நடமாடும் சேவை ஏமாற்று வேலை – ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன்

நடமாடும் சேவை ஏமாற்று வேலை: வவுனியாவில் இடம்பெற்றுவரும் காணிப் பிரச்சனை தொடர்பான நடமாடும் சேவையால் மக்கள் தீர்வினை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன் அதனை தீர்ப்பதற்கு அமைச்சரவை நேரடியாக கையாளும் வழிமுறையை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று (27) இடம்பெற்ற காணி தொடர்பான நடமாடும் சேவையில் கலந்து கொண்டுவிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தனர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

“இந்த நடமாடும் சேவை என்பது வரவேற்கத்தக்கவிடயம். ஆனால் எமது மக்கள் இந்த சேவையிலே நம்பிக்கை அற்றுப்போய் இருக்கின்றார்கள். தொடர்ச்சியாக அந்தந்த பகுதிகளின் பிரதேச செயலாளர்கள் மக்களுக்கு சொல்லும் பதிலையே இப்போதும் சொல்லப்போகின்றார்கள். எனவே மக்கள் இதில் தீர்வைப்பெற்று கொள்ள முடியும் என்பதில் வாய்ப்பே இல்லை.

பலவருடமாக தீராதுள்ள பிரச்சனைகளை தீர்க்கமுடியும் என்ற ஆர்வத்தோடு மக்கள் வந்துள்ள நிலையில், இந்த நடமாடும் சேவையினுடைய செயற்பாடு நல்லதாக இருக்கவில்லை என்பது எனது கருத்து. இந்த நடமாடும் சேவைகள் தொடர்ச்சியாக ஒரே தவறையே விட்டுக்கொண்டிருக்கின்றது. அதனை நிறுத்துவதென்றால் அமைச்சரவை ஒரு தீர்மானத்திற்கு வரவேண்டும். இந்தகாணி பிரச்சனையை நேரடியாக கையாளுகின்ற ஒரு வழிமுறையை அவர்கள் செயற்படுத்த வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

ஈழத் தமிழர்களுக்கு அதிகாரத்தை வழங்க, இந்தியா இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்! ராமதாஸ்!

ஈழத்தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்குமாறு இலங்கையிடம் இந்தியா கண்டிப்புடன் கூற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார். மேலும், ஈழத்தமிழர்களின் நலன்களைக் காக்கும் கடமை இந்தியாவுக்கு உண்டு எனவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

ஈழத்தமிழர்கள்!

ஈழத்தமிழர் இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டி வரும் ஐ.நா. மனித உரிமை ஆணையம், இது தொடர்பாக ஐநா மனித உரிமைகள் பேரவையில் கடந்த ஆண்டு மார்ச் 23-ம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்குப் பிறகு ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து புதிய அறிக்கை ஒன்றை நேற்று முன்நாள் வெளியிட்டிருக்கிறது.

இலங்கைப் போரின் போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் எதற்கும் தீர்வு கிடைக்காத நிலையில், இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் நிலைமை மோசமடைந்து இருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

போர்க்குற்றங்கள்!

போர்க்குற்றங்களை இழைத்தவர்களுக்கு முக்கியப் பதவிகள் வழங்கப்பட்டிருப்பதன் மூலம் அவர்கள் தமிழர்களுக்கு எதிரான குற்றங்களை மேலும், மேலும் செய்ய ஊக்குவிக்கப்படுகின்றனர்.

குடிமைப் பணிகள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் 31 அமைப்புகளை இலங்கை இராணுவம் தான் நிர்வகிக்கிறது. காவல் துறையின் பணிகளையும் இராணுவமே மேற்கொள்வதால் வடக்கு மாநிலத்தில் வாழும் தமிழ்ப் பெண்கள் கொடுமையான துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர்.

வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் புத்தமத பாரம்பரிய சின்னங்களைக் காப்பது, காடுகளை காப்பது என்ற பெயரில் தமிழர்களுக்கு சொந்தமான ஆயிரத்திற்கும் அதிக ஏக்கர் நிலங்கள் பறிக்கப்பட்டுள்ளன. 2021ஆம் ஆண்டு நவம்பர் வரை நிலம் சார்ந்து 45 மோதல்கள் நடைபெற்றுள்ளன. இந்து ஆலயங்களில் புத்தர் சிலை சட்டவிரோதமாக நிறுவப்படுகிறது.

அனைத்தும் அதிர்ச்சி!

தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்கின்றன. தமிழர்கள், இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்படுகின்றனர். மனித உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுகின்றனர் என்பன உள்ளிட்ட ஏராளமான குற்றச்சாட்டுகள் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. இவை அனைத்தும் அதிர்ச்சி அளிப்பவையாகும்.

ஐயமில்லை!

போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது தாங்களாகவே நடவடிக்கை எடுக்கப் போவதாக 2 ஆண்டுகளுக்கு முன் மனித உரிமைப் பேரவையில் வாக்குறுதி அளித்த இலங்கை, அதை நிறைவேற்றவில்லை. மாறாக, தமிழர்களை அச்சுறுத்தி அடிமைப்படுத்தும் பணிகளைத் தான் செய்து வருகிறது. தமிழர்களின் நிலங்களை பறித்து அவர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பது, அவர்களை அவர்களின் சொந்த பூமியிலிருந்து வெளியேற மறைமுகமாக அழுத்தமும், மிரட்டலும் விடுப்பது போன்ற செயல்களில் இலங்கை அரசு ஈடுபட்டு வருகிறது. பன்னாட்டு விதிகளின்படி இவையும் இனப்படுகொலைக்கு ஒப்பான செயல்கள் தான் என்பதில் ஐயமில்லை.

மன்னிக்க முடியாத குற்றங்கள்!

மன்னிக்க முடியாத அளவுக்கு போர்க்குற்றங்களை இழைத்த ஒரு நாடு, அது குறித்த குற்ற உணர்வே இல்லாமல் தொடர்ந்து இனவெறித் தாக்குதல்களை நடத்துவதை அனுமதிக்க முடியாது. அதிலும் குறிப்பாக உணவுக்கும், எரிபொருளுக்கும் வழி இல்லாமல் தவிக்கும் இலங்கைக்கு உதவிகளை வாரி வாரி வழங்கும் இந்திய அரசு, இலங்கை மீதான ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் குற்றச்சாட்டை வேடிக்கை பார்க்கக் கூடாது. இலங்கைக்கு எந்த எச்சரிக்கையும் விடுக்காமல், அதன் இனவெறித் தாக்குதல்களைத் தடுக்காமல் உதவிகளை மட்டும் வழங்குவது இலங்கையின் செயல்களுக்கு இந்தியா துணை போவதாகவே பார்க்கப்படும்.

தந்தை நாடு!

பொதுவான கடமைகளைக் கடந்து ஈழத்தமிழர்களின் தந்தை நாடு என்ற வகையில், ஈழத்தமிழர்களின் நலன்களைக் காக்கும் சிறப்புக் கடமையும் இந்தியாவுக்கு உண்டு. அதனால், ஈழத்தமிழர்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடக்கூடாது ஈழத்தமிழர்களுக்கு அரசியல் அதிகாரங்களை வழங்க வேண்டும் என்று இலங்கையிடம் இந்தியா கண்டிப்புடன் கூற வேண்டும். அதைத் தான் உலகத் தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஐ.நா.மனித உரிமை!

இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையரின் அறிக்கை வரும் மார்ச் 3ஆம் தேதி ஐ.நா. மனித உரிமை பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீது விவாதம் நடத்தப்படவுள்ளது.

இந்த விவாதத்தில் இந்திய அரசின் பிரதிநிதி கலந்து கொண்டு ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை வலியுறுத்த வேண்டும். ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவதையும், இலங்கை இனச் சிக்கலுக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணவும் தெற்காசிய சக்தி என்ற முறையில் இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்த்பட்டுள்ளது.

Posted in Uncategorized

ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளால் இலங்கைக்கு பாதிப்பு; தேயிலை ஏற்றுமதியிலும் தாக்கம் ஏற்படும் – நிதி ஆய்வாளர்கள்

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் ரஷ்யா மீது விதித்துள்ள தடைகளால் இலங்கை நேரடியாக பாதிக்கப் படும் என நிதி ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கையின் முன்னணி தேயிலை இறக்குமதி யாளர்களில் ஒன்றான ரஷ்யாவுடனான ஒப்பந்தங்களில் இது நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும்.

இதனால் தேயிலை ஏற்றுமதிக்கு பணம் கிடைப் பதில் சிக்கல் ஏற்படும் என்றும், ஐரோப் பிய நாடுகள் ரஷ்ய வங்கி அமைப்புடன் தனித்தனி யாக கொடுக்கல் வாங்கல் செய்தால் இலங்கைக்கு எதிர்மறையான அணுகுமுறையே ஏற்படும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

மேலும், அண்மைக் காலமாக இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் ரஷ்யா, உக்ரைன் மற்றும் ஏனைய நாடுகளில் இருந்து வந்துள்ளனர். அந்தத் தொகை அண்ணளவாக 30% ஆகும். யுத்த சூழ்நிலையால் எண்ணிக்கை குறைவது தவிர்க்க முடியாததாகி விடும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் உருவான அரசியல் நெருக்கடி!

எதிர்வரும் ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு மூன்று வருடங்கள் நிறைவு பெறுகின்ற போதிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நீதி நிலைநாட்டப்படுமா என்பதற்கான சாத்தியமே தென்படாத நிலையே காணப்படுவதாக “ரட்டே ரால” அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள குறித்த அமைப்பு, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான கலந்துரையாடல் மீண்டும் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது. அதற்கு சில காரணங்கள் ஏதுவாக அமைந்திருக்கின்றன. ஒரு விடயம் இந்த தினங்களில் பேராயர் மேற்கொண்ட வத்திக்கான் விஜயம். அடுத்ததாக ஒரே தடவையில் உயிர்த்த ஞாயிறு ஆணைக்குழுவின் அறிக்கைகள் அனைத்தையும் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி முன்வைக்க எடுத்த தீர்மானம்.

அதற்கு அடுத்ததாக முன்னாள் CID பணிப்பாளர் சானி தாக்கல் செய்த மனித உரிமை தொடர்பான வழக்கு. இக்காரணங்களால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விடயம் மேல் வந்துள்ளது. இந்த விடயங்கள் தொடர்பில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அடிப்படையில் அதனை பரிசீலனை செய்கின்றனர். எவ்வாறு இருந்த போதிலும் இந்த புதிய கருத்தினுள்ளே அரசியலும் காணப்படுகின்றது.

ரட்டே ராலவின் “ பேராயர் அரசாங்கத்தை கவிழ்ப்பாரா” என்ற ஆக்கத்தில் கத்தோலிக்க சபை எடுக்கக்கூடிய செயற்பாடுகள் தொடர்பில் ரட்டே ரால எடுத்துரைத்தார். தற்போது சிறப்பாக காணக்கூடிய ஒரு விடயம் ஒன்று உள்ளது. தற்போது கத்தோலிக்க சபை உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை இந்த அரசாங்கத்திடமிருந்து அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

அவர்கள் அதனை எதிர்பார்ப்பது ஒன்று சர்வதேசத்திடம் இல்லையென்றால் அடுத்ததாக நியமிக்கப்படும் அரசாங்கத்தில். எவ்வாறாயினும் இந்தப் பிரச்சினையை சர்வதேசத்திற்கு கொண்டு செல்வதற்கான ஆரம்ப நடவடிக்கையாக பேராயரின் வத்திக்கான் விஜயத்தை அறிமுகப்படுத்த முடியும். கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் பாப்பரசர் மற்றும் இன்னும் பல குழுக்களை அவர் சந்திக்கும் வகையில் கால அட்டவணையை தயாரித்தே சென்றுள்ளார். அதனிடையே ஐக்கிய அமெரிக்க குடியரசின் பேராயரும் உள்ளாராம்.

எவ்வாறு இருப்பினும் பேராயர் அவர்கள் தற்போது உள்ள நிலவரம் தொடர்பில் ஒரு breaf ஒன்றை ஜெனீவா மனித உரிமை மாநாட்டுக்கு அனுப்ப கூடிய முயற்சி எடுக்கின்றார். உண்மையில் இந்த இரு செயற்பாடுகளும் சர்வதேச ரீதியாக அரசாங்கத்தினுடைய செயற்பாட்டையும் ராஜபக்சக்களின் இராஜதந்திரதன்மைக்கும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோன்று எந்த சந்தர்ப்பத்திலும் இது தொடர்பில் எங்களுக்கு சர்வதேச அழுத்தங்கள் வரலாம்.

ஒரு சந்தர்ப்பத்தில் இது தொடர்பில் சுயாதீனமான சர்வதேச பரிசீலனை மேற்கொள்ளுங்கள் என கேட்கவும் முடியும். அவ்வாறு ஒரு முன்மொழிவு வந்தால் அரசாங்கம் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியாத்து போன்று எதிர்க்க எவ்வித காரணமும் கிடையாது. இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுள் சர்வதேசத்தை சேர்ந்தவர்கள் பலரும் இருந்திருக்கின்றார்கள். பேராயர் அவர்கள் வத்திக்கானுக்கு மேற்கொண்ட விஜயமானது இந்த சந்தர்ப்பத்தில் ஐரோப்பாவில் அழுத்தங்கள் மிக்க ஒரு சந்தர்ப்பமாகும். ரஷ்யா -உக்ரைன் நெருக்கடி மிகக்கூடிய பட்சத்தில் காணப்படுகின்றது. தற்போது ரஷ்யா இரானுவம் உக்ரேனுக்குள் நுழைந்து விட்டனர்.

உண்மையில் தற்போது யுத்தம் ஆரம்பித்துள்ளது. தற்போது ஐரோப்பாவுக்கு இந்த நிலையை முன்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அவர்கள் இதனை பார்ப்பது ஐரோப்பாவுக்கு ஒரு நெருக்கடியான நிலையை போல நேட்டோவுக்கும் நெருக்கடியான நிலையாக. இந்நிலை மேலும் உக்கிரமடையும்போது ஏனைய பிரதேசங்களின் நிலையை கவனத்தில் கொள்ளாமல் இருக்க நேரிடலாம்.

அவ்வாறாயின் அரசாங்கத்திற்கு ஒரு சந்தர்ப்பம் வரும். இருப்பினும் உலக யுத்தம் ஒன்று ஏற்பட்டால் அதிக நாட்கள் செல்வதற்கு முன்னர் அந்தப் பிரச்சினை மீண்டும் ஏற்படலாம். அடுத்ததாக அரசாங்கம் ஒரே சந்தர்ப்பத்தில் முழுமையான உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழு அறிக்கையை பாராளுமன்றத்திற்கு முன்வைத்தது. அதிகமானவர்கள் அது தொடர்பில்புதுமை அடைகின்றார்கள். சிலர் கூறுவது அவை நடைபெற்றது ஜெனீவா மனித உரிமை மாநாடு என்பதனால்.

இன்னும் சிலர் சொல்லுகின்றார்கள் பேராயரின் வத்திக்கான் விஜயம் என்பதனால். சானி தொடுத்த அடிப்படை உரிமை மீறல் வழக்கு என சிலர் குறிப்பிடுகின்றார்கள். அடுத்ததாக பூஜித்த மற்றும் ஹேமசிரிக்கு வழங்கப்பட்ட வழக்கு தீர்ப்பு அதற்கு ஏதுவாய் அமைந்துள்ளது என்று சிலர் குறிப்பிடுகின்றனர். அந்த காரணங்கள் கூடுதலாக குறைவாக அமைந்திருக்கக் கூடும். ரட்டே ரால குறிப்பிடுவது இதற்கு புறம்பாக அதனுள்ளே வேறு காரணங்கள் இருக்கலாம் என்று.

இருப்பினும் அரசாங்க பக்கம் ஈஸ்ட்டர் தாக்குதலிற்கு பெட் பண்ணும் முறையில் மாற்றத்தை செய்ய முற்படுகின்றாரகள் என ரட்டே ராலவுக்கு தோன்றுகின்றது. அவர்கள் கயிற்றை சற்று இலக்கி பதில் வழங்க தோன்றுகின்றது. எவ்வாறு இருந்த போதிலும் அரசாங்க பக்கத்திலும் அடுத்த கட்ட செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்த வேலையை அரசாங்கத்திற்கு சிறிய காலத்துக்கு மேற்கொள்ள முடியும். அதே போன்று இந்த பதிவுகளை பரிசீலனை செய்வதற்கு கத்தோலிக்க சபை அடுத்தத கட்ட நடவடிக்கையை எடுப்பதற்கு எடுக்கும் காலம் அரசாங்கத்திற்கு தேவை.

அரசாங்கத்துக்கு முடியும் இந்த எதிர்ப்புக்களுக்கு முகம் கொடுப்பதற்கு தேவையான பிளேன் செய்வதற்கு. அந்த சந்தர்ப்பத்தில் ஜெனீவாவும் முடிவடைந்துவிடும். அரசாங்கம் இதனை பிளேன் செய்யும் முறையானது ரட்டே ராலவுக்கு தெரியும். இருப்பினும் பாதுகாப்பு காரணங்களுக்காக அதனை இந்த சந்தர்ப்பத்தில் கூறமுடியாது.

இருப்பினும் சானி தொடுத்துள்ள மனித உரிமை வழக்கு அரசாங்கத்திற்கு இதன்போது ஒரு தடையாக இருக்க முடியும். ஏனென்றால் FR என்பதால் அதனை விரைவாக எடுக்க வேண்டி ஏற்படும். தற்போது வெளியிடப்பட்ட உயிர்த்த ஞாயிறு அறிக்கையில் இன்னும் பல புதிய விடயங்கள் வெளிவரலாம். அதனை சபாநாயகரும் குறிப்பிட்டிருக்கின்றார். அதேபோன்று சானியின் அடிப்படை உரிமை மீறல் மனுவில் புதிய விடயங்கள் பல பல வெளியில் வந்திருக்கின்றது. இவ்வளவு காலமும் சமூகத்தின் உள்ளே கதைக்கப்பட்டு கொண்டிருந்த விடயங்கள் தற்போது சானியின் தகவல்கள் மூலமாக வெளியில் வந்து இருக்கின்றது.

சானியின் கருத்துப்படி இந்த தாக்குதலை அரச புலனாய்வுப்பிரிவின் பிரதானிக்கு முன்னமே தெரிந்த ஒன்று என்று. அதே போன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு முன்னர் ஏற்கனவே அந்த பயங்கரவாத தாக்குதலை மேற்கொள்வதற்கான ஒத்திகை பார்க்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இரண்டு பேர் கொலை செய்யப்பட்டதும் அவ்வாறுதான்.

இருப்பினும் அந்த கொலையின் உண்மையை உளவுப்பிரிவினர் மறைத்ததாக சானி குற்றம் சுமத்துகின்றார். சஹ்ரான்கள் மேற்கொண்ட குறித்த கொலைக்கு எந்த அடிப்படையிலும் தொடர்புபடாத முன்னாள் மூன்று LTTE அங்கத்தவர்கள் பொய்யாக கைது செய்யப்பட்டார்கள் என்று சானி குறிப்பிடுகின்றார்.

சானி குறிப்பிடுகின்ற அடிப்படையில் விசாரணை சரியான முறையில் நடைபெற்று இருந்தால் ஏப்ரல் 21 தாக்குதலை தடுத்திருக்க முடியும் என்று. அதனை தடுப்பதற்கு யார் முன்வரவில்லை என்ற பிரச்சினை ஏற்படுகின்றது. மைத்திரி அல்லது உளவுப்பிரிவு அதிகாரிகளா என்று. அதனிடையே இன்னோர் பிரச்சினை ஏற்படுகின்றது. அவ்வாறாயின் மட்டக்களப்பு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர்களை கொலை செய்தது சஹ்ரான் இல்லை என்றே அரசியல் அதிகாரம் அறிந்துள்ளது.

சானியின் படி இந்த இடத்தில் அரசியல் அதிகாரத்தை ஏமாற்றியுள்ளார்கள். அவ்வாறாயின் இந்த நிலை தொடர்பில் சரியான மதிப்பீடு அரசியல் தலைமைக்கு இருந்ததா என்று ஒரு பிரச்சினை ஏற்படுகின்றது. மைத்திரிக்கு இருக்கக்கூடிய ஒரு plus point . அப்படியாயின் இதற்கு பின்னால் ஒரு திட்டம் இருக்கிறது என்பதை காணமுடிகின்றது. அத்தாக்குதல் நடைபெறும்வரை ஏமாற்றும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதா என்ற விடயம் சந்தேகமாக இருக்கின்றது.

அடுத்ததாக பூஜித்த மற்றும் ஹேமசிரியை விடுதலை செய்து உயர் நீதிமன்றம் குறிப்பிட்டது உளவுப்பிரிவு வழங்கிய தகவல் உளவுத்தகவல் அல்ல என்று. அதனைத்தான் சானி குறிப்பிடும் கதையை கேட்கும்போது உளவுப்பிரிவின் பிரதானி தாக்குதல் தொடர்பான தகவல்களை அறிந்து கொண்டு அதனை பாதுகாப்பு பிரிவுகளோடு பகிரவில்லை என தோன்றுகின்றது. அதேபோன்று தாக்குதல் நடைபெற்று சில மணித்தியாலங்களுக்கு பின்னர் உளவுப்பிரிவு பிரதானியால் தயாரிக்கப்பட்ட அறிக்கை ஏற்கனவே தயாரிக்கப்பட்டு வழங்கப்படாமல் இருந்தது தொடர்பில் சானியின் கடிதத்தில்குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிலிருந்து இந்த இடத்தில் பாரிய சந்தேகம் ஏற்படுகின்றது. ஏன் எனில் அரசியல் அதிகாரத்தை பெற முஸ்லிம் அடிப்படைவாதிகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என கத்தோலிக்க சபை தெரிவித்து விட்டது. அடுத்ததாக இவ்வளவு காலமாக சமூகத்தில் பரவும் சொனிக் சொனிக் என்ற பெயரைச்சூழ தற்போது புதிய கதையை இணைக்கும் வகையில் தகவல்கள் வெளியில் வந்துள்ளது. உண்மையில் சானி குறிப்பிடும் இந்த விடயங்களை மத்திஸ்த்தமாகவே பார்க்க வேண்டும். அவை உண்மையாகவும் முடியும் பொய்யாகவும் முடியும்.

அதற்கான இறுதி கருத்தை சொல்லக்கூடியமாக அமைவது சானியின் வழக்கு தீர்ப்பை பொருத்தே அமையும். இருப்பினும் இந்த இடத்தில் இவ்வாறானதொன்று நடைபெற முடியும். சானி குறிப்பிடும் விடயங்கள் வெளியில் வந்துள்ள உயிர்த்த ஞாயிறு ஆணைக்குழு அறிக்கையில் காணப்படுமாயின் அது உண்மையிலேயே பாரதூரமான நிலையாகும். அவ்வாறு நடைபெற்றால் அது அரசாங்கத்திற்கு பாரிய அரசியல் தோல்வியை ஏற்படுத்த முடியும். அதனால் தற்போது காரணங்கள் ஒழுங்குபடுத்தலின்கீழ் இந்தப் பிரச்சினையை யாரும் மூடிமறைக்க முடியாது. அப்படி செய்வதாயின் இதனோடு தொடர்புபட்ட ஒருவர் என்றவாறு brand குத்தப்படும்.

இந்த இடத்தில் இந்த விசாரணை மற்றும் புதிய பரிமாணத்திற்கு கொண்டு வரமுடியாமலும் இல்லை. எவ்வாறு இருந்த போதிலும் காலம் தாழ்த்த தாழ்த்த இவ்விடயம் அரசாங்கத்திற்கு மேலும் கறையை ஏற்படுத்தும். அதன்போது சரியோ பிழையோ அரசாங்கத்திற்கு சாதகமற்ற தன்மைகள் மக்களின் உள்ளங்களில் உறுதிப்படுத்தும்நிலை ஏற்படும். எவ்வாறு இருந்த போதிலும் சானி கொண்டு வருகின்ற அந்த விடயங்கள் போன்று உயிர்த்த ஞாயிறு அறிக்கையில் உள்ள விடயங்கள் ஊடாக உயிர்த்த ஞாயிறு வழக்கு எவ்வளவு காலம் தாழ்த்தப்பட்டாலும் அது அரசியல் நெருக்கடிக்கு செல்வதனை நிறுத்த முடியாது.

அதேபோன்று இவ்வழக்கின் முக்கிய சாட்சியான சானிக்கு உயிர் அச்சுருத்தல் ஏற்பட முடியும் என்று இந்த தகவல்களை ஒழுங்கமைப்பை செய்யும்போது நினைக்க தோன்றுகின்றது. மேலும் தற்போது தினம்தோறும் புதிய தகவல்கள் வெளிவரலாம். சில சமயங்களில் மனச்சாட்சிகளும் வர முடியும். ஏன்எனில் மக்களின் உள்ளங்களை எப்போதும் கட்டுப்படுத்தி இருக்க முடியாது. கொலைகாரணாயினும் அவ்வாறே. மனச்சாட்சி ஒவ்வொருவருக்கு முறியது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

3 மாதங்களுக்கு தேவையான ஔடதங்கள் கையிருப்பில் – துறைசார் அமைச்சு

அடுத்த 03 மாதங்களுக்கு தேவையான ஔடதங்கள் அரச வைத்தியசாலைகள் வசமுள்ளதாக ஔடத உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

தனியார் பிரிவுகளுக்கு மருந்துப்பொருட்களை கொள்வனவு செய்யும்போது ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி தொடர்பில், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடவுள்ளதாக இராஜாங்க அமைச்சின் செயலாளர், வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பெரசிட்டமோல் (Paracetamol)மருந்து உற்பத்தியை துரிதப்படுத்துமாறு உரிய தரப்பிற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

பரவிவரும் நோய்கள் காரணமாக பெரசிட்டமோல் மருந்துக்கான கேள்வி அதிகரித்துள்ளதாக இராஜாங்க அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

பெரசிட்டமோல் மருந்தை மொத்தமாக கொள்வனவு செய்வதற்கான எவ்வித தேவையும் இல்லையென அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

தமிழ் / முஸ்லிம் மக்களின் வாக்கின்றி வெற்றிபெற முடியாது என்பதை 6.9 மில்லியன் சிங்கள மக்கள் மாற்றியுள்ளனர் – ஜனாதிபதி

கடந்த அரசாங்கத்தின் தொலைநோக்கு பார்வையற்ற தீர்மானங்களே தற்போது எழுந்துள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தனது தவறு காரணமாகவோ அல்லது தற்போதைய அரசாங்கத்தின் நிதி முகாமைத்துவம் இன்மை காரணமாகவோ பிரச்சினைகள் எழவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போதுள்ள சூழ்நிலையில் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம், எதிர்க்கட்சி மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.

ஆகவே இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் பொறுப்பற்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்றும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

2015 ஆம் ஆண்டு தவறாக வழிநடத்தப்பட்டதன் விளைவுகளை பொதுமக்கள் மறந்துவிடக் கூடாது என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேட்டுக்கொண்டார்.

இதேவேளை ஜனாதிபதித் தேர்தலின் போது தனக்கு சிங்கள மக்கள் மட்டும் வாக்களித்துள்ளனர் என்றும் தமிழ் அல்லது முஸ்லிம் வாக்கில்லாமல் வெற்றிபெற முடியாது என்பதை இவர்கள் மாற்றியுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

பக்கத்து பேரசுகளின் ஆசீர்வாதம் இல்லாமல்? ஈழநாடு Editorial

சிறிய நாடுகளின் இறைமை என்பதை எப்போது வேண்டுமானாலும், அதன்
அருகிலுள்ள பேரசுகள் தகர்க்க முடியும். எந்த உலக சட்டங்களாலும் அதனை
தடுத்து நிறுத்த முடியாது. சிறிய நாடுகளின் பாதுகாப்பும், அமைதி
யும் – குறித்த நாடுகள், அருகிலுள்ள பேரசுகளுடன் எவ்வாறு நடந்து கொள்
கின்றன என்பதை பொறுத்தே அமையும். உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு
இதற்கான நவீன உதாரணமாகும். ரஷ்யாவின் விருப்பங்களை புறம்தள்ளி,
உக்ரைன் நேட்டோ கூட்டணியில் இணைந்து கொள்ள முற்பட்டதன்
விளைவாகவே ரஷ்யா, உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு யுத்தத்தை முன்
னெடுத்திருக்கின்றது. தனது நாட்டை காப்பாற்றுவதற்காக, உக்ரைன் ஜனாதிபதி
யுத்த களத்திற்கு சென்றிருக்கின்றார். தாம் தனித்து போரிடுவதாகவும், ஒரு
நாடும் தமக்கு ஆதரவாக வரவில்லையென்றும் உக்ரைன் ஜனாதிபதி தெரி
வித்திருக்கின்றார்.

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை சிலர் இலங்கை மீதான இந்திய
படையெடுப்போடு ஒப்பிட்டு எழுதியிருப்பதை காண முடிகின்றது. சில
ஒற்றுமைகள் இருக்கின்றன என்பது உண்மைதான். அதாவது, அப்போதிருந்த
ஜே.ஆர் ஜெயவர்த்தன தலைமையிலான ஜக்கிய தேசியக் கட்சி நிர்வாகம்
முன்னெடுத்த வெளிவிவகாரக் கொள்கையின் காரணமாகவே, அப்போதிருந்த
இந்திரா காந்தி தலைமையிலான இந்திய நிர்வாகம் அதிருப்தியடைந்தது.
ஜே.ஆர். ஜெயவர்த்தன, இலங்கையின் பாரம்பரியமான அணிசாரா
கொள்கையிலிருந்து விலகி, மேற்கு சார்பான. அமெரிக்க சார்பான
வெளிவிவகாரக் கொள்கையை கடைப்பிடித்தார். பிராந்திய சக்தியான
இந்தியாவை முற்றிலும் புறம்தள்ளி செயற்பட எத்தணித்தார். இதனால் இந்திரா
காந்தி அதிருப்தியடைந்தார். இதனைத் தொடர்தே, இலங்கையின் தமிழர்
பிரச்சினையில் இந்தியா நேரடியாக தலையீடு செய்தது. ஈழத் தமிழ் ஆயுத
அமைப்புக்களுக்கு பயிற்சியளித்து, அவர்களுக்கு ஆயுதங்களையும் நிதியையும்
வழங்கியது. ஜெ.ஆர்.ஜெயவர்த்தன அரசிற்கு நெருக்கடிகளை கொடுத்தது.
தனக்கு அமெரிக்கா கைகொடுக்குமென்றே ஜே.ஆர் நம்பி யிருந்தார்.
அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான், ஜே.ஆர். அமெரிக்காவை
அணுகினார் ஆனால் அது நடைபெறவில்லை. இந்த அனுபவத்திலிருந்து
தான் ஜே.ஆர். இந்தியாவுடன் இணங்கிச் செல்லும் முடிவை எடுத்திருந்தார்.
ஒரு வேளை ஜே.ஆர், அன்று இணங்கிச் செல்லாது முரண்டு பிடித்திருந்தால்,
இலங்கைத் தீவு இரண்டு துண்டுகளாக உடைந்திருக்கவும் வாய்ப்புண்டு.
அல்லது, இந்திய இராணுவம் இலங்கைத் தீவை முற்றிலுமாக கைபற்
றியிருக்கலாம். ஆனால் ஜே.ஆர். நிலைமைகளை விளங்கிக் கொண்டு ஒரு
தேர்ந்த இராஜதந்திரியாக நடந்து கொண்டார். இந்தியாவுடன் நட்புக்
கொள்வதற்கான அனைத்து வாய்ப்புக்களையும் கொண்டிருந்த ஈழத்
தமிழர்களோ, பாரதத்துதோடு மோதி, இறுதியில் அரசியல் கையறு நிலைக்குள்
தள்ளப்பட்டனர்.

ரஷ்யாவின் படையெடுப்பு, பக்கத்து பேரசுகளை புறத்தள்ளி செயற்பட்
டால் எவ்வாறான விளைவுகள் ஏற்படும் என்பதற்கு புதிதாக கிடைத்திருக்கும்
ஒரு சான்று. பக்கத்து பேரசுகளை அனுசரித்து செல்லாத போது, பக்கத்து
பேரசுகள் சிறிய அயல்நாடுகளை தண்டிக்கும். பேரசுகளின் அனுகுமுறை
களில் நீதி, நியாயம், கருணை எதனையும் எதிர்பார்க்க முடியாது. உலக
அரசியல் வரலாறு தொடர்பில் புரிதலுள்ள எவரும் அவ்வாறு சிந்திக்க
மாட்டார்கள்.

பக்கத்து பேரரசுகளை புறம்தள்ளி செயற்படுவதன் விளைவை, ஈழத்
தமிழர்களும் இன்று நன்கு புரிந்துகொண்டிருக்கின்றனர். இங்கு எங்களுடைய
விருப்பு வெறுப்புகள் முக்கியமல்ல. ஏனெனில் பேரசுகள் சிறிய நாடுகளின்
மக்களது விருப்பு வெறுப்புக்களின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பதில்லை.
உக்ரைன் மக்களது விருப்பங்களின் அடிப்படையில் ரஷ்யா அதன் முடிவுகளை
எடுக்கவில்லை. இந்திய இராணுவத்தை இலங்கையின் நிலைகொள்ளும்
முடிவை எடுத்த போதும் – இங்குள்ள எவருடைய விருப்பங்களும்
கேட்கப்படவில்லை.

பேரசுகளின் தீர்மானங்கள் அப்படித்தான் அமைந்திருக்கும். பக்கத்து
பேரசுகளை அனுசரித்து செல்ல வேண்டியது, சிறிய அயல்நாடுகளின்
கடைமையாகும். அந்தக் கடைமையை செய்யாத போது – அதன் பலனையும்
அனுபவிக்க வேண்டிவரும் என்பதுதான் பேரசுகளின் பதில். பக்கத்து
பேரரசுகளை புறம்தள்ளி செயற்பட்டு, பேரரசின் கோபத்திற்கு ஆளாகி
னால், எந்தவொரு நாடும் குறித்த சிறிய நாட்டிற்காக சண்டையிட்டு சாகப்
போவதில்லை.

Posted in Uncategorized

ரஞ்சனின் விடுதலைக்கு சர்வதேசத்தை நாடவுள்ள சஜித்

சிறை வைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஆதரவாக சர்வதேசத்தை நாட உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலைக்காக சர்வதேச சமூகத்தின் உதவியை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நேற்று (25) காலை வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவைச் சந்தித்துப் பேசிய பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்கவின் சுதந்திரத்திற்கான ஜனநாயகப் போராட்டத்திலும் நாம் இன்னும் இருக்கிறோம். அவர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதை தற்போது எமக்கும் நாட்டுக்கும் இழப்பாகவே பார்க்கின்றேன்.

ரஞ்சனுக்கு பூரண சுதந்திரம் வழங்குமாறு கௌரவ ஜனாதிபதியிடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளேன். நாங்கள் நேற்றும் இன்றும் அந்த கோரிக்கையை முன்வைத்தோம் ஆனால் அவருக்கு இன்னும் அந்த சுதந்திரம் கிடைக்கவில்லை. மனிதாபிமானத்தின் பெயரால் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு பூரண சுதந்திரத்தை வழங்குமாறு மீண்டும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். அத்துடன், இந்த நாட்டில் ரஞ்சன் ராமநாயக்கவின் பூரண சுதந்திரத்தை வென்றெடுப்பதே எமது நம்பிக்கையாகும். வேறு எந்த வெளி தலையீடுகள் மூலமாகவும் வெற்றி பெற எங்களுக்கு விருப்பம் இல்லை.

ஆனால் உள்நாட்டில் அந்த வெற்றியை எங்களால் அடைய முடியாவிட்டால், இந்த மனிதாபிமானத்தின் சுதந்திரத்திற்காக சாத்தியமான அனைத்து நியாயமான ஜனநாயக செயல்முறைகளையும் நாம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் அந்தச் செயற்பாட்டில் எமது நாடு, எமது தாய்நாடு, இறைமை, பிரதேச ஒருமைப்பாடு, ஒற்றுமை, மனித உரிமைகள் மற்றும் மனித உரிமைகளை மீறுவதற்கு நாம் எந்த வகையிலும் இடமளிக்க மாட்டோம். அதற்குக் காரணம் நாங்கள் உண்மையான தேசபக்தர்கள். நாட்டை உண்மையாக நேசிக்கும் இந்த தாய்நாட்டின் பொது சேவையாளர்கள் நாங்கள்.

எனவே, ரஞ்சன் ராமநாயக்கவின் பூரண சுதந்திரத்தை வெல்வதே எமது ஒரே நோக்கமாகும். அதற்காக, சட்டரீதியாகவும், ஜனநாயக ரீதியாகவும், உள்நாட்டிலும் நம்மால் இயன்ற மிக உயர்ந்த பங்கைச் செய்ய உறுதிபூண்டுள்ளோம் என சஜித் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சமூகத்தை மகிழ்விப்பதற்காக நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயற்பட முடியாது – அரசாங்கம்

இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் 95 சதவீதமானவை இலங்கையின் உள்ளக அரசியல் விவகாரங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் சபைக்கு வழங்கிய வாக்குறுதிகளையும், பொறுப்புக்கூறலையும் நிறைவேற்ற அரசாங்கம் முன்னேற்றகரமான நடவடிக்கைகளை நாட்டின் பொதுச்சட்டத்திற்கமைய முன்னெடுத்துள்ளது.

சர்வதேச சமூகத்தை மகிழ்விக்க நாட்டின் இறையாண்மைக்கு முரணாக ஒருபோதும் செயற்பட முடியாது என வெளிவிவகாரத்துறை அமைச்சின் செயலாளர் பேராசிரியர் அட்மிரல் (ஓய்வு) ஜயநாத் கொழம்பகே தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத்தொடர் இலங்கைக்கு எவ்விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது.

பலம்வாய்ந்த நாடுகள் இலங்கைக்கு சார்பாகவே செயற்படும்.ஜெனிவா விவகாரம் அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடல்ல இலங்கைக்கு எதிரான செயற்பாடு எனவும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத்தொடர் நாளை மறுதினம் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை தொடர்பிலான கூட்டத்தொடர் எதிர்வரும் 3ஆம் திகதி இடம்பெறவுள்ளது.49ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் புதிய யோசனைகளும்,வாக்கெடுப்பும் இடம்பெறாது.

இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சல் பச்லெட் பேரவைக்கு அறிக்கை சமர்ப்பிப்பார்.

ஆணையாளரின் அறிக்கைக்கு ஏற்கெனவே பதிலளித்துள்ளோம்.அறிக்கையில் மாற்றத்தை ஏற்படுத்தாவிடின் ஆணையாளர் ஆரம்பத்தில் வெளியிட்ட அறிக்கையினை மீண்டும் பேரவையில் சமர்ப்பிப்பார்.

இலங்கை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் 95 சதவீதமானவை இலங்கையின் உள்ளக விவகாரங்களை மையப்படுத்தியதாக காணப்படுகிறது.

பாராளுமன்றம்,ஜனாதிபதியின் செயற்பாடுகள்,அரச கட்டமைப்பு,நீதிமன்ற கட்டமைப்பு ஆகிய துறைகள் குறித்து ஆணையாளர் அதிக கவனம் செலுத்தியுள்ளார்.ஒரு நாட்டின் உள்ளக விவகாரங்களில் தலையிடுவது மனித உரிமை பேரவையின் விடயதானங்களுக்கு பொறுப்பானதல்ல.

இலங்கையில் இராணுவ ஆட்சி நடைமுறையில் இல்லை எ;ன்பதை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் விளங்கிக்கொள்ள வேண்டும்.இலங்கைக்கு எதிராக தொடர்ந்து பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது அநீதியானது.

இலங்கை இருமுறை தீவிரவாத குழுக்களினால் பாதிக்கப்பட்டுள்ளது.30வருட கால சிவில் யுத்தம் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியது.

ஏப்ரல் 21 ஈஸ்டர் தின மத அடிப்படைவாதிகளின் தாக்குதலும் பாரிய தாக்குதலை ஏற்படுத்தியது.இலங்கை தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுப்படவில்லை.தீவிரவாத செயற்பாட்டை இல்லாதொழித்து அனைத்து இன மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தியுள்ளது.

யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்த இராணுவத்தினரையும்,அப்போதைய அரசாங்கத்தையும் குற்றவாளிகளாக கருதும் சர்வதேசம் யுத்ததை தோற்றுவித்த தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு குறித்து ஏன் அக்கறை கொள்ளவில்லை.

மனித உரிமை மீறல்கள் செயற்பாட்டில் விடுதலை புலிகள் அமைப்பு ஈடுப்பட்டதற்கு எதிராக சர்வதேச அரங்கில் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.இவ்வாறான செயற்பாடுகளினால் சர்வதேசத்தின் இரட்டை நிலைப்பாடு வெளிப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர்பில் யுத்தகாலத்தை அடிப்படையாகக் கொண்ட விடயங்கள் பேசப்படுவது நாளுக்கு நாள் குறைவடைந்து செல்வதை அவதானிக்க முடிகிறது.

ஐக்கிய நாடுகள் சபையினதும்,அதன் உறுப்பு சபைகளினதும் கொள்கைகளை இலங்கை முறையாக பின்பற்றுகிறது.

யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து பல விடயங்களில் முன்னேற்றகரமான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பல பிரச்சினைகளுக்கு உள்ளக பொறிமுறை ஊடாக தீர்வு காணப்பட்டுள்ளது.காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம்,நட்டஈடு வழங்கும் அலுவலகம் அமைக்கப்பட்டு முன்னேற்றகரமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

சர்வதேச சமூகத்தை மகிழ்விக்கும் நோக்கில் அரசாங்கம் செயற்படவில்லை என்பதை தெளிவாக குறிப்பிட்டுக்கொள்ள வேண்டும்.

யுத்தம் நிறைவடைந்ததை தொடர்ந்து இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களினதும் பாதுகாப்பும்,சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

தெற்காசிய வலய நாடுகளில் இலங்கை அமைதியான நாடு என்பதை வெளிப்படைத்தன்மையும் குறிப்பிட்டுக்கொள்ள வேண்டும்.

இலங்கை விவகாரத்தில் சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளையும்,பொறுப்புக்குகூறலையும் செயற்படுத்த அரசாங்கம் தேசிய இறையாண்மையின் கொள்கைகளுக்கு அமைய செயற்படுகிறது. நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஒருபோதும் செயற்பட முடியாது.

ஜெனிவா விவகாரம் அரசாங்கத்திற்கு எதிரான செயற்படல்ல அது இலங்கைக்கு எதிரான செயற்பாடு என்பதை இலங்கை மக்கள் அனைவரும் முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும். இலங்கைக்கு எதிராக சர்வதேச மட்டத்தில் சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

நாடு என்ற ரீதியில் அனைத்து இன மக்களும் ஒன்றினைந்தால் மாத்திரமே சவால்களை வெற்றிக்கொள்ள முடியும் என்றார்.

பிரதமரின் பணிப்புரைக்கு அமைய சிவாலயங்களுக்கு நிதியுதவி

சிவராத்திரி விரத புண்ணிய காலத்தில் ஆன்மீக செயற்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் பணிப்புரைக்கு அமைய நிதியுதவி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஈழத்தின் பஞ்ச ஈஸ்வரத் தலங்கள் உட்பட, நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட சிவாலயங்களுக்கு இதனூடாக நிதியுதவி வழங்கப்படும் என பிரதமரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் இந்த நிதியுதவி வழங்கும் செயற்றிட்டம், தெரிவு செய்யப்பட்ட ஆலயங்களின் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது.

மகா சிவராத்திரி தினத்தன்று நடத்தப்படும் கலை கலாசார நிகழ்வுகளின் போது, சிறார்களுக்கு பரிசில்கள் வழங்குவதை ஊக்குவிக்கும் வகையில் நிதியுதவி பெற்றுக்கொடுக்கப்படும் என பிரதமரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized