தமிழகத்திலிருந்து இலங்கைக்கு அதிசொகுசு உல்லாச கப்பல் சேவை

தமிழகத்திலிருந்து இலங்கைக்கான அதிசொகுசு உல்லாச கப்பல் சேவை இந்தியாவினால் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.இக்கப்பலில் பயணிக்க விரும்பும் பயணிகள் இரண்டு தடுப்பூசிகளைப் பெற்றிருப்பது அவசியம் என்பதுடன் தொற்று ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்கான பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கையையும் கொண்டிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அதன் முதலாவது பயணம் சென்னையில் இருந்து ஆரம்பிக்கப்படும் என்றும் குறித்த கப்பலில் தங்கும் அறை வசதி உள்ளடங்கலாக பயணிகளின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்யக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவே இந்தியாவின் தமிழகத்திலிருந்து இலங்கைக்கான முதலாவது உல்லாச கப்பல் சேவை என அச்சபையின் தலைவர் கிமார்லி பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.

Posted in Uncategorized

தமிழ் அரசியல் சமூகம் விளங்கிக்கொள்ள வேண்டியது?

யதீந்திரா

இந்தக் கட்டுரையை எழுத்திக் கொண்டிருக்கும் போது, ஜரோப்பிய உலகம் பரபரப்படைந்திருக்கின்றது. ரஸ்ய ஜனாதிபதி, விளாடிமிர் புட்டின், உக்ரெயினின் கிழக்கு பகுதியின் மீதான இராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டிருக்கின்றார். உக்ரெயின் இராணுவத்தை ஆயுதங்களை கைவிடுமாறு ரஸ்யா அறிவித்திருக்கின்றது. தனது நாடு – எதற்காகவும் எவருக்காகவும் அச்சம் கொள்ளவில்லையென்று, உக்ரெயின் ஜனாதிபதி அறிவித்திருக்கின்றார். 2014இல், ரஸ்ய சார்பான உக்ரெயின் ஜனாதிபதி பதவிலிருந்து அகற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து, ரஸ்யா தாக்குதலை தொடுத்தது. உக்ரெயினின் கிழக்கு பகுதிகளில் இடம்பெற்ற யுத்தத்தில், 14000 அளவிலான மக்கள் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, உக்ரெயினின் கிழக்கு பகுதிகள் இரண்டை சுதந்திர குடியரசுகளாக ரஸ்யா அறிவித்தது. இந்த பகுதிகளில் இயங்கும் கிளர்ச்சியாளர்களை ரஸ்யா இயக்கிவருகின்றது.

ரஸ்யா, நேட்டோ விரிவாக்கத்தை தொடர்ந்தும் எதிர்த்து வருகின்றது. இந்த பின்னணியில் உக்ரெயினை, மேற்குலகத்தின் கைப்பாவையென்றே புட்டின் குற்றம்சாட்டிவருகின்றார். இந்த பின்னணியில்தான், 2014இல், ரஸ்ய ஆதரவு உக்ரெயின் ஜனாதிபதியின் வீழ்ச்சியை தொடர்ந்து, உக்ரெயினின் கிழக்கு பகுதியை ரஸ்யா ஆக்கிரமித்தது. உக்ரெயின், நேட்டோ நாடுகளின் கூட்டமைப்பில் இணைக்கப்படமாட்டாது என்னும் உத்தரவாதத்தை புட்டின் எதிர்பார்த்திருந்தார், உக்ரெயின் நேட்டோ கூட்டமைப்பில் இணைந்துவிட்டால், நேட்டோவின் விரிவாகத்தால் ரஸ்யாவின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகிவிடுமென்று புட்டின் நிர்வாகம் கருதுகின்றது. இந்த பின்னணியில்தான் உக்ரெயின் மீதான ரஸ்ய இராணுவ நடவடிக்கை தொடங்கியது.

ரஸ்யாவின் இராணுவ நடவடிக்கையை தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் பிரித்தானிய உள்ளிட்ட நாடுகள் ரஸ்யாவின் மீது பொருளாதார தடையை அறிவித்திருக்கின்றன. ஆனாலும் புட்டின் இராணுவ நடவடிக்கைகளிலிருந்து பின்வாங்கவில்லை. ஜக்கிய நாடுகள் சபையின் செயலாளர் இராணுவ நடடிவக்கையை நிறுத்துமாறு கோரியபோதும், புட்டின் அதனை கருத்தில் கொள்ளவில்லை. ரஸ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழிருக்கும் உக்ரெயினின் கிழக்கு பகுதிகள் இரண்டையும், சுதந்திர நாடுகளாக ரஸ்யா அறிவித்திருக்கின்றது. இப்போது, முழு உக்ரெயினையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கின்றது. அந்த பகுதியில் ரஸ்யாவின் நிரந்தரமான படைத்தளங்களை நிறுவுதற்கும் தீர்மானித்திருக்கின்றது.

ரஸ்ய – உக்ரெயின் பிரச்சினையானது அடிப்படையில் பனிப்போர் கால அரசியலில் தொடர்ச்சி. சோவியத் யூனியனின் உடைவிலிருந்து தோன்றிய நாடுதான் உக்ரெயின். உக்ரெயின் ஒரு நாடல்ல, ஒரு தேசத்திற்கான தகுதிநிலையையும் உக்ரெயின் கொண்டிருக்கவில்லை என்பதே புட்டினின் வாதமாக இருக்கின்றது. புட்டினின் வாதத்தின்படி, சோவியத் யூனியனிலிருந்து உடைவுற்ற அரசுகளில், ரஸ்யாவை தவிர, எவையுமே உண்மையான நாடுகள் அல்ல. இந்த அடிப்படையில்தான், சோவியத் யூனியனிலிருந்து பிளவுற்ற நாடுகளை ரஸ்யா அணுக முற்படுகின்றது. இந்த அடிப்படையில்தான் ஜோர்ஜியாவிலிருந்து, உடைவுற்ற இரண்டு பகுதிகளை கிறிமியாவுடன் இணைப்பதை ரஸ்யா அங்கீகிரித்தது. இதன் தொடர்ச்சியாகவே உக்ரெயினின் கிழக்கு பகுதிகளை சுதந்திர பகுதிகளாக ரஸ்யா அறிவித்தது.

ரஸ்யாவின் இராணுவ பலத்தை பொறுத்தவரையில், உக்ரெயினின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, ரஸ்யாவின் ஆதிக்கத்திற்கு அடிப்படையானதொன்றாகும். முன்னாள் அமெரிக்கா ஜனாதிபதியான ஜமி காட்டரின் பாதுகாப்பு ஆலோசகர், சிபிக்னியு பிரஸ்சன்ஸ்கி, 1990களில் இந்த விடயத்தை எதிர்வு கூறியிருந்தார். அதாவது, உக்ரெயின் இல்லாத ரஸ்யா, ஒரு பேரரசாக வரமுடியாது, உக்ரெயின் ரஸ்யாவிற்கு அடிபணிந்திருந்தால், ரஸ்யா தன்னிச்சையாகவே ஒரு பேரரசாகிவிடும். ஆனால் உக்ரெயின் மேலும், மேலும் மேற்கின் செல்லப்பிள்ளையாகிக் கொண்டிருக்கும் சூழலில், புட்டின், உக்ரெயினை அடிபணியச் செய்வதற்காக, இராணுவ பலத்தை பிரயோகிக்கும் முடிவை எடுத்திருக்கின்றார். ஏனெனில், நேட்டோ விரிவாக்கத்தை கட்டுப்படுத்துவதும், உக்ரெயின் ஜரோப்பிய ஒன்றியத்திற்குள் செல்வதை தடுப்பதும், சாத்தியமற்ற ஒன்றென்றே புட்டின் நிர்வாகம் கருதுகின்றது. இந்த பின்னணியில்தான் இராணுவ பலத்தை பிரயோகிக்கும் முடிவை ரஸ்யா எடுத்திருக்கின்றது. இது எப்படியானதொரு யுத்தமாக வடிவம் பெறும் அல்லது ஒரு சமர முயற்சிக்கான ஒத்திகையா என்பதை பொறுத்திருந்தே நோக்க வேண்டும்.

இந்த இடத்தில் எழும் கேள்வி? ரஸ்யா இவ்வாறு இராணுவ பலத்தை பிரயோகித்து, உக்ரெயினை ஆக்கிரமிக்க முற்படும் போது, உலக கட்டமைப்பான ஜக்கிய நாடுகள் சபையால் ஏன் எதனையும் செய்ய முடியவில்லை? எந்த சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் ரஸ்யா இராணுவ நடவடிக்கையை மேற்கொள்கின்றது? இந்த கேள்விக்கான பதில் தொடர்பில்தான் தமிழ் அரசியல் சமூகம் அதிகம் சிந்திக்க வேண்டும். ஏனெனில் தமிழ் சூழலில் சர்வதேச கட்டமைப்புக்கள் தொடர்பில் அளவுக்கதிகமான நம்பிக்கை ஊட்டப்பட்டிருக்கின்றது. ஜ.நா மனித உரிமைகள் பேரவை, சர்வதேச நீதிமன்றம், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பில் அலாதியான கதைகள் சொல்லப்படுகின்றது.

ஒரு விடயத்தை தெளிவாக புரிந்துகொள்வது அவசியம். அதாவது, சர்வதேச ஒழுங்கு என்பது அடிப்படையில் பலம் பொருந்திய நாடுகளால் தீர்மானிக்கப்படுவதாகும். பலம்பொருந்திய நாடுகளின் தீர்மானத்திற்கு அடிப்படையாக இருப்பது அந்த நாடுகளின் இராணுவ பலமாகும். பலம்பொருந்திய நாடுகளின் பாதுகாப்பிற்கு நெருக்கடி ஏற்படுமாக இருந்தால் – அந்த நாடுகளின் இறுதி தெரிவு இராணுவ வழிமுறையாகவே இருக்கும். இந்த பின்னணியில்தான் அமெரிக்கா ஈராக்கின் மீது தாக்குதலை மேற்கொண்டு, சதாம் உசைனின் இராணுவத்தை அழித்தது. பின்லெய்டனின், செப்டம்பர் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் மீது தாக்குதலை மேற்கொண்டு, 20 வருடங்கள் அங்கு நிலைகொண்டது. இந்த அடிப்படையில்தான் ரஸ்யா தனது பாதுகாப்பு கேள்விக்குள்ளாகுவதாக குற்றம்சாட்டி, அயல் நாடான உக்ரெயின் மீது படையெடுத்திருக்கின்றது. எந்த சட்டங்களின் அடிப்படையில் இவைகள் நடக்கின்றன?

 

இந்த விடயங்கள் எதனை உணர்த்துகின்றன? அரசல்லாத மக்கள் கூட்டமான நாங்கள், அரசுகளின் உலகத்தில், இலங்கை அரசொன்றை எதிர்த்து நீதியை கோருகின்றோம். அரசுகளின் உலகத்தில் அவ்வளவு எளிதாக தமிழர்கள் கோரும் நீதி கிடைத்துவிடாது. இன்று தமிழ் சூழலில் மியன்மார் – ரொகியங்கா முஸ்லிம் மக்களின் விவாரம் தொடர்பில் சிலர் உணர்ச்சிவசப்படுகின்றனர். ஆனால் அவ்வாறானவர்கள் விடயங்களை ஆழமாக புரிந்துகொள்வதில்லை. புரிந்துகொள்ளவும் முயற்சிப்பதில்லை. 2017இல், மியன்மாரிலுள்ள ரிங்கின் மானிலத்தில் வாழ்ந்த, ரொகியங்கா முஸ்லிம்கள் படுகொலைக்கு ஆளானார்கள். பர்மிய இராணுவமும், அங்குள்ள பிக்குகள் அமைப்பும்தான் இந்த படுகொலைகளை அரங்கேற்றியது. படுகொலைகளை தொடர்ந்து, சுமார் ஏழு லட்சத்திற்கு மேற்பட்ட ரொகியங்கா மக்கள் பங்காளாதேசில் அடைக்கலம் புகுந்தனர். இவர்கள் முஸ்லிம்கள் என்பதால், முஸ்லிம் நாடான பங்களாதேஸ் இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது. பிறிதொரு ஆபிரிக்க-முஸ்லிம் நாடான காம்பியா, இந்த விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றது. முஸ்லிம்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநிதீயென்னும் வகையில், உலகளாவிய முஸ்லிம்களின் கூட்டமைப்பான 57 நாடுகளை கொண்ட (Organisation of Islamic Cooperation) (OIC) இஸ்லாமிய ஒத்துழைப்புக்களுக்கான அமைப்பே, காம்பியாவை இந்த விடயத்தில் ஈடுபடுத்தியது. பங்களாதேஸ் அடைக்கலம் கொடுத்ததற்கு பின்னாலும் குறித்த அமைப்பே இருந்தது. உலகளாவிய இஸ்லாமிய ஒத்துழைப்பு என்னும் வகையிலேயே இந்த விடயம் கையாளப்பட்டது.

இதன் காரணமாக, பங்களாதேஸ் பிரமதமர் ஷேக் ஹசினாவை, ‘மனித நேயத்தின் தாய்’ என்று இந்த நாடுகள் வர்ணிக்கின்றன. ஆனால் அந்த மனித நேயத்தின் தாய், இலங்கையின் பொறுப்பு கூறல் தொடர்பான தீர்மானங்களின் போது, இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாகவே வாக்களித்திருந்தார். ரொகிங்கியர்களின் விடயத்தில் மனித நேயம் காண்பித்த, பங்களாதேஸ், ஏன் இலங்கை விடயத்தில் தமிழர்களுக்கு ஆதரவாக இருக்கவில்லை? விடயங்களை ஆழமாக புரிந்துகொள்வதற்கு இது ஒரு நல்ல உதாரணம். ஏனெனில், நாடுகளின் முடிவுகள் எவையும் மனித உரிமைகளின் அடிப்படையிலோ, அல்லது மனித நேயத்தின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுவதில்லை. மேற்குலக நாடுகளுக்கு மனித உரிமைகள் சார்ந்து கரிசனையிருந்தாலும் கூட, அந்த நாடுகளின் பாதுகாப்பு மற்றும், நாடுகளுக்கிடையிலான உறவுகளை கருத்தில் கொண்டுதான் அவர்கள் முடிவுகளை எடுப்பர். இதனை விளங்கிக் கொள்ளாமல் கருத்துக்களை முன்வைப்பது அபத்தம். யுத்தம் முடிவுற்று பன்னிரெண்டு வருடங்கள் கடந்துவிட்ட பின்னரும் கூட, தமிழ் மக்களுக்கு பாரியளவில் அநீதியிழைக்கப்பட்டிருப்பதை ஏற்றுக்கொண்டு, முழுமையாக தமிழர்களுக்கு ஆதரவளிப்பதற்கு ஒரு நாடு இருக்கின்றதா? சர்வதேச நீதிமன்றம், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பில் வாதங்கள் செய்வோர், இதுவரையில் ஒரு நாட்டின் ஆதரவையாவது பெற்றிருக்கின்றனரா? இதிலிருந்து நாம் விளங்கிக்கொள்வது என்ன? நாம் மிகவும் பலவீனமான நிலையில் இருக்கின்றோம்.

இந்த நிலையில் பலமான நண்பர் ஒருவர் இல்லாமல் இந்த அரசுகளில் உலகில் நம்மால் மூச்சுவிட முடியாது. இந்த அடிப்படையில்தான் நாம் இந்தியாவின் ஆதரவை எவ்வாறு பெறுவதென்று சிந்திக்க வேண்டும். இந்தியாவின் ஆதரவென்பது வெறுமனே தமிழ் நாடு மட்டுமல்ல. ராஜீவ்காந்தியை ‘நாங்கள்தான்டா கொன்றோம்’ – என்று கூறுகின்ற கூட்டங்களோடு நிற்பதல்ல. இதன் மூலம் ஒருபோதும் புதுடில்லியை நோக்கி செல்ல முடியாது. புதுடில்லியை நோக்கி செல்லாமல் அரசுகளின் உலகத்தில் தமிழர்கள் மூச்சுவிட முடியாது. புதுடில்லியை நோக்கிச் செல்வதென்பது, பேசுவது போன்று, எழுதுவது போன்று, இலகுவானதல்ல. இந்தியா தமிழர் விடயத்தில் கரிசனை கொண்டிருந்தாலும் கூட, தமிழர் தரப்பால் விடப்பட்ட கடந்த காலத் தவறுகள் புதுடில்லிக்கு சில கசப்பான அனுபவங்களை கொடுத்திருக்கின்றது. இதனை போக்கும் வகையில் தமிழர் தரப்புக்கள் செயலாற்ற வேண்டும். அதிகம், அதிகம், புதுடில்லியோடு ஊடாடுவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் சிந்திக்க வேண்டும். இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்பியது ஒர் ஆரம்பமாக இருக்கலாம் – ஆனால் முடிவல்ல. முடிவிற்கு, இன்னும் அதிக தூரம் பயணம் செய்ய வேண்டும். ஏனெனில் நிலைமைகள் அதிகம் மாற்றமடைந்துவிட்டது. முன்னர் இந்தியாவிடம் எதிர்பார்த்ததை இப்போது எதிர்பார்க்க முடியாது. இப்போதைக்கு எதனை எதிர்பார்க்க முடியுமோ – அதனைத்தான் எதிர்பார்க்க முடியும்.

தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது!

தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

சட்டமூலத்தை  அமைச்சர் நாமல் ராஜபக்ஸ சமர்ப்பித்திருந்தார்.

இந்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சியின் ஆட்சேபனைகளை பதிவு செய்துகொள்ளுமாறு எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஸ்மன் கிரியெல்ல சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

சட்டமூலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திருத்தங்கள் சபையில் அறிவிக்கப்பட்டதை அடுத்து சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதாக சபநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார்.

32 ஆண்டுகளுக்கு பின்னர் பேரறிவாளனுக்கு பிணை!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளனுக்கு இந்திய உயர்நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

இவர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகள் பேரறிவாளன் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.

கடந்த ஆண்டு மே மாதம் 8ஆம் திகதி அவருக்குச் சிறை விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையிலும் குறித்த விடுமுறை 10 தடவைகள் நீடிக்கப்பட்டிருந்தன.

அத்துடன், தற்காலிக விடுப்பிலிருந்தாலும் தனக்கு வெளியே செல்ல முடியாத காரணத்தினால் பிணை வழங்குமாறு அவர் நீதிமன்றத்திடம் கோரியிருந்தார்.

பேரறிவாளனின், உடல் நிலை மற்றும் கல்வித் தகுதியைக் கருத்திற்கொண்டு இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் விளக்கமளித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேர் தங்கள் தண்டனையை அனுபவித்து வந்தனர்.

இவர்களில் பேரறிவாளன் 32 ஆண்டுகளாக இந்த வழக்கில் சிறையில் இருப்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள் எல். நாகேஸ்வரராவ், பி.ஆர். கவை அடங்கிய அமர்வு, அவருக்குப் பிணை வழங்கி உத்தரவிட்டது.
பேரறிவாளனின் 32 ஆண்டுக்கால சிறைவாசத்தில் இப்போது தான் முதன்முதலாகப் பிணை வழங்கப்பட்டுள்ளது.

“இவருக்குப் பிணை வழங்க மத்திய அரசு எதிர்ப்புத் தெரிவித்தாலும், மனுதாரர் 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் இருப்பதைக் கருத்தில் கொண்டு அவருக்குப் பிணை வழங்குகிறோம்” என நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

விசாரணை நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அவர் பிணையில் விடுவிக்கப்படுவார் என்றும் ஒவ்வொரு மாதத்தின் முதல் வாரத்திலும் அவர் ஜோலார்பேட்டை காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டுமென்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இக் கொலை வழக்கில் தற்போது தண்டனை அனுபவித்துவரும் 7 பேரில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

அந்தத் தூக்குத் தண்டனை 2014ஆம் ஆண்டில் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம். நடராஜ் ஆஜரானார்.

அடுத்ததாக, இந்த வழக்கில் தண்டனைக் குறைப்புச் செய்யும் அதிகாரம் யாருக்கு இருக்கிறது என்பதை விவாதிக்கும்போது, மத்திய அரசால் செயல்படுத்தப்படும் சட்டங்களின் கீழ் அவர் தண்டிக்கப்பட்டிருப்பதால், அவருக்குத் தண்டனை குறைப்பு செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கே உள்ளது என நடராஜ் வாதிட்டார்.

அவர் எந்தெந்தச் சட்டங்களின் கீழ் தண்டிக்கப்பட்டிருக்கிறார் என நீதிமன்றம் கேள்வியெழுப்பியதும், “பேரறிவாளன் இந்தியத் தண்டனைச் சட்டம், ஆயுதச் சட்டம், வெளிநாட்டவருக்கான சட்டம் ஆகியவற்றின் கீழ் தண்டிக்கப்பட்டிருக்கிறார். இந்த வழக்கை சிபிஐ விசாரித்தது என்பதையும் மனதில் கொள்ளவேண்டும்” என கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கூறினார். இந்த விவகாரங்கள் பிறகு விவாதிக்கலாம். அவர் 32 ஆண்டுகளாகச் சிறையில் இருப்பதால், அவருக்கு ஏன் பிணை வழங்கக்கூடாது என நீதிமன்றம் கேள்வியெழுப்பியது.

“302ஆவது பிரிவின் கீழ் செய்யப்படும் குற்றம் பொது ஒழுங்கு தொடர்பானது. இது மாநில அரசின் கீழ் வரக்கூடிய சட்டம்” எனத் தமிழ்நாடு அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் த்விவேதி வாதிட்டார்.

பேரறிவாளன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், “302ஆவது பிரிவின் கீழ் இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பாக ஆளுநர்கள் பல முறை முடிவெடுத்திருக்கிறார்கள்” என்பதைச் சுட்டிக்காட்டினார்.
பேரறிவாளனுக்கு மூன்று முறை சிறை விடுப்பு அளிக்கப்பட்டிருந்தும் அவர் எவ்வித தவறுகளும் செய்யவில்லை என்பதையும் சங்கரநாராயணன் சுட்டிக்காட்டினார்.

மேலும் தண்டனைக் காலத்தில் அவருடைய நடத்தை சிறப்பாக இருந்ததையும் அவர் தனது கல்வித் தகுதியை வளர்த்துக் கொண்டது குறித்தும் சிறையில் உள்ள நூலகத்தில் உதவிசெய்தது குறித்தும் வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.

மகாத்மா காந்தி கொலைவழக்கைச் சுட்டிக்காட்டிய ராகேஷ் த்விவேதி, அந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கோபால் கோட்சே தண்டனை குறைப்புப் பெற்று 14 ஆண்டுகளில் விடுவிக்கப்பட்டார்.

ஆனால், பேரறிவாளன் 32 ஆண்டுகளைச் சிறையில் கழித்திருக்கிறார் என்று குறிப்பிட்டார். முடிவில், பேரறிவாளனுக்குப் பிணை வழங்கி உத்தரவிடுவதாக நீதிபதிகள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கையில் இராணுவத்தினரின் கீழ் செல்லும் முக்கிய பதவிகள்

பெட்ரோலிய சேமிப்பு முனையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் S.M.R.W டி சொய்சாவை நியமிக்க தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவர் இதற்கு முன்னர் இலங்கை நில மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக செயற்பட்டுள்ளார்.

இதேவேளை, தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கு நாளைய தினம் தீர்வு காணப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இரண்டு டீசல் கப்பல்கள் தற்போது தரையிறங்கியுள்ள நிலையில், மொத்த எரிபொருள் திறன் 65,000 மெட்ரிக் தொன்னாக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

எரிபொருளை ஏற்றிய மற்றுமொரு கப்பல் நாட்டுக்கு வரவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளராக ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் ஒருவர் அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தார்.

அதேவேளை நாட்டின் பல்வேறு அமைச்சுகளின் முக்கிய பதவிகளில் இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் பணம்! மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு

வெளிநாட்டு பணியாளர்கள் அனுப்பும் டொலர் ஒன்றுக்கு 8 ரூபா வீதம் மேலதிக கொடுப்பனவு வழங்காதிருக்க மத்திய வங்கியினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், அனுமதிப்பத்திரமுடைய அனைத்து வணிக வங்கிகள் மற்றும் விசேட வங்கிகளுக்கு அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தற்போதைய பொருளாதார பிரச்சினைக்கு முகங்கொடுப்பதற்காக, மத்திய வங்கியினால் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி நெகிழ்வுத் தன்மைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதென குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி நேற்றைய தினம் 225 ரூபா 20 சதமாகவும், விற்பனைப் பெறுமதி 229 ரூபா 99 சதமாகவும் பதிவாகி இருந்தது.

இதற்கமைய, வெளிநாட்டுப் பணியாளர்களினால் இலங்கைக்கு அனுப்பப்படும் அமெரிக்க டொலருக்காக வழங்குவதற்கு பரிந்துரைக்கப்பட்ட 8 ரூபா மேலதிக கொடுப்பனவுடன், அவர்களுக்கு டொலர் ஒன்றுக்காக 238 ரூபா அளவில் கிடைக்கும்.

எனவே, வெளிநாட்டு பணியாளர்கள் அனுப்பும் டொலர் ஒன்றுக்கு 8 ரூபா வீதம் மேலதிக கொடுப்பனவு வழங்காதிருக்க மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தீர்மானித்துள்ளார்.

Posted in Uncategorized

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடுவதற்கான ஆயுதமாக மனித உரிமைகளைப் பயன்படுத்த வேண்டாம் – சீனா வலியுறுத்தல்

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையீடு செய்வதற்கான ஓர் ஆயுதமாக மனித உரிமைகளைப் பயன்படுத்துவதை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தவிர்த்துக்கொள்ளவேண்டும் என்று சீனா பேரவையில் வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடரில் இலங்கையின் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் நிலைவரம் தொடர்பான எழுத்துமூல அறிக்கை ஆணையாளர் மிச்சேல் பச்லெட்டினால் கடந்த வெள்ளிக்கிழமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இலங்கை மீதான விவாதத்தில் பல்வேறு நாடுகள் கலந்துகொண்டு உரையாற்றியிருந்த நிலையில், இலங்கை தொடர்பான விவாதத்தின் இரண்டாம்நாள் அமர்வு நேற்று நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு உரையாற்றிய சீனாவின் பிரதிநிதி,

“இலங்கை குறித்து மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில் அவதானம் செலுத்தியிருக்கின்றோம்.

அதேவேளை எமது நட்புறவு நாடு என்ற ரீதியில் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிசெய்தல், மேம்படுத்தல் ஆகியவற்றை முன்னிறுத்தி இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை வரவேற்கின்றோம். அதேபோன்று நிலைபேறான பொருளாதார அபிவிருத்தியை இலக்காகக்கொண்ட செயற்பாடுகளும் பாராட்டத்தக்கவையாகும்.

எனினும் இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானமானது, பக்கச்சார்பற்ற தன்மை, அரசியல் ரீதியான பாகுபாடற்ற தன்மை, தேர்வுசெய்து இயங்காத தன்மை உள்ளிட்ட பேரவையின் ஸ்தாபகக்கொள்கைகளுக்கு முற்றிலும் முரணானதாகக் காணப்படுகின்றது.

இலங்கையின் அரசியல் உறுதிப்பாடு, இறையாண்மை ஆகியவற்றுக்கு பேரவை மதிப்பளிக்கவேண்டியது அவசியமாகும். அதேபோன்று அந்நாட்டின் தேசிய ரீதியான வரையறைகளுக்கு அமைவாக மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை உறுதிசெய்வதற்கான பொறிமுறையை முன்னெடுப்பதற்கு இடமளிக்கவேண்டும்.

இலங்கைக்குள் தலையீடுகளை மேற்கொள்வதற்கான ஓர் ஆயுதமாக மனித உரிமைகளைப் பயன்படுத்துவதை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தவிர்த்துக்கொள்ளவேண்டும்” என்று வலியுறுத்தினார்.

Posted in Uncategorized

ஐ.நா. கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம்: மக்கள் பிரதிநிதிகள் என்ன கருதுகின்றார்கள் – ரெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன்

மனித உரிமைப் பேரவையின் அண்மையில் நடந்த அமர்வில் இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஆற்றிய உரை ஒரு கேளிக்கை விருந்தாகவே அமைந்துள்ளது என்று ரெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

அரசியல் யாப்பில், மனித உரிமை பாதுகாப்பதற்கான விடயங்கள் உள்வாங்கப்பட்டிருப்பதாகவும், சுயாதீன நீதி பொறிமுறையினால், அவை நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அவர் கூறியிருக்கிறார். அரசியல் யாப்பிலே உள்வாங்கப்பட்ட விடயங்கள் எவற்றை அவர்கள் நடைமுறைப்படுத்தி இருக்கிறார்கள் என்பதை அவர் கூற தவறிவிட்டார். யுத்தக் குற்றங்களுக்கான தண்டனையின்மை நீடிக்கிறது. விசாரணைகள் நடத்தப்படவில்லை.

குறிப்பாக, அரசியல் யாப்பிலே அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான பொது மன்னிப்பு பொறிமுறை ஒன்று ஜனாதிபதியின் அதிகாரத்திற்கு கீழ் வருகின்றது. அதில் பல்லாண்டு காலமாக இருக்கக்கூடிய எங்களுடைய அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு பலமுறை கோரிக்கைகள் வைத்தும் அவர்களை விடுதலை செய்யாமல் யுத்த குற்றங்களால் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளை பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்திருக்கிறார்கள்.

இதுதான் மனித உரிமையை பேணுவதற்கு அரசியல் யாப்பிலே உள்ள ஏற்பாடா? அல்லது அதன் அடிப்படையில்தான் மனித உரிமை கோட்பாடுகளை அரசாங்கம் மதித்து நடப்பதற்கான எடுத்துக்காட்டா? என்ற கேள்வி சர்வதேச சமூகம் முன் எழுகின்றது.

அடுத்ததாக யுத்தத்துக்கு பின்னரான பரிகார நடவடிக்கைகளை தாங்கள் முன்னெடுத்து வருவதாகவும், பொறுப்புக் கூறல், நல்லிணக்க நடவடிக்கைகள், உள்ளக பொறிமுறை ஊடாக நடைமுறைப்படுத்தி வருவதாகவும் கூறி இருக்கிறார்.

உள்ளக பொறிமுறையின் ஊடாக அரசாங்கம் முன்னெடுத்த நல்லிணக்க நடவடிக்கைகள் என்ன? பொறுப்புக் கூறல் நடவடிக்கை என்ன? என்பதை அவர் தெளிவாக குறிப்பிட தவறியுள்ளார். எந்த விதமான நல்லிணக்க நடவடிக்கைகளோ, பொறுப்பு கூறலுக்கான எந்தவித ஆரம்பகட்ட முயற்சியோ, அரசாங்கத்தால் கொள்ளப்படவில்லை. மாறாக நினைவேந்தல் நிகழ்வுகளையும் நீதிகோரி அமைதியாக நடாத்தப்பட்ட படும் ஜனநாயக போராட்டங்களையும் கொடூரமான முறையில் அரசால் தடுக்கப் படுவது நல்லிணக்க நடவடிக்கையா?

மேலும் சர்வதேச சமூகம் வலியுறுத்திய பல விடயங்களை அரசாங்கம் முன்னெடுக்காமல், தவிருத்து வருகிறது. குறிப்பாக ஐநாவோடு தாங்கள் ஒன்றிணைந்து செயலாற்ற தயார் என கருத்துக்களை தெரிவித்திருக்கின்ற ஜி.எல்.பீரிஸ் அவர்கள், அதே நேரம் ஐநாவினுடைய தங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகின்ற பிரேரணையையில் உள்ள சரத்துக்களை தாங்கள் முற்று முழுதாக நிராகரிப்பதாக அதே உரையிலேயே கருத்து தெரிவித்திருக்கிறார்.

குறிப்பாக இலங்கையினுடைய விருப்பம் இல்லாமலேயே கடந்த நாற்பத்தியாறு ஒன்று பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், ஆதாரங்களை திரட்டும் நடவடிக்கையை தாங்கள் நிராகரிப்பதாகவும், அது உள்ளக பொறிமுறையின் ஊடாக பொறுப்பு கூறல் நல்லிணக்க முயற்சியை பாதிக்கிறது என்பதையும் அவர் தன்னுடைய உரையிலே கூறியிருக்கிறார்.

இது மிகவும் வேடிக்கையானது மாத்திரமல்ல ஐநா மனித உரிமை பேரவையிலே அங்கத்துவம் வகிக்கின்ற நாடுகளைக் கூட ஒரு கேளிக்கையாக எள்ளி நகையாடி இருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம்.

எந்த விதமான பொறுப்புக் கூறலையும், நல்லிணக்க நடவடிக்கைகளையும் முன்னெடுக்காத அரசாங்கம் யுத்தக் குற்றங்கள், மனித உரிமை மீறல்களுக்கான ஆதாரங்களை திரட்டுகின்ற தாங்கள் நிராகரிப்பதாக கூறி இருக்கிறார். யுத்த குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் நடைபெறவில்லை என்றும் தெரிவிக்கின்றார். யுத்த குற்றங்களும், மனித உரிமை மீறல்களும் நடைபெறவில்லை என்றால், அதற்கான விசாரணை பொறிமுறையை எதிர்கொள்வதில் எதற்கு இவர்கள் தயக்கம் காட்ட வேண்டும்? என்ற கேள்வி எழுகிறது.

அமெரிக்க வதிவிட பிரதிநிதியிடம் வெளிநாட்டு தலையீடுகளை தாங்கள் விரும்பவில்லை என்றும், அந்த அழுத்தங்களை நிராகரிக்கிறோம் என்றும் கூறியிருக்கிறார். ஆகவே முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை தனது உரையிலே கூறி கொண்டு மனித உரிமை யுத்த குற்றங்கள், மனித உரிமை மீறல், மற்றும் பொறுப்பு கூறல், நல்லிணக்கம் போன்ற முக்கியமான விடயங்களை ஐநா மனித உரிமை பேரவை பரிந்துரைத்தும் அவற்றை நிராகரித்ததோடு மாத்திரமல்ல அது சார்ந்து இவர்கள் எந்த விடயத்திலும் செயற்படவும் இல்லை என்பது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப் பட்டுள்ளது.

இனிமேலும் அரசாங்கம் செயற்பட மாட்டார்கள் என்பதை தன்னுடைய உரையினூடாக வெளிநாட்டு அமைச்சர் தெளிவுபடுத்தியிருப்பது இலங்கையை தான் காப்பாற்றுவதாக அல்லது இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றுவதற்கான உரையாகத்தான் நிகழ்த்தியிருப்பது போன்று அவர் காட்டியிருப்பதுதான் வேடிக்கையாக இருக்கின்றது.

ஆகவே அவருடைய இந்த கருத்து இலங்கை அரசாங்கம் நல்லிணக்கம், பொறுப்புக் கூறல், மனித உரிமையை பேணுகின்ற நடவடிக்கைகள், அதே போன்று யுத்தக் குற்றங்கள் மனித உரிமை மீறலுக்கான, நீதிப் பொறிமுறையை இவர்கள் எப்போதும், உள்ளக பொறிமுறையின் ஊடாக வழங்கப் போவதில்லை என்பதற்கு சர்வதேச சமூகத்துக்கு சிறந்த ஒரு எடுத்துக்காட்டாக அமைகிறது.

தாமாக வலிந்து அவற்றை செயல்படுத்த போவதில்லை என்பதையும், சர்வதேச நாடுகளினுடைய தலையீடு இல்லாமல் அல்லது ஐநாவினுடைய தலையீடு இல்லாமல் சர்வதேச நீதி பொறிமுறைக்கு முன்னால் இலங்கையை நிறுத்தாமல் இவர்கள் எந்த நடவடிக்கைகளையும் இவர்கள் முன்னெடுக்க போவதில்லை என்பதை அவருடைய உரை தெளிவாக எடுத்துக் காட்டி இருக்கிறது.

ஆகவே இதன் அடிப்படையில் சர்வதேச சமூகம் காத்திரமான, உறுதியான முறையிலே சர்வதேச நீதிப் பொறிமுறை முன் இலங்கை அரசை பாரப்படுத்த செயற்படுவதன் மூலம்தான் தமிழ் மக்களுக்கான ஒரு பரிகார நீதியையும், மீள நிகழாமையையும், உறுதிப்படுத்த முடியும் என மேலும் தெரிவித்தார்

ஐநாவுக்குக் கடிதம் எழுதும் கட்சிகள் ? – நிலாந்தன்

கடந்த ஆண்டு ஜனவரி 21ஆம் திகதி கூட்டாகக் கடிதம் அனுப்பிய கட்சிகள் இம்முறை ஐநாவுக்கு தனித்தனியாகவும் கூட்டாகவும் கடிதங்களை அனுப்பியுள்ளன. கடந்த ஆண்டு அனுப்பிய கடிதத்தின் விளைவாக என்ன நடந்தது? அக்கூட்டுக் கடிதத்தில் பொறுப்புக்கூறலை ஜெனிவாவுக்கு வெளியே கொண்டு போகவேண்டும் என்று மூன்று கட்சிகளும் கேட்டிருந்தன. கடந்த ஓராண்டு காலப் பகுதிக்குள் அவ்வாறு பொறுப்புக்கூறலை ஜெனிவாவுக்கு வெளியே கொண்டு போகும் விடயத்தில் உண்மையாக உழைத்த கட்சி எது? இதுவிடயத்தில் தமிழ்க் கட்சிகள் முதலில் தமது மக்களுக்கு பொறுப்புக்கூறுமா?

உக்ரைன் விவகாரம் மீண்டும் ஒரு தடவை ஐநாவின் கையாலாகாத்தனத்தை நிரூபித்துக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில், ஏற்கனவே ஐநாவின் கையாலாகாத்தனத்தால் கைவிடப்பட்ட ஈழத்தமிழர்கள், ஐநாவை நோக்கி சலிப்பின்றி கடிதங்களை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இம்முறை கூட்டமைப்பு தனியாக ஒரு கடிதம், தமிழ் தேசிய மக்கள் முன்னணி தனியாக ஒரு கடிதம், ஐந்து கட்சிகளின் கூட்டு தனியாக ஒரு கடிதம், என்று மூன்று முக்கிய கடிதங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன.

இதில் சம்பந்தர் கையெழுத்திட்ட கடிதம் எனைய கட்சிகள் எல்லாவற்றுக்கும் முதலில் அனுப்பப்பட்டுவிட்டது. அக்கடிதம் ஊடகங்களிலும் வெளிவந்திருந்தது. ஆனால் கடந்த திங்கட்கிழமை 5 கட்சிகள் இணைந்து ஐநாவுக்கு ஒரு கடிதத்தை அனுப்பியிருக்கின்றன. அக்கடிதத்தில் ஒரு பொது வாக்கெடுப்புக்கான கோரிக்கையும் காணப்படுகிறது. கூட்டமைப்பு அனுப்பிய கடிதத்தில் அவ்வாறான கோரிக்கைகள் எவையும் கிடையாது.

ஆனால் மேற்கண்ட கடிதத்தை அனுப்பிய ஐந்து கட்சிகளில் இரண்டு இப்பொழுதும் கூட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கின்றன. கடந்த செப்டம்பர் மாத ஐநா கூட்டத்தொடரை முன்னிட்டும் அவை இ்வ்வாறு ஒரு கூட்டுக் கடிதத்தை அனுப்பின. அக்கடிதத்தை வரையும் முயற்சிகளை தொடக்கத்தில் ஆதரித்த மாவை சேனாதிராஜா கடைசி வேளையில் அதில் கையெழுத்து வைப்பதை தவிர்த்து விட்டார். அதேசமயம் ஏனைய கட்சிகள் தமிழரசுக் கட்சிக்காக காத்துக் கொண்டிராமல் ஒரு கடிதத்தை கூட்டாக அனுப்பி வைத்தன. அது அப்பொழுது ஒரு சர்ச்சையாக எழுந்தது. கூட்டமைப்பு இரண்டாக உடையப் போகிறதா என்ற கேள்விகளையும் எழுப்பியது. எனினும் சம்பந்தர் நிலைமைகளை ஒருவாறு சமாளித்து கூட்டமைப்பை பாதுகாத்தார்.

இப்பொழுது மறுபடியும் அதே பிரச்சினை.முன்பு நடந்தது போலவே இந்த முறையும் மாவை சேனாதிராஜா ஐந்து கட்சிகளின் முயற்சிகளில் ஒத்துழைத்ததாகத் தெரியவருகிறது.ஆனால்.அவர் கடிதத்தில் கையெழுத்திடவில்லை. அதேசமயம் சம்பந்தர் கூட்டமைப்பின் சார்பாக ஒரு கடிதத்தை தயாரித்தபோது அதில் பங்காளி கட்சிகளின் பங்களிப்பை கேட்டதாக ஒரு செய்தி வெளிவந்தது. முதல் வரைபை வரைந்த பின் அதை பங்காளிக் கட்சித் தலைவர்களிடம் அனுப்பி அவர்களுடைய கருத்துக்களையும் பெற்றுக் கொண்டு இறுதிவரைபை தயாரித்து ஐநாவுக்கும் அனுப்புவது என்று சம்பந்தர் சிந்தித்ததாக கூறப்படுகிறது. ஆனால் பங்காளிக் கட்சிகளைக் கேட்டால் அவர்கள் வேறுவிதமாக கூறுகிறார்கள். சம்பந்தர் கூட்டமைப்பின் தலைவர் எழுதுவதாக ஒரு கடிதத்தை எழுதி விட்டு அதைத் தமது பார்வைக்கு அனுப்பியதாகவும், அது பங்காளிக் கட்சித் தலைவர்கள் கையொப்பம் வைப்பதற்கான ஒரு கடிதம் அல்லவென்றும் கூறுகிறார்கள்.

தமிழ் மக்கள் மத்தியில் உள்ள ஒரே கூட்டுக்குள் இருந்து இருவேறு கடிதங்கள் அனுப்பப்படுவது என்பது கூட்டமைப்பு ஒரு இறுக்கமான கூட்டாக இல்லை என்பதைத்தான் காட்டுகிறது. இந்தியாவுக்கு கடிதம் எழுதும் விடயத்திலும் முதலில் ஒத்துழைக்காத தமிழரசுக் கட்சி கடைசிக் கட்டத்தில் ஒத்துழைத்தது. ஆனால் ஒன்றாகக் கடிதம் எழுதிவிட்டு தனியாக சம்பந்தரும் சுமந்திரனும் இந்தியத் தூதுவரை கொழும்பில் சந்தித்திருக்கிறார்கள். மேலும்,ஒரு புலம்பெயர்ந்த தமிழ் அமைப்போடு இணைந்து தமிழரசுக் கட்சி தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருக்கிறது. இது தவிர பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிரான கையெழுத்து போராட்டத்தை தமிழரசுக் கட்சி தனியாக முன்னெடுக்கின்றது.

அதாவது ஒரே கூட்டமைப்புக்குள் தமிழரசுக் கட்சி தனியாக ஓடுகிறது. ஏனைய கட்சிகள் கூட்டமைப்பில் இருந்து பிரிந்த கட்சிகளோடு இணைந்து வேறு ஒரு தனியோட்டம் ஓடுகின்றன. அதேசமயம் கூட்டமைப்பு என்ற பெயரிலும் கடிதம் அனுப்பப்படுகிறது. இது எதனைக் காட்டுகிறது? கூட்டமைப்பின் தலைமை இறுக்கமாக இல்லை என்பதைத்தானே? பங்காளிக் கட்சிகள் தனியோட்டம் ஓடும்போது அதனைத் தடுத்து கூட்டமைப்பின் கட்டுக்கோப்பைப் பேண ஏன் சம்பந்தரால் முடியவில்லை?

அவர் உடல் ரீதியாக மற்றவர்களில் தங்கியிருக்கும் ஒருவராக மாறிவிட்டார். கூட்டமைப்பு அவருடைய முழுமையான கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்பதைத்தான் கடந்த ஓராண்டுக்கு மேலான நிலைமை நமக்கு உணர்த்துகிறது.தலைமை இருக்கத்தக்கதாக ஏனைய முக்கியஸ்தர்கள் கருத்துக் கூறுவதும், தலைமைக்கு எதிராக பகிரங்கமாக கருத்துக் கூறுவதும், பங்காளிக் கட்சிகள் வெளியில் உள்ள கட்சிகளோடு இணைந்து ஒரு கூட்டுக்குப் போவதும், கடிதங்களை அனுப்புவதும் அதைத்தான் நமக்கு உணர்த்துகின்றன.

ஆம்.தமிழ் மக்களுடைய அரசியலில் அண்மைக்காலமாக ஏற்படும் குழப்பங்கள் எல்லாவற்றுக்கும் பிரதான காரணம் ஸ்திரமற்ற தலைமைத்துவம்தான். கூட்டமைப்பின் தலைவராக சம்பந்தர் கூட்டமைப்பை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியாதவராக காணப்படுகிறார். அதேபோல மூத்த கட்சியும் பெரிய கட்சியான தமிழரசுக் கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜாவும் தனது தலைமைத்துவத்தை நிரூபிக்க முடியாதவராகத் தெரிகிறார். கடந்த பொதுத் தேர்தலில் பெற்ற தோல்விக்குப் பின் தன்னை மீளக் கட்டியெழுப்ப முடியாத ஒருவராகவே தொடர்ந்தும் காணப்படுகிறார்.குறிப்பாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து நிகழும் ஒருங்கிணைப்பு முயற்சிகளில் மாவை சேனாதிராஜாவின் இயலாமையும் வழுவழுத்த தன்மையும் வெளிப்படக் காணலாம்.கூட்டமைப்புக்கு வெளியே நிகழும் ஐந்து கட்சிகளின் ஒருங்கிணைப்பு முயற்சிகளில் மாவை உறுதியான முடிவுகளை எடுக்கவில்லை. ஒன்றில் தமிழரசுக் கட்சியை தனியாகப் பலப்படுத்துவது என்று முடிவெடுக்க வேண்டும். அல்லது ஐந்து கட்சிகளோடு இணைந்து அக்கூட்டைப் பலப்படுத்த வேண்டும். அவர் இரண்டையுமே செய்யவில்லை.

ஆனால் அதற்காக ஐந்து கட்சிகளின் கூட்டோ அல்லது தமிழ் தேசிய மக்கள் முன்னணியோ கூட்டமைப்புக்கு மாற்றாக பலமடைந்து வருவதாக இக்கட்டுரை கருதவில்லை. ஐந்து கட்சிகளின் கூட்டுக்குள் இணைத் தலைவர்கள்தான் உண்டு. எனினும்,அது உருகிப் பிணைந்த ஒரு பலமான கூட்டாகத் தெரியவில்லை.அது கூட்டமைப்புக்கு எதிரான ஓர் ஐக்கியம். எதிர்காலத்தில் தமிழரசுக் கட்சி கூட்டமைப்புக்குள் இருந்து பங்காளிக் கட்சிகளை நீக்கக்கூடிய வாய்ப்புக்களை ஊகித்து முன்னெச்சரிக்கையோடு உருவாக்கப்பட்ட ஒரு கூட்டு அது.

அதுபோலவே தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் தன்னை ஒரு பிரதான கட்சியாக வளர்த்தெடுக்கும் வழிவரைபடத்தை கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. மணிவண்ணனின் வெளியேற்றம் அக்கட்சியை எவ்வளவு தூரம் பாதித்திருக்கிறது என்பது இனிவரும் தேர்தல்களில்தான் தெரியவரும். அக்கட்சி எப்பொழுதும் பிரதான நீரோட்டத்திற்கு எதிராக எதிர்ப்பு அரசியலை செய்யும் ஒரு கட்சியாகத்தான் தொடர்ந்தும் காணப்படுகிறது. தமிழ் மக்களின் அரசியலை நிர்ணயிக்கும் ஒரு மிகப் பலமான கட்சியாக வளர வேண்டும் என்ற வழி வரைபடம் அக்கட்சியிடம் இருக்கிறதா? ஏனைய கட்சிகள் காலப்போக்கில் சிதையும்போது தான் படிப்படியாக பலமடையலாம் என்று அக்கட்சி நம்புகின்றதா?

கடந்த நாடாளுமன்ற தேர்தலையொட்டி கூட்டமைப்புக்கு மாற்றாக ஒரு அணியை பலப்படுத்த முயற்சித்த செயற்பாட்டாளர்களுக்கு அது நன்கு தெரியும். ஒரு மாற்று அணியை அப்பொழுது மிகப் பலமாகக் கட்டியெழுப்பக்கூடிய வாய்ப்புக்கள் கிடைத்தன. அவ்வாறு ஒரு மாற்று அணி மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கும் விதத்தில் ஒரு பலமான அணியாக கட்டியெழுப்பப்பட்டு இருந்திருந்தால் கடந்த பொதுத் தேர்தலில் கூட்டமைப்பு பெருமளவுக்கு தோற்கடிக்கப்பட்டிருக்கும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. கூட்டமைப்பு இழந்த ஆறு ஆசனங்களில் மூன்றைத்தான் மாற்று அணி பெற்றது. ஏனைய மூன்றும் தமிழ்தேசிய நிலைப்பாட்டைக் கொண்டிராத கட்சிகளிடம் சென்றன. இவ்வாறு வாக்குகள் சிதறியதற்கு பிரதான காரணம் மாற்று அணி ஒரு பலமான கூட்டாகத் திரட்சியுறாமைதான்.

எனவே இப்பொழுது படம் மிகத் தெளிவாகத் தெரிகிறது. கூட்டமைப்பின் தலைமையும் பலமாக இல்லை, தமிழரசுக் கட்சியின் தலைமையும் பலமாக இல்லை, ஐந்து கட்சிகளின் கூட்டும் உருகிப்பிணைந்த ஐக்கியமாகத் தெரியவில்லை. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மேற்படி நிலைமைகளை வெற்றிகரமாக கையாண்டு தன்னை ஒரு பெரும் கட்சியாக வளர்த்துக்கொள்ளும் என்று நம்பத்தக்கதாக கடந்த 10 ஆண்டுகளும் அமையவில்லை. தொகுத்துப் பார்த்தால் கடந்த 12 ஆண்டுகளில் தமிழ் கட்சிகள் உடைந்து கொண்டே போகின்றன. இப்பொழுது ஏற்பட்டிருக்கும் ஐந்து கட்சிகளின் கூட்டு இனிமேல்தான் அதன் பலத்தை நிரூபித்துக்காட்ட வேண்டும்.

இது மிகப் பலவீனமான ஒரு நிலைமை. கூட்டமைப்புக்குள் ஏற்பட்டிருக்கும் குழப்பம் தொடர்ந்து நீடித்தால், மிகக்குறிப்பாக சம்பந்தர் முழுமையாகத் தலைமை தாங்க முடியாத ஒரு நிலைமை தோன்றினால், கூட்டமைப்பு சிதையக்கூடிய வாய்ப்புகளே அதிகமாக தெரிகின்றன. தமிழரசுக் கட்சி தனியாகவும் பங்காளிக் கட்சிகள், ஐந்து கட்சிகளின் கூட்டுக்குள்ளும் இணைந்து செயற்படக்கூடிய வாய்ப்புக்களே அதிகரித்து வருகின்றன. அதாவது அரங்கில் உள்ள தமிழ் தேசிய கட்சிகள் எவையும் தமிழ் மக்களை இப்போதைக்கு ஒரு தேசமாக திரட்டப்போவதில்லை என்று பொருள்.

காணாமல் போனோர் பற்றிய முறைபாடுகளை விசாரிக்க விசேட குழுக்கள்!

காணாமல் போனோர் பற்றிய முறைப்பாடுகளை விசாரணை செய்து முடிவுறுத்துவதற்காக 25 விசாரணைக் குழுக்களை நியமித்து துரித வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2016 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் நிறுவப்பட்டுள்ளது.

குறித்த அலுவலகத்தால் மாத்தறை, மன்னார், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் கிளிநொச்சி போன்ற பிரதேசங்களில் பிராந்திய அலுவலகள் நிறுவப்பட்டுள்ளதுடன், அப்பிராந்திய அலுவலகங்களுக்கு காணாமல் போனமை தொடர்பான 14,988 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய முறையான விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் காணாமல் போன ஆட்களின் உறவினர்களுக்கு அறிக்கைகளை வழங்கல் உள்ளிட்ட அதிக பணிகளை காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த முறைப்பாடுகளை விசாரணை செய்து முடிவுறுத்துவதற்காக 25 விசாரணைக் குழுக்களை நியமித்து துரித வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.