இலங்கைக்கு கைகொடுக்கும் ஜப்பான்

இலங்கைக்கு கடன் வழங்கிய தரப்பினர்களுக்கான மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்ய ஜப்பான் திட்டமிட்டுள்ளது.

இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடிக்கு ஓரளவு நிவாரணம் அளிக்கும் வகையில் இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் இணைந்து நடத்தும் பொறுப்பை ஏற்க ஒப்புக்கொண்டதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் குறித்த கலந்துரையாடலில் சீனாவின் பங்கேற்பு தெளிவில்லாமல் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டுக் கடனில் ஐந்தில் ஒரு பங்கு சீனாவிடம் உள்ளது.

இதன் மதிப்பு 3.5 பில்லியன் டொலர்களாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

அரசியல் கைதிகளின் விடுதலை கண்துடைப்பு நாடகமாக அமைந்துவிடக்கூடாது: K.V.தவராசா அறிக்கை

நல்லாட்சிக் காலத்தில் நடைபெற்றதைப் போன்று அரசியல் கைதிகளின் விடுதலை கண்துடைப்பு நாடகமாக அமைந்துவிடக் கூடாது என ஜனாதிபதி சட்டத்தரணி K.V.தவராசா தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் கருத்துகளை வெளியிட்டமைக்காக 2017, 2019 ஆம் ஆண்டுகளில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் சிலரை விடுதலை செய்து விட்டு, 12 முதல் 26 வருடங்கள் வரை சிறைகளிலுள்ள 46 அரசியல் கைதிகளின் விடுதலையை தவிர்த்துவிடக்கூடாது என தனது அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சிக் காலத்தில் 217 அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்குறுதியளித்துவிட்டு, சந்தேகத்தின் பேரில் கைது செய்து வழக்குத் தாக்கல் செய்வதற்கு போதிய சாட்சியங்களற்ற 61 கைதிகளை பிணையிலும் 23 கைதிகளை புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பியும் விடுதலை செய்ததாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சட்டமா அதிபரினால் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, நீதிமன்றங்களினால் தண்டணை விதிக்கப்பட்ட அரசியல் கைதியோ அல்லது மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணைக்குட்பட்டிருந்த அரசியல் கைதியோ அரச தரப்பினருடன் நடைபெற்ற பேச்சுவார்தைகளின் போது இன்று வரை விடுதலை செய்யப்படவில்லை எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி K.V.தவராசா தெரிவித்துள்ளார்.

நல்லாட்சிக் காலத்தில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டிருந்த கைதிகள் விடுதலை செய்யப்படும்போது தற்போதைய நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவே அப்போதைய நீதி அமைச்சராக செயற்பட்டவர் எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்கள் மீது பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவதற்கு கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

அரசாங்கத்திற்கு எதிரான அமைதியான போராட்டத்தை நசுக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தும் முயற்சிகளை இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்த்துள்ளது.

மே 9ஆம் தேதி முதல் கைது செய்யப்பட்ட அனைத்து நபர்கள் மீதும் பொதுச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மே 9 ஆம் தேதி முதல் நடந்த அனைத்து வன்முறைச் செயல்களுக்கும் காரணமானவர்களைக் கண்டறிந்து, தகுந்த தண்டனையைப் பரிந்துரைக்க, உரிய அதிகாரங்களைக் கொண்ட ‘உண்மை ஆணையத்தை’ நியமிக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுப்பதாக கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை புறக்கணிக்கப்பட்டதாகவும், அதற்கு பதிலாக அரச அலுவலகங்களுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் காணும் கேலிக்கூத்து முயற்சியில் சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ள நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களை கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அக்கட்சி மேலும் தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

ரஞ்சன் ராமநாயக்க விடுதலையாகி வெளியே வந்தார்!

நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டு  தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.இதன்படி இன்று பிற்பகல் அவர் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து விடுதலையாகி வெளியே வந்துள்ளார்.அவரை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சிறைச்சாலையில் இருந்து அழைத்துச் சென்றார்.

இதன்பின்னர் விகாரைக்கு சென்று அவர்கள் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.வரும் காலத்தில், நீதித்துறையை விமர்சிக்கும் வகையில் எந்தவொரு கருத்தை தெரிவிக்கவோ செயற்படவோ கூடாது என்ற நிபந்தனையுடன் பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

2017  ஆகஸ்ட் 21 ஆம் திகதி அலரிமாளிகைக்கு வெளியே நீதித்துறையை அவமதிக்கும் வகையில் ரஞ்சன் ராமநாயக்க கருத்து தெரிவித்தமைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் 2021 ஜனவரி 12  ஆம் திகதியன்று ரஞ்சன் ராமநாயக்கவிற்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த நிலையில்,  நீதிமன்றத்தை அவமதித்தமைக்காக மன்னிப்பு கோரி, ரஞ்சன் ராமநாயக்க சத்தியக் கடதாசியொன்றை நேற்று (25) நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.தான் தெரிவித்த கருத்துக்கள் முற்றிலும் பிழையானவை என்றும் அந்தக் கருத்துக்களினால் பிரதம நீதியரசர் உள்ளிட்ட நீதித்துறையினர் அனைவருக்கும் அகௌரவம் ஏற்பட்டமைக்காக மன்னிப்புக் கோருவதாகவும் குறித்த சத்தியக் கடதாசி மூலம் தெரிவித்திருந்தார்.

தான் கூறிய கருத்துக்கள் முற்றிலும் பொய்யானவை என்றும் அவற்றை மீளப் பெறுவதாகவும் எதிர்காலத்தில் இவ்வாறான கருத்துக்களைத் தெரிவிக்கமாட்டேன் என்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்த சத்தியக்கடதாசியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக தேசிய பாதுகாப்பு சட்டம்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக தேசிய பாதுகாப்பு தொடர்பான புதிய சட்டமூலமொன்றை தயாரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நீதியமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (24) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இதுதெடர்பாக அமைச்சர் மேலும் தெnரிவிக்கையில், குறித்த சட்டமூலம் எதிர்வரும் காலங்களில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தை கவிழ்க்க சதி என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அமைப்பாளர் உள்ளிட்ட சிலர் மேலதிக விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

நாட்டின் அரசியலமைப்பிற்கு அமைவாக தொழிற்சங்கங்களை அமைப்பதற்கும், ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கும் அமைதியாக நடந்து கொள்வதற்கும் மக்களுக்கு சுதந்திரம் உண்டு. எனினும் அண்மைய வன்முறை சம்பவத்திற்கு மத்தியில் திட்டமிட்ட இலக்குடனான செயற்பாட்டினால் 72 பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது வீடுகளை இழக்க நேரிட்டதாகவும் அமைச்சர் கூறினார்.

Posted in Uncategorized

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான கைதுகளுக்கு சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்!

அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கண்டித்துள்ளது.

இந்த கொடூரமான சட்டத்தின் ஊடாக கைது செய்யும் நபர்களை நீண்ட  காலம் தடுத்து  வைப்பதற்கான அதிகாரம், நிறைவேற்றதிகாரத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்று சபை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தடுத்து  வைக்கும் உத்தரவுகள், அடிப்படை சட்டங்கள் மற்றும் நீதிமன்ற அதிகாரங்களுக்கு உட்பட்டதாக அமைந்தாலும், பொதுவான சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைப்பதை போன்றல்லாது இந்த கைதுகள் முறையான நீதிமன்ற கண்காணிப்பிற்கு உட்படாது என  சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

நீதிமன்ற கண்காணிப்பு இன்றி ஒருவரை நீண்ட காலம் தடுத்து வைத்திருப்பது சர்வதேசத்தில் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமை பாதுகாப்பு தரங்களுக்கு முரணானது எனவும் சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அத்தோடு, இவ்வாறு தடுத்து வைக்கப்படுவதன் மூலம் கைதி துன்புறுத்தப்படுவதற்கும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதற்கும் வாய்ப்புள்ளதாக சட்டத்தரணிகள் சங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியாயப்படுத்தக்கூடிய பயங்கரவாத போக்கு காணப்படும், ஆதாரங்களுடன் கூடிய சந்தர்ப்பங்களில் மாத்திரமே பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஏற்பாடுகளை பயன்படுத்த வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் பயங்கரவாத தடைச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை தவிர்த்துக்கொள்ளுமாறு சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Posted in Uncategorized

ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரை 30 ஆம் திகதி!

2022 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட உரை எதிர்வரும் 30 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த உரையை நிகழ்த்தவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதி விவாதம் நடத்தப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

கடந்த நவம்பர் மாதத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கத்தின் மொத்த செலவீனமாக 2,796.44 பில்லியன் ரூபா நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

எனினும் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள ஒதுக்கீட்டுச் திருத்தச் சட்டமூலத்தில் அந்தத் தொகை 479.43 பில்லியன் ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியுடன் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் பேச்சு

இலங்கை எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடிக்கு தீர்வு வழங்குவதற்காக சர்வதேச நாணய நிதியத்துடனான ஆரம்பகட்ட கலந்துரையாடலொன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

இலங்கை எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடியின் தற்போதைய நிலைமை குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும் எதிர்வரும் 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இந்த கலந்துரையாடலில் மற்றொரு சுற்றுக்கலந்துரையாடலை நடத்துவதற்கும், எதிர்காலத்தில் மத்திய வங்கி அதிகாரிகளுடன் தொழிநுட்ப விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுக்குழுவின் தலைவர் பீட்டர் புரூபர், பிரதித் தலைவர் ஒசைரோ கொசையிகோ, சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி டுபாகன்ஸ் மற்றும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உட்பட பலர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

விடுதலைப் புலிகளிடம் இருந்து நாட்டை மீட்ட கோட்டாபயவை அடித்து விரட்டிய நன்றிகெட்ட தேசம் இது! கொதித்தெழும் தேரர்

டுமையான பயங்கரவாதத்தில் இருந்து நமது நாட்டை விடுவித்த ஒரு தலைவரைப் பாராட்ட முடியாத அளவுக்கு நமது தேசம் நன்றி கெட்டது என எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டைக் காப்பாற்றிய தலைவர் கோட்டாபய நாட்டை விட்டு துரத்தப்பட்டு நாடு விட்டு நாடு செல்கிறார்.கடுமையான பயங்கரவாதத்திலிருந்து நாட்டைக் காப்பாற்றிய ஒரு தலைவருக்கு நன்றி செலுத்தாத இந்த தேசம் மிகவும் நன்றியற்றது.

கருணை காட்டுவதில் நமக்கு முதல் பாடம் கற்பித்தவர் புத்தர். புத்தராக வருவதற்கு அடைக்கலம் தந்த போதியில் ஒரு வாரம் பூஜை செய்து நன்றியறிதலின் மதிப்பை உலகுக்கு எடுத்துரைத்தார். ஆனால் நம் மக்கள் நன்றி மறந்துள்ளனர்.

வயல்களை உழுவதற்குப் பயன்படும் மண்வெட்டியைக் கூடக் கும்பிடும் எமது மக்களுக்கு இந்த நாட்டை விடுவித்த தலைவன் மீது அவ்வளவாக மரியாதை இருந்ததாகத் தெரியவில்லை.

நாட்டின் மற்றும் சர்வதேச சமூகத்தின் பல்வேறு கோரிக்கைகளுக்காக கோட்டாபயராஜபக்சவை  நாட்டை விட்டு விரட்டியடித்துள்ளனர்.

கோட்டாபய சொல்வது சரி என்று நான் நிரூபிக்க முயற்சிக்கவில்லை. நாட்டின் முக்கிய ஆட்சியாளராக, அவருக்கு பல குறைபாடுகள் உள்ளன.

ஆனால் முப்பது வருடங்களாக நீடித்து வந்த புலிகளுடனான  கொடூரமான பயங்கரவாத யுத்தத்தில் இருந்து இந்த நாட்டை விடுவிப்பதற்கு அவர் முன்முயற்சி எடுத்தார். இப்படிப்பட்ட ஒரு தலைவரை நாட்டை விட்டு விரட்டுவது கேவலமான செயல்.

கடுமையான பயங்கரவாதத்தில் இருந்து நமது நாட்டை விடுவித்த ஒரு தலைவரைப் பாராட்ட முடியாத அளவுக்கு நமது தேசம் நன்றி கெட்டது.

அரசியல் சித்தாந்தங்கள் ஒருபுறம் இருக்க, இதுபோன்ற நிகழ்வுகளால் நான் ஏமாற்றம் அடைகிறேன். கலாசாரம், இனம், மதம் ஆகியவற்றை மதிக்காதவர்களால்தான் இவை நடக்கின்றன என குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைந்த ஸ்டாலின் உள்ளிட்ட 10 பேருக்கு பிணை!

ஜுலை 9 ஆம் திகதி நடந்த போராட்டத்தின் போது ஜனாதிபதி செயலகத்திற்குள் பிரவேசித்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் ஆஜரான அருட்தந்தை ஜீவந்த பீரிஸ், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின், துமிந்த நாகமுவ உள்ளிட்ட 10 சந்தேகநபர்களை பிணையில் விடுவிக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர்களை தலா 5 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்க கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டார்.

கொழும்பு வடக்கு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் வழங்கப்பட்ட அறிவித்தலின் பிரகாரம் சந்தேகநபர்கள் இன்று  நீதிமன்றத்தில் ஆஜராகி பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

கடந்த ஜூலை 13ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து அங்கு ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய சம்பவத்தின் சந்தேகநபர்களாக இவர்கள் பெயரிடப்பட்டுள்ளதாக பொலிஸார்  நீதிமன்றில் இன்று அறிவித்தனர்.

வழக்கை எதிர்வரும் 31ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டார்.