எதிர்க்கட்சித் தலைவருக்கும் 10 கட்சிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு – நம்பிக்கையில்லா தீர்மானம் விரைவில்!

அரசாங்கத்தில் தற்போது அங்கம் வகிக்கும் 10 சுயாதினமாக செயற்படும் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் இன்று (08) பிற்பகல் நடைபெற்றது.

10 கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில, திரன் அலஸ் மற்றும் ஜயந்த சமரவீர ஆகியோரும் கலந்துகொண்டனர்.

நாட்டில் நிலவும் அராஜகத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான உடனடி அரசியல் நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக உள்ளக ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஜனாதிபதி பதவி விலகாவிட்டால் அரசாங்கம் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவரும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (8) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு சமகி ஜன பலவேகய கட்சி கையெழுத்து சேகரிக்கத் தொடங்கியுள்ளதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்கள் மீண்டும் முன்னோக்கிச் செல்லும் வகையில் அனைவரும் தீர்மானங்களை எடுக்க வேண்டும் எனவும் நாட்டின் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்க தமிழ்க் கட்சிகள் ஏகமனதாக கோரிக்கை

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பாக பிரதான தமிழ் கட்சிகளின் ஐந்து தலைவர்களும் நேற்று யாழ்ப்பாணத்தில் கூடி கலந்துரையாடினர்.

இதன்போது நெருக்கடியில் இருந்து விடுபடுவதற்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஏகமனதாக விடுக்கப்பட்டது.

குறித்த சந்திப்பில் டெலோ, புளொட், தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப். மற்றும் தமிழ் தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை ஒற்றைக் கோரிக்கையை முன்னிறுத்தும் கூட்டறிக்கை ஒன்றினை தமிழ் மக்கள் சார்பில் வெளியிடுவது பற்றியும் பேசப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டபோதும் அவர் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

இருப்பினும் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து வெளியிடவுள்ள கூட்டறிக்கையில் மாவை சேனாதிராஜாவும் கையொப்பமிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கைக்கு உதவி வழங்குவதை ஆராயும் கூட்டத்தை ஒத்திவைத்தது ஐஎம்எவ்

இலங்கைக்கு உதவி வழங்குவது தொடர்பில் ஆராய சர்வதேச நாணய நிதியம் எதிர்வரும் 11 ஆம் திகதி வொஷிங்டனில் நடத்தவிருந்த கூட்டம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனை மத்திய வங்கியின் புதிய ஆளுனர் நந்தலால் வீரசிங்கவிடம் சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியே இதற்கான காரணமென தெரியவருகிறது.

Posted in Uncategorized

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புக்களைப் பெற தேவையான மாற்றங்களை தாமதமின்றி செயற்படுத்துங்கள் – ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பினைப் பெறுவதற்குத் தேவையான மாற்றங்களை இலங்கை தாமதமின்றி செயற்படுத்த வேண்டும் என்று உறுப்பு நாடுகளின் கூட்டு அறிக்கையூடாக ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

அத்தோடு இலங்கை மக்களைப் பாதித்துள்ள தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு ஆக்கபூர்வமான மற்றும் ஜனநாயக வழிமுறைகளை ஆராயுமாறு அனைத்துத் தரப்பினருக்கும் நாம் அழைப்பு விடுப்பதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளாக ஜேர்மன், பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ருமேனியா மற்றும் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, நோர்வே, சுவிட்சர்லாந்து , ஐக்கிய இராச்சியம் என்பவற்றுடன் இணைந்து ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஒன்று கூடும் சுதந்திரமும் , கருத்து சுதந்திரமும் அமைதியாக இடம்பெறும் சந்தர்ப்பத்தில் , அவை எந்தவொரு ஜனநாயக சமூகத்தினதும் தூண்களாகும்.

எனவே அனைத்து தரப்பினரும் நிதானத்துடன் தொடர்ந்து செயற்படுமாறு கேட்டுக் கொள்கின்றோம். அத்துடன் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதை ஒரு நேர்மையான முன்னெடுப்பாகக் கருதுகின்றோம்.

இலங்கை மக்களைப் பாதித்துள்ள தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு ஆக்கபூர்வமான மற்றும் ஜனநாய வழிமுறைகளை ஆராயுமாறு அனைத்துத் தரப்பினருக்கும் நாம் அழைப்பு விடுக்கின்றோம்.

இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் நிலையான பாதைக்கு கொண்டு வருவதற்கு தேவையான சீர் திருத்தங்கள் குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன், உரிய அதிகாரிகள் தீர்க்கமான கலந்துரையாடல்களை ஆரம்பிக்க வேண்டிய நிலைமையின் தீவிரத்தன்மையை நாம் வலியுறுத்துகின்றோம் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் இராஜினாமா ஒரு அரசியல் நாடகம் – அதிகார போராட்டத்தில் பசில்

இலங்கையில் ஆளும் கட்சியின் அமைச்சர்கள் இராஜினாமா செய்துள்ளதாக கூறியுள்ளமை சந்தேகத்திற்குரியது என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பசில் ராஜபக்ச நிதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்த போதிலும், பசில் ராஜபக்ஷவே அரசாங்கத்தின் நிதிகளை நிர்வகித்து வருகிறார். நிதியமைச்சர், மத்திய வங்கியின் ஆளுநர் உட்பட பொது நிதிக்கு பொறுப்பான அனைத்து அதிகாரிகளும் இல்லாத போதிலும், பணம் அச்சிடுதல் தொடர்கிறது.

ஏப்ரல் 6, 2022 (நேற்று) மட்டும் இலங்கை மத்திய வங்கி 119.08 பில்லியன் ரூபாய்யை அச்சிடப்பட்டுள்ளதாக முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

மேலும், பசில் ராஜபக்ஷ இன்னும் அமைச்சுக்களின் அதிகாரிகளுக்கு உத்தரவுகளை வழங்கி அரசாங்கத்தின் நிறைவேற்று அதிகாரங்களை பிரயோகித்து வருகின்றார்.

பல அமைச்சர்கள் இராஜினாமா தொடர்பான பொதுப் பதிவேட்டில் கையொப்பமிட்டு ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பிவைத்துள்ள போதிலும், அமைச்சர்கள் பலர் தமது தனிப்பட்ட அலுவலகங்கள் ஊடாக அமைச்சுக் கடமைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ராஜினாமா செய்ததாகக் கூறும் அமைச்சர்கள் எவரும் இதுவரை தங்களின் உத்தியோகபூர்வ வாகனங்களையோ, அரச சொத்துக்களையோ ஒப்படைக்கவில்லை

பசில் ராஜபக்ச எதிர்வரும் சில தினங்களில் நிதியமைச்சில் மீண்டும் தனது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அரசாங்க உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை இராஜினாமா செய்தால் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்வதாகவும், ஜனாதிபதி பதவி விலகினால் ஜனாதிபதி பதவியை பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கைப்பற்றுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசில் ராஜபக்சவும் அவர் ஊடாக நாட்டை ஆட்சி செய்யத் திட்டமிட்டுள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகார பரிமாற்றத்திற்கு தேவையான பெரும்பான்மையை பாராளுமன்றத்தில் மேலும் பெறுவதற்காக அரசாங்கத்தின் பல சுயேச்சை உறுப்பினர்கள் மற்றும் பல எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக அவர் தனிப்பட்ட பேச்சுக்களை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

Posted in Uncategorized

‘இலங்கைத் தமிழர்களுக்கு உணவு அனுப்ப தமிழக அரசு தயார்’ – தமிழக முதல்வர் மத்திய அரசிடம் தெரிவிப்பு

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கலந்துரையாடிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு உதவிட வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை, இன்று (ஏப்.7) தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, இலங்கையில் தற்போது நிலவும் சூழ்நிலை குறித்துப் பேசினார். அப்போது, இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் தற்போது நிலவும் தீவிரப் பொருளாதார நெருக்கடியில் சிக்கி, வேதனையில் தவித்துக் கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்கள் குறித்து தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துக்கொண்டார்.

இந்தச் சூழ்நிலையில் இலங்கையில் வசிக்கும், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், தலைநகர் கொழும்பிலும் வசிக்கும் தமிழர்கள் மற்றும் மலையகத் தமிழர்களின் நலன் கருதி, தமிழக அரசு அத்தியாவசிப் பொருட்களான அரிசி, பருப்பு மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகம் வாயிலாக அனுப்புவதற்குத் தயாராக உள்ளதாகவும், மனிதாபிமான நோக்கில் அனுப்பப்படும் இத்தகைய பொருட்களை உணவின்றித் தவிக்கும் தமிழர்களுக்கு கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் வினியோகிக்க உரிய அனுமதியையும், ஏற்பாடுகளையும் செய்ய வேண்டுமென்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரைக் கேட்டுக் கொண்டார்.

இதுதொடர்பாக இந்தியப் பிரதமரை கடந்த 31-3-2022 அன்று சந்தித்து, தான் முன்வைத்த கோரிக்கைகளை நினைவுகூர்ந்த முதல்வர், அந்தக் கோரிக்கைகளை எல்லாம் உடனடியாக நிறைவேற்றிட வேண்டுமென்றும் அப்போது கேட்டுக் கொண்டார்.

அதேபோன்று, இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அடிக்கடி தாக்கப்படுவது குறித்தும், கைது செய்யப்படுவது குறித்தும் தனது ஆழ்ந்த கவலையை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரிடம் தெரிவித்துக் கொண்ட முதல்வர், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவித்திட மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுத்திட வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

தமிழக முதல்வர் தெரிவித்த கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உறுதி அளித்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

தலவாக்கலை நகரில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

அரசாங்கத்திற்கு எதிராகவும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (07) தலவாக்கலை நகரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் முற்போக்கு கூட்டணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு மலையகத்தில் பல பாகங்களிலும் இருந்து வந்து மக்கள் கலந்து கொண்டனர்.

எதிர்ப்பு கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக தலவாக்கலை நகருக்கு பூண்டுலோயா வழியாகவும் நுவரலியா வழியாகவும் ஹட்டன் வழியாகவும் அனைத்து பகுதிகளில் இருந்தும் மக்கள் தங்களுடைய எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வண்ணம் தலவாக்கலை நகரை வந்தடைந்தனர்.

அங்கு பிரதான சுற்று வட்டத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன்போது அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான வேலுசாமி இராதாகிருஷ்ணன், பழனி திகாம்பரம் மயில்வாகனம் உதயகுமார், வேலுகுமார் ஆகியோர் கூட்டம் நடைபெற்ற பிரதான விளையாட்டு மைதானத்தை நோக்கி ஊர்வலமாக சென்றடைந்தனர்.

தொடர்ந்து பிரதான மேடைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச பிரதான மேடையை வந்தடைந்ததும் கூட்டம் ஆரம்பமாகியது. அவர் அங்கு மக்களுக்கு உரையாற்றினார்.

இந்த பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம், கூட்டணியின் இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வேலுச்சாமி இராதாகிருஸ்ணன், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.உதயகுமார், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் மற்றும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Posted in Uncategorized

இலங்கை நிலைவரங்கள் குறித்து நியூசிலாந்து உன்னிப்பாக அவதானம்

இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன. இதனால் இலங்கை எதிர்பாராத கொத்தளிப்பான ஒரு காலக்கட்டத்தை அனுபவிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறது என்று நியூசிலாந்து பிரமர் ஜெசிந்தா ஆர்டர்ன் தெரிவித்தார்.

இலங்கை தலைவர்களின் நடவடிக்கைககளை கண்டிக்குமாறு கோரி நியூசிலாந்திலுள்ள இலங்கையர்கள் மகஜர் ஒன்றில் கையெழுத்திட்டுவருகின்றார்கள்.

இந்நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், இலங்கையின் தற்போதைய நிலைமைகளை மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், இது தொடர்பில் மேலதிக விபரங்களை அறிய தாம் காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், இலங்கை தலைவர்களை தாங்கள் கண்டிங்கின்றீர்களா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்க ஜெசிந்தா சில நிமிடம் தாமதித்தார். பின்னர் இலங்கை மக்களின் அதிகரிக்கும் விரக்தியை தாம் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்த அவர் அரசியல் ரீதியாக இது மிகவும் கொந்தளிப்பான காலக்கட்டம் என தெரிவித்ததார்.

இதேவேளை, நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் நனையா மஹுதா கூறுகையில், பேச்சு சுதந்திரம், அமைதியான போராட்டம் போன்ற ஜனநாயக விழுமியங்களை நியூசிலாந்து அரசு மிகவும் உறுதியாக கடைப்பிடிப்பதாக தெரிவித்தார்.

மேலும், இலங்கையின் பொருளாதாரம், அரசியல் மற்றும் பாதுகாப்பு நிலைமைகளை நியூசிலாந்து மிகுவும் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதுடன், சகல அரசியல் கட்சிகளும் தொடர்ந்து இலங்கையில் நிலையான தீர்வுக்கு பங்களிப்பு செய்யவேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை , அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பிரிட்டன், நியூசிலாந்து ஆகிய நாடுகளில் இலங்கை மக்களுக்க ஆதரவாக புலம்பெயர் மக்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இது உலகளாவிய ரீதியில் கவனத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

ஆதரவை விலக்குமாறு முஸ்லிம் எம்.பி.க்களுக்கு மக்கள் அழுத்தம் – வீடுகளுக்கு முன்பாக போராட்டத்திற்கும் அழைப்பு

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான ஆட்சிக்கு வழங்கி வரும் ஆதரவை விலக்கிக் கொள்ளுமாறு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு சமூ­கத்தின் பல்­வேறு தரப்­பி­னரும் அழுத்­தங்­களை வழங்கி வரு­கின்­றனர்.
20 ஆவது திருத்தச் சட்­டத்­திற்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் எம்.பி.க்களான எச்.எம்.எம். ஹரீஸ், பைசல் காசிம், நஸீர் அகமட், எம்.எஸ். தௌபீக் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் எம்.பி.க்களான இஷாக் ரஹ்மான், அலி சப்ரி ரஹீம் ஆகி­யோ­ரையே இவ்­வாறு தமது ஆத­ரவை விலக்கிக் கொள்­ளு­மாறு வேண்­டு­கோள் வி­டுக்­கப்­பட்­டுள்­ளது.

அதே­போன்று வரவு செலவுத் திட்­டத்தைத் தொடர்ந்து அர­சாங்­கத்­திற்­கான ஆத­ரவை வழங்கி வந்த அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஷர்ரப் முது­நபீன், தற்­போது பாரா­ளு­மன்­றத்தில் சுயா­தீ­ன­மாகச் செயற்­ப­ட­வுள்­ள­தாக நேற்று முன்­தினம் அறி­வித்­துள்ளார். அத்­தோடு, விமல் தலை­மை­யி­லான அரசின் பங்­கா­ளிக்­கட்­சி­களின் கூட்­ட­ணி­யோடு கைகோர்த்­துள்ள தேசிய காங்­கிரஸ் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான அதா­வுல்­லாஹ்வும் நடு­நிலை வகிப்­ப­தாக அறிவித்துள்ளார்.

இத­னி­டையே பொது ஜன பெர­மு­னவில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான முன்னாள் அமைச்சர் அலி சப்ரி, காதர் மஸ்தான் மற்றும் மர்ஜான் பளீல் ஆகி­யோ­ரையும் அர­சாங்­கத்­திற்­கான ஆத­ரவை விலக்கிக் கொள்­ளு­மாறு மக்கள் வேண்­டு­கோள்­வி­டுத்­துள்­ளனர்.

குறித்த எம்.பி.க்களுக்கு எதி­ராக ஆங்­காக்கே ஆர்ப்­பாட்­டங்­களும் இடம்­பெற்­றுள்­ளன. பேரு­வ­ளையில் மர்ஜான் பளீ­லுக்கு எதி­ரா­கவும் கல்­மு­னையில் ஹரீ­சுக்கு எதி­ரா­கவும் ஆர்ப்­பாட்­டங்­க­ளின்­போது மக்கள் கோஷங்­களை எழுப்­பி­யுள்­ளனர்.

இதே­வேளை குறித்த எம்.பி.க்களுக்கு எதி­ராக அப் பகுதி மக்­களை போராட்­டத்தில் ஈடு­ப­டு­மாறு பலரும் சமூக வலைத்­த­ளங்­களில் கோரிக்­கை­களை முன்­வைத்­துள்­ளனர். அத்துடன் இவ்வாறான அரசியல்வாதிகளுக்கு எதிர்காலத்தில் ஆதரவு வழங்கக் கூடாது என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன

எமக்கான நிரந்தர தீர்வை உறுதிப்படுத்தும் அரசியல் மாற்றத்தையே நாம் பரிசீலிப்போம்- ரெலோ திட்டவட்டம்

எமது நிரந்தர அரசியல் தீர்வுக்கான காலவரையறையை ஏற்றுக் கொண்டாலே அரசியல் ஆட்சி மாற்றங்களில் கரிசனை கொள்ளமுடியும் . இல்லையேல் எந்த மாற்றங்களும் எம்மக்களுக்கு அர்த்தமற்றதாகிவிடும்.

நாம் துல்லியமாக கணித்தபடி கடுமையான பொருளாதாரச் சிக்கலினாலும் உள்ளக அரசியல் மாற்றங்களினாலும் பாரிய மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. தாம் பெரும்பான்மையாக வாக்களித்து தெரிவு செய்த அரசாங்கத்தை அந்த மக்களே எழுச்சி கொண்டு துரத்தி அடிக்கும் சூழ்நிலை பிறந்துள்ளது. இந்த நேரத்தில் தற்காலிக அரசாங்கமா, இடைக்கால அரசாங்கமா காபந்து அரசாங்கமா என புதிய ஏற்பாட்டினை மேற்கொள்வதற்கு அரசும் எதிர்க்கட்சிகளும் முனைந்துள்ளனர்.

மாறி வந்திருக்கும் இந்த அரசியல் சூழ்நிலையை தமிழர் தரப்பு எப்படி கையாளப் போகிறது என்பதில்தான் எமது இனத்தின் எதிர்காலம், தீர்வு என்பன தங்கியுள்ளன. எம்மினம் முகம் கொடுத்திருக்கும் அன்றாட பிரச்சினைகளுக்கும் நீண்ட காலமாக கோரி வரும் அரசியல் தீர்வுக்கும் முடிவை எட்ட இந்தச் சூழ்நிலையை சரியான முறையில் நாம் கையாள வேண்டும். அந்தந்த தரப்புக்களோடு பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது என்பதோ, அழைத்தவுடன் சென்று பேசுவதோ, ஓரிருவர் முடிவிலோ அல்லாமல் சரியான முறையிலே கையாளுவது தற்பொழுது தேவையாக உள்ளது

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தைக்கு கூட்டமைைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் கலந்து கொள்வதற்கு முன்னர் நிறைவேற்ற வேண்டிய சில நிபந்தனைகளை ரெலோ கோரியிருந்தது அனைவரும் அறிந்ததே. அரசியல் கைதிகள் விடுதலை, எமது பிரதேசங்களில் முன்னெடுக்கப்படும் காணி அபகரிப்பை உடனடியாக நிறுத்துதல், அபகரிக்கப்பட்ட காணிகளை விடுவித்தல், சர்வதேச ஏற்பாடுகளுக்கு அமைய காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான விசாரணை மற்றும் நீதி, அரசியல் யாப்பில் உள்ள அதிகாரப் பகிர்வினை உடனடியாக நடைமுறைப்படுத்துதல் என்பன மிகக்குறைந்த பட்ச விடயங்களாக கருதப்படுகின்றன. பாராளுமன்றத்தின் சாதாரண பெரும்பான்மையோடு இவற்றை நிறைவேற்ற முடியும்.

ஆகக்குறைந்தது இந்த நிபந்தனைகளை நிறைவேற்ற உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் தரப்புடன் பேசுவது பற்றிய பரிசீலனையை நாம் மேற்கொள்ள முடியும். இதுவே எம்மினம் சார்ந்து செய்யக்கூடிய சரியான அரசியல் நகர்வாக தற்போதைய சூழ்நிலையில் அமையும்.

சுரேந்திரன்
ஊடகப் பேச்சாளர்
தமிழ் ஈழ விடுதலை இயக்கம்- ரெலோ
தமிழ் தேசியக் கூட்டமைப்பு