யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு ஒத்திவைப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக் கழக 35ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி தற்போதைய கொரோனா பெருந்தொற்று நிலைமைகளைக் கருத்தில் கொண்டு அடுத்த மாதம் 7, 8, 9 ஆம் திகதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஊடகப் பிரிவினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஊடகப் பிரிவினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அந்தச் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு:

யாழ்ப்பாணப் பல்கலைக் கழக 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதியை இம்மாதம் 16 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும் நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பட்டமளிப்பு விழா ஏற்பாடுகள் பற்றி ஆராய்வதற்காக பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாக் குழு இன்று 8 ஆம் திகதி புதன்கிழமை காலை துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் கூடியது.

தற்போதைய நிலைமைகள் பற்றி ஆராய்ந்த குழு, நாட்டின் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பட்டமளிப்பு விழாவை அடுத்த மாதம் 07 ஆம் திகதி முதல் 09 திகதி வரை யாழ். பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடாத்துவதெனத் தீர்மானித்துள்ளது.

எனினும் சூழ்நிலைகளைப் பொறுத்து குறித்த தினங்களில் பட்டமளிப்பு விழாவைத் திட்டமிட்டபடி பட்டதாரிகளுடன் நடாத்த முடியாத நிலைமை ஏற்பட்டால் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பட்டமளிப்பு விழாவை நிகழ்நிலையில் நடாத்தி பட்டங்களை உறுதிப்படுத்துதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் பட்டமளிப்பு விழாவை நிகழ்நிலைக்கு மாற்றுவது தொடர்பான இறுதித் தீர்மானம் இம்மாதம் 23 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்றும் அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கு பயணம் செய்ய வேண்டாம் – அமெரிக்கா அறிவிப்பு

கொவிட் ஆபத்து காரணமாக இலங்கைக்கு பயணம் செய்ய வேண்டாம் என அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அந்நாட்டு குடிமக்களுக்கு அறிவித்துள்ளது.

கொவிட் அபாயத்தின் அடிப்படையில் இலங்கையை 4 வது மட்ட அதிக ஆபத்து உள்ள நாடுகளில் ஒன்றாக பெயரிட்டு அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் இதனை குறிப்பிட்டுள்ளது.

இலங்கையைத் தவிர, ஜமைக்கா மற்றும் புருனே ஆகிய நாடுகளை அதிக ஆபத்து உள்ள நாடுகளாக அமெரிக்கா பட்டியலிட்டுள்ளது.

அத்தியாவசிய கடமைக்காக இலங்கைக்குச் செல்ல விரும்பினால், முழுமையான தடுப்பூசி டோஸ்களை பெற்றிருக்க வேண்டும் என அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் தற்போதைய நிலைமையின் படி முழுவதுமாக தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களுக்கும் கொவிட் தொற்று ஏற்படும் வாய்ப்பு மற்றும் பரவும் வாய்ப்பு அதிகமாக காணப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Posted in Uncategorized

கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 646 பேருக்கு கொரோனா

நாட்டில் மேலும் 646 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

இன்று இதுவரையில் 2,915 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 474,780 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 389,969 ஆக அதிகரித்துள்ளது.

அதே நேரம் நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 185 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.

குறித்த அனைவரும் நேற்றைய தினம் (07) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10,689 ஆக அதிகரித்துள்ளது.

இனச் சுத்திகரிப்பு பற்றிப் பேசுவோர் கிழக்கின் படுகொலைகள் பற்றியும் நினைவில் கொள்ள வேண்டும் – ரெலோவின் பிரதித் தலைவர் பிரசன்னா

வடக்கில் இடம்பெற்ற இனச்சுத்திகரிப்பு பற்றி நீலிக்கண்ணீர் வடிக்கும் எம்மவர்கள் கிழக்கில் மாற்றுச் சமூகத்தினால் இடம்பெற்ற இனஅழிப்பு தொடர்பில் ஏன் கருத்திட மறுக்கின்றார்கள். இனச் சுத்திகரிப்பு பற்றிப் பேசுவோர் கிழக்கில் இடம்பெற்ற படுகொலைகள் பற்றியும் நினைவில் கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாணசபையின் முன்னாள் பிரதித் தவிசாளரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதித் தலைவருமான இந்திரகுமார் பிரசன்னா தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய அரசியற் நிலவரம் தொடர்பில் இன்றைய தினம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்டோர் அம்மக்களின் உணர்வுகளை மதித்து தங்கள் கருத்துக்களை வெளியிட வேண்டும். தாம் யதார்த்தமாகப் பேசுகின்றோம் என்ற எண்ணப்பாட்டில் தமிழ் மக்களின் உணர்வுகளைச் சீண்டும் முகமாகச் செயற்படுதல் கூடாது.

அனைத்து இனங்களையும் மதிக்க வேண்டும் என்பது உண்மையான விடயமே. ஆனால் எம்மின மக்களைக் காயப்படுத்தி அதன் மூலம் மாற்றுச் சமூகத்தைத் திருப்திப்படுத்த எண்ணுவது எந்த வகையிலும் நியாயமாகாது.

அண்மையில் எமது பாராளுமன்ற உறுப்பினரொருவர் யுத்த காலத்தின் போது வட மாகாணத்திலிருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்ட நடவடிக்கை இனச்சுத்திகரிப்பு என்ற வகையில் இடம்பெற்றது. இது குறித்து தாம் வெட்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இது இன்று நேற்றல்ல அவர் காலா காலமாகச் சொல்லிக் கொண்டு வரும் விடயமே. ஆனால் தேவையற்ற சந்தர்ப்பங்களில் இதனை அவர் குறிப்பிட்டு வருவது தமிழ் மக்களை இன்னும் மனம்நோகச் செய்யும் விடயமாகும்.

நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர். தனியே தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றே நாம் மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்படுகின்றோம். எமக்கு மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வாக்களிப்பதும் இல்லை, வாக்களிக்கவும் மாட்டார்கள். எனவே அவர்களைத் திருப்திப்படுத்த எம் சமூகத்தை நோகடிப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இது அரசியலுக்காவோ, வாக்கிற்காகவோ அன்றி தனிமனித விழுமியம் சார்ந்த விடயமாகவே இருக்கின்றது.

நாம் வடக்கு கிழக்குப் பிராந்தியங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள். எமது கருத்துக்கள் இரண்டு பிராந்தியங்களையும் சார்ந்தே இருக்க வேண்டும். வடக்கில் இடம்பெற்ற இனச்சுத்திகரிப்பு பற்றி நீலிக்கண்ணீர் வடிக்கும் எம்மவர்கள் கிழக்கில் மாற்றுச் சமூகத்தினால் இடம்பெற்ற இனஅழிப்பு தொடர்பில் ஏன் கருத்திட மறுக்கின்றார்கள்.

வரலாறு என்பது அனைவருக்கும் ஒன்றே. ஒரு இனத்தை அழிக்காமல் அவர்களை உயிருடன், பாதுகாப்பாக வெளியேற்றியமை தொடர்பில் வெட்கப்படும் நம்மவர்கள் எமது இன மக்களை கொத்துக் கொத்தாகக் காட்டிக் கொடுத்தும் எல்லைப் புறக் கிராமங்களில் வெட்டியும், சுட்டும் இனஅழிப்புச் செய்த விடயத்திற்கு என்ன சொல்லப் போகின்றார்கள். எத்தனை அழிப்புகள் கிழக்கில் இடம்பெற்றன. இதற்கெல்லாம் வெட்கப்பட மாற்றுச் சமூகத்தில் இரந்து எந்தப் பிரதிநிதியும் வரமாட்டார்கள்.

ஊர்காவற்படை, புலனாய்வாளர்கள் என்ற பெயரில் எத்தனையோ அழிப்புகள் கிழக்கில் இடம்பெற்றன. இந்த அழிப்புகளில் கிழக்கு மாகாணத்தில் எத்தனை தமிழ் கிராமங்கள் இல்லாமல் போயிருக்கின்றன. இவைகளை பற்றியும் சற்று அறிந்து கொள்ள வேண்டும். இதற்கெல்லாம் யார் வெட்கப்படப் போகின்றார்கள்.

வெறுமனே தாம் அறிந்த விடயங்களை வைத்து மாத்திரம் கருத்திடல் தமிழ்த் தேசியத்திற்குப் பொருந்தாத ஒன்றாகும். கிழக்குத் தமிழ் மக்களையும் நினைவில் வைத்து தங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள். பாதிப்புற்ற ஒரு சமூகம் தமக்காக பாடுபடும் கட்சி என்ற நம்பிக்கையில் தான் எம்முடன் அன்ற தொட்டு இருக்கின்றார்கள். அந்த நம்பிக்கையைச் சீர்குலைக்கும் விதத்தில் கருத்துக்கள் வருவது நல்லதல்ல.

மேற்குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினரின் செயற்பாடுகள், நடவடிக்கைகளை நாம் மதிக்கின்றோம். ஆனால் இவ்வாறான கருத்துக்கள் மூலம் அவர் மீது கொண்டுள்ள மதிப்பினை  அவரே குறைத்துக் கொள்ளக் கூடாது. எமது பிரச்சினைகள் தொடர்பில் அவரால் மேற்கொள்ளப்பட்ட, மேற்கொள்ளப்படுகின்ற விடயங்கள் முக்கியம் வாய்ந்தவை. இருப்பினும் தாம் இடும் கருத்துக்கள் தொடர்பில் அவர் கரிசனை கொள்ள வேண்டும். இனியாவது அவர் விடுகின்ற அறிக்கைகள் மேலும் மேலும் நிந்தனைக்குள்ளான தமிழ் சமூகத்திற்கு இன்னலை ஏற்படுத்துவதாக அமையக் கூடாது என்பதே எமது நோக்கம், எமது மக்களின் நோக்கமும் அதுவேயாகும் என்று தெரிவித்தார்.

Posted in Uncategorized

நிதி திருத்தச் சட்டமூலம் நிறைவேறியது

வெளிப்படுத்தப்படாத சொத்துக்கள் தொடர்பான நிதி திருத்தச் சட்டமூலம் 90 மேலதிக வாக்குகளால் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலம் மீதான விவாதம் இன்று காலை முதல் நடத்தப்பட்டதுடன், அதனை தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு அதன் மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதன்போது குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 134 வாக்குகளும், எதிராக 44 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதன்படி இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
வெளிப்படுத்தப்படாத சொத்துக்களை சட்டப்பூர்வமாக்கி, அதற்கான வரியின் பெறுமதிக்கு ஏற்றால் போன்று சமனான நிதியை முதலீடு செய்வதற்கு ஏற்ற வகையில் இந்த சட்டமூலம் நிதி அமைச்சரினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்தது.

Posted in Uncategorized

அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகத்துக்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ள அதிகாரம்

பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 5ஆவது பிரிவின் பிரகாரம், அத்தியாவசியச் சேவைகளைப் பேணுவது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் நடைமுறைப்படுத்துவது மற்றும் ஒருங்கிணைப்பது அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகத்தின் கடமையாகும்  என்று ஜனாதிபதியின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகத்துக்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ள அதிகாரம் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில்,

நெல், அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை மொத்தமாக பதுக்கி வைத்தல், அதிக விலையைஅறவிடல் மூலம், நுகர்வோருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடிய சந்தை முறைகேடுகளைத் தடுக்க, பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2ஆவது பிரிவின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், அக்கட்டளைச் சட்டத்தின் iiஆம் பிரிவின் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தி, 5ஆவது பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம்தயாரிக்கப்பட்ட அத்தியாவசிய உணவு விநியோகத்துடன் தொடர்புடைய அவசரகாலச் சட்ட விதிமுறைகள், வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளன.

அந்த வகையில், பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 5ஆவது பிரிவின் பிரகாரம், அத்தியாவசியச்சேவைகளைப் பேணுவது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் நடைமுறைப்படுத்துவது மற்றும்ஒருங்கிணைப்பது, அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகத்தின் கடமையாகும்.

இந்த உத்தரவின் கீழ், தங்கள் கடமைகளைச் செய்யத் தேவையான பிரதி ஆணையாளர்கள் அல்லது உதவிஆணையாளர்களை, அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளரினால் நியமிக்க முடியும்.

அத்தியாவசியச் சேவைகள் பேணப்படுவதை உறுதி செய்வதற்காக, பிரிவு 5இன் உத்தரவின் கீழ் நியமிக்கப்பட்டஎந்தவொரு தகுதிவாய்ந்த அதிகாரிக்கும், அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகத்தினால் உத்தரவுபிறப்பிக்கலாம். இவ்வாறு வழங்கப்படும் அனைத்து உத்தரவுகளுக்கும் இணங்கிச் செயற்படுவது, உரிய அதிகாரியின், பதவி வகிப்பவரின் அல்லது ஒருங்கிணைப்பு அதிகாரியின் கடமையாகும்.

அந்த வகையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை இயல்பு நிலையில் பேணும் வகையில், நெல், அரிசி, சீனிஉள்ளிட்ட ஏனைய நுகர்வுப் பொருட்களின் விநியோகத்தை ஒருங்கிணைப்புச் செய்வதற்காக, அத்தியாவசியச்சேவைகள் ஆணையாளர் நாயகத்துக்கு ஜனாதிபதி அதிகாரம் அளித்துள்ளார்.

அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகத்தினால் மாவட்டச் செயலாளர்களுக்குப் பணிப்புரை வழங்கமுடியாது என்று கூறி மக்களைப் பிழையாக வழிநடத்தும் வகையில், எதிர்க் கட்சியினரால் நேற்றைய (06) பாராளுமன்ற அமர்வின் போது கருத்து வெளியிட்டமை தவறாகும்.

பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 5ஆவது பிரிவின் பிரகாரம், மாவட்டச் செயலாளர்கள் மற்றும்பிரதேசச் செயலாளர்கள் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை வழங்கும் முழுமையான அதிகாரம், அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகத்துக்கு உள்ளதென, ஜனாதிபதியின் செயலாளர்சுட்டிக்காட்டியுள்ளார்.

Posted in Uncategorized

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீது கல்வீச்சு

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒன்டாரியோ பிராந்தியத்தில் தனது தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்ட போது ஆர்ப்பாட்டக்காரர்களால் கல் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கனடாவில் எதிர்வரும் 20ஆம் திகதி இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலுக்காக அவர் தனது பிரசார பஸ்ஸில் திரும்பிக் கொண்டிருந்தபோதே இக் கல் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும் அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Posted in Uncategorized

இராஜாங்க அமைச்சர் கப்ரால் இராஜினாமா?

நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தன்னுடைய இராஜாங்க அமைச்சுப் பதவியையும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் இராஜினாமா செய்யவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன் பின்னர், மத்திய வங்கியின் ஆளுநராக அவர், மீண்டும் பதவியேற்க உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து விலகி, பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் யோசித ராஜபக்‌ஷவுக்கு வழங்கப் போகிறீர்களாமே என்கிற எதிர்க்கட்சியின் கேள்விக்கு, நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் பதிலளிக்க மறுத்துள்ளார்.

பாராளுமன்றத்தின் இன்றைய (07) அமர்வில் கலந்துக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்  சமன் பிரியந்த ஹேரத், “நிதி இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து  விலகுவதற்கு நீங்கள் தீர்மானித்துள்ளதாகவும் உங்களுக்கு வேறு ஒரு உயர்  பதவி காத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது உண்மையா?“ என்றார்.

எனினும், இடையீட்டு கேள்வியானது, தான் பதிலளித்த கேள்வியுடன் தொடர்புப்படாத  கேள்வியாகும் எனக் கூறிய இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், இராஜினாமா தொடர்பான கேள்விக்கு  பதிலளிக்க மறுத்துவிட்டார்.

மக்களின் உரிமைகளை அடக்கும் எந்த விடயங்களும்  இல்லை – அலிசப்ரி

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டஅவசரகால சட்டத்தில் எதிர்க்கட்சியினர் தெரிவிப்பதுபோல் மக்களின் அடிப்படை உரிமைகளை அடக்கும் விடயங்கள் எதுவும் இல்லை என நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் அவசரகால சட்ட ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதியின் அறிவிப்பின் முதலாவது பகுதியில் பொருட்கள் பதுக்கி வைத்திருந்தால் அவற்றை கைப்பற்றி நியாயமான விலைக்கு விற்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பாவனையாளர்கள் தான் நன்மை அடைவர். இதனை பயன்படுத்தி எவ்வாறு வேறு நோக்கங்களை நிறைவேற்ற முடியும்.

ஆனால் உத்தரவாத விலையை நிர்ணயித்து அதிக விலைக்கு விற்றால் வழக்கு தொடர மட்டுமே இதனால் முடியும். ஆனால் நடைமுறையில் இருக்கும் இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியாது.

நாட்டின் மொத்த உள்நாட்டு தேவையில் 18 வீதம் தான் இங்கு உற்பத்தியாகிறது. 82 வீதம் இறக்குமதி செய்யப்படுகிறது. அதனை வியாபாரிகள் பயன்படுத்தி மக்களை சூறையாடுகின்றனர். இதனை கட்டுப்படுத்தவே ஜனாதிபதி அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்த நடவடிக்கை எடுத்தார் என்றார்.

அசாத் சாலியை விடுதலை செய்யமாறு நீதிமன்றில் கோரிக்கை

முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் அல்லது ஐ.சி.சி.பி.ஆர். எனும் சிவில் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் கீழ் எந்த சாட்சியங்களும் இல்லாததால் அவரை விடுதலை செய்ய வேண்டும் என நீதிமன்றில் கோரப்பட்டுள்ளது.

அசாத் சலி விவகார வழக்கு விசாரணைகள், இன்று நகர்த்தல் பத்திரம் ஊடாக கொழும்பு பிரதான நீதிவான் புத்திக ஸ்ரீ ராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

நீதிவானின் உத்தியோகபூர்வ அறையில் வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. இதன்போது அசாத் சாலி சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன சி.ஐ.டி. முன்னெடுத்த விசாரணைகளின் தொகுப்பு மன்றில் முன் வைக்கப்பட்டுள்ள நிலையில், அதில் அசாத் சாலிக்கு எதிராக எந்த சான்றுகளும் இல்லை எனவே அசாத் சாலியை விடுவிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது மன்றில் பிரசன்னமாகியிருந்த சி.ஐ.டி. அதிகாரிகள், இந்த விடயம் தொடர்பில் சட்ட மா அதிபரின் நிலைப்பாட்டை அறிந்துகொள்ளவும், அத்திணைக்களத்தின் உதவியை பெறவும் கால அவகசம் வேண்டும் என கோரியுள்ளனர்.

அதன்படி அதற்கான கல அவகாசத்தை அளித்துள்ள நீதிமன்றம் எதிர்வரும் 13 ஆம் திகதி இவ்வழக்கை விசாரணைக்கு எடுக்கவுள்ளது.

Posted in Uncategorized