தமிழரசுக்கட்சி , புளொட் – கோட்டாபய சந்திப்பின் உள்ளே வெடித்தது சர்ச்சை! பேசுவதற்கு அனுமதியில்லை

கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சு வார்த்தையின் போது அரசாங்கத்தினை சார்ந்தவர்கள் கூட்டமைப்பின் தலைவருக்கும், சுமந்திரனுக்கும் மாத்திரம் கருத்து தெரிவிக்கும் சுதந்திரத்தினை வழங்கியிருந்ததுடன்,ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும் தமிழரசுக்கட்சி வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான பல விரிவான தகவல்களுடன் வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,

ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் சில விடயங்களை கூட்டத்தில் தெரிவித்து பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஏனைய விடயங்கள் தொடர்பில் கருத்து தெரிவிப்பார் என்று கூறிய கருத்தினை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் கருத்து தெரிவிப்பார்கள் என்றே தெரிவித்திருக்க வேண்டும்.

கூட்டத்தில் தனிநபரொருவரின் பெயரை மாத்திரம் குறிப்பிட்டமையானது கூட்டத்தில் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கம் குறித்து தமிழ் மக்களுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து ஒரு குழப்பமான சூழலை ஏற்படுத்த கூடும் என்பதற்காகவே இவ்வாறு செயற்பட்டதாகவே நான் கருதுகின்றேன்.

இதன்போது தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கருத்து தெரிவிக்க முற்பட்ட வேளையிலும் கூட ஒலிவாங்கி கொடுக்கப்படவில்லை,ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்க முற்படும் போது அதற்கு சுமந்திரன் தடை விதித்திருந்தமை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

பதவி விலகும் எண்ணமில்லை – மஹிந்த பகிரங்க அறிவிப்பு!

தாம் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக சமூக வலைத்தளங்களில் தற்போது பரப்பப்படும் பிரச்சாரம் உண்மைக்குப் புறம்பானது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தற்போதைக்கு பதவியை இராஜினாமா செய்யவோ அல்லது மாற்றவோ தேவையில்லை என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக மக்கள், அரசாங்கத்தின் மீது கடுமையான விரக்தியில் உள்ளனர்.

போராட்டங்களை முன்னெடுத்துள்ள மக்கள், ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி விலகுமாறு கோரியுள்ளனர்.
இந்நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக போவதாக செய்திகள் பரப்பப்பட்டன.

இதனிடையே, மஹிந்த ராஜபக்ஷவே அடுத்த பிரதமராக வர வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

மார்ச் 24ஆம் திகதி ரணில் விக்ரமசிங்கவின் பிறந்தநாளை முன்னிட்டு ஜனாதிபதி தொலைபேசியில் அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்திருந்த நிலையில் அதனைத் தொடர்புபடுத்தி குறித்த செய்திகள் பரப்பப்பட்டன.

யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம் எளிமையான முறையில் திறந்து வைப்பு!

இலங்கை – இந்திய நட்புறவின் சின்னமாக இந்திய அரசின் 1.6 பில்லியன் நிதியுதவியில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம் இன்று எளிமையான முறையில் திறந்து
வைக்கப்பட்டது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரால் பிற்பகல் ஒரு மணியளவில் காணொளி முறையில் திறந்து வைக்கப்பட்டது.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கல்வியமைச்சர் தினேஸ் குணவர்தன, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாண பண்பாட்டு மையத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளில் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன், யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட அரசாங்க அதிபர்கள் மதகுருமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாண பண்பாட்டு மையம் வெகுவிமரிசையாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் திறந்து வைக்கப்பட்ட பின்னரே பொதுமக்கள் பாவனைக்காக கையளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Posted in Uncategorized

இந்தியாவிடம் இருந்து மேலும் ஒரு பில்லியன் டொலர் கடன்?

அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இலங்கை அரசாங்கம் மேலும் ஒரு பில்லியன் டொலர் கடனாக இந்தியாவிடம் கோரியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விடயம் இரண்டு தரப்பினரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ரெய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனவரி 2020 முதல் இன்று வரை, இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு சுமார் 70% குறைந்துள்ளது.

இதனால், டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியடைந்து வருகிறது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதியை சந்தித்தார்

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் (S. Jaishankar) இன்று (28) முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைச் சந்தித்தார்.

கொழும்பில் இன்று தொடங்கும் ஐந்தாவது பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக திரு.ஜெய்சங்கர் இலங்கை வந்துள்ளார்.

ஜெய்சங்கரின் வருகை தொடர்பில் மகிழ்ச்சியை தெரிவித்த ஜனாதிபதி, உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கியதற்கு நன்றி தெரிவித்தார்.

இந்த ஆண்டு, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, நினைவு நாணயம் மற்றும் நினைவு முத்திரை வெளியீடு உட்பட பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Posted in Uncategorized

நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை ஈடு செய்ய புலம்பெயர்ந்த தமிழருக்கhன அழைப்புக்கு முன் அவர்களுக்கான தடை தொடர்பில் என்ன நடவடிக்கை?ரெலோ இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ்

இலங்கை அரசாங்கம் நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை ஈடு செய்ய புலம்பெயர்ந்த தமிழருக்கு அழைப்பு விடுத்துள்ளது இதனை யாரும் எதிர்க்கப்போதில்லை. ஆனால் புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்களை அழைப்பதற்கு முன்னர் அவர்களுக்கான தடை தொடர்பில் இலங்கை அரசாங்கம் எடுத்த நடவடிக்கை என்ன? என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவரும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருமான சபா குகதாஸ் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கை அரசாங்கம் நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை ஈடு செய்ய புலம்பெயர்ந்த தமிழருக்கு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் விடுத்திருக்கும் செய்தியில்

இலங்கை அரசாங்கம் நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை ஈடு செய்ய புலம்பெயர்ந்த தமிழருக்கு அழைப்பு விடுத்துள்ளது. குறிப்பாக முதலீடுகளை வரவழைப்பதற்காக இந்த முயற்சியை எடுத்துள்ளனர் இதனை யாரும் எதிர்க்கப்போதில்லை.

ஆனால் புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்களை அழைப்பதற்கு முன்னர் அவர்களுக்கான தடை தொடர்பில் இலங்கை அரசாங்கம் எடுத்த நடவடிக்கை என்ன?

தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் தடைகளை நீக்கி நல்லெண்ண சமிக்கையை மேற் கொள்ளாது முதலீடு செய்ய வாருங்கள் என அழைப்பது வேடிக்கையாக உள்ளது.

உண்மையிலே புலம்பெயர் தமிழர்களின் அமைப்புக்களுக்கான தடைகளை நீக்கி நல்லெண்ண வெளிப்பாட்டின் மூலம் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை முன்வைத்து அதனை உறுதி செய்வதன் மூலமே ஆரோக்கியமான முதலீடுகளை நாட்டிற்குள் கொண்டுவர முடியும் இந்த பேரப்பலத்தை புலம்பெயர்ந்த அமைப்புக்கள் ஒற்றுமையாக கையாள வேண்டும் இது காலத்தின் கட்டாயம் என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசின் உள்ளகப் பொறிமுறைக்குள் தமிழ் மக்கள் பிரச்சினையை சிக்க வைக்க கூடாது- ரெலோ கோரிக்கை

சர்வதேச அழுத்தங்களை நீர்த்துப் போக வைக்கும் அரசின் நகர்விற்கு இடமளிக்க முடியாது. நல்லிணக்க கோரிக்கைகளை கையாளுவதில் அவதானம் தேவை.

25 மார்ச் 2022 அன்று காலை பத்தரை மணியளவில் ஜனாதிபதியின் தலைமையில் அரச தரப்பினருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளாகிய தமிழரசுக் கட்சிக்கும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்திற்கும் (புளட்) இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் எமது கட்சி பங்கு கொள்ளவில்லை. அதற்கான காரணங்களையும் தெளிவாக நாங்கள் முன் வைத்திருந்தோம். நல்லிணக்க வெளிப்பாட்டை அரசு தெரியப்படுத்த வேண்டும் என்றும் அதற்கான சில கோரிக்கைகளை முன்வைத்து அவற்றை அரசு நடைமுறைப்படுத்திய பின்னர் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வது ஆக்கபூர்வமாக அமையும் என்பது எங்கள் நிலைப்பாடாக இருந்தது. இதில் அவதானமாக செயற்பட வேண்டும் என்பதையும் நாங்கள் வலியுறுத்தி இருந்தோம்.

கடந்த காலங்களில் ராஜபக்ச அரசோடு நடத்திய பேச்சுவார்த்தைகளை தங்களுக்கு சார்பாக அவர்கள் கையாண்ட அனுபவங்களையும் சுட்டிக் காட்டி இருந்தோம். எமது தரப்பில் அரசாங்கத்தோடு பேசித்தான் தமிழர்களுக்கு தீர்வு காணவேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடும் எதிர்பார்ப்புகளோடும் நாங்கள் கலந்து கொள்ளும் பேச்சுவார்த்தைகளை தங்கள் நிகழ்ச்சி நிரலுக்குள் முடக்கி விடக்கூடிய ஆபத்து இருப்பதிலும் அச்சம் கொண்டிருந்தோம். இருப்பினும் எமது அங்கத்துவ கட்சிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு அரசியல் பிரச்சனை இருப்பதை அரச தரப்பு ஏற்றுக் கொள்ளாத நிலையில் அதிகாரப் பகிர்வு மற்றும் அரசியல் தீர்வு விடயமாக நாம் எதிர்பார்த்த கருத்துக்களையே அரசு தெரிவித்திருந்தது. . அதை நிறைவேற்ற முடியாத நிலைமையில் அரசு இப்பொழுது இருப்பதையும் நாங்கள் நன்கு அறிவோம்.

அதற்குப் பின்னராக நாம் முன்மொழிந்த முக்கிய நல்லிணக்க கோரிக்கைகள் உள்ளடங்கலாக சில விடயங்களை நிறைவேற்றுமாறு எமது அங்கத்துவ கட்சிகள் அரசை கோரியிருந்தனர். இதை அரசு கையாள முற்பட்டுள்ள முறையில் நாங்கள் மிகுந்த கவலையும் கரிசனையும் கொண்டுள்ளோம்.

அரசு எதிர்கொண்டிருக்கும் சர்வதேச விசாரணை மற்றும் நீதி பொறிமுறையை நீர்த்துப்போக வைக்கும் நடவடிக்கையாக சில உறுதிமொழிகளை வழங்கி இருப்பது ஆபத்தானவையாக இருக்கின்றன. நல்லிணக்க கோரிக்கைகளை நிறைவேற்றுவது போல கூறிக்கொண்டு எமது மக்களின் நீண்டகால முயற்சிக்கு பின்னர் தற்பொழுது ஐநாவில் முன்னெடுக்கப்படும் நீதிப் பொறிமுறையை அரசு தவிடு பொடியாக்க இடமளிக்க முடியாது.

முதலாவதாக, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சம்பந்தமாக அரச தரப்பில் விசாரணையை ஆரம்பிக்க இருப்பதாக தெரிவித்திருப்பது சர்வதேச விசாரணையை நீர்த்துப்போக வைக்கும் செயலாகும்.

மனித உரிமை மீறல், யுத்தக் குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை என்பவற்றிற்கு ஆதாரமாக இருப்பது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயமாகும். இன்று சர்வதேச நீதி பொறிமுறைக்கு கொண்டு செல்வதற்கு ஆதாரங்களை திரட்டும் நடவடிக்கையில் ஐநாவும் அதற்கான பலமான கோரிக்கைகளில் எமது தரப்பும் ஈடுபட்டு வருகிறோம். அப்படியான சர்வதேச நீதிப் பொறிமுறைக்கு ஆதாரங்களைத் திரட்டுவது சம்பந்தமாக அரசின் நல்லிணக்க வெளிப்பாடுதான் எம்மக்களுக்கு நலன் தரும் பிரதான அம்சமாகும். அதைவிடுத்து அதற்குத் தீர்வாக தாங்கள் உள்ளக விசாரணைகளை ஆரம்பிக்கிறோம் என்று அரசு உறுதி மொழி வழங்கியிருப்பது காணாமல் ஆக்கப்பட்டவர்களுகான நீதியை இல்லாமல் ஆக்குகின்ற செயலாகும். அதற்கான சர்வதேச, ஐநா மற்றும் எமது முயற்சிகளை நீர்த்துப்போக வைக்கும் நடவடிக்கையாகும்.

சர்வதேச நீதிப் பொறிமுறைக்கு முன் இலங்கை அரசை பாரப்படுத்த வேண்டும் என்று நாங்கள் பலமான கோரிக்கைகளை சர்வதேசத்திற்கு முன்வைத்து கொண்டு அரசின் உள்ளக விசாரணை என்ற பொறிக்குள் அகப்பட்டுக் கொள்ள முடியாது.

இரண்டாவதாக அரசியல் கைதிகள் விடுதலை சம்பந்தமாக நீதி அமைச்சரை கொண்ட குழு ஒன்றை அமைத்து கைதிகள் விடுதலை சம்பந்தமாக சட்ட விடயங்களை பரிசீலிப்பதாக அரசு உறுதிமொழி வழங்கியிருக்கிறது. இதே நீதியமைச்சர் இந்நாட்டில் அரசியல் கைதிகள் இல்லை என்று ஊடகங்களிலும் பாராளுமன்றத்திலும் உரையாற்றி தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியவர். இவ்விடயம் சட்டரீதியான முடிவை கடந்து அரசியல் ரீதியாக எட்டப்படும் முடிவே அவசியம். ஜனாதிபதியின் அதிகாரத்தின் கீழ் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட அரசியல் கைதிகள் மாத்திரமல்ல ஆதாரமின்றி தடுத்து வைக்கப்பட்டு இருப்பவர்களும், அண்மையில் அரசியல் காரணங்களுக்காக , கைதுசெய்யப்பட்ட, நூற்றுக்கணக்கான குற்றங்கள் ஏதும் இழைக்காத குற்றங்கள் சாட்டப்படாமல் தடுத்து வைத்திருப்பவர்களையும் விடுதலை செய்ய முடியும்.

இந்தச் சூழ்நிலையில் விடுதலைக்கான நல்லிணக்க அறிவிப்பை மேற்கொள்ள அரசு தயாரா இல்லை. எமது தரப்பிலும் ஒருவரை நீதியமைச்சரோடு இணைத்து தங்கள் தவறுக்கு எமது தரப்பையும் பங்காளிகள் ஆக்க முனைகிறார்கள்.

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை என்பது நீதியின் அடிப்படையில் இதுவரை காலமும் முடியாத விடயமாகவே உள்ளது. பொது மன்னிப்பின் அடிப்படையில் அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் விடுதலை செய்வதே நல்லிணக்க நடவடிக்கையாக கருத முடியும். உதாரணமாக குற்றங்கள் யுத்த குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றில் ஈடுபட்ட அரசுக்கு தேவையான பலர் ஜனாதிபதியின் தன்னிச்சையான முடிவிலையே விடுவிக்கப்பட்டதை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

மூன்றாவதாக காணி அபகரிப்பு, குடிப்பரம்பல் சிதைப்பு ஆகிவற்றை தடுத்து நிறுத்துதல் சம்பந்தமான கோரிக்கைக்கு அரசு நழுவல் போக்கில் பதில் அளித்துள்ளது. தங்களுக்கு அதைப்பற்றி தெரியாதென்றும் அப்படி ஏதும் நடந்தால் தற்காலிகமாக நிறுத்துவதாகவும் கூறியிருக்கிறார்கள். காணி அபகரிப்பு சம்பந்தமாக உரிய ஆதாரங்கள் பல்வேறு தமிழர் தரப்பினராலும் திரட்டப்பட்டு இருந்த நிலையில் அவை சமர்ப்பிக்கப்பட்டு இருக்கவில்லை என்பதை அவதானிக்கிறோம். பாதுகாப்பு அமைச்சினால் மாத்திரமல்லாமல் பல்வேறு திணைக்களங்கள், பொறிமுறைகளின் ஊடாக பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணி கையகப்படுத்தப்பட்டு இருக்கிறது. பிரதான பங்காற்றும் தொல்லியல் ஆணைக்குழுவை உடனடியாகக் கலைப்பது என்பது உட்பட பல முக்கிய விடயங்கள் தவிர்க்கப் பட்டுள்ளன. இதுவரைகாலமும் கையகப்படுத்தப்பட்ட காணிகளின் விடுவிப்பு சம்பந்தமாக எதுவும் பிரஸ்தாபிக்க பட்டிருக்கவில்லை.

கடந்த செப்டெம்பர் மாதம் 2021 ஐநா உயர்ஸ்தானிகருக்கு 5 தமிழ் தேசியக் கட்சிகள் ஒருமித்து அனுப்பிய கடிதத்தில் மிகக்குறுகிய 6 மாத காலத்துக்குள் நடைபெற்ற காணி அபகரிப்புக்களை ஆதாரத்தோடு சமர்ப்பித்து இருந்தோம். அவை இவ்வருட பெப்ரவரி மாத ஐநா உயர்ஸ்தானிகரால் பிரதான விடயமாக அறிக்கையில் சுட்டிக்காட்டபட்டுள்ளது. காணி அபகரிப்பு சம்பந்தமாக கடந்த மனித உரிமைப் பேரவையில் பிரித்தானியா மற்றும் அமெரிக்காவிற்கான வதிவிடப் பிரதிநிதிகள் தமது அக்கறையை தெரிவித்திருந்தார்கள். சர்வதேசத்தின் அவதானத்திற்கு கொண்டுவரப்பட்டு இருக்கும் இவ்விடயங்களை அரசு திசைதிருப்புவதாக அச்சம் கொள்கிறோம். அதிகாரப் பகிர்வின் மூலமே இதை தடுத்து நிறுத்த முடியும் என்பதில் நாம் மாறாத நிலைப்பாட்டில் உள்ளோம்.

நான்காவதாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் பொது நிதியத்தை ஏற்படுத்தி வடக்கு கிழக்கின் அபிவிருத்திக்காக புலம்பெயர் உறவுகளின் நிதியை பெற்றுக் கொள்ளும் வழிமுறை என்பது ஆட்டைப் பிடித்து ஓநாயின் குகைக்குள் விட்ட கதையாகி விடும். மத்திய அரசு தனது எண்ணப்படியே அந்த நிதியை பயன்படுத்தும். அதிகாரப் பகிர்வின் ஊடாக ஏற்படுத்தப்படும் கட்டமைப்பின் கீழ் உருவாக்கப்படும் பொது நிதியம் தான் தமிழ் தேசியத்திற்கான தற்சார்பு பொருளாதாரத்தை கட்டி வளர்ப்பதற்கு உதவும். மேலும் அதிகாரப்பகிர்வை கோரி நிற்கும் தமிழினம் அபிவிருத்திக்கான நிதியத்தை மத்திய அரசாங்கத்திடம் கையளிப்பது எமது கோரிக்கைக்கு நேர் எதிரானது என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வே எமது நிலைப்பாடாகும். ஏற்கனவே அரசியல் யாப்பில் இருக்கும் விடயங்களை முற்றுமுழுதாக நடைமுறைப்படுத்தும் நல்லிணக்க கோரிக்கையை அரசாங்கத் தரப்பு புதிதாக வெளிவரவிருக்கும் அரசியல் யாப்பு நிபுணர் குழுவின் அறிக்கையுடன் பிணைப்பது ஆபத்தானதாகும்.

புதிய அரசியல் யாப்புக்கான நிபுணர் குழுவின் பரிந்துரையுடன் ஏற்கனவே அரசியல் யாப்பில் உள்ள விடயங்களை பிணைப்பது என்பது எமது சமஷ்டி முறைையிலான கோரிக்கையை இல்லாதொழிப்பதாகவே அமையும். ஏற்கனவே அரசியல் யாப்பில் இருக்கின்ற, நாம் தீர்வாக ஏற்றுக்கொள்ளாத விடயங்களை, புதிய அரசியல் யாப்பில் எமது அரசியல் தீர்வாகத் திணிக்கும் சூழ்ச்சியாக அமைந்துவிடும்.

நிபுணர் குழுவின் புதிய அரசியல் யாப்பை நிறைவேற்ற பாராளுமன்ற பலத்துடனோ அல்லது மக்கள் ஆதரவுடனோ அரசாங்கம் இல்லை. இந்த நிலையில் ஏற்கனவே அரசியல் யாப்பில் உள்ள விடயங்களை முற்றுமுழுதாக அரசாங்கம் நிறைவேற்றுவதுதான் தமிழ்மக்கள் எதிர்கொண்டிருக்கும், நாம் மேலே குறிப்பிட்ட, காணி மற்றும் அபிவிருத்தி விடயங்களில் ஓரளவேனும் நிவாரணமாக அமையும். இது தீர்வுக்கான அரசின் நல்லிணக்க நடவடிக்கையாக அமையவேண்டுமே தவிர தீர்வாக ஏற்க முடியாது.

இறுதியில் ஆக்கபூர்வமான பேச்சுக்கான நல்லிணக்க கோரிக்கைகளே இறுதியில் பேச்சுவார்த்தையாக மாறியிருக்கும் துர்ப்பாக்கிய சூழல் கவலையளிக்கிறது. இதனாலேயே நல்லிணக்க கோரிக்கையாக சில விடயங்களை அடையாளப்படுத்த படுத்தி, அவற்றை அரசாங்க தரப்பிற்கு அறிவித்து , அவை நிறைவேற்றப் பட்ட பின்னர் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதே எமது இனம்சார் நலன்களைப் பேணும் என எமது அங்கத்துவ கட்சிகளை கோரியிருந்தோம்.

கடந்த காலங்களில், தாம் எதிர்கொள்ளும் சர்வதேச மற்றும் உள்ளக நெருக்கடிகளில் இருந்து தப்புவதற்காக பேரினவாத அரசுகள் எம்மை பயன்படுத்தி வந்த வரலாறுகளையும் கருத்தில்கொண்டு, எமது கடந்தகால அனுபவங்களின் அடிப்படையிலும் சந்தர்ப்பங்களை சரியான முறையிலும் பக்குவமாகவும் எமது இனம் சார்ந்து கையாள வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.

எமது இனம் சார்ந்த இந்நிலைப்பாட்டிற்கு நமது அங்கத்துவ கட்சிகள், தமிழ் தேசியப் பரப்பில் செயலாற்றும் அனைத்து அரசியல் கட்சிகள், ஆர்வலர்கள், ஆய்வாளர்கள், சமூக அமைப்புகள், ஊடகங்கள், புலம்பெயர் அமைப்புகள், தமிழ் மக்கள் ஆகியோரின் ஆதரவினை கோருகிறோம்.

கு சுரேந்திரன்
ஊடகப் பேச்சாளர்
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் -ரெலோ
தமிழ் தேசியக் கூட்டமைப்பு

Posted in Uncategorized

சர்வதேசத்தை ஏமாற்ற முயற்சிக்கின்றது இலங்கை அரசாங்கம் : மனித உரிமைகள் கண்காணிப்பகம் விசனம்

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் நிகழ்த்தப்படும் மீறல்களை உடனடியாக முடிவிற்குக்கொண்டுவருமாறு சர்வதேச சமூகத்தினால் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டுவந்த நிலையில், கடந்த வாரம் பாராளுமன்றத்தில் மேலோட்டமான திருத்தங்களை நிறைவேற்றியதன் ஊடாக அனைவரையும் ஏமாற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் விசனம் வெளியிட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் மிகமோசமான சரத்துக்கள் தொடர்பில் அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள திருத்தங்களில் அவதானம் செலுத்தப்படவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்களும் ஐக்கிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முன்மொழியப்பட்ட அந்தத் திருத்தங்களை உடனடியாக நிறைவேற்றவேண்டும் என்பதற்காக, மனித உரிமைகள் அமைப்புக்களின் ஆலோசனைகளுக்கு இடமளிக்கக்கூடியவாறான உபகுழு ஆராய்வை அரசாங்கம் தவறவிட்டுள்ளது.

அதன்விளைவாக அச்சட்டத்தை சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு அமைவாக மாற்றியமைக்க்ககூடியவாறான முக்கிய சந்தர்ப்பம் நழுவவிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் கடந்த நான்கு வருடகாலமாக நபர்களைத் தன்னிச்சையாகத் தடுத்துவைப்பதஙற்கும் சித்திரவதைகளுக்கு உட்படுத்துவதற்கும் சிறுபான்மையினத்தவர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளை இலக்குவைப்பதற்கும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பயன்படுத்திவந்திருக்கின்றது.

தற்போது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பினும்கூட, எவ்வித ஆதாரங்களையும் சமர்ப்பிக்காமல் நபர்களைப் பலவருடங்களுக்குத் தன்னிச்சையாகத் தடுத்துவைப்பதற்கு அச்சட்டம் இடமளிப்பதுடன் பிணை வழங்கலுக்கான வாய்ப்பையும் இல்லாமல்செய்கின்றது.

அத்தோடு சித்திரவதைகளிலிருந்து பாதுகாப்புப்பெறுவதற்கு ஏதுவான அர்த்தமுள்ள திருத்தங்கள் இதில் உள்ளடக்கப்படவில்லை.

தற்போது அத்தியாவசியப்பொருட்களுக்கான தட்டுப்பாட்டிற்கும் பணவீக்கத்திற்கும் வழிவகுத்திருக்கக்கூடிய கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் முறையற்ற பொருளாதார நிர்வாகத்திற்கு எதிராகப் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இப்போது இடம்பெற்றுவரும் மீறல்கள் தொடர்பில் பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாகியிருக்கக்கூடிய அரசாங்கம், சர்வதேசத்திடமிருந்து நிதியுதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக மனித உரிமைகள் விவகாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதுபோன்று காண்பிக்க முயற்சிக்கின்றது.

இலங்கைவாழ் மக்கள் உணவு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களின் தட்டுப்பாட்டிற்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், அவர்களுக்கு சர்வதேச சமூகத்தின் உதவி தேவைப்படுகின்றது.

இருப்பினும் அரசாங்கம் தமது வெளிநாட்டு பங்காளிகள் நியாயமான மனித உரிமைசார் மறுசீரமைப்புக்களையும், மீறல்களை முடிவிற்குக்கொண்டுவந்து நீதியை நிலைநாட்டுவதற்கான அர்த்தமுள்ள நடவடிக்கைகளையும் எதிர்பார்க்கின்றார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும் என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

அரசாங்கத்திற்கு எதிராக வீதிக்கிறங்க தயாராகும் முருந்தெட்டுவே ஆனந்த தேரர்!

அரசாங்கம் தவறுகளை திருத்திக்கொண்டு மக்களாணைக்கு மதிப்பளித்து செயற்படாவிடின் நாமும் அரசாங்கத்திற்கு எதிராக வீதிக்கிறங்க நேரிடும் என அபயராம விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

அரசாங்கம் தவறுகளை திருத்திக்கொண்டு மக்களாணைக்கு மதிப்பளித்து செயற்படாவிடின் நாமும் அரசாங்கத்திற்கு எதிராக வீதிக்கிறங்க நேரிடும் என அபயராம விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

அபயராம விகாரையில் சனிக்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,சிறந்த நோக்கத்திற்காக ஆட்சிமாற்றத்தில் முன்னின்று செயற்பட்டோம். அரசாங்கத்தை விமர்சிக்காதவர்கள் உள்ளவர் வீட்டில் இருந்து ஒரு குவளை தண்ணீர் பெற்றுக்கொள்வது தற்போது ஆச்சரியமாகவுள்ளது அந்தளவிற்கு முழு நாட்டு மக்களும் அரசாங்கத்தை கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மீது நாட்டு மக்கள் முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளார்கள். நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண பிரதமர் உரிய கவனம் செலுத்த வேண்டும். நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ மீது மக்கள் மத்தியில் நல்ல நிலைப்பாடு கிடையாது.

அவரை 6 மாத காலத்திற்கு அமைச்சு பதவியில் இருந்து விலக்கி வைக்குமாறு ஏற்கெனவே வலியுறுத்தினோம். ஒன்று அவரை பதவி நீக்க வேண்டும் அல்லது அவருக்கு பிறிதொரு அமைச்சு பதவியினை வழங்க வேண்டும்.

நாடு எதிர்க்கொண்டுள்ள நெருக்கடியான நிலைமை குறித்து எதிர்வரும் 31ஆம் திகதி அபயராம விகாரையில் சகல மகாசங்கத்தினரையும் ஒன்றினைத்து விசேட ஆலோசனை கூட்டத்தை நடத்தவுள்ளோம்.

மகாசங்கத்தினரும் அரசாங்கத்தின் செயற்பாடு குறித்து அதிருப்தியடைந்துள்ளார்கள்.

31ஆம் திகதி எமது அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து பல விடயங்களை பகிரங்கப்படுத்துவோம்.நாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு சிறந்த தீர்மானங்களை முன்னெடுப்போம் என்றார்.

யாழ் – இந்திய கலாசார மையத்தை மெய்நிகர் ஊடாக பிரதமர் மோடி திறந்து வைப்பார் ?

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தலைமையிலான உயர்மட்ட குழுவினர் நாளை திங்கட்கிழமை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

அதேபோன்று இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலர் (கிழக்கு) சௌரப் குமார் தலைமையிலான மற்றுமொரு சிறப்பு குழு இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பிற்கு வருகை தரவுள்ளதாக டெல்லி தகவல் மூலங்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் குறித்து பரவலாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் இந்த உயர் மட்ட குழுவினரின் கொழும்பு விஜயம் அமைந்துள்ளன.

இந்த விஜயத்தின் போது முக்கிய விடயமாக யாழ் – இந்திய கலாச்சார மையத்தினை திறந்து வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது குறித்த உத்தியோகப்பூர்வமான இறுதி அறிவிப்பை டெல்லி இன்று வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

5 ஆவது பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார கூட்டுறவிற்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பு (பிம்ஸ்டெக்) மாநாடு இவ்வாரம் கொழும்பில் இடம்பெறவுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலர்(கிழக்கு) சௌரப் குமார் தலைமையிலான குழுவினர் வருகை தரவுள்ளனர்.

அதேபோன்று மற்றுமொரு சிறப்பு விமானத்தில் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தலைமையிலான உயர்மட்ட குழுவும் விஜயம் மேற்கொள்கின்றன.

குறிப்பாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை சந்தித்து கலந்துரையாட உள்ளார். அதே போன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட அரசாங்கத்தின் உயர் மட்டத்தினரை சந்தித்து கலந்துரையாட உள்ளதுடன் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்டவர்களையும் சந்தித்து கலந்துரையாட உள்ளார். அதே போன்று செவ்வாய்க்கிழமை பிம்ஸ்டெக் மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.

மறுப்புறம் யாழ் – இந்திய கலாச்சார மையத்தை திறந்து வைப்பதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏனெனில் இந்த மையத்தை பொறுத்த வரையில் டெல்லியின் மிக முக்கிய திட்டங்களில் ஒன்றாகும். இரு தரப்பு கலாசார இராஜதந்திர உறவுகளை வலுப்பத்துவதில் யாழ்.

இந்திய கலாச்சார மையம் முக்கிய பங்கு வகுகிக்கும் என்பதாலேயே பிரதமர் நரேந்திர மோடியின் விசேட திட்டமாக இது முன்னெடுக்கப்பட்டது. அதே போன்று இலங்கையுடனான ஏனைய துறைசார் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவதிலும் யாழ். இந்திய மையம் ஒரு மைல்கல்லாக அமையும் என கருதப்படுகிறது.

2015 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பிரதமர் நரேந்தி மோடியின் யாழ்ப்பாண விஜயத்தின் போது இந்த கலாசார மையம் குறித்து அறிவிக்கப்பட்டது.

1.6 பில்லியன் இந்திய நிதியுதவியின் கீழ் 2016 ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில் பல்வேறு காரணிகளின் அடிப்படையில் திறப்பு விழாவிற்கான திகதி ஒத்திவைக்கப்பட்டு கொண்டே வந்தது.

குறிப்பாக யாழ் – இந்திய கலாசார நிர்வாகம் தொடர்பில் காணப்பட்ட நெருக்கடிகளே தாமதத்திற்கு முக்கிய காரணமாகியது. இராணுவத்தின் பராமரிப்பின் கீழ் யாழ் – இந்திய கலாசார மையத்தை முன்னெடுக்க இலங்கை தரப்பு கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் அதனை டெல்லி விரும்பவில்லை.

மாறாக மாகாண சபை அல்லது மக்கள் மயப்படுத்தப்பட்ட கட்டமைப்பின் கீழ் இந்த கலாசார மையத்தின் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவே டெல்லி தொடர்ந்தும் வலியுறுத்தி வந்தது.

சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாக காணப்பட்ட இந்த பிரச்சினைக்கு தற்போது சுமூகமான தீர்வு எட்டப்பட்டுள்ளது. எனவே இனியும் தாமதிக்காது யாழ் – இந்திய கலாசார மையத்தின் செயற்பாடுகளை ஆரம்பிக்க டெல்லி தீர்மானித்துள்ளது.

பெரும்பாலும் நாளை திங்கட்கிழமை எளிமையான முறையில் இந்த திறப்பு விழா அமையப்பெறும் இதன் போது பிரதமர் நரேந்திர மோடி மெய்நிகர் ஊடாக கலந்துக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.