இலங்கைக்கு நிதியுதவி கிடைக்குமா கிடைக்காதா?:முடிவு ஐரோப்பிய நாடுகளின் கைகளில்…!

இலங்கை, சர்வதேச நாணய நிதியத்திற்கு கோரிக்கைகள் அடங்கிய யோசனைகளை முன்வைத்தாலும் உடனடியாக நிதியம், நிதியுதவிகளை வழங்காது என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள, நிதியமைச்சர் பசில் ராஜபக்ச எதிர்வரும் ஏப்ரல் மாதம் அமெரிக்காவின் வொஷிங்டனில் அமைந்துள்ள சர்வதேச நாணய நிதியத்திற்கு விஜயம் செய்ய உள்ளார்.

அப்போது அவர், கோரிக்கைகள் அடங்கிய யோசனைகளை நாணய நிதியத்திடம் சமர்ப்பிக்க உள்ளார். எனினும் கோரிக்கைகளை முன்வைத்தாலும் உடனடியாக நாணய நிதியம் நிதியுதவிகளை வழங்காது.

அதற்கு நீண்ட செயற்பாடுகள் இருக்கின்றன. அத்துடன் கடந்து செல்ல வேண்டிய சில தடைகளும் இருக்கின்றன. இதில் முதல் தடை சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்பு நாடுகளின் வாக்கெடுப்புக்கு இலங்கை உட்பட வேண்டும் என்பதாகும்.

வாக்கெடுப்பில் இலங்கை குறைந்தது 50 சத வீத வாக்குகளை பெற வேண்டும். இலங்கை 11 உறுப்பு நாடுகளில் வாக்குகளை பெற்றாக வேண்டும்.

தற்போது காணப்படும் சூழ்நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்பு நாடுகளான சீனா, இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளின் வாக்குகளை பெறுவது இலங்கை சிரமமாக இருக்கலாம்.

அதேவேளை பிரித்தானியா உட்பட ஐரோப்பிய நாடுகள் இலங்கை சம்பந்தமாக எப்படியான பிரதிபலிப்பை வெளியிடும் என்பது சிக்கலுக்குரியது. இந்த நாடுகள் எடுக்கும் முடிவின் அடிப்படையிலேயே சர்வதேச நாணய நிதியம், இலங்கைக்கு நிதியுதவியை வழங்குவதா இல்லையா என்று தீர்மானிக்கும் எனக் கூறப்படுகிறது.