17 பேரடங்கிய புதிய அமைச்சர்கள் விபரம் – நசீர் அஹ்மட்டுக்கு முழு அமைச்சுப் பதவி (முழு விபரம் உள்ளே)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், தற்போது அமைச்சரவை சத்தியப்பிரமாணம் செய்து வைக்கப்படுகின்றது.

இதில், 17 பேர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக பதவிப்பிரமானம் செய்துகொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் நஷீர் அஹமட் சுற்றாடல் துறை அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

தினேஸ் குணவர்தன – அரச சேவை, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

டக்ளஸ் தேவானந்தா – கடற்றொழில்

ரமேஷ் பத்திரண- கல்வி, பெருந்தோட்டம்

பிரசன்ன ரணதுங்க – பாதுகாப்பு, சுற்றுலா

திலும் அமுனுகம- கைத்தொழில், போக்குவரத்து

கனக ஹேரத்- பெருந்தெருக்கள்

விதுர விக்ரமநாயக்க – தொழில்

ஜனக வக்கும்புர – விவசாயம், நீர்பாசனம்

செஹான் சேமசிங்க – வர்த்தகம், சமுர்த்தி அபிவிருத்தி

மொஹான் பிரியதர்ஷன யாபா – நீர் வழங்கல்

விமலவீர திசாநாயக்க – வனசீவராசிகள் மற்றும் வனவள அபிவிருத்தி

காஞ்சன விஜேசேகர – எரிசக்தி, மின்வலு

தேனுக விதானகமகே – விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம்

நாலக கொடஹேவ – ஊடகம்

சன்ன ஜயசுமன – சுகாதாரம்

நசீர் அஹமட் – சுற்றாடல்

பிரமித பண்டார தென்னகோன் – துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை

Posted in Uncategorized

தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டதால் குழப்பம்!

இன மத பேதமின்றி முன்னெடுக்கப்பட்டுவரும் மக்கள் போராட்டத்தை குழப்புவதற்கு பலவாறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இந்நிலையில், நேற்றைய தினம் மாலை தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டமை பலரது வரவரப்பை பெற்ற போதிலும் பௌத்த தேரர் ஒருவர் அதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

குறித்த தேரர் அங்கு நின்றவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போதிலும் முழுமையாக தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

இலங்கை மக்களிடையே இனவாத சிந்தனைகளை தூண்டுவதன் மூலம் அரசியல் இலாபம் ஈட்டிய ஒரு தரப்பினர் மீண்டும் அதே ஆயுதத்தை கையில் எடுக்கும் நோக்கத்தில் செயற்பட்டுவருகின்றது.

எவ்வாறாயினும் இன்று இலங்கையர்களாக காலி முகத்திடலில் ஒன்று கூடியுள்ள மக்கள் தமது ஒற்றுமையை ஒரு போதும் விட்டுவிடக்கூடாது.

எத்தனை தடைகள் வந்தாலும் இலக்கை அடைய ஒற்றுமை இன்றியமையாதது. குழப்பக்காரர்களின் வெறுக்கத்தக்க பேச்சுகள் மக்களின் மத்தியில் முறுவலை ஏற்படுத்தலாம் அவற்றை கண்டுகொள்ளாது அல்லது சகித்துக்கொண்டு போராட்டத்தை முன்னெடுப்பதே வெற்றிக்கான வழி!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் – அத்துரலியே ரத்ன தேரர்

மகாசங்கத்தினரது ஆலோசனைகளுக்கு மதிப்பளித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக வேண்டும்.

காலி முகத்திடலில் தொடர் போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் மதிப்பளிக்காவிடின் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கத்தின் தவறான பொருளாதார முகாமைத்துவ கொள்கையினால் நாட்டு மக்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளார்கள்.

சுபீட்சமான எதிர்கால கொள்கைக்கு முரணாக செயற்பட்டதன் விளைவை அரசாங்கம் தற்போது எதிர்க்கொள்கிறது.

அரசியல் மற்றும் சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைக்கு பாராளுமன்ற மட்டத்தில் தீர்வு காண முடியாமல் இருப்பதற்கு அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் பிரதான தடையாக உள்ளது.

இடைக்கால அரசாங்கத்தின் ஊடாக 20 ஆவது திருத்தத்தை நீக்கி 21ஆவது திருத்தத்தை கொண்டு வருவதற்காகவே இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

புதிய பிரதமர் தலைமையில் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்பதையும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என்பதையும் மகாசங்கத்தினர் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார்கள் .மகாசங்கத்தினரது ஆலோசனைக்கு மதிப்பளித்து பிரதமர் பதவி விலக வேண்டும்.

காலி முகத்திடலில் தொடர் போராட்டத்தில் ஈடுபடும் இளம் தலைமுறையினரது கோரிக்கைக்கு அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டும்.

மக்கள் கருத்துக்கு மதிப்பளிக்காமல் செயற்பட்டால் அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.

மக்களின் ஜனநாயக போராட்டம் இறுதியில் இராணுவ போராட்டமாக மாற்றமடையுமா என்ற அச்சம் காணப்படுகிறது என்றார்.

ஜனாதிபதி செயலகம்மீது ஒளி பாய்ச்சி நூதன போராட்டம்!

காலிமுகத்திடலில் ஒன்பதாவது நாளாகவும் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அருகிலுள்ள ஜனாதிபதி செயலகம்மீது ஒளிபாய்ச்சி நூதன போராட்டத்தை முன்னெடுத்தனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அவர் தலைமையிலான அரசாங்கமும் பதவி விலகவேண்டும் என்று போராட்டம் நடத்துவோரே இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன்போது அவர்கள் கோட்டாபயவு வீட்டுக்கு போ என்ற வாசகங்களை பரப்பியதுடன், அரசாங்கத்துக்கு எதிரான கோஷங்களையும் ஒளி மூலம் ஜனாதிபதி செயலகத்தில் பாய்ச்சினர்.

Posted in Uncategorized

அரசியல் மாற்றத்தில் எமக்கு நம்பிக்கையில்லை -காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் வீட்டுக்கு அனுப்பக்கோரி இடம்பெறும் போராட்டங்கள் காரணமாக காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நன்மை என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாவதி ஆனந்தநடராஜா இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை சிங்கள மக்களால் சமாளிக்க முடியாதுள்ளது . 69 லட்சம் மக்களால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதியையும் அவர்களது குடும்பத்தினரையும் இன்று வீட்டுக்கு அனுப்புவதற்காக மக்கள் வீதிக்கு இறங்கி போராடுகிறார்கள்.

ஆனால் இறுதி யுத்தத்தில் ஏற்பட்ட உயிராபத்தை தடுப்பதற்காக அப்போதிருந்த அத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களும் உடனடியாக இராஜினாமா செய்திருந்தால் ஏதோ ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கும்.

ஆனால் அவர்கள் இராஜினாமா செய்யவில்லை. அனைவரும் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஒழித்து வாழ்ந்தார்கள். இதனால் மக்களை அழிக்க வாய்ப்பு ஏற்பட்டது.

இதேவேளை அரசியல் மாற்றத்தில் எமக்கு நம்பிக்கையில்லை. ராஜபக்ச அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். சர்வதேச மத்தியஸ்தத்துடன் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும்” என அவர் கேட்டுக்கொண்டார் .

Posted in Uncategorized

புதிய அமைச்சரவையில் பதவிகளை ஏற்கப்போவதில்லை

நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலை காரணமாக புதிய அமைச்சரவையில் எந்தப் பதவியையும் ஏற்கப் போவதில்லை என தாம் தீர்மானித்துள்ளதாக முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் (ஓய்வு) சரத் வீரசேகர இன்று தெரிவித்துள்ளார்.

தனது தீர்மானம் தொடர்பில் சுருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் அவர் தெரிவித்துள்ளார்.

நாடு, புத்தசாசனம் மற்றும் மக்களுக்கான ஐக்கியத்துக்காக எப்போதும் நிற்பதாகவும், நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் தனது கடமையை தொடர்ந்தும் செய்வதாகவும் வீரசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெருமவும் அமைச்சரவை அமைச்சுப் பதவிகளை ஏற்கப்போவதில்லை என அறிவித்துள்ளார்.

உடனடியாக இளைஞர்கள் அடங்கிய அமைச்சரவை ஒன்று நியமிக்கப்படும் என எதிர்ப்பார்ப்பதாக ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டு அவர் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்தின் எந்தவொரு அமைச்சுப் பதவிகளையும் ஏற்காது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் நெருக்கடி நிலைக்கு தீர்வு காணும் வரையில் எவ்வித அமைச்சுப் பதவிகளையும் ஏற்பதில்லை என கட்சி தீர்மானித்துள்ளதாக ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டு அவர் தெரிவித்துள்ளார்.

புதிய அமைச்சரவை இன்று (17) அல்லது நாளை (18) பதவியேற்கும் என ஊடகங்களி் செய்திகள் பரவி வருகின்றன.

புதிய அமைச்சரவையில் 15 அமைச்சர்களே நியமிக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் சமல் ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ மற்றும் ஷஷீந்திர ராஜபக்ஷ ஆகியோர் புதிய அமைச்சரவையில் நியமிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் அமைச்சர்களான காமினி லொகுகே, பந்துல குணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் ரோஹித அபேகுணவர்தன ஆகியோரும் புதிய அமைச்சரவையை பிரதிநிதித்துவப்படுத்த மாட்டார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, புதிய அமைச்சரவையில் பல புதிய முகங்கள் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இராஜாங்க அமைச்சர்களின் தற்போதைய பதவிகள் அப்படியே இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸ் திணைக்கள உத்தியோகபூர்வ இணையத் தளம் மீது சைபர் தாக்குதல்

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் (police.lk) மீது சைபர் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் தலைமையகத்தின் உயரதிகாரி ஒருவர் இதை உறுதிப்படுத்தினார்.

எனினும் குறித்த இணையத் தளமானது உடனடியாக சில மணி நேரங்களுக்குள் வழமையான செயற்பாட்டுக்காக, மீட்கப்பட்டதாகவும் அந்த அதிகாரி கூறினார்.

இது தொடர்பில் பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவவை வீரகேசரிதொடர்புகொண்டு வினவிய போது, பொலிஸ் இணையத் தளத்தில் தடங்கல்கள் ஏற்பட்டதை ஒப்புக்கொண்டார்.

அது தொடர்பில் விளக்கமளிக்கும் அறிக்கை ஒன்றினை வெளியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும் இச்செய்தி எழுதப்படும் வரை பொலிஸ் தலைமையகம் இது தொடர்பில் எந்த அறிக்கைகளையும் வெளியிடவில்லை.

Posted in Uncategorized

தமிழகத்தில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கை தமிழர்களுக்கு உதவ வேண்டும்: S.வெங்கடேசன்

தமிழகத்தில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கை தமிழ் மக்களுக்கு உதவ வேண்டுமென தமிழக மக்களவை உறுப்பினர் S.வெங்கடேசன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, வேலையின்மை, உச்சத்தை தொட்டுள்ள பணவீக்கம் காரணமாக தமிழ் மக்கள் தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கு வருகை தந்துள்ளதாக தமிழக மக்களவை உறுப்பினர் S. வெங்கடேசன் கூறியுள்ளார்.

நாளாந்தம் இந்த எண்ணிக்கை அதிகரிப்பதாக செய்திகள் வௌிவருவதாகவும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள தமிழ் மக்களும் சொல்லொண்ணா துயரில் ஆழ்ந்துள்ளனர். இந்த சூழலில் மனிதாபிமான அடிப்படையில் ஒன்றிய அரசு இரண்டு விடயங்களை செய்ய வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக முதல்வர், அத்தியாவசிய பொருட்களை அங்குள்ள தமிழ் மக்களுக்கு இந்திய தூதரகம் மூலம் வழங்க ஒன்றிய அரசின் அனுமதியை நாடி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில், ஒன்றிய அரசு தாமதமின்றி அதற்கு அனுமதி வழங்க வேண்டுமென மக்களவை உறுப்பினர் கோரியுள்ளார்.

அத்துடன், இந்தியாவில் வந்து தஞ்சம் புகும் மக்களுக்கு தங்குமிடம், அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுவதை உடனடியாக உறுதி செய்ய வேண்டுமெனவும் தமிழக மக்களவை உறுப்பினர் S. வெங்கடேசனின் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கைகளுக்கான நடவடிக்கைகளை வெளியுறவுத்துறை அமைச்சர் உடனடியாக மேற்கொள்வார் என தாம் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பு நோக்கி JVPயின் பேரணி

மக்களை வதைக்கிற அரசாங்கத்தை விரட்டியடிப்போம் என்கிற தொனிப்பொருளில் ஜே.வி.பியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கொழும்பு நோக்கிய பேரணி ஆரம்பித்துள்ளது.

டில்வின் சில்வா உட்பட ஜே.வி.பியின் முக்கியஸ்தர்கள் இதில் கலந்து கொண்டுள்ளதோடு பேரணி காலி முகத் திடல் நோக்கி பயணிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்து வருகின்ற போதிலும் ஜனாதிபதி தனது பதவி விலகுவதற்கான ஆயத்தம் எதுவுமில்லையென தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

களத்தில் இணையும் கத்தோலிக்க திருச்சபை

இலங்கையில் ஜனாதிபதிக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்துக்கு இலங்கை கத்தோலிக்க திருச்சபை முழு ஆதரவை அளிப்பதாக ஐலேண்ட் நாளிதழ் இணையத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என்று கோரி இலங்கை காலி முகத்திடலில் ஏராளமானோர் கூடி போராட்டம் நடத்திவருகின்றனர். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது. இந்த நிலையில், இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் செய்தித் தொடர்பாளரான சிரில் கமினி ஃபெர்ணண்டோ, தங்களது முழு ஆதரவை இந்த போராட்டத்துக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

கொழும்பு பிஷப் ஹவுஸில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கத்தோலிக்க திருச்சபையும் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்று எதிரார்க்கிறது என்று தெரிவித்தார். மேலும், ஏற்கனவே திருச்சபையினர் பலரும் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளதன் மூலம், முன்பிருந்தே இந்த போராட்டத்தில் திருச்சபை பங்கெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார் என்று ஐலேண்ட் செய்தி தெரிவிக்கிறது.