மியன்மார் அரிசி இறக்குமதி ஒப்பந்தத்தில் இலங்கைக்கு 15 மில்லியன் டொலர்கள் இழப்பு!

மியன்மார் மற்ற நாடுகளுக்கு அரிசி விற்கும் விலையை விட இலங்கைக்கு 305 மில்லியனுக்கும் அதிக விலைக்கு அரசியியை விற்பனைசெய்துள்ளதாக ‘அருணா’ நாளிதழ் தெரிவித்துள்ளது.

மியன்மாரிடமிருந்து ஒரு மெட்ரிக் தொன் அரிசியை இலங்கை 440 டொலர் மற்றும் 450 டொலர்களுக்கு இடைப்பட்ட விலையில் கொள்வனவு செய்யும் என இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.ஆனால் சமீபத்தில் மியான்மர் மற்ற நாடுகளுக்கு ஒரு மெட்ரிக் டன் அரிசியை 340 டொலர் முதல் 350 டொலர்களுக்கு விற்பனை செய்துள்ளதாக மியான்மரின் முன்னணி நாளிதழான Global New Light Of Myanmar செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி, மியன்மாரிலிருந்து இலங்கை கொள்வனவு செய்த ஒரு மெட்ரிக் தொன் அரிசிக்கான மேலதிக கொடுப்பனவு 100 டொலர்கள் ஆகும். இது இலங்கை மதிப்பில் 20,300 ரூபாய்க்கு அதிகம் ஆகும்.இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கையின் பிரகாரம் இலங்கை இறக்குமதி செய்யவுள்ள அரிசியின் அளவு 150,000 மெற்றிக் தொன் என அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் ஒரு டன் ஒன்றுக்கு 450 அமெரிக்க டொலர்களை கொள்வனவு செய்யும் அதேவேளை ஏனைய நாடுகள் அதனை ஒரு டன் 350 டொலர்களுக்கு கொள்வனவு செய்வதாகவும், அரிசியின் தரத்தை அவர்கள் பொருட்படுத்துவதில்லை எனவும் மியான்மர் அரிசி வர்த்தக சங்கத்தின் செயலாளர் அண்மையில் உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

மேலும் இலங்கையுடனான அரிசி ஒப்பந்தம் மிகவும் இலாபகரமானதாக உள்ளது என்றும் செய்தித்தாள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, அரசாங்கத்துடன் தொடர்புடைய ஒரு அதிகார பலம்மிக்க நபர் அரிசி தொன் ஒன்றுக்கு 100 டொலர் தரகு பணமாக வசூலிப்பதாகவும் இந்த இற்குமதிக்கு மட்டும் இரண்டு வருடங்களில் 30 மில்லியன் டாலர் தரகு பணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக முன்னாள் இலங்கை அபிவிருத்தி நிர்வாகத்தின் (SLIDA) மூத்த ஆலோசகர் ஐ.எஸ். ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, நாட்டுக்கு 15 மில்லியன் டொலர்களை பெற்றுக்கொடுக்கும் மியன்மார் அரிசி ஒப்பந்தம் சந்தேகத்திற்குரியது எனவும் குறிப்பிட்டார்.

இராஜாங்கத் திணைக்களத்தின் மூத்த இராஜதந்திரியை கொழும்பிற்கு அனுப்புகிறது அமெரிக்கா

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை செயலர் விக்டோரியா நுலாண்ட் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார். இவரது விஜயமானது மார்ச் மாதம் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி ஜோ பைடனின் ஆட்சி ஏற்பின் பின்னர் இலங்கை குறித்த அமெரிக்காவின் பார்வை மற்றும் அணுகுமுறை என்பவற்றில் மாற்றம் ஏற்பட்டுள்ளன.

இதனடிப்படையிலேயே அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் மூத்த இராஜதந்திரியான விக்டோரியா நுலாண்ட் கொழும்பு வருகிறார்.

இவரது விஜயத்தின் போது ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அரச தரப்பினரையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட எதிர்க்கட்சியினரையும் சந்தித்து கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வொஷிங்டன் தளமாகக் கொண்ட உலகளாவிய மூலோபாய ஆலோசனை மற்றும் வணிக இராஜதந்திர நிறுவனத்தின் மூத்த ஆலோசகரா பணியாற்றியுள்ளார்.

32 ஆண்டுகளாக அமெரிக்க இராஜதந்திர தூதவராக பணியாற்றியுள்ள விக்டோரியா நுலாண்ட் , ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் செயலாளர் ஜோன் கெரியின் கீழ் 2013 – 2017 வரை ஐரோப்பிய மற்றும் யூரேசிய விவகாரங்களுக்கான உதவி செயலாளராக பணியாற்றினார்.

செயலாளர் ஹிலாரி கிளிண்டனின் பதவிக்காலத்தில் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளராகவும், 2005 – 2008 ஆம் ஆண்டு ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் இரண்டாவது பதவிக் காலத்தில் நேட்டோவுக்கான அமெரிக்க தூதராகவும் செயற்பட்டுள்ளார்.

மேலும் 2010 – 2011 வரை ஐரோப்பாவில் மரபு ஆயுதக் கட்டுப்பாடு தொடர்பான ஒப்பந்தத்தில் சிறப்புத் தூதுவராகவும் தலைமைப் பேச்சுவார்த்தையாளராகவும் இருந்துள்ளார்.

2003 – 2005 வரை துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் நுலாண்ட் பணியாற்றியுள்ளார். அத்துடன் அமெரிக்க இராஜாங்க தினைக்களத்தின் பல்வேறு திட்டங்களில் ரஷ்யா, சீனா மற்றும் மங்கோலியாவில் உள்ளிட்ட நாடுகளில் பணியாற்றியுள்ளார்.

நீண்ட நாட்களுக்கு பின்னர் இவ்வாறானதொரு மூத்த இராஜதந்திர அதிகாரியை அமெரிக்கா இலங்கைக்கு அனுப்புகின்றது.

ஜனாதிபதி ஜோ பைடனின் முக்கிய செய்தியுடனேயே விக்டோரியா நுலாண்ட் இலங்கை வருவதாக கொழும்பு இராஜதந்திர தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இராஜாங்க தினைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை செயலர் விக்டோரியா நுலாண்ட் வருகை இரு நாட்டு ஒத்துழைப்புகளை மேலும் விரிவுப்படுத்தும் என இவரது விஜயம் குறித்து அரசாங்கம் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மகா சிவராத்திரி விரதம் இன்று(01)

இந்துக்கள் சிவபெருமானுக்காக அனுஷ்டிக்கும் மகா சிவராத்திரி விரதம் இன்றாகும்(01).

வருடாந்தம் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதியில் மகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இந்த நாளின் சிறப்பு குறித்து கந்தபுராணம் மற்றும் அக்னி புராணம் உள்ளிட்ட பல நூல்களில் குறிப்பிப்பட்டுள்ளது.

சிவராத்திரி அன்று சிவனை வழிபட்டால் வாழ்வில் துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம் என்பது ஐதீகம்.

சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன் தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப்போகும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும்.

24 வருடங்கள் சிவராத்திரி விரதத்தை அனுஷ்டித்தால் அவர்கள் சிவகதி அடைவார்கள் என்பதுடன், அவர்களின் மூவேழு தலைமுறைகளும் நற்கதி பெற்று முத்தியை அடையலாம் எனவும் புராணங்கள் கூறுகின்றன.

Posted in Uncategorized

இலங்கைக் கடற்படைக்கு பயிற்சிகளை வழங்க திருகோணமலைக்கு வந்தது இந்திய ‘நிரீக்ஷக்’ கப்பல்

இலங்கைக் கடற்படையினருக்கு ‘கலப்பு வாயு’ பயிற்சிகளை வழங்குவதற்காக இந்தியக்கடற்படைக்குச் சொந்தமான ‘நிரீக்ஷக்’ கப்பல் நேற்று திங்கட்கிழமை திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்தது.

டைவிங் பயிற்சி வழங்கலுக்கு ஏதுவான இந்தக் கப்பல், கடற்படையின் பாரம்பரியத்திற்கு அமைவாக இலங்கைக் கடற்படையினரால் வரவேற்கப்பட்டது.

இலங்கையை வந்தடைந்ததைத் தொடர்ந்து இந்தியக்கப்பலின் கட்டளை அதிகாரி, இலங்கையின் கிழக்குக் கடற்பிராந்தியத் தளபதி ரியர் அட்மிரல் பி.டி.எஸ்.டயஸை சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்தியக்கப்பல் இலங்கையில் தரித்துநிற்கவுள்ள எதிர்வரும் 10 நாட்களில் வழங்கத்தக்க டைவிங் பயிற்சிகள் தொடர்பில் இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது.

இந்தியக்கடற்படைக்குச் சொந்தமான மேற்படி ‘நிரீக்ஷக்’ கப்பல், ஆறுபேருக்கு ஏதுவான கப்பல் தளங்கள் இரண்டையும் மூவருக்கான டைவிங் வசதி ஒன்றையும் கொண்டமைந்திருக்கின்றது. அதுமாத்திரமன்றி வசதியான மீட்பு வசதிகளையும் இக்கப்பல் உள்ளடக்கியிருக்கின்றது.

இலங்கைக் கடற்படையினருக்கு இதனைப்போன்ற பயிற்சிகளை வழங்குவதற்காக இக்கப்பல் ஏற்கனவே கடந்த 2019 ஆம் அண்டு திருகோணமலைத் துறைமுகத்திற்கு வருகைதந்திருந்தது.

இவ்வாறு இலங்கைக் கடற்படையுடனான தொடர்புகளைத் தொடர்ந்து பேணுவது இந்தியாவின் ‘அயல்நாட்டிற்கு முதலிடம்’ கொள்கையின் ஓரங்கமாகும் என்று இலங்கையிலுள்ள இந்தியத்தூதரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீதி வேண்டிப் போராடும் பேராயர் மல்கம் ரஞ்சித் பாப்பரசருடன் நேரில் சந்திப்பு

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கப் போராடும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை திருத்தந்தை பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.

இந்தச் சந்திப்பு வத்திக்கான் நகரின் புனித பீட்டர் சதுக்கத்தில் இன்று (28) நடைபெற்றது.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, திருத்தந்தை பரிசுத்த பாப்பரசருக்கு இதன்போது தெளிவுபடுத்தினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

கூட்டமைப்பு பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக பிரேரணை கொண்டு வந்தால் ஆதரிப்பேன் – திஸ்ஸ விதாரண

பயங்கரவாத தடைச்சட்டம் தற்போதைய காலக்கட்டத்தில் அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுவதை அவதானிக்க முடிகிறது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக இரத்து செய்ய தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற மட்டத்தில் யோசனையினை கொண்டு வந்தால் அதற்கு ஆதரவு வழங்குவேன் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரன குறிப்பிட்டார்.

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

யுத்தக்காலத்தில் பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டதன் தாக்கம் இன்றுவரை தொடர்கிறது.யுத்தம் நிறைவடைந்து 12 வருடங்கள் நிறைவடைந்த நிலைமையிலும் பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் இருப்பது முறையற்றதாகும்.

பயங்கரவாத தடைச்சட்டம் தற்போதைய காலக்கட்டத்தில் அரசியல் நோக்கங்களுக்காக செயற்படுத்தப்படுவதை அவதானிக்க முடிகிறது.

பயங்கரவாத தடைச்சட்டம் ஊடாக கைது செய்யப்பட்டு நீண்டநாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டவர்கள் பலர் கடந்த காலங்களில் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.

பயங்கரவாத தடைச்சட்டம் மனித உரிமை மீறல் குற்றங்களுக்கு சார்பாக அமையும் என்ற காரணத்தினார் சர்வதேச நாடுகள் தொடர்ந்து பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்யுமாறு வலியுறுத்துகின்றன.

உலகில் ஜனநாயகத்தை முன்னிலைப்படுத்தி செயற்படும் நாடுகளி;ல் பயங்கரவாத தடைச்சட்டம் போன்ற சட்டங்கள் நடைமுறையில் இல்லை.

இளம் தலைமுறையினர் மத்தியில் தீவிரவாத கொள்கைகள் ஏதும் கிடையாது என்பதை நன்கு விளங்கிக்கொள்ள முடிகிறது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக இரத்து செய்ய தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற மட்டத்தில் கொண்டு வரும் அனைத்து யோசனைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்க தயார் என்றார்.

Posted in Uncategorized

பயங்கரவாத தடைச்சட்டம் எந்தவித காரணங்களும் கூறாமல் அகற்றப்படவேண்டும் -கோவிந்தன் கருணாகரம்

‘தமிழ் பேசும் மக்களை பொறுத்தமட்டில் இந்த பயங்கரவாத தடைச்சட்டம் எந்தவித காரணங்களும் கூறாமல் அகற்றப்படவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்’ என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்க (ரெலோ)த்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்த்துள்ளார்.

தமிழரசு கட்சி வடக்கு கிழக்கு வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் ‘‘பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்து நாடு முழுவதும் முன்னெடுத்துவரும் கையெழுத்துப்போராட்ட ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

பயங்கரவாத தடைச்சட்டமானது தமிழர்களை அடக்கி ஒடுக்குவதற்காக கொண்டுவரப்பட்ட ஒரு சட்டமாகும். 1979ஆம் ஆண்டு பாராளுமன்றத்திலே தற்காலிகமாக பயங்கரவாத தடைச்சட்டமானது கொண்டுவரப்பட்டாலும் 1977ஆம் ஆண்டு தேர்தலிலே தமிழீழத்திற்கான ஆணையைக் கேட்டு வென்று பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்; மக்கள் பிரதிநிதிகள்கூட இந்தச் சட்டத்தை எதிர்த்து வாக்களிக்கவில்லை என்ற விமர்சனம் தற்போதும் இருந்துகொண்டிருக்கின்றது.

அந்த வகையில் நாங்கள் இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டுமென்று போராடுவது இந்த நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டம் இருக்கக்கூடாது. சுதந்திரமடைந்த காலத்திலிருந்து தமிழ் மக்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக கணிக்கப்பட்டுக்கொண்டு வந்தார்கள்.

எமது தலைவர்கள் அகிம்சைப் போராட்டம் நடத்தி அடிஉதை பட்டார்கள். எமது இளைஞர்கள் வீறுகொண்டு எழுந்த நேரம் அவர்களை அடக்கி ஒடுக்கலாம் என்ற நோக்கத்தில் கொண்வரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டமானது இன்றும் இந்த நாட்டிலே இருந்துகொண்டிருக்கின்றது.

ஒருகாலத்தில் தமிழ் மக்கள் மாத்திரம் தான் பயங்கரவாத தடைச்சட்டத்தினால் பாதிக்கப்பட்டுக்கொண்டிருந்தார்கள்.

ஆனால் கடந்த சில வருடங்களாக குறிப்பாக ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்பு பெரும்பாலான முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள். எமது நாட்டில் எண்ணிக்கையின் அடிப்படையில் சிறுபான்மையினராக இருக்கும் எம்மை அடக்கி ஒடுக்கும் ஒரு சட்டமாகவே நான் இதனை பார்க்கின்றேன்.

அந்த வகையில் இந்தச் சட்டமானது இந்த நாட்டின் அரசியலமைப்பிலிருந்து நீக்கப்பட வேண்டும். நாங்கள் மாத்திரமல்ல ஐரோப்பிய ஒன்றியம் ஏகமனதாக இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் அதாவது இன்னொரு இனத்தை அடக்கி ஒடுக்கும் சட்டமாக இது இருக்கக்கூடாது கண்டிப்பாக உத்தரவிட்டிருக்கின்றது என்றும் கூறலாம். ஏனென்றால் இலங்கைக்குக் கிடைக்கும் ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை நாங்கள் மீள்பரிசீலணை செய்வோம் என்று கூறியிருக்கின்றார்கள். ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை இல்லாமல் போனால் இலங்கையின் பொருளாதாரம் மிகமோசமான நிலைக்குச் செல்லும் என்பது இந்த அரசுக்குத் தெரியும்.

அந்த வகையில் இந்த அரசு பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றியமைப்பதற்காக அதாவது சிறுசிறு மாற்றங்களை கொண்டுவருவதற்காக முயற்சிகளை எடுத்துக்கொண்டிருக்கின்றது. தமிழ் பேசும் மக்களை பொறுத்தமட்டில் இந்த பயங்கரவாத தடைச்சட்டம் எந்தவித காரணங்களும் கூறாமல் அகற்றப்படவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்” என்றார்.

Posted in Uncategorized

ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத்தொடர் இன்று ஜெனஜவாவில் ஆரம்பம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது அமர்வு, இன்று ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது. இந்த அமர்வின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை விவகாரமும் உள்ளடங்கப்பட்டுள்ளதுடன், மார்ச் மாதம் 3ஆம் திகதி விவாதம் நடத்தப்படவுள்ளது.

இதன்போது, மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர், இலங்கை தொடர்பான அறிக்கையொன்றையும் சமர்ப்பிக்கவுள்ளார் .

2021 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட 46/1 தீர்மானத்தின் பிரகாரம், நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளுக்கான கௌரவம் உள்ளிட்டவை தொடர்பில் மனித உரிமைகள் பேரவையின் அவதானிப்புகள், பரிந்துரைகள் உள்ளிட்டவற்றின் முன்னேற்றம் தொடர்பில் அறிக்கையொன்றை விடுத்திருந்தார். அதற்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பதிலும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கையின் சார்பில், வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், நீதியமைச்சர் அலி சப்ரி, ஆகியோர் ஜெனீவாவுக்கு சென்றுள்ளனர். அதே நேரம் நாளை தினம் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் உரையாற்றவுள்ளார்.

கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற 46ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பாக 46/1 என்ற பிரேரணை நிறைவேற்றப்பட்டது. அதில் பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருந்தன என்பத குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

மைத்திரிபால சிறிசேனவை சிறைபிடிக்க முயற்சித்தால் சு.க. ஆதரவாளர்களை திரட்டி வீதிக்கு இறங்குவோம் – தயாசிறி ஜயசேகர

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை மறுசீரமைப்பதற்காக அவசியம் ஏற்படின் மத்திய குழுவின் ஏகமனதான தீர்மானத்துடன் அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கும் பின்வாங்கப் போவதில்லை எனத் தெரிவித்த சு.க. பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர , உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சிறைபிடிக்க முயற்சித்தால் அதற்கு எதிராக அனைத்து சு.க. ஆதரவாளர்களையும் ஒன்று திரட்டி வீதிக்கு இறங்கவும் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

பொலன்னறுவையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சுதந்திர கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தனித்து மாநாடுகளை நடத்துவதால் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளோம். எனினும் அந்த சவால்களைக் கண்டு நாம் அஞ்சப் போவதில்லை. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வெற்றிபெறச் செய்வதற்கு அர்ப்பணிப்புடன் பாடுபட்டோம்.

எனினும் தேர்தல் நிறைவடைந்த பின்னர் பாராளுமன்ற தேர்தலின் போது பொதுஜன பெரமுனவினர் எம்மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.

எவ்வாறிருப்பினும் பொலன்னறுவை மக்கள் ஒரு இலட்சத்து 11 ஆயிரத்திற்கும் அதிக வாக்குகளை முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கி அவரை மீண்டும் வெற்றிபெறச் செய்தனர்.

எனினும் அவர் எந்த பதவிகளையும் ஏற்காமல் கட்சியின் மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்.

2023 மார்ச் 23 ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தல் நிச்சயம் நடத்தப்பட வேண்டும்.

அவ்வாறில்லை எனில் செப்டெம்பர் முதல் தேர்தலுக்கான தினத்தை தீர்மானிக்கக் கூடிய அதிகாரம் தேர்தல் ஆணைக்குழு வசமாகும்.

அதற்கு முன்னர் ஜூனில் அரசாங்கம் தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்குமாயின் அதற்கும் சு.க. தயாராகவே இருக்கிறது.

எதிர்வரும் 5 ஆம் திகதி இது தொடர்பில் சு.க. தொகுதி அமைப்பாளர்கள் உள்ளிட்ட அனைவருடனும் கலந்துரையாடவுள்ளோம். அதற்கமை உத்தேச உள்ளூராட்சி தேர்தலில் சு.க. பாரிய கூட்டணியுடன் வெற்றிபெறும் என்று உறுதியளிக்கின்றேன்.

2015 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்திருக்க மாட்டார். அவர்களது தொகுதிகளுக்கு மில்லியன் கணக்கில் நிதி ஒதுக்கப்பட்டது.

ஆனால் அதிகளவான வாக்குககளை வழங்கி மக்கள் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக தெரிவு செய்தனர். எனவே அபிருத்திகளால் மக்கள் பலத்தை பெற்றுவிட முடியும் என்று எண்ண வேண்டாம்.

அதனை விட அரசியல் பலம் மேலானதாகும். நாட்டில் தற்போதுள்ள பிரச்சினைகளுக்கான தீர்வு காண்பதற்கு மாற்று வழியுடன் பயணிக்க வேண்டும். அதற்கான வேலைத்திட்டத்தையே நாம் தற்போது முன்னெடுத்துள்ளோம்.

2015 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியில் இருந்து கொண்டே அவருக்கான அதிகாரங்களை குறைத்துக் கொண்டார்.

எனினும் அதற்கு முன்னர் ஜனாதிபதிகளாக பதவி வகித்த சந்திரிகா குமாரதுங்கவோ அல்லது மஹிந்த ராஜபக்ஷவோ அதனை செய்யவில்லை.

நிறைவேற்றதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பதாகக் கூறியதை நிறைவேற்றிக் காட்டிய ஒரேயொரு தலைவர் மைத்திரிபால சிறிசேன மாத்திரமே.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் அவர் மீது போலியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. எனினும் தனக்கு அது தொடர்பில் முன்கூட்டியே எவ்வித தகவல்களும் வழங்கப்படவில்லை என்பதை அவர் கத்தோலிக்க தேவாலயத்தில் வைத்துக் கூறினார்.

மனசாட்சியின் பிரகாரமே அவர் அதனைக் கூறினார். எனவே போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவரை சிறைபிடிக்க முயற்சித்தால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆதரவாளர்கள் அனைவருடனும் வீதிக்கு இறங்கவும் தயாராகவே இருக்கின்றோம்.

எமது கட்சியின் தலைவருக்கு எதிரான சதியின் பின்னணியில் ஐக்கிய தேசிய கட்சியும் , ஐக்கிய மக்கள் சக்தியுமே உள்ளன, எனவே எம்மை மீண்டும் அவர்களுடன் இணைக்க எவருக்கும் உரிமை கிடையாது என்றார்.

இலங்கை அகதிகள் ​ஜேர்மனியின் 50 நகரங்களில் மனிதச் சங்கிலி போராட்டம்!

ஜேர்மனியில் உள்ள இலங்கைத் தமிழர்கள் சுமார் 50க்கும் மேற்பட்ட நகரங்களில் மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சம் கோரியுள்ள தமிழ் அகதிகளை நாடு கடத்துவதை நிறுத்துமாறு ஜேர்மன் அதிகாரிகளை வலியுறுத்தியும் இனப்படுகொலைக்கு நியாயம் கோரியும் இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

‘தமிழீழத்திற்கான மனித உரிமைகள்’ என்று எழுதப்பட்ட பதாதைகளை அவர்கள் ஏந்தி இருந்தனர்.

கடந்த ஆண்டு, ஜேர்மனி 50 க்கும் மேற்பட்ட தமிழ் அகதிகளை இலங்கைக்கு நாடுகடத்தியது.

ஜேர்மன் குடிவரவு அலுவலகங்களில் வழக்கமான நியமனங்களின் போது, ​​அகதிகள் அடிக்கடி கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவதற்கு முன்னர் காவலில் வைக்கப்பட்டுவர் என்று தெரிவிக்கப்படுகிறது.

“எங்கள் நினைவுச் சின்னங்கள் அழிக்கப்படுகின்றன, எங்கள் இரங்கல் குற்றமாக்கப்பட்டுள்ளன” மற்றும் ‘திட்டமிடப்பட்ட இனப்படுகொலை’, ‘நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன’, ‘கலாச்சாரங்கள் அழிக்கப்படுகின்றன’ போன்ற பதாதைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தி இருந்தனர்.

மார்ச் 2021 இல், ஜேர்மன் அதிகாரிகள் பாரிய சோதனைகளை நடத்தி நாடு முழுவதும் 100 தமிழ் அகதிகளை தடுத்து வைத்தனர்.

வீடுகளை சோதனையிட்டதுடன், புகலிடக் கோரிக்கையாளர்களை தங்களுடைய அனுமதியைப் புதுப்பிக்குமாறு அதிகாரிகள் அழைத்ததாகக் கூறப்படுகிறது, ஆனால் கட்டிடத்திற்கு வந்தவுடன், அவர்கள் காவல்துறை அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டனர்.

அவர்களின் தொலைபேசிகளைப் பறிமுதல் செய்தனர் மற்றும் அவர்களது உறவினர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுடன் தொடர்புகொள்வதைத் தடுத்தனர்.

கடந்த ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) இலங்கை தொடர்பான பிரேரணையை உருவாக்குவதிலும் இணை அனுசரணை வழங்குவதிலும் முக்கிய பங்கு வகித்த போதிலும் ஜேர்மனி நாடு கடத்தல்களை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.