சவாலான காலங்களில் இலங்கையின் பங்காளியாக ஐரோப்பிய ஒன்றியம் இருக்கும்-ரணிலுடனான சந்திப்பில் தூதுவர்கள் கருத்து

சவாலான காலங்களில் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் பங்காளியாக இருக்கும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழு உறுதியளித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர்கள் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர்கள் இலங்கை ஜனாதிபதியுடன் ஆக்கபூர்வமான சந்திப்பொன்றை நடத்தியதாக இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக கருத்துச் சுதந்திரம் மற்றும் கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்தும் உரிமைக்கு மேலாக சிவில் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

“இலங்கையை மீண்டும் அப்பாதையில் கொண்டு வருவதற்கு வெளிநாட்டு விவகாரங்களில் கூட்டு மற்றும் உள்ளடக்கிய நடவடிக்கை தேவை என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்” எனத் தூதுவர்கள் தெரிவித்துள்ளனர்.

பின்வரும் 3 முக்கிய செயன்முறைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியம் ஜனாதிபதியை ஊக்குவிப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

1.ஜீஎஸ்பி +

2.சர்வதேச நாணய நிதியம்

3.மனித உரிமைகள் பேரவை

இந்தச் செயன்முறைகளை வெற்றியடையச் செய்வதற்கு இலங்கை அரசாங்கத்தினால் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் நம்புவதாக இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு மேலும் கூறியுள்ளது.

ஜப்பானின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டு வந்த வேலை திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தம்

ஜப்பானின் ஜெய்கா (JICA )ஆதரவுடன் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வந்த 12வேலை திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக ஜெய்கா அமைப்பு என்னை வந்து சந்தித்தது. சந்தித்து கடிதம் கொடுத்தனர். இப்போது நம் நாடு மோசமான பொருளாதார நெருக்கடியில் இருப்பதால், எம்மால் கடனை அடைக்க முடியாது, எனவே IMF வந்து இதற்கான திட்ட வரைபடத்தை உருவாக்கும் வரை, இந்த Taisei திட்டம் மட்டுமல்ல, ஜப்பான் மற்றும் JICA ஆதரவுடன் மேற்கொள்ளப்படும் 12 திட்டங்களை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தனர்.

இந்த கடனை எங்களுடன் மறுசீரமைக்க IMF அமைப்பு மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் பின், அவர்கள் மீண்டும் அந்தப் பணத்தை எங்களுக்குத் தருவார்கள் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

ரணிலின் தென்னிலங்கை நகர்வுகள்?

யதீந்திரா

ரணில் விக்கிரமசிங்க அவரது, நீண்டநாள் இலக்கில் வெற்றிபெற்றிருக்கின்றார். ஆனாலும் இதனை முழுமையான வெற்றியென்று கூறவிடமுடியாது. ஏனெனில் அவர் மக்களால் தெரிவுசெய்யப்பட்டு இந்த இடத்தை அடையவில்லை. ஆனாலும் கிடைத்த இடத்தை கெட்டியாக பற்றிக்கொள்வதும் அதே வேளை, எதிர்காலத்தில் முடிந்தால் மீண்டுமொருமுறை சதுரங்கத்தை ஆடுவதும்தான் அவருக்கு முன்னாலுள்ள தெரிவுகளாக இருக்கின்றன. எனவே அடிப்படையில் ரணில் ஆடப்போவது முற்றிலும் தென்னிலங்கைக்கான அரசியல் ஆட்டம்தான். எனவே இதில் தமிழர்கள் அதிகம் தலையை பிய்த்துக்கொள்ள வேண்டியதில்லை. ஆனால் இந்தத் தென்னிலங்கை ஆட்டத்திற்குள் எந்தளவு தூரம் போகலாம், போகக் கூடாது என்பதில் தமிழ் தேசிய தரப்பினர் மத்தியில் தெளிவான புரிதல் இருக்க வேண்டியது அவசியம். 2015 ஆட்சி மாற்றத்திலிருந்து, தமிழ் தேசிய கூட்டமைப்பு அளவுக்கதிகமாக தென்னிலங்கை அரசியலுக்குள், தேவையற்ற வகையில் தலையீடு செய்துவருகின்றது. சுமந்திரன்தான் இதற்கான பிரதான காரணமாகும்.

சுமந்திரனின் வரவுக்கு முன்னர் இவ்வாறானதொரு போக்கு தமிழ் தேசிய அரசியல் பரப்பில் இருந்ததில்லை. இதற்கு சுமந்திரனின் பின்னணியும் ஒரு பிரதான காரணமாகும். சுமந்திரன் அடிப்படையிலேயே தமிழ் தேசிய அரசியல் பின்புலம் சார்ந்த ஒருவரல்ல. விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கு பின்னர் தமிழ் தேசிய அரசிலுக்குள் இணைந்து கொண்டவர். இப்போது ரணில் விக்கிரமசிங்கவின் நிலையில்தான், 2010இல் சுமந்திரனும் இருந்தார். ராஜபக்சக்களின் வீழ்சி, ரணிலுக்கு வாய்ப்பை வழங்கியது போன்றுதான், புலிகளின் வீழ்ச்சி சுமந்திரனுக்கு மட்டுமல்ல விக்கினேஸ்வரனுக்கும் ஒரு வாய்ப்பை வழங்கியது. ஆனால், சம்பந்தனும் சுமந்திரனும் எதிர்பார்த்தது போன்று விக்கினேஸ்வரன் இருக்கவில்லை. யாழ்ப்பாணத்திற்கு வந்ததும், விக்கினேஸ்வரன் அவரது இயல்புக்கு மாறானதொரு கடும்போக்கு நிலைப்பாட்டை தழுவிக் கொண்டார். இப்போது அதனை தொடர்ந்தும் கடைப்பிடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றார்.

விக்கினேஸ்வரனோடு ஒப்பிட்டால் சுமந்திரன், வலிந்து தேசியவாதியாவதற்கான முயற்சிகளில் ஈடுபடவில்லை. சுமந்திரன் ஒரு வேளை அப்படி நடிக்க முற்பட்டிருந்தாலும் கூட, அது அதிக காலத்திற்கு நீடிக்காது. ஆனால் இந்த அரசியல் நடிப்பில் இப்போதும் கொடிகட்டிப் பறக்கும் ஒருவரென்றால், அது சிவஞானம் சிறிதரன் மட்டும்தான். அவரால் பிரபாகரனுக்கு பிறந்தநாளும் கொண்டாட முடிகின்றது, உருத்திரகுமாரனோடு சேர்ந்து பொதுசன வாக்கெடுப்பு தொடர்பிலும் பேச முடிகின்றது பின்னர் ரணில்விக்கிரமசிங்கவுடன், அரசியல் தீர்வு தொடர்பில் பேசப்போவதாகவும் கூற முடிகின்றது. இவ்வாறான நடிப்பாற்றல் எல்லோருக்கும் வாய்க்காது.

2015, தேர்தலில் சுரேஸ் பிரேமச்சந்திரன் தேர்தலில் தோல்வியடைந்ததை தொடர்ந்தே, சுமந்திரனின் செல்வாக்கு கூட்டமைப்பிற்குள் வலுவடைந்தது. தேசிய பட்டியல் மூலம் சுரேஸ்பிரேமச்சந்திரனுக்கு ஒரு இடத்தை வழங்குவதற்கான வாய்ப்புக்கள் இருந்த போதிலும் கூட, சம்பந்தன் அதனை விரும்பவில்லை. ஆட்சி மாற்றத்திற்கு பின்னர், கூட்டமைப்பின் அரசியல் அணுகுமுறை என்பது, முற்றிலும், கொழும்மை அனுசரித்து – முக்கியமாக ரணில் விக்கிரமசிங்கவோடு இணைந்து பயணிப்பாதாகவே இருந்தது. இந்தக் காலத்தில்தான், சுமந்திரனின் கொழும்பு செல்வாக்கு கணிசமாக வலுவடைந்தது. ஒரு தமிழ் தேசிய கட்சியின் பிரதிநிதி என்பதற்கு அப்பால், ஒரு இலங்கை அரசியல்வாதியாக சுமந்திரன் வளர்சியடைந்தார். சுமந்திரன் அதிகம் தென்னிலங்கை அரசியலுக்குள் ஆர்வம் காண்பிப்பதை, இந்த பின்புலத்திலிருந்துதான் நாம் நோக்க வேண்டும்.

ரணிலின் தென்னிலங்கை நகர்வுகள் பற்றி பேசும்போது, இந்த விடயங்கள் எதற்காக என்னும் கேள்வி எழலாம். ரணில்-மைத்திரி ஆட்சிக் காலத்தில், ரணிலுக்கும் சுமந்திரனுக்கும் நெருக்கமான உறவிருந்தது. ரணிலுக்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கூட்டமைப்பு கடுமையாக விரோதித்துக் கொண்டது. ஆனால் இப்போது, ரணில் தொடர்பில் சுமந்திரன் வெளிப்படுத்திவரும் அபிப்பிராயங்களை உற்றுநோக்கினால், தென்னிலங்கையிலுள்ள சிங்கள அரசியல்வாதிகள் கூட, சுமந்திரனை போன்று ரணிலை விமர்சிக்கவில்லை. இதன் பின்னணி என்ன? சுமந்திரன் தென்னிலங்கை அரசியலுக்குள் அதிகம் தலையீடு செய்ய முற்பட்டதன் விளைவாகவே, ரணிலுடன் முரண்பட வேண்டியேற்பட்டிருக்கின்றது. அது எவ்வாறான தலையீடு என்பதை நம்மால் அறிய முடியாவிட்டாலும் கூட, சுமந்திரன் மேற்கொண்ட சில நகர்வுகள், ரணிலின் தென்னிலங்கை நகர்வுகளுடன் நேரடியாக உரசியிருக்கின்றது. இல்லாவிட்டால் இந்தளவிற்கு ரணில் விக்கிரமசிங்கவை எதிர்க்க வேண்டிய தேவையில்லை.

ரணிலின் தென்னிலங்கை நகர்வுகள் வெள்ளிடைமலை. அதாவது, தற்போது கிடைத்திருக்கும் அதியுச்ச அதிகாரத்தை முழு அளவில் பிரயோகித்து, தன்னை நிலைநிறுத்திக் கொள்வது. அவ்வாறு தனது அதிகாரத்தை அதியுச்சளவில் பிரயோகிக்க வேண்டுமாயின், அரசு பலமாக இருக்க வேண்டும். அரசு பலமாக இருக்க வேண்டுமாயின் அரசிற்கு எதிரான எதிர்ப்புக்களை ஒரு எல்லைக்குள் மட்டுப்படுத்த வேண்டு. இதனை கருத்தில்கொண்டே, போராட்டக்காரர்கள் ஒரு கட்டத்திற்கு மேல் வளர்சியடைவதை ரணில் தடுக்க முற்படுகின்றார். மேலும் இடதுசாரி பின்புலம் கொண்ட சக்திகள் கொழும்பில் எழுச்சியடைவதை இந்தியா மற்றும் மேற்குலம் ஒரு போதும் ஆதரிக்காது. தாராளவாத பின்புலம் கொண்டவர்கள் ரணில் விக்கிரமசிங்கவை ஒரு கட்டத்திற்கு மேல் எதிர்க்க மாட்டார்கள்.

இவ்வாறானதொரு பின்னணியில்தான், ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி, பொன்சேகா, போராட்டத்தை தன்வசப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடுகின்றார். பொன்சேகாவின் தலைமைக்கு போராட்டம் கைமாறுமாயின், அது முற்றிலும் கட்சி அரசியலுக்குள் சென்றுவிடும். ஆனால் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழ வேண்டிய உடனடித் தேவையை எதிர்கொண்டிருக்கும் மக்களோ, மூச்சுவிடுவதற்கான அவகாசத்தை தேடியலைகின்றனர். இந்த நிலையில் இவ்வாறான போராட்டங்களை மக்கள் வெறுக்கவே அதிக வாய்ப்புண்டு. இந்த விடயத்தையும் ரணில் சரியாக கணித்திருப்பார். மேலும் ரணில் பிரச்சினைகளை தீர்க்கக் கூடியவர் என்னும் அப்பிராயம் மத்தியதர வர்கத்தினர் மத்தியிலுண்டு. இதுவும் ரணிலுக்கு சாதகமான ஒரு விடயமாகும்.

 

ரணிலின் தென்னிலங்கை நகர்வுகளுக்கு இரண்டு இலக்குகள் இருக்கலாம். ஒன்று, வீழ்ந்துகிடக்கும் ஜக்கிய தேசியக் கட்சியை தூக்கிநிறுத்த முயற்சிப்பது. இதுதான் ஜக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்திருக்கும் இறுதி சந்தர்ப்பம். அதே வேளை, மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு ஜனாதிபதியாக தன்னை நிலைநிறுத்துவது. தற்போதுள்ள நிலையில், ராஜபக்சக்கள் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பில்லை. இந்த நிலையில் அனைவரது ஆதரவுடனும் ரணில் விக்கிரமசிங்க ஒரு பொது வேட்பாளராக வருவதற்கான வாய்ப்பையும் குறைத்துமதிப்பிட முடியாது.

ஆனால் அனைத்தும் பொருளாதார நெருக்கடிகளை வெற்றிகொள்வதில்தான் தங்கியிருக்கின்றது. மொத்தத்தில், இது ரணிலுக்கான இறுதி அரசியல் சதுரங்கம். ரணிலை பொறுத்தவரையில் – அரசியல் சதுரங்க ஆட்டத்தை விடவும் மேலானது. அதுவே சற்று காலம் எடுக்குமென்றால், அரசியல் ஒரு மரதன் ஓட்டம் போன்றது. கடுமையான ஆட்டமெனில், அது ரகர் விளையாட்டு போன்றது. இரத்தம்பார்க்கும் விளையாட்டு எனில் பொக்சிங் போன்றது. அனைத்து ஆட்டத்தையும் ரணில் ஆட வேண்டியிருக்கின்றது. மற்றவர்கள் எவரையும் விடவும், அரசியலில் இந்த ஆட்டங்களை ரணில் நன்கு கற்றுத்தேறியவர். ரணிலின் தென்னிலங்கை ஆட்டத்திற்குள் தேவையில்லாமல் மூக்கை நுழைக்காமல் இருப்பதுதான், தமிழ் தேசிய தரப்பினருக்கு நல்லது. ஆட்டத்தின் சூட்;சுமங்களை விளங்கிக்கொள்ளாமல், ஆட்டத்திற்குள் நுழைவது எதிர்மறையான விளைவுகளையே தரும். யுத்தத்திற்கு பின்னரான கடந்த பன்னிரு வருடங்களில், தமிழ் தேசிய தரப்பினர், சிறிலங்காவின் அரசியல் சதுரங்கத்தில் வெறும் பார்வையாளர்களாகவே இருக்கின்றனர். சம்பந்தன் சுமந்திரன் போன்றவர்கள் தாங்கள் ஆடுவதாக எண்ணிக் கொண்டனர் ஆனால் அவர்கள் ஆடவேயில்லை.

மேலதிக பொறுப்பு மாகாண ஆளுநர்களிடம்

மாகாண சபைகள் இயங்காத பின்னணியில், மாகாண சபைகளின் செலவுகள், மாகாண நிர்வாகம், அபிவிருத்தி ஆகிய செயன்முறைகளை உரிய முறையில் பேண வேண்டிய பொறுப்பு ஆளுநர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய, அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவால் சகல மாகாண ஆளுநர்களுக்கும் கடிதம் மூலம் இந்த நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய சவாலான காலகட்டத்தில், பொதுச் செலவினங்களை முகாமைத்துவம் செய்து, பொது மக்களுக்கான சேவைகளை சிறப்பான முறையில் முன்னெடுப்பது மிகவும் முக்கியமானது.மாகாண சபை நிர்வாகம், அபிவிருத்தி மற்றும் மாகாண சபை செலவினங்களை முகாமைத்துவம் செய்யும்போது, தேசிய கொள்கைகள் மற்றும் முன்னுரிமைகளுக்கு இணங்க செயற்படுவதைப் போன்று மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதும் மிகவும் முக்கியமானதாகும்.

தமது மாகாணத்தின் அபிவிருத்தியின் முன்னுரிமைகளைக் கண்டறிவதிலும் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதிலும் ஆளுநர்கள், அனைத்து மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் மற்றும் ஜனாதிபதி அலுவலகத்துடனும் சிறந்த ஒருங்கிணைப்பை பேண வேண்டும் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, பதினைந்து நாட்களுக்கு ஒரு முறையாவது தமது மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி, மாகாண சபையின் ஊடாக அமுல்படுத்தப்படும் அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பாக தொடர்ச்சியான கலந்துரையாடல்களை முன்னெடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த இக்கட்டான காலப்பகுதியில் தேசிய இலக்குகளை அடைவதற்கு ஆளுநர்களின் பங்களிப்பு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அவதானம் செலுத்தி வருவதாக ஜனாதிபதியின் செயலாளரின் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

தேர்தல் மற்றும் தேர்தல் கட்டமைப்பில் திருத்தங்கள்- பாராளுமன்ற சிறப்புக்குழுவின் பரிந்துரைகளை அமுலாக்க இணக்கம்

தேர்தல் மற்றும் தேர்தல்களின் கட்டமைப்பில் திருத்தங்களை முன்மொழிய பாராளுமன்ற சிறப்புக் குழு அளித்துள்ள பரிந்துரைகளில் பெரும்பாலானவற்றை அமுல்படுத்த அனைத்து அரசியல் கட்சிகளும் பொதுவான உடன்பாட்டுக்கு வந்துள்ளன.

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று முன்தினம் (09) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள முதல் தேர்தலுக்கான வாக்கெடுப்புக்கு முன்னர் அதன் பரிந்துரைகளை ஏற்று நடைமுறைப்படுத்தவும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. அவற்றில், தேர்தல் செலவுகளைக் கட்டுப்படுத்துதல், முன்கூட்டியே வாக்களிக்கும் வாய்ப்புகளை வழங்குதல் மற்றும் வாக்கெடுப்பு நாளில் விசேட வாக்கெடுப்பு நிலையங்களை அமைத்தல், மக்கள் பிரதிநிதித்துவ அமைப்புகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்துதல் ஆகியவை அடங்கும்.

தேர்தல் காலத்தில் அனைத்து ஊடகங்களுக்கும் ஊடக உப-நடவடிக்கைகளை அமுல்படுத்துவது அந்த பரிந்துரைகளில் ஒன்றாகும். மக்கள் பிரதிநிதித்துவ அமைப்புகளின் உறுப்பினர்களி ன் பதவிக் காலம் முடியும் வரை தேர்தல் ஆணைக் குழு வெளியிடும் நெறிமுறைகள் செல்லுபடியாகும் என்றும் அதற்கு சட்டப்பூர்வ அதிகாரம் வழங்குவதும் அதில் அடங்கும்.

Posted in Uncategorized

சிங்கப்பூரில் இருந்து வெளியேறினார் கோட்டாபய!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சிங்கப்பூரில் இருந்து வெளியேறியுள்ளார்.

அவர் இன்று பிற்பகல் பாங்கொக் செல்லும் விமானத்தின் மூலம் தாய்லாந்து பயணமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவரது விசா இன்றுடன் காலாவதியாயாகிய நிலையில் சிங்கப்பூரில் இருந்து செல்லவேண்டிய நிலை கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஏற்பட்டுள்ளது.

சிங்கப்பூர் சட்டமா அதிபர் அவருக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டு தொடர்பாக நடவடிக்கை எடுக்கவிருந்த நிலையில் அவர் அங்கிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

Posted in Uncategorized

ரஞ்சனுக்கு விரைவில் பொது மன்னிப்பு!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவதற்கான பரிந்துரைகளை நீதி அமைச்சு சமர்ப்பித்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதற்காக சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்பான சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தின் அறிக்கையையும் பெற்றுக்கொண்டதாகவும் அதில் அனைத்து தகவல்களை கருத்திற்கொண்டு நிபந்தனைக்குட்பட்டு ஜனாதிபதிக்கு பரிந்துரையை சமர்ப்பித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் நல்ல நடத்தை உடையவர் என்பதாலும் சமூகத்திற்கு சில பங்களிப்பைச் செய்யக்கூடியவர் என்பதாலும் இந்த நேரத்தில் பொதுமன்னிப்பு வழங்குவது மிகவும் நியாயமானது என்று தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

வடக்கு கிழக்கு மக்களுக்கு அரசியல் தீர்வு வேண்டி கிளிநொச்சியில் கவனயீர்ப்பு

வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டி 100 நாட்கள் கவனயீர்ப்பு போராட்டத்தின் 10வது நாள் போராட்டம் கிளிநொச்சியில் இடம்பெற்றது.

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றது,முதலாம் திகதி மன்னாரில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

“கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்’ எனும் தொனிப்பொருளில், வடக்கு கிழக்கு உட்பட 8 மாவட்டங்களில் சுழற்சி முறையில் இந்த போராட்டம் இடம்பெறவுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது,

இன்றைய போராட்டத்தில் கிராம அடிப்படை அமைப்புக்கள், விவசாய, மீனவ சங்கங்கள், பெண்கள் மற்றம் மாணவர் அமைப்புக்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கை பாராளுமன்றத்தில் புதிய நிதிக் குழு நியமனம்

அரசாங்க நிதி தொடர்பான பாராளுமன்றக் குழுவில் பணியாற்றுவதற்காக 21 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (10) பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.

அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் விதுர விக்கிரமநாயக்க மற்றும் அமைச்சர் நளீன் பெர்னாண்டோ ஆகியோர் அரசாங்கத்தின் நிதிக் குழுவில் பணியாற்றுவதற்கு நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் அநுர பிரியதர்ஷன யாப்பா, விஜித ஹேரத், ர் துமிந்த திசாநாயக்க, ஷெஹான் சேமசிங்க, பிரமித பண்டார தென்னகோன், டாக்டர் ஹர்ஷ டி சில்வா, இந்திக அனுராத்த, சிறிபால கம்லத், டாக்டர் சீதா அரம்பேபொல, சுரேன். எம்.ஏ.சுமந்திரன், காவிந்த ஜயவர்தன, முஜிபுர் ரஹ்மான், ஹர்ஷன ராஜகருண , சமிந்த விஜேசிறி, இசுர தொடங்கொட, அனுபா பாஸ்குவல், பேராசிரியர் ரஞ்சித் பண்டார ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நிலையியில் கட்டளை 121 இன் விதிகளின்படி தெரிவுக்குழுவினால் இக்குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது சபையில் நிதி தொடர்பான பாராளுமன்றக் குழுவில் பணியாற்றிய காஞ்சன விஜேசேகர, மனுஷ நாணயக்கார, குமார் வெல்கம, திலான் பெரேரா, சரத் வீரசேகர மற்றும் நாலக கொடஹேவா ஆகியோர் அந்தக் குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

துமிந்த திஸாநாயக்க, ஷெஹான் சேமசிங்க சிறிபால கம்லத், சீதா அரம்பேபொல ஹர்ஷன ராஜகருணா மற்றும் சமிந்த விஜேசிறி ஆகியோர் புதிதாக உள்வாங்கப்பட்ட உறுப்பினர்களாவர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது சபையில் அரசாங்க நிதி தொடர்பான பாராளுமன்றக் குழுவின் தலைவராக பணியாற்றினார். எனினும் புதிய குழுவிற்கான தலைவர் இதுவரை நியமனம் செய்யப்படவில்லை

ஆர்ப்பாட்டக்காரர்கள் காலிமுகத்திடலில் இருந்து வெளியேற முடிவு!

காலி முகத்திடல் கோட்ட கோ கம போராட்டக் காரர்கள் அங்கிருந்து வெளியேறத் தீர்◌ானித்துள்ளனர்.

இதன்படி அங்கிருந்து வெளியேறுமாறு பிறப்பத்த பொலிஸாரின் உத்தரவை நிராகரிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் நால்வர் தாக்கல் செய்திருந்த நான்கு ரிட் மனுக்களை இன்று அவர்கள் மீளப்பெற்றுக் கொண்டுள்ளனர்.

இந்த மனுக்கள் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணிகளான எம்.ஏ சுமந்திரன் மற்றும் சாலிய பீரிஸ் உள்ளிட்ட சட்டத்தரணிகள், தமது தரப்பினர் காலி முகத்திடல் பிரதேசத்தை விட்டு வெளியேற தீர்மானித்துள்ளதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

Posted in Uncategorized