அரசியற் தீர்வு குறித்து பேசவா ஜனாதிபதி அழைக்கின்றார்? –ரெலோ தலைவர் செல்வம் எம்.பி.கேள்வி

ஜனாதிபதியிடம் இருந்து சாதகமான சமிஞ்சை கிடைக்காத வரையில் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளப் போவதில்லை என தமிழ் ஈழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது.

கட்சியின் மட்டக்களப்பு அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் இதனை தெரிவித்தார்.

ஜனாதிபதி முதலில் இந்த நாட்டில் ஒரு இனப்பிரச்சினை இருக்கின்றது என்பதை ஒப்புக்கொண்டு வெளிப்படையாக கூறினால் மாத்திரமே பேசசுவார்த்தைக்கு செல்வோம் என அவர் கூறினார்.

மேலும் கட்சியின் நிலைப்பாடு குறித்து பங்காளிக் கட்சிகளிடம் தெரிவித்துள்ளதாகவும் அவர்களும் இதற்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் செல்வம் அடைக்கலநாதன் கேட்டுக்கொண்டார்.

யாழ்ப்பாணத்தில் புத்தர் சிலை நிறுவுகின்ற செயற்பாடு நேற்றும் நடைபெற்ற நிலையில் இந்த அரசாங்கம் இக்கட்டான நிலைமையில் இருக்கின்ற சந்தர்ப்பத்திலே அவர்களை காப்பாற்றும் செயற்பாட்டில் ஈடுபடக் கூடாது என்றும் குறிப்பிட்டார்.

மேலும் தமிழர்களுக்காக குரல் கொடுக்கின்ற நாடுகளினுடைய ஒட்டுமொத்த அழுத்தத்தைக் குறைப்பதற்காக தொடர்ந்து நாங்கள் பேசத் தயாராக இருக்கின்றோம் என்ற வாய்ப்பினை ஜனாதிபதி பெறப்போகின்றார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு அரசியற் தீர்வுக்காத்தான் அழைக்கின்றார் என்று நாம் கற்பனையில் இருந்தாலும் எதற்காக பேச்சுவார்த்தைக்கு அழைக்கின்றார் என்ற விடயம் ஜனாதிபதி செயலக நிகழ்ச்சி நிரலில் கூடச் சொல்லப்படவில்லை என சுட்டிக்காட்டினார்.

1988ன் பின் தொடர்ச்சியாகப் பாராளுமன்றப் பிரதிநித்துவத்தை வைத்திருக்கும் ஒரே ஒரு தமிழ்க் கட்சி ரெலோ மாத்திரம் தான்- செயலாளர் நாயகம் – கோ.கருணாகரம் ஜனா பா.உ

1988ல் அரசியற் கட்சியாகப் பதியப்பட்டதில் இருந்து சந்தித்த ஒவ்வொரு பாராளுமன்றத் தேர்தல்களிலும் பாராளுமன்றப் பிரதிநித்துவத்தை வைத்திருக்கும் ஒரே ஒரு தமிழ்க் கட்சியென்றால் அது தமிழ் ஈழ விடுதலை இயக்கம் மாத்திரம் தான் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும்,தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

2009ற்கு முன்பு இருந்த கூட்டமைப்பு வேறு, 2009ற்கு பிற்பாடு இருக்கும் கூட்டமைப்பு வேறு. 2009ற்குப் பின்னர் தனிக் கட்சி, தனிமனித கௌரவம் என்ற அடிப்படையில் இந்தக் கூட்டமைப்பு பிளவுபட்டிருக்கின்றது. 2010 தேர்தலுடன் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கூட்டமைப்பில் இருந்து வெளியேறியது. 2015 பாராளுமன்றத் தேர்தலுடன் ஈ.பி.ஆர்.எல்.எப் வெளியேறியது. வடமாகாண முதலமைச்சராக இருந்த விக்னேஸ்வரன் அவர்கள் முதலமைச்சராகக் கொண்டு வந்தவர்களே அவருக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்ததால் அவர் கூட்டமைப்பில் இருந்து வெளியேறினார்.

இன்று மூன்று கட்சிகள் தான் கூட்டமைப்புக்குள் இருக்கின்றன. அதிலும் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து தமிழ் ஈழ விடுதலை இயக்கம் மாத்திரம் தான் கூட்டமைப்பிற்குள் இருக்கின்றது. தமிழரசுக் கட்சி கூட 2001 கூட்டமைப்பு தொடங்கப்பட்டாலும் தமிழர் விடுதலைக் கூட்டணியாகவே அதில் அங்கம் வகித்தது. 2004லே ஆனந்த சங்கரி அவர்கள் கூட்டமைப்பின் அப்போதைய சின்னமான உதயசூரியனை கொண்டு சென்றமையால் சுமார் 34 வருடங்களுக்குப் பின்னர் தமிழரசுக் கட்சியின் சின்னமான வீட்டுச் சின்னம் தூசு தட்டி எடுக்கப்பட்டதுதான் வரலாறு.

எனவே தமிழ் ஈழ விடுதலை இயக்கம் கூட்டமைப்பு தொடங்கியதில் இருந்து இன்று வரைக்கும் இருப்பது மாத்திரமல்லாமல் 1988ம் ஆண்டு அரசியற் கட்சியாகப் பதியப்பட்டதில் இருந்து சந்தித்த ஒவ்வொரு பாராளுமன்றத் தேர்தல்களிலும் பாராளுமன்றப் பிரதிநித்துவத்தை வைத்திருக்கும் ஒரே ஒரு தமிழ்க் கட்சியென்றால் அது தமிழீழ விடுதலை இயக்கம் மாத்திரம் தான். 2015ம் ஆண்டு இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்திருந்த நாங்கள் தற்போது மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளோம்.

அண்மையில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் கட்சிகளை ஒருங்கிணைப்பது தொடர்பில் பல கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டன. அதில் சக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்கள் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ரெலோ தாங்கள் ஒரு பெரியகட்சி என்று மக்கள் மத்தியில் தங்கள் பெயரைக் கொண்டு செல்வதற்காக இந்த வேலைத்திட்டத்தைச் செய்வதாகக் கூறியிருந்தார்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் பெரிய கட்சிதான் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திற்கு 3 பராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். தமிழரசுக் கட்சிக்கு வெறுமனே ஐந்து உறுப்பினர்கள் தான் இருக்கின்றார்கள். ஆறாவது உறுப்பினரான தேசியப் பட்டியல் உறுப்பினரை எம்முடன் கலந்தாலோசிக்காமல் அவர்களே பெற்றுக் கொண்டார்கள். அந்த தேசியப் பட்டியல் எமக்குக் கிடைத்திருந்தால் நாங்கள் 4 பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றிருப்போம்.

கூட்டமைப்பைச் சிதைப்பதற்கு அல்லது அதிலிருந்து தாங்கள் வெளியேறுவதற்கு கூட்டமைப்பினை மேலும் பலவீனமாக்குவதற்கு பலர் முயற்சி செய்கின்றார்கள். பல உதாசீனங்கள் கடந்த காலங்களில் நடைபெற்றதன் நிமித்தமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2009ற்குப் பின்னர் இந்தளவிற்கு பின்னடவைச் சந்தித்திருக்கின்றது.

ஏனெனில் 2004லே 24 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த நாங்கள் அதன் பின்னர் படிப்படியாக 18, 16 என்றாகி இன்று தேசியப் பட்டியலுடன் சேர்த்து 10ற்கு வந்து நிற்கின்றோம். இந்த நிலைமை தொடருமாக இருந்தால் எதிர்காலத்தில் எவ்வாறு எங்களது மக்கள் பிரதிநிதித்துவம் இருக்கும் என்பதை உணர்ந்து இந்தக் கட்சிகள் செயற்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

Posted in Uncategorized

காணாமலாக்கப்பட்டவர்களின் தாய்மாரை தாக்குவதற்கா பிரதமர் யாழ் வந்தார்? – தவிசாளர் நிரோஷ் கேள்வி

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஜனநாயன ரீதியில் நீதி கேட்டு போராட முயற்சித்த போது, அவர்களை வழி மறித்து பஸ்களில் இருந்து இறங்கவிடாது அச்சுறுத்தி தாக்கிய சம்பவங்கள் இலங்கையின் ஆட்சியாளர்களிடத்தில் தொடரும் ஜனநாயக மறுப்பை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகின்றது என ரெலோ யாழ் மாவட்ட தலைவரும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பிரதமரின் வருகையின் போது நீதி கேட்டு ஜனநாயக வழியில் போராடுவதற்காக வேவ்வேறு மாவட்டங்களிலும் இருந்து யாழ்ப்பாணம் வருகை தந்தனர். மட்டுவில் திறந்த வர்த்தக சந்தைப்பகுதி பிரதமர் மகிந்த ராஜபக்சவினால் திறந்து வைக்கப்படும் போது, அமைதியாக கவனயீர்ப்பினை மேற்கொள்வதற்கு காணமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முயற்சித்தனர். இந் நிலையில் காணமலாக்கப்பட்ட தாய்மார் வருகை தந்த பேருந்து பொலிசாரினாலும் விசேட அதிரடிப்படையினராலும் வழிமறிக்கப்பட்டு கதவுகள் பூட்டப்பட்டு பேருந்தின் சாரதியின் ஆவணங்களும் பறிக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டது. இதற்கு மேலாக நீதிக்காகப் போராடும் அந்த வயோதிபத் தாய்மார் மிகவும் கொடுரமாகத் தாக்கப்பட்டுள்ளனர். தடியடிப்பிரயோகம,; கட்டைகளாலும் அடிக்கப்பட்டு தூஷண வார்த்தைகளாலும் நிந்திக்கப்பட்டனர்.

இவ்வாறாக காட்டுமிராண்டித்தனம் நடைபெறுவதையடுத்து மக்கள் பிரதிநிதி என்ற வகையில் நான் உடனடியாக அங்கு சென்றபோது அப்போது பிரதமர் மகிந்த ராஜபக்ச நிகழ்வை முடித்துக்கொண்டு வெளியேறியிருந்தார். அவரின் வெளியேற்றத்தையடுத்து பொலிசாராலும் இராணுவத்தினராலும் அடித்து குத்தி அடக்கிவைத்திருந்த மக்கள் விடுவிக்கப்பட்டு அவர்கள் குறித்த வர்த்தக கட்டிடத்தினை நோக்கி வந்தார்கள். தாக்குதல்களின் காரணமாக சாறி சட்டைகள் கிழிந்த நிலையில் அந்த தாய்மார் வருவதைக் கண்டேன். இதனைத் தொடர்ந்து நாமும் அவர்களுடன் இனைந்து ஜனநாய வழியில் போராடினோம். தாய்மார்கள் தாக்கப்படும் போது அரசாங்கத்தின் பிரதிநிதிகள் பிரதமருடன் மகிழ்ச்சியைக் கொண்டிக்கொண்டிருந்தனர்.

அடிப்படையில் ஜனாதிபதி உலகத்தினை ஏமாற்றுவதற்காக இங்கே தான் ஜனநாயக உரிமைகளுக்கு மட்டுப்பாடு விதிக்கவில்லை என ஐ.நாவில் உத்தரவாதம் கொடுத்திருக்கின்றார். ஆனால் வலிந்து காணாமலாக்கப்பட்டுதலுக்கு முழுமையான காரணகர்த்தாவும் இன்றும் பொறுப்புச் சொல்லவேண்டிய பதவியில் உள்ளவருமான பிரதமர் மகிந்த ராஜபக்ச நீதிக்காக போராடும் அப்பாவித்தாய்மார்களை அவர்களது அமைதியான போராட்டத்தை கூட ஏற்க முடியாது ஆயுதம் ஏந்திய படைகளைக் கொண்டு உத்தரவிட்டு அடக்கியிருக்கின்றார். தனக்கு தொந்தரவு என்பதற்காக அந்தத் தாய்மார்களை கொன்றொழிக்கவும் இந்த அரசாங்கம் பின்னிற்காது என்பது வெளிப்படையானது.
அடிப்படையில் இலங்கையில் மனித உரிமைகள் ரீதியில் எதாவது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேசம் மடையர் ஆகிவிடக்கூடாது. இங்கே நியாயம் கேட்கும் சக்திகளை ஆயுத மற்றும் இதர அச்சுறுத்தல் வழிமுறைகள் ஊடாக அடக்கியாளவே அரசாங்கம் முயற்சிக்கின்றது என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் இலங்கை விஜயம் இறுதியாகவில்லை : ஜெய்சங்கர் தலைமையிலான உயர்மட்ட குழு வருவது உறுதி

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் குறித்து பரவலாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் அந்த விஜயமாமனது இதுவரையில் உறுதிப்படுத்தப்பட வில்லை என தெரிவித்த டெல்லி செய்தி மூலங்கள் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் செயலர் ஹர்ஷ வர்தன் ஷரிங்லா தலைமையிலான உயர்மட்ட குழு எதிர்வரும் 29 ஆம் திகதி செவ்வாய்க்கிமை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளதாக குறிப்பிட்டன.

குறித்த திகதியில் ஓரிரு தினங்கள் முன்பின் ஆனாலும் விஜயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தி மூலங்கள் மேலும் குறிப்பிட்டன.

வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் செயலர் ஹர்ஷ வர்தன் ஷரிங்லா தலைமையிலான உயர்மட்ட குழுவின் கொழும்பு வருகை பிரதமர் மோடியின் விஜயத்திற்கான முன்னேற்பாடுகளை மையப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் 5 ஆவது பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார கூட்டுறவிற்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பு (பிம்ஸ்டெக்) மாநாடு மார்ச் 30 ஆம் திகதி இலங்கையில் இடம்பெறவுள்ளது.

இந்த மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக இந்திய உட்பட பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கொழும்பிற்கு வருகை தரவுள்ளனர்.

இதற்கான ஏற்பாடுகளை இலங்கை முன்னெடுத்துள்ளதுடன் உத்தியோகப்பூர்வ அழைப்பிதழ்களையும் கையளித்துள்ளது.

குறிப்பாக அண்மையில் இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ்.ஜெயசங்கருடன் இடம்பெற்ற சந்திப்பின் போது பிம்ஸ்டெக் மாநாடு குறித்தும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பங்குப்பற்றல் தொடர்பில் கலந்துரையாடி உத்தியோகப்பூர்வமாக அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளான பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மியன்மார், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு மாநாட்டில் கலந்துக்கொள்ள உள்ளனர்.

இந்நிலையில் பலர் நேரடியாக சமூகமளிக்க உள்ளதுடன் மியன்மார் உட்பட ஓரிரு நாடுகள் மெய்நிகர் தொழில்நுட்பம் ஊடாக கலந்துக்கொள்ள உள்ளன. இந்தியாவை பொறுத்த வரையில் பிம்ஸ்டெக் மாநாடு முக்கியமானதொன்றாகும்.

எனவே உயர்மட்ட பிரதிநிதிகள் பலர் கலந்துக்கொள்வார்கள். பிரதமர் நரேந்திர மோடியின் விஜயம் இறுதியாக உறுதிசெய்யப்பட உள்ளது.

அதே போன்று பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் உறுதிப்படுத்தப்பட்டால் இரு பிரதான விடயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

அதாவது பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பித்தல் மற்றும் யாழ் – இந்திய கலாசார மையத்தின் திறப்பு விழா என்பனவாகும்.

இந்த இரு விடயத்திலுமே இலங்கை சாதமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. உதாரணமாக யாழ் – இந்திய கலாச்சார மையத்தை பொறுத்த வரையில் டெல்லியின் மிக முக்கிய திட்டங்களில் ஒன்றாகும்.

இரு தரப்பு கலாசார இராஜதந்திர உறவுகளை வலுப்பத்துவதில் யாழ். இந்திய கலாச்சார மையம் முக்கிய பங்கு வகுகிக்கும்.

அதே போன்று இலங்கையுடனான ஏனைய துறைசார் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவதிலும் இந்த மையம் ஒரு மைல்கல்லாக அமையும் என கருதப்படுகிறது.

எனவே தான் அனைத்து விடயங்களிலும் இருதரப்பு புரிதலுடன் செயற்படுவதில் டெல்லி மிகுந்த பொறுமையுடனும் ஆர்வத்துடனும் செயற்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பிரதமர் நரேந்தி மோடியின் யாழ்ப்பாண விஜயத்தின் போது இந்த கலாசார மையம் குறித்து அறிவிக்கப்பட்டது.

1.6 பில்லியன் இந்திய நிதியுதவியின் கீழ் 2016 ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில் பல்வேறு காரணிகளின் அடிப்படையில் திறப்பு விழாவிற்கான திகதி ஒத்திவைக்கப்பட்டு கொண்டே வந்தது.

அதாவது கலாச்சார மையத்தின் நிர்வாகம் மற்றும் பராமரித்தல் போன்ற விடயங்கள் குறித்து காணப்பட்ட இருதரப்பு கருத்து வேறுபாடுகள் இதற்கு முக்கிய காரணமாகியது.

ஆனால் தற்போது சுமூகமான நிலை ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே எனவே பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் சாத்தியப்பட்டால் யாழ் – இந்திய கலாசார மையம் திறந்து வைக்கப்படும்.

அதே போன்று பலாலி விமான நிலையம். 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி யாழ்ப்பாணம் (பலாலி) சர்வதேச விமான நிலையம் இந்திய அனுசரணையில் உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏர் இந்தியாவின் அலையன்ஸ் ஏர் விமானம் சென்னையிலிருந்து அந்நாட்டின் விமான சேவை அதிகாரிகளுடன் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக பலாலியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் அமையப்பெற வேண்டும் என்பதே இந்தியாவின் ஆர்வமாக உள்ளது.

ஆனால் தற்போது பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகள் கொவிட் உட்பட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் முடங்கி போயுள்ளன.

எனவே விமான நிலையத்தின் செயற்பாடுகளை துரிதமாக ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதும் டெல்லியின் பணிப்பாக உள்ளது.

எனவே பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்தில் இந்த இரு விடயங்கள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

ரெலோவின் மட்டக்களப்பு மாவட்ட செயற்குழுக் கூட்டம்

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ)வின் மட்டக்களப்பு மாவட்ட செயற்குழு உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் இன்றைய தினம் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மாவட்டப் பணிமனையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தலைமையில் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், கட்சியின் உபதலைவரும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதித் தவிசாளருமான இந்திரகுமார் பிரசன்னா, கட்சியின் ஊடகப் பேச்சாரளர் சுரேன் குருசுவாமி, மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன் உள்ளிட்ட ரெலோ கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாநகரசபை உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) தொடர்பில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட வேண்டிய தீர்மானங்கள், எதிர்கால நடவடிக்கைகள், புனரமைப்பு விடயங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

இந்தியாவை அடுத்து சீனாவிடம் கையேந்தியது இலங்கை அரசாங்கம்!

அந்நியச் செலாவணி நெருக்கடியை அடுத்து, கடன் கொடுப்பனவுகளை ஒத்திவைத்தல் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான கடன் உள்ளிட்ட மேலதிக நிதி உதவியை இலங்கை சீனாவிடம் கோரியுள்ளது.

இந்த ஆண்டு சீன வங்கிகளுக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேலதிகமான கடனை இலங்கை அரசாங்கம் செலுத்த வேண்டியுள்ளது.

இந்நிலையில் தற்போதைய நெருக்கடியிலிருந்து விடுபடும் வரை இந்த கொடுப்பனவுகளை தாமதமாக செலுத்த சீனாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, உள்ளூர் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை வாங்குவதற்கான கடனையும் இலங்கை அரசாங்கம் சீனாவிடம் கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை மேலதிக நிதியுதவி கேட்டுள்ளது என்றும் இரு தரப்பும் அதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் சீனத் தூதரகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக இந்தியாவிடமிருந்து 1 பில்லியன் டொலர் கடனை இலங்கை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நாளை (20) முதல் மூடப்படுகிறது

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நாளை (20) இரவு முதல் மீண்டும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

சுத்திகரிப்பு செயற்பாடுகளுக்கு போதுமான மசகு எண்ணெய் இல்லாததால், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் பேச்சாளர் ஒருவர் குறிபபிட்டார்.

பல நிறுவனங்களில் மசகு எண்ணெய்க்கு முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், அந்த மசகு எண்ணெய் கிடைக்கும் திகதி குறித்து இதுவரை அறிவிக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், முற்பதிவு செய்யப்பட்ட மசகு எண்ணைய் கிடைத்தவுடன், சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்தியாவிலிருந்து வருகை தரும் 20,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய கப்பல் நாளை நாட்டை வந்தடையவுள்ளது.

Posted in Uncategorized

“ஜனாதிபதியை விமர்சித்த தொகுப்பாளினி இடைநீக்கம் ” – சிவில் உரிமைகளைக் கட்டுப்படுத்தும் அரசின் முயற்சியா?

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் காரணமாக அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் நாட்டு மக்கள் வெளிப்படையாக விமர்வித்து வருகின்றனர்.

அந்த வகையில் மக்களின் பரிதவிப்புகளை பிரதிபலித்து தனது தனிப்பட்ட முகநூல் பக்கத்தில் பதிவிட்ட காரணத்திற்காக இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை சேர்ந்த பெண் அறிவிப்பாளர் ஒரு வர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளமை சிவில் உரிமைகளைக் கட்டுப்படுத்தும் அரசின் செயல் என கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.
ரூபவாஹினியில் பல்வேறு சிங்கள நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய பிரபலமான அறிவிப்பாளினி பரமி நிலேப்தா ரணசிங்ஹவே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

தன்னைப் பணி நீக்கியமை தொடர்பாக பரமி நிலேப்தா ரணசிங்ஹ அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில், ‘ஒரு குடிமகன் என்ற ரீதியில் எனது பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரம் கேள்விக்குறியாகும் போது சமூகப் பொறுப்பாக எனது நலனையும் துயரத்தையும் பற்றி விசாரிப்பவர்களுக்காக நான் இந்தக் குறிப்பை இடுகிறேன்.

நான் பெரும்பான்மையான இலங்கையர்களின் வாழ்வு குறித்து உணர்திறன் கொண்டிருப்பதால் இன்று முதல் தொலைக்காட்சி வளாகம் எனக்கு தடை செய்யப்பட்ட இடமாக மாறியுள்ளது. இது ஒரு நிறுத்தம் இல்லை ஒரு திருப்பம் என தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் தொலைக்காட்சி தொகுப்பாளரின் இடைநிறுத்தம் தொடர்பில் ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

இதேவேளை சுதந்திர ஊடகவியலாளர் ராகுல் சமந்தவை கடமையை செய்ய விடாது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா அழுத்தம் பிரயோகித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக சுதந்திர ஊடக இயக்கம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பரமி நிலேப்தி, தனது முகநூல் பதிவுகள் மூலம் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் விமர்சிப்பதால் தொலைக்காட்சி சேவையில் பணியை தொடர வேண்டாம் என ஜனாதிபதி அலுவலகம் தமக்கு அறிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பரமி நிலேப்னா ரணசிங்கவை பணி இடைநிறுத்தம் செய்ய இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் எடுத்த தீர்மானத்தை சுதந்திர ஊடக இயக்கம் கண்டித்துள்ளது.

ஊடகவியலாளர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார்கள் என்ற வலுவான சமிக்ஞையை இந்த சம்பவங்கள் வெளிகொனர்வதாக ஊடக இயக்கம் குறிப்பிட்டுள்ளது.

கருத்து சுதந்திரம், தொலைக்காட்சி தொகுப்பாளரின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல். அத்தோடு, இலங்கையில் ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் அப்பட்டமான முயற்சியென சுதந்திர ஊடக இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஊடக சுதந்திரத்தை அடக்கியாள ஊடக உரிமையாளர்களுக்கோ அல்லது அரசியல் அதிகாரிகளுக்கோ இடமளிக்க முடியாது என சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

உக்ரைனிற்கு ஆதரவாக இலங்கை குரல்கொடுக்க வேண்டும்- உலக நாடுகளின் தூதுவர்கள் கூட்டாக வேண்டுகோள்

உக்ரைனிற்கு ஆதரவாக இலங்கை குரல் கொடுக்க வேண்டும் என மேற்குலக நாடுகளின் தூதுவர்களும் அமெரிக்கா ஜப்பான் ஆகிய நாடுகளின் தூதுவர்களும் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அறிக்கையொன்றில் அவர்கள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
இலங்கையில் உள்ள தூதரகங்களின் தலைவர்கள் என்ற அடிப்படையில் இலங்கை அரசாங்கம் எங்களுடன் இணைந்து உக்ரைனிற்கும் சர்வதேச சட்டத்திற்கும் ஐநா பிரகடனத்திற்கும் வாய்மொழி மூல ஆதரவை வழங்கவேண்டும் என தூதுவர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் தங்கள் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது.
இறைமையுள்ள ஜனநாயக நாடான உக்ரைன் மீதான ரஸ்யாவின் தூண்டப்படாத நியாயமற்ற சட்டவிரோத படையெடுப்பை நாங்கள் மிகவும் கடுமையாக கண்டிக்கின்றோம்.

இந்த மூர்க்கத்தனமான தாக்குதல்ஐநாசாசனம் உட்பட சர்வதேச சட்டத்தை முற்றிலும் மீறும் செயலாகும். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் மனிதாபிமான பேரழிவை ஏற்படுத்தியுள்ளதை உலகம் அச்சத்துடன் பார்த்தவண்ணமுள்ளளது.
ரஸ்யா பொதுமக்கள் வாழும் பகுதிகள் கட்டமைப்புகள் மீதான தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதன் காரணமாக பொதுமக்களிற்கு பெரும் இழப்புகள் ஏற்பட்டுள்ளன.

பெண்கள்குழந்தைகள் முதியர்வர்கள் உட்பட மில்லியன் கணக்காண மக்கள் அயல்நாடுகளிற்கு அகதிகளாக தப்பிவெளியேவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பெண்கள்குழந்தைகள் முதியர்வர்கள் உட்பட மில்லியன் கணக்காண மக்கள் அயல்நாடுகளிற்கு அகதிகளாக தப்பிவெளியேவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இதன் காரணமாக கடந்த 70 வருடங்களில் மிகவேகமாக அகதிகள் நிலைமை ஏற்பட்டுள்ளது.

ரஸ்யாவின் படையெடுப்பு என்பது அமைதியான நாட்டின் மீதான தூண்டப்படாத நியாயமற்ற நடவடிக்கையாகும். உலகில் சமாதானம் அமைதி என்பவற்றிற்கான அடித்தளமாக உள்ள இறைமை மற்றும் ஆள்புல ஒருமைப்பாட்டிற்கு ரஷ்யா அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கியநாடுகள் சாசனம் கடந்த காலங்களில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது, ஆனால் அது அமைதி பாதுகாப்பு அபிவிருத்தி நீதி சர்வதேச சட்டங்கள் மற்றும் மனித உரிமைகளின் பக்கம் உறுதியாக நி;ன்றுள்ளது. சர்வதேச சமூகம் உக்ரைனிலும் அனைத்து மனித குலத்திற்கும் இந்த விழுமியங்கள் உறுதிப்படுத்தப்படுவதை தனது அதிகாரத்தை பயன்படுத்தி உறுதி செய்யவேண்டும் என ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கைக்கு நாங்கள் முழுமையான ஆதரவை வெளியிடுகின்றோம்.

உக்ரைனிற்கான மிகப்பெரும் ஆதரவு காரணமாக ரஸ்யா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. உக்ரைன்மீதான ரஸ்ய அரசாங்கத்தின் தாக்குதலை கண்டிப்பதில் நாங்கள் ஐக்கியப்பட்டுள்ளோம். மார்ச் இரண்டாம் திகதி ஐக்கியநாடுகள் பொதுச்சபையில் 141 நாடுகள் ரஸ்யாவை கண்டிக்கும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன.

இது ரஸ்யா சர்வதேச சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதை வெளிப்படுத்தியுள்ளது. ரஸ்யாவிற்கு கடும் தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக உக்ரைனிற்குஆதரவளிக்கும் நாடுகள் முன்னர் ஒருபோதும் இடம்பெறாதவகையில் ரஸ்யாவிற்கு எதிராக இலக்குவைக்கப்பட்ட தடைகளை விதித்துள்ளன.

உக்ரைனிற்கு எதிரான தாக்குதல்களை தொடரும் ரஸ்யாவின் திறனை குறைப்பதும்,உக்ரைனிற்கு எதிரான விரோதப்போக்கிலிருந்து ரஸ்யாவை பின்வாங்க செய்வதற்கான அழுத்தத்தை கொடுப்பதுமே இதன் நோக்கம்.

வங்கிகள் முதல் எண்ணெய் நிறுவனங்கள் கால்பந்தாட்ட கழகங்கள் வரை புட்டினின் நடவடிக்கைகளிற்கு விளைவுகள் இருக்கும் என்பதையும் அவரது அரசாங்கம் இனிமேல் சர்வதேச சமூகத்தின் ஒரு பகுதியாக விளங்க முடியாது என்பதையும் தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

உக்ரைனின் சகாக்களும் நண்பர்களும் குறிப்பிடத்தக்க அளவு மனிதாபிமான மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கியுள்ளன.பல நாடுகள் உக்ரைனிலிருந்து தப்பிவருபவர்களிற்கு தங்கள் எல்லைகளைதிறந்துள்ளன. தனது படையெடுப்பை நியாயப்படுத்தும்விதத்தில் ரஸ்யா பொய்யான கதைகளை வெளியிடுகின்றது.

ரஷ்யா அதன் படையெடுப்பை நியாயப்படுத்தும் ஒரு போலியான முயற்சியில் உக்ரைன் அரசாங்கத்திற்கு எதிரான போலியான பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது.
அதன் ஜனநாயக அயல்நாடுகளை அழிக்க நினைக்கும் ரஸ்யாவின் பிரச்சாரம் எந்த நியாயமும் இல்லாதது.

நேட்டோ ஆத்திமூட்டுகின்றது என ரஸ்யா பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றது.நேட்டோ எப்போதும் ஒரு தற்பாதுகாப்பு கூட்டணியாகவே இருந்துவந்துள்ளது,அதனால் ரஸ்யாவிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை.
நாங்கள் இலங்கை உக்ரைனிற்கும் சர்வதேச அமைதிமற்றும் பாதுகாப்பிற்கும் ஆதரவளிக்கவேண்டும் என வேண்டுகோள்விடுக்கின்றோம்.

இலங்கையில்உள்ள தூதரகங்களின் தலைவர்கள் என்ற அடிப்படையில் இலங்கைஅரசாங்கம்உக்ரைனிற்கும் ஐநா சாசனம் சர்வதேச சட்டத்திற்குமான குரல்களுடன் இலங்கை இணைந்துகொள்ளவேண்டும் என நாங்கள் வலியுறுத்திக்கேட்டுக்கொள்கின்றோம்.

ரஸ்யா தனது மோதல்களை உடனடியாக நிறுத்தவேண்டும் என வேண்டுகோள்விடுப்பதில்இலங்கை எங்களுடன் இணைந்துகொள்ளவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.உக்ரைனின் இறைமை மீண்டும் நிலைநாட்டப்படுவதை உறுதிசெய்வதற்காக நாங்கள் உலகெங்கிலும் உள்ள எங்கள் சகாக்கள் நண்பர்களுடன் இணைந்து பாடுபடுவோம்.

எதிர்ப்பு போராட்டத்தையடுத்து கந்தரோடை விகாரை வழிபாட்டை இரத்துச் செய்தார் மகிந்த

பிரதமர் மஹிந்த ராஜபக்ச யாழ்ப்பாணம் – கந்தரோடை விகாரைக்கு வழிபடுவதற்காக வரவிருந்த தனது திட்டத்தை கைவிட்டு உள்ளாரென தகவல் வெளியாகியுள்ளது.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்றைய தினம் மத ஸ்தலங்களுக்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்நிலையில் அதன் ஒரு அங்கமாக கந்தரோடை விகாரைக்கும் சென்று வழிபட தீர்மானித்திருந்தார்.

கந்தரோடை விகாரையில் பிரதமர் அடிக்கல் நாட்டுவதாக செய்தி வெளியான நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்களும் தமிழ் தேசிய மக்கள் முன்ணணியும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீடிரென கந்தரோடை விகாரைக்கான தனது விஜயத்தை ரத்து செய்தார்.

இதனையடுத்து அப்பகுதியில் பிரதமரது பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்த பொலிஸாரும் இராணுவத்தினரும் அங்கிருந்து விலகிச்சென்றமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized