கொழும்பு பொலிஸ் பதிவு தொடர்பில் பொலிஸ் மாஅதிபருக்கு பணிப்புரை

கொழும்பில் ஆங்காங்கே சில இடங்களில் இன்னமும் பொலிஸ் பதிவு பத்திரங்கள் விநியோகம் நடக்கிறது என நான் ஜனாதிபதி ரணிலுக்கு கூறியதை தொடர்ந்து இதுபற்றி பொலிஸ் மாஅதிபரை அழைத்து கூறுகிறேன் என ஜனாதிபதி எனக்கு பதிலளித்தார். அதேபோல், பொங்கல் பண்டிகை காலத்தில் இன்னமும் ஒரு தொகுதி தமிழ் கைதிகளை விடுவிக்க தான் எண்ணியுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் தெரிவித்தார் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறினார்.

ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி ரணில் தலைமையில் அரச தீபாவளி விழா நடைபெற்றது. இதில் பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர்கள் டக்லஸ் தேவானந்தா, மனுஷ நாணயக்கார, முன்னாள் எம்பீக்கள் சாகல ரத்னாயக்க, ஆர். யோகராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்துக் கொண்ட தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நானும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் தமிழ் கைதிகள் விடுவிப்பு பற்றியும், கொழும்பில் பொலிஸ் பதிவு பற்றியும் உரையாடினோம். இப்போது சமாதான காலம் நிலவுவதால், வீடு வீடாக சென்று பொலிஸ் பதிவு பத்திரங்களை விநியோகம் செய்து, விபரங்களை திரட்ட வேண்டிய அவசியம் என்ன என நான் கேட்டேன். மேலும் இப்படி திரட்டப்படும் விபரங்கள் தவறான நபர்கள் கைகளுக்கு போவதை தடுக்க முடியாது எனவும் கூறினேன். தற்போது யுத்தம் இல்லை என்பதால் இதற்கென்ன அவசியம் என்று அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவும் கருத்து கூறினார். பொலிஸ் பதிவு பற்றி ஐஜிக்கு பணிப்புரை விடுப்பதாக ஜனாதிபதி சொன்னார்.

அமெரிக்காவின் மற்றுமொரு உயர் அதிகாரி இலங்கை விஜயம்

அமெரிக்க திறைசேரியின் ஆசியாவிற்கான பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத் ( Robert Kaproth ) இன்று இலங்கை வந்தடைந்தார்.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி சாங், தனது டுவிட்டர் செய்தியில், இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான வரவிருக்கும் வேலைத்திட்டம் குறித்து கலந்துரையாடுவதே அவரது விஜயத்தின் நோக்கம் என தெரிவித்துள்ளார்.

 

இந்த விஜயத்தின் போது அரொபர்ட் கப்ரோத், இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் மற்றும் பொருளாதார நிபுணர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா வழங்கியுள்ள உறுதி

இந்தியாவில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் DefExpo2022 உலக பாதுகாப்பு கண்காட்சியில் கலந்துகொள்வதற்காக இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் இருந்து பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தலைமையிலான இராணுவம் மற்றும் கடற்படை அதிகாரிகளை உள்ளடக்கிய மூன்று பேர் கொண்ட உத்தியோகபூர்வ தூதுக்குழுவினரே இவ்வாறு சென்றுள்ளனர்.

குஜராத் மாநிலம் காந்திநகரில், அக்டோபர் 19ஆம் திகதியன்று பிரதமர் நரேந்திரமோடி, இதனை ஆரம்பித்து வைத்துள்ளார்.

பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட நிகழ்வில் இலங்கையைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் பங்கேற்பது இது இரண்டாவது தடவையாகும்.

கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபரில் குஷிநகர் விமான நிலையத்திற்குச் சென்ற சர்வதேச விமானத்தில் இலங்கையைச் சேர்ந்த அமைச்சர்கள் ஒரு பகுதியாக இருந்தனர் என்று இந்திய உயர்ஸ்தானிகரம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், பாதுகாப்புத் துறையில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பங்காளித்துவத்தைப் பாராட்டியுள்ளார்.

பாதுகாப்பு கொள்கையை அதிகரிப்பதில் தற்காப்பு தொழில்துறை அடித்தளத்தின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்துள்ளார்.

மேலும் ஐந்து பரிமாணங்களில் நவீன போரில் ஏற்படும் மாற்றத்தின் தன்மையை ஆழமாகப் புரிந்துகொள்வதற்கு இந்த கண்காட்சி சிறந்த வழியை வழங்கியதாகவும், இந்த கண்காட்சியில் இந்தியாவின் பாதுகாப்பு துறையின் வளர்ந்துவரும் திறன் காட்டப்பட்டதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த பயணத்தின்போது இலங்கையின் அமைச்சர், இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் சுற்றுலா இராஜாங்க அமைச்சர் ஸ்ரீ அஜய் பட்டை அக்டோபர் 17 ஆம் திகதியன்று சந்தித்துள்ளார்.

இச்சந்திப்பின் போது, பாதுகாப்பு துறையில் இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிக்க இந்தியா தயாராக இருப்பதாக மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

இந்த விஜயத்தின் போது இலங்கை பிரதிநிதிகள் பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்புச் செயலாளர், பாதுகாப்பு படைகளின் பிரதானி மற்றும் இந்தியாவின் மூன்று சேவைத் தலைவர்களுடனும் சுமுகமான உரையாடல்களை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கை ஆயுதப் படைகளின் பயிற்சிகளுக்காக வருடாந்தம், இந்தியாவில் 1500-1700 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன என்றும் இந்திய உயர்ஸ்தானிகரகம் குறிப்பிட்டுள்ளது.

பொங்கலுக்கு மேலும் சில தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை ; ஜனாதிபதி உறுதி

“தீபாவளியில் விடுவிக்கப்பட்டதைப் போல், தைப்பொங்கலுக்கு இன்னொரு தொகுதி தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதாக என்னிடம் நேரில் தெரிவித்தார் ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.”

இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,
“ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற தீபாவளி நிகழ்வில் நானும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிப்பு பற்றியும், கொழும்பில் பொலிஸ் பதிவு பற்றியும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் உரையாடினோம்.
பொலிஸ் பதிவு பற்றி மீண்டும் ஒருமுறை ஐ.ஜிக்குப் பணிப்பதாக ஜனாதிபதி சொன்னார்.

தீபாவளியில் விடுவிக்கப்பட்டதைப் போல், தைப்பொங்கலுக்கு இன்னொரு தொகுதி தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதாக ஐனாதிபதி மேலும் சொன்னார்.

அருகிலிருந்த பிரதமர் தினேஷ் குணவர்த்தன மற்றும் அமைச்சர் மனுஷ நாணயக்கார, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாகல, யோகராஜன் ஆகியோரும் சாதகமாகக் கருத்து பகிர்ந்தனர்.
மலையக மக்கள் மத்தியிலான பெருந்தோட்டப் பிரிவினர் பற்றி நான் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த பிரேரணை பற்றி ஜனாதிபதி அறிந்திருந்தார்.

பெருந்தோட்டப் பகுதிகளிலேயே 51 வீத உணவின்மை பிரச்சினை காணப்படுகின்றது என்று கூறினேன். பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை ஆராய, செயலணி ஒன்றை அமைக்குமாறு ஜனாதிபதியிடம் கோரினேன். ஜனாதிபதி கொள்கை ரீதியாக உடன்பட்டார்”

– என்றார்.இதேவேளை, அரசமைப்பின் 34 ஆவது சரத்தின்படி, இலங்கை நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், சிறையிலுள்ள 8 தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு, தீபாவளித் தினமான நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

உள்ளுராட்சித் தேர்தலுக்காகக் கூக்குரலிடும் எதிர்க்கட்சிகள் மாகாணசபைத் தேர்தல்கள் தொடர்பிலும் வலியுறுத்த வேண்டும் – ஜனா

வடகிழக்கில் தமிழர்களின் நிலங்களைக் குறிவைத்து வனவளம், வனஇலாக, தொல்பொருள், மகாவலி அபிவிருத்தி போன்ற துறைகள் செயற்படுகின்றன. மாகாணசபைத் தேர்தல் நடைபெறாமையால் ஆளுநர்கள் தங்களின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ற விதத்தில் மாகாணசபைகளின் நிருவாகத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். இந்த வேளையிலே உள்ளுராட்சித் தேர்தலைப் பிற்போடக் கூடாது என்று கூக்குரலிடும் எதிர்க்கட்சிகள் மாகாணசபைத் தேர்தல்கள் தொடர்பிலும் வலியுறுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது அரசியலமைப்பின் 22வது திருத்தம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. 1978ம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்த்தன அவர்களால் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு 44 வருடங்களில் 22வது தடவையாக திருத்தமாக பாராளுமன்றத்திலே நிறைவேறியிருக்கின்றது.

அதனை விட தற்போது எதிர்க்கட்சிகளிடையே முக்கிய பேசுபொருளாக இருப்பது எதிர்வரும் 2023ம் ஆண்டு பெப்ரவரி இறுதியுடன் கலையவிருக்கின்ற உள்ளுராட்சி மன்றங்களின் தேர்தல்களை அரசு பிற்போடக் கூடாது. அவ்வாறு பிற்போடும் சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சிகள் இணைந்து நீதியை நாட வேண்டி ஏற்படும் என கடந்த பாராளுமன்ற அமர்வின் போது எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி உடன்பாடு எட்டப்பட்டு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

என்னைப் பொருத்தமட்டில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் எக்கரணம் கொண்டும் பிற்போடப்படக் கூடாது. இருந்தாலும் அதற்கு மேலாக மாகாணசபைத் தேர்தல் என்பது நீணடகாலமாக நடைபெறாமல் இருக்கின்றது. கிழக்கு மாகாணம் கலைக்கப்பட்டு ஐந்து வருடங்களும் வடக்கு மாகாணம் கலைக்கப்பட்டு நான்கு வருடங்களும் நிறைவடைந்துள்ளன.

1987ம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட 13வது திருத்தச்சட்டத்தினூடாக உருவாகிய இந்த மாகாணசபைகள் குறிப்பாக வடக்கு கிழக்கு இனப்பிரச்சனையையொட்டி, இனப்பிரச்சனைக்கு ஒரு தீர்வாக இதனைத் தமிழ் தரப்புகள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அந்த ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்பட்டவைகளே மாகாணசபைகள்.

மாகாணசபைகள் இருந்த காலத்திலே நாங்கள் எங்களது பிரதேசங்களை ஓரளவிற்குக் காப்பாற்றி வைத்திருந்தோம். இந்த மாகாணசபைகள் கலைக்கப்பட்டு மாகாணசபைத் தேர்தல் நடைபெறாமல் ஆளுநரின் ஆட்சியின் கீழ் இந்த மாகாணசபைகள் இருப்பதனால் மத்திய அரசு, ஜனாதிபதி நினைப்பதை ஆளுநர்கள் நிறைவேற்றுவதும், ஆளுநர்கள் தங்களின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ற விதத்தில் தங்களின் இஸ்டத்திற்கு இந்த மாகாணசபைகளின் நிருவாகத்தை நடத்துவதுமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

அதிலும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் ஆளுநர் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாயவின் வியத்மக அமைப்பிலே முக்கிய உறுப்பினராக இருப்பவர். இவர் கிழக்கு மாகாணத்தின் குடிப்பரம்பலை மாற்றுவதற்கு மாத்திரமல்லாமல் கிழக்கு மாகாணத்திற்கென்று உருவாக்கப்பட்ட விசேட தொல்பொருள் செயலணி ஊடாக எமது புராதனச் சின்னங்கள், சமய வழிபாட்டுத் தலங்கள் போன்றவற்றைக் கூட கையகப்படுத்தும் கைங்கரியங்களைச் செய்து கொண்டிருக்கின்றார். அதற்கேற்ற விதத்தில் அந்த தொல்பொருள் செயலணியும் செயற்படுகின்றது.

வடக்கு கிழக்கில் தமிழர்களின் நிலங்களை குறிவைத்து வனவளம், வனஇலாக, தொல்பொருள் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி போன்ற நான்கு துறைகளும் செயற்படுகின்றன. இவை தமிழ் மக்களிடம் இருந்து அவர்களின் நிலவளத்தைப் பறிப்பதற்கான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. இவைகள் தடுக்கப்பட வேண்டுமாக இருந்தால் மாகாணசபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும்.

கடந்த சுதந்திரக் கட்சி ஆட்சியிலே அமைச்சராக இருந்த ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா கூட தற்போது மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய முக்கியத்துவத்தைக் கூறியிருக்கின்றார். அத்துடன் கடந்த ஐநா மனித உரிமைகள் ஆணையகக் கூட்டத்தொடரில் கூட இந்தியா ஒரு உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இருந்தது. இலங்கைக்கு எதிராகப் பிரித்தானியாவினால் கொண்டு வரப்பட்ட பிரேரணை மீதான விவாதத்திலே இலங்கையில் மாகாணசபைத் தேர்தல்கள் மிக விரைவாக நடைபெற வேண்டும். மாகாணசபைகளுக்கான முழு அதிகாரங்கள் வழங்கப்பட்டு வடக்கு கிழக்கலே தமிழர்கள் சுயநிர்ணய உரிமையுடன் வாழ்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கின்றது.

இந்த வேளையிலே உள்ளுராட்சி மன்றத் தேர்தலைப் பிற்போடக் கூடாது என்று கூக்குரலிடும் எதிர்க்கட்சிகள் உண்மையான இன ஐக்கியம், அனைத்து மக்களும் சமமாக வாழ வேண்டும் என்று உண்மையாக நினைத்தால் மாகாணசபைத் தேர்தல்கள் உடன் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும்.

வடக்கு கிழக்கை முதன்மைப்படுத்தியே மாகாணசபைகள் உருவாக்கப்பட்டிருந்தாலும் வடகிழக்கு மாகாணசபைகள் அனுசபவித்த பிரதிபலன்களை விட கூடுதலான பிரதிபலன்களை ஏனைய மாகாணசபைகள் அனுபவித்திருக்கின்றார்கள் என்பதனைக் கருத்திற்கொண்டு ஒட்டுமொத்தமாக ஒன்பது மாகாணசபைகளுக்குமாக மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்தப்;பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் புதிய பிரதமராக ரிஷி சுனக் தெரிவு

பிரித்தானியாவின் புதிய பிரதமராக ரிஷி சுனக் தெரிவாகியுள்ளார். லிஸ் ட்ரஸ்ஸிடம் தோற்று ஏழு வாரங்களுக்குப் பிறகு, ரிஷி சுனக் இதில் வெற்றி பெற்றுள்ளார்.

அவர் இங்கிலாந்தின் முதல் பிரிட்டிஷ் ஆசியப் பிரதமராகப் பதவியேற்க உள்ளார்.மேலும் இங்கிலாந்து மிகப்பெரிய பொருளாதார சவால்களை எதிர்கொள்வதால் பதவியேற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பிரித்தானியாவின் புதிய பிரதமருக்கான போட்டியில் ரிஷி சுனக்கிற்கு 166 டோரி எம்.பிகளும், பென்னி மோர்டான்ட்-க்கு 25 டோரி எம்.பிகளும் ஆதரவாக இருந்தனர்.

கன்சர்வேட்டிவ் கட்சியின் எம்.பி.களின் அதிக ஆதரவைப் பெற்று இந்திய வம்சாவளி ரிஷி சுனக் பிரிட்டனின் பிரதமராகப் போட்டி இன்றி தேர்வாகியுள்ளார். பிரிட்டனின் முதல் இந்திய வம்சாவளி பிரதமர் என்ற பெருமையை ரிஷி சுனக் பெற்றுள்ளார்.

புதிய பிரதமருக்கான வேட்புமனு தாக்கல் இன்று மதியம் 2 மணியுடன் முடிவடைய உள்ளதால் ரிஷி சுனக் பிரதமராக அறிவிக்கப்படலாம் என முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வேட்புமனுத் தாக்கல் முடிவதற்குள் இறுதி நிமிடங்களில் டோரி தலைமைப் போட்டியில் இருந்து பென்னி மோர்டான்ட் வெளியேறிய பிறகு ரிஷி சுனக் இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

வெஸ்ட்மின்ஸ்டரில் உள்ள பணக்கார அரசியல்வாதிகளில் ஒருவராக அறியப்படும் சூனக், 44 நாட்கள் மட்டுமே பிரதமர் பணியில் இருந்து விட்டு வெளிச்செல்லும் லிஸ் ட்ரஸ்ஸுக்குப் பதிலாக, கிங் சார்ல்ஸால் அரசாங்கத்தை அமைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுவார்.

 

எட்டு தமிழ் கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு

அரசியலமைப்பின் 34 ஆவது சரத்தின்படி, இலங்கை நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், சிறையிலுள்ள 08 தமிழ் கைதிகளுக்கு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியுடன் பல தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல தடவைகள் நடத்திய கலந்துரையாடல்களின் பலனாக இந்த கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அதற்கு முன்னதாக ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய பாதுகாப்பு அமைச்சின் தலையீட்டின் பேரில் கைதிகள் தொடர்பான தகவல் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.கைதிகள் விடுதலை தொடர்பான ஒப்புதல் அறிக்கை குறித்து நீதி அமைச்சர் மற்றும் அவர் மூலமாக சட்டமா அதிபர் ஆகியோரின் கருத்து பெறப்பட்டதன் பின்னரே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தமிழ் கைதிகளில் மூவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை கொலை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் தொடர்பாக ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் கருத்தை வினவியுள்ளதோடு அவரின் இணக்கப்பாட்டுடன், இவர்களின் விடுதலைக்கு தேவையான ஆரம்ப கட்ட முன்னெடுப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய 04 கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு இவர்கள் எதிர்காலத்தில் அனுபவிக்க வேண்டியுள்ள தண்டனை காலத்தைக் குறைத்து இவ்வாறு விடுதலை செய்யப்பட உள்ளனர்.

விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புபட்டிருந்த மற்றுமிரு தமிழ் கைதிகள் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டதன் பின்னர் விடுதலை செய்யப்படவுள்ளதுடன் மேலும் இரு கைதிகள் ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் எதிர்வரும் காலங்களில் விடுவிக்கப்படவுள்ளனர்.

30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு 22 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த மூன்று கைதிகள், 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தற்போது 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஒருவர், 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு 14 ஆண்டுகள் தண்டனை அனுபவித்து ஒருவர். 05 வருட சிறைத்தண்டனைக்காக 14 வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்கும் இருவர் மற்றும் 19 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு 11 வருடங்களாக தண்டனை அனுபவித்து வரும் ஒருவர் இதில் அடங்குகின்றனர்.

அரசாங்கத்தின் புதிய விதிகளால் கைதிகளின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன – அம்பிகா சற்குணநாதன்

சிறைச்சாலை கட்டளைச் சட்டம் கைதிகளின் உரிமைகளை மீறும் வகையில் அமைந்துள்ளது என மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் அரசாங்கம் புதிய விதிகளை வகுத்துள்ளது என்றும் அவர் தனது ட்விட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை வாரத்திற்கு 6 நாட்கள் பார்வையிடலாம் என்ற அனுமதி, வாரத்திற்கு ஒருமுறை என குறைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை சிறைக்குள் இருக்கவேண்டிய நேரத்தை நாளொன்றிற்கு 23 மணித்தியாலங்களாக அதிகரிப்பது உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சமைத்த மற்றும் சமைக்கப்படாத உணவுகளை தடைசெய்யப்பட்ட பொருட்கள் என பட்டியலிட்டால் உணவு வழங்க முடியாத நிலை கைதிகளின் உறவினர்களுக்கு ஏற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சிறையில் கொடுக்கப்படும் உணவுகள் தரமில்லாத காரணத்தினாலேயே உறவினர்கள் சமைத்த உணவை வழங்குகின்றனர் என்றும் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.

12 மாதங்களுக்கும் மேலாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நபர்கள் சிறைக்கு வெளியே வேலை செய்ய அனுமதிக்கும் விதி குறித்தும் அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

இரட்டைக் குடியுரிமையுடையோர் பதவி விலக வேண்டுமென தேர்தல் ஆணைக்குழு தெரிவிப்பு

இரட்டைக் குடியுரிமையுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக வேண்டுமென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தீர்ப்பின் பிரகாரமன்றி வேறும் வழிகளில் இரட்டைக் குடியுரிமை தொடர்பில் கருத்துக்களை வெளியிட முடியாது என தெரிவித்துள்ளது.

22ஆம் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டவுடன் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் நாடாளுமன்றில் அங்கம் வகிக்க முடியாது என்றும், ஒருவர் இரட்டைக் குடியுரிமை கொண்டவரா என்பது குறித்து உடன் கருத்து வெளியிட முடியாது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஒருவர் இரட்டைக் குடியுரிமையைக் கொண்டிருந்தால் பதவி விலகுவதே அவர் செய்ய வேண்டியதாகும். தேர்தல் காலத்தில் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளும் போது இரட்டைக் குடியுரிமை குறித்து ஆராயப்படுகின்றது.

எனினும் ஏதாவது ஓர் தரப்பினர் இரட்டைக் குடியுரிமை பற்றி குறிப்பிட்டால் மட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட முடியும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் தாங்களாகவே பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆட்சியில் எவர் இருந்தாலும் எம்மை இனிமேல் ஏமாற்றவே முடியாது – சம்பந்தன்

தமிழர்களின் வாழ்வில் அமைதி ஏற்பட்டு மக்கள் முன்னேற்றகரமாக வாழக்கூடிய வகையில் இலங்கையில் புதிய அரசமைப்பு நிறைவேற்றப்பட வேண்டுமென இன்றைய நாளில் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். அந்தப் புதிய அரசமைப்பின் ஊடாக தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் எனவும் இறைவனை வேண்டுகின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இன்றைய தீபாவளிப் பெருநாளை முன்னிட்டு அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

“அனைவருக்கும் எனது அன்பான இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். தீபாவளி தமிழ் மக்களுக்கு முக்கிய பண்டிகை நாள். புதிய அரசமைப்பு ஊடாக தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டும்.

இந்த விடயம் சம்பந்தமாக நாங்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றோம். வழமை போல் இலங்கை அரசு, இந்தக் கருமத்தைச் செய்யாமல் இழுத்தடிக்க முடியாது.

கடந்த காலக் கசப்பான சம்பவங்களால் நாங்கள் விரக்தி நிலையில் இருக்கின்றோம். எனவே, தீர்வு விடயத்தில் இலங்கை அரசு அசண்டையீனமாகச் செயற்பட்டால் தமிழ் மக்களின் நலன் கருதி நாங்கள் தீர்க்கமான முடிவை எடுப்போம்.

சர்வதேச சமூகத்தை இந்தக் கருமத்தில் நேரடியாகப் பங்கெடுக்கச் செய்து தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைக் காண்பதற்கு வழிவகுக்குமாறு நாங்கள் கோருவோம். இலங்கையின் ஆட்சியில் எவர் இருந்தாலும் எம்மை இனிமேல் ஏமாற்றவே முடியாது” – என்றார்.