AIIB இன் ஊடாக இலங்கைக்கு 100 மில்லியன்

கடுமையான கடன் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் நாடுகள் குறித்து ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) தனது ஆண்டறிக்கையில் கவனம் செலுத்தியுள்ளது.

சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு ஆதரவை வழங்க AIIB முடிவு செய்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

இலங்கைக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி நிவாரணம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தொடர்புடைய வருடாந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியை ஆட்சியில் அமர்த்த தயார் நிலையில் மக்கள் – சஜித்

மாற்று அரசாக ஐக்கிய மக்கள் சக்தி அரசை நிறுவ நாட்டு மக்கள் எந்நேரமும் தயாராகவே உள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

மருந்தக உரிமையாளர்கள் சங்கம், மருந்தக உதவியாளர் சங்கம், அவர்களின் தொழில்முயற்சியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் பலர் கலந்துகொண்ட தேசிய மக்கள் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நேற்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கூடியது.

டொலர் நெருக்கடிக்கு தீர்வு
இதில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “மருந்துப் பற்றாக்குறைக்கு முக்கியக் காரணம் டொலர் தட்டுப்பாடும், இறக்குமதி முறையின் பிரச்சினையும் ஆகும். பண்டோரா பத்திரங்களில் குறிப்பிட்டுள்ளபடி நாடு இழந்த பில்லியன் கணக்கான டொலர்களை கொண்டு வருவதே இந்த டொலர் பிரச்சினையைத் தீர்க்க சிறந்த தீர்வாகும்.

அவ்வாறு இல்லாமல் சீனா, இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளிடமிருந்து கடன் பெறுவதல்ல. இதன் மூலம் மருந்துத் தட்டுப்பாடு மட்டுமின்றி, நாட்டின் டொலர் நெருக்கடிக்கு தீர்வு கிட்டும். இது தனிநபர்களைக் குறிவைப்பதன் மூலம் அன்றி, மாறாக தவறு செய்த மற்றும் திருடிய, கொள்ளையடித்த, அரச வளங்கள் மற்றும் அரச சொத்துக்களைப் பெற்றுக்கொள்வதை இலக்காகக் கொண்டு மேற்கொள்ள வேண்டும்.

இந்தப் பணமும் சொத்துக்களும் 220 இலட்சம் பொதுமக்களின் சொத்து ஆகும். ஆனால், தற்போதைய அரசு அந்த வழியைப் பின்பற்றுமா என்பது ஒரு பிரச்சினைக்குரிய விடயம் என்றாலும், எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தி அரசின் கீழ், திருடப்பட்ட பணம் அனைத்தும் தெளிவான, வெளிப்படத்தன்மையுடனும் பொறுப்புடனும் தொடர்புடைய அனைத்து வளங்களும் மீட்கப்படும்.

நாட்டில் தற்போது நிலவும் மருந்துப் பற்றாக்குறையைத் தீர்க்க எதிர்க்கட்சியில் இருந்தும் பெரிய வேலைத்திட்டம் செயற்படுத்தப்படுகின்றது. இதன் கீழ் இதுவரை 165 மில்லியன் பெறுமதியான வைத்தியசாலை உபகரணங்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன” – என்றார்.

தமிழருக்கான தீர்வு விடயத்தில் ரணில் செயலாற்றினால் முழு ஆதரவு! – சம்பந்தன்

புதிய அரசமைப்பினூடாக தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அதே நிலைப்பாட்டில் இருப்பதை நாம் வரவேற்கின்றோம். இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியை செயற்படுத்தும் பணியில் இறங்கினால் நாம் முழுமையான ஆதரவை வழங்குவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

‘தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு புதிய அரசமைப்பு மூலம் கிடைக்கும். ஒரு வருடத்துக்குள் இந்தப் பணிகள் முற்றுப்பெற வேண்டும் என்பதே எனது நோக்கம்’ என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார். அதேவேளை, ‘தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குக் கிடைத்த இந்த அரிய சந்தர்ப்பத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் தவறவிடக்கூடாது. அவர்கள் கட்சி, பேதமின்றி மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட வேண்டும்’ என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன வலியுறுத்தியிருந்தார்.

இவர்கள் இருவரினதும் கருத்துக்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“புதிய அரசமைப்பை உருவாக்கவும், தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காணவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசுடன் இணைந்து பயணிக்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்நேரமும் தயாராகவே உள்ளது.

ஆனால், இந்த விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகளை உடனடியாகச் செயற்படுத்தும் பணியில் இறங்க வேண்டும்.

அப்போதுதான் எமக்கும் அதில் பூரண நம்பிக்கை ஏற்பட்டு முழு ஆதரவை வழங்க முடியும். காலத்தை இழுத்தடிக்காமல் ஒரு வருடத்துக்குள் தமிழர்களுக்கு நிலையான தீர்வை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கினால் அவர் இலங்கை வரலாற்றில் தனித்துவமான இடத்தைப் பிடிப்பார்” என்றார்.

தமிழர்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம்:தவறவிட வேண்டாம்!:பிரதமர் வலியுறுத்து

“தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு இது அரிய சந்தர்ப்பம் எனவும், கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் தவறவிடக்கூடாது”என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

‘தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு புதிய அரசமைப்பு மூலம் கிடைக்கும். ஒரு வருடத்துக்குள் இந்த பணிகள் முற்றுப்பெற வேண்டும் என்பதே தனது நோக்கம்’ என்று அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்த நிலையில் பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

“புதிய அரசமைப்பு, தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அதிபர் திறந்த மனதுடன் அனைவருடனும் பேச ஆரம்பித்துள்ளார்.

எனவே, தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் கட்சி, பேதமின்றி மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு அதிபருடன் இணைந்து செயற்பட வேண்டும்.

காலத்தை இழுத்தடிக்காமல் புதிய அரசமைப்பு மூலம் தேசிய பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண்பதுதான் அதிபரின் விருப்பம். அதனால்தான் ஒரு வருடத்துக்குள் தீர்வுக்கான பணிகள் நிறைவுபெற வேண்டும் என்ற கால வரையறையை அதிபர் விதித்துள்ளார்”என தெரிவித்துள்ளார்.

ஜீ.எஸ்.பி சலுகையை பெற்றுக்கொள்ள சர்வதேசத்துடன் தொடர்ந்து பேச்சு-அமைச்சர் பந்துல குணவர்தன

ஜீ.எஸ்.பி சலுகையை இலங்கைக்கு பெற்றுக் கொள்வது தொடர்பில் சர்வதேசத்துடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை இடம்பெற்று வருவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதற்காக மனித உரிமைகள் தொடர்பான விடயங்களை மேம்படுத்த அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். எனவே அந்த நிவாரணம் நாட்டுக்கு கிடைக்கும் என தாம் நம்புவதாக அமைச்சர் தெரிவித்தார்.

“கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவுடன் ஆலோசிக்கப்படுகிறது இது தொடர்பில் ஜப்பானும் கலந்துரையாடியுள்ளது. எனினும் ஒரு உறுதியான முடிவுக்கு வர சிறிது காலம் பிடிக்கும். கடன் மறுசீரமைப்பு என்பது அத்தியாவசியமான விடயம் என்பதால் அது தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்“ என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

Posted in Uncategorized

இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய அகதிகளுக்காக வடமாகாணத்தில் நடமாடும் சேவை!

இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய அகதிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் நடமாடும் சேவையை முன்னெடுப்பதற்கு நீதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கையர்களின் குடியுரிமை பெறுதல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் நடமாடும் சேவைகள் எதிர்வரும் 31 ஆம் மற்றும் நவம்பர் மாதம் முதலாம் திகதிகளில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி எதிர்வரும் 31 ஆம் திகதி யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திலும் நவம்பர் முதலாம் திகதி கிளிநொச்சி திறன் அபிவிருத்தி மத்திய நிலையத்திலும் இந்த நடமாடும் சேவைகள் இடம்பெறவுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

சுமார் ஏழாயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்து 500 இற்கும் மேற்பட்டவர்கள் வட மாகாணத்திற்கு திரும்பி மீண்டும் குடியேறியுள்ளனர்.

அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மேற்பார்வையில், அமைச்சுடன் தொடர்புடைய நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளின் பங்களிப்புடன் இந்த நடமாடும் சேவை இடம்பெறவுள்ளது.

வரவு – செலவுத் திட்ட உரை நவம்பர் 14

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நவம்பர் 14 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனை முன்வைத்து வரவு செலவு திட்ட உரையை நிகழ்த்தவுள்ளார்.

இன்று நடைபெற்ற பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழு கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க துணைத் தூதர் டக் சோனெக் மயிலிட்டி துறைமுகத்தை பார்வையிட்டார்!

இலங்கைக்கான அமெரிக்க துணைத் தூதர் டக் சோனெக், வலி வடக்கு மயிலிட்டி துறைமுகத்துக்கு சென்று, துறைமுக அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பொருளாதார நிலைமை தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.

தற்போது ஏற்பட்டுள்ள மண்ணெண்ணெய் பிரச்சினை, மீனவர்கள் எதிர்கொள்கிற முக்கிய பிரச்சினையாக காணப்படுகின்றது தொடர்பில், இதன்போது அவர் மீனவர்களிடம் கேட்டறிந்தார்.

அத்துடன் மயிலிட்டி கிராம அபிவிருத்தி சங்கத்துக்கு சென்ற அவர், அங்கு மீள்குடியேற்ற குழுவினரை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது காணிகள் விடுவிக்கப்படாமை தொடர்பிலும், பொதுமக்களுடன் காணிகள் அதிஉயர் பாதுகாப்பு வலையத்தில் இருக்கின்றமை தொடர்பிலும் அவருக்கு வலிவடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சுகிர்தன் தெளிவுபடுத்தினார்.

இது தொடர்பில் அவர், தான் ஜனாதியுடன் பேசி ஒரு நல்லதொரு முடிவினை பெற்று தருவதாக கூறியுள்ளார்.

Posted in Uncategorized

மூன்று தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த 16 ஆண்டுகளாக கொழும்பு – மகஸின் சிறைச்சாலையில் மறியலில் வைக்கப்பட்டிருந்த மூவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியைச் சேர்ந்த மூன்று அரசியல் கைதிகளை கொழும்பு மேல் நீதிமன்றம் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனத் தெரிவித்து அதனடிப்படையில் அவர்களைச் சுத்தவாளிகளாகக் கருதி விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.

அவர்களுக்கு எதிரான சாட்சியமாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட அவர்களது ஒப்புதல் வாக்குமூலங்கள் அவர்களால் சுயாதீனமாக வழங்கப்பட்டவை அல்ல என்று தீர்மானித்த நீதிமன்றம் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனத் தெரிவித்து அவர்களை நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முற்பகுதியில் கைது செய்யப்பட்ட தங்கவேல் சிவகுமார் (வயது 47), எட்வர்ட் சாம் சிவலிங்கம் (வயது 49), சீலன் ஆனந்தராஜா (வயது 45) ஆகியோரே கொழும்பு மேல் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.

காலிக்கு ஆயுதங்கள் கொண்டு செல்லப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் இவர்கள் 2006 இல் கைது செய்யப்பட்டனர். அவர்களின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அவர்களுக்கு எதிரான ஆதாரமாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 16 வருடங்களின் பின்னர் அந்த ஒப்புதல் வாக்குமூலங்கள் சுயாதீனமாக வழங்கப்படவில்லை என நீதிமன்றம் தீர்மானித்து மூவரையும் விடுவித்துள்ளது.

இரட்டைக்குடியுரிமை பெற்றவர்களை கண்டுபிடிக்க அரசிடம் வழி இல்லை

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இரட்டை குடியுரிமை பிரஜைகளை அடையாளம் காணும் முறைமை அரசாங்கத்திடம் இல்லை என அமைச்சரவை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நீதித்துறை நடவடிக்கை மூலம் இதற்கு தீர்வு காண வேண்டும் என ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவை ஊடகப் பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

“அதனை கண்டறிய அரசாங்கத்திடம் வழியில்லை. அதற்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்பு உள்ளது. நீதிமன்றம் மூலம் தேடினாலே ஒழிய, அரசாங்கம் அதனை தேடி கண்டுபிடிப்பதற்கு வழி இருப்பதாக என்னுடைய அறிவுக்கு எட்டியவரை கருதவில்லை. எனவே இது நீதிமன்றத்தினால் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை” என முன்னாள் தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டிருந்தார்.

ஒக்டோபர் 26 ஆம் திகதி புதன்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில்,இரட்டைக் குடியுரிமை தொடர்பில் சுமார் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும், அரசாங்கம் அந்த பெயர்களை வெளியிடுமா எனவும் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

ஒக்டோபர் 21ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட 22ஆவது அரசியலமைப்பு திருத்தம், இரட்டை குடியுரிமை பிரஜைகளுக்கு நாட்டின் சட்ட மன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பை இழக்கச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.