அரசுக்கு எதிராக வலுப்பெறும் ஆர்ப்பாட்டங்கள்

அரசாங்கம் மற்றும் தற்போதைய நெருக்கடி நிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று(04) காலை முதல் மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சில பகுதிகளில் பிரதான வீதிகளை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பல்கலைக்கழக மாணவர்களும் இன்று(04) எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று(04) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பல்கலைக்கழக முன்றலிலிருந்து பரமேஸ்வரா சந்திக்கு பேரணியாக சென்ற மாணவர்கள் அங்கிருந்து யாழ். நகருக்கு சென்றனர்.

இதேவேளை, கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் இன்று(04) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கொம்மாந்துறையிலிருந்து எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக நுழைவாயிலுக்கருகில் வீதியை மறித்து போராட்டத்தில ஈடுபட்டனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு தீர்வு கோரி, மாத்தளை நகரிலும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மாத்தளை மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பெருந்தோட்ட தொழிலாளர்கள் ஒன்றிணைந்து பொகவந்தலாவை நகரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக பொகவந்தலாவை நகரிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் கூறினார்.

இதனிடையே, நுவரெலியா பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாகவும் இன்று(04) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நுவரெலியா – கண்டி பிரதான வீதியிலிருந்து பேரணியாக சென்ற மக்கள் தங்களின் எதிர்ப்பை வௌியிட்டனர்.

அரசாங்கத்திற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டமொன்று பண்டாரவளை நகரிலும் முன்னெடுக்கப்பட்டது.

பிரதான வீதியை மறித்து இன்று(04) காலை முதல் பண்டாரவளை நகரில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பசறை நகரிலும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கண்டி – திகன நகரிலும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய நிலமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மஹா நாயக்க தேரர்கள் விடுத்துள்ள கோரிக்கை!

நாட்டின் பிரதான பௌத்த பீடங்களான மல்வத்த, அஸ்கிரிய, ராமாஞ்ய, அமரபுர மஹா நிக்காயவின் சங்கைக்குரிய மஹா நாயக்க தேரர்கள் கூட்டாக ஒன்றிணைந்து கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

அமைச்சரவையை முழுமையாக கலைத்து இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கூட்டாக ஒன்றிணைந்து ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றின் ஊடாக இந்த கோரிக்கை முன்வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Posted in Uncategorized

பிரதமரின் கார்ல்டன் இல்லத்தை முற்றுகையிட்ட மக்கள் : கண்ணீர் புகை, நீர் தாரை பிரயோகம்

தங்காலையிலுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கார்ல்டன் இல்லத்தை மக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

இதன் போது ஆர்பாபட்டத்தில் ஈடுபட்ட மக்களை கலைக்க கண்ணீர் புகை மற்றும் நீர்த் தாரை பிரயோகத்தை பொலிஸார் மேற்கொண்டனர்.

தங்காலை – கதிர்காமம் வீதியின் கார்ல்டன் இல்லத்திற்கு அருகில் வீதியை மறித்து பெரும் எண்ணிக்கையிலான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் பொதுமக்கள் முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் வலுப்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்திலிருந்து ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 14 உறுப்பினர்களும் விலக தீர்மானம் – துமிந்த திசாநாயக்க

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 14 பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர், முன்னாள் இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்றக் குழு இன்று(04) பிற்பகல் கூடியபோது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

இராஜினாமா கடிதங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்படும் என அவர் மேலும் கூறினார்.

Posted in Uncategorized

பிரதமர் மஹிந்தவைத் தவிர அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் பதவி விலகினர் !

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவைத் தவிர ஏனைய அமைச்சரவை அமைச்சர்கள் தங்களது இராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் கையளித்துள்ளதாக தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

இன்றிரவு இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போது அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் ஒருமித்து இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைகளையடுத்து அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ள நிலையில் இவ்வாறு அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் பதவி விலகும் தீர்மானத்தை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் பதவி விலகியுள்ளார். அவர் தமது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

Share

Posted in Uncategorized

சுதந்திர சதுக்கத்திற்கு முன் ஐக்கிய மக்கள் சக்தியினர் ஆர்ப்பாட்டம்

நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (03) கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் சுதந்திர சதுக்கத்திற்குள் நுழைய முயற்சித்த போதிலும் பாதுகாப்புப் படையினர் அதற்கு அனுமதிக்கவில்லை.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் ஒன்றுகூடிய அவர்கள் இன்று காலை 11 மணியளவில் நெலும் பொக்குண திரையரங்கிற்கு அருகில் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திர சதுக்கத்திற்கு பேரணியாகச் சென்றனர்.

எனினும், அவர்கள் சுதந்திர சதுக்கத்தை அடைந்ததும், அதற்கு முன் இருந்த பாதை முற்றாக மூடப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக ஜே.வி.பி.யினர் ஆர்ப்பாட்டம்

அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டமொன்றை மக்கள் விடுதலை முன்னணியினர் முன்னெடுத்தனர்.

இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை (3) முற்பகல் 11 மணியளவில் மஹரகம நகரில் இடம்பெற்றது.

இந்தப் போராட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியினரின் கே.டி. லால்காந்த, பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சுனில் ஹந்துன்நெத்தி, வசந்த சமரசிங்க, கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ, லக்ஷ்மன் நிபுணராசாச்சி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Posted in Uncategorized

பேராதெனிய பல்கலைகழக மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகைத் தாக்குதல்!

பேராதெனிய பல்கலைகழக மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

மாணவர்கள் கண்டிக்கு பேரணியாக செல்ல முற்பட்ட வேளையில் பொலிஸாரால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கண்ணீர்ப்புகைத் தாக்குதலைத் தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்கள் கலைந்து சென்றதுடன், சம்பவ இடத்தில் பொலிஸார் தொடர்ந்தும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சமூக வலைத்தளங்கள் மீதான தடை இன்று(03) மாலை 3.30 மணிக்கு நீக்கப்படும் – தொழில்நுட்ப அமைச்சு

தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ள சமூக வலைத்தளங்கள் இன்று மாலை மீண்டும் வழமைக்கு திரும்பும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைகுழு தெரிவித்துள்ளது.

இன்று மாலை 3.30 முதல் மணி முதல் இவ்வாறு வழமைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்கு அமைய நள்ளிரவு முதல் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் முகப்புத்தகம், வட்ஸ்அப், டுவிட்டர், இன்ஸ்டகிராம் மற்றும் யூடியுப் ஆகிய சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஊரடங்கு அறிவிப்பு – மக்களின் அவலநிலை!

நாடளாவிய ரீதியில் நேற்று சனிக்கிழமை (02) மாலை 6 மணி தொடக்கம் நாளை (04) திங்கட்கிழமை அதிகாலை 6 மணி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் எரிபொருட்களை பெற்றுக் கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் காணப்பட்டதோடு, மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கும் முகம் கொடுத்துள்ளனர்.

மன்னார் நகர் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் மரக்கறி விற்பனை நிலையங்களில் அதிக அளவு மக்கள் கொள்வனவு நடவடிக்கைகளில் ஈடுபட்ட நிலையில் வழமை போன்று எரிபொருள் பெற்றுக்கொள்வதற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.

6 மணியை கடந்த நிலையிலும் மன்னார் நகர் பகுதியில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் வழமை போன்று இயங்கி வந்த நிலையில்,நேற்று சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மின்தடை ஏற்பட்ட நிலையில் மக்களின் நடமாட்டம் இன்றி காணப்பட்டது.

Posted in Uncategorized