இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த மே மாதம் 28ஆம் திகதி இலங்கை வங்கி மாவத்தையில் நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், அவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த மே மாதம் 28ஆம் திகதி இலங்கை வங்கி மாவத்தையில் நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், அவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
வடபகுதி கடற்றொழிலாளர்களுக்கு தேவையான மண்ணெண்ணெயை இந்திய தூதரகம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து வழங்க வேண்டுமென்றும் அதற்கான பணத்தினை நாம் இலங்கை ரூபாயில் வழங்கத் தயாராகவுள்ளோமென்றும் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் தலைவர் அ.அன்னராசா தெரிவித்தார்.
யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத்தில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பின் போதே அன்னராசா இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்தை பொறுத்தளவில் 23 ஆயிரம் கடற்றொழில் குடும்பங்கள் 80 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் மற்றும் அதில் தங்கி வாழும் மக்கள் என அண்ணளவாக ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்களின் வாழ்வாதாரம் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. அந்த பாதிப்பு கடற்றொழில் சமூகத்தை பட்டினியை நோக்கி தள்ளுகின்றது.
கடந்த 60 நாட்களுக்கு மேல் எமக்குரிய மண்ணெண்ணெய் கிடைக்கவில்லை. நூற்றுக்கு எண்பது வீதமான கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்லவில்லை. மண்ணெண்ணெய் இன்று கிடைக்கும் நாளை கிடைக்கும் என்று சொல்லி ஏக்கத்தோடு இரண்டு மாதங்களை கடந்து விட்டோம். மண்ணெண்ணெய் கிடைக்கவில்லை. எங்கள் சமூகம் பட்டினியை நோக்கி நகர்கின்றது. இதனை யாரும் கண்டு கொள்ளவில்லை.
எரிபொருள் பற்றாக்குறை இன்றளவில் நிவர்த்தி செய்யப்படுவதாக கூறப்பட்டாலும் கூட கடற்றொழிலாளர்களுக்கு தேவையான மண்ணெண்ணெய் இன்று வரை கிடைக்கவில்லை. கடந்த வாரம் 6600 லீற்றர் மண்ணெண்ணெய் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு கிடைத்திருக்கின்றது. இதை ஆறு கடற்றொழிலாளர் சங்கங்களுக்கு பகிர்ந்தளித்திருக்கின்றோம். நூற்றுக்கணக்கான சங்கங்கள் எரிபொருளின்மையால் தொழிலை இழந்து வாழ்வாதாரத்தை இழந்துள்ளன. ஜனாதிபதி, எரிசக்தி அமைச்சர், கடற்றொழில் அமைச்சர் ஆகியோர் இணைந்து மண்ணெண்ணெய் விரைவாக வழங்க நடவடிக்கை வேண்டும்
யாழ்ப்பாணத்தில் பிரசித்தி பெற்ற நல்லூர் மகோற்சவம் இடம்பெற்று வருவதனால் மீன் உண்பவர்களின் தேவை குறைந்து இருக்கின்றது. அதனால் எங்கள் பாதிப்பு வெளித்தெரியவில்லை.அதனை தாண்டி நாங்களே உணவை உண்ண முடியாத நிலையில் இருக்கின்றோம். எங்கள் பிரச்சினை தொடர்பான விடங்களை மாவட்ட நிர்வாகம் உரிய தரப்புகளுக்கு அனுப்பவேண்டும்.
நாங்கள் யாரிடம் நிவாரணம் கேட்கவில்லை. உதவி கேட்கவில்லை மண்ணெண்ணெய் தந்தால் போதும் கடற்றொழில் சமூகம் அதற்கான பணத்தை வழங்கும். இலங்கைக்கான இந்தியத் தூதர் கோபால் பாக்லேவிடமும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனிடமும் நான் ஒரு பகிரங்க கோரிக்கையை விடுக்கின்றேன்.
வடபகுதி கடற்றொழிலாளர்களுக்கு தேவையான மண்ணெண்ணெயை இந்திய தூதரகம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் . அதற்கான பணத்தினை நாம் இலங்கை ரூபாயில் வழங்கத் தயாராகவுள்ளோம். வடபகுதி கடற்றொழிலாளர்கள் மீது கருணை காட்டி இந்தியத் தூதரகம் விரைந்து செயற்பட வேண்டும்- என்றார்.
சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்கும் செயற்பாடுகள் தடைப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கேள்வி – சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதியுடனான ஏற்பாடு எவ்வாறு உள்ளது?
பதில்– “பேச்சுவார்த்தைக்கு வரும்படி எங்களைக் கேட்டுக் கொண்டார். நாங்கள் சென்றோம். இப்போது அதைச் செய்வதற்கு அரசாங்கமே பொறுப்பு. ஆனால் இப்போது ஒரு தடை இருப்பதாக நான் நினைக்கிறேன். நாடாளுமன்றத்தில் உள்ள பலருக்கு இது பிடிக்கும், சிலருக்கு சர்வகட்சி ஆட்சி பிடிக்கவில்லை.
கேள்வி – இந்த சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஒரு குழு இழுத்தடிக்கிறதா?
பதில்– “அப்படித்தான் தெரிகிறது”
கேள்வி – இவர்கள் மொட்டுவில் உள்ளவர்களா?
பதில்– யாருக்கும் தெரியாது எனவே நீங்கள் அதை கண்டுபிடிக்க வேண்டும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (06) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டுள்ள “ஜோசப் ஸ்டாலின்” உட்பட அனைத்து போராட்ட செயற்பாட்டாளர்களையும் விடுதலை செய்ய வேண்டும், தற்போதைய அவசரகால சட்டம் முற்றாக நீக்கப்படவேண்டும், இந்த இரண்டு கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் எவ்வித கலந்துரையாடலிலும் ஈடுபடப்போவதில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவருவம் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
சர்வகட்சி ஆட்சி அமைப்பது தொடர்பில் எதிர்வரும் 10ஆம் திகதி பிற்பகல் கலந்துரையாட வருமாறு ஜனாதிபதி அக் கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த நிலையிலேயே கஜேந்திரகுமார் இக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
பிரதமராக இருந்த போது ரணில் கூறியதற்கும், அவர் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் காலி முகத்திடல் போராட்டத்தை நசுக்கியதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என கஜேந்திர குமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முதல் கட்ட கட்டுமானத்திற்கு தேவையான 51 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை சீன அரசுக்கு சொந்தமான “எக்ஸிம் வங்கி” நிறுத்தி வைத்துள்ளதாகவும், இது அரசாங்கத்தை புதிய நெருக்கடியில் தள்ளியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடவத்தைக்கும் – மீரிகமவுக்கும் இடையிலான 37 கிலோமீற்றர் தூரத்தை உள்ளடக்கிய திட்டத்தில் பணிபுரிந்த சுமார் 500 சீனர்கள் உடனடியாக வெளியேறத் தொடங்கியுள்ளதாகவும், இதன் விளைவாக உள்ளூர் மக்களின் 2000 வேலைகள் ஆபத்தில் இருப்பதாகவும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதை நிறுத்துவதற்கான இலங்கை அரசாங்கத்தின் முடிவைக் கருத்தில் கொண்டு சீனாவின் எக்ஸிம் வங்கியின் நிதி விடுவிப்பு முக்கியமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக திறைசேரி தகவல்கள் தெரிவிக்கின்றன.
2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்த வேலைகளை முடிப்பதாக 2020 செப்டம்பரில் தொடங்கப்பட்டது. இலங்கை அரசாங்கத்தின் 33 பில்லியன் ரூபா நிதியில் இதுவரை சுமார் 32 வீதமான வேலைத்திட்டம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யதீந்திரா
கடந்த பத்தியில் நமது அரசியல் சூழலிலுள்ள சில பலவீனங்கள் தொடர்பில் குறிப்பிட்டிருந்தேன். அதாவது, எதிர்பார்ப்புக்களை முன்னிறுத்துபவர்கள் எவரிடடும், அதனை அடையும் வழிமுறைகள் இல்லை. ஏனெனில் அது அவர்களுக்கு தெரியாதென்று குறித்த கட்டுரை சுட்டிக்காட்டியிருந்தது. இது தொடர்பில் சில நண்பர்கள் கேள்வியெழுப்பியிருந்தனர். அந்த பதில் உங்களிடம் இருக்கின்றதா – என்று ஒரு புலம்பெயர் நண்பர் கேட்டிருந்தார். கேள்வி சரியானது. மற்றவர்களை நோக்கி தொடுக்கும் விமர்சனங்கள் என்பவை பூமறாங் போன்றது. பூமறாங் என்பது – அதனை வீசியவரையே நோக்கி தாக்கும் திறன் கொண்டது. எறிந்தவருக்கு அதனை மீளவும் சரியாக பிடிக்கத் தெரியாது போனால், இறுதியில் எறிந்தவரையே அது தாக்கிவிடும்.
ஆனால் இவ்வாறான கேள்விகளுக்கு எனது முன்னைய பத்திகளிலும் பதிலளித்திருக்கின்றேன். மீண்டும் அந்த பதிலை மேலும் உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் சில விடயங்களை இந்த பத்தியில் காண்போம். இந்த கட்டுரை எழுதப்படும் காலத்திற்கும் தமிழர் அரசியலுக்கும் ஒரு வரலாற்று தொடர்புண்டு. 1987,யூலை (29) மாதத்தில்தான், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இந்த ஆண்டுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 35 வருடங்கள் ஆகின்றன.
கடந்த 35 வருடங்களில், தமிழர் அரசியலில் பல்வேறு விடயங்கள் இடம்பெற்றிருக்கின்றன. எனினும் தமிழ் மக்களின் அரசியல் பயணத்தில் முன்நோக்கி சென்றிருப்பதற்கான சான்றுகள் இல்லை. பின்னடைவுகளே இடம்பெற்றிருக்கின்றன. பத்து லட்சத்திற்கு மேற்பட்ட ஈழத்-தமிழ் மக்கள், பல ஜரோப்பிய நாடுகளில் சிதறி வாழ்கின்றனர், அவர்கள் தாயக அரசியல் தொடர்பில் பிரச்சாரங்களில் ஈடுபட்டுவருகின்றனர் என்பதற்கு அப்பால், குறிப்பிட்டுச் சொல்ல எதுவும் இல்லை. யுத்தத்திற்கு பின்னரான, கடந்த 13 வருடங்களில் பல்வேறு விடயங்கள் விவாதிக்கப்பட்டிருந்தாலும் கூட, அவைகள் எவற்றிலும் தமிழர்கள் வெற்றிபெறவில்லை. ஆகக் குறைந்தது நம்பிக்கைக்குரிய முன்னேற்றங்கள் கூட ஏற்படவில்லை. சர்வதேச அழுத்தங்கள் தொடர்பில் அதிகம் பேசிக் கொண்டாலும் கூட, கொழும்பின் ஆட்சியாளர்களின் அணுமுறைகளுக்கு ஏற்ப, அழுத்தங்கள் மாறிக் கொண்டிருந்தன. ராஜபக்சக்கள் இருக்கின்ற போது ஒரு மாதிரியும், ரணில் போன்றவர்கள் ஆட்சிக்கு வருகின்றபோது, வேறு மாதிரியுமே, மேற்குலக நாடுகள் நடந்துகொண்டன. அவர்கள் அப்படி நடந்து கொள்வதிலும் ஆச்சரியங்கள் ஏதுமில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில், இசையமைப்பிற்கு சொற்களை தேடுபவர்கள் போன்றே தமிழர்களின் வாழ்வு கழிந்திருக்கின்றது.
ஆனால், தமிழர் அரசியலில் தீர்மானகரமான சக்தியாக இருக்கும், பிராந்திய சக்தியான, இந்திய பேரசானது – முன்னரும், இப்போதும் ஒரு விடயத்தை மட்டுமே வலியுறுத்திவருகின்றது. அதாவது, 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையிலான, 13வது திருத்தச்சட்டம் தொடர்பிலேயே, இந்தியா தொடர்ந்தும் அழுத்திவந்திருக்கின்றது. இதனை ஆழமாக நோக்கினால், ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியாவின் கொள்கை நிலைப்பாடு, 13வது திருத்தச்சட்டம்தான். அதிலிருந்து முன்னோக்கி செல்வதென்பது வேறு விடயம். ஆனால் எந்தவொரு பயணமும், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டதாக அமைந்திருக்க வேண்டும் என்பதே, புது டில்லியின் நிலைப்பாடாக இருந்திருக்கின்றது. கடந்த 35 வருடங்களில், பல சிங்கள-அரசாங்கங்கள் வந்து போயிருக்கின்றன. அவர்கள் பல்;வேறு விடயங்கள் தொடர்பில் விவாதித்திருக்கின்றனர். எனினும் 13வது திருத்தச்சட்டத்தை எவராலும் தாண்டிச் செல்ல முடியவில்லை. தாண்டிச் செல்லும் முயற்சிகள் ஒன்றில் தோல்வியடைந்திருக்கின்றன அல்லது தோற்கடிக்கப்பட்டிருக்கின்றன. கடந்த 13 வருடகால அரசியல் முன்னெடுப்புக்கள் இதற்கு தெளிவான சான்றாகும்.
ரணில்-மைத்திரி ஆட்சிக் காலத்தில், புதியதொரு அரசியல் யாப்பு தொடர்பில் ஆடம்பரமாக விவாதிக்கப்பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ரணில்-மைத்திரி அரசாங்கமும் தேனிலவில் இருந்தது. ஆனால் என்ன நடந்தது? புதிய அரசியல் யாப்பு விடயத்தில் வெற்றிபெற முடிந்ததா? ரணில்-மைத்திரி காலத்தில், 13வது திருத்தச்சட்டத்தை தாண்டி அதிக தூரம் சென்றுவிட்டதாகவே இரா.சம்பந்தன், கூறிக்கொண்டிருந்தார். ஆனால் இறுதியில் என்ன நடந்தது?
ஆனால் இங்கு பிறிதொரு விடயத்தை ஆழமாக கவனிக்க வேண்டும். இவ்வாறான முயற்சிகள் தோல்வியடைக்கின்ற போது, சிங்கள ஆட்சியாளர்கள் சிறிதும் சலனத்தை வெளிப்படுத்துவதில்லை. ரணில்-மைத்திரி ஆட்சிக் காலத்து முயற்சிகள் தோல்விடைந்தமை தொடர்பில், ரணிலோ அல்லது மைத்திரியோ கவலைப்படவில்லை. ஏனெனில் அவர்களை பொறுத்தவரையில் புதிய அரசியல் யாப்பு ஒரு முதன்மையான தேவையாக இருந்திருக்கவில்லை. அந்த நேரத்தில், கூட்டமைப்பின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான தர்மலிங்கம் சித்தார்த்தன் ஒரு விடயத்தை என்னிடம் கூறினார். ரணில்-மைத்திரி அரசாங்கத்தில் அங்கம் வகித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவருக்குமே, புதிய அரசியல் யாப்பு விடயத்தில் அக்கறையிருக்கவில்லை. அவர்களை பொறுத்தவரையில் இது ஒரு ‘வெட நத்தி வெட’ (வேலை இல்லாதவர்களின் வேலை). ஓப்பீட்டடிப்படையில் ரணில், மங்கள சமரவீர போன்ற ஒரு சிலருக்குத்தான், இந்த விடயங்களில் ஆர்வம் இருந்தது எனலாம். இந்த பின்னணியில்தான், புதிய அரசியல் யாப்பு முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.
இந்த அனுபவங்களிலிருந்து சிந்தித்தால், என்ன செய்யலாம் என்னும் கேள்விக்கான பதிலை காண்பது சிக்கலான காரியமல்ல. தமிழர்களுக்கு முன்னால் இரண்டு தெரிவுகள்தான் இருக்கின்றன. ஒன்று, இருப்பதை கையாளுவதன் மூலம் முன்நோக்கி பயணிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வது. அதாவது, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஒரு அஸ்திபாரமாகக் கொண்டு பயணிப்பது. இதில் உண்மையாகவும் உறுதியாகவும் தமிழ் தரப்புக்கள் இருக்க வேண்டும். ஒரு கட்சி 13 பற்றி பேசியவுடன், இன்னொரு கட்சி, 13 எதிர்ப்பு ஊர்வலம் செய்து கொண்டிருந்தால் இதிலும் முன்நோக்கி பயணிக்க முடியாது. இரண்டாவது, முழுமையான புரட்சிகர மாற்றத்திற்காக போராடுவது. போராட்டம் என்பது, நல்லூர் கோவிலடியில் கூடும் போராட்டம் அல்லது பொலிகண்டியில் எந்த இடத்தில் கல்வைப்பதென்று சண்டைபோடும் போராட்டம் அல்ல. ஆனால் நம் அனைவருக்கும் தெரியும். நிச்சயமாக விடுதலை போராட்டமொன்றை முன்னெடுக்கக் கூடிய நிலையில் இன்றுள்ள தலைமைகள் எவரும் இல்லை. அப்படியொரு தலைமையிருந்தால், அவரை அறிந்துகொள்வதில் இந்தக் கட்டுரையாளர் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கின்றார்.
அப்படியாயின் என்ன வழிதான் உண்டு? இப்போது, எஞ்சியிருப்பது என்ன? அது ஒன்றுதான் – அதவாது, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை பயன்படுத்திக் கொண்டு, மெதுவாக முன்னோக்கி நகர்வது மட்டுமே ஒரேயொரு தெரிவாக இருக்க முடியும். அப்படிப் பார்த்தால், மாகாண சபை முறைமையை திறம்பட முன்னெடுப்பதற்கான முயற்சிகளைத்தான் தமிழர் தரப்புக்கள் மேற்கொள்ள வேண்டும். இந்த விடயத்தில் மட்டும்தான், புதுடில்லியின் ஆதரவை ஈழத் தமிழர்கள் கோர முடியும். இதை தவிர்த்து எந்த விடயங்களை பற்றிப் பேசினாலும் அவற்றால் தாயகத்திலுள்ள மக்களுக்கு எந்தவொரு நன்மையும் ஏற்படப் போவதில்லை. ஈழத் தமிழர்களிடம் புவிசார் பலமிருக்கின்றது, பிராந்திய பலமிருக்கின்றது என்பதெல்லாம் அரசியல் அறியாமை. நாங்கள் தேவையானதொரு மக்கள் கூட்டமென்று உலகம் கருதியிருந்தால், முள்ளிவாய்க்கால் அவலம் நிகழ்ந்திருக்காது. ஏழு கோடிக்கு மேற்பட்ட தமிழ் நாட்டு தமிழர்கள், பத்துலட்சம் ஈழத்து புலம்பெயர் சமூகம், இவர்களை சாட்சியாகக் கொண்டுதானே அனைத்தும் நடந்துமுடிந்தது. அப்போது புவிசார் பலத்திற்கும், பிராந்திய பலத்திற்கும் என்ன நடந்தது? பதில் இலகுவானது. இவ்வாறான விடயங்கள் அனைத்தும் சிலரது கற்பனை. இவ்வாறான கற்பனைகள் நல்ல திரைப்படமொன்றிற்கு பயன்படலாம் ஆனால் பாதிக்கப்பட்டு, நிலை குலைந்து போயிருக்கும் ஈழத் தமிழினத்திற்கு ஒரு போதும் பயன்படாது.
மாகாண சபை முறைமையை உச்சளவில் பயன்படுத்திக் கொண்டு, முன்நோக்கி நகர்வது தொடர்பில் சிந்திப்பது, செயற்படுவது மட்டும்தான், இப்போதுள்ள ஒரேயொரு தெரிவாகும். ஏதிர்காலத்தில் ஒரு சமஸ்டித் தீர்வை நோக்கி பயணிப்பதாக இருந்தாலும் கூட, அதற்கான அடிப்படையும் இங்குதான் இருக்கின்றது. இந்த இடத்தில் பிறிதொரு சங்கடமும் குறுக்கிடலாம். அதாவது, சிலர் அன்று இதனை விடுதலைப் புலிகள் ஏற்றுக்கொள்ளவில்லையென்று வாதிட முயற்சிக்கலாம். ஆனால் இங்கு கவனிக்க வேண்டியது, ஏற்றுக்கொள்ளாத விடுதலைப் புலிகள் இப்போது இல்லை. அவர்கள் ஏன் இல்லாமல் போனார்கள் என்பது ஒரு வரலாற்று படிப்பினை. எதிர்காலத்தை சிறந்ததாக ஆக்கிக்கொள்ள வேண்டுமென்று எண்ணினால், கடந்தகாலத்தை படிப்பது மிகவும் கட்டாயமானது.
சர்வகட்சி அரசாங்கத்துடன் நான் இணைந்து கொள்வதாக வெளியான செய்திகள் தவறானது என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடி, அரசியல் நெருக்கடியாக உருவாகியுள்ள இத்தருணத்தில், இந்த இடைவெளியைக் கடப்பதற்கு அனைத்துக் கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதே சரியான பதில் என்றே தான் கூறியிருந்தாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த கருத்துடன் குறைந்தபட்ச பொது தேசிய வேலைத்திட்டத்தை அனைத்துக் கட்சி அரசாங்கம் செயல்படுத்த வேண்டும். எங்களின் ஆலோசனைகளை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் தயாரிக்கப்படும் ‘குறைந்தபட்ச பொது தேசிய வேலைத்திட்டம் குறித்து நாங்கள் கண்காணிப்போம் எனவும் வீரவன்ச தெரிவித்துள்ளர்.
அதனை நடைமுறைப்படுத்த அனைத்துக் கட்சி அரசாங்கத்துடன் இணைந்தால் அதனை வெளிப்படையாக மக்களுக்கு தெரிவிப்போம் என்பதையும் குறிப்பிட விரும்புகின்றோம் என அறிக்கை ஒன்றை வெளியிட்டு விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா தனது பாணியில் கூட்டமைப்பை உடைக்கின்ற முதலாவது தேங்காயை உடைத்திருக்கின்றார் என கூட்டமைப்பின் சிரேஸ்ட தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்பத்தாவது தேசிய மாநாட்டில் உரையாற்றும்போதே சீ.வீ.கே.சிவஞானம் இதனை தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனக்கு வாக்களித்ததாக ரணில் விக்கிரமசிங்க கூறுகின்றார்.
பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சந்தேகக் கண்ணுடன் ஒருவரை ஒருவர் பார்க்கின்ற விடயத்தை கெட்டித்தனமாக ரணில் விக்கிரமசிங்க செய்திருக்கின்றார்.
அந்தளவிற்கு தமிழ்க் கூட்டமைப்பு தலைவர்கள் சோரம் போகமாட்டார்கள் என்ற நம்பிக்கை மக்களுக்கு இருக்கின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரையில் மூன்று கட்சிகளும் எல்லோரையும் இணைத்துக் கொண்டு செயல்பட வேண்டும்.
அதனுடைய ஒற்றுமை நீடிக்க வேண்டும்.எல்லோரையும் அணைத்து செல்லக்கூடிய சுபாவம் கொண்ட சித்தார்த்தன் இந்த முயற்சியை தொடர்வார்.
என்னைப் பொறுத்தவரையில் தமிழரசு கட்சியின் உப கட்சியினுடைய நிகழ்வே இது. இங்கு அங்கம் வகிப்பவர்கள் அனைவரும் தமிழரசுக் கட்சியில் இருந்து வந்தவர்களே. தற்போது அது உடைந்து இருந்தாலும் கூட அடிப்படையில் தமிழரசு என்ற ஒற்றுமை இருக்கின்றது.
தேசிய அரசாங்கம் அமைக்கப்படலாம் என்று தற்போது பேசப்பட்டு வருகின்றது. ஆனால் தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் என நான் நம்பவில்லை” என்றார்.
கடன் நிபந்தனைகளுக்கமைய இலங்கையில் நட்டத்தில் இயங்கும் 40 அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த சர்வதேச நாணய நிதியத்தினால் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எதிர்க்கட்சி பிரதம கொரடாவான ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கியெல்ல இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான யோசனைக்கு பாராளுமன்றத்தில் தங்களால் ஆதரவு வழங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை பெறுவதற்கு அதனால் முன்வைக்கப்படும் நிபந்தனைகள் சிலவற்றை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாக கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வரும் சீன ஆய்வுக் கப்பலின் பயணத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு சீன அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சீன ஆராய்ச்சி மற்றும் ஆய்வுக் கப்பலான “யுவான் வாங் 5” இந்நாட்டிற்கு வருவது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஒகஸ்ட் 11 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைய வேண்டிய கப்பல், 17 ஆம் திகதி வரை அங்கே நங்கூரமிட்டிருக்கும் என்று கூறப்படுகின்றது.
குறித்த கப்பலின் வருகை குறித்து தனது கவலையை வெளிப்படுத்திய இந்தியா, உயர் தொழில்நுட்ப சீனக் கப்பலின் வருகையானது பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளதாக தெரிவித்துள்ளது.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைவதற்காக கடந்த ஜூலை 13ஆம் திகதி சீனாவின் ஜியாங்யின் பகுதியில் இருந்து புறப்பட்ட கப்பல் தற்போது தைவானின் கடல் எல்லையை வந்தடைந்துள்ளது.