அரசாங்கத்தினால் பதில் வழங்க முடியாமல்போன 50 வினாக்களுக்கு பதிலளிக்க சந்தர்ப்பம்

விசேட நாடாளுமன்ற தினமாக எதிர்வரும் நவம்பர் 08 ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான செயற்குழுவில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சபைத் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் பதில் வழங்க முடியாமல்போன 50 வினாக்களுக்கு பதிலளிக்க சந்தர்ப்பம் வழங்குவதற்காக இந்த விசேட நாடாளுமன்ற தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதான ஏற்றுமதி பயிர்களின் விலை உள்நாட்டு சந்தையில் அதிகரிப்பு

கறுவா, மிளகு, சாதிக்காய், கராம்பு மற்றும் கோப்பி உள்ளிட்ட பிரதான ஏற்றுமதி பயிர்களின் விலையில் உள்நாட்டுச் சந்தையில் அதிகரித்துள்ளன.

அதேநேரம் நாட்டில் டொலருக்கான பற்றாக்குறை நிலவிய போதிலும் கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் குறித்த பொருட்களின் ஏற்றுமதிகள் ஊடாக 350 மில்லியன் அமெரிக்க டொலர் இலாபம் ஈட்டப்பட்டுள்ளதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு சந்தையில் 500 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வந்த மிளகு 1கிலோவின் விலையானது தற்போது 900 ரூபாவாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, கறுவா 1கிலோ 3,400 ரூபாவாகவும், கராம்பு 1கிலோ 1,400 ரூபாவாகவும், 1 கிலோ கோப்பி 1,250 ரூபாவாகவும், 1கிலோ பாக்கு 1,000 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மிளகு, கறுவா, கிராம்பு உள்ளிட்ட பிரதான பயிர்கள் 45,000 மெட்ரிக் டன் அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக இத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவின் 29 ஆவது சர்வதேச விமான நிலையம் திறப்பு

இந்தியாவின் 29 ஆவது சர்வதேச விமான நிலையமான குஷிநகர் சர்வதேச விமான நிலையம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் இன்று புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் கட்டு நாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று அதிகாலை புறப்பட்டுச் சென்ற விசேட விமானம் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தில் 1வதாக தரையிறங்கியது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான யூ.எல் 1147 என்ற இந்த விசேட விமானத்தில், 95 தேரர்கள் உள்ளடங்கலாக 111 பயணிகள் புறப்பட்டுச் சென்றனர்.

Posted in Uncategorized

புதிய அரசியலமைப்பு சட்டமூல தயாரிப்பு நிறைவு

புதிய அரசியலமைப்பு தயாரிப்புக்காக சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஸ நியமித்த விசேட குழு புதிய அரசியலமைப்புக்கான சட்டமூலம் தயாரிக்கும் நடவடிக்கைகளை நிறைவு செய்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்புக்கான சட்டமூலம் தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு கையளிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த வருட இறுதிக்குள் அது அரசாங்கத்திடம் கையளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் புதிய அரசியலமைப்பு நாடாளுமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்படும் வாய்ப்பு காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு அதனை நாட்டில் நடைமுறைப்படுத்தப் போவதாக சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஸ நாட்டு மக்களுக்கு தெளிவாக கூறியுள்ளார்.

நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள அரசியலமைப்பானது ஜே.ஆர். ஜயவர்தன ஜனாதிபதியின் யுகத்தில் 1978 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டதாகும்.

கடந்த நான்கரை தசாப்தங்களாக நாட்டு மக்கள் பெரும் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளனர். அதற்கிணங்க புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்காக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஸ, சட்டத்தரணிகள் மற்றும் கல்விமான்களைக் கொண்ட விசேட குழுவை நியமித்தார்.

அந்த குழுவின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா செயற்படுவதுடன் அந்தக் குழு தற்போது அரசியலமைப்புக்கான சட்டமூலத்தை தயாரிக்கும் நடவடிக்கைகளை நிறைவு செய்துள்ளது.

அந்த சட்ட மூலம் தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு இறுதி ஆவணம் தயாரிக்கப்படவுள்ளது.

இந்த வருட இறுதிக்குள் அது அரசாங்கத்திடம் கையளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2022 ஜனவரி மாதத்தில் புதிய அரசியலமைப்பை கவனத்திற் கொள்ள வேண்டிய வாய்ப்பு நாடாளுமன்றத்திற்கு கிடைக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு நீடிப்பு

தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய எதிர்வரும் 31 ஆம் திகதி வரை, தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் ஜனாதிபதி – ஆளும் கட்சியினருக்கு அழைப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளை வியாழக்கிழமை இடம்பெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது நாடாளுமன்றத்திற்கு சமூகமளிக்க வேண்டும் என அறிவறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

ஆளும் கட்சிக்குள் காணப்படும் கருத்து முரண்பாடுகள் தொடர்பில் ஆளும் கட்சி உறுப்பினர்களை ஜனாதிபதி சந்தித்துக் கலந்துரையாடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது

Posted in Uncategorized

சம்பளத்தை குறைக்கும் அதிகாரம் மாகாண ஆளுநருக்கு இல்லை – ஆசிரியர் சேவை சங்க பொதுச் செயலாளர்

பணிக்கு வராத ஆசிரியர்களின் நவம்பர் சம்பளம் நிறுத்தப்படும் என்ற தனது அறிக்கையை வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே திரும்பப் பெற வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் சம்பளத்தை குறைக்கும் அதிகாரம் மாகாண ஆளுநருக்கு இல்லை என்றும்  இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மகிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களின் சம்பளத்தை பாதிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இதை நாட்டின் குறிப்பாக வடமேல் மாகாண ஆசிரியர்களுக்கு வலியுறுத்துகிறோம்.

நாங்கள் கண்டிப்பாக இந்த வேலைநிறுத்தத்தை 21-22 தொடங்குவோம். முடிந்தால், உங்கள் நவம்பர் சம்பளத்தை இழந்து உங்கள் சக்தியைக் காட்டுங்கள், பின்னர் ஆசிரியர்களின் அதிபர்களின் அதிகாரத்தையும் காண்பிப்போம் என்றும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மகிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்களுக்கு எதிரான போராட்டம் ஏற்புடையதல்ல – சுரேஷ் பிரேமச்சந்திரன்

இந்திய மீனவர்களுக்கு எதிரான போராட்டம் நடத்துவது என்பதும் அதற்கு எதிராக போர்க்கொடி உயர்த்துவது என்பதும் ஏற்புடையது அல்ல என, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

பேசி தீர்க்கப்பட வேண்டிய ஒரு விடயத்துக்கு தமிழக மீனவர்களுக்கு எதிரான போராட்டம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனவும், அவர் கூறினார்.

யாழ்ப்பாணத்தில், நேற்று (19) மாலை, நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், எல்லா மீனவர்களும் எங்கே மீன்வளம் இருக்கின்றதோ அந்த மீன் வளத்தை தேடிப் போவது என்பது இயற்கையான ஒன்று என்றார்.

இப்பொழுது இந்திய அரசாங்கத்துக்கு எதிராக, மீனவர்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்துவது என்பது, சரியான வழிமுறை அல்ல எனத் தெரிவித்த அவர், தாங்கள் பாரிய ஒரு போராட்டத்தை நடத்த உதவி ஒத்தாசையாக இருந்தது தமிழகம் எனவும் கூறினார்.

‘தமிழகத்தில், இலட்சக்கணக்கான எங்களுடைய மக்கள் எதிலிகளாக போயுள்ளனர். அவர்களை பராமரிப்பது தொடக்கம் அனைத்து தேவைகளையும் தமிழக அரசே மேற்கொண்டு வருகின்றது. ஆனால் இங்கே சில அசம்பாவிதங்கள் நடப்பது என்பது உண்மை. ஆனால் அதை பேசி தீர்க்கப்பட வேண்டிய விடயங்கள். இந்திய அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் ஒரு பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு கண்டு, சுமூகமான முறையில் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும், அவர் தெரிவித்தார்.

இந்திய மீனவர்களை எமது தொழிலாளர்கள் தாக்குவது, எமது மீனவர்களை இந்திய தொழிலாளர்கள் தாக்குவது ஏற்புடைய ஒரு விடயமல்ல எனத் தெரிவித்த அவர், தற்போதுள்ள மீன்பிடித்துறை அமைச்சரும் அவர் சார் அதிகாரிகளும் ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள் என்று ஒரு சந்தேகம் தங்களுக்கு தோன்றுவதாகவும் கூறினார்.

‘தென்பகுதி மீனவர்கள் தங்கி நின்று மீன்பிடி நடவடிக்கையில் மேற்கொள்கின்றார்கள். அதற்கு எதிரான எந்தத் தரப்பிலிருந்தும் எந்த அரசியல்வாதியும் போராட்டங்களை மேற்கொண்டதில்லை. அதேபோல், தென் பகுதியில் இருந்து முல்லைத்தீவு மாவட்டத்தில், சிங்கள மீனவர்கள் குடியேற்றம் செய்யப்படுகின்றனர். அதற்கு எதிராக எங்களுடைய அரசியல் வாதிகள் யாராவது போராட்டம் மேற்கொண்டார்களா? அவ்வாறான விடயங்கள் எதுவும் நடக்கவில்லை’ என்றும், சுரேஷ் கூறினார்.

Posted in Uncategorized

நாட்டில் பசுவதையை தடை செய்ய நடவடிக்கை

இலங்கையில் பசுவதையை தடை செய்வது தொடர்பிலான ஐந்து சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த சட்டமூலத்தை வர்த்தமானியில் வௌியிடவும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய,

⭕ 272 ஆம் அத்தியாயத்தின் 1983 ஆம் ஆண்டு 09 ஆம் இலக்க பசுவதை கட்டளைச் சட்டம்

⭕ 1958 ஆம் ஆண்டு 29 ஆம் இலக்க விலங்குகள் சட்டம்

⭕ 252 ஆம் அத்தியாயத்தின் மாநகர சபைகள் கட்டளைச் சட்டம்

⭕ 255 ஆம் அத்தியாயத்தின் நகர சபைகள் கட்டளைச் சட்டம்

⭕ 1987 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டம்

ஆகிய 05 சட்டங்களை திருத்தம் செய்வதற்கான சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இது உள்ளூர் விவசாயத் துறை மற்றும் உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிப்பதை நோக்கமாக கொண்டது.

Posted in Uncategorized

ஆப்கானில் போலியோ தடுப்பு மருந்து முகாம்களை நடத்த திட்டம்

ஆப்கானிஸ்தானில் நாடளாவிய ரீதியில் போலியோ தடுப்பு மருந்து முகாம்களை நடத்தவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

அடுத்த மாத ஆரம்பத்தில் இந்த முகாம் முன்னெடுக்கப்படவுள்ளதாக யுனிசெஃப் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

போலியோ தடுப்பு மருந்து முகாமை நடத்துவதற்கு தலிபான்களின் முழு ஆதரவு உள்ளதாக யுனிசெஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெண் ஊழியர்கள் போலியோ தடுப்பு மருந்து முகாமில் பங்கெடுக்கவும் முகாமை நடத்துவதற்கு போதிய பாதுகாப்பு வழங்கவும் தலிபான்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக யுனிசெஃப் குறிப்பிட்டுள்ளது.

பல வருடங்களின் பின் முதல்தடவையாக ஆப்கானிஸ்தானில் போலியோ தடுப்பு மருந்து வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized