காலிமுகத்திடல் போராட்டக்குழு செயற்பாட்டாளர் லகிரு வீரசேகர கைது!

காலிமுகத்திடல் போராட்டக்குழு செயற்பாட்டாளரும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் செயற்பாட்டாளருமான லகிரு வீரசேகர கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி முகத்திடலில் நேற்று (09) பிற்பகல் ஒன்று திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், உயிரிழந்தவர்கள் மற்றும் சிறையில் அடைக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்து மெழுகுவர்த்தி ஏந்தி கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்தினார்கள்.

இதனை அடுத்து காலி முகத்திடல் போராட்டத்தின் பின் வீடு திரும்பும் வழியில் லஹிரு வீரசேகர கொள்ளுப்பிட்டியில் வைத்து மருதானை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

ஆகஸ்ட் 30 ஆம் திகதி மருதானையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாருக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் லஹிரு வீரசேகர கைது செய்யப்பட்டார்.

மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ´வெனசகட தாருண்ய´ அமைப்பின் தேசிய அமைப்பாளர் லஹிரு வீரசேகரவ இன்று (10) காலை சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரிட்டன் மன்னராக சார்லஸ் பதவி ஏற்றார்

இங்கிலாந்து ராணி எலிசபெத் மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்நாட்டு அரசராக சார்லஸ் அறிவிக்கபட்டார். 73 வயதான சார்லஸ் மறைந்த ராணி எலிசபெத்தின் மூத்த மகன் ஆவார். புதிய அரசரான சார்லஸ் நேற்று தனது மனைவி கமீலாவுடன் தனி விமானத்தில் லண்டன் வந்தார். பின்னர் அவர் காரில் பக்கிம்காம் அரண்மனை சென்றார். ராணி எலிசபெத் தங்கி இருந்த ஸ்காட்லாந்து அரண்மனைக்கு இளவரசராக சென்ற சார்லஸ் தனது தாயார் ராணி மறைவுக்கு பிறகு அரசராக பக்கிம்காம் அரண்மனைக்கு திரும்பி உள்ளார்.

புதிய மன்னரை பார்த்ததும் அங்கு திரண்டு இருந்த பொதுமக்கள் வரவேற்று வாழ்த்து கோஷங்கள் எழுப்பினார்கள். இங்கிலாந்து தேசிய கீதம் பாடி அவருக்கு வரவேற்பு கொடுத்து ராணியின் மறைவுக்கு ஆறுதலும் கூறினார்கள். சார்லசுக்கு சிலர் கைகளில் முத்தம் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். பொதுமக்களின் அன்பை கண்டு சார்லஸ் நெகிழ்ந்து போனார். இங்கிலாந்து புதிய அரசராக இன்று சார்லஸ் முறைப்படி பதவி ஏற்றார். இதற்கான நிகழ்ச்சி லண்டனில் உள்ள செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் அவரது மனைவி கமீலா மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக சார்லஸ் தனது முதல் உரையை நிகழ்த்தினார். அப்போது ராணி எலிசபெத் மறைவு குறித்து அறிவித்ததுடன், தான் அரச பாரம்பரியத்தை காப்பாற்றுவதாக உறுதி அளித்தார். மறைந்த ராணி எலிசபெத் பாஸ்போர்ட் இல்லாமல் எந்த நாட்டிற்கும் செல்லக்கூடிய அதிகாரம் பெற்று இருந்தார். அதே போல் லைசென்சு இல்லாமல் வாகனம் ஓட்ட கூடிய அதிகாரமும் அவருக்கு உண்டு.

இந்த அதிகாரங்கள் எல்லாம் தற்போது புதிய அரசர் சார்லசுக்கு கிடைக்கும். இனி சார்லஸ் பாஸ்போர்ட் இல்லாமல் எந்த நாட்டுக்கும் பயணிக்கலாம். இங்கிலாந்து கரன்சியில் ராணி எலிசபெத் புகைப்படம் இடம் பெற்று இருக்கும். இனி அரசர் 3-ம் சார்லஸ் புகைப்படம் அச்சிடப்பட்டு புதிய கரன்சி வெளியிடப்படும். அதே சமயம் பழைய கரன்சியும் புழக்கத்தில் இருக்கும். இங்கிலாந்து தேசிய கீதத்தில் ராணியை குறிக்கும் வகையில் அவள் என்ற வார்த்தை நீக்கப்பட்டு சார்லசை குறிக்கும் வகையில் அவர் என மாற்றம் செய்யப்படும்.

ஐநா மனித உரிமைகள் பேரவை தலைவரை விஜேதாச, அலிசப்ரி சந்தித்தனர்!

வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் நீதி – சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ ஆகியோர் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் தலைவரை சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பின் போது, பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டதாக வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.

மனித உரிமை நடைமுறைகளை மேம்படுத்துவதில் இலங்கையின் தொடர்ச்சியான ஈடுபாடு மற்றும் தற்போதைய சவால்களை எதிர்கொள்வதற்கான பங்களிப்பு குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் கூறினார்.

உள்நாட்டு பொறிமுறைகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் இதன்போது மீண்டும் வலியுறுத்தியதாக வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

புதிதாக 12 அமைச்சரவை அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளனர்

புதிதாக பன்னிரண்டு அமைச்சரவை அமைச்சர்களை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவர்களில் 12 பேர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்தும், எஞ்சிய இருவர் வேறு கட்சிகளிலிருந்தும் நியமிக்கப்பட உள்ளனர்.

நாமல் ராஜபக்ஷ, ரோஹித அபேகுணவர்தன, சி.பி.ரத்நாயக்க, பவித்ரா வன்னியாராச்சி, ஜனக பண்டார தென்னக்கோன், எஸ்.பி.திஸாநாயக்க, விமலவீர திஸாநாயக்க, சரத் வீரசேகர, எஸ்.எம்.சந்திரசேன ஆகியோரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்மொழிந்துள்ளது.

ஏனைய கட்சிகளில் இருந்து ஜீவன் தொண்டமான் மற்றும் ஏ.எல்.எம்.அதாவுல்லா ஆகியோர் முன்மொழியப்பட்டுள்ளனர்.  தற்போது 18 கபினட் அமைச்சர்களே உள்ளனர்.

Posted in Uncategorized

த.தே. கூ. வின்  கட்டுப்பாடு, நிர்வாக அமைப்பு, ஒற்றுமை குறித்து இலங்கை தமிழரசுக்கட்சிக்கு  ரெலோ கடிதம்

உள்ளுராட்சி மன்றங்களில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுக்காமல்  எதிர்காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு,  கட்டுப்பாட்டுடனும் சரியான நிர்வாக அமைப்புடனும் செயல்படுவதுன் அவசியம் குறித்து  தமி்ழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ)  இலங்கை  தமிழரசுக்கட்சிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

தமி்ழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான கோ.கருணாகரம் (ஜனா) வல்வெட்டித்துறை நகரசபை சம்பந்தமான ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தல்  என்ற தலைப்பில்  இலங்கைத்  தமிழ் அரசுக் கட்சி தலைவர்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  மாவை சேனாதிராஜாவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு  தெரிவித்துள்ளார்.  கடிதத்தின் பிரதி இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் வைத்தியர் சத்தியலிங்கத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் மயூரன், தவிசாளர் தெரிவின் போது வாக்களிக்கத் தவறிமை தொடர்பில் எழுதப்பட்டுள்ள அக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வல்வெட்டித்துறை நகர சபையில்  கடந்த முறை நகர சபையில் தமி்ழ் ஈழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினரின்மரணத்தினாலே ஒரு உறுப்பினருக்கான வெற்றிடம் ஏற்பட்டது.  அந்த இடத்தை நிரப்புகின்ற தார்மீக உரிமை தமிழ்ஈழ விடுதலை இயக்கத்துக்கே  இருந்தமையை தாங்கள் நன்கு அறிவீர்கள்.

மேற்படி வெற்றிடத்திற்கு தங்கள் கட்சியால் தொடர்ச்சியான கோரிக்கை முன் வைத்ததன் அடிப்படையில் தங்கள்கட்சி உறுப்பினர் மயூரன் அவர்களுக்கு நகரசபை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர்  பதவிரெலோவுக்கே ஒதுக்கப்பட்டிருந்தது.  ரெலோவின் தவிசாளராக இருந்த கருணானந்தராஜா அவர்கள் மரணித்த பின்புதவிசாளர் தெரிவுகளில் குழப்பங்கள் ஏற்பட்டது.

23-08-2022 அன்று நடந்து முடிந்த வல்வெட்டித் துறை நகர சபைத் தவிசாளர் தெரிவிலே, தமிழ் ஈழ விடுதலைஇயக்கத்தினால் பிரேரிக்கப்பட்டவருக்கே வெற்றி வாய்ப்பு உறுதியாகி இருந்த நிலையில் தங்களால் நியமிக்கப்பட்டமேற்குறிப்பிட்ட நபர் தவிசாளர் தெரிவில் வாக்களிப்பிற்கு சமூகம் கொடுக்காதலால் எமது கட்சி ஒரு வாக்கினாலேவெற்றி வாய்ப்பை தவறவிட்டமை மிகவும் வேதனையான விடயம்.

ஆகையால், தங்களின் கோரிக்கையின் அடிப்படையிலேயே அவருக்கு எமது கட்சி சார்பில் பதவி வழங்கப்பட்டதுஎன்பதை நினைவுறுத்தி உடனடியாக நடைமுறைக்கு வரும் வண்ணம்,

  1. அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை தாங்கள் முன்னெடுக்க வேண்டும் என்றும்
  2. அவருடைய பதவி நிலையை வறிதாக்கி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்ப வேண்டுமென்றும்

எமது கட்சியால் கோரிக்கை முன் வைக்கிறோம்.

எதிர்காலத்தில் கூட்டமைப்பு,  கட்டுப்பாட்டுடனும் சரியான நிர்வாக அமைப்புடனும் செயல்படுவதற்கு இந்தநடவடிக்கை மிகவும் அவசியமானது என்று எமது கட்சி வழமைபோல கருதுகின்றது.

ஏனைய பல உள்ளுராட்சி மன்றங்களிலும்  தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுக்காமல் கூட்டமைப்புமுடிவுகளுக்கு கட்டுப்பட்டே எமது கட்சி உறுப்பினர்களும் தங்களது கட்சியோடு ஒன்றிணைந்து இன்றுவரை  செயற்பட்டு வருகிறார்கள் என்பதை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

கடந்த நல்லூர் பிரதேச சபை தவிசாளர் தெரிவிலும் இதே போன்ற சம்பவம் நடைபெற்றதை நினைவுபடுத்தவிரும்புகிறோம்.

எதிர்காலங்களில் இந்த ஒழுங்குமுறை சீர்குலையாமல் இருப்பதற்கு உடனடியாக இந்த நடவடிக்கையை நீங்கள்முன்னெடுப்பீர்கள் என்று நம்புகிறோம். விரைவில் தங்கள் பதிலையும் நடவடிக்கையும் எதிர்பார்க்கிறோம்.

சமந்தா பவர் 10ஆம் திகதி இலங்கைக்கு பயணம்

சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் முகவர் நிறுவனத்தின் தலைவரும் அமெரிக்க இராஜ தந்திரியுமான சமந்தா பவர் நாளை மறுதினம் (சனிக்கிழமை) இலங்கைக்கு பயணம் செய்யவுள்ளார்.

அவர் இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கவுள்ளதுடன், அரசாங்கத்தின் பிரதிநிதிகளையும் எதிர்க்கட்சி பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார்.

இதன்போது, இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் பகுதிகளில் சீனாவின் ஆர்வம்?

யதீந்திரா
இலங்கையில் சீனாவின் பிரசண்ணம் அதிகம் பேசப்படும் ஒன்று. சர்வதேசளவில் இலங்கையின் நெருக்கடிகள் சீன-சிறிலங்கா உறவின் வழியாகவே நோக்கப்படுகின்றது. இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கான பிரதான காரணமாகவும் சீனாவே நோக்கப்படுகின்றது. அண்மையில் அமெரிக்க வெளியக உளவுத் துறையான சி.ஜ.ஏயின் தலைவர் கூட, ஒரு கலந்துரையாடலின் போது, சீனாவுடன் தூரநோக்கின்றி பொருளாதார தொடர்புகளை பேணிக் கொள்ளும் நாடுகள் இலங்கையிலிருந்து கற்றுகொள்ள வேண்டுமென்று கூறியிருந்தார். இலங்கை தூரநோக்கின்றி சீனாவின் திட்டங்களை அனுமதித்ததன் விளைவாகவே, இன்று பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். சி.ஜ.ஏயின் தலைவர் இவ்வாறு கூறுவதிலிருந்து எந்தளவிற்கு, சீன விவகாரம் மேற்குலகால் நோக்கப்படுகின்றது என்பதை புரிந்துகொள்ள முடியும்.

சீனாவிற்கும் சிறிலங்காவிற்குமான இருதரப்பு உறவு 1957களிலிருந்து நீடிக்கின்றது. ஆனாலும் நாடுகளுக்கிடையிலான சாதாரண உறவாகவே அது இருந்தது. ஆனால் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தின் போதுதான், சீன-இலங்கை உறவில் சடுதியான மாற்றங்கள் ஏற்பட்டன. இந்தியாவும் அமெரிக்காவும் இறுதி யுத்தத்தின் போது, ஆயுதளபாட உதவிகளை செய்வதற்கு மறுத்திருந்த நிலையில்தான், சீனா அந்த இடத்தை கச்சிதமாக பயன்படுத்திக்கொண்டது. இந்த பின்னணியில் நோக்கினால், மகிந்த ராஜபக்ச காலம்தான் சீனாவிற்கும் சிறிலங்காவிற்குமான தேனிலவுக் காலமாக இருந்தது. 1978இலிருந்து இலங்கைக்கு கடனுதவி வழங்கும் நாடுகளில் முதன்மையான இடத்தை ஜப்பானே பெற்றிருந்தது. மகிந்த காலத்தில் ஜப்பானின் இடத்தை சீனா எடுத்துக் கொண்டது.

இலங்கையில் சீனாவின் பிரசண்ணம் முதல் பார்வையில் இந்தியாவிற்கே சிக்கலானது. ஏனெனில் இலங்கை ஒரு உடனடி அயல்நாடு. இந்தியாவின் உடனடி அயல்நாடொன்றிற்குள், சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பது நீண்டகால நோக்கில் இந்தியாவிற்கு சிக்கலானதாகும். அடுத்தது அமெரிக்காவின் நோக்கிலும் சீனாவின் பிரசண்ணம் சிக்கலானது. ஆனால் அமெரிக்காவின் அவதானம் உலகளாவியது. சீனாவின் செல்வாக்கு இந்து சமூத்திர பிராந்தியத்தில் அதிகரித்துச் செல்லுதல் என்னும் நோக்கில்தான் இந்த விடயத்தை அமெரிக்கா நோக்கும். இந்த பின்னணியில்தான், இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க ராஜாங்கச் செயலர், மைக் பொம்பியோ, இலங்கையின் இறைமையை சீனா, கடலிலும் நிலத்திலும் மோசமாக மீறிவருவதாக குற்றம்; சாட்டிருந்தார். சீனாவின் பிரசண்ணம் சிக்கலானது என்னுமடிப்படையில்தான் இவ்வாறானதொரு கடுமையான அறிக்கையை பொம்பியோ வெளியிட்டிருந்தார். பொம்பியோவின் கூற்றுக்கள், சீனாவின் பிடிக்குள் அகப்பட்டிருக்கும் ஒரு நாடாக இலங்கையை நோக்குவதற்கான பார்வையை முன்வைத்தது. இன்று இலங்கை தொடர்பில் வெளிவரும் உலகளாவிய அவதானம் இந்த பின்புலத்தில்தான் முன்வைக்கப்படுகின்றது.

ஆனால் சீனா இவ்வாறான கடுமையான குற்றச்சாட்டுக்களால் பின்வாங்கும் நிலையிலில்லை. கிடைத்த சந்தர்பத்தை கச்சிதமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்னும் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றது. தெற்கில் வலுவாக காலூன்றிருக்கும் சீனா, தற்போது தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்துவரும் வடக்கு கிழக்கு பகுதிகளிலும் காலூன்றுவதற்கான வாய்ப்புக்களை தேடுவது போல் தெரிகின்றது. சீனத் தூதுவர், வடக்கு கிழக்கிற்கு விஜயங்களை மேற்கொள்வதில் அதிக ஆர்வத்தை காண்பிக்கின்றார். இவ்வாறானதொரு ஆர்வத்தை முன்னர் சீனா ஒரு போதும் வெளிப்படுத்தியதில்லை. வடக்கிற்கு விஜயத்தை மேற்கொண்டு தமிழ் மக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தும் நோக்கில் கலந்துரையாடல்களில் தூதுவர் ஈடுபடுகின்றார். அதே போன்றுதான் கிழக்கிலும். சமூக நலத்திட்டங்களுக்கு நிதியளிப்பதில் ஆர்வம் காண்பிக்கின்றார். இதன் மூலம் முழு இலங்கையிலும் தங்களின் பிரசண்ணத்தை வைத்திருக்க வேண்டுமென்று சீனா விரும்புவது போல் தெரிகின்றது. கிழக்கிலங்கையில் மட்டக்களப்பில் நலிவுற்றவர்களுக்கு வீடுகளை அமைப்பதற்கான சிறியளவிலான உதவிகளை சீனா செய்திருக்கின்றது. அதே போன்று விவசாய திட்டமொன்றையும் பரீசிலிக்கவுள்ளது.

 

சீனாவிற்கும் தமிழர்களுக்கும் வரலாற்று ரீதியான தொடர்புகளுண்டு. இந்த தொடர்புகளை ஆராயும் முயற்சியிலும் சீனா முன்னர் ஈடுபட்டிருந்தது. இந்த நிலையில்தான் அண்மைக்காலமாக தமிழ் பகுதிகளுடானான தொர்புகளை அதிகரிக்க முயற்சிக்கின்றது. இதுவும் இந்தியாவிற்கு சிக்கலான ஒன்றுதான். ஏனெனில் பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், எவர் ஆதரவளித்தாலும், அதனை பெற்றுக் கொள்ளும் நிலையிலேயே இருக்கின்றனர். இந்த நிலைமையானது மறுபுறமாக, தமிழர்களுடனான சீனாவின் ஊடாட்டங்களை அதிகரிப்பதற்கு மிகவும் சாதகமானது. குறிப்பாக கிழக்கிலங்கையிலுள்ள மாவட்டங்களில் வாழும் வறுமைநிலையிலுள்ள தமிழ் மக்கள் பல்வேறு பொருளாதார நெருக்கடிளை எதிர்கொண்டு வருகின்றனர். கிழக்கிலங்கை தமிழ் மக்கள் பல்வேறு வழிகளிலும் பின்தங்கியிருப்பதாகவும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதான பார்வையொன்றும் கிழக்கிலங்கையின் படித்த தமிழர்கள் மத்தியிலுண்டு. இந்த பின்புலத்தில்தான் சீனத் தூதரகத்தை நாடும் போக்கு உருவாகியது. வடக்கு கிழக்கில் வாழும் பின்தங்கிய மக்கள் தொடர்பில் சீனத் தூதரகம் பிரத்தியேக மதிப்பீடுகளையும் செய்திருக்கலாம்.

வடக்கு கிழக்கு தமிழ் மக்கள், வரலாற்று ரீதியாக இந்தியாவுடன் மட்டுமே, உணர்வு ரீதியாக பிணைந்திருக்கின்றனர். இதற்கு தமிழ் நாடு ஒரு பிரதான காரணமாகும். இரண்டாவது காரணம் இந்து மதமாகும். வடக்கு கிழக்கு இந்து தமிழர்களை பெரும்பாண்மையாக கொண்டிருக்கும் ஒரு தமிழ் பகுதி. இவ்வாறானதொரு ச10ழலில்தான் பொருளாதார தேவைகளை ஒரு விடயமாகக் கொண்டு, சீனா அதன் நகர்வுகளை மேற்கொள்கின்றது. நிலைமை சீனாவிற்கு சாதகமாகவே இருக்கின்றது. சீனா கொஞ்சம் கொஞ்சமாக முன்னெடுக்கும் திட்டங்கள் காலப் போக்கில், தமிழ் பகுதிகளில் சீன ஆதரவு பிரிவுகளை ஏற்படுத்தினால் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் முஸ்லிம்கள் ஒரு அரசியல் பிரிவாக வளர்ச்சியுற்றிருக்கின்றனர். முஸ்லிம்கள் இந்தியாவிற்கு நெருக்கமானதொரு மக்கள் பிரிவாக ஒரு போதுமே இருக்கப் போவதில்லை. இந்த பின்புலத்தில் கிழக்கு மாகாணத்தில் இந்தியாவிற்கு நெருக்கமான மக்கள் கூட்டமென்றால், அது இந்து தமிழ் மக்கள் மட்டும்தான். அந்த மக்கள் மத்தியிலும் சீனாவின் செல்வாக்கு அதிகரித்தால் அது இந்தியாவிற்கு நல்லதல்ல.

இந்தியா பல்வேறு உதவிகளை செய்திருக்கின்றது. ஆனால் சமூகத்தோடு ஊடாடக் கூடிய திட்டங்களில் இந்திய தூதரகம் அதிகம் நாட்டம் கொள்வதில்லை. இனியும் அப்படி இருக்க முடியுமா? சர்வதேச அரசுசாரா நிறுவனங்கள் உள்ளுர் நிறுவனங்களின் திட்டங்களுக்கு நிதியளித்தாலும் கூட, அவைகள் எந்தளவிற்கு சரியான முறையில் முன்னெடுக்கப்படுகின்றன என்பதில் கேள்விகளுண்டு. நிபுனத்தும் வாய்ந்த உள்ளுர் நிறுவனங்கள் மூலம் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றனவா என்பதிலும் சந்தேகங்கள் உண்டு.

சீனா ஒவ்வொரு அடியையும் அவசரப்படாமல் எடுத்துவைப்பதாகவே தெரிகின்றது. அதே வேளை சீனாவின் நகர்வுகள் நீண்டகால நோக்கம் கொண்டது. இந்தியாவின் ஆர்வங்களை நன்கு கணித்தே சீனா ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கின்றது. வடக்கில் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் மீது இந்தியா செல்வாக்குச் செலுத்த முடியும் ஆனால் கிழக்கு அப்படியல்ல. ஏனெனில் கிழக்கிலங்கை தமிழ் மக்கள், தாங்கள் பல்வேறு விடயங்களில் பின்தங்கியிருப்பதாக கருதுகின்றனர். வடக்கிற்கு இருப்பது போன்று புலம்பெயர் ஆதரவு கிழக்கிலங்கை தமிழர்களுக்கில்லை. இந்த இடைவெளி சீனாவிற்கு மிகவும் சாதகமானது.

சீனா என்ன நோக்கில் இலங்கையை பயன்படுத்த விளைகின்றது என்னும் கேள்விகளுடன்தான் அனைத்தும் தொடர்புபட்டிருக்கின்றது. தன்னை நோக்கி மேற்கொள்ளப்படும் மேற்குலக நகர்வுகளை எதிர்கொள்ளுவதற்கான ஒரு தடுப்பரனாக இலங்கையை பயன்படுத்த முயற்சிக்கின்றதா? இந்தியாவுடன் எல்லைப்புறங்களிலுள்ள பிரச்சினைகளுக்கு பதிலளிப்பதற்கான ஒரு துப்புச் சீட்டாக இந்தியாவின் உடனடி அயல்நாடொன்றை பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றதா? இவைகள் ஊகங்கள் மட்டுமே ஏனெனில் புவிசார் அரசியல் மோதல்கள் தொடர்பில் துல்லியமான கணிப்புக்களை எவருமே செய்ய முடியாது. சில அவதானங்களை மட்டுமே முன்வைக்கலாம். புவிசார் அரசியல் போட்டிகளில் எதுவும் நடக்கலாம். ஆனால் சீனா அண்மைக்காலமாக, தமிழ் பகுதிகள் மீது ஆர்வம் காண்பித்துவருகின்றது என்பது மட்டும் உண்மை. உதவித் திட்டங்கள் மூலம், சீனா தமிழ் மக்களுடன் நெருங்க முயற்சிக்கின்றது – நெருங்கும் என்பதும் உண்மை.

37 இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு!

புதிய அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர்களின் பதவிப்பிரமாண நிகழ்வு இன்று முற்பகல் நடைபெற்றது.அதன்படி 37 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்கவுள்ளனர்.இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் இடம்பெற்றது.

 

இராஜாங்க அமைச்சர்களின் விபரங்கள்

.சிவநேசதுறை சந்திரகாந்தன் – கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

சுரேன் ராகவன் – உயர்கல்வி

கனக ஹேரத் – தொழில்நுட்பம்

பிரசன்ன ரணவீர – சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் இராஜாங்க அமைச்சர்

டி.வி.சானக்க – வனவிலங்கு மற்றும் வன வளங்கள் இராஜாங்க அமைச்சர்

டி.பி.ஹேரத் – கால்நடை வளம் இராஜாங்க அமைச்சர்

ஷசீந்திர ராஜபக்ஷ – நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர்

அசோக பிரியந்த – உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர்

கீதா குமாரசிங்க – பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார இராஜாங்க அமைச்சர்

அனுப பஸ்குவல் – சமூக அதிகாரமளித்தல் இராஜாங்க அமைச்சர்

சீதா அரம்பேபொல – சுகாதார இராஜாங்க அமைச்சர்

காதர் மஸ்தான் – கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர்

அனுக பிரியங்க – உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்

ஜகத் புஷ்ப குமார் – வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர்

ரஞ்சித் சியம்பலாபிட்டிய – நிதி இராஜாங்க அமைச்சர்

லசந்த அழகியவன்ன – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர்

திலும் அமுனுகம – முதலீடு மற்றும் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர்

கனக ஹேரத் – தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர்

ஜானக வக்கும்புர – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர்

மொஹான் பிரியதர்ஷன டி சில்வா – விவசாய இராஜாங்க அமைச்சர்

தேனுக விதானகமகே – பொருளாதார அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர்

ரோஹன திஸாநாயக்க – விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர்

லொஹான் ரத்வத்த – பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்

சனத் நிஷாந்த – நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர்

இந்திக்க அனுருத்த – மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர்

சிறிபால கம்லத் – நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர்

சாந்த பண்டார – ஊடக இராஜாங்க அமைச்சர்

விஜித பேருகொட – பிரிவெனா கல்வி இராஜாங்க அமைச்சர்

அனுராத ஜயரத்ன – நீதி மற்றும் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர்

சிசிர ஜெயக்கொடி – சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர்

பியால் நிஷாந்த டி சில்வா – கடற்றொழில் இராஜாங்க அமைச்சர்

அரவிந்த குமார் – கல்வி இராஜாங்க அமைச்சர்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து வருகின்றனர்.நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் புஸ்பகுமார முதலாவதாக இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டிருந்தார். (

சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி சட்டமூலம் நிறைவேறியது

சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி சட்டமூலம் 81 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

அதன்படி, சட்டமூலத்திற்கு ஆதரவாக 91 வாக்குகளும் சட்டமூலத்திற்கு எதிராக 10 வாக்குகளும் கிடைக்கப்பட்டிருந்தது.

சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி சட்டமூலம் இன்று (08) பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது..

இது தொடர்பான சட்டமூலம் நேற்றுமுன்தினம் விவாதம் இன்றி நிறைவேற்றப்படவிருந்த போதிலும், குறித்த சட்டமூலத்திற்கு விவாதம் தேவை என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய இன்று விவாதம் நடைபெற்றது.

சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி சட்டமூலத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங்கள் தொடர்பில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் ஹர்ஷ டி சில்வா ஆகியோர் சபாநாயகரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி, இன்று நடைபெறவிருந்த 2022ஆம் ஆண்டுக்கான மத்திய ஆண்டு அரச நிதிநிலை அறிக்கை தொடர்பான பேரவை ஒத்திவைப்பு மீதான விவாதம் வேறொரு நாளில் நடைபெற உள்ளது.

Posted in Uncategorized

IMF ஒப்பந்தம் கைசாத்திடப்பவில்லை – சுசில்

சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்கள் குழுவுடன் எவ்வித உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவில்லை என சபைத் தலைவர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிகாரிகள் சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாளர் மட்ட ஒப்பந்தத்தை மாத்திரமே எட்டியுள்ளதாகவும்   ஒப்பந்தத்தை எட்டுவதற்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கும் இடையே தெளிவான வித்தியாசம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.