தாய்லாந்து போகும் கோத்தாபய ராஜபக்‌ஷ!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்து செல்ல தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாளைய தினம் அவர், தாய்லாந்து செல்லவுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அவர் அந்நாட்டில் சிறிது காலம் தங்கியிருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் ஜூலை 14 முதல் சிங்கப்பூரில் தங்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கப்பல் விவகாரம் – இலங்கை குறித்த நிகழ்வை இடை நிறுத்தியது சீனா

சீன கப்பலிற்கு இலங்கை அனுமதியளிக்க மறுத்துள்ளமைக்கு பதிலடியாக சீனாவில் உள்ள இலங்கை துாதரகம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வொன்றை சீனாவின் சமூக ஊடகமொன்று இடைநிறுத்தியுள்ளது என தவல்கள் வெளியாகியுள்ளன.

வெள்ளிக்கிழமை இலங்கை அதிகாரிகள் இலங்கை குறித்த ஊடக்குவிப்பு பிரச்சாரமொன்றை  டுயினில் ஏற்பாடு செய்திருந்தனர். எனினும் அதனை முன்னெக்க முடியாது என இலங்கை அதிகாரிகளிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

யுவான் வாங் 5 கப்பலிற்கு அனுமதியளிக்க மறுத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த சமூக ஊடகம் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக  இலங்கை அதிகாரிகள் கருதுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவின் சமூக ஊடகங்களில் இலங்கைக்கு எதிரான எதிர்மறையான கருத்துக்கள் அதிகளவில் காணப்படுவதாகவும் சீனாவின் சில பல்பொருள் அங்காடிகள் இலங்கை பொருட்களை கொள்வனவு செய்ய மறுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசாங்கத்தின் செலவீனம் 479.43 பில்லியன் ரூபாவால் அதிகரிப்பு

2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் திருத்தப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதில் இந்த வருடத்திற்கான அரசாங்கத்தின் செலவீனம் 479.43 பில்லியன் ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பரில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2022 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின்படி, அரசாங்கத்தின் செலவு ரூ.2,796.44 பில்லியனாக நிர்ணயிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், திருத்தப்பட்ட சட்டமூலத்தின் ஊடாக அரசாங்கத்தின் செலவீனம் 3,275.8 பில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்துக்கான ஒதுக்கீடு 13.4 பில்லியன் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கே அதிகளவான தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

கூட்டமைப்பினுள் கறுப்பாடுகளை அனுமதிக்க முடியாது – ரெலோவின் தலைவர் செல்வம்

தமிழ் தேசிய கூட்டமைப்பு பலமாக இருந்தது இருக்கின்றது. ஆனால் இரண்டு மூன்று கறுப்பாடுகளுடைய செயல்பாடுகளால் மக்களினுடைய மனதில் இருந்து அது குறைந்து வருகின்றது. இதனை அனுமதிக்க முடியாது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) பத்தாவது தேசிய மாநாட்டில் உரையாற்றும் போதே செல்வம் அடைக்கலநாதன் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

விடுதலைப்புலிகள் உட்பட ஆயுதப் போராட்ட இயக்கங்கள் அனைத்தும் ஒன்றுபட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும். தனிக்கட்சிகளுடைய எந்தவொரு நாட்டாமைத்தனத்திலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்படவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்பட வேண்டும். இல்லையேல் தமிழ் மக்களை நாம் காப்பாற்ற முடியாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்படாவிட்டால் அது இல்லாமல் போகும்.

வெறும் உதட்டளவிலேயே தமிழ் மக்களின் விடுதலை தொடர்பில் தற்போது பேசப்படுகிறது. உளப்பூர்வமான விடுதலையை தொடர்பாக பேசவில்லை என்பதை இந்த சந்தர்ப்பத்தில் நான் சுட்டிக்காட்ட வேண்டும். மக்களை ஏமாற்றக் கூடாது. தமிழ் தேசிய கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் அண்ணன் தம்பி என்று நாட்டாமைத்தனம் வேண்டாம். எங்கள் மக்கள் தற்போது இக்கட்டான சூழலில் இருக்கின்றார்கள்

அவன் பிழை இவன் பிழை என நாம் கூறுகின்றோம். மக்களின் கஷ்டங்களை போக்குகின்ற இனத்தை விடுதலை செய்கின்ற விடயங்களில் நாங்கள் ஒற்றுமையாக இருக்கின்றோமா? ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைச் சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிலே அனுபவம் மிக்க தலைவர்கள் இருக்கின்றார்கள். அவர்களது ஆலோசனைகளை பெறுவதற்கான வாய்ப்பை உண்டு பண்ண வேண்டும். தற்போது வந்தவர்கள் தமிழரசு கட்சியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும்

இல்லாதொழிக்கின்ற செயலை செய்கின்றனர். இதனை ஒரு காலம் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

22 இல் இருந்து தற்போது 10 ஆக நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மாறி உள்ளது.

ரணில் விக்ரமசிங்க பற்றி உங்களுக்கு தெரியும். விடுதலைப் புலிகளை உடைத்தவர். அவருடைய ராஜதந்திரத்தை பற்றி சொல்கின்ற போது நரித் தந்திரம் என்பார்கள். அந்த தந்திரமே விடுதலைப்புலிகளையும் பிரித்தாண்டது. அந்த தந்திரத்தையே நாங்கள் அண்மையில் பேசுகின்ற போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கையாண்டார். கூட்டமைப்பில் சிலர் தனக்கு வாக்களித்தார்கள் என கூறினர். சித்தார்த்தன், கோவிந்தன் கருணாகரன் ஆகியோர் அதனை எதிர்த்து கதைத்தார்கள்.

வெளியில் வந்த போது ரணில் இவ்வாறு கூறியதாக ஒரு செய்தி வெளியானது. ரணிலின் கருத்தை வலுப்படுத்துகின்ற வகையிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்துகின்ற வகையிலும் ஒரு சிலரின் கருத்துக்கள் இருந்தது.

அதனால் யாருக்கு வெற்றி என்று சொன்னால் அது ரணிலுக்கே வெற்றி. நாகரீகம் கருதி நான் யாருடைய பெயரையும் குறிப்பிட விரும்பவில்லை. மாநாடு என்பதால் நான் பெயரைச் சொல்லி விரும்பவில்லை. இது யாருக்கு நட்டம்.

ஜனாதிபதி சரியாக காயை நகர்த்தி இருக்கின்றார். அதனை நாங்கள் தூக்கிப் பிடித்துக் கொண்டு எங்களுடைய மக்கள் மத்தியில் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றோம்.

ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு பலமாக இருந்தது. இருக்கின்றது. இரண்டு மூன்று கறுப்பாடுகளுடைய செயல்பாடுகளால் மக்களினுடைய மனதில் இருந்து அது குறைந்து வருகின்றது. இதனை அனுமதிக்க முடியாது. பலமாக 22 ஆசனங்களை கொண்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிலிருந்து வீழ்ச்சியடைந்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்தவர்கள் மீண்டும் இணைய வேண்டும். விடுதலைப்புலிகள் உட்பட ஆயுதப் போராட்ட இயக்கங்கள் ஜனநாயக நீரோட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலே இணைந்து செயல்படுகின்ற சந்தர்ப்பத்தை உருவாக்க வேண்டும் என்றார்.

இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் கனிமொழியுடன் சந்திப்பு

இந்தியாவிற்கான இலங்கை  தூதுவர் மிலிந்த மொரகொட, தூத்துக்குடி தொகுதி  மக்களவை பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதியை புது தில்லியில் வைத்து சந்தித்துள்ளதாக, புது டில்லியிலுள்ள, இந்தியாவுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மாநிலத்துடனான ஈடுபாட்டை மேலும் வலுப்படுத்தும் வகையிலும், ஜூன் மாத தொடக்கத்தில் அதன் முதலமைச்சருடனான சந்திப்பின் தொடர்ச்சியாகவும், கடந்த  வியாழக்கிழமை (04) இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலின் போது,

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமையை நிர்வகிப்பதற்கு உதவுவதற்காக தமிழ் நாடு மக்கள் வழங்கி வரும் மனிதாபிமான உதவிகளுக்கு மிலிந்த மொரகொட, தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

தமிழ்நாடு மற்றும் இலங்கைக்கு இடையிலான மிக நெருக்கமான இன, மத, கலாச்சார தொடர்புகள் குறித்து கருத்துக்களை  இருவரும் பரிமாறிக்கொண்டதுடன், அவற்றை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் குறித்தும் கலந்துரையாடினர்.

Posted in Uncategorized

இராணுவத்தினரின் தன்னிச்சையான நடவடிக்கை-உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல்

இலங்கையின் காவல்துறை மற்றும் இராணுவத்தினரின் தன்னிச்சையான நடவடிக்கைகளை ஆட்சேபித்து மனித உரிமை ஆரவலர்கள் இருவர், உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சத்குணநாதன் மற்றும் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் முன்னாள் ஆணையாளர் மிராக் ரஹீம் ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

அரசியலமைப்பு சட்டத்தின் ஆட்சி மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச மனித உரிமைகள் விதிமுறைகளுக்கு மாறாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் அவர்களை தற்காலிகமாக இரகசிய காவலில் வைத்திருப்பதற்கான நிர்வாக நடைமுறையின் சட்டபூர்வ தன்மையை மனுதார்கள் சவாலுக்கு உட்படுத்தியுள்ளார்கள்.

பொலிஸ்மா அதிபர், நீதி அமைச்சர், பொது பாதுகாப்பு அமைச்சர், இராணுவத் தளபதி, வான் படைத் தளபதி, கடற்படைத் தளபதி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். .

தமது அடையாளத்தை காட்டாத, காவல்துறையினருக்கு சொந்தமானது என அடையாளம் காணப்படாத வாகனங்களில் போராட்டக்காரர்கள் அழைத்துச் செல்லப்படுவதுடன் சில நேரங்களில் நீதிவான் ஒருவர் முன் முன்னிலைப்படுத்தப்படாமல் பல மணி நேரம் அடையாளம் தெரியாத இடங்களில் போராட்டக்காரர்கள் தடுத்து வைக்கப்படுவதாகவும் மனுதாரர்கள் கூறியுள்ளனர்.

Posted in Uncategorized

ஜனாதிபதியை சந்திக்கிறது ஜே.வி.பி!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திப்பதற்கு ஜே.வி.பி தீர்மானித்துள்ளது.

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் அனைத்துக் கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

அந்த வகையில் பல்வேறு கட்சிகள் கடந்த வாரங்களில் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளன.

இந்நிலையில் தாமும் நாளைய தினத்தில் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் சர்வகட்சி தமது கட்சி எவ்வித ஆதரவையும் வழங்காது என அந்தக் கட்சி திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

ஆனால் ஜனாதிபதியிடம் இருந்து கிடைத்த அழைப்பின் பிரகாரம் நாளை பிற்பகல் ஜனாதிபதியுடன் கலந்துரையாட தீர்மானித்துள்ளதாக அந்தக் கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்தவர்களின் புகைப்படங்களை பொலிஸார் வெளியிட்டனர்!

காலிமுகத்திடல் போராட்டத்தின் போது ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த சம்பவத்துடன் தொடர்புடைய பலரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

அதனுடன் தெதாடர்புடைய சந்தேக நபர்கள் பலரின் படங்களை பொலிஸார் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் 0718 591559, 0718 085585, 0112 2391358 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கோ அல்லது 1997 என்ற இலக்கத்திற்கோ தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.

Posted in Uncategorized

நாளைய போராட்டத்திற்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு!

நாளைய தினம் கொழும்பில் முன்னெடுக்கப்படவுள்ள அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தடை விதிக்குமாறு பொலிஸார் விடுத்த கோரிக்கை நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

கறுவாத்தோட்டம் பொலிஸாரினால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

நாளைய தினம் தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் பல அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளன.

இந்நிலையில் பொலிஸார் நீதிமன்றத்தை நாடிய போது, போராட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என்றும், போராட்டக்காரர்கள் வன்முறைகளை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டால் பொலிஸார் தமது அதிகாரங்களை பயன்படுத்த முடியுமென்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தேசிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகள் பெறுவது குறித்து சஜித் பிரேமதாஸ கருத்து

ஜனநாயகம் தார்மீகத்தை மறந்து நாகரீகமற்ற முறையில் முடிவுகளை எடுத்திருந்தால் இன்று தான் ஜனாதிபதியாகியிருக்க முடியும் எனவும், ஆனால் நெறிமுறையற்ற ஜனாதிபதியாக ஆகாமல்,மக்களின் விருப்பின்றி எந்தவொரு பதவிகளையும் எடுப்பதில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் இக்கட்டான சூழலை புரிந்து கொண்டு அனைவரும் நாட்டை கட்டியெழுப்ப ஒன்றிணைய வேண்டும் எனவும், இதில் அமைச்சுப் பதவிகளை வகிக்காமல் பாராளுமன்றக் குழு முறையின் ஊடாக கைகோர்த்து நாட்டைக் கட்டியெழுப்பத் தயார் என்றார்.

அரநாயக்க தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

இன்று மக்கள் மிகுந்த துக்கத்திலும் வேதனையில் உள்ளனர் எனவும், 2019 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் எத்தகைய வரிசைகளும் இருக்கவில்லை எனவும், குறைந்த பணவீக்கத்துடன் சுயமரியாதையுடன் வாழ்ந்ததாகவும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதி தலைமையிலான ராஜபக்‌ஷ பரம்பரையின் மொட்டுக் குடும்ப ஆட்சியின் கவனக்குறைவான நிர்வாகத்தால்,தற்போது உலகம் முழுவதும் சென்று டொலர் தேடி பிச்சையெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அவ்வாறே தற்போதைய அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தை பிரப்பித்து மக்களின் ஜனநாயக உரிமைகளை இல்லாதொழித்து தொழிற்சங்க தலைவர்களைக் கூட வேட்டையாடுகின்றனர் என்றார்.

ரணில் விக்கிரமசிங்க   கூட ஒருமுறை பாராளுமன்றத்தில் ஜோசப் ஸ்டாலினின் கைதும் ஜிஎஸ்பி பிளஸ் இழப்பிற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறினாலும்,அவர் ஜனாதிபதியாக பதவியேற்ற உடனேயே ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டார் எனவும்,இது முறையற்ற செயல் எனவும் தெரிவித்தார்.

தற்போது நாட்டில் கொலைகள் போலவே வீடுகளுக்கு தீ வைப்பு போன்ற சம்பவங்கள் கடந்த காலங்களில் நடந்ததாகவும், இத்தகைய செயல்களையும் போலவே அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் அரச மிலேச்சத்தனத்தையும் தான் நிராகரிப்பதாகவும், அரசாங்கத்தால் அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி ஜனநாயக உரிமைகளை மீற முடியாது என்றார்.