல் , பொய் மற்றும் ஊழல் என்பவற்றின் உச்சகட்டமே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்களை எதிர்கொண்ட விதமும் , அவற்றுடன் தொடர்புடையவர்கள் மற்றும் அதற்கு காரணமானவர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் முறைமையுமாகும்.

முழு நாடும் ஏமாற்றப்பட்டுள்ளது. எம் நாட்டு மக்கள் ஏமாற்றப்பட்டவர்களாகியுள்ளனர். நாம் நேர்மையாக செயற்பட வேண்டும்.

வரலாற்றில் பல தவறுகளை இழைத்துள்ளமையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். நாட்டை மீள கட்டியெழுப்ப வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து பலமடைய வேண்டும். அதனை எம்மால் செய்ய முடியும் என்றார்.

இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று (18) 334.99 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 322.72 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Posted in Uncategorized