எரிபொருள் நெருக்கடியிலும் கூடும் பாராளுமன்றம்!

பாராளுமன்றம் இன்று திங்கட்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு கூடவுள்ளது.

அதனடிப்படையில், இன்றும் நாளையும் (05) நாளை மறுதினம் (06) பாராளுமன்றம் கூடும் என அண்மையில் நடைபெற்ற பாராமன்ற விவகாரக் குழுவில் தீர்மானிக்கப்பட்டது.

பல்வேறு காரணங்களுக்காக பாராளுமன்றத்தில் கேட்கப்படாத 50 வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக இன்று மு.ப 10.00 மணி முதல் பி.ப 3.30 மணி வரையான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜூலை 05ஆம் திகதி மு.ப 10. 00 மணிக்குப் பாராளுமன்றம் கூடவிருப்பதுடன் 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, 1979ஆம் 40ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட 2270/59 ஆம் இலக்க மற்றும் 2280/32 இலக்க வர்த்தமானி பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகள், சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான இறக்குமதித் தீர்வை வரி தொடர்பான தீர்மானம், 2020ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 08ஆம் பிரிவின் கீழான கட்டளை என்பவற்றை விவாதத்தின் பின்னர் நிறைவேற்றுவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், 2007ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்டங்கள் சட்டத்தின் கீழான 6 கட்டளைகள், 1969ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ்) விதிக்கப்பட்ட 2282/21 ஆம் இலக்க மற்றும் 2282/22 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல்களில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள் என்பன அன்றையதினம் விவாதத்தின் பின்னர் சபையில் அனுமதிக்கப்படவுள்ளன.

இதனைத் தொடர்ந்து பிற்பகல் 4.30 மணி முதல் 4.50 மணிவரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்கும், பி.ப 4.50 மணி முதல் 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை மீதான விவாதத்துக்கும் நேரத்தை ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜூலை 6ஆம் திகதி மு.ப 10.00 மணி முதல் மு.ப 10.30 மணி வரை பிரதமரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக எதிர்க்கட்சி கொண்டுவரும் சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதம் பி.ப 4.30 மணி வரை நடைபெறவுள்ளது.

அத்துடன், தற்போது நிலவும் சிரமங்கள் காரணமாக பாராளுமன்றம் கூடாத நாட்களில் குழுக் கூட்டங்களை ஒன்லைன் மூலம் நடத்துவது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், இதற்குத் தேவையான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற மேலும் 51 பேர் கைது

இலங்கை கடற்படையினரால் இன்று காலை கிழக்கு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் 51 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத குடியேற்றம் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கத்துடன், கடற்படையினர் கடல் மற்றும் கரையோரப் பகுதிகளை உள்ளடக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். இன்று காலை திருகோணமலை கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ​​சந்தேகத்திற்கிடமான உள்ளூர் மீன்பிடி இழுவை படகு ஒன்றை கடற்படையினர் மடக்கிப் பிடித்துள்ளனர்.

இக்கப்பலில் பயணித்த 51 பேர் சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு செல்ல முயன்றவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 41 ஆண்கள், 05 பெண்கள் மற்றும் 05 குழந்தைகள் அடங்குவர். சந்தேகநபர்களுடன், இந்த சட்டவிரோத செயலுக்கு பயன்படுத்தப்பட்ட மீன்பிடி கப்பலும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, கம்பஹா மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர். அவர்கள் திருகோணமலை துறைமுக காவல்துறையினரிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்படவுள்ளனர்.

இதேவேளை சட்டவிரோதமாக நாட்டை விட்டு செல்ல முயன்றவர்கள் என்ற சந்தேகத்தில் மேலும் 24 நபர்கள் நேற்று மாறவில்லை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கடல் மார்க்கமாக குடிபெயர எதிர்பார்த்து அப்பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் குழுவில் 08 ஆண்கள், 06 பெண்கள் மற்றும் 10 குழந்தைகள் அடங்குவர். மேலும், அந்த குழுவிற்கு தங்குவதற்கு வசதி செய்து கொடுத்த விடுதி பொறுப்பாளரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மட்டக்களப்பு, வாழைச்சேனை மற்றும் சிலாபம் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மாரவில காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

ஐஎம்எப் உதவி கிடைக்க இலங்கை செய்ய வேண்டியவை: அமெரிக்கா அறிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு முன்னர் சில விடயங்களை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்று அமெரிக்கா செனட் சபையின் வெளிவிவகார குழு அறிவித்துள்ளது.

அதன்படி முதலில் மத்திய வங்கியின் சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி மற்றும் மோசடி மற்றும் ஊழலை இல்லாதொழிக்கும் வேலைத்திட்டத்தை இலங்கை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான சீர்திருத்தங்கள் இல்லாவிட்டால், மேலும் தோல்வியடைந்த முகாமைத்துவத்தையும் கட்டுப்படுத்த முடியாத கடன் நிலைமையையும் இலங்கை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அக்குழு எச்சரித்துள்ளது.

Posted in Uncategorized

இலங்கைக்கு 3.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உதவிகள் -இந்திய தூதரகம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து, இலங்கைக்கு இந்தியா 3.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உதவியை வழங்கியுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயம் கடந்த வாரம் வெளிட்ட ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அந்நியச் செலாவணிக்கு ஆதரவாக 2 பில்லியன் டொலர்களும், கடனுதவியாக 1.5 பில்லியன் டொலர்களுமாக மேற்படி உதவியை இந்தியா வழங்கியுள்ளது.

மேலும் 3 பில்லியன் இலங்கை ரூபா மதிப்பிலான அரிசி, பால்மா மற்றும் மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட மனிதாபிமான நிவாரணப் பொருட்களையும் இலங்கைக்கு இந்தியா அனுப்பியது. இவை இந்திய மக்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் 24ஆம் திகதி இந்தப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

தமிழக அரசினால் வழங்கப்படும் 40000 மெட்ரிக் டன் அரிசி, 500 மெட்ரிக் டன் பால்மா மற்றும் மருந்துப் பொருட்கள் உள்ளடங்கிய பாரிய நிவாரணத்தின் இரண்டாம் கட்டமாக – குறித்த நிவாரணத்தொகுதி அமைந்திருந்ததாகவும் இந்திய தூதரகம் குறிப்பிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுமையாக முடங்கும் நிலை!

எரிபொருள் நெருக்கடி காரணமாக அடுத்த வாரம் முதல் முழுநாடும் முடங்கும் அபாயம் உருவாகியுள்ளது.

தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில் அத்தியாவசிய சேவைகளை கூட பேண முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதனால் எரிபொருள் இறக்குமதி நடக்கும் வரையில் நாட்டில் அத்தியாவசிய சேவைகள் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டு நாடு முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எரிபொருள் நெருக்கடியால் சுகாதார சேவைகள், கல்வி போன்ற அத்தியாவசிய சேவைகளையும் பராமரிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும், மருத்துவமனைகளில் ஆம்புலன்ஸ் சேவை மற்றும் மருத்துவ விநியோக சேவைகளுக்கு போதிய எரிபொருளை வழங்க முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

அரசாங்கம் கடந்த வாரம் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருளை வழங்கிய போதிலும், கடந்த வாரமும் பல அத்தியாவசிய சேவைகள் தடைபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

”பதவி விலகாவிட்டால் விரட்டியடிப்பதே ஒரே வழி”: எதிர்க்கட்சித் தலைவர்!

ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கம் உடனடியாக பதவி விலகுவதை தவிர வேறு மாற்று வழியில்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இந்த கொடுங்கோல் அரசாங்கத்தை அகற்றுவதற்கான மக்கள் போராட்டத்தை ஆரம்பிப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், இதற்காக கட்சி நிற பேதங்களை மறந்து முன்வருமாறும் கேட்டுக் கொண்டார்.

இத் தருணத்தில், நாட்டுக்கு எதிராக ஒரு கும்பலையோ அல்லது தனி நபரையோ பாதுகாப்பதை விடுத்து நாட்டு மக்களை பாதுகாப்பதில் தங்களை அர்ப்பணிக்குமாறு பாதுகாப்பு தரப்பினரிடமும் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.

இந்நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினைகளை 5 நாட்களில் 5 மாதங்களில் உடனடியாக தீர்க்க முடியாது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இவ்வாறான பொய்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும், இந்நாட்டு மக்களை தொடர்ந்தும் யாரேனும் ஏமாற்றவோ அல்லது தவறாக வழிநடத்தவோ முயற்சித்தால் அது துரதிஷ்டவசமான நிலை எனவும் அவர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (03) நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப குறைந்தது ஐந்து வருடங்கள் ஆகும் என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், இதற்கப்பால் இந்நாட்டை கட்டியெழுப்புவோம் எனக் கூறும் பேச்சு மாயையானது எனவும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

”இலங்கை கலவரங்களின் மையமாக இருக்கும்”: மைத்திரி எச்சரிக்கை!

சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படாவிட்டால் இலங்கை கலவரங்கள் மற்றும் போராட்டங்களின் மையமாக இருக்கும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அதன்போது அவர் மேலும் கூறுகையில்,
சர்வ கட்சி அரசாங்கத்தை அமைக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போதைய அரசாங்கத்திற்கு பொருளாதார மந்தநிலையில் இருந்து இலங்கையை மீட்பதற்கு திறமையும் அறிவும் இல்லை.
இதனால் சர்வ கட்சி அரசாங்கத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் கீழ் பிரதமர் பதவியை ஏற்க நான் தயாராக இல்லை.
இதனால் ஆளும்கட்சியை சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் பதவி விலகுமாறு கேட்கின்றேன். அரசாங்கம் உடனடியாக இராஜினாமா செய்து அனைத்துக் கட்சி ஆட்சி அமைக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஜப்பான், ஓமன் தூதுவர்களை ஜனாதிபதி சந்தித்தார்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஜப்பான் மற்றும் ஓமன் தூதுவர்களை இன்று சந்தித்தார்.

கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்புகள் இடம்பெற்றன.

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்திற்கும் இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் தொடர்ச்சியாக ஒத்துழைப்புகளை வழங்குவதாக ஜப்பான் தூதுவர் Hideaki Mizukoshi தெரிவித்துள்ளார்.

இலங்கையுடனான பொருளாதார, சமூக, கலாசார தொடர்புகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச்செல்ல நடவடிக்கை எடுப்பதாக ஜப்பான் தூதுவர் கூறியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கை தொடர்பில் ஜப்பான் வழங்கும் ஒத்துழைப்புகள் குறித்து இதன்போது ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 8 வருட சேவையின் பின்னர் நாட்டிலிருந்து புறப்பட்டு செல்வதற்கு முன்னர் ஓமன் தூதுவர் அஹமட் அலி சயிட் அல் ரஷீட், ஜனாதிபதியை சந்தித்துள்ளார்.

இலங்கைக்கு தேவையான எரிபொருள், எரிவாயு , முதலீட்டு சந்தர்ப்பங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அவர் கூறியுள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதியை உடனடியாக பதவி விலகுமாறு கோரியும் அடக்குமுறைகளை நிறுத்துமாறு வலியுறுத்தியும் காலி சட்டத்தரணிகள் சங்கம் காலி நீதிமன்ற வளாகத்திலிருந்து கோட்டை வரை எதிர்ப்பு பேரணியொன்றை முன்னெடுத்திருந்தது.

காலி கோட்டை வளாகத்தில் சட்டத்தரணிகளை தடுத்து நிறுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.

காலி கோட்டை வளாகத்தில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் காரணமாக குறித்த வளாகத்திற்குள் பிரவேசிக்க சந்தர்ப்பமளிக்க முடியாது என பொலிஸார் இதன்போது அறிவித்தனர்.

தமது போராட்டத்தை நிறுத்துவதற்கு பொலிஸாருக்குள்ள சட்ட ரீதியான அதிகாரம் என்னவென இதன்போது சட்டத்தரணிகள் கேள்வியெழுப்பினர்.

காலி மாவட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ் அத்தியட்சகரும் மாவட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்ததுடன், கலகத்தடுப்பு பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

இதனிடையே, காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலிருந்து காலி கோட்டையை பார்வையிடுவதற்கு இன்று எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

சட்டத்தரணிகள் காலி நகரில் கோஷங்களை எழுப்பிய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், இளைஞர்கள் சிலரும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

இதனையடுத்து, சட்டத்தரணிகள் தொடர்ந்தும் காலி நகரில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

அடக்குமுறை அரசாங்கத்தை விரட்டியடிப்போம் எனும் தொனிப்பொருளில் சட்டத்தரணிகள் கொழும்பிலும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சட்டத்தரணிகள் புதுக்கடை நீதிமன்ற கட்டடத் தொகுதி வளாகத்தில் இன்று காலை சத்தியாகிரகத்தில் ஈடுபட்டனர்.

ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சட்டத்தரணிகள் பேரணியொன்றை முன்னெடுத்து உலக வர்த்தக மைய வீதி ஊடாக இலங்கை வங்கி வீதியை அடைந்தனர்.

இதன்போது, நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொள்வதற்காக பொலிஸாரின் வாகனங்கள் தயார் நிலையில் இருந்ததை அவதானிக்க முடிந்தது.

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் பரிந்துரைகள் முஸ்லீம்களின் உரிமைகளைப் பறித்துள்ளதாக குற்றச்சாட்டு

இலங்கையில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் இறுதி அறிக்கை நேற்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், அதிலுள்ள பரிந்துரைகளில் கணிசமானவை முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் அமைந்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர், நேற்று முன்தினம் (29) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம், தமது செயலணியின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையினை கையளித்திருந்தார்.

எட்டு அத்தியாயங்களைக் கொண்ட அந்த அறிக்கையில் 43 பரிந்துரைகள் அடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அந்தப் பரிந்துரைகளில் கணிசமானவை முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும், முஸ்லிம் சமூகத்தைக் குறிவைத்தே ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணி உருவாக்கப்பட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று, ‘அரசப் பணியில் ஈடுபடும் முஸ்லிம் பெண்களுக்கு, அவர்களின் கணவரை இழந்தால் வழங்கப்படும் ‘இத்தா’ காலத்துக்குரிய 4 மாதங்கள் 10 நாட்களைக் கொண்ட விடுமுறை இல்லாமலாக்கப்பட வேண்டும்’ எனவும் – ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Posted in Uncategorized