தமிழ் மக்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு அடுத்த சில மாதங்களில் இறுதி தீர்வு ஏற்படும்-ரணில்

நாட்டில் யுத்தத்தில் ஈடுபட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. எனினும் தற்போது நாம் நாட்டில் சமாதானத்தை நிலைநிறுத்த வேண்டும். அதற்கமைய வடக்கு மற்றும் தமிழ் மக்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு அடுத்த சில மாதங்களில் இறுதி தீர்வு ஏற்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பிராந்தியத்தின் பாதுகாப்பையும் அமைதியையும் பாதிக்கும் முறுகல் நிலை உருவாவதை நாம் விரும்பவில்லை. எந்தவொரு அதிகாரப் போட்டியிலும் இலங்கை பங்கேற்காது.

இலங்கையின் பாதுகாப்பை உறுதி செய்யும் அதே வேளை, இந்தியாவுக்கு எந்தவொரு பாதகமான விளைவும் ஏற்படாது என்பதையும் நாம் உறுதி செய்வதுடன் தொடர்ந்தும் அதே நிலைப்பாட்டில் இருப்போம் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்: ஐ.நா உப நிகழ்வில் சுரேந்திரன் வலியுறுத்தல்

இலங்கை பொறுப்புக்கூறலை இழுத்தடித்துள்ளதால் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற உப நிகழ்வில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

‘ஆயுத மோதலின் போதும் அதற்கு பின்னரும் இலங்கையில் தமிழர் உரிமைகளுக்கான சர்வதேச சட்ட பாதுகாப்பில் தோல்வி’ என்ற தலைப்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற உப நிகழ்வில் தமிழர் தரப்பு பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி, தமிழர் உரிமைக்கான குழுமத்தின் பிரதிநிதி பெரிடன்ஸ் பெர்டினான்டஸ் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் இந்த உப நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் சுரேந்திரன் மேலும் கூறுகையில், பல வருடங்கள் கடந்து விட்ட போதிலும் இலங்கை அரசு கலப்பு நீதிமன்ற பொறிமுறை தொடர்பில் கரிசனை செலுத்தவில்லை எனவும் தமிழர் பிரதேசங்களை சிங்களமயமாக்குவதையும் இராணுவமயமாக்கல் மற்றும் காணி சுவீக்கரிப்பையும் முன்னெடுக்கப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.

அத்தோடு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்ற போதிலும் தமிழர்களுக்கு ஏதும் மாறவில்லை எனவும், மாறாக சர்வதேச சமூகத்துடன் தனது உறவுகளை கட்டியெழுப்ப இலங்கை அரசிற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது எனவும் இதன்போது தமிழர் உரிமைக்கான குழுமத்தின் பிரதிநிதி பெரிடன்ஸ் பெர்டினான்டஸ் கூறியுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பல தசாப்தங்களாக தமக்கான நீதியைக் கோரி நிற்பதாக வட கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் செயலாளர் லீலாவதி ஆனந்தராஜா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கு – உலகத் தலைவர்கள் உட்பட 2,000க்கும் மேற்பட்ட முக்கிய நபர்கள் லண்டன் வருகை!

ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக உலகத் தலைவர்கள் இங்கிலாந்திற்கு படையெடுத்துள்ளனர். லண்டனில் வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் மேடையில் ராணியின் உடல், ராஜ மரியாதையுடன், கிரீடத்துடன் வைக்கப்பட்டுள்ளது. ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டியை கண்டு அஞ்சலி செலுத்துவதற்காக பொதுமக்கள் வெள்ளமென திரண்டு வருகின்றனர்.

இரவிலும் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் மக்கள் ராணியின் மீதுள்ள அன்பை வெளிக்காட்ட அஞ்சலி செலுத்த நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றனர். கடந்த ஆண்டு மறைந்த ராணியின் கணவர் அரசர் பிலிப் அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே, வரும் 19-ம் தேதி அன்று ராணியின் உடல் நல்லடக்கம் செய்யப்படும். இதில் 2,000க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்துகொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்குமாறு ஏறக்குறைய அனைத்து நாடுகளின் தலைவர்களுக்கும் இங்கிலாந்து அழைப்பிதழ்களை அனுப்பியது.

லண்டனுக்கு வரும் வெளிநாட்டுத் தலைவர்களைப் பாதுகாக்க, பிரிட்டிஷ் எம்ஐ5 மற்றும் எம்ஐ6 உளவுத்துறை நிறுவனங்கள், லண்டனின் பெருநகர காவல்துறை மற்றும் ரகசிய சேவை ஆகியவை இணைந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து காவல் துறை இதுவரை மேற்கொள்ளாத மிகப்பெரிய பாதுகாப்பு நடவடிக்கை இதுவாகும்.லண்டன் முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் காணப்படும் என்று முன்னாள் ராயல் பாதுகாப்பு அதிகாரியான சைமன் மோர்கன் தெரிவித்துள்ளார்.

சுமார் 7.5 லட்சம் பேர் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் துணை அதிபர் வாங் கிஷான், அதிபர் ஜி ஜின்பிங் சார்பாக இறுதிச் சடங்கில் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்க இன்று லண்டன் புறப்படுகின்றனர்.

இந்தியாவில் இருந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள உள்ளார். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் ஜப்பானின் பேரரசர் நருஹிட்டோ ஆகிய பல தலைவர்களும் இறுதிச் சடங்கில் பங்கேற்பார்கள்.ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ரஷியா, பெலாரஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற இங்கிலாந்துடன் முரண்பட்ட நாடுகளின் தலைவர்கள் அழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Posted in Uncategorized

”நாட்டில் எந்தக் கட்சியிலும் ஜனநாயகம் கிடையாது”: மகிந்த தேசப்பிரிய!

நாட்டில் எந்தக் கட்சியிலும் ஜனநாயகம் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், இதன் காரணமாக இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பொதுவாக தமது அரசியல் நோக்கங்களை அடைய முடியாதுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சுற்றியே அதிகப்படியான அதிகாரங்கள் குவிந்துள்ளதாக மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்சித் தலைவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு மீண்டும் மீண்டும் சலுகைகளை வழங்குவதாகவும் அவர்கள் ஏற்கனவே அரசியல் குடும்பங்களை மையமாகக் கொண்ட அதிகாரங்களைக் கொண்டு தேர்தலில் வெற்றி பெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அரசியலுக்கு வருவதை தாம் எதிர்க்கவில்லை என்றும் ஆனால் தகுதியின் அடிப்படையில் அவர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்றும் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

இந்த போக்கு தொடரும் வரை, இளைஞர்கள் தாங்கள் விரும்பும் அமைப்பு மாற்றத்தை அடைய முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

இலங்கையை குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்: ஐ.நா உப நிகழ்வில் ரெலோ பேச்சளா் சுரேந்திரன்

இலங்கையை குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்: ஐ.நா உப நிகழ்வில் வலியுறுத்தல்

‘ஆயுத மோதலின் போதும் அதற்கு பின்னரும் இலங்கையில் தமிழர் உரிமைகளுக்கான சர்வதேச சட்ட பாதுகாப்பில் தோல்வி’ என்ற தலைப்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற உப நிகழ்வில் தமிழர் தரப்பு பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி, தமிழர் உரிமைக்கான குழுமத்தின் பிரதிநிதி பெரிடன்ஸ் பெர்டினான்டஸ் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் இந்த உப நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

இலங்கை பொறுப்புக்கூறலை இழுத்தடித்துள்ளதால் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என இதன்போது தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி குறிப்பிட்டுள்ளார்.

பல வருடங்கள் கடந்து விட்ட போதிலும் இலங்கை அரசு கலப்பு நீதிமன்ற பொறிமுறை தொடர்பில் கரிசனை செலுத்தவில்லை எனவும் தமிழர் பிரதேசங்களை சிங்களமயமாக்குவதையும் இராணுவமயமாக்கல் மற்றும் காணி சுவீக்கரிப்பையும் முன்னெடுத்து வருவதாக சுரேந்திரன் குருசுவாமி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்ற போதிலும் தமிழர்களுக்கு ஏதும் மாறவில்லை எனவும், மாறாக சர்வதேச சமூகத்துடன் தனது உறவுகளை கட்டியெழுப்ப இலங்கை அரசிற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது எனவும் இதன்போது தமிழர் உரிமைக்கான குழுமத்தின் பிரதிநிதி பெரிடன்ஸ் பெர்டினான்டஸ் கூறியுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பல தசாப்தங்களாக தமக்கான நீதியைக் கோரி நிற்பதாக வட கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் செயலாளர் லீலாவதி ஆனந்தராஜா தெரிவித்தார்.

Posted in Uncategorized

எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் நாளை இங்கிலாந்து பயணம்

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை சனிக்கிழமை இங்கிலாந்து செல்லவுள்ளார்.

நாளை அதிகாலை இலங்கையிலிருந்து புறப்படும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , எதிர்வரும் திங்கட்கிழமை லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் மண்டபத்தில் நடைபெறும் இறுதிச் சடங்குகளில் பங்கேற்பார்.

இங்கிலாந்தின் மிக நீண்ட காலம் ராணியாக பதவி வகித்த இரண்டாம் எலிசபெத் மகாராணி 70 ஆண்டுகள் ஆட்சி செய்த பின்னர், 96 வயதில் பால்மோரலில் உயிரிழந்தார்.

மறைந்த ராணிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

இலங்கையுடன் ஐந்தாண்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் USAID

USAID நிர்வாகி சமந்தா பவர் சமீபத்திய விஜயத்தின் தொடர்ச்சியாக, அமெரிக்காவானது USAID ஊடாக இலங்கைக்கு மேலதிகமாக 65 மில்லியன் டொலர்களை (23 பில்லியன் இலங்கை ரூபாவிற்கும் அதிகமாக) ஒரு ஐந்தாண்டு காலப்பகுதியில் உதவியாக வழங்கும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் இன்று அறிவித்தரர்.

இது தொடர்பாக கொழும்பிலுள்ள ஐக்கிய அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள ஊடக அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

இலங்கைக்கு மேலும் நிதியுதவி வழங்கும் திட்டம் இந்தியாவுக்கு இல்லை

இலங்கைக்கு சுமார் நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியா நிதியுதவியாக வழங்கியுள்ளதாகவும் தொடர்ந்தும் புதிய நிதியுதவியை வழங்கும் திட்டம் இந்தியாவுக்கு இல்லை எனவும் சர்வதேச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவே அதிகளவில் நிதியுதவி வழங்கியது

இறக்குமதிகளுக்கு செலுத்த அந்நிய செலாவணி இல்லாது பொருளாதார நெருக்கடியால் கஷ்டங்களை அனுபவித்து வந்த இலங்கைக்கு இந்தியாவே அதிகளவில் உதவியுள்ளது.

இந்தியா, இலங்கைக்கு 3.8 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது. நாடு என்ற வகையில் இப்படியான உதவியை தொடர்ந்தும் வழங்க முடியாது என இந்திய அரசின் தகவல்கள் கூறுகின்றன.

தற்போதை அனைத்தும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவியிலேயே தங்கியுள்ளது எனவும் அந்த சர்வதேச செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

இந்தியாவின் முடிவு ஆச்சரியத்திற்குரிய விடயமல்ல

எவ்வாறாயினும் இந்தியாவின் இந்த தீர்மானம் ஆச்சரியத்திற்குரிய விடயம் அல்ல. இதற்கு முன்னர் இந்தியா தொடர்பான சமிக்ஞை ஒன்றை வழங்கி இருந்தது என இலங்கை அரசின் தகவல்கள் கூறியதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நிலவிய கடும் அந்நிய செலாவணி தட்டுப்பாடு காரணமாக அத்தியவசிய உணவு, எரிபொருள் மற்றும் மருந்து போன்றவற்றை இறக்குமதி செய்ய முடியாத நிலைமை காணப்பட்டது.

இதனையடுத்து இந்தியா, அத்தியவசியமாக தேவைப்படும் இந்த பொருட்களை இறக்குமதி செய்ய இலங்கைக்கு கடன் வசதிகளை வழங்கியது.

Posted in Uncategorized

நினைவேந்தல் நிகழ்வுகளை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்- மாவீரர்களின் பெற்றோர் கோரிக்கை!

நினைவேந்தல் நிகழ்வுகளில் கட்சி அரசியலை கலந்து அவற்றின் புனிதத்தை மாசுபடுத்த வேண்டாம் என அனைத்து மாவீரர்களின் பெற்றோர் சார்பிலும் அறிவிழியின் தந்தையான முத்துக்குமார் மனோகர் அறிக்கை ஒன்றின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளார்.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமான வேளை அங்கு வந்திருந்த அரசியல் கட்சி ஒன்றினை சார்ந்தவர்கள் பிற கட்சியினருடன் முரண்பாடுகளை ஏற்படுத்தும் முகமாக செயற்பாடுகளில் ஈடுபட்டதுடன், அங்கிருத்தவர்களுடன் வாய்த்தர்க்கத்திலும் ஈடுபட்டனர்.

அந்நிலையில் அது தொடர்பாக அனைத்து மாவீரர்களின் பெற்றோர் சார்பிலும் அறிவிலியின் தந்தையான முத்துக்குமார் மனோகர் ஊடக அறிக்கை ஒன்றினை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தியாக திலீபனின் நினைவேந்தல் மட்டுமல்ல எந்த நினைவேந்தல்களிலும் கட்சி அரசியலை கலந்து அவற்றின் புனிதத்தை மாசுபடுத்த வேண்டாம்.

இந்த ஆண்டின் திலீபன் நினைவு ஆரம்ப நிகழ்வு தொடங்கும் முன்னர் பிறிதொரு அணியினரை சாடும் வகையில் சட்டத்தரணி சுகாஷ் உரையாற்றியமை எமக்கு வேதனையை உண்டாக்குகிறது.

நேற்று இவர் சார்ந்த கட்சியின் ஏற்பாட்டாளரும் திலீபனை நேரில் கண்டவர்களில் ஒருவருமாகிய பொன் மாஸ்டரிடம் இந்நிகழ்வை பொது நிகழ்வாக நடத்துவதில் உங்களுக்குள்ள சங்கடங்கள் என்னவென்று கேட்டேன். எதுவும் இல்லை என பதிலளித்தார். அது திருப்தி அளித்தது.

அந்த நம்பிக்கையை சிதறடிக்கும் விதத்தில் சட்டத்தரணி சுகாஷ் இன்று நடந்து கொண்டார்.
ஏற்கனவே மாவீரர் நாள் நிகழ்வுகளை ஏனைய கட்சிகளை தாக்கும் களமாக பயன்படுத்த வேண்டாம் என அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமாரை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்திருந்தேன். அதனை கடைபிடிப்பதாக அவர் என்னிடம் உறுதியளித்தார்.

எனினும் கிளிநொச்சியில் நிகழ்ந்த மாவீரர்களின் பெற்றோருடைய கௌரவிப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை சாடியமை பற்றி செய்தி பத்திரிகையில் வெளியான போது மிகவும் வேதனைப்பட்டேன்.

அவ்வாறான நிலைமை மீண்டும் ஏற்படக்கூடாது என்பதற்காக பொன் மாஸ்டரை சந்தித்து உரையாடினேன்.

எனவே இவ்வாண்டு திலீபனின் நினைவு நிறைவடையும் வரைக்கும் அரசியலை கலக்காமல் ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு மன்றாட்டமாக அனைத்து கட்சிகளையும் கேட்டுக்கொள்கிறேன்.

எமது உணர்வுகளை எதிர்காலத்தில் மதிப்பார்கள் என நம்புகிறேன் – என குறிப்பிடப்பட்டுள்ளது.

வன்னி அமைச்சர் மூலம் கிராம புறங்கள் வலுப்பெற வேண்டும்-ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன்

வன்னி அமைச்சர் மூலம் கிராம புறங்கள் வலுப்பெற வேண்டும். அதே அமைச்சர் பிழைவிடின் அதனை தட்டி கேட்க வேண்டிய பொறுப்பும், கடமையும் இருக்கின்றது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சராக காதர் மஸ்தான் பதவியேற்றபோது தாங்கள் அங்கு இருந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தமை தொடர்பாக வினவிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிராமிய அபிவிருத்தி அமைச்சராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவியேற்கின்ற சூழலிலே நானும் அங்கு சென்றிருந்தேன். பொருளாதார அபிவிருத்தி என்று கூறிக்கொண்டு அதில் கலந்து கொள்ளாமல் இருப்பது நல்லதல்ல.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரே பதவி ஏற்றிருக்கின்றார். இதிலே குறிப்பாக கூற வேண்டிய விடயம் என்னவெனில் எங்களுடைய கிராம புறங்கள் இதனூடாக வலுப்பெற வேண்டும் என்பது என்னுடைய கருத்து.

இதே அமைச்சர் பிழைவிடின் அதனை தட்டி கேட்க வேண்டிய பொறுப்பும், கடமையும் இருக்கின்றது.நிச்சயமாக தட்டி கேட்போம். வன்னி பிரதேசத்தில் ஒரு அமைச்சு பதவி கிடைத்திருக்கின்றது என்ற காரணத்திற்காக நாங்கள் சென்றிருக்கின்றோம்.

ஜனாதிபதியை நாங்கள் சந்தித்த போதும் இவ்வாறு விமர்சனங்கள் வந்தது. மக்களுடைய நலன் கருதி அபிவிருத்தி சம்பந்தமாக இருக்கின்ற விடயங்களிலே நாங்கள் கவனம் செலுத்த வேண்டும்.

எங்களுடைய மக்களும் பட்டினியை சந்தித்து கொண்டிருக்கின்றார்கள். ஆகவே இவ்வாறான விடயங்களை பயன்படுத்த வேண்டும். அந்தவகையில் வன்னி பிரதேச பாராளுமன்ற உறுப்பினருக்கு அமைச்சு பதவி கிடைத்த காரணத்தினால் வாழ்த்த சென்றிருந்தேன் அவ்வளவு தான் என்றும் தெரிவித்துள்ளார்.