“வடக்கு தமிழர்களுக்கு நன்றிக்கடன் பட்டவன்”; யாழில் மைத்திரி

வடக்கு மாகாணத் தமிழ் மக்களுக்கு எனது நன்றிக் கடன் என்றும் இருக்கும் என்றும், அவர்களை ஒருபோதும் மறக்கமாட்டேன் என்றும் முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

யாழ்., வடமராட்சி, உடுப்பிட்டியில் நேற்று (20) மாலை நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்த மாநாட்டில் வைத்து ஒன்றைக் கூறிவைக்க விரும்புகின்றேன். 2015 ஜனாதிபதித் தேர்தலில் என்னை வெல்ல வைப்பதற்கு வடக்கு மாகாண மக்கள் அனைவரும் வாக்களித்தார்கள். அந்த நன்றிக் கடனுக்காகவே நான் எனது ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணம் மற்றும் வட பகுதிக்கு அதிக தடவைகள் வருகை தந்து பல்வேறுபட்ட அபிவிருத்தி செயற்றிட்டங்களை முன்னெடுத்திருந்தேன்.

அந்த நன்றிக் கடனை நான் என்றும் மறக்கமாட்டேன். வடக்கு மாகாணத் தமிழ் மக்களுக்கு எனது நன்றிக் கடன் என்றும் இருக்கும். அவர்களை ஒருபோதும் மறக்கமாட்டேன்.

எமது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனைப் பலப்படுத்துவதன் மூலம் இந்த மாவட்டத்தில் நல்லிணக்கம், சமாதான நிலைமையை முன்னெடுத்து முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும்” – என்றார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உட்கட்சி மோதல் தமிழக முதல்வர் வரை சென்றது: வீண் சர்ச்சைகளில் சிக்காமலிருக்க பிரமுகர்களிற்கு ஆலோசனை!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கடிதத் தலைப்பை பயன்படுத்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்ராலினுக்கு அனுப்பப்பட்ட கடிதம், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ கடிதமல்ல என்ற தகவல் தமிழக முதல்வரிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, கூட்டமைப்பின் தனித்தனிக்குழுக்களுடன் தொடர்பை ஏற்படுத்தி, கூட்டமைப்பின் ஏனைய தரப்புக்களுடன் தேவையற்ற முரண்பாட்டை வளர்க்க வேண்டாமென தமிழக முதல்வர், இலங்கை விவகாரங்களை கையாளும் பிரமுகர்களிற்கு தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ் தேசியகூட்டமைப்பு என குறிப்பிட்டும், ஐரோப்பாவில் இயங்கும் காகிதத்தலைப்பு அமைப்பான உலகத்தமிழர் பேரவையின் பெயர் குறிப்பிட்டும், கடந்த 18ம் திகதியிட்ட கடிதம் தமிழக முதல்வரிற்கு அனுப்பப்பட்டது.

அது, வெறும் நன்றியறிதல் கடிதமாக தென்பட்டாலும், கூட்டமைப்பிற்குள் தனி அணியாக செயற்படும் உலகத்தமிழர் பேரவை, கனடிய தமிழ் காங்கிரஸ், எம்.ஏ.சுமந்திரன் அணியின் மற்றொரு நகர்வாக கருதப்படுகிறது.

தி.மு.க அமைச்சர் ஒருவர் ஊடாகவே இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.

தி.மு.கவின் முக்கிய பிரமுகர்கள் பலர் தமிழீழ விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி போராடிய அமைப்புக்களுடன் நீண்ட தொடர்பை கொண்டிருந்தவர்கள். வடக்கு கிழக்கிலுள்ள மிதவாத கட்சிகளை விட, போராளி அமைப்புக்களுடனேயே நீண்ட தொடர்பை வைத்திருந்தவர்கள்.

கடித விவகாரம் தமிழக முதல்வரின் ஆலோசகர் வட்டத்திற்கு சென்றதும், அந்த விவகாரத்தை பற்றி பேச, கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியொன்றின் தலைவரை, தமிழக முதல்வரின் ஆலோசகர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

தமிழக முதல்வரின் ஆலோசகர் குறிப்பிடும் வரை, இந்த கடித விவகாரத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சி அறிந்திருக்கவில்லை.

நேற்று மாலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் இந்த விவகாரம் சர்ச்சையானதையடுத்து, அந்த கடிதம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ கடிதமல்ல என்பது, தமிழக முதல்வரின் பிரதிநிதிகளிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளினால் தனித்தனியாக தெளிவுபடுத்தப்பட்டதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது.

இதையடுத்தே, கூட்டமைப்பின் உள் முரண்பாடுகளில் சிக்க வேண்டாமென தனது கட்சி பிரமுகர்கள், ஆலோசகர்களிற்கு மு.க.ஸ்டாலின் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் தி.மு.க தரப்பிலிருந்து நேற்று தமிழ் கட்சிகளிற்கு தெரிவித்த தகவலில்,

‘தமிழீழ போராளி அமைப்புக்களின் காலங்களில் ஒவ்வொரு தரப்புடனும் தொடர்பு வைத்து, மறு தரப்பை தள்ளிப்போக வைத்த கடந்த கால வரலாற்றின் அடிப்படையில், தமிழக முதல்வர் இப்பொழுது ஆலோசனை வழங்கியுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் அனைத்து தரப்பினரையும் தமிழக முதல்வர் விரைவில் சந்திக்கும் வாய்ப்புள்ளது’ என குறிப்பிட்டப்பட்டுள்ளது.

இப்படியும் நடக்கிறது…!- ஈழநாடு

இந்தியாவிலிருந்து ஓர் அரசியல் பிரமுகர் தொலை பேசியில் தொடர்புகொண்டு, ஆறு தமிழ் கட்சிகள் நடத்திய கூட்டம் எப்படி நடந்தது என்று கேட்டார்.

அவர் இந்தியாவிலிருந்து அழைத்ததால் அவர் இந்தியர் என்று நினைத்துவிட வேண்டாம்.
அவர் நமது அரசியல் பிரமுகர்தான். தற்போது இந்தி யாவில் நிற்பதால் தொலைபேசியில் தொடர்புகொண்டார்.

“கூட்டம் அல்லது கருத்தரங்கு என்றால் மண்டபம் நிரம்பினால் வெற்றிதானே’’ என்றேன்.
வழக்கம்போல மாவை சேனாதிராசா இந்தக் கூட்டத்திற்கு வரவில்லை. அவருக்கு அதைவிட முக்கியமான வேலை ஏதாவது இருந்திருக்கும் என்று அவருக்காக ‘வக்காலத்து’ வாங்கினேன்.
அவர் இடைமறித்து, “ஓமோம், உம்மட யானை இன்ன மும் அந்தக் கயிற்றை அறுத்துக்கொண்டு வரவில்லைத்தானே’’ என்றார்.

‘மாவை சேனாதிராசா ஒரு யானை போன்ற பலம் உள்ள ஒருவர். ஆனால், அவரை சிலர் கயிறு ஒன்றினால் கட்டி வைத் திருக்கிறார்கள்’ என்று முன்னர் ஒருதடவை இந்தப் பத்தியில் எழுதியதைத்தான் அவர் கேலி செய்கிறார் என்பது தெரிந்ததுதான்.

மாவை காலத்திலேயே, ஏன் அவரோடு கூடவே, அரசிய லுக்கு வந்தவர் அவர். மாவை எத்தகைய ஆளுமை உள்ளவர் என்பது குறித்து அவர் எனக்கு வகுப்பெடுக்க ஆரம்பித்து விட்டார்.
கட்சியின் தலைவராக இருந்தபோதிலும் அவர் கடந்த தேர்தலில் ஏன் வெற்றிபெறவில்லை என்பது வரை அவர் தனது கருத்துக்களை சொல்லி முடித்தபோது, மாவை பற்றிய எனது கணிப்பில் சில மாற்றங்கள் எற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

மாவை அந்தக் கூட்டத்திற்கு ஏன் வரவில்லையாம் என்பதை அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஒரு பேச்சாளரி டம் கேட்டேன்.

அதற்கு அவர் சொன்னார், கொரோனா தொற்று ஏற்பட்டு தனிமைப்படுத்தலில் இருந்தாராம். கூட்டம் நடந்த அன்று தான் பதின்நான்கு நாட்கள் முடிந்ததால் டாக்டரிடம் கேட்ட போது, அவர் மக்கள் அதிகம் கூடும் இடத்திற்கு போவதைத் தவிர்ப்பது நல்லது என்று ஆலோசனை கூறியிருந்ததால் வரவில்லை. மற்றும்படி, அந்தக் கூட்டத்தை பகிஷ்கரிக்க வேண்டும் என்ற எண்ணம் எதுவும் இல்லை. இன்று இரவுகூட ‘சூம்’ வழி கலந்துரையாடல் ஒன்றில் விக்னேஸ்வரனுடன் கலந்துகொண்டேன் என்று விளக்கமளித்தாராம் மாவையர்.

கொரோனா தொற்று உறுதியானவர்கள் இப்பொது ஏழு நாட்கள் மாத்திரமே தனிமைப்படுத்தப்படுகின்றனர் என்பது கூட மாவையருக்கு தெரிந்திருக்கவில்லை. அதேவேளை, அந்தக் கூட்டம் நடந்த அன்று காலை பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக்கோரும் கோரிக்கை மனுவில் யாழ். பஸ் நிலையத்தில் பலர் மத்தியில் நின்று (கவனிக்கவும் சமூக இடைவெளியை கருத்தில் எடுக்காமல்) கையெழுத்திட்டார் மாவை என்ற செய்தியும் படங்களுடன் பின்னர் வெளிவந் திருந்தது.

மாவையர் பற்றி இந்தியாவிலிருந்து அந்த பிரமுகர் சொன் னவை எவ்வளவுதூரம் சரியானவை என்பதை அப்போது அறியமுடிந்தது.

கூட்டம் நடந்த அன்றுதான் அவரின் தனிமைப்படுத்தல் முடிவுக்கு வந்தது உண்மையாகவே இருக்கட்டும். ஆனால், அந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது அதற்கு முதல் வாரம். அது, பின்னர் ஒரு வாரத்திற்கு பின்போடப்பட்டது.

அப்படியெனில், மாவையர் என்ன செய்திருக்கவேண்டும்?
கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டபோதே தனது நிலைமையை
விளக்கிக்கூறி, கட்சியின் சார்பில் வேறு ஒருவரை அனுப்பியி
ருக்கவேண்டும். ஆகக்குறைந்தது நிலைமையை விளக்கி,
கூட்டத்தில் வாசிக்கச் சொல்லி தனக்கு தரப்பட்ட தலைப்பில்
தான் சொல்லவந்த கருத்தை எழுதியாவது அனுப்பியிருக்க
வேண்டாமா?

இப்படியெல்லாம் செய்யவேண்டும், அதுதான் தலைவ ருக்கு அழகு என்றால் – அது எல்லாம் தெரிந்திருந்தால் – கட்சியை இப்படி அதலபாதாளத்திற்கு தள்ளிவிடுகின்ற காலத்தில் தலைமையில் இருந்திருப்பாரா மாவையர் என்றும்
கேட்காமல் இருக்கமுடியவில்லை.

ஆறு கட்சிகளின் ஆதரவு இருந்தால்தான் அடுத்த முதல மைச்சர் கனவு நனவாகும் என்பதற்காக அவர்களுடனும் நட்பில் இருக்கவேண்டும், கட்சியை ஒரு தலைவராக வழி நடத்திச் செல்ல தன்னால் மாத்திரம் முடியாது என்பதால்
கட்சியில் உள்ள மற்றவர்களும் தேவை. அவர்களையும் பகைக்கக்கூடாது என்று இரட்டைத் தோணியில் கால் வைத்துக்கொண்டு பயணித்தால், ஒரு கட்டத்தில் இரண்டு கால்களுமே இரண்டு தோணிகளிலுமிருந்து தவறிவிடும்.

கடலில் விழுந்துதான் ஆகவேண்டி வரும்.

மாவையர் எந்தக் கட்டத்திலுமே தனித்து முடிவெடுக்கின்ற ஒரு ‘தலைவராக’ இருந்ததில்லையே என்ற அந்த நண்பரின் கருத்தை ஏற்காமல் இருக்கவும் முடியவில்லை!

ஊர்க்குருவி

Posted in Uncategorized

கொட்டும் மழையிலும் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி!

கிளிநொச்சியில் கொட்டும் மழையிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை முன்னெடுத்திருந்தனர். குறித்த பேரணியானது கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பிக்கப்பட்டு டிப்போ சந்தியில் நிறைவடைந்தது.

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 5 ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில் குறித்த போராட்டம் ஆர்ப்பாட்ட பேரணியாக இன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பேரணியில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், மக்கள் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டடிருந்தனர்.

கொட்டும் மழையின் மத்தியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மழையில் நனைந்தவாறு போராட்டத்திலை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

டிப்போ சந்தியில் கவனயூர்ப்பில் ஈடுபட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், ஐக்கிய நாடுகள் சபையின் மனிய உரிமைகள் செயலகத்திற்கான மகஜரை வேழன் சுவாமிகளிடம் கையளித்தார்.

போராட்டத்தின் போது ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் சங்க செயலாளர் லீலாதேவி குறிப்பிடுகையில், இன்றைய போராட்டம் நிறைவடைந்தது. இந்த போராட்டத்திற்காக பல்வேறு தரப்பினருக்கு அழைப்பு விடுத்திருந்தோம். ஆனால் குறித்த அழைப்பினை ஏற்று பலர் இங்கு வருகை தந்திருந்தனர். ஆனால் இன்றைய போராட்டத்தில் பொதுமக்கள் ஆதரவு தந்திருக்கவில்லை.

ஒரு சில அரசியல்வாதிகள் மாத்திரமே வருகை தந்திருந்தனர். இந்த நிலையில் பொதுமக்களிற்கு ஒரு செய்தியை நாங்கள் தருகின்றோம். இந்த போராட்டத்தில் உங்கள் பங்களிப்பு கடந்த காலங்கள் போன்று இல்லை. உங்கள் வீட்டிலும் இது போன்று சம்பவங்களும், காணாமல் ஆக்கப்படுதலும் இல்லாதிருக்கவும், பேரப்பிள்ளைகள், அடுத்த சந்ததிக்கு இவ்வாறு நடந்தேறக்கூடாது என்பதற்காகவுமே போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம்.

உங்கள் வீட்டு முற்றத்தில் உள்ள வேப்பம் மரம் அழிக்கப்பட்டு அரச மரம் முளைக்கும்போதுதான் அதனை நீங்கள் உணர்வீர்கள். அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பும் எமக்க போதாது. உண்மையில் இந்த போராட்டத்தை அவர்கள் முன்னின்று நடார்த்தியிருக்க வே்ணடும். அவர்கள் தமது ஆதரவாளர்களை அழைத்து வந்து இந்த போராட்டத்தை வலுப்பெற வைத்திருக்க வேண்டும் எனவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

இதேவேளை குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டு வவுனியா மாவட்ட சங்க தலைவி குறிப்பிடுகையில், எமது உறவுகள் இறந்துவிட்டனர் என்பதாக அரசாங்கம் கூறுகின்றது. யுத்தத்தில் இறந்தவர்களை நாங்கள் கேட்கவில்லை. சரணடைந்த, கையளிக்கப்பட்ட எமது உறவுகளையே நாங்கள் கேட்கின்றோம். அவர்களிற்கு என்ன நடந்தது என்பதை எமக்கு வெளிப்படுத்த வேண்டும். அதற்காகவே நாங்கள் சர்வதேசத்தை நாடி நிக்கின்றோம் என அவர் தெரிவித்தார்.

கஜன்களின் ‘பல்லிளிக்கும்’ அரசியல் -புருஜோத்தமன் தங்கமயில்

தமிழீழ விடுதலைப் புலிகள், தனிநாடு கோரிப் போராடவில்லை என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் (கஜன்கள் அணி) செயலாளர் செல்வராசா கஜேந்திரன், அரசியல் விவாத நிகழ்ச்சியொன்றில் பேசிய விடயம், கடந்த வாரம் சர்ச்சையானது.

அதுபோல, அதேவாரத்தில் வடக்கு மீனவர் பிரச்சினை தொடர்பில், பாராளுமன்றத்தில் ஒத்திவைப்புப் பிரேரணையைக் கொண்டுவரத் தீர்மானித்திருந்த முன்னணி, இந்திய தூதரக அதிகாரியின் தொலைபேசி அழைப்பை அடுத்து, அந்த ஒத்திவைப்புப் பிரேரணையைக் கைவிட்டது. இது, வடக்கு மீனவர் அமைப்புகளால் நம்பிக்கைத் துரோகமாக விமர்சிக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னரான நெருக்கடியான காலப்பகுதியில், (குறிப்பாக, 2010 பொதுத் தேர்தலுக்கு அண்மித்த நாள்களில்) தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்களுக்குத் துரோகம் செய்வதாகக் கூறிக்கொண்டு கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன் உள்ளிட்டவர்கள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை ஆரம்பித்தார்கள்.

முன்னணி ஆரம்பிக்கப்பட்ட காலத்தில், அதை அரசியல் கட்சியாக முன்னிறுத்திய கஜேந்திரகுமார், அதைக் கட்சியாகப் பதிவு செய்வதைத் தவிர்த்து வந்தார். அதன்மூலம், முன்னணியை அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் ‘சைக்கிள்’ சின்னத்தில், தேர்தல்களில் போட்டியிட வைக்க முடியும் என்பது அவரது நிலைப்பாடு. அத்தோடு, முன்னணியைக் கட்சியாகப் பதிவு செய்தால், ‘மாற்ற முடியாத ஒற்றைத் தலைமை’ எனும் தன்னுடைய இடம், கேள்விக்கு உள்ளாக்கப்படும் எனும் அச்சமும் அவரைச் சூழ்ந்து கொண்டது.

அதனால், முன்னணியை புறத் தோற்றமாகக் காட்டினாலும், காங்கிரஸ் எனும் குடும்பக் கட்சியில் தங்கியிருக்க விரும்பினார். இந்த விடயம், மெல்லமெல்ல விமர்சனங்களாக மேலெழுந்த போது, “முன்னணி, அரசியல் கட்சியல்ல; அது ஓர் அரசியல் இயக்கம். அதைப் பதிவு செய்தால், எதிர்கால நடவடிக்கைகளுக்குப் பாதிப்பு ஏற்படும்” என்று, கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் அறிவிப்பை கஜேந்திரகுமார் வெளியிட்டார்.

முன்னணியை ஒரு கட்சியாக முன்னிறுத்திய அதன் ஆதரவாளர்களுக்கும் முக்கியஸ்தர்களுக்கும், கஜேந்திரகுமாரின் இந்த அறிவிப்பால், மக்களுக்கு பதிலளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஏனெனில், கடந்த காலங்களில் அவர்கள் முன்னணி, பதவி செய்யப்பட்ட கட்சியாக மாறும், காங்கிரஸின் ‘சைக்கிள்’ சின்னத்தில் தொடர்ந்தும் தங்கியிருக்காது என்று பேசி வந்திருக்கிறார்கள்.

கஜேந்திரகுமாரும் கஜேந்திரனும், தமிழ்த் தேசிய பரப்பிலுள்ள அரசியல் கட்சிகள், அமைப்புகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்புகளையும் நோக்கி, துரோகப் பட்டத்தை சூட்டி வந்திருக்கிறார்கள். அதுபோல, முன்னணியின் செயற்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கும் ஆதரவாளர்கள், உறுப்பினர்களை ‘துரோகி’கள் என்று அடையாளப்படுத்துவதில் குறியாக இருந்திருக்கிறார்கள்.

என்றைக்குமே கேள்விக்கு அப்பாலான தரப்பாக, தங்களை வைத்துக் கொள்ளவே அவர்கள் விரும்பினார்கள். தாங்கள், யாரை நோக்கியும் எந்தவிதமான கேள்வியையோ, விமர்சனத்தையோ, துரோகப் பட்டங்களையோ வழங்கலாம். ஆனால், தங்களை நோக்கி, மற்றவர்கள் அவ்வாறான செயற்பாடுகளை செய்யக் கூடாது என்று எதிர்பார்ப்பது, ஒரு வகையில் பாசிச மனநிலை. அந்த மனநிலையை முன்னணியின் தொண்டர்களிடமும் மிக நுட்பமாக அவர்கள் வளர்த்திருக்கின்றார்கள். ஒரு வகையில் அது மூளைச்சலவைக்கு ஒப்பானது.

தங்களைக் கேள்விகள் இன்றி ஆதரித்தால், அவர்களின் பின்னணி, கடந்த கால வரலாறுகள் எல்லாவற்றுக்கும் புனித வட்டங்களை வரையத் தயாராக இருந்தார்கள். சுரேஷ் பிரேமசந்திரனின் ஈ.பி.ஆர்.எல்.எப், தர்மலிங்கம் சித்தார்த்தனின் புளொட் ஆகியவற்றுடன் தமிழ் மக்கள் பேரவையில் இயங்கியதும் ஒரே மேடையில் தமிழ்த் தேசியம் பற்றிய அறைகூவல்களை இணைந்து விடுத்ததும் வரலாறு.

ஈ.பி.ஆர்.எல்.எப்போடு இணைந்து தேர்தலில் போட்டியிடுவது வரையில் கஜன்கள் (கஜேந்திரகுமார், கஜேந்திரன்) தயாராக இருந்தார்கள். அப்போதெல்லாம், ஈ.பி.ஆர்.எல்.எப்பும் புளொட்டும் போராட்ட காலங்களில் புரிந்த படுகொலைகளும் குற்றங்களும் அவர்கள் கண்ணுக்கு தெரியாது. அதை மறந்து நின்று, ஒரே நிலைப்பாட்டில் பயணிப்பதாகக் கூறுமளவுக்கு இருந்திருக்கிறார்கள்.

ஆனால், தங்களின் எதிர்பார்ப்புகளை மற்றக் கட்சிகள் நிறைவேற்றவில்லை என்றால், அவர்களின் கடந்த கால வரலாறுகளை எல்லாம் தோண்டியெடுத்து, துரோக அரசியல் பற்றிப் பேசுவார்கள். இவ்வாறான நிலை, ஒரு கட்டத்தில் முன்னணியில் கஜன்களின் செயற்பாடுகளால் அதிருப்தியடைந்து, கேள்வியெழுப்பிய மணிவண்ணன் தலைமையிலான குழுவை பிளவுபடவும் வைத்தது.

இன்றைக்கு, முன்னணியின் உரிமை கோரும் நடவடிக்கையில், மணி அணியும் ஈடுபட்டிருக்கின்றது. மணி அணியிலுள்ள பலரையும் நோக்கி, கஜன்கள் அணியினர், ‘ஆவா’ குழு உறுப்பினர்கள், கஞ்சா கடத்தல்காரர்கள் என்று பட்டம் சூட்டி விமர்சிக்கின்றார்கள். ‘ஆவா’ குழு உறுப்பினர்களாகவும் கஞ்சாக் கடத்தல்காரர்களாகவும் தற்போது கஜன்கள் அணியால் அடையாளப்படுத்தப்படும் இளைஞர்கள், கடந்த காலங்களில் கஜன்களின் ஆதரவாளர்களாக, ஒரு வகையில் பாதுகாப்பு படை போல அவர்களைச் சூழ இருந்தவர்கள்.

இப்படியான குறைபாட்டுச் சிந்தனையும் வறட்டுவாதமும் செய்யும் கஜன்கள் அணியினர்தான், கடந்த வாரம் தங்களின் இரு வேறு நிலைப்பாடுகளால் விமர்சனத்துக்கு உள்ளானார்கள்.

கடந்த மாத இறுதியில், வத்திராயன் பகுதி மீனவர்கள் இருவர் தொழிலுக்குச் சென்ற நிலையில், நான்கு நாள்களின் பின்னர் சடலங்களாக கரை ஒதுங்கினர். அவர்களின் மரணம், அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய இழுவைப் படகுகளால் நிகழ்த்தப்பட்டதாக மீனவ அமைப்புகள் குற்றஞ்சாட்டி, தொடர் போராட்டங்களில் ஈடுபட்டன.

அந்த நிலையில், பாராளுமன்றத்தில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டுள்ள இழுவை மடி தடைச் சட்டத்தை, நடைமுறைப்படுத்தக் கோரும் சபை ஒத்திவைப்புப் பிரேரணையை கொண்டுவர, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்தது. ஆனால், அவ்வாறான பிரேரணை ஒன்றைக் கொண்டுவர, முன்னணியின் கஜன்கள் முயன்ற போது, அதற்கான ஆதரவை வழங்கி, அதில் கலந்து கொண்டு பேசும் முடிவை கூட்டமைப்பு எடுத்தது.

ஆனால், அந்த ஒத்திவைப்புப் பிரேரணை விவாதத்துக்கு எடுக்கப்படவிருந்த நாளில், சபாநாயகருக்கு கடிதம் ஒன்றின் மூலம், குறித்த பிரேரணையை மீளப்பெறுவதாக கஜேந்திரன் அறிவித்தார். அதற்கான காரணமாக, வடக்கு மீனவர்கள் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, இந்திய தூதரக அதிகாரி, தொலைபேசியில் வாக்குறுதி அளித்திருப்பதாக கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த காலங்களில், தென்னிலங்கையின் கட்சிகள், அமைப்புகளிடமோ இந்தியா, அமெரிக்கா, மேற்கு நாடுகள் உள்ளிட்ட தரப்புகளிடமோ பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் கூட்டமைப்பு உள்ளிட்ட எந்தத் தரப்பை நோக்கியும், பேச்சுகளின் முடிவில் எழுத்து மூல உத்தரவாதத்தைக் கோரவில்லை என்று முன்னணி விமர்சித்து வந்திருக்கின்றது.
ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு கூட்டமைப்பு ஆதரவளித்த தருணத்தில், எழுத்து மூலமான உத்தரவாதம் வாங்கப்படவில்லை என்கிற விடயம், கடந்த பொதுத் தேர்தலில், முன்னணியால் பெரும் பிரசாரமாகவே முன்னெடுக்கப்பட்டது.

அப்படியான முன்னணி, தூதரக அதிகாரி ஒருவரின் தொலைபேசி அழைப்பில், வடக்கு மீனவர்களின் பிரச்சினை தீர்க்கப்பட்டுவிடும் என்ற நிலைப்பாட்டுக்கு எப்படி வந்தது என்ற கேள்வி எழுகின்றது? அதுவும், முன்னணியை இந்திய தூதர் அழைத்துப் பேசவில்லை; மாறாக, தூதரக அதிகாரி ஒருவரே பேசியிருக்கின்றார். அந்த அதிகாரி, இந்திய தூதரகத்தில் எந்தத் தரநிலையில் இருக்கின்றார் என்ற விடயம் கூறப்படவில்லை. இந்த விடயத்தை, கஜேந்திரகுமாரிடம் ஊடகங்கள் கேள்வியாக எழுப்பினால், “உத்தரவாதமளித்துவிட்டார்கள்; அதனால் நாங்கள் பிரேரணையை கைவிட்டோம். எழுத்துமூலம் எல்லாம் உத்தரவாதத்தை எப்படிக் கோர முடியும்” என்கிற தோரணையில் பதலளிக்கின்றார்.

இவ்வாறான நடவடிக்கையில் இன்னொரு தரப்பு ஈடுபட்டிருந்தால் துரோகி, கைக்கூலி ஆகிய பட்டங்களோடு, கஜன்கள் ஊடக சந்திப்புகளை நடத்தியிருப்பார்கள். அதுபோலவே, விடுதலைப் புலிகள் தனிநாடு கோரிப் போராடவில்லை என்கிற பொய்யை, இன்னொரு தரப்பினர் சொல்லியிருந்தால், “மாவீரர்களின் தியாயத்தைக் கொச்சைப்படுத்தி விட்டார்கள்” என்று கூறியிருப்பார்கள்.

புலிகள், தனி நாட்டுக்கான அர்ப்பணிப்போடு போராடினார்கள். சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, வடக்கு-கிழக்கு தமிழர் தாயகம் எனும் தேசக் கோட்பாட்டு அதிகாரப் பகிர்வு நிலை குறித்துப் பேசியிருக்கின்றார்கள். ஆனால், அவர்களின் இறுதி இலக்கு என்பது, சுயநிர்ணயம் சார்ந்தது. அது தமிழீழ தாயகம் என்றவாறாகவே இருந்தது. போராட்டத்தில் மக்களை இணையக் கோரிய போதெல்லாம் புலிகள், தனிநாட்டுக்காகவே அர்ப்பணிக்கக் கோரினார்கள்.

அப்படியான நிலையில், ஏட்டிக்குப் போட்டியாகப் பேச வேண்டும் என்பதற்காக கஜேந்திரன், “புலிகள் தனிநாடு கோரவில்லை” என்று கூறியவிடயம் சர்ச்சையானதும் ஊடக அறிக்கை என்கிற பெயரில், நிறைந்த எழுத்துப் பிழைகள், தகவல் பிழைகளுடன் மன்னிப்புக் கோரும் அறிக்கையை சமூக ஊடகங்களில் வெளியிட்டு விடயத்தை சமாளிக்க முயன்றிருக்கிறார். மாறாக, திறந்த மனதோடு மன்னிப்புக் கோரும் முகமாக, அதைப் பார்க்க முடியவில்லை.

துரோகி அடையாளத்தை மற்றவர்களுக்கு சூட்டுவதற்கான அதிகாரத்தைக் கொண்டவர்கள் போல, எடுத்ததற்கெல்லாம் துரோகி பட்டத்தை சூட்டிய முன்னணியின் கஜன்கள்தான், இன்றைக்கு தங்களின் ‘பல்லிளிக்கும்’ அரசியலை கமுக்கமாகக் கடக்க நினைக்கிறார்கள்.

Posted in Uncategorized

மனித உரிமைகள் பேரவையில் எதிர்ப்பு நிலையிலிருந்து பின்வாங்க இலங்கை தீர்மானம் ? – வெளிக்கிழமை ஜெனிவா செல்கிறது பீரிஸ் தலைமையிலான குழு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடரில் கலந்துக்கொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான குழு எதிர்வரும் 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜெனிவா செல்கிறது.

மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை குறித்த அறிக்கை 3 ஆம் திகதி வியாழக்கிழமை சமர்பிக்கப்பட உள்ளதுடன் அதற்கான பதிலளிப்பை அன்றைய தினமே முன்வைக்க தீர்மானித்தள்ளதாக அமைச்சர் பீரிஸ் வீரகேசரிக்கு உறுதிப்படுத்தினார்.

இவ்வாறானதொரு நிலையில் எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ள ஜெனிவா கூட்டத்தொடரின் உண்மை நிலையையும் இலங்கைக்கு ஏற்பட கூடிய பாதகமான நிலைமை குறித்தும் அரசாங்கத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களுக்கு அமைய அவற்றை எதிர்கொள்வதற்கு சம்பந்தப்பட்ட இலங்கை இராஜதந்திர குழுவிற்கு ஜனாதிபதி ஆலோசனைகள் வழங்கியுள்ளார்.

மறுபுறம் இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் இம்முறை சமர்ப்பிக்கப்பட உள்ள தீர்மானத்தின் வரைபும் அரசாங்கத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த தீர்மானத்தின் உள்ளடக்கமாக இரு முக்கிய விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதாவது இறுதிக்கட்ட போரில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற குற்றச்சாட்டுக்களுக்கான பொறுப்புக்கூறல் மீதான அரசாங்கத்தின் பாராமுகம் மற்றும் அண்மைய மனித உரிமை மீறல்கள் குறித்த தகவல்களும் தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஆணையாளரின் அறிக்கையுடன் இந்த புதிய தீர்மானமும் முன்வைக்கப்படும் பட்சத்தில் அது இலங்கைக்கு பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்த கூடும்.

எனவே ஜெனிவாவில் இம்முறை ஏற்பட கூடிய சவால்களை எதிர்கொள்ள அரசாங்கம் பல்வேறு வழிகளில் முயன்று வருகின்றது. கடந்த அமர்வுகளை போல் அல்லாது எதிர்ப்பு நிலையிலிருந்து பின்வாங்கவும், ஒத்திசைவாக செயற்பட்டு நெருக்கடிகளுக்கு தீர்வு காணவும் விருப்பத்தை வெளிப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக முக்கிய தகவல் மூலங்கள் குறிப்பிடுகின்றன.

அதிலும் இரு முக்கிய விடயங்கள் குறித்து அரசாங்கம் ஏற்கனவே அவதானதம் செலுத்தியிருந்தது. அதாவது இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளின் ஒத்துழைப்பை முழு அளவில் பெற்று அதனூடாக தீர்மானத்திற்கு எதிராக வாக்கெடுப்பை கோரி தோல்வியடைய செய்தல் மற்றும் சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புகளை பெற்று நெருக்கடிகளுக்கு தீர்வு காணுதல் என்பவையாகும். ஆனால் வாக்கெடுப்பை நடாத்தி பெரும்பான்மை உறுப்பு நாடுகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது என்பது இலங்கைக்கு தற்போதைய நிலைமையில் சாத்தியமற்றது.

அவ்வாறு தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடாத்தி இலங்கை தோல்வியடைந்தால் அதனால் ஏற்பட கூடிய பாதிப்புகள் நாட்டை பாரியளவில் பின்னோக்கி தள்ளிவிடும்.

அதே போன்று உத்தேச தீர்மானத்திற்கும் ஆணையாளின் அறிக்கைக்கும் கடுமையான எதிர்ப்பை வெளியிடுவதன் ஊடாக ஏற்பட கூடிய பொருளாதார மற்றும் சர்வதேச தொடர்புகளின் பாதிப்புகளை உணர்ந்து மென்மையானதும் ஒத்திசைவானதுமான போக்கை வெளிப்படுத்தவே அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அந்த தகவல் மூலங்கள் மேலும் குறிப்பிடுகின்றன.

Posted in Uncategorized

இப்படியும் நடக்கிறது! ஈழநாடு

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக்கோரி கூட்டமைப்பின் பராளுமன்ற உறுப்பினர் சந்திக்குச் சந்தி மேசை வைத்து கடைவிரிக்கின்ற செய்திகள்தான் இப்போது தினமும் வந்தகொண்டிருக்கின்றன.

இந்தக் கொடிய சட்டம் நீக்கப்படவேண்டும் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்கும் என்று நினைக்கவில்லை.

அது நீக்கப்பட்டால் இன்று சிறையில் இருக்கும் பல கைதிகள் வெளியே வந்துவிடுவார்கள். சுமந்திரனின் இந்த முயற்சி பாராட்டுக்குரியதுதான்.

இன்று இருக்கும் ராஜபக்ஷ அரசுக்கு இந்தச் சட்டத்தை நீக்குவதற்கு விருப்பம் இருக்கும் என்று யாரும் நம்பப்போவதில்லை.

ஆனால், இதற்கு முன்னர் ஆட்சியிலிருந்த நல்லாட்சி அரசில் இந்தச் சட்டத்தை நீக்குவதற்கு அனைவரும் விருப்பம் தெரிவிக்காவிட்டாலும், அதில் மாற்றங்களைச் செய்யவேண்டும் என்று அனேகமாக எல்லாருமே சொன்னார்கள். சர்வதேச நியமங்களுக்கு அமைய இந்தச் சட்டத்தை மாற்றவேண்டும் என்ற நிலையிலேயே அன்றைய நல்லாட்சி அரசில் அங்கம்வகித்த பல்வேறு கட்சிகளும் கருத்து வெளியிட்டு வந்தன.

அப்போது, அந்தச் சந்தாப்பத்தை பயன்படுத்தி, அதனை மாற்றியமைக்கவாவது நாம் முயன்றிருக்கலாம். அதிலும், தங்களையே சட்ட மேதைகளாகவும், ஜனநாயக காவலர்களாகவும் காட்டிக்கொண்டவர்கள் பலர் அந்த ஆட்சியில் யானைப் பலத்துடன் இருந்தார்கள். அப்போதெல்லாம் அதுகுறித்து எந்த அக்கறையும் இல்லாம் இருந்தவர்கள் இப்போது எதற்காக இப்படி கிராமம் கிராமமாக போகிறார்கள் என்று இந்த ஊர்க்குருவி யோசித்துக்கொண்டிருந்தபோது, தென்னிலங்கை அரசியல்வாதி ஒருவர் தொடர்புகொண்டு அந்த விடயம் குறித்து கேள்வி எழுப்பினார்.

நல்லாட்சி அரசாங்கம் அமைவதற்கு தீவிரமாக உழைத்தவர்களில் அவரும் ஒருவர். அந்தக் காலத்தில் நமது சுமந்திரனுடன் நெருக்கமாக பணியாற்றியவர்.

இந்த ஊர்க்குருவிக்கு எழுந்த சந்தேகம்தான் அவருக்கும் வந்திருக்கின்றது என்பதை அறிந்து கொள்ள முடிந்தது.

அவரும் கேட்டார், நாங்கள் எல்லோரும் முற்றாக நீக்குவதற்கு தயாராக இருக்கவில்லை என்றாலும், சர்வதேச நியமங்களுக்கு அமைய அதனை மாற்றியமைக்க தயாராகத்தானே இருந்தோம், அப்போது அதனை முன்னின்று செய்திருக்கவேண்டியவர், அப்போது செய்யாமல் இருந்துவிட்டு இப்போது, அதுவும் தெற்கில் ராஜபக்ஷக்கள் அரசியல் இறங்கு முகத்தில் இருக்கும்போது, அவர் இந்த விடயத்தை கையில் எடுத்திருப்பது அவர்களுக்கல்லவா இங்கு பலம் சேர்க்கிறது என்று கேட்டார்.

இந்தச் சட்டம் முற்றாக நீக்கப்படவேண்டும் என்பது நமது விருப்பம். அப்படியிருக்கையில், அதற்காக உழைக்கும் ஒருவர்பற்றி நாமும் குறைகூற முயாதல்லவா?

நான் சொன்னேன்:

“முன்னர் அவர் கனவான் அரசியல் செய்தவர். இவ்வாறு வீதியில் இறங்கியெல்லாம் தன்னால் அரசியல் செய்யமுடியாது என்று நினைத்துக்கொண்டிருந்தவர். ஆனால் இப்போது அப்படியல்ல, தன்னாலும் வீதியில் இறங்கி அரசியல் செய்யலாம் என்று நினைத்து இறங்கிப் பார்த்தார். தன்னாலும் முடியும் என்று தெரிந்தபோது, இப்போது எல்லா விடயங்களையும் கையில் எடுத்துக்கொண்டு வீதிக்கு இறங்கியிருக்கிறார் போலும்’’ என்று அவருக்காக வாதிடவேண்டியதாயிற்று.

அது சரிதான், இப்போது அரசாங்கம் இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்துவதற்காக திருத்தச் சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றில் தாக்கல் செய்திருக்கின்றதே. அதனை வழக்கம்போல சட்ட சவாலுக்கு உட்படுத்துவதை விட்டுவிட்டு, அவர் வீதிக்கு இறங்கியிருப்பதுதான் நமக்குள் கேள்வியை உருவாக்குகின்றது என்றார் அவர்.

சுமந்திரனின் சகபாடியான ஒரு பெண் சட்டத்தரணி, இந்த புதிய சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி, நீதிமன்றப் படிகளில் ஏறியிருக்கிறார். சுமந்திரன் வீதியில் இறங்கியிருக்கிறார் என்று அவருக்கு விளக்கமளித்தேன்!

அந்த சட்டத்தை நீக்கவேண்டும் என்று மேற்குலகும், குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கைக்கு அழுத்தம்கொடுக்கும்போது, அதனை பேசுபொருளாக்கினால் ராஜபக்ஷக்கள் தெற்கில் அரசியல் செய்ய அதுவும் உதவும் என்ற வாதமும் நிராகரிக்கக்கூடியது இல்லைத்தான்.

அதற்காக நாம் இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்துவதும் நல்லதுதானே!

– ஊர்க்குருவி

Posted in Uncategorized

இலங்கை குறித்த மனித உரிமை பேரவை 17 பக்க அறிக்கையில் இரு புதிய விடயங்கள் உள்ளடக்கம்!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரின் 17 பக்க அறிக்கையில் இலங்கை மீது மேலதிக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அறிக்கை குறித்து மார்ச் 3ஆம் திகதி மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட உள்ளது.

கடந்த திங்கட்கிழமை ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாக கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சுக்கு அனுப்பப்பட்ட இந்த அறிக்கை, அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து ஐ.நா. மனித உரிமைப் பேரவையால் எழுப்பப்பட்ட பல பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்தின் அவதானிப்புகள் மற்றும் விளக்கங்களுடன் இந்த அறிக்கை ஜெனீவாவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரின் 17 பக்க அறிக்கையில் சர்வதேச தரத்திற்கு ஏற்ப பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் மாற்றங்களை செய்ய அரசாங்கம் தவறியுள்ளமை குறித்து விசேடமாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன், பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள பயங்கரவாதத் தடைச் சட்ட திருத்தங்கள் குறித்து அதிருப்தியையும் ஆணையாளர் முன்வைத்துள்ளார். இச்சட்டம் தொடர்பாக அரசாங்கம் பலமுறை உறுதியளித்த திருத்தங்கள் அதில் உறுதி செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை பாதிக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை தற்காலிகமாக திரும்பப் பெற வேண்டும் என்று ஐரோப்பிய பாராளுமன்றம் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய-இலங்கை கூட்டு ஆணைக்குழு பெப்ரவரி 8ஆம் திகதி பிரஸ்ஸல்ஸில் கூடிய போது இதற்கான குறிப்பு வெளிப்பட்டது.

இதனைவிட ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் புதிய அறிக்கையில் 2019 உயிர்த்த ஞாயிறு படுகொலைகள் பற்றிய குறிப்புகளும் உள்ளன. கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை முயற்சியின் விளைவாக இந்த விவகாரம் உள்ளடக்கப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணைகளில் சட்டமா அதிபர் சுதந்திரமாக செயற்பட வேண்டும் என மனித உரிமைகள் பேரவை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் மீதான குற்றச்சாட்டுக்களை நிராகரித்து, கொழும்பு மேல் நீதிமன்றம் அவர்களை விடுத்துள்ளமை சட்டமா அதிபர் குறித்த விமர்சனங்களை தோற்றுவித்துள்ளது. அவர்கள் மீது 855 குற்றச்சாட்டுகளை சட்டமா அதிபர் பதிவு செய்தார். ஆனால் எதுவும் நிரூபிக்கப்படவில்லை.

இதேவேளை, பெப்ரவரி 28 ஆம் திகதி ஆரம்பமாகும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை 49 ஆவது அமர்வில் இலங்கை விவகாரம் குறித்த வாக்கெடுப்பு இடம்பெறாது. எனினும், இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை தொடர்பான மற்றொரு தீர்மானத்திற்கு முன்னோடியாக இந்த அமர்வு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

“ கொரியாவிலிருந்து அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்த எனக்கு பல்லினத்தன்மை, சகிப்புத்தன்மை என்பன முக்கியமான விடயங்களாகும் ” – இலங்கைக்கான புதிய அமெரிக்கத்தூதுவர்

அமெரிக்கப்பிரஜை என்ற ரீதியில் நான் முதலாவது தலைமுறையைச் சேர்ந்தவளாவேன். எனக்கு ஐந்து வயதாக இருந்தபோது எனது குடும்பம் கொரியாவிலிருந்து அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்தது.

ஆகவே என்னைப்பொறுத்தமட்டில் பல்லினத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மை என்பன மிகவும் முக்கியமான விடயங்களாகும் என்று தெரிவித்துள்ள இலங்கைக்கான புதிய அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், இலங்கைக்கு மீண்டும் வருகைதருவது கனவொன்று நனவானதைப்போன்ற விடயமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கான புதிய அமெரிக்கத்தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜுலி சங் சனிக்கிழமை (19 )கொழும்பை வந்தடைந்துள்ள நிலையில், இலங்கை மக்களுக்குத் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் வகையில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தின் ஊடாகப் பகிர்ந்திருக்கும் காணொளியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கின்றார்.

அக்காணொளியில் ஜுலி சங் மேலும் கூறியிருப்பதாவது:

என்னைப்பொறுத்தமட்டில் இலங்கைக்கு மீண்டும் வருகைதருவது கனவொன்று நனவானதைப்போன்ற விடயமாகும்.

நான் பத்து வருடங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வருகைதந்திருந்தேன். அந்த நினைவுகள் இப்போதும் தெளிவாகவும் புதிதாகவும் என்னுள் பதிந்திருக்கின்றன.

ஆச்சரியம் மிகுந்த இயற்கை அழகு, சுவையான உணவுப்பொருட்கள் மற்றும் வாசனைத்திரவியங்கள் புகையிரம் மற்றும் முச்சக்கரவண்டிகள், அவையனைத்திற்கும் மேலாக அப்போது நான் சந்தித்த இலங்கை மக்கள் காண்பித்த அன்பு உள்ளிட்ட அனைத்தும் நினைவிருக்கின்றன.

இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது இலங்கைக்கான தூதுவராகப் பதவியேற்பது எனக்குக் கிடைத்த கௌரவமாகும்.

அதனூடாக இலங்கையின் கலாசாரம், பாரம்பரியம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் மேலும் அறிந்துகொள்வதற்கு எதிர்பார்க்கின்றேன்.

உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் குடியேறிய மக்களின் முயற்சியினால் கடந்த இரு நூற்றாண்டு காலமாக நவீன தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் புத்தாக்கங்களை உள்வாங்கி அமெரிக்கா முன்னேற்றம் கண்டிருப்பதுடன் அதன் பொருளாதார வளர்ச்சிக்குப் பலரும் பங்களிப்புச்செய்திருக்கின்றார்கள்.

அந்த முயற்சி இலங்கைக்கான தூதுவர் என்ற ரீதியில் நான் ஆற்றவிருக்கும் பணியிலும் பிரதிபலிக்கும். அதன்படி இலங்கையிலுள்ள சிவில் சமூக அமைப்புக்கள், வர்த்தகத்துறையினர் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்ட தரப்புக்களுடன் ஒன்றிணைந்து பணியாற்றுவதன் ஊடாக மக்களுக்கு இடையிலான தொடர்புகளை வலுப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளேன்.

இவற்றுக்கு முன்னர் என்னைப் பற்றிய சில விடயங்களைப் பகிர்ந்துகொள்வதற்கு விரும்புகின்றேன்.

அமெரிக்கப்பிரஜை என்ற ரீதியில் நான் முதலாவது தலைமுறையைச் சேர்ந்தவளாவேன். எனக்கு ஐந்து வயதாக இருந்தபோது எனது குடும்பம் கொரியாவிலிருந்து அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்தது.

ஆகவே பல்லினத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மை என்பன எனக்கு மிகமுக்கியமான விடயங்களாக இருப்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை.

எனது குடும்பம் இலங்கை – அமெரிக்க சமூகத்தினர் பெருமளவிற்கு செறிந்துவாழும் பகுதியான கலிபோர்னியாவில் குடியேறியது.

இந்நிலையில் எமது செல்லநாய் மார்த்தாவுடன் எனது கணவர் மற்றும் மகனும் என்னுடன் இலங்கைக்கு வருகின்றார்கள்.

அதேபோன்று மலையேறல், நீச்சல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டுக்களையும் பார்வையிடுவது எனக்குப் பிடித்த விடயமாகும்.

எனவே குறிப்பாக கிரிக்கெட் பற்றி அறிந்துகொள்வதற்கும் இலங்கையின் தேசிய அணியை ஊக்குவிப்பதற்கும் எதிர்பார்த்துள்ளேன்.

என்னை இலங்கைக்கு வரவேற்றமைக்கு நன்றி கூறுவதுடன் இயலுமானவரை உங்களில் பலரைச் சந்திப்பதற்கு ஆர்வத்துடன் இருக்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக இல்லாமல் செய்ய மாநகர சபை அமர்வில் பிரேரணை ரெலோ உப தலைவர் ஹென்றி மகேந்திரன்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக இல்லாமல் செய்வதற்கு எதிர்வரும் மாநகர சபை அமர்வில் பிரேரணை ஒன்றினை நிறைவேற்ற தீர்மானித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் முன்னாள் மாநகர சபையின் எதிர்கட்சி உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் செயலாளர் நாயகமும் தற்போதைய உப தலைவருமான ஹென்றி மகேந்திரன் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணியின் ஏற்பாட்டில் பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் இடம்பெறும் கையெழுத்துப் போராட்டத்தின் ஓரங்கமாக அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை(20) அன்று மாலை நடாத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது

பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்து செய்யக்கோரி நாடளாவிய ரீதியில் இடம்பெறும் கையெழுத்து போராட்டத்தின் ஓரங்கமாக இன்று அம்பாறை மாவட்டத்தில் கல்முனை காரைதீவு உள்ளிட்ட பல இடங்களில் கையெழுத்து வேட்டை நடைபெற்றது.இதில் குறித்த தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதற்கு ஒவ்வொருவரும் தத்தமது கையொப்பங்களை இட்டு இப்போராட்டத்தில் இணைந்து கொண்டு உங்களினதும் உங்கள் சந்ததியின் பாதுகாப்புக்காகவும் பாடுபட முன்வர வேண்டும்.

இந்த நாட்டில் கொடூரமான தடைச்சட்டமாக பயங்கரவாத தடைச்சட்டம் இருப்பதை நாம் அறிவோம்.அந்த வகையில் தற்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணியின் ஏற்பாட்டில் கையெழுத்து போராட்டமானது மேற்கொள்ளப்படுகின்றது.எனவே இந்த சட்டத்தை முற்றாக எமது நாட்டில் இருந்து அகற்றுவதற்கு தமிழ் பேசும் மக்களாகிய நாங்கள் அனைவரும் முன்வர வேண்டும்.அத்துடன் நாம் அங்கம் வகிக்கின்ற கல்முனை மாநகர சபையில் கூட எதிர்வரும் மாதாந்த அமர்வில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக இல்லாமல் செய்வதற்கு பிரேரணை ஒன்றினை நிறைவேற்ற தீர்மானித்துள்ளோம்.எமது மாநகர சபைக்கு தமிழர்கள் தரப்பில் தார்மீக ஆதரவினை வழங்கி வருகின்றோம்.அந்த வகையில் முழு மாநகர உறுப்பினர்களும் இப்பிரேரணைக்கு தத்தமது ஆதரவினை வழங்குவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.

மேற்படி விசேட செய்தியாளர் சந்திப்பில் தமிழரசுக்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரும் கல்முனை மாநகர சபை முன்னாள் எதிர்கட்சி தலைவருமான குஞ்சுத்தம்பி ஏகாம்பரம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினர்களான அழககோன் விஜயரட்ணம் சோ.குபேரன் தி.இராசரட்ணம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.