இலங்கை கடல் பரப்புக்குள் இந்திய கடற்தொழிலாளர்களின் இழுவைமடித் தொழிலை ஒரு நிமிடம் கூட அனுமதி வழங்க முடியாதென இந்திய மீனவர்களிடம் தெரிவித்துள்ளதாக, யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அ.அன்னரசா தெரிவித்துள்ளார்.
யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்திய – இலங்கை கடற்தொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பில் சிநேகபூர்வமான கலந்துரையாடலொன்று கடந்த 11ஆம் திகதி கச்சதீவில் நடைபெற்றது.
இதில் நாம் இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறலுக்கு எதிராக மட்டுமே போராடி வருகின்றோம். ஆனால் அதை, இந்தியத் தொப்புள் கொடி உறவுகளுக்கு எதிரான போராட்டமாகச் சிலர் சந்தர்ப்பத்துக்கு ஏற்றவகையில் கதைத்து வருகின்றனர்.
நாம் அங்கே தெளிவாகக் கூறினோம், 2004ஆம் ஆண்டு தொடக்கம் 2016ஆம் ஆண்டு வரை வடக்கு மக்களுக்கு, இந்திய உறவுகள் செய்த உதவிகளை நாம் மறக்க மாட்டோம்.
ஆனால் ஒரு நிமிடம் கூட இலங்கை கடல் பரப்புக்குள் இழுவை மடித்தொழிலை செய்ய அனுமதிக்க மாட்டோம். நாட்டுப்படகோ இழுவைமடி படகோ ஏதுவாக இருந்தாலும் எமது நாட்டுக் கடற்பகுதிக்குள் அத்துமீறி வரும் பொழுது சட்டம் தன் கடமையைச் செய்யும்.
இந்திய கடற்தொழிலாளர்கள் இழுவை மடி தொழிலை நிறுத்தினால் உங்கள் தரப்பிலுள்ள நியாயமான கோரிக்கைகளை நாம் வெளியுறவு அமைச்சின் ஊடாக ஆராய்வோம் என கூறியிருந்தோம்.
அதேவேளை இந்திய நாட்டுப் படகு தொழிலாளர்கள், இழுவை மடித் தொழிலால் தாமும் பாதிக்கப்படுவதாக, அதற்கு எதிராகத் தாமும் செயற்படுவோம் என்றும் தமது பிரச்சினை தொடர்பில் முதலமைச்சர் மட்டம் வரை கொண்டு சென்றும் எந்தப் பிரயோசனமும் இல்லையென்றும் கூறியிருந்தார்கள்.
அத்துடன் எமது பிரச்சினையை அவர்கள் 90 வீதம் ஏற்றுக்கொண்டார்கள். இலங்கை மற்றும் இந்தியப் பாரம்பரிய கடற்றொழிலாளர்கள் கூட்டாக இணைந்து இலங்கை இந்தியக்கடல் வளத்தைப் பாதுகாக்கவும் தீர்மானித்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.