மறவன்புலவு சச்சிதானந்தத்திடம் நினைவுத்தூபி குறித்து விசாரணை

யாழ்ப்பாணம் மறவன்புலவு பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டோர் நினைவாக நினைவுத்தூபி ஒன்று அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அதனை அமைத்த தன்னிடம் பொலிஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளதாக மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்.

கல்வெட்டுக்களுடன் நினைவுத் தூபி ஒன்று நிர்மாணிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு சென்ற பொலிஸார் தன்னை விசாரணைக்கு உட்படுத்தியதாகவும், ஈழம் என்றால்என்ன ? என்று அவர்கள் தன்னிடம் விசாரணை மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

Posted in Uncategorized

நிறைவேறியது அவசரகாலச் சட்டம்

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் கடந்த 30ஆம் திகதி நள்ளிரவு முதல் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் 81 மேலதிக வாக்குகளினால் பாராளுமன்றத்தில் இன்றைய தினம் நிறைவேற்றப்பட்டது.
அவசரகால சட்டத்துக்கு ஆதரவாக 132 வாக்குகளும் எதிராக 51 வாக்குகளும் அளிக்கப்பட்டதன் அடிப்படையில், 81 மேலதிக வாக்குகளினால் அவசரகால சட்டம் நிறைவேற்றப்பட்டது.

அவசரகால சட்ட ஒழுங்கு விதிகள் தொடர்பான விவாதம் இன்று திங்கட்கிழமை முழுநாள் விவாதமாக முற்பகல் 10 மணி முதல் மாலை 4.30 மணிவரை பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

வலிகாமம் கிழக்கு (கோப்பாய்)  தவிசாளார் நிரோஷ்க்கு கொவிட் தொற்று உறுதி

ரெலோ யாழ் மாவட்ட பொறுப்பாளரும் வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச சபைத் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ்க்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

உடல் நிலையில் மாற்றம் உணரப்பட்டதையடுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கோப்பாய் பொதுசுகாதார வைத்திய அதிகாரியைத் தொடர்பு கொண்டு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இச் சோதனையில் அவர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந் நிலையில் அவர் குடும்பத்துடன் இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

அதிகாரப் பேராசையில் ஜனாதிபதி – ஜே.வி.பி.

நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அனைத்துறை சார் அதிகாரத்தை மிகவும் சூட்சமமான முறையில் செயற்படுத்துகிறார் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் , பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க வேண்டுமாயின் அவர் நுகர்வோர் பாதுகாப்பு உரிமை சட்டத்தையும், பொது மக்கள் பாதுகாப்பு சட்டத்தின் 17 ஆவது அத்தியாயத்தையும் அமுல்படுத்தியிருக்கலாம்.
ஆனால் அதனை விடுத்து பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் 5 ஆம் அத்தியாயத்தை ஜனாதிபதி தெரிவு செய்துள்ளமை அவரது அதிகார பேராசையை வெளிப்படுத்தியுள்ளது.
ஆகவே நாளை பாராளுமன்றில் சமர்பிக்கப்படும் அவசரகால சட்டத்திற்கு எதிராக வாக்களிப்போம். அரசியல்வாதிகள் அரச வரபிரசாதங்களுக்க துணைபோகாமல் மனசாட்சியுடன் செயற்பட வேண்டும்

கொரோனாவால் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய மேலும் இரண்டு பகுதிகள் அடையாளம்

கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய மேலும் இரண்டு பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
ஏற்கனவே கொரோனாவால் மரணிப்பவர்களின் சடலங்கள் ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்ட நிலையில், அங்கு அதற்காக ஒதுக்கப்பட்ட நிலப்பரப்பு முடிவடைந்தது.
இந்நிலையில், கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு பொருத்தமான காணிகள் தொடர்பாக சுகாதார அமைச்சு ஆராய்ந்து வருகின்றது. இது தொடர்பில் தகவல்களை வழங்குமாறு பிரதேச செயலாளர்கள், சுகாதார அதிகாரிகள் உள்ளிட்டோருக்கும் அமைச்சினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய திருகோணமலை மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் சடலங்களை அடக்கம் செய்யக்கூடிய காணிகள் தொடர்பில் அறியக் கிடைத்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. எனினும், அந்த காணிகளை பயன்படுத்துவதற்கான இறுதி அனுமதி இதுவரை கிடைக்கவில்லை எனவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.அத்தோடு, இதுவரை 2,500 க்கும் அதிகமானவர்களின் சடலங்கள் மட்டக்களப்பு, ஓட்டமாவடி பகுதியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே சடலங்களை அடக்கம் செய்வதற்கு அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம் பகுதியில் புதிய இடம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் அன்வர் ஹம்தானி கடந்த மாதம் கூறியிருந்தார்.
குறித்த பகுதியில் 2400 சடலங்களை அடக்கம் செய்ய முடியுமான விதத்தில் 3 ஏக்கர் காணி அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

Posted in Uncategorized

தவறான தீர்மானங்களினால் சர்வதேசம் இலங்கையை புறக்கணித்துள்ளது – ரணில்

பொருளாதாரம், சுகாதாரம் ஆகிய இரு துறைகளும் தற்போது பேராபத்தில் உள்ளன. நாடும் நாட்டு மக்களும் சிறந்த பாதையை நோக்கி செல்லவில்லை. தவறான தீர்மானங்களினால் சர்வதேசம் இலங்கையை புறக்கணித்துள்ளது. ஆகவே குறுகிய கால திட்டத்தின் ஊடாக நாடு எதிர்க் கொண்டுள்ள சவால்களை ஐக்கிய தேசிய கட்சியால் மாத்திரமே வெற்றிக் கொள்ள முடியும் என தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க 75 வருடத்தை தொடர்ந்து முன்னோக்கி செல்லும் ஐக்கிய தேசிய கட்சியில் இளம் தலைமுறையினர் ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் 75 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு காணொளி முறைமை ஊடாக இடம்பெற்ற கட்சி உறுப்பினர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சுகாதார பாதுகாப்பு, பொருளாதார பாதுகாப்பு, அறிவுப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய துறைகள் ஊடாக ‘சிறப்பான இலங்கை’யை உருவாக்க முடியும்.

ஐக்கிய தேசிய கட்சி அனைத்து இன மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி நாட்டை அனைத்து துறைகளிலும் முன்னேற்றியது. ஆனால் இன்று நாட்டு மக்கள் முன்னேற்றகரமான பாதையில் பயணிக்கவில்லை. மக்களின் உயிர் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளதுடன், தேசிய பொருளதாரமும் விழ்ச்சியடைந்துள்ளது.

கொவிட் -19 வைரஸ் தொற்று பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளதே தவிர குறைவடையவில்லை. தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளதால் இருபதாயிரம் தொடக்கம் முப்பதாயிரம் வரையிலான மரணங்கள் பதிவாகும் என வைத்திய நிபணர்கள் எதிர்வு கூறியுள்ளார்கள்.

மறுபுறம் தேசிய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது.இதன் காரணமாக பலர் தொழில்வாய்ப்புக்களை இழந்துள்ளார்கள். கடல்சார் பொருளாதாரமும்,விவசாய பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளன.

கொவிட் தாக்கத்தினாலும், அரசாங்கத்தின் தவறான தீர்மானங்களினாலும் இன்று கல்வி துறை முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. தவறான செயற்பாடுகளினால் சர்வதேசம் இலங்கையை புறக்கணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பொருளாதார வீழ்ச்சியில் இருந்தும், அரசியல் பேரழிவில் இருந்தும் நாட்டை பாதுகாப்பது பிரதான சவாலாக உள்ளன. இவ்விடயங்களுக்கு தீர்வு காணாவிட்டால் எதிர்கால சந்ததியினர் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்வார்கள். வரலாற்று ரீதியில் ஐக்கிய தேசிய கட்சி பல சவால்களை எதிர்க் கொண்டு வெற்றிப் பெற்றுள்ளது. அதே போல் தற்போது நாடு எதிர்கொண்டுள்ள சவாலை எதிர்க் கொள்ள தயாராகவுள்ளோம்.

குறுகிய கால செயற்திட்டத்தின் ஊடாக தற்போது நாடு எதிர்க் கொண்டுள்ள பொருளாதாரம் மற்றும் சுகாதார சவால்களை வெற்றிக் கொள்ள முடியும். அத்துடன் நீண்ட கால செயற்திட்டத்தின் ஊடாக 27ஆண்டுக்குள் சிறப்பான இலங்கையை எம்மால் நிச்சயம் உருவாக்க முடியும், என்றார்.

Posted in Uncategorized

விடுதலைப்புலிகள் அமைப்பின் மொழி பெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டர் காலமானார்

விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் துறையின் பிரதான மொழி பெயர்ப்பாளராக செயற்பட்டு வந்த ஜோர்ஜ் மாஸ்டர் அல்லது தம்பி அப்பா என்றழைக்கப்பட்ட வேலுப்பிள்ளை குமார் பஞ்சரட்ணம் காலமானார்.
1936 ஆம் ஆண்டு பிறந்த வேலுப்பிள்ளை குமார் பஞ்சரட்ணம் தபாலதிபராக பணியாற்றி வந்த நிலையில்,1994 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் துறை பிரிவுடன் இணைந்து மொழிபெயர்ப்பு துறையில் செயற்பட்டு வந்துள்ளார்.
சர்வதேச நாடுகளுடன் நடைபெற்ற பேச்சுகளின் போது பிரதான மொழி பெயர்ப்பாளராகவும் அவர் செயற்பட்டிருக்கின்றார்.
இறுதிப்போரின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்த ஜோர்ஜ் மாஸ்டரை,2016 ஆம் ஆண்டு அனைத்து வழக்குகளிலிருந்தும் கொழும்பு பிரதான நீதிமன்றம் அவரை விடுதலை செய்திருந்தது.
இந்நிலையில் ஜோர்ஜ் மாஸ்டர் மறைவுக்கு நோர்வேயின் முன்னாள் சமாதான துதுவர் எரிக் சொல்ஹெய்ம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சமாதான பேச்சுவார்த்தைகளின்போது நாங்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர்களை சந்திக்கும் போதெல்லாம் எங்களுக்காக சிறந்த மொழிபெயர்ப்பாளராக ஜோர்ஜ் மாஸ்டர் பணியாற்றினார்.
அவர் சிறந்த தமிழ் தேசப்பற்றாளர்.சமாதானத்தில் மிகுந்த ஆா்வம் கொண்டிருந்தவர்.அவரது ஆத்மா சாந்தியடையட்டும் எனவும் எரிக் சொல்ஹெய்ம் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவிப்பு

முழுமையாகத் தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டவர்கள், தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்த சுற்றுலாப் பயணிகள் நாட்டின் ஏனையப் பகுதிகளுக்கு செல்வதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனுமதி வழங்கியுள்ளார்.

சுகாதார சேவைகள் மாகாணப் பணிப்பாளர்கள், பிராந்தியப் பணிப்பாளர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கான கூட்டம், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவின் தலைமையில் கடந்த வாரம் நடைபெற்றது.

இதன்போதே  சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கும் தீர்மானத்தை அசேல குணவர்தன அறிவித்துள்ளார்.

ஹோட்டல்களில் உள்ள கட்டாய தனிமைப்படுத்தலை நிறைவு செய்த, முழுமையாக தடுப்பூசிகளை செலுத்திக்கொண்ட சுற்றுலாப் பயணிகள் தங்க வைக்கப்பட்ட ஹோட்டல்களில் உள்ள மதுபானசாலைகள், தேநீர் நிலையங்கள் உள்ளிட்ட வசதிகளை அனுபவிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தாலும் சுற்றுலாத்துறை தொடர்ந்து இயங்குவது பொருளாதாரத்துறைக்கு அவசியமான ஒன்று எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அனைத்து வகை ஊசிகளும் வட கிழக்குக்கு வேண்டும்: ஜனாதிபதிக்குக் கடிதம்

வடக்கு- கிழக்கு பிராந்தியத்திற்கு பைசர், அஸ்றாசெனேகா, ஸ்புட்னிக் போன்ற கொரோனா தடுப்பூசிகளை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேனும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க  வேண்டுமென தமிழ் ஈழவிடுதலை இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான செ.மயூரன் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

குறித்த கடிதத்தில் செ.மயூரன் மேலும் தெரிவித்துள்ளதாவது,

வடக்கு- கிழக்கு பகுதிகளில் வசிக்கும் மக்களின் நன்மை கருதி அனைத்துவகை கொரோனா தடுப்பூசிகளையும் இந்தப் பிராந்தியத்திற்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக வடக்கு- கிழக்கில் வசிக்கும் மக்கள் அல்லது இளைஞர்களில் அநேகமானவர்கள், ஐரோப்பா உள்ளிட்ட மேற்கத்தேய நாடுகளுடன் தொடர்புகளை பேணுபவர்களாக உள்ளனர்.

குறிப்பாக தொழில் நோக்கத்திற்காகவோ அல்லது பல்வேறு காரணங்களிற்காகவோ வெளிநாடுகளிற்கு செல்லும் நோக்கம் அவர்களிடம் இருக்கின்றது. எனவே, நாட்டின் தலைவர் என்றவகையில் அதனை நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள் என நம்புகின்றேன்.

மேலும் ஐரோப்பா உள்ளிட்ட மேற்கத்தேய நாடுகளிற்கு செல்லும் இலங்கையை சேர்ந்த பயணிகள் பைசர், அஸ்ராசெனேகா, மொடேர்னா போன்ற கொரோனா தடுப்பூசிகளின் இரண்டு செலுத்துகைகளையும் பெற்றிருக்கவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் வடக்கு கிழக்கு பகுதியில் இதுவரையான காலப்பகுதியில் சீனா நாட்டினால் வழங்கப்பட்ட சினோபார்ம் தடுப்பூசிகளே அதிகம் ஏற்றப்பட்டு வருகின்றது. இதனால் வெளிநாடு செல்லும் நோக்கத்துடன் இருக்கும் அனேகமான பொதுமக்கள் சீனநாட்டு தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளாத அபாய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலைமை தொடரும் பட்சத்தில் கொரோனா தொற்றுப்பரவலடைந்து, உயிரிழப்புக்களும் மென்மேலும் அதிகரிக்கும் அபாயநிலமை காணப்படுகின்றது ஆகவே, இவைகளை கருத்தில் கொண்டு நாட்டின் தலைவர் என்ற வகையில் வடக்கு- கிழக்கு பிராந்தியத்திற்கு பைசர், அஸ்றாசெனேகா, ஸ்புட்னிக் போன்ற கொரோனா தடுப்பூசிகளை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேனும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Posted in Uncategorized

நல்லையம்பதி அலங்காரக்கந்தன் இரதோற்சவம்

வரலாற்று சிறப்பு மிக்க நல்லையம்பதி அலங்காரக்கந்தன் மஹோற்சவத்தின் இரதோற்சவம் இன்று (05) காலை சுகாதார நடைமுறைகளை கருத்தில்கொண்டு பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

கருவறையில் அருள்பாலித்து விளங்கும் அலங்கார கந்தனுக்கும், வசந்த மண்டவத்தில் அருள்பாலித்து விளங்கும் ஆறுமுக நல்லையம்பதி முருகன், வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு விசேட அபிசேக, ஆராதனைகள் என்ப இடம்பெற்று வசந்த மண்டத்தில் இருந்து பீடத்தின் திருவாகனத்தில் வீற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இதனை தொடர்ந்து தங்கரத்திருத் தேரில் எம்பெருமான் சமேதராக ஏறி உள்வீதியூடாக பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இவ் திருவிழாவினை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சி. வைகுந்தன் குருக்கள் தலைமையிலான அந்தணர் சிவாச்சாரியர்களினால் நடாத்தி வைக்கப்பட்டது.

இவ் ஆலயத்தின் கொடியேற்ற மஹோற்சவம் கடந்த (13.08) அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இன்று இரதோற்சவம், நாளை தீர்த்த உற்சவமும், மாலை கொடியிறக்கத்துடன் இனிதே மஹோற்சவம் நிறைவடையும்.